Monday, February 27, 2006

தேவை- பெற்றோர்களுக்கு ஒரு பள்ளி

தேவை- பெற்றோர்களுக்கு ஒரு பள்ளி
__________________________________________

எனது மகனின் பள்ளியில் இன்று விசேட பயிற்சி முகம் இருக்கவே, அவனுடன் நானும் சென்றிருந்தேன்.( வீட்டுல இருந்து என்ன வெட்டிமுறிக்கிறீங்க? அவனையாச்சும் பள்ளிக்கூடத்துல விட்டுட்டு திரும்ப கூட்டிட்டு வாங்களேன்" -யார் குரல் என்பதை நான் சொல்லத்த்தேவையில்லை).
ஒரு துறுதுறு சிறுமி என் கவனத்தை ஈர்த்தது. அவளது அக்காவுக்கு பயிற்சி முகாம் போலும்.. தந்தையின் கை பிடித்து நின்றிருந்த குழந்தையின் கண்களில் ஒரு தயக்கம்..வேதனை..
" ஸே குட்மார்னிங் டூ டீச்சர்" தந்தை உரத்த குரலில் அக்குழந்தையை அன்புடன் வற்புறுத்த, அது முகத்தைத் திருப்பிக்கொண்டது. சாதாரணமான விசயம்தான்.. மனிதர் விட்டிருக்கலாம்.
அத்தனை பேர் முன்பாக அக்குழந்தையின் தோள்களை வலுக்கட்டாயமாகத் திருப்பினார். நெற்றி சுருங்கியதில் உலர்ந்த சந்தனப் பொடி கொஞ்சம் நொறுங்கி மனிதர் டீஷர்ட்டில் விழுந்தது. "ஐ ஸே.... ஸே குட்மார்னிங்" .. அந்த ஹால் முழுதும் கொஞ்சம் திரும்பிப் பார்த்தது. வசவு தொடங்கியது.
"எத்தனை தடவை சொல்லிக்கொடுத்திருக்கிறேன். ஸ்கூலுக்கு வந்தா எல்லார்கிட்டயும் சிரிச்சுப் பேசணும். ஹலோ ஆண்ட்டி, அங்கிள்னு சொல்லணும்னு? வாய்ல கொழுக்கட்டையா இருக்கு. சனியனே"
ஆசிரியை " விடுங்கள் சார். குழந்தைதானே. ஹலோ பேபி, கைஸீ ஹை தும்?" எனக் கொஞ்சிவிட்டு அவசரமாக அங்கிருந்து நடந்துவிட்டார்." இல்லேங்க. இதுக்கு இன்னும் ஒழுங்கா இருக்கணும்னு நினைப்பே வரலை. எப்படிப் பேசணும்னு தெரியலைன்னா என்ன படிக்கச்சு என்ன கிழிக்கப்போறா?" வசவு பாலக்காட்டுத் தமிழில் வலுத்தது.
அம்மனிதர் தனது மற்ற குழந்தையை பரீட்சை ஹாலில் பார்த்து விட்டு வரச் சென்ற பொழுதில், அவளை நான் அணுகினேன்.
" என்னம்மா? உம்பேரு என்ன?" எனக் கேட்டதில் அவள் சற்றே நிமிர்ந்து பார்த்தாள். உதடு துடித்தது. பேசவில்லை.
" என்னாச்சு உனக்கு? என்னவேணும்?" என்றேன்.
" எனிக்கு ஆத்யம் மூச்சா போணும்" என்றது குழந்தை விக்கி விக்கி.
"டாய்லெட் அங்கேயிருக்கு பாரு" எனக் காட்டியவுடன், அவசர அவசரமாக விரைந்த அக்குழந்தையைப் பார்க்கையில் பரிதாபமாக இருந்தது.
குழந்தையின் தேவை புரியாத மடமனிதர்கள் , ஒழுங்கு சொல்லிக்கொடுக்கிறார்களாம்.. "ஹலோ, குட்மார்னிங், " எனச் செயற்கையாகச் சொல்லத் தூண்டுகிறவர்களுக்கு , தாய்மொழியில் குழந்தை தனக்கு என்ன வேண்டும் என்பதைச் வெளிப்படுத்துவதைக் கேட்க நேரமில்லைபோலும். குழந்தை தனது தேவைகளை வெளிப்படுத்துவதை அவமானமாகக் கருதுவது எந்தவகையில் டிசிப்ளின் ஆகிறது? இயற்கை உபாதையில் தத்தளிக்கும் ஒரு சிறுமி எப்படி சிரித்தபடி ஹலோ எனச் சொல்லமுடியும்? செயற்கையாகப் புன்னகைக்க ஒரு மலருக்குச் சொல்லிக்கொடுக்கும் விபரீதப் பாடங்களை எப்படி தணிக்கை செய்வது? பள்ளிக்கூடத்தில் ஒரு வகையான அழுத்தமென்றால், இந்த அரைகுறைப் பெற்றோர்கள் படுத்தும் பாடு..
பெற்றோர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் எனச் சொல்லிக்கொடுக்க எதாவது பள்ளிக்கூடம் இருக்கிறதா?

10 comments:

 1. //குழந்தையின் தேவை புரியாத மடமனிதர்கள் , ஒழுங்கு சொல்லிக்கொடுக்கிறார்களாம்.. "ஹலோ, குட்மார்னிங், " எனச் செயற்கையாகச் சொல்லத் தூண்டுகிறவர்களுக்கு , தாய்மொழியில் குழந்தை தனக்கு என்ன வேண்டும் என்பதைச் வெளிப்படுத்துவதைக் கேட்க நேரமில்லைபோலும். குழந்தை தனது தேவைகளை வெளிப்படுத்துவதை அவமானமாகக் கருதுவது எந்தவகையில் டிசிப்ளின் ஆகிறது? இயற்கை உபாதையில் தத்தளிக்கும் ஒரு சிறுமி எப்படி சிரித்தபடி ஹலோ எனச் சொல்லமுடியும்? செயற்கையாகப் புன்னகைக்க ஒரு மலருக்குச் சொல்லிக்கொடுக்கும் விபரீதப் பாடங்களை எப்படி தணிக்கை செய்வது? //

  So TRUE.

  -Mathy

  ReplyDelete
 2. பின்னூட்டத்திற்கு நன்றி மதி.
  அன்புடன்
  க.சுதாகர்

  ReplyDelete
 3. நண்பரே! நீங்கள் சொல்வது ரொம்ப சரி! நிறைய கிறுக்குகளுக்கு குழந்தை பிறந்தவுடன் அதை கம்யூட்டர் எஞ்சீனியரா அக்கவா, கலெக்டர் ஆக்கவா என்று தான் யோசிக்க தெரிகிறதே தவிர. அதன் மழலை பருவத்தை அதன் போக்கில் விட்டு ரசிக்கத் தெரிவதில்லை. நீங்க சொன்ன மாதிரி இவனுங்களுக்கு ஒரு பள்ளி ஆரம்பிச்சா தான் நல்லது. நல்ல பதிவு. தொடருங்கள்.

  ReplyDelete
 4. நன்றி சிவா,
  பூனாவில் இப்படியொரு பள்ளி ஆரம்பிக்கப் போவதாக கேள்விப்பட்டேன். எந்த அளவிற்கு உண்மையெனத் தெரியவில்லை. ஒரு புகழ்பெற்ற பள்ளியில் வார இறுதிநாட்களில் இருமணிநேரம் குழவிமனநிலை நிபுணர்கள் குழந்தைவளர்ப்பு பற்றி வகுப்புகள் எடுக்கப்போவதாக அப்பள்ளியின் நிர்வாகி அறிவித்திருந்தார். என்னமோ நல்லது நடந்தாச் சரி.
  அன்புடன்
  க.சுதாகர்

  ReplyDelete
 5. இன்று தான் இக்கட்டுரையை பார்க்கிறேன், நன்றாக எழுதியிருக்கீங்க.

  குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று கூட தெரியாத பெற்றோரை என்ன செய்வது?

  முதலில் தன் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிடு செய்வதோ, அல்லது சாதனை படைத்தவர்கள் மாத்ரீ வரவேண்டும் என்று நினைப்பதோ மிகவும் தவறு.

  நிறைய பேர் தன்னால் சாதிக்கமுடியலை, அதான் என் குழந்தை வாயிலாக முயற்சி செய்கிறேன் என்கிறார்கள், அது நல்லது தான் இல்லை என்று சொல்லலை, அதே நேரம் குழந்தையினால் அதை புரிந்து கொள்ள முடிகிறதா என்பதை தெரிந்து கொண்டு பெற்றோர் நடக்க வேண்டும்.

  (உங்களுடைய கட்டுரைகளை நான் வேறு தளங்களில் பயன்படுத்த உங்கள் அனுமதி தேவை :) )

  ReplyDelete
 6. நன்றி பரஞ்சோதி,
  குழந்தைகளை முழு மனிதர்களாக வளர்த்து சமுதாயத்திற்குத் தரவேண்டிய பொறுப்பை அனைத்துப் பெற்றோர்களும் ஏற்றிருக்கிறோம். இதில் தன் மக்கள் தன்னை விட முன்னே வரவேண்டும் என்னும் அதீத ஆர்வம், போலி கெளரவம், சுய தம்பட்டம் போன்றவற்றில் அழுந்தி மக்கிப்போன பெற்றோரே மிகுதி இப்போது.
  எனது கட்டுரைகளில் எனது கருத்துகளை தாராளமாக மேற்கோளெடுத்தாளலாம். வேறு பிறரை நான் சுட்டியிருந்தால் அன்னாரிடம் கேட்பது நல்லது.
  நன்றி
  க.சுதாகர்.

  ReplyDelete
 7. சுதாகர்,
  நல்ல பதிவு. நாம் நாமாய், நல்ல மனிதர்களாய் இருப்பது என்பது தவிர எல்லாவற்றுக்கும் நாம் முக்கியத்துவம் தருவதுதான் இங்கே பிரச்சனை. உண்மையாகவே பெற்றோர்களுக்கென்று பயிற்சி வகுப்புகள் தேவைதான்.

  இதைத்தான் நான் இந்தக் கட்டுரையிலும் சொல்லி இருக்கிறேன்:

  http://www.nilacharal.com/tamil/specials/tamil_community_245.asp

  முடிந்தால் பாருங்கள்

  ReplyDelete
 8. http://www.yourbabytoday.com/newbaby/index.html

  http://www.pampers.co.uk/en_GB/home/stageid/100/jsessionid/0LA1JLPE0D4F3QFIAJ0X0NY.do

  google for more

  ReplyDelete
 9. நன்றி நிலா,
  தங்கள் பதிவைப் படித்தேன். அடிப்பதென்பது ஒழுங்கை வளர்க்கும் என்பது இன்னும் ஆசிரியர்களிடம் இருந்து வரும் எண்ணம்.
  "அடியாத மாடு பணியாது" என்பதை பலரும் ஒத்துக்கொள்வர்.
  சர்ச்சில் எழுதிய கட்டுரை ஒன்று எனது பள்ளிப்பாடத்தில் இருந்தது. அதனை விவரித்த அருட் தந்தை சிகாமணி அவர்கள் சர்ச்சிலில் " ஆங்கிலப்படிப்பை அடித்து வளர்க்கவேண்டும்" என்னும்கொள்கையை மறுதலித்து வகுப்பில் நடத்திய பாடம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. ( சில வகுப்பறை நினைவுகள் அப்படியே பதிந்துவிடும் இல்லையா?)
  பொறுமை இழந்து சிலநேரம் நானும் என் மகனை அடித்ததுண்டு. பின்னர் சே என்றிருக்கும். இந்தக் குற்ற உணர்வில் அவனுக்கு எதாவது வாங்கித்தந்து செல்லம் கொடுத்து கெடுப்பதென்பது ஒரு vicious circle. பல பெற்றோர்களுக்கும் இது இருக்கிறது என என் எண்ணம்.
  அடிப்பது தேவையா என்பதை விட எப்போது யாருக்குத் தேவை என்பது நிர்ணயிப்பது நல்லது. இதனைக்குறித்து குழந்தை மனநிலை நிபுணர்களும், ஆசிரியர்களும் திட்டமிடுதலும், பிற ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம்.. போலியோ சொட்டுமருந்து இயக்கம் போலவே.
  நன்றி ஸ்ருசல்.
  நன்றி ப்ரேமலதா. நீங்கள் தந்த சுட்டியில் இரண்டாவது ஏனோ வேலை செய்யவில்லை. மீண்டும் இன்று முயன்று பார்க்கிறேன். முதலாவது சுட்டி பயனுள்ளதாக இருந்தது.
  ஊக்கப்படுத்தியதற்கு நன்றி.
  அன்புடன்
  க.சுதாகர்

  ReplyDelete