Friday, September 06, 2013

டீ எப்ப வரும்?

டீ எப்ப வரும்?
_________

மூன்று மாதங்கள் முன்பு , நான் முன்பு வேலை பார்த்த கம்பெனியில் சர்வீஸ் எஞ்சினீயராகப் பணிபுரிந்த நண்பரை ஒரு கஸ்டமர் அலுவலகத்தில் சந்திக்க நேர்ந்தது. நண்பரின் வீடு அருகிலேயே இருக்கிறதென்பதால், “ வாங்க ஒரு டீ சாப்பிட்டுட்டுப் போலாம்” என்றார். நல்ல மனிதர், தானுண்டு தன் வேலையுண்டு என்று , ஒரு அரசியலிலும் இறங்காத அப்பழுக்கற்ற அவரது வேண்டுகோளை மறுக்கமுடியாமல் , அவருடன் சென்றேன். மும்பையின் வழக்கமான சிறிய வீடு. படு புத்திசாலித்தனமாக சிறிய அறைகளிலும் அனைத்தையும் கச்சிதமாக வைத்திருந்தார்கள்.  அவன் மனைவியையும் , மாமியாரையும் அறிமுகப்படுத்தினான். மாமனார், பேரனுடன் வெளியே போயிருக்கிறார் என்று அறிந்தேன்.

டீ க்கு சர்க்கரை வேணுமா? “ என்ற கேள்வியின் பின் அவர்கள் இருவரும்  சென்று விட , ஒரு கிழவர் உள்ளே நுழைந்தார். கூடவே ஒரு சிறுவனும்.

“என் மாமனார்” . கைகூப்பி வணக்கம் தெரிவித்தவருக்கு சுமார் எழுவது வயதிருக்கும். கணீரென்ற குரல். இஸ்திரி போட்ட வெள்ளைவெளேரென்ற சட்டை, பைஜாமா. “இந்தூரில்தான் வேலை பார்க்கத் தொடங்கினேன். பத்து இடமாற்றங்கள். அப்புறம் இந்தூர்லயே ரிடையராகிட்டேன். இவ ரெண்டாவது பெண். மூத்தவ ராய்ப்பூர்ல இருக்கா.” அதென்னவோ, ரிடையர் ஆகிவிட்டால், பயோடேட்டா, கேக்காமலேயே தந்துவிடுகிறார்கள்.

‘தாத்தா” என ஓடிவந்த பையன் என்னைக்கண்டதும், சற்றே வெட்கி, வளைந்து அவரது கால் முட்டைப் பிடித்துக்கொண்டு, ஓரக்கண்ணால் என்னைப்பார்த்தபடியே, அவரது பைஜாமாவைக் கடித்து நின்றான். “ முதல்ல கொஞ்சம் வெட்கப்படுவான். அப்புறம் கலகலன்னு... நாலு வயசுதான் ஆகிறது. ஆனாப் பாருங்க, அசாத்திய மூளை.டேய் சொல்லுறா...” நான் உஷாரானேன். விருந்தினர் எதிரே தங்கள் பிள்ளை,பேத்திகளின் மூளைத்திறனை எக்ஸிபிஷன் போட்டுக் காட்டும் காலமெல்லாம் எப்பவோ போயாச்சே? எனக்கு இந்த சூழ்நிலைகளில் எப்படி ரியாக்ட் செய்யவேண்டுமெனத் தெரிவதில்லை. அசடு வழிந்துகொண்டு, ஒரு செயற்கைச்சிரிப்போடு “வெரிகுட்” என்பதோடு என் பதில்கள் நிற்கும். எப்படா இங்கிருந்து கிளம்புவோம் என்ற துடிப்பின் விளிம்பில் நிற்பேன். அத்தகைய சந்தர்ப்பமொன்று இது...

“ சூரஜ் பேட்டா, 459 ஸ்கொயர்  என்ன?” . என்ன இது மலேசிய அபாக்கஸ் கிளாஸுக்கு ஆள் சேக்கறாங்களா? ’விடுங்க , குழந்தையைப் போட்டு..” என்றேன்.

என் நண்பர் வாயெல்லாம் பல்லாக “ இவருக்கு இதெல்லாம் பிடிக்கும் மாமா. 6174 -ன்னு தமிழ்ல - தமிழ்லதானே? ஒரு கணக்கு புக் எழுதியிருக்காரு” . அடப்பாவிகளா, கணக்கு புக்கா? ஏண்டா எழுதினோம்னு நினைத்த பல தருணங்களில் ஒன்று கூடியது.  இவனிடம் இப்படிச் சொன்னவனை துருப்பிடித்த பழைய ப்ரின்ஸ் பிளேடால் கன்னத்தில் கிழிக்கவேண்டும்.

பையன் எதோ முணுமுணுத்தான். முகத்தை தாத்தாவின் மடியில் புதைத்துக்கொண்டான். அவர் மீண்டும் மீண்டும் நச்சரித்து, குனிந்து கேட்டு ஒரு எண்ணைச் சொன்னார். பெருமிதமாக ”கரெக்ட்” என்றார். ” இந்தூர் ரயில்வேஸ் குவாட்டர்ஸ்ல இருந்தப்போ எங்க சீஃப் அக்கவுண்டண்ட்  மதன்மோகன் மிஸ்ரான்னு ஒருத்தர். அவருக்கு கால்குலேட்டரே வேண்டாம். எல்லாம் மனக்கணக்குத்தான். ஒரு வருஷம் அவரை நச்சரிச்ச அப்புறம் ரகசியமா கணக்குல இருக்கிற குறுக்கு வழிகள்- ன்னு சில ட்ரிக்குகளைச் சொல்லிக்கொடுத்தார். காலங்காலமா அவர்கள் குடும்பத்துல பழகி வர்ற ஒரு வித்தை. வேதகாலத்துலேர்ந்து இருக்கிற வித்தை. அவர் குடும்பத்துக்கு அப்புறம் நாந்தான் வெளியாள் அதைக் கத்துகிட்டது. அடுத்த மாசம் பாருங்க, சூரஜ், ஸ்கொயர் ரூட் கத்துகிட்டிருவான் அதுவும் அஞ்சு டிஜிட் எண்களுக்கு. ”
ஒரு பிளாஸ்டிக் புன்னகையை முகத்தில் அப்பியபடி, தலையை ஆட்டி ‘க்ரேட்” என்றேன்.

 டீ எப்ப வரும்?

”இதெல்லாம் டை கட்டி, கோட் போட்டு இன்னும் வெளிநாட்டுக்காரங்களுக்கு வால் பிடிக்கிற உங்களுக்கெல்லாம் பிடிக்காது. தெரியும். மைக்ரோசாஃப்ட் எக்ஸெல்-ல போடவேண்டியதையெல்லாம் எதுக்கு மூளைல போடணும்? -னுவீங்க. நம்ம நாட்டு வித்தை.. அதெல்லாம் உங்களுக்கு மதிக்கத் தெரியாது. வெளிநாட்டுக்காரன் எது செய்தாலும் சரி. உங்களைச் சொல்லிக் குத்தமில்லை. வளர்ப்புதான்.  டேய். நீ எப்படி ஆன்ஸர் கண்டுபிடிச்சேன்னு மாமாக்கு சொல்லு”

நம்ம ஊர்களில் சிறுமிகளை “ இந்த மாமிக்கு, அலைபாயுதே பாட்டு தெரியாதாம். ஒருதடவை நீ பாடிக்காட்டுடி செல்லம்மா” என்று நாங்கள் ஊருக்குப் போகும்போதெல்லாம்  என் மனைவியை முட்டாளாக்கி, தன் பெண்களை பிசிறும் குரலில் அலைபாயுதே பாடவைத்துப் பரவசப்பட்ட பெண்மணிகள் எனக்கு நினைவுக்கு வந்தனர். இப்போது நான். அவள் வெகு இயல்பாக நடந்து கொண்டு  விடுகிறாள். எனக்கு அதெல்லாம் வருவதில்லை. மூஞ்சியே காட்டிக்கொடுத்து விடுகிறது.

 டீ எப்ப வரும்?

ஆ. வந்து விட்டது. பத்து நிமிடம்  அந்த முதியவர், அமைதியாக டீ குடிக்கவிடாமல்,  வெளிநாட்டவரிடம் கைகட்டி வேலைசெய்யும் எனது வேலையெல்லாம் இழி தொழில் என்ற புதிய உண்மையை உணர்த்திவிட்டு, இந்தியாவின் பழம்பெரும் கல்விச் செல்வங்களை அறியாது வீணடிக்கும் அறிவிலிகள் நாட்டுப் பற்றும் , கலாச்சார உணர்வும் இல்லாத மடையர்கள் எனவும் அறிவுறுத்திவிட்டு, அவர் எழுந்து சென்றார்.

காரில் என்னை பஸ் நிறுத்தம் வரை கொண்டு விட வந்த நண்பர் தர்ம சங்கடமாகச் சிரித்தார். “ அவர் சொல்வதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாதீர்கள். என்னையும்தான் திட்டுவார் - அமெரிக்க கம்பெனியின் அடிமை என்று. ஆனால் , அந்த கணித சூத்திரங்கள்... அமேசிங் இல்லையா? உங்களுக்கு அடுத்த புத்தகத்துக்கு உதவும்”  நான் என்ன தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்திற்குப்  பத்தாம் கிளாஸ் கணக்குப் புத்தகமா எழுதுகிறேன்? என்று வாய் வரை வந்தது. ஒரேயொரு வார்த்தை மட்டும் சொல்லிவிட்டு, வந்த பேருந்தில் ஏறினேன்.

“அவர் சொன்னது ட்ராக்டென்பர்க் சிஸ்டம் ஆஃப் ஸ்பீட் மாத்தமேட்டிக்ஸ். சூரிச்-சில் விளைந்தது - இந்தூரில் இல்லை” 

No comments:

Post a Comment