Monday, February 27, 2006

அறியாமையில் மறையும் வரலாற்றுப் பொக்கிஷம்

அறியாமையில் மறையும் வரலாற்றுப் பொக்கிஷம்
__________________________________________________
அகமதாபாத் சென்று பல மாதங்கள் ஆகிவிட்டது.போன வாரம் சென்றபோது , மீண்டும் சொந்த ஊருக்குப் போகும் போது வருமே அந்த உற்சாகம் தொத்திக்கொண்டது. நாலு வருடங்கள் வாழ்ந்த ஊர். அதென்னமோ தெரியவில்லை.. இதுவரை நான் பார்த்த தமிழர்கள் அகமதாபாத் பிடிக்கவில்லை எனச் சொன்னதில்லை.
இத்தனைக்கும் மாசு அப்பிக்கிடக்கும் காற்றும், தூசியும், அனல் பறக்கும் கோடையும், ஒழுங்கு என்பதே இல்லாத சாலைப்போக்குவரத்தும் அகமதாபாத்தின் ஆழமான முத்திரைகள். இதெல்லாவற்றையும் தாண்டி அது ஈர்க்கிறதென்றால் -அது புதிர்தான்.
அகமதாபாத்தின் இஸ்லாமிய கட்டிடக்கலையின் வேலைப்பாடுகள் நெரிசல் மிகுந்த சாலையோரம் சர்வசாதாரணமாகத் தென்படும். புகழ்பெற்ற ஜூம்மா மசூதிச் சன்னல், ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் சின்னத்தில் இன்று ஜொலிக்கிறது. என்ன கொடுமையென்றால், வரலாற்றுச் சின்னங்கள் இப்படி அலட்டலில்லாமல் பொதுப்படையாகக் கிடப்பது என்பது இப்போது அலட்சியப்படுத்தப்பட்டுவிட்டது என்ற நிலையாக மாறியிருப்பதுதான்.
ஊசலாடும் மினாரெட்டுகள் (swinging minarets) கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரே மாதிரியான இரு மினாரெட் தூண்கள் மிக்க கலைவடிவுடன் ஒரே தளத்தில் அமைந்திருக்கும். ஒன்றில் ஆட்கள் ஏறி, அசைத்தால், இருபது அடி தூரத்தில் இருக்கும் மற்ற மினாரெட் ஊசலாடும்.. இந்த அதிசய மினாரெட்டுகள் அகமதாபாத்தில் பல இருந்தன. ஆங்கிலேயர் காலத்தில், இந்த அதிசயத்தின் ஆணிவேர் காண, அதனைத் தோண்டி நிரந்தரமான பழுதுகளை ஒரு மினாரெட் இணையில் (pair) ஏற்படுத்திவிட்டனர். மற்றொரு மினாரெட் செட் ஒன்று அகமதாபாத் காலுப்பூர் இரயில்வே நிலையத்தின் அருகே இருக்கிறது. இப்போதெல்லாம் ஏறி மினாரெட்டை உலுக்க முடியாது. கீறல்கள் விழுந்துவிடும் என தடை விதித்துவிட்டனர்.
அத்தோடு முடிந்தது அதன் பாதுகாப்பும், பராமரிப்பும்.. இருளடைந்து கிடக்கும் அம்மினாரெட்டுகள் அருகே இம்முறை சென்று பார்த்தேன். இரயில்வே பிளாட்பாரம் முடியும் எல்லையில் புதர்கள் மண்டி , வேலிக்குள் அடைந்துகிடக்கிறது மினாரெட் அதிசயம். அதன் அருகே இரயில்வே நிர்வாகத்தின் அலுவலகம்.. சோம்பலாக குழல்விளக்கொளியில் குளித்து நிற்க... நம்பினால் நம்புங்கள்.. இப்படி ஒரு அதிசயம் ஒரு விளக்கும் இல்லாமல் பேய் பங்களா மாதிரி இருளில் அழுந்திக்கிடக்கிறது.

ஜனவரியில் பிலடெல்பியாவில் நான் சந்தித்த ஒரு பெண், தனது பெற்றோர்கள் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றார். இந்த ஊசலாடும் மினாரெட்டுகள் பற்றிச் சொன்னபோது அவர் வியப்பில் ஆழ்ந்தார். " இப்படி ஒன்று இருக்கிறதா? யாரும் சொல்லவேயில்லையே? இரண்டு வருடம் முன்னால்தான் அகமதாபாத் போய் வந்தேன்" என்றார். இதுதான் நமது பொக்கிஷங்கள் குறித்த அறிவு. இதற்கு பிலடெல்பியா போகவேண்டாம். மும்பையில் அந்தேரி போனால்கூடப் போதும்.

அகமதாபாத்திலேயே பலருக்கும் இதுகுறித்துத் தெரியாது. " என்னமோ மசூதி அல்லது சமாதியாயிருக்கும்" என்பார்கள். இதுமட்டும் ஐரோப்பாவிலோ அல்லது அமெரிக்காவிலோ இருந்திருந்தால் சுற்றுலாப் பயணிகள் மொய்த்திருக்க எக்கச்சக்கமாக விளம்பரப்படுத்தி தூள் கிளப்பியிருப்பார்கள். மினாரெட்டுகளையும் நன்றாகப் பராமரித்திருப்பார்கள். ஹூம்..மினாரெட்டுகளுக்கு அதிர்ஷ்டமில்லை.

என்றுதான் நமக்கு "பழமை இருந்தநிலை" தெரியுமோ?

தேவை- பெற்றோர்களுக்கு ஒரு பள்ளி

தேவை- பெற்றோர்களுக்கு ஒரு பள்ளி
__________________________________________

எனது மகனின் பள்ளியில் இன்று விசேட பயிற்சி முகம் இருக்கவே, அவனுடன் நானும் சென்றிருந்தேன்.( வீட்டுல இருந்து என்ன வெட்டிமுறிக்கிறீங்க? அவனையாச்சும் பள்ளிக்கூடத்துல விட்டுட்டு திரும்ப கூட்டிட்டு வாங்களேன்" -யார் குரல் என்பதை நான் சொல்லத்த்தேவையில்லை).
ஒரு துறுதுறு சிறுமி என் கவனத்தை ஈர்த்தது. அவளது அக்காவுக்கு பயிற்சி முகாம் போலும்.. தந்தையின் கை பிடித்து நின்றிருந்த குழந்தையின் கண்களில் ஒரு தயக்கம்..வேதனை..
" ஸே குட்மார்னிங் டூ டீச்சர்" தந்தை உரத்த குரலில் அக்குழந்தையை அன்புடன் வற்புறுத்த, அது முகத்தைத் திருப்பிக்கொண்டது. சாதாரணமான விசயம்தான்.. மனிதர் விட்டிருக்கலாம்.
அத்தனை பேர் முன்பாக அக்குழந்தையின் தோள்களை வலுக்கட்டாயமாகத் திருப்பினார். நெற்றி சுருங்கியதில் உலர்ந்த சந்தனப் பொடி கொஞ்சம் நொறுங்கி மனிதர் டீஷர்ட்டில் விழுந்தது. "ஐ ஸே.... ஸே குட்மார்னிங்" .. அந்த ஹால் முழுதும் கொஞ்சம் திரும்பிப் பார்த்தது. வசவு தொடங்கியது.
"எத்தனை தடவை சொல்லிக்கொடுத்திருக்கிறேன். ஸ்கூலுக்கு வந்தா எல்லார்கிட்டயும் சிரிச்சுப் பேசணும். ஹலோ ஆண்ட்டி, அங்கிள்னு சொல்லணும்னு? வாய்ல கொழுக்கட்டையா இருக்கு. சனியனே"
ஆசிரியை " விடுங்கள் சார். குழந்தைதானே. ஹலோ பேபி, கைஸீ ஹை தும்?" எனக் கொஞ்சிவிட்டு அவசரமாக அங்கிருந்து நடந்துவிட்டார்." இல்லேங்க. இதுக்கு இன்னும் ஒழுங்கா இருக்கணும்னு நினைப்பே வரலை. எப்படிப் பேசணும்னு தெரியலைன்னா என்ன படிக்கச்சு என்ன கிழிக்கப்போறா?" வசவு பாலக்காட்டுத் தமிழில் வலுத்தது.
அம்மனிதர் தனது மற்ற குழந்தையை பரீட்சை ஹாலில் பார்த்து விட்டு வரச் சென்ற பொழுதில், அவளை நான் அணுகினேன்.
" என்னம்மா? உம்பேரு என்ன?" எனக் கேட்டதில் அவள் சற்றே நிமிர்ந்து பார்த்தாள். உதடு துடித்தது. பேசவில்லை.
" என்னாச்சு உனக்கு? என்னவேணும்?" என்றேன்.
" எனிக்கு ஆத்யம் மூச்சா போணும்" என்றது குழந்தை விக்கி விக்கி.
"டாய்லெட் அங்கேயிருக்கு பாரு" எனக் காட்டியவுடன், அவசர அவசரமாக விரைந்த அக்குழந்தையைப் பார்க்கையில் பரிதாபமாக இருந்தது.
குழந்தையின் தேவை புரியாத மடமனிதர்கள் , ஒழுங்கு சொல்லிக்கொடுக்கிறார்களாம்.. "ஹலோ, குட்மார்னிங், " எனச் செயற்கையாகச் சொல்லத் தூண்டுகிறவர்களுக்கு , தாய்மொழியில் குழந்தை தனக்கு என்ன வேண்டும் என்பதைச் வெளிப்படுத்துவதைக் கேட்க நேரமில்லைபோலும். குழந்தை தனது தேவைகளை வெளிப்படுத்துவதை அவமானமாகக் கருதுவது எந்தவகையில் டிசிப்ளின் ஆகிறது? இயற்கை உபாதையில் தத்தளிக்கும் ஒரு சிறுமி எப்படி சிரித்தபடி ஹலோ எனச் சொல்லமுடியும்? செயற்கையாகப் புன்னகைக்க ஒரு மலருக்குச் சொல்லிக்கொடுக்கும் விபரீதப் பாடங்களை எப்படி தணிக்கை செய்வது? பள்ளிக்கூடத்தில் ஒரு வகையான அழுத்தமென்றால், இந்த அரைகுறைப் பெற்றோர்கள் படுத்தும் பாடு..
பெற்றோர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் எனச் சொல்லிக்கொடுக்க எதாவது பள்ளிக்கூடம் இருக்கிறதா?

Sunday, February 26, 2006

வந்துட்டான்யா.... வந்துட்டான்யா...

வந்துட்டான்யா.... வந்துட்டான்யா...
__________________________________
ஜனவரி முழுதும் வெளிநாட்டுப் பயணங்கள். சரி முடிந்தது என நிமிர்ந்தால், இந்த மாத முழுதும் மீண்டும் உள்ளூர்ப் பயணங்கள். அரக்கப்பரக்க அமெரிக்கா சென்றதில் நண்பர்கள் பலருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை. நமது திருமலைராஜனுடன் மட்டும் பேசமுடிந்தது -அதுவும் தொலைபேசியில். அடுத்த முறை ஒழுங்காகத் திட்டமிட்டுச் செல்லவேண்டுமெனத் தீர்மானித்திருக்கிறேன். (ஒவ்வொரு முறையும் இதே கதைதான்!)

அமெரிக்க விசா காலத்தீர்வையானதால் மீண்டும் வரிசையில் நிற்க வேண்டியதாயிற்று. டாக்டர்.கோவர்த்தன் மேத்தாவிற்கே இன்ன பாடு படுத்தினார்கள் என்றால் என்னளவில் எப்படியிருந்திருக்கும் எனச் சொல்லத் தேவையில்லை. வெறுப்பேத்திவிட்டார்கள். "என்ன வேலை உனக்கு?" என ஆரம்பித்தவர்கள் " குரோமோட்டாகிராபி என்றாலென்ன? மாஸ் ஸ்பெக்ட்ட்ரோமீட்டர் என்றால் யார் அல்லது என்ன?எனக்குப் புரியும்படி சொல்லு" எனப் பாதுகாப்பான கூண்டில் மறுபுறமிருந்து ஒருவர் கேட்டதில் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டேன். இரண்டு நிமிஷத்தில் சொல்லமுடிகிற விஷயமா அது? நான் உளற ஆரம்பித்ததும், என்னமோ என் தலையெழுத்து நன்றாக இருந்ததில் "இனிமே இந்த வரிசையில் பத்துவருடத்திற்கு வராதே" என முத்திரை குத்தி அனுப்பிவிட்டார்கள். கிளம்ப ஒரு நாள் இருக்கும்போது விசா கிடைத்ததால் பலருக்கும் முன்பே சொல்ல முடியவில்லை. பல்குத்திக்கொண்டு ஹாய்யாக இருந்த நேரத்தில் சிலரைக் கண்டு அறுத்து எடுத்திருக்கலாம்.. பிழைத்துப்போனார்கள் நம் நண்பர்கள்.

இந்தக்கூத்திற்கெல்லாம் முந்திய நாள் எனது நண்பனின் தொலைபேசி வந்தது. " லே மக்கா. நீ ப்ளாக் எல்லாம் எழுதுவியா?' என்றான். அவனுக்கு படிக்கிற பழக்கம் பள்ளிக்கூடத்திலேயே கிடையாது.வலைப்பதிவு பக்கம் எட்டிக்கூடப்பார்க்கமாட்டான். " ஆமாடே" என்றேன். " அதுல அமெரிக்கா பத்தி தப்பா எதனாச்சும் எழுதியிருக்கியா? இருந்தா அழிச்சுருல" என்றான். விழித்தேன்.
"தப்பான்னா?"
" இராக் , ஒசாமா பத்தி, அமெரிக்க சமூகத்தைப்பத்தி எதாச்சும் காட்டமா எழுதியிருந்தா விசா கிடைக்காதாம்." என்றான்.
'இதெல்லாம் ஓவர். கொஞ்சம் விட்டாபோதுமே, சி.ஐ.ஏ உக்காந்து வேலை மெனக்ககெட்டு "எவண்டா தமிழ்ல தப்பா எழுதியிருக்கான்னு" பார்த்துக்கிட்டிருக்கு-ங்கிற லெவல்ல வம்பு பரப்புவது தவறு' என அவனுக்கு எடுத்துச்சொன்னேன்.
மறுத்தான். "மக்கா, வலையில் வன்முறை, வம்பு பரப்புவது பத்தி படு சீரியசாக அமெரிக்கா கவனித்து வருகிறது. முக்கியமா அமெரிக்கர்களை வெறுக்கும் வகையில் எழுதப்படுவது, அமெரிக்க கலாச்சாரத்தை உதாசீனப்படுத்துவது போன்றவற்றை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். பாத்துடே" என்றான். என்னமோ, என் வலைப்பதிவு அவர்களுக்கு அறுவையாக இருந்திருக்கிறது போலும்.. விட்டுவிட்டார்கள்.

இந்த முறை விமான ரூட் - படு கேணத்தனமாக அமைத்திருந்தார்கள். போய் வந்ததும் டிராவல் ஏஜன்ஸியை ஒரு பிடி பிடித்தேன். மிலான் விமான நிலையத்தில் 4 மணிநேரம்... நியூயார்க்கில் 3 மணிநேரம் காத்திருப்பு.. டாம்ப்பா போக இப்படி தவளை மாதிரி தத்தி தத்திப் போனது ஒரு லூசுத்தனமென்றால், திரும்பிவந்தது இன்னும் பைத்தியக்காரத்தனம்.. பிலடெல்பியாவிலிருந்து நேரே மிலான்/பிராங்க்பர்ட் - மும்பை எனப் போவதை விட்டுவிட்டு, பிலடெல்பியாவிலிருந்து நேரே கீழே அட்லாண்டா ( 4 மணிநேரம்காத்திருப்பு)-மிலான் -மும்பை என ஒரு எலும்பு ஒடியும் பயணம்.. கொடுமை மிலான் விமானதளம் - கழிவறைகள் மும்பையை விட மோசம்.

பொதுவாக இந்த காத்திருப்பு நேரங்களில் கொஞ்சமாக ஆட்களைப் பிடித்து அறுத்து பொழுதுபோக்குவேன். எதாவது விமான நிலையத்தில் கொஞ்சம் லூசு மாதிரி ஒரு ஆள் உங்களோடு இலக்கியம்/ கவிதை/சமூகம் எனப் பேசத்தொடங்கினால் "நீ சுதாகர்தானே" எனத் தைரியமாகக் கேட்டுவிடாதீர்கள். என்னைப்போல பலரும் இருக்கிறார்கள் என்பதை மிலான் நிரூபித்தது.
அதுபற்றி அப்புறம் எழுதுகிறேன்.