Sunday, July 31, 2005

உயிர்களிடத்து அன்பு வேணும்

உயிர்களிடத்து அன்பு வேணும்
---------------------------

எனது பக்கத்து வீட்டுக்காரர் இந்திரநில் பாண்டே சொந்தத் தொழிற்சாலை வைத்து நடத்திவருபவர். செவ்வாய்க்கிழமை பெய்த மழையில் தொழிற்சாலையில் மிகச்சேதம். அன்று மதியம் கிளம்பி இரவு தடுமாறி வீட்டுக்கு வந்து சேர்ந்தார்(வீட்டிலிருந்து அலுவலகம் 3 கி,மீட்டர்தான். மூன்று கிமீ செல்வதற்கு பத்து மணிநேரம் ஆகியிருக்கிறது).

மனிதர் அடுத்த நாள் , அருகில் இருக்கும் ஆரே பால்பண்ணைப் பகுதியில் ( இது நமது ஆவின் போல மும்பைக்கு பால் வழங்கும் மிகமுக்கியமான நிறுவனம்) மாட்டியிருந்தவர்களை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி நெடுஞ்சாலை வரை கொண்டு விட்டுவந்தார். ஆரே நிறுவனப் பகுதியில்தான் தொலைக்காட்சி நிறுவனங்கள் ( பாலாஜி டெலெபிலிம்ஸ் - ஏக்தா கபூர் புகழ்) ஸ்டூடியோக்கள் வைத்திருக்கின்றன. ராயல் பாம் ( Royal palm) போன்ற நவீனக் கட்டுமானங்கள் வந்துகொண்டிருக்கும் அழகிய இடம்.இது மலைக்காட்டுப் பகுதி. பால்பண்ணையில் ஆயிரக்கணக்கான மாடுகள் கட்டிவைக்கப்பட்டிருக்கும்.

அன்று, வெள்ளம் வருமுன்னரே மாடுகளையும் பாதுகாப்பான பகுதிகளுக்கு எடுத்துச்சென்றிருக்கவேண்டும். செய்யவில்லை. குறைந்தபட்சம், அவற்றைக் கட்டியிருக்கும் கயிறுகளையாவது அவிழ்த்துவிட்டிருக்கவேண்டும். அதுவும் செய்யவில்லை. விளைவு மிகப் பயங்கரம்.

"குறைந்தது 700 மாடுகள் செத்து மிதக்கின்றன" என்றார் பாண்டே, மூக்கில் கட்டியிருந்த கைக்குட்டையை அவிழ்த்தபடியே. அதிர்ந்துபோனோம்.
"இது பரவாயில்லை. மற்ற தபேலா ( தனியார் மாட்டுப் பண்ணை)க்களில் கூட்டம்கூட்டமாக மாடுகள் மரித்திருக்கின்றன. அவற்றை புதைப்பதற்குக்கூட யாரும் வரவில்லை. நாற்றம் அப்படி குடலைப்பிடுங்குகிறது" என்றார் பாண்டே, தோளைக்குலுக்கி அந்தக்காட்சியை நினத்து அதிர்ந்தபடி. தோல் உரிக்கக் கொண்டு போகும் வசாய் போன்ற இடங்களிலும்" இனிமே மேற்கொண்டு சடலங்களைக் கொண்டுவராதீர்கள்" எனச் சொல்லிவிட்டார்கள். சடலங்களின் நிலையும் , துர்நாற்றமும் அப்படி. இன்னும் உடல் ஊதிய நிலையில் ஆரே காட்டில் சிக்கிக் கிடக்கின்றன பல சடலங்கள். இதில் மனித சடலங்களும் அடக்கம். யார் போய் இக்காட்டில், இம்மழையில் எடுப்பது?

உயிர்வதைத் தடுப்பு தன்னார்வல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தபேலா உரிமையாளர்களை அணுகியபோது புகைப்படம் கூட எடுக்கவிடாமல் துரத்தப்பட்டார்கள். செய்தித்தாள்கள் மூன்றாம்பக்கத்தில் இச்செய்தியைப் பிரசுரித்தன.

முக்கியமாக , இச்சடலங்கள் அழுகுவதால், நோய்கள் பரவக்கூடிய அபாயம் இருக்கிறது ( பரவிவிட்டது என்கிறார்கள்). அழுகும் சடலங்களைத் தின்ன காட்டுவிலங்குகள் அருகிலிருக்கும் சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா, மலைக்காடுகளிலிருந்து வருவதற்கும் சாத்தியம் இருக்கிறது.

"போய்யா, அவனவன் உயிருக்குப் பயந்து ஓடிக்கிட்டிருக்கான். இதுல மாட்டை காப்பாத்தணுமாமில்ல?" என்று சொல்லிக்கொண்டிருந்தார் தமிழ்க்காரர் ஒருவர் , நேற்று காய்கறிக்கடையில்.
பாரதி இருந்திருந்தால் இன்னும் வருத்தப்பட்டிருப்பான்.

Saturday, July 30, 2005

தமிழா தமிழா

தமிழா தமிழா
----------------

மழையால் வந்த சேதம் போதாதென, வதந்திகள் உயிர்ப்பலி வாங்கிய அவலம் மும்பையைப் பெரிதும் தாக்கியிருக்கிறது. சுனாமி வருகிறதென சில விஷமிகள் பரப்பிய வதந்தியில் கடற்கரையினருகே நேரு நகர்ப் பகுதியில் வசித்து வந்த மக்கள் பதறி ஓட, அந்த அமளியில் 18 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளுமே அதிகம்.
நேருநகர்பகுதியில் வசிப்பவர்களில் பெருவாரியில் தமிழ்மக்கள்.அன்றாடங்காய்ச்சிகள். அது சேரிப்பகுதியென்பதால் குறுகலான வழிகள் ஓடும் பாதையைல் நெரிசலைக் கூட்டியிருகின்றன. சுனாமி பற்றிக் கேள்விப்பட்ட தமிழ்மக்கள் என்பதால் பீதி அதிகமானது.
காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கின்றது. வதந்தியைப் பரப்பியவகளில் சில அறவாணிகளூம், நடனமாதுக்களும் முக்கியமான குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மேது கொலைக்குற்றம் சாட்டப்படுள்ளது. காவல் ஆணையர் "வதந்திகளை நம்மப வேண்டாம் " என மீடியா மூலம் வேண்டுகேள் விடுத்துள்ளார். கனமழையில் வேலை செய்யாத மொபைல் போன் கம்பெனிகள், காவல்துறையின் வேண்டுகோள்களை குறு செய்திகள் மூலம் பரப்பி புண்ணியம் கட்டிக்கொண்டுள்ளன.

தாராவி, நேருநகர் குர்லா, செம்பூர் போன்ற இடங்களில் பெருவாரியாக வாழும் தமிழ்மக்களுக்கு எந்த தமிழ் சங்கமும் முன்வந்து உதவி செய்ததாக செய்தி இல்லை. தமிழ்ப் பத்திரிகைகளும், தமிழ் டி.வி சேனல்களும் "மாண்புமிகு அமைச்சர் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார் " போன்ற செய்திகளுடன் கொசுறாக மும்பையில் மழை என்றும் , சில புள்ளி விவரங்கள் தந்ததோடு நிறுத்கிக்கொண்டு விட்டன. முன்பின் தெரியாத மக்களின் உதவியிலும் தியாக மனப்பாங்குமே மும்பையை இயற்கையின் சீற்றத்தில் போராடிப் பிழைக்கவைத்தன என்பது கண்கூடு.
சராசரி மும்பைவாழ் மனிதன் வெள்ளத்தின் மேலே பத்தடி உயர்ந்து நிற்கிறான்.

Wednesday, July 27, 2005

பேய்-யெனப் பெய்யும் மழை

பேய்-யெனப் பெய்யும் மழை
-------------------------

குஜராத்தில் அங்கலேஷ்வரில் நேற்று அலுவலக மீட்டிங் -கில் இருந்தபோது வீட்டிலிருந்து செல்போனில் அவசரமாக அழைப்பு வந்தது. சாதாரணமாக இவ்வாறு வருவதில்லை.
" நீங்கள் இன்னும் மும்பைக்கு கிளம்பிவிவ்லையென்றால் அங்கேயே இருந்துவிடுங்கள். மும்பையில் பயங்கர மழை..நெடுஞ்சாலையில் போக்குவரத்து நின்றுவிட்டது.மின்சாரம் துண்டிக்கப் பட்டுவிட்டது." என்ற செய்தி அதிர்ச்சியாக இல்லையெனினும் கவலை தந்தது. எப்படிப் போயிச்சேரப்போகிறோம்? என்பதை விட, ஏங்கே, நடுவழியில் நின்று விடுவோமோ? என்ற பயம் தொத்திக்கொண்டது.
" ஒரு துளிக் கூடப் பெய்யலை சார். சும்மா பயமுறுத்தியிருக்காங்க" என்ற டிரைவர், விரார் என்ற இடம் வந்தபோது, மழையின் திடீர்த் தீவிரம் கண்டு பயந்துதான் போனான். " முன்னால ஒண்ணும் தெரியலை சார். நிறுத்திரலாமா? " என்றவனின் குரலில் அச்சம் தெரிந்தது. ராட்சத லாரிகள் பாறைகளில் முட்டிக்கொண்டு அங்கங்கே சுளுக்கி நின்றிருந்தன.
போரிவல்லி வந்தபோது நெடுஞ்சாலையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை லாரிகளும், கார்களும் நிறுத்தப்பட்டிருந்தன. " சாயங்காலம் நாலு மணிக்கு இங்கே நிறுத்தினேன் " என்றார் ஒரு கார் ஓட்டுனர். நான் அவரிடம் கேட்டபோது இரவு பத்து மணி. ஓரமாக பல கார்கள் நிறுத்தப்பட்டு ப்லிங்கர்கள் அணைந்து எரிந்துகொண்டிருந்தன. உரிமையாளர்கள் வண்டிகளை அப்படியே போட்டுவிட்டு கால்நடையாகப் போயிருந்தார்கள். பேருந்துகள் மிகச்சிலவே இயங்கியிருந்தன. புறநகர் ரயில்கள் நின்றுவிட்டிருந்தன. மக்கள் அங்கங்கே இறங்கி சுமார் மூன்று நான்கு ரயில் நிலையங்கள் நிறுத்தத்திற்கான தொலைவு நடந்து வந்துகொண்டிருந்தார்கள் சாரை சாரையாய். ஒரு நபர் பத்து கிலோமீட்டர் தொலைவு நடந்திருக்கக் கூடும்- அதுவும் கொட்டுகிற மழையில்.
"இப்படி ஒரு மழை பத்து வருசமாகப் பார்த்ததில்லை" என்றார் எங்கள் காலனி இரவுக் காவலாளி." இங்க வீட்டுப் பக்கம் கழுத்தளவு தண்ணி. குழந்தைகளைக் கூட்டிகிட்டு என் பொஞ்சாதி எங்க போயிருக்குன்னு தெரியலை. விடிஞ்சதும் தேடப் போணும்" என்றார் கவலையிடன்.
அலுவலகங்களில் பலர் தங்கிவிட்டனர். இதில் மின்சாரம் வேறு துண்டிக்கப்பட்டுவிட்டது. பள்ளிக் குழந்தைகள் வகுப்புகளிலேயே தங்கியிருக்க, அம்மா ,அப்பாகள் அலுவலகங்களில்.

செல்போன்கள் வேலை செய்யவில்லை. மாட்டிக்கொண்ட மக்கள் வீடுகளுக்குத் தொடர்பு கொள்ள முயன்று வெறுப்புல் திட்டித் தீர்தார்கள். "அவசரத்துக்கு உதவலைன்னா இது எதுக்கு?" என்ற ஞனானோதயம் மழைச்சாரலின் அடியில் உதிக்க, பலரும் ஒரு ரூபாய் பி.சி.ஓ க்களைத் தேடிப் போனார்கள். ஆறுதலான செய்தி, எம்.டி.என்.எல் -இன் பொதுத் தொலைபேசிகள் இயங்கின என்பதுதான். வீடுகளில் கார்ட்லெஸ் போன் வைத்திருந்தவர்கள் மின்சாரம் இல்லாது , போன் இருந்தும் உபயோகமில்லாமல் தவித்தனர்.
ந்யூயார்க்கில் மின்சாரம் இல்லாது 2003-இல் மக்கள் தவித்தபோது, செல்போன்கள் நின்றூவிட, இதே நார்மல் தொலைபேசிகள் மட்டும் இயங்கின என்ற செய்தி ஞாபகத்திற்கு வருகிறது. எம்.டி.என்.எல், பி.ஏச். என்.எல் இதை விளம்பரத்திற்கு பயன்படுதலாம்.

21 மணி நேரத்திற்குள் சான்டாகுரூஸ் விமான தளத்தில் 833 மிமீ மழை பதிவாகியிருந்தது. புற நகர் கட்டுமானங்கள் தாங்கும் சக்திக்கு இது மிக மிக அதிகம். இருப்பினும், மக்கள் பீதியடையாமல் பொறுமையாக சாலையில் வரிசையாக்ச் சென்றனர் என்பதும், கார்கள், லாரிகள் சாலையில் நின்றுகொண்டிருந்த மக்களை யார் எவரென்ப் பார்க்காது செல்லும் அளவு தூரத்திற்கு ஏற்றிச் சென்றனர் என்பதும், சில கடைகளி, வெளியே போகமுடியாமல் மாட்டிக்கொண்ட நபர்களுக்கு டீ, ரொட்டி தந்து உதவினர் என்பதும் மும்பையில் இன்னும் மனிதம் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதற்கு சான்று.

இதையெல்லாம் விட, இன்று காலை ,இவ்வளவு மழைக்கும் பிறகும் அலுவலகம் செல்ல 5.30 பஸ்ஸிற்காகக் காத்துநின்ற பெண் பளீரெனக் கண்ணில் பட்டாள் - மும்பையில் மட்டுமே இது சாத்தியம்.