Wednesday, July 02, 2014

லாரா கோம்ஸ்


குஜராத் எக்ஸ்ப்ரஸ் ப்ளாட்பார்ம் நாலுக்குப் பதிலாக இன்று ப்ளாட்பார்ம் ஆறில் வருகிறது. பயணிகளுக்கு...” இயந்திர கதியில் போரிவல்லி ரயில்வே நிலையத்தில்  ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருக்க, நான் வேகமாக படிகளில் ஏறினேன். ஆறாம் ப்ளாட்பார்ம் அடுத்ததுதான் என்றாலும், இந்த வேகம் இல்லாவிட்டால், அடுத்த லோக்கல் ரயிலில் வரும் கூட்டம் , சிதறிய நெல்லி மூட்டையைப் போல் ப்ளாட்பாரத்தில் வழிந்து, முழு படிக்கட்டையும் ஆக்ரமித்துவிடும். அதற்குள் நாம் ஏறாவிட்டால் நமது ரயில் போவதைப் பார்க்கலாம். மும்பையில் எதையெல்லாம் கணக்கிட்டு முன்கூட்டியே திட்டமிட வேண்டியிருக்கு?

லேசான மூச்சிரைப்புடன் எனது கம்ப்பார்ட்மெண்ட் வரும் இடத்தருகே நிற்கையில். ‘எக்ஸ்க்யூஸ்மி, 3rd AC இங்கதான வரும்?” என்றது ஒரு சன்னமான குரல். “ ஆம்” என்று திரும்பிப் பார்க்காமலேயே தலையசைத்துவிட்டு அதன் பின் நிதானமாக யார் என்று பார்த்தேன்.

இவள்...?

“நீங்க, நீங்க லாரா... லாரா கோம்ஸ் தானே?”

அவள் கண்களை இடுக்கி என்னைப் பார்த்தாள். சற்றே புஜங்கள் பெரிதாகியிருக்கின்றன. முகம் சற்று ஊதியிருக்கிறாள். ஆனால் என்னை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை என்பது புரிந்தது. அறிமுகப்படுத்தியும் தெரியவில்லை. இறுதியில் அந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தினேன்.

முகம் மலர “ மை காட்... நீங்க..” என்றவள் வியப்பில் விரிந்த வாயைக் கைகளால் பொத்திக்கொண்டாள்.

”இப்பவும் கால் வலிக்குது” என்றேன் புன்னகைத்தபடி.

“ ஹ ஹா... Wow, so sorry, though fifteen years late" என்றாள் லாரா பெருத்த சிரிப்பினூடே.

பதினைந்து வருடம் முன்பு, நானும் என் நண்பனும், அந்தேரி ஸீப்ஸ் அருகே இருக்கும் துங்கா ரெஸ்டாரண்ட்டில் ஒரு மாலையில் நுழைந்து கொண்டிருந்தோம். சட்டென அவன் யாரையோ பார்த்துவிட்டு வாசலிலேயே நின்றான்.

 “ தோஸ்த், பொறுங்க”

புரியாமல் அவனருகே நின்றேன். “ என் பைக் -ஐ எடுத்துட்டு சக்காலா சிக்னல் வந்துடுங்க. அங்கயே வி.ஐ.பி ஷோரூம் பக்கம் நில்லுங்க. நான் பதினைஞ்சு நிமிசத்துல வந்துடறேன்” என்றவன் நான் மேற்கொண்டு எதுவும் கேட்குமுன், சாவியை கையில் திணித்துவிட்டு சாலையின் மறுபுறம் கடந்து ஸாங்கி ஆக்ஸிஜன் கம்பெனி வளாகத்துள் நுழைந்தான்.
விழித்தபடி நின்றிருந்த நான் பைக்-ஐ கிளப்பும்போதுதான், அந்தப் பெண் அவனருகே வந்து நின்றாள். இருவரும் வளாகத்தின் உட்புறம்  மரங்கள் அடர்ந்த கார் பார்க்கிங் பகுதியில் சென்று மறைந்தார்கள்.

லாரா என்பது அவள் பெயர் என்று அவன் சொல்லியிருக்கிறான். அவள் மும்பையின் வஸாய் என்ற புறநகர்ப் பகுதியில் பிறந்து வளர்ந்தவள். எங்கள் அலுவலகத்தை அடுத்த ஒரு நடுத்தர அளவிலான மருந்து உற்பத்திக் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருந்தாள் என்ற அளவில் எனக்குத் தெரியும். ஒரு முறை அலோ என்றிருக்கிறோம். அவ்வளவுதான்.
எனது நண்பன் வேறு மதத்தைச் சார்ந்தவன். உத்தரப் பிரதேசத்தில் அவனது பெற்றோர், விரிவான , வசதியான குடும்பம். இருவருக்குமிடையே காதல் மலர்ந்து இரு வருடங்களாயிற்று .இருவர் வீட்டிலும் எதிர்ப்பு இருக்கிறது  என்றான் ஒரு முறை
பைக்-கில் சக்காலா சிக்னல் சேரும்போது, போலீஸ் “தாம்பா ( நில்லு)” என்ற போதுதான் நினைவு வந்தது. ஹெல்மெட் போடவில்லை. நாசமாப் போனவன் ஹெல்மெட் தர மறந்திருக்கிறான்.

போலீஸ் “இன்ஸ்யூரன்ஸ் குட்டே(எங்கே)?” என்றபோது இன்னும் விழித்தேன். அனைத்து பேப்பர்களும் அவனது பையில். திருட்டு பைக் என்று பிடித்து வைத்தார் அவர். நண்பனின் வண்டி என்று விளக்கியும், கெஞ்சியும் பார்த்துவிட்டேன். மசிவதாகத் தெரியவில்லை.
அப்போதெல்லாம் செல்போன் பரவலாகக் கிடையாது. அவனை எப்படி அழைப்பது? அங்கேயே வண்டியோடு கால் கடுக்க நின்றிருந்தேன். ஒரு மணி நேரமானது, இரண்டு மணி நேரமானது. அவனைக் காணவில்லை.

போலீஸ்காரர் முகத்தில் இப்போது கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. அங்கிருந்து மெல்ல அவரோடு வண்டியை உருட்டியபடியே காவல் நிலையத்துக்குச் சென்றேன். கால் விண் விண் எனத் தெறித்தது. பசியும் கோபமும் சேர்ந்து சற்றே அழுகையும் வந்தது.

இருட்டிய பின்  நண்பனும் அவனோடு அந்தப்பெண் லாராவும் நுழைந்தனர். “சார் இது என் வண்டி. இது என் நண்பன்” என்று அவன் விளக்கி, படிவங்களைக் காட்டி நூறு ரூபாய் கொடுத்தபின்னே என்னை விட்டார்கள்.

‘சாரி, சாரி” என்றான் பலமுறை. கோபத்தில் ஒன்றும் பேசாதிருந்தேன்.

அவள் “ என் சார்பிலும் ஸாரி”என்றாள். அருகே ஒரு ஓட்டலில் அமர்ந்தோம்

“லெட் மி எக்ஸ்ப்ளெய்ன். லாராவுக்கு திருமணம் நிச்சயித்திருக்கிறார்கள். அவள் வீட்டில் காதலைச் சொல்லிவிட்டாள். அண்ணன்கள் மதம் மாறி கல்யாணம் செய்ய ஒத்துக் கொள்ளவில்லை. வேற வழியில்லை. நாளைக்கே ரிஜிஸ்டர் மேரேஜ்..”

வியப்புடனும் ஆயாசத்துடனும் அவனை ஏறிட்டேன். “ நோ வொர்ரிஸ். நான் எங்க அண்ணனை சரிக்கட்டி வைச்சிருக்கேன். அவர் பாத்துக்குவார். “

இரு வார விடுப்பின் பின் ஆபீஸில் சேர்ந்த நண்பன் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தான். ‘துபாய்ல வேலை கிடைச்சிருச்சு, லாராவுக்கு கொஞ்ச நாளாவும்” என்றான். அன்று போன அவனும், லாராவும்  மெல்ல மெல்ல நினைவிலிருந்தும் தேய்ந்து போனார்கள்.

ரயில் விரார் தாண்டி , பெரிய பாலத்தில் தடங் தடங் என்று சென்றுகொண்டிருக்க, சன்னலோரம் அமர்ந்திருந்த லாரா வெளியே பார்த்தபடி இருந்தாள். அவள் அருகே  இருக்கை காலியாயிருக்க, ’அமரலாமா?’ என்று கேட்டு அமர்ந்தேன்.

“ அவன் எங்கே? “ என்றேன்.

”மும்பையிலதான். எதோ ஒரு அமெரிக்கன் கம்பெனி பேரு” என்றாள். விசித்திரமாகப் பார்த்தேன்.

என்னை ஏறிட்டாள் “ நாங்க  பிரிஞ்சுட்டோம். டைவர்ஸ் இன்னும் வாங்கலை”
திகைத்துப்போனேன். எத்தனை சிரமப் பட்டு திருமணம் செய்து கொண்டு, பொசுக்கென்று ‘ பிரிஞ்சுட்டோம் ’ என்றால் ?

லாரா இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.

“துபாய்ல அவன் போனப்புறம் நான் அங்க போய்ச் சேர்றதுக்கு  ஒரு வருசம் ஆயிருச்சு. கல்யாணம் ஆனவுடனேயே என்னை வீட்டுல துரத்திட்டாங்க. ஒரு ப்ரெண்டு வீட்டுல ஒரு வாரம், அப்புறம் லேடீஸ் ஹாஸ்டல்...னு ஒரு பாதுகாப்பில்லாத  வாழ்க்கை.ரொம்பக் கஷ்டப்பட்ட காலம் அது.
 அவங்க விட்டுக்காரங்க வந்து மிரட்டினாங்க. விவாகரத்து பண்ணிரு.இல்லேன்னா கொன்னுருவோம்னாங்க. எல்லாம் தாண்டி ஒரு வருசம் கழிச்சு அவன்கூடப் போயி சேர்ந்துட்டேன்.
முதல்ல ரெண்டு வருசம் நல்லாத்தான் இருந்தான். எங்கயோ மதப் ப்ரச்சாரம் கேட்டவன், மெல்ல மெல்ல அதுல ரொம்ப ஈடுபாடு கொள்ள ஆரம்பிச்சான். முதல்ல நானும் அத ரொம்பக் கண்டுக்கலை. எனக்கு மத ஈடுபாடு எல்லாம் கிடையாது. அது அவங்க அவங்க பெர்ஸனல் விஷயம்னு விட்டுட்டேன்.அவன்  கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டே வந்ததை கவலையோடு பாத்துட்டிருந்தேன். ஒரு நாள் “ நான் தப்புப் பண்ணிட்டேன். உன்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டது என் மதக் கொள்கைக்கு மீறினது.” ன்னான். திடுக்கிட்டுப்போயிட்டேன். அதுக்குப் பரிகாரமா என்னை மதம் மாறச் சொன்னான். முடியாது ன்னுட்டேன். ஒருவரின் மத நம்பிக்கைக்கும் , காதலுக்கும், குடும்பத்துக்கும்  சம்பந்தமே இல்லைன்னு என் எண்ணம். கொஞ்சம் கொஞ்சமா சண்டை வர ஆரம்பிச்சது. அடிக்க ஆரம்பிச்சாரு.

பொறுத்து பாத்து, ஒரு நாள் கிளம்பி மும்பை வந்துட்டேன். வீட்டுல ஏத்துக்க மாட்டேன்னுட்டாங்க. திரும்ப லேடீஸ் ஹாஸ்டல். வேலை தேடல். இப்ப ஒரு மருந்து கம்பெனியில தர நிர்ணயத்துறையில இருக்கேன். கம்பெனி ஆடிட்க்குத்தான் வாபி போயிட்டிருக்கேன்.”

லாரா சற்றே நிறுத்தினாள். சூரியன் கீழ்வானில் செஞ்சாந்தைத் தீற்றியிருந்தது. ஒளிதான் எவ்வளவு அழகு? அனைத்து இருட்டையும் அழித்து விடுகிறது, ஒரு கணத்தில். 

லாரா தொடர்ந்தாள்.

”அப்புறம் அவனும் மும்பைக்கு வந்துட்டான்னு கேள்விப்பட்டேன். இப்ப அவங்க மத்த்துலயே ஒரு பெண்ணைக் கட்டி வைச்சிருக்காங்க. நல்ல சம்பளம், ஊர்ல சொத்து, பணக்கார பொண்டாட்டி. அவன் உண்டு, அவனை வாழ வைச்ச மதம் உண்டுன்னு இப்ப அவனும் நிம்மதியா இருக்கான்.

நானும் இப்ப நிம்மதியா இருக்கேன் சுதாகர். யோசிச்சுப் பாத்த்துல , எனக்குமே அது காதல்தானான்னு ஒரு சந்தேகம் வந்துருச்சு. மெல்ல மெல்ல என் அன்பும் அவன்மேல குறைஞ்சுகிட்டே வந்துருச்சு. இப்ப ஒண்ணுமே இல்லை. அவனும், இந்த ரயில்ல வர்ற ஏதோ ஒரு சக பயணிபோல,முகமறியாத ஒருவன் இப்ப, அவ்வளவுதான்.”

இருவரும் வெளியே பார்த்தபடி இருந்தோம். காலை சூரியனை மேகம் சூழ , கம்பார்ட்மெண்ட் சற்றே இருண்டது.

சூரியன் என்னதான் ஒளி பொருந்தியதாக இருந்தாலும், மேகங்கள் பூமிக்கு அதனை மறைத்துவிடுகின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தன்னைக் காதலித்தவன், காதலை விடுத்து, தீவிரமாக வேறு ஒன்றில் ஈடுபடுவது போன்று வாழ்ந்திருப்பதைக் கண்டு வெதும்பி, தன் காதலை அழித்தவாறே ஒரு பெண்  சொல்கிறாள்.

”மலை இடைஇட்ட நாட்டரும் அல்லர்
மரம் தலை தோன்றா ஊர்ரும் அல்லர்,
கண்ணில் காண நண்ணுவழி இருந்தும்.
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஓரீஇ ஒழுகிய என்னைக்குப்
பரியிலமன் யான் பண்டொரு காலே
       - நெடும்பல்லியத்தனார்,  குறுந்தொகை

”என்னைச் சேர்ந்தவன் மலைகள் சேர்ந்த மலைநாடனும் அல்லன். மரங்கள் அடர்ந்து செழித்த காடுவளமுடைய ஊரனும் அல்லன். இந்த ஊரிலேயே, என்னைக் கண்ணில் காணும் வழியிருந்தும், கடவுள் சிந்தனை பெருகிய ஒருவன் எவ்வாறு பிறரைக் காணாது தனது வழிபாட்டில் குறியாயிருப்பது போல, என்னை அறியாது போல பாசாங்கு செய்து வருகின்றான். அவன் மேல் நான் கொண்டிருந்த காதலும் மெல்ல மெல்ல அழிந்துவிட்டது”


No comments:

Post a Comment