Sunday, July 26, 2015

ஆயிரத்து ஐநூறு ரூபாய் டி.டி

”ஃபார்ம் நிரப்பிட்டீங்களா?”
”ஆமா”, மழையில் சற்றே ஈரப்பட்டிருந்த விண்ணப்பத்தாளை நீட்டினேன்.
“டி.டி?”
“இருக்கு, இருக்கு.”
பதட்டத்துடன் உளறி ,எதோ புத்தகத்தின் இடையே பத்திரமாக இருந்த டி.டியை தேடி எடுக்க சற்றே நேரமானது. அவர் எரிச்சலுடன் மறுபடி கேட்குமுன் கொடுத்துவிட்டேன்.
“ஏம்ப்பா பதர்றீங்க?” என்றான் மகன். அனைத்தையும் ஒரு கோப்பில் வரிசையாக வைத்திருக்கும் எனது கடைசிநிமிட பதட்டம் அவனை வியப்படைய வைத்திருக்கவேண்டும்.
எத்தனை வருடங்களாக , எழுதப்படாத ஒரு டி.டி,யை தேடிக்கொண்டிருக்கிறேன் ? அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
“சுதாகரன் ஆராணு?’ போஸ்ட்மேன் கொச்சி பல்கலையின் சரோவர் ஹாஸ்டல் ரூமில் வந்து ரிஜிஸ்டர்ட் கடிதத்தை நீட்டியபோது பகல்
உறக்கத்தில் இருந்தேன்.
“You have been provisionally selected to the B.Tech degree program of Department of Polymer Science and Rubber Technology for
the academic year of 1988. Hereby you are instructed to pay the fees in the department office by ..."
நானும் ஒரு ப்ரொபஷனல் டிகிரிக்கு தகுதியாயிருக்கிறேன்... எனது வாழ்நாள் கனவு... தொண்டையில் கனமாக ஏதோ அடைக்க, தெளிவற்ற
சொற்கள் ஒலிகளாக வாயில் வர ஏதோ “ நன்னி” என்றவன் ப்ரமித்து அமர்ந்திருந்தேன்.
அண்ணனுக்கு ’ரூ 1500 கட்டணும். மத்ததெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்” என்று எழுதி கடிதம் அனுப்பிவிட்டு , டிபார்ட்மெண்ட் வந்தபோது
கால் தரையில் பாவவில்லை.
”இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. பீஸ் கட்டிட்டியா?” சீனியர் ராமகிருஷ்ணன் கேட்டபோது ‘ வந்துறும்’ என்றேன்.
டெலிகிராம் வந்தது “ Stop joining course. details later. father'
எதாச்சும் பண முடைஇயாக ரிஉக்கும். அக்காவிடமோஅண்ணன்களிடமோ கேட்கலாம். நினைத்துக்கொண்டே, நண்பர்களிடம் கடன் வாங்கிக்கொண்டு தூத்துக்குடி, திருவள்ளுவர் பஸ்ஸில்.. வழக்கம்போல.
ராஜூ அண்ணன், வசந்தி அக்கா வீட்டுக்குப் போனபோது அக்கா வழக்கம்போல உற்சாகமாகப் பேசாததை அதிகம் கண்டுகொள்ளாமல் , பி.டெக் கிடைத்ததைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தேன்.
“ அந்த எக்ஸாம்ல நெகடிவ் மார்க் உண்டு , கேட்டியாக்கா? தெரியலைன்னு வைய்யி, சும்மா உளறிவைக்கக்கூடாது”
“ஏல, உனக்கு விசயம் தெரியாதா? இங்க இவ்வளவு அல்லோலப்படுது..” என்றாள் அக்கா.
“என்னது?” குழம்பினேன். அக்கா வீடு மாத்தறங்களா?
“பாபு அண்ணாச்சிக்கு ஹார்ட் அட்டாக்டா. ஹார்பர் ஆஸ்பத்திரியில சேத்திருக்காங்க. நீ என்னடான்னா, பி.டெக்க்குக்கு பைசா வேணும்னு நிக்கறே”
அதிர்ந்து போனேன். திருமலை என்ற பாபு அண்ணாச்சி தாயுமானவர். வளர்த்தவர் அவர்தான்.
ஆஸ்பத்திரியில் நான் போனபோது அவர் அருகே யாருமில்லை. இரு நாட்கள் தாடி வெள்ளையாய் முளைத்திருக்க, தூங்கிக்கொண்டிருந்தார்.
வீட்டு வாசலில் அப்பா பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். அம்மா உள்ளே காய்கறி நறுக்கிக்கொண்டிருக்க, ஸ்ரீதர் அண்ணன் ஆபீஸுக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.
”திடீர்னு முந்தாநேத்திக்கு நெஞ்சை வலிக்கறதுன்னான். சரின்னு ஆஸ்பத்திரி போனா, ஈ.ஸிஜில ப்ரச்சனை.அட்மிட் ஆயிருங்கன்னாங்க. இப்ப பரவாயில்லை’
எல்லா விவரமும் கேட்டபின் எனது பி.டெக்கும் ஹாலில் பேச்சுக்கு வந்தது.
“இப்ப இருக்கற நிலமையில நீ இதுக்கெல்லாம் போணுமான்னு தோணுது. நல்லதுதான். ஆனா நம்மால முடியணுமேடா?” என்றார் அப்பா.
“அக்கா, அந்தமான் அண்ணனுக்கு போன், என்று பலதும் யோசிக்கப்பட்டு, ஸ்டேட்பேங்க் லோன் கேட்பது என்று அப்பா முடிவுக்கு வந்தார்.
மதியம் வரை நிலைகொள்ளாமல் நின்றிருந்தேன். ஒரு குற்ற உணர்வு. பி.டெக் இருக்கட்டும்.. இந்த நேரத்தில் இந்த கேள்வி தேவைதான? நான் சுயநலமாகப் பார்க்கிறேனோ?
அந்தமான் அருகே புயல் என்பதால் போன் லைன் போகவேயீல்லை.
அப்பா எங்கோ போய்விட்டுத் திரும்பி வந்தார் “பேங்க்ல லோன் முடியாதுன்னுட்டார் மேனேஜர்”
“கல்வி லோன்னு இருக்குமே? நான் வரட்டுமாப்பா?”
“யாரு கியாரண்டி போடமுடியும்? மேனேஜர் “ சார்,உங்களுக்கு மூணு அட்டாக் வந்தாச்சு, திருமலை சார் இப்ப ஆஸ்பிட்டல்ல இருக்காங்கறீங்க. ரிஸ்க் எடுக்க முடியாது”ங்கறார். “
ஆஸ்பத்திரியில் அண்ணனிடம் மெதுவாகச் சொன்னேன். அவர் கண்களில் கோடாக நீர் வழிந்தது. “ பரவாயில்லடா. அப்புறமா எம்பிஏ படி. என்ன? நான் படிக்க வைக்கறேன் “ . அவர் எதையும் ’என்னால் முடியாது’ என்று சொன்னதேயில்லை, இன்றுவரை.
பாலிமர் சயன்ஸ் டிபார்ட்மெண்ட் தலைவர் டாக்டர் ப்ரான்ஸிஸ் ஜோஸப் “ பரவாயில்லப்பா. இன்னும் பெரிசா படிக்க உனக்குக் கிடைக்கும் “ என்றார், எனது அட்மிஷனை கேன்ஸல் செய்தபடி.
ரூ. 1500க்கான டி,டி இணைக்கப்படாத, ஒரு அட்மிஷன் லெட்டர், பழுப்பேறி என் சர்ட்டிபிகேட்டுகளுடன் இருந்தது. சமீபத்தில்தான் கிழித்துப் போட்டேன்.
“ ஐ.ஐ.டி கிடைக்கலையேப்பா?” என்றான் அவன் வருத்தத்துடன், அட்மிஷன் முடிந்து வெளியே வந்து ஆட்டோவுக்கு நின்றிருந்தோம். மழை லேசாகத் தொடங்கியிருந்தது.
“எனக்கு பி.ஈ ஏ கிடைக்கலை. அதைப் பாக்கறப்போ, பாம்பேல மூன்றாவது பெரிய இஞ்சினீயரிங்க் காலேஜ், தடோமல் சஹானி-ல இடம் கிடைச்சிருக்கே? சந்தோஷப்படு”
“டி.டி கொடுக்கறச்சே உங்க கை நடுங்கிச்சுப்பா. கவனிச்சேன்”
“அது வெறும் பேப்பர் இல்லைடா அபி. வெயிட் ரொம்ப ஜாஸ்தி. இருபத்து அஞ்சு வருஷ பாரம் அது”
ரயிலில் ஏறியபோது மனதும் உடலும் லேசாகியிருந்தது.

அறங்காவலன்




”யாரு வந்திருக்காங்க சொல்லுங்க பாப்போம்” உள்ளே நுழைந்த என்னை , மனைவியின் சீண்டல் கேள்வி ஒரு கணம் வந்திருப்பவரை கூர்மையாக நோக்க வைத்தது. ஒரே கணம்தான்.

“வித்வான்ஸ் ஸார் தானே?”

ஹா ஹா என்று பெரிதாகச் சிரித்தபடி, மிகுந்த மகிழ்ச்சியுடன் கை குலுக்கினார். அவரது வெண்ணிறக் குறுந்தாடியுள் சற்றே மறைந்திருந்த முகத்தில் தளர்ச்சி ஒரு கணம் நீங்கியதாகப் பட்டது எனக்கு.

வித்வான்ஸ் என்றால் ஏதோ சங்கீத வித்வான் என்று நினைத்துவிடாதீர்கள்.  பல்கலைக்கழகத்தில் ஒரு க்ளர்க்காகச் சேர்ந்து  படிப்படியாக உயர்ந்து , ரிடையர் ஆகும் தறுவாயில் அசிஸ்டெண்ட் ரிஜிஸ்ட்ரார் என்ற அளவுக்கு வளர்ந்திருந்தார்.  என் மனைவி மங்கையின் டிபார்ட்மெண்ட்டுக்கு கீழே அவர் வேலைசெய்யும் தொலைதூரக் கல்வித் துறை இருந்ததாலும், மனிதர் தனது அனுபவத்தால் செய்யும் அலுவலக உதவிகளாலும் மற்ற துறைகளின் ப்ரொபசர்களிடம் மிகுந்த மரியாதை பெற்றிருந்தார்.

முன்பெல்லாம், தினமும் அவர் குறித்து எதாவது ஒரு கதை இருக்கும்.
“இன்னிக்கு ஒரு கேஸு, கேட்டீங்களா? பர்ஸ்ட் இயர்ல சேர்ந்த  ஒரு பையன் தாழ்த்தப்பட்ட இனத்துக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கான். எங்க டிபார்ட்மெண்ட் ஆளுங்க, அதப்பாக்காமலேயே விட்டிருக்காங்க.  பீஸ் கட்டலைன்னு ஹால் டிக்கட் நிறுத்தி வைச்சிருந்தப்புறம்தான் கேஸ் எங்கிட்ட வருது. அதுக்குள்ள நாலு அரசியல் கட்சி ஆளுங்க, யூனிவர்சிடி கமிட்டீ... “

”அப்புறம்” என்பேன் அசுவாரஸ்யமாக. இது போல தினமும் ஏதாவது கேட்கவேண்டியிருக்கும், மனைவி ஆபீஸ் விஷயங்களைக் கேட்டும் பொறுமையாக இருப்பது  கணவர்களின் கடமை.

“வித்வான்ஸ் வந்தாரு. பேப்பர் எல்லாம் பாத்துட்டு, யார் யார்கிட்ட எப்படி பேசணும்னு சொல்லிட்டுப் போனாரோ பிழைச்சேனோ?, இல்ல, எங்க டிபார்ட்மெண்ட் அவ்வளவுதான். இத மாதிரி, டாக்டர். மாதுரி ரானடே இருக்காங்களே, அவங்களுக்கு போனவாரம்....”

வித்வான்ஸ் பெயர் கேட்காத நாள் இருக்காது எனக்கு. மனைவிக்கு யூனிவர்சிடியின் அரசியலும், அதன் நடைமுறை படிகளும் புரியும்வரை வித்வான்ஸ் ஒரு ரட்சகர். பரத்திலிருந்து வந்த மீட்பர்.
இத்தனைக்கும் வித்வான்ஸுக்கு நல்ல பெயர் கிடையாது. ஒரு பைசா லஞ்சம் வாங்கமாட்டார். அதைவிட மோசம், பிறரைக் கொடுக்கவும் விடமாட்டார். சில ஊழியர்கள் இதனாலேயே அவர்மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

“எதுக்கு பைசா வாங்கணும், சார்? கவர்மெண்டு சம்பளம் கொடுக்கறான். யூனிவர்சிடி அதை தாமதப்படுத்தினா, வி.ஸியைப் பிடிச்சு உலுக்குவேன். எவங்கிட்டயும் எனக்கு பயம் கிடையாது. போன வைஸ் சான்ஸ்லர், எதாவது விதிமுறைப்படி சிக்கல்னா, எனக்கு ப்ரைவேட்டா போன் பண்ணுவார். வித்வான்ஸ், ஒரு ஹெல்ப்.. யார்கிட்டயும் நான் கேட்டேன்னு சொல்லாதேன்ன்னு கூடவே சேத்து சொல்லுவார்” என்றார் வித்வான்ஸ் உடல்குலுங்க சிரித்தபடி.

 அவர் குரல் மிக உயர்ந்த தொனியில் இருக்கும்.
உண்மையே எப்போதும் பேசுபவர்கள், உள்ளத்தில் கபடமில்லாதவர்கள் குரல் ஒரு கட்டை உயர்ந்துதான் இருக்குமாம். யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது.

”மங்கைஜீ, ஒரு டீ போடுங்க” என்றார் உரிமையாக. “ சவுத் இண்டியன் வீட்டில் காபி குடிக்கவேண்டும் என்பார்கள். நீங்கள் மும்பையில் ஒரு ரெண்டும் கெட்டான். எனவே டீ யும் சுமாராக இருக்கும் என நினைக்கிறேன்”  இப்படி ஒரு வீட்டில் சொல்ல ஒரு தைரியம் வேண்டும்.

”என்னைப் பத்திச் சொல்ல பெரிசா ஒண்ணுமில்ல சுதாகர்ஜி. ரெண்டு பையன். ஒருத்தன் பி.எஸ்ஸி ஐ.டி முடிச்சிட்டு வேலைக்குப் போறான் ஒரு மாசமா. பொண்டாட்டிக்கு மன நோய் உண்டு. அதோட நரம்புத்தளர்ச்சி வேற. திடீர்னு வுழுந்துடுவா. நான் அன்னிக்கு பூரா வீட்டுல இருந்துதான் ஆகணும். இப்ப..” டீயை உறிஞ்சினார். முகத்தில் வாழ்வில் உழைத்ததன் கோடுகள் வரிவரியாக.. நெற்றியில் வழுக்கையில் ஒரு பெரிய தழும்பு அல்லது பழுப்பு மச்சம், கோர்பச்சேவ் போல.

“இப்ப, பசங்க பெரிசாயிட்டாங்க. மூத்தவன், இல்ல இளையவன் பாத்துக்கறான். எனக்கும் நிறைய லீவு போடமுடியாதுல்லியா? அதோட ஆபீஸ் பாலிடிக்ஸ் வேற.மங்கை சொல்லியிருப்பாங்களே?”

“ஆமா, சொன்னா” என்றேன் சுருக்கமாக.
“என் கேட்டகரி வேற அதுக்கு சாதகமாயில்ல பாருங்க. அதுனால பல தடைகள். ஆறு வருஷம் முன்னாலயே ஏ.ஆர் ஆகியிருக்க வேண்டியது. எவனோ எம்பேருல ஒரு கேஸ் ஜோடிச்சு போட்டு... என் பேர்ல குத்தம் இல்லைன்னு வந்தாச்சு, இருந்தாலும் ஆறு வருசம் போனது போனதுதானே?  என்னமோ அரியேர்ஸ் வரும்கறாங்க, பாப்போம்”

சட்டென அவர்மீது ஒரு பச்சாதாபம் எழுந்தது.

“சொல்றேன்னு நினைக்காதீங்க வித்வான்ஸ்ஜி. உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? உங்க வேலையை மட்டும் பாத்துட்டுப் போங்க. சர்வீஸ் இன்னும் ரெண்டு வருஷம் இருக்கா?”

“ஒரு வருசம் ரெண்டு மாசம்” என்றார் வித்வான்ஸ் புன்னகைத்து “ என்னால சும்மா இருக்கமுடியலை சுதாகர். ஒரு அப்பாவி பையன்கிட்ட “ சீட் நான் வாங்கித்தர்றேன்’ன்னு சொல்லி ஒரு கிளார்க் பத்தாயிரம் வாங்கியிருக்கான். அந்த பையனோட அப்பா, குப்பை அள்றவரு. காண்ட்ராக்ட் வேலை வேற. ஏமாத்தறதுன்னு வந்தா ஒரு லெவல் இல்லையா? “

“இந்த கேஸைப் பிடிச்சு வித்வான்ஸ் புகார் கொடுத்திருக்கார் இப்ப. அந்தாளு அரசியல் பலம் இருக்கறவன். “என்றாள் மங்கை.
“இது வேணுமா சார்?” என்றேன்.

“வேணும் சார். நாம விட்டுடோம்னா எவன் இந்தப் பசங்களுக்கு துணை நிப்பான் சொல்லுங்க? எனக்கு விதிமுறைகள் தெரியும். கண் முன்னாடி ஒரு அநியாயம் நடக்குது. தட்டிக்கேக்க வேணாமா?”


இரு நாட்கள் கழித்து, வீட்டுக்கு வந்திருந்தார். முகத்தில் ஒரு சோகம் நிழலாடியதைக் கண்டேன்.
“பையனுக்கு காக்காய்வலிப்பு மாதிரி வந்திருச்சு. ஸ்டேஷன்ல விழுந்திருக்கான். நல்லவேளை, ரயில் வரலை. யாரோ அவன் பையில என் நம்பரைப்பாத்து கூப்பிட்டிருக்காங்க. இப்பத்தான் டாக்ஸியில அவனை வீட்டுக்குக் கொண்டுபோயிருக்காங்க.கிளம்பிட்டேயிருக்கேன்.”
’அடடா” என்றேன்.” முதல் தடவையா இது?”
“இல்ல” என்றவர் தயங்கினார் “ முந்தியே வரும். கஷ்டப்பட்டு படிச்சான். வேலை கிடைச்சதேன்னு நிம்மதியானேன். இப்ப திடீர்னு திருப்பி வந்திருக்கு. மூளைக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் கொடுக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்றாரு. இவன் பாக்கற வேலையில அழுத்தம் இல்லாம இருக்குமா. சொல்லுங்க”

தாடியை வருடிக்கொண்டே மீண்டும் தொடர்ந்தார் “ கம்பெனியில தெரிஞ்சுதுன்னா வேலைலேர்ந்து நீக்கிடுவானோன்னு பயப்படறோம். சொல்லாம இருக்க எனக்கு முடியலை. ஏன் மறைக்கணும்னு தோணுது”

“வித்வான்ஸ்ஜி” என்றேன் திடமாக “ உங்களோட விதிமுறைகளையெல்லாம் ஒரு நிமிசம் ஒதுக்கி வைங்க. அவன் வாழ்க்கை அது. அவனைப்பத்தி ஒரு குறை சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. வேணும்னா அவனே போய்ச் சொல்லட்டும்”
“அதுவும் சரிதான்” என்றார் தீனமாக.

“இந்த ஆளு மேல எனக்கு நம்பிக்கை இல்லை” என்றேன் மனைவியிடம், அவர் போனபின்பு.

அடுத்த நாள் “ வித்வான்ஸை இன்னிக்கு ஒரு கமிட்டி விசாரிச்சிட்டிருந்தாங்க. பாவம்” என்றாள் மனைவி.

“அவர் கூட வேலை செய்யற ஒருத்தி சிபாரிசுல ஒரு   பையனுக்கு டிபார்ட்மெண்ட்ல சீட் வேணும்னு ஒரு பார்ட்டி கேட்டிருக்காங்க. இவர் ‘ மெரிட் லிஸ்ட்படிதான் பேரு வரும்”ன்னுட்டாரு. அந்தாளு அம்பதாயிரம் தர்றேன்னானாம். இவர் மாட்டேன்னிருக்காரு. அந்த அதிகாரி கோபமாபேச, இவர் பேச , அவ ஹராஸ்மெண்ட்டோ, என்னமோ ஒரு புகார் கொடுத்திருக்கா.”

“என்ன ஆச்சு” என்றேன் முதல்முறையாக ஒரு கலவரத்துடன்.

”தெரியலை. நான் கிளம்பறவரை விசாரணை நடந்துகிட்டிருந்தது”

இரவு நானே அவரை அழைத்தேன் ”  நாலு பேரு கமிட்டி சார். ஒரு ரவுண்டு முடிஞ்சாச்சு. நாளைக்கு. மேலிடத்துல கூப்பிடிருக்காங்க.  போணும்.”

“தனியா எப்படி போராடமுடியும், வித்வான்ஸ்? நீங்களும் உங்க டிபார்ட்மெண்ட் ஆளுங்க, எதாவது அரசியல் பார்ட்டி, அசோசியேஷன்னு அழுத்தம் கொடுங்க. அப்பத்தான் வேலை நடக்கும்”

“தனியாத்தான் சார் எப்பவும் உண்மை போராடும். ராமன் பக்கம் எத்தனை மனுசன் நின்னு போராடினான். விலங்குகள்தான் நின்னுச்சு. மகாபாரதம்? துரியோதனன் பக்கம் படிச்சவன் அத்தனை பேரும் நின்னான். அறம் தனியாத்தான் நிக்கும் ஜெயிக்கும்”

அவர் போனை வைத்ததும் மனைவி “ அவருக்கு சஸ்பென்ஷன் ஆர்டர் கொடுத்துருவாங்க போலிருக்கு, கேள்விப்பட்டேன்” என்றாள்.

எனக்கு உறக்கம் வரவில்லை. அறம் எப்போதும் தனியாகத்தான் நிற்கும். அதற்குத் துணையும் வித்வான்ஸ் போல தனியர்கள்தான்,  பெரிய விசாரனைக் குழுவில் தனியாக வயதான ஒரு ஒல்லி உருவம் நிற்பதாகத் தோன்றியது. தனக்கென இல்லாமல், தனது விதிமுறைகளுக்கு வாதாட அது வந்திருப்பதாகத் தோன்றியது.

மனது அலைபாய, கம்பராமாயணத்தைப் புரட்டினேன்.

 ப்ரம்மாஸ்திரத்தில் கட்டுண்ட அனுமன் இராவணன் அவையில் நிற்கிறான். 

“கறுத்த மாசுணம் கனகமாமேனியைக் கட்ட ,
அறத்துக்கு ஆங்கோர் தனித்துணையாய் நின்ற அனுமன்”

அறத்திற்கு தனியான ஒரேயொரு துணை அனுமன்.. அங்கு ராவண அவையில் அன்று நின்றான். அறத்தை எடுத்துச் சொன்னான். வாலில் தீ வைக்கப்பட்டான்.

வித்வான்ஸ் வாழ்க்கையில், வருங்காலத்தில் தீ வைக்கப்படுகிறது. அவர் காக்கும் அறம் அவரைக் காக்குமா?

”அவர் பையனுக்கு நீங்க வேலைக்கு சிபாரிசு செய்ய முடியுமா? அவருக்குக் கேட்க ஒரு தயக்கம். எனக்குப் புரிஞ்சுது” என்றாள் மங்கை.

“சொல்லிவைக்கறேன். அவன் வேலையில இருந்தாத்தான் சான்ஸ் அதிகம். ஆனா, இந்த ஆளு அந்தக் கம்பெனியில போயி, அவனைப் பத்தி எதாச்சும் உண்மையை உளறி வைக்கக்கூடாதே? நீங்க எல்லாரும்  சொன்னா கேப்பாரா?”

மறுதலிப்பாகத் தலையசைத்து “எங்க?” என்றாள்.

Sunday, July 19, 2015

அச்சம் தவிர்

”so, wrapping up, don't instill fear in children. Fearful kids are not disciplined kids. They only grow to be cowards for the rest of their lives. For your short term momentary peace at home and at school, seeding fear among children is deleterious"
அவர் முடிக்குமுன்னே மெதுவே எழுந்து ஓரமாய் பல்லி போல் சுவற்றில் ஒட்டி நடந்து வெளியேறினேன். கதவு பின்னால் சாத்தப்படுமுன் சன்னமான கைதட்டல் ஒலி கேட்டது.

குழந்தைகள் மனநிலை விற்பன்னர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் என குழுமியிருந்த அந்த அவைக்கும் எனக்கும் ஒரு தொடர்புமில்லைதான். தெரியாத்தனமாக கருத்தரங்கு அறை  நம்பர் 2 என்பதற்குப் பதிலாக இரண்டாம் மாடியில் இருந்த கருத்தரங்கு அவையில் நுழைந்துவிட்டேன். உன்னிப்பாக பலரும் கேட்டுக்கொண்டிருந்த சொற்பொழிவில் திடீரென கதவைத் திறந்து வெளியேற முயன்று இடையூறாக இருக்க விரும்பாமல்,சற்று இருந்து மெல்ல மெல்ல நகர்ந்து வெளியேறியபோது கேட்ட வரிகள்தான் இவை.

யாருமற்ற காரிடாரில் நடந்த போது, இந்த வரிகள் எங்கோ முன்பு கேட்டதாக மனதில் ஓடியது. எங்கே? எனக்கும் குழந்தைகளுக்கும் ஆகவே ஆகாது. அவற்றைப் பற்றி அதிகம் படிப்பதில்லை, கேட்பதில்லை. அப்படியிருக்க இது எப்படி....? சட்டென ஒரு பெயர் மனதில் மின்னலாடியது.

தளவாய்த் தேவர்.

தூத்துக்குடியில் நாங்கள் இருந்த பிள்ளையார் கோவில்தெருவில் மூன்று வீடு தள்ளி இருந்தது தளவாய்த் தேவரின் வீடு. குட்டையாக, குண்டாக, கருப்பாக இருப்பார் தேவர். இடுப்பில் பச்சைகலரில் மிக அகலமான பெல்ட், பாக்கெட்டுகளுடன் ஒளிர, அவர் கண்கள் எப்போதும் சிவந்து பெரிதாக விரிந்திருக்கும். தெருவில் கத்தி விளையாடி அட்டகாசம் செய்யும் பயல்களையெல்லாம் “தளவாய்த் தேவர் தாத்தாகிட்ட பிடிச்சுக் கொடுத்திருவேன்” என்று வீடுகளில் பயமுறுத்தி வைப்பார்கள்.

தேவர் எந்த குழந்தையையும் திட்டியோ, அடித்தோ நாங்கள் பார்த்ததில்லை. என் நண்பர்களும் நானும் அரை டவுசராகத் திரிந்த காலம் அது. உடைந்த கண்ணாடியில் சூரிய ஒளியை எதிரொளித்து, ஒரு நோட்டு அட்டையில் செவ்வகமாக ஓட்டை போட்டு அஞ்சு பைசாவுக்கு கிடைக்கும் ‘குடியிருந்த கோயில்’ எம் ஜியார் பிலிம் வெட்டு ஒன்றினை சொருகி, லென்ஸ் வைத்து பிலிமில்  ஒளிக்குவியம் ,பெருக்கம் செய்து, வீட்டினுள் வேட்டியை தொங்கவிட்டு, அதில் படம் பார்த்து பரவசமடைந்த 70களின் பொற்காலம் அது.

தளவாய்த்தேவருக்கு இரு மனைவிகள். பெரிய குடும்பம். திடீர் திடீரென சண்டைகள் வெடிக்கும். தெருவில் அடி தடி. வீடுகள் அவசரமாகக் கதவுகளை தாழிட்டுக்கொள்வார்கள். சில நாட்களில் போலீஸ் ரெய்டு நடக்கும். அதன்பின்னர்தான், தேவர் அவர்கள்  கள்ளச்சாராய்ம் காய்ச்சி வீட்டில் பதுக்கி வைப்பதாக அறிந்தோம். தூத்துக்குடிக்கு வெளியே பனங்காடுகளில் பால் இறக்கி, கள்ளூ  தயாரிப்பார் என்பது அறிந்ந்திருந்தோம் என்றாலும், போலீஸ் ரெய்டு என்பதெல்லாம் தெருவை கலங்க வைத்திருந்தது. தேவரைப் பார்க்கவே பயந்தனர் அங்கிருந்தவர்கள்.

தீபாவளி விடுமுறையின்போது கணேஷ் ஒருவர் தெருவில் கணக்காய் காலை பதினோரு மணிக்கு நடந்து போவதைக் கவனித்தான். அவர் வேட்டியை முன்னே தூக்கிப் பிடித்தபடி இரண்டு அடி எடுத்து வைத்து, நின்று, மீண்டும் ஆடி நடந்து நின்று செல்வார் என்பதையும் கவனித்திருந்தான். உள்ளாடை ஒன்றும் அணியாது அவர் வேட்டியை முன்னே பிடித்து நடப்ப்தை  காற்றடித்த ஒரு துரதிருஷ்ட நாளில் நாங்கள் பார்த்துவிட்டோம். அதைக்கேட்டு  “ ஜட்டி போடத மாமா, வேட்டி தூக்கிப் போனாராம். காத்து அடிச்சு கலைச்சுதாம், காக்கா கொத்திப் போச்சுதாம்”  என்று எவனது அண்ணனோ பாட்டு எழுதித்தர, அந்தப் பாட்டை ரோட்டில் அவர் வரும்போதெல்லாம் பாடி  வெறுப்பேத்தினோம்.

ஒருநாள் அவர் வருவதை அறியாமல் கணேஷ் கோலி விளையாடிக்கொண்டிருந்தபோது, பிடிபட்டான். அவனுடன் இருந்த நாங்கள் நால்வர் விக்கித்துப் போய் நின்றிருக்க, அவர் “ லே, எவனாச்சும் இனிமே இப்படி பாடினீங்க, ராத்திரி பேயா வந்து, உங்க குஞ்சை வெட்டிருவேன்” என்றார் , அன்றிலிருந்து எங்கள் பாட்டு நின்றது. அவர் போவதை பீதியுடன் பார்த்து நின்றோம்.

தளவாய்த்தேவர் , அவர் வீட்டுப் படிக்கட்டில் அமர்ந்திருந்தார். கலகலவென பேசி விளையாடிக்கொண்டிருந்த பயல்கள் திடீரென அடங்கி நிற்பதையும், பெருமை பொங்க ஒருவர் வேட்டி நீட்டிப் பிடித்துப் போவதையும் கவனித்தார். “லே , இங்கிட்டு வா” என்றார் கணேஷை.
“என்னலா? எல்லாரும் டவுசரை முன்னாடி பொத்திகிட்டு நிக்கீங்க? என்ன விசயம்?”
“இல்ல தாத்தா” மிடறு விழுங்கினான் கணேஷ். “அந்தா போறார்லா, அந்த மாமா, பேயா வந்து எங்களுக்கு நறுக்கிவிட்டுருவேன்னு சொன்னாரு.”
தளவாய்த் தேவர் சிரிக்கவில்லை. “யாருல சொன்னா? அந்தாளா?”
“ஆமா”என்று கணேஷ் காட்ட, தேவர் , அவரை உரக்க அழைத்தார் “ இங்கிட்டு வாரும்வே.”
“இந்த பயலுவளுக்கு சு** நறுக்கிறுவேன்னு சொன்னீரோ? “
“ஹி.ஹி” என்றார் அவர் சிரித்தவாறே “  எனக்கு ஓதம் தள்ளிட்டு. டாக்டர் வீட்டுக்குப் போயிட்டு வர்ர வழில சும்மா தொந்தரவு பண்ணிட்டிருந்தானுவ தேவரே. அதான் மிரட்டி வைப்பம்னு...”
“பொடதில புத்தியிருக்காவே உமக்கு? “ தேவர் சீறினார்.
“பயமுறுத்தி வைக்கீரே? ஆம்பளப் பயலுவ பயப்படலாமாவே? இளங்கன்னு பயமறியாதும்பாவ. பயம் தெரியாம வளர்ற கன்னுதான்வே நாளைக்கு காளையா தைரியமா பாயும். அதை எதுத்து நிக்க இந்தப் பயலுவ நிக்க வேண்டாமாவே? இவனுவ நாளைக்கு ஒரு ஆபத்துன்னா வேட்டிலேயே பேண்டுருவானுவ, இப்படியா பயலுவள வளக்கணும்? விவரம் கெட்ட மனுசன்வே நீரு. எந்தத் தெரு உமக்கு””
அவர் சிரிப்பு மறைந்து ஏதோ தெருப்பெயரை முணுமுணுத்தார் “ இனிமே எந்தப் பயலையாச்சும் பயமுறுத்தினீர்னு தெரிஞ்சுது, ஒம்ம வேட்டில மோள வைச்சுருவேன். தெரிஞ்சுக்கோரும். பயலுவ பயமில்லாம வளரணும். அப்பத்தான் காப்பு உறுதியாயிருக்கும். வீட்டுக்கும் சரி,ஊருக்கும் சரி”

தளவாய்த் தேவர் சொன்னபோது, ஏஸி அறையில்லை.பட்டுப் புடவை அணிந்த,  கோட்டு ,டை கட்டிய அறிஞர்கள் கைதட்டவில்லை.

Saturday, July 18, 2015

நட்பின் மொழி


மதியம் ஒரு மணியளவில் தெரியாத நம்பரிலிருந்து போன்.
“டே, அய்யாத்துரை பேசறேன்”
தூத்துக்குடி காலேஜ் நண்பர்கள் அழைத்தால் என் குரல் தானாக உற்சாகத்தில் உயரும்.
“லே, இன்னிக்கு நம்ம காலேஜ்ல பழைய மாணவர்கள் கூட்டம். எல்லாரும் வந்திருக்கம். உன்னை போன்ல பிடிக்கலாம்னு ஃப்ரெடி சொன்னான். பேசலாம்லா?”
“அட பாவிகளா, ஒருத்தனும் ஒரு வார்த்த சொல்லலியே? எங்கிட்டு இருக்கீய எல்லாரும்?”
“பார்ல இருக்கம். இரி. ஒருத்தர் உங்கிட்ட பேசணும்னு நிக்கான். பேசுதியா?”
யாராயிருக்கும்?ஃப்ரெடி, துரை ராஜ்,ராஜசேகர்? எல்லாவனும்தான் பேசியிருக்கானே?
போனில் “லே, கூ*****யானே. யாருன்னு தெரிதா?”
(விடுங்க. சகவாசம் அப்படி. ஊரும் அப்படி. பாசம் பொழிந்தாலும், பொங்கிக்கொண்டு கோபம் வந்தாலும், கெட்ட வார்த்தைகள்தான் எங்கூர்க்காரனுவளுக்கு வரும். அது தாமிரபரணி மாதிரி. இடம் காலம் பொருள் பார்க்காமல் பொங்கும்)
நாலு வசைகளுடன் அவன் மீண்டும் அய்யாத்துரையிடம் போனைக் கொடுத்ததும் அவன் சொன்னான் “ லே, அவன் ரோகேஷ். இப்ப அவன் ஸ்கூல் வாத்தியான் தெரியுமில்லா? ”
“யாரு இவனா?” என்ற எனது ஆச்சரியத்தில் ஒரு கெட்ட வார்த்தை உதிர்ந்தது.
“இந்த தா****  கிளாஸ் எடுத்தா பிள்ளைங்க உருப்படுமாலே? வெளங்கும்”
“என்ன இதுக்கே அசந்துட்ட? அவன் பிஸிக்க்ஸ் எடுக்கான். ப்ளஸ் டூ-க்கு”
“அய்யோ”
“அதுவும் இங்க்லீஸ்ல.. மக்கா, இப்ப சொல்லு”
“லே. அவங்கிட்ட போனைக் கொடு” என்றேன்.
இரண்டு நிமிட இடைவிடாத வசவை வாங்கிக்கட்டிக்கொண்ட பின், சிரித்துக்கொண்டே “ லே , உன்னப் பாக்கணும்னு இருக்குடா. இங்கிட்டு வர்றதே இல்லையோ?”
24 அரியேர்ஸ் வைத்து பாஸ் செய்தவன், பானுமதி தியேட்டரில் மதியம் ஷோவில் எப்ப பிட்டு காட்டுவாங்க என்பதெல்லாம் தெரிந்து வைத்திருந்தவன், ஓஸி டீ அடித்தே மூணு வருசம் ஓட்டினவன், அனைத்து ப்ரொபஸர்களிடமும் திட்டு வாங்கினவன்.. இன்று நெஞ்சு நிறைய அதே நேசத்துடன், அதே கெட்ட வார்த்தை விளிகளுடன்...

அதன் பின் ஃப்ரெடி “ லே, நம்ம வாத்தியார்கள்ல சொக்கலிங்கம் சார் மட்டும்தாண்டே இருக்காரு. பாத்துட்டு வந்தம். மனசு கனமாயிருச்சு. அதான் நேரா பார்ல...”
“சரி, இந்த பீர்-க்கு ரோகேஷ் பணம் கட்டினானா?”
“எளவு என்னிக்கு காசு கொடுத்திருக்கு? இப்பவும் நானும் அய்யாத்துரையும்தான்.. கெட்ட கேட்டுக்கு குத்தாலம் போணுமாம். அதுவும் நாந்தான் டிரைவராம்... என்ன திமிரு பாரு? அது போவட்டு. இப்பத்தான் கிச்சான் பேசினாண்டே...”
பயல்கள் எவனும் மாறவில்லை. மாறாமல் இருப்பதுதான் இன்றும் அட்ரிலனினை லிட்டர் லிட்டராக ஊற வைக்கிறது.
அய்யாத்துரை .” லே , நீ கதையெல்லாம் எழுதியிருக்கியாம்லா? பேஸ்புக்ல பாக்கேன். அதும் தமிழ்ல திருவாசகம், ராமாயணம்னு எழுதற பாரு, பெருமையா இருக்குடே. கடைல ஏலா, இவன் என் ப்ரெண்டுன்னு சொல்லிக்கிடுதேன். இன்னும் எழுது என்னா? சரி, எப்ப வாற இங்கிட்டு?”

லிஃப்டு பட்டன்கள் தெரியாமல் கண்ணீர்ப்படலம். காலத்தில் உறைந்து மேலே போகாமல் , தரையிலேயே நின்றேன்.
தரைதான் இயல்பு. நிஜம். அங்கிருந்து மேலே எங்கோ போனாலும், தரைக்கு வரும்போது கிடைக்கும் தெம்பு, வ.உ.சி கல்லூரி வளாகத்தினுள் நுழையும் நேரம்  போல  ஒரு நிறைவு.
கூ*.... மக்களா, நல்லாயிருங்கடே.