Saturday, September 14, 2013

பல் பிடுங்கும் படலம்



“இதப் புடுங்கியே ஆகணும்” என்றார் டாக்டர் ஷோபா ஹெக்டே, ஆ வெனப் பிளந்திருந்த என் வாயில் கோணலாக வளர்ந்திருந்த கடைவாய்ப்பல்லை, நுனியில் கொக்கி போல வளைஞ்சிருந்த ஒரு கருவியால் தட்டி நோண்டி, தீர்மானமாக. ”அதெல்லாம் வேணாம்” என்று சிரித்து மழுப்பமுயன்றேன். “ அனாவசியமாப் பல்லைப் பிடுங்கறீங்களே? பல்லிடுக்குலே ஒரு சிறு தாணா மாட்டிக்கொண்டால் அதை எடுக்கறதுல என்ன சுகம் தெரியுமா? ஒண்ணுமே கிடைக்கலேன்னாக்கூட, ஒரு குச்சியை உடைச்சு, உரிச்சு, நோண்டற சுகம் இருக்கே?”  ஷோபா, என்னை கடுப்போடு பார்த்தார். “பக்கத்துல இருக்கற பல்லும் கெட்டுப் போகுது. அப்புறம் குத்தறதுக்குப் பல்லே இருக்காது. இதுவும் ஜோக்கா உங்களுக்கு?” எக்ஸ்ரேயில், படுத்தபடி இருந்த கடைவாய்ப்பல்லைக் காட்டினார். ”எப்பவோ பிடுங்கியிருக்கணும். மூணு வாரம் கழிச்சு வாங்க. வெளிநாட்டு டூர் போறேன். வந்ததும் கூப்பிடறேன்” . அவர் எழுதிக்கொடுத்த புதிதாக ஒரு மவுத் ரின்ஸ்ஸும் ( மண்ணு மாதிரி டேஸ்ட். மார்க்கெட்டுக்கு அனுப்பறதுக்கு முன்னாடி டேஸ்ட் கூடப் பண்ணிப் பாக்க மாட்டீங்களாடா?) ,அஸித்ரோஸின் மாத்திரைகளுமாக, என் பல்புடுங்கும் படலத்தின் முதல் அடி எழுதப்பட்டது.
கிட்டத்தட்ட இதனை மறந்தே போயிருந்தேன். திடீரென அவரிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று முந்தாநாள் வந்தது. ”நாளை மாலை 730க்கு வரவும்”  அதோடு ஓரு போன் வேறு “ சாப்பிட்டுட்டு வந்துருங்க. சுகர் எல்லாம் நார்மல்தானே?” இல்லையென்றால் விடப்போகிறார்களா? விதியே எனப் போனேன்.
“டூர் எங்க போயிருந்தீங்க?”டென்ஷனைக் குறைக்கத்தான் கேட்டேன்.          “ ஆஸ்ட்ரியா, செக் ரிப்பப்ளிக்.” என்றார். மரண வலி மேடையை அவரது அசிஸ்டெண்ட் சுத்தம் செய்துகொண்டிருக்க, பீதியை மறைத்தபடி “ ஆஸ்ட்ரியால எங்க?” என்றேன். “சால்ஸ்பெர்க். சரி , சேர்ல உக்காருங்க. மவுத்வாஷ் இருக்கு, யூஸ் பண்ணிக்குங்க”
சற்றே வியந்தேன். “ Sound of Music ஷூட் பண்ணின இடமெல்லாம் பாத்தீங்களா?” என்ன கேள்வி இது என்பதுபோலப் பார்த்தார். திருப்பதி போறவங்களை எங்க கோயிலுக்கா? என்றா கேட்பீர்கள்? “மொசார்ட் காம்போசிஷன்ஸ் எனக்கு ரொம்ப்ப் பிடிக்கும். அதான் குறிப்பா சால்ஸ்பெர்க். பத்து நாள்.” என்றார். எனக்கு அதுவரை அவர் மேற்கத்திய சாஸ்த்ரிய சங்கீதத்தில் ரசனை உள்ளவர் என்பது தெரியாது. அவரது கொடூரக் கருவிகள் தயாரகும் வரை, மொசார்ட்டின் இளமைக்கால வரலாறு குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். ராணி தெரெசாவின் மடியில் அமர்ந்த சிறுவன், பெரும் புகழ் பெற்ற இசைக்கலைஞன் இறுதியில் ஒரு அனாதையாக மரித்த வரலாறு. ’நல்லடக்கம் கூடக் கிடைக்காமல், ஒரு வண்டியில் கொண்டுபோய் வீசப்பட்டது அவன் உடல்’ என்று உணர்ச்சிப் பிழம்பாகப் பலதும் சொல்லியபடியே  மின்விளக்கை என் வாய் நோக்கிச் சரித்தார். “கொஞ்சம் முதல்ல வலிக்கும். ஒரு பக்கமா வீங்கறமாதிரி, நாக்கு தடிக்கிறமாதிரித் தோணும்போது சொல்லுங்க. என்ன? ஆங். மொசார்ட் கடைசிகாலத்துல, குளிருக்கு கையுறை கூட இல்லாம, கால்ல கிடந்த சாக்ஸை கையில் போட்டுகிட்டு, அப்புறம், அதைக் கழட்டி கால்ல மாட்டிக்கிட்டு.. ரொம்ப்ப் பரிதாபம். அப்படியும் அவன் எழுதறத விடலை பாருங்க... அதான் டெடிக்கேஷன். வீங்குதா?”
“ஆஆங்” குழறினேன். இன்னும் இரு ஊசிகள் ஈறுகளில். ஜிவுஜிவு என ஒருபக்கம் வீங்கிவர, அவர் எலக்ட்ரிக் சுழல் ரம்பம் ஒன்றை எடுத்தார். இரும்புக் குழாய்களை அறுக்கும்போது, பால் மாதிரி ஒன்றை அறுக்குமிட்த்தில் ஊற்றிக்கொண்டேயிருக்க, ரம்பம் அறுத்துச் செல்லும். அதேபோல, கறுஞ்சிவப்பாய் ஒன்றை வாயில் ( ஆ. பால் ஊத்தறாங்களா?) அவரது அசிஸ்டெண்ட் ஊற்றி வர, ’சொய்ங்க்’ என்ற ஒலியுடன் வாயுள் ரம்பம் நுழைந்தது. சில நிமிட வலியின் பின் “ 10 பவுண்ட் அழுத்தம் கொடுத்துத்தான் பல்லை நெம்பி எடுக்கறேன். கொஞ்சம் தாடையை அகலமா வைச்சுக்குக்ங்க. மீனாக்‌ஷி, அந்த சி.டியைப் போடுங்க. “
இசை மெலிதாக இழைந்து வர, திடீரெனெ வயலின்கள் உச்சஸ்தாயியில் எகிற, அனைத்து இசைக்கருவிகளும் பித்துப் பிடித்தாற்போல் அலறத் தொடங்க... அட இதென்ன  அவர் கையில்?.. பெரிய குறடு.

“மிஸ்டர் சுதாகர். இப்படி காலையெல்லாம் உதைக்கக்கூடாது. கையைக் கட்டுங்க. உங்க பையன் கூட ஒழுங்காக் காமிச்சான். மீனாக்‌ஷி, அடுத்த ட்ராக் போடுங்க.”
மெதுவாக அது எப்போதோ தொடங்கியிருக்க வேண்டும். சவத்தெளவு மேற்கத்திய இசையில் எப்ப தொடங்குகிறது , மேலே போகிறது என்று சொல்லவே முடியாது.  இசை திடீரென உச்சஸ்தாயியை எட்டியது. அசிஸ்டெண்ட் ரப்பர் உறையிட்ட கைகளால், என் இரு கன்னங்களையும் தட்டிக்கொண்டிருக்க, “ முடிஞ்சிடுத்து. இப்ப உங்க பல்லு என் கையில. ஒரே நிமிஷம். இன்னும் கொஞ்சம் ஆ -ன்னு “ 
ஆ வென அலறினேன். எதோ என்னிலிருந்து பெயர்த்தெடுத்த உணர்ச்சியில். “ Good. keep that jaw opened".. இசை ஒரு முகட்டில் கீச்சிடும்போது, பாஸ் கருவிகள் அதிர, ,குறடு வெளியே வந்தது
”பல்லைப் பாக்கணுமா? ” ஏதோ பிரசவ வார்டில், குழந்தையைக் காட்டறா மாதிரியில்ல கேக்கறாங்க.? ரத்தம் தோய்ந்த அந்த வெள்ளை வஸ்துவை நான் பார்க்க விரும்பவில்லை. “ நீங்க கொண்டுபோறீங்களா? “
“ எனக்கு பல் தேவதைகளிடம் நம்பிக்கை இல்லை” என்றேன் தீனமாக. அப்படிச் சொல்லியதாக நினைத்துக்கொண்டு குழறினேன்.
அவர் சிரித்தார். ”டெண்ட்டல் மாணவி ஒருத்தி வந்து இதனை சேகரித்துச் செல்வாள். இந்த புடுங்கிய பற்களில் முதலில் படிப்பார்கள். நான் படிக்கும்போது ஒவ்வொரு பல் ஆஸ்பத்திரியாக நடந்திருக்கிறேன். “
அவர் முன் நாற்காலியில், ஒரு ஐஸ் பேக்கை கன்னத்தில் வைத்தபடி அமர்ந்திருந்த போது, கேட்டார் “ மொசார்ட் சிம்பனி 40 எப்படி இருந்தது?”
முன்பிருந்த தாளில் எழுதிக்காட்டினேன். “முதலில் போட்ட ட்ராக், மொசார்ட் இல்லை. அது வில்லியம் டெல் ஓவர்ச்சர்.” ” “Good observation" என்றார். ” பல்லைப் புடுங்கும்போது  மொசார்ட்தான் ஓடிக்கொண்டிருந்தது. சரியாக ஒரு கோடா - குறடு புடுங்கியது கரெக்ட் டைமிங்” என்று எழுதினேன். அவர் புன்னகைத்தார்.
வீட்டுக்கு வந்தபின் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் “சைக்கோவ்ஸ்கி கேட்டுக்கொண்டிருக்கிறேன்.  அவனுக்கு நிச்சயம் பல் பிடுங்கப் பட்டிருக்கவேண்டும். இல்லையென்றால் அவனால் இவ்வளவு ஆழமான வலியுடன் Symphony Pathetique இயற்றியிருக்க முடியாது. மொசார்ட் வாழ்வில் அனுபவித்த துயரங்களோடே பல்லும் பிடுங்கியிருந்தால் அவன் முடிக்காது விட்டிருந்த சிம்பனியை ஒரு pathetique ஆக முடித்திருப்பான்”

அவரிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை. 

No comments:

Post a Comment