Saturday, June 28, 2014

பெத்த மனம்

அருண் குமார் திவாரி என்றால் மும்பையில் அவரைத் தவிர யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. MH 02SA 67XX என்ற ஒரு ஆட்டோ ஓடுவதும் ஓடாததும் யாருடைய ப்ரச்சனையாகவும் மும்பையில் இருந்திராது - அலகாபாத்திலும், ரூர்க்கியிலும், டெல்லியிலும் வாழும் சிலர் தவிர.

அந்த ஆட்டோவின் ஓட்டுநர் திவாரி. இன்று மாலை போரிவல்லியிலிருந்து அந்த ஆட்டோவில் ஏறினேன். மனிதர் ஒரு நிமிடம் நிறுத்தி கீழே இறங்கி இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு கண்மூடி நின்றார். ஒரு வேதனையை உள்வாங்கி செரிப்பது போன்றிருந்தது. அவசரமாக இறங்கி, தண்ணீர் வேணுமா? என்றேன். வேண்டாம் என்று தலையசைத்து மீண்டும் வண்டியில் ஏறி ஓட்டத்தொடங்கினார்.
“கடந்த பதினெட்டு மணி நேரமா ஒட்டிட்டிருக்கேன். இன்னிக்கு ஒருவேளைதான் சாப்பிடக் கிடைச்சது. 5000 ரூவா ஊருக்கு அனுப்பணும். அவசரமா.” என்றார்.

ஒரு நிமிட மவுனத்தின் பின் தொடர்ந்தார் “ வண்டி என்னதில்லை சாப். முதலாளிக்கு 500 ரூபாய் போக மிச்சம்தான் எனக்கு. நேத்திக்கு மால்வாணி பக்கம் ராத்திரி ஷிப்டு அடிச்சேன். நாலு பேர்.. ஏத்தமாட்டேன்னு சொல்லச் சொல்ல பிடிவாதமா ஏறி, இறங்கறபோது, அடிச்சுப் போட்டுட்டு, பையில இருந்த ரூவாயை வேற பிடுங்கிட்டுப் போயிட்டாங்க. முதுகுல வலி.. அதோட வண்டி ஓட்டற வலி வேற...” நான் சற்றே சீரியஸாக அவரை பார்த்தேன். நாப்பது நாப்பத்தஞ்சு வயசு இருக்கும். கிழக்கு உ.பி பக்கம் போல ஜாடை. பேச்சு.

“ உடம்பு வலி தாங்கிடலாம் சாப். என்ன..சிலது தாங்க முடியலை. இருவது வருசமா ஓட்டிட்டிருக்கேன். உடம்பு, மனசு எதாவது ஒண்ணு முதல்ல உடையணும் இல்லையா?” 

“என்ன ஆச்சு ?” என்றேன். 

“ மனசுதான் உடைஞ்சு போச்சு . ரூவா போனது வலிக்குது. 5000 அனுப்பணும் அவசரமா , ஊருக்கு. ECS கூட அடுத்த நாள் தான் போவும், ஹே நா சாப்?”

டெலிக்ராம் மனி ஆர்டர் பற்றி நினைத்துக்கொண்டிருந்தபோது தொடர்ந்தார். 

“ என் பையன் பி.ஈ படிக்கறான். ரூர்க்கியிலே. பொண்ணு சி.ஏ பண்றா, டெல்லியில். என்னமோ B க்ளாஸ்ங்கறா புரியலை. ரெண்டு தங்கச்சிங்க. ரெண்டும் கிராமத்துலேர்ந்து அலகாபாத் போய் படிக்கறாங்க. நாலு பேர் படிக்கறதுக்கும், எட்டு பேர் சாப்பிடறதுக்கும் நான் இங்க வண்டி ஓட்டறேன்” 

“ரூர்க்கி? ஐ.ஐ.டியிலயா?” என்றேன் ஆச்சரியத்துடன். “ ஆமாம் “என்பது போலத் தலையசைத்தார். குடைந்து கேட்டதில் அவருக்கு பி.டெக், பி.ஈ என்பதின் வேறுபாடு தெரியவில்லை. பி.ஈ என்றார் நிச்சயமாக. வேறு கல்லூரியாக இருக்கவேண்டும். ஆனால் ரூர்க்கியில்? 

”பசங்க என்ன மாதிரியில்லை. எம் பொண்டாட்டி 12ங்கிளாஸ் . நான் 5ம் கிளாஸ் பெயில். அவ படிக்க வைக்கணும்னு உறுதியா நின்னா. அதான் இதுங்களும், என் தங்கச்சிகளும் படிக்குதுங்க. என் கிராமத்துல படிக்கறத விட கல்யாணம் பண்ணி வைன்னு நச்சரிச்சாங்க. நான் விடலை. பொண்ணுங்க படிக்கணும் சார். அதுங்கதான் குடும்பத்தை நடத்தும். என் வீட்டையே எடுத்துக்குங்க..பையன் ஆட்டோ ஓட்ட வேண்டாம், படிக்கட்டும் என்று முந்தியே தீர்மானிச்சிட்டேன்.” 

நான் கூர்மையாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். 

” முந்தாநேத்து பையன் போன் பண்ணினான். 5000 ரூவாய் , புத்தகம் வாங்கறதுக்கும், ஏதோ பீஸ் கட்டறதுக்கும் வேணுமாம்.’ ஏண்டா , லைப்ரரியில எடுக்கமுடியாதா?”ன்னேன். அதுக்கு அவன்..” நிறுத்தினார். முகத்தைத் துடைத்தார்.

“ நீ படிச்சிருந்தா புத்தகம்னா என்ன விலைன்னு தெரிஞ்சிருக்கும். உனக்கு இதெல்லாம் புரியாதுப்பா” என்கிறான். சட்டென்னு அழுகை வந்துருச்சு சாப். இவ்வளவு உழைக்கறதுக்கு கேக்கற வார்த்தைதான் ரொம்ப வலிக்குது. ரவுடிங்க முதுகுல அடிச்சாங்க. வண்டி ஓட்டறது தோள்பட்டையில அடிக்குது. பையன் நெஞ்சுல அடிக்கறான். சரி, ஓட்டுவோம்.. ஓடற வரைக்கும்தான் வண்டி. கேஸ் தீர்ந்தா நின்னு போகும். அது வரை ஓடத்தான செய்யணும்? ஓடறதுக்குத்தானே வண்டி இருக்குது? .” சட்டென கலங்கிய கண்களை, முகத்தைத் துடைப்பது போல பாவனை செய்து துடைத்தார். 

ஆட்டோவின் ஒலியை மீறி, ரோட்டின் போக்குவரத்து ஒலிகளை மீறி அவர் சொன்னது என்னுள் பதிந்தது. 

பின்னொருநாள் அந்தப் பையன் ப்ரபலமாகலாம். “ எங்கப்பா ஒரு ஆட்டோ ஓட்டுநர்தான். நான் என் சொந்த முயற்சியால முன்னுக்கு வந்தேன்” என்று பேட்டி கொடுக்கலாம். அந்தக் கற்பனையில், அவனது கன்னத்தில் அறைந்தேன். 
‘உன்னை விட , முயற்சி செஞ்சு தேஞ்ச ஒரு உடல், மும்பையில் இருக்கிறது, முட்டாளே” என்றேன். 

இறங்கியதும், கூடவே ரூ 20 கொடுத்தேன். ‘இங்க ஒரு பன்னும், சாயும் குடிச்சுட்டு வண்டி ஓட்டுங்க, போதும்” என்றேன். அவர் கண்களை மூடிக்கொண்டு, கை கூப்பினார். இருவது ரூபாய் பெரிதல்ல., ஒரு மனிதனின் உணர்வுகளைப் பகிர ஒரு தளம், காலம் கிடைத்த நிம்மதி.

வீட்டு வளாகத்தின் கேட்-டை அடைந்தபோது திரும்பிப் பார்த்தேன். ஒரு பெண் ஏறிக்கொண்டிருக்க, திவாரி வண்டியைக் கிளப்பிக் கொண்டிருந்தார்.. சாப்பிடாமலேயே.

ஆயிரம் வருடம் முன்பு, . தலைவன் செருக்கால் தன்னைச் சேர்ந்தவர்களை எள்ளி , குத்திப் புண்படும்படி பேசுகிறான். அதனைக் கண்டித்து தலைவி/தலைவியின் தோழி சொல்கிறாள்.

”அரிகால் மாறிய அஙகண் அகல் வயல்
மறுகால் உழுத ஈரச் செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!

நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வமன்று தன் செய்வினைப் பயனே!

சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின் 
மென்கண் செல்வம் , செல்வம் என்பதுவே.”

- மிளை கிழான் நல் வேட்டனார், நற்றிணை. 

“ நெல் அறுத்த வயலிடத்து மீண்டும் உழுது பயிரட்வும், பல வகை மீன்களும் கொண்டு புது வருவாய் உடைய ஊரை உடையவனே! 
நீ பெரிய ஊர்திகளில் பயணிப்பதும், பெருமை சேருமாறு அழகாகப் பேசுவதும் செல்வமல்ல. அது உன் செய்வினையின் பயன் மட்டுமே. 
சான்றோர்கள் செல்வமென்பது, தன்னைச் சேர்ந்தோர்கள், எதன் பொருட்டு வருத்தம் கொள்கிறார்களோ, அதனை போக்குமாறு இனிய மரியாதை மிகுந்த வார்த்தைகளைப் பேசும் பணிவு கொள்வது மட்டுமே. 

அதில்லாத நீ, எத்தனை புகழ்பெற்றிருந்தாலும், பணம் பெற்றிருந்தாலும், வறியவனே.”

4 comments:

  1. மனம் கனக்கச் செய்து போகும் பதிவு
    சொல்லிச் சென்றவிதமும் இலக்க்கியச் சான்றும்
    முடித்தவிதமும் அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஆசிகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  3. i don't agree with slapping the son. (in your imagination for the words he would have never uttered.
    you are hearing one side of the story. An Autorickshaw driver's daughter cracked IAS in coimbatore , she shared her dad's hardwork in the media. So did a supersinger in Vijay TV . As an educated man, you should have told the auto driver that books do cost, and generations of suffering in poverty may end with his son. The son might even look after him well in future. Clearly he is talking out of the depression caused by the thugs and beating and directing the misplaced anger towards the son - who is miles away, might not have slept for days on end to get the distinciton, might have been ridiculed by classmates, girls or teachers and might be resolving to pass with distinction and who knows might be part funding himself by part time jobs. One of the scourge of our media (i can quote innumerable short stories from Kumudam in the past) was to portray educated sons as villains which have stood in the way of many a son to go to school in the past! - i am glad to say that does not happen in the villages as much as it used to happen. [Similarly educated wifes were always described as insubordinate or untrustworth... society is awake. Now it is very common that a working, earning or aspiring entrepreneur chooses wifes of higher education so the children will study better. I have my sympathies for the autodriver, respect for his wife and disgust for the thugs. Ur post must be very good in literary circles because it is causing the necessary ripples, (anger in me etcc...) and may good very good TRP rating if filmed. All the best

    ReplyDelete
  4. எளிய பகிர்வு. வலிய பதிவு.

    ReplyDelete