மாலை
ஆறுமணியானது, அந்திக்கருக்கலில் தெரியாமற்போனது. சந்திரசேகர், பதட்டத்துடன் செருப்பை
அணிய முயல , அது சறுக்கி விலகி எங்கோ போனது. அவசரமாக அதைத் துரத்தி அணிந்து, சரக் சரக்கென
வேகமாய் நடந்தான் சேகர். வேதநாயகம் உரையாடலைத் தொடங்கியிருப்பாரோ?
“வா, சேகர்” என்றார் வேதநாயகம்,பொய்ப்பல் செட் பளீரெனத்
தெரிய, ”லேட்டு போலிருக்கு இன்னிக்கு?”
“சாரி.
கல்யாணிகூட ஒரு சின்ன சண்டை. டிஸ்டர்ப் ஆயிட்டேனா, மறந்துபோச்சு” ப்ளாஸ்டிக் சேர்களில்
அமர்ந்திருந்த ஜேம்ஸ் சிரிப்பதாக நினைத்து, குதிரை போல கனைத்தார். பாலாமணி டீச்சர்
இன்னும் வரலை என்பதை, சேகர் உணர்ந்தான்.
“இன்னிக்கு
நாம மூணுபேர்தான் இருக்கம். ரசூல் ஒருவாரம்
வரமுடியாதுன்னுட்டான். டூர் போறானாம்.” வேதநாயகம் மூன்று பீங்கான் குவளைகளில் டீயை
நிரப்பினார்.
“எந்த
கதாநாயகனாவது பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டதா இலக்கியம் சொல்லுதா அய்யா? அப்ப, அது எப்படி
காலம் காட்டும் கண்ணாடின்னு சொல்ல முடியுங்கேன்?” ஜேம்ஸ் தொடங்கி வைத்தான்.
“அதென்ன
ஜேம்ஸ்? சிலப்பதிகாரத்துல, கானல் வரிப்பாடல் சொல்லுதே?, அங்கதான கோவலனுக்கும் மாதவிக்கும்
பிரிவு வந்தது? “
“ஹ..”
என்றார் ஜேம்ஸ், முன் நெற்றியைத் தடவியபடி “ அவங்க கணவன் மனைவியாய்யா? சும்மா சேந்து
வாழ்ந்தாங்க. இப்ப சொல்றாமாதிரி லிவ் இன் ரிலேஷன்ஷிப். கணவன் மனைவின்னா கோவலன் -கண்ணகியில்லா
சொல்லணும்?”
“அட,
மாதவிகிட்ட சண்டை போட்டுப் போனதுலானதான அவன் கொலையுண்டு போனான்?” என்றான் சேகர்.
“
அப்ப கீப்புகிட்ட கூட சண்டை போடக்கூடாதுங்கீங்க?” ஜேம்ஸ் சீண்டினான்.
சேகர்
ஜேம்ஸை ஆழமாகப் பார்த்தான். ஜேம்ஸுக்கு இலக்கியமெல்லாம் பரியச்சமில்லை. சும்மா ஒரு
வெட்டிப்பேச்சுக்கு கூட்டத்தில் கலந்துகொள்கிறான். கடும் உழைப்பில், அலைச்சலில் முப்பது
வயதிற்கு அவன் நாற்பதாகத் தெரிந்தான். இரு வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.
திருமண மண்டபத்தில், எஸ்தர் இவனுக்கு மகள்
போலிருந்தாள். வேதநாயகத்தின் அண்டை வீடு என்பதால் , நெருக்கம் அதிகம்.
வேதநாயகம்
தில்லியில் ஏதோ செண்ட்ரல் கவர்மெண்ட் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். மதுரையில் சொந்த
வீட்டில் குடிவந்த இரு மாதத்திலேயே , அவர் மனைவி இறந்துவிட, தனியராக வசித்துவந்தார்.
பேஸ்புக்கில் பழக்கமான நண்பர்களை சந்திப்பது, அவர்களோடு இலக்கியம் பேசுவது என்று பொழுதைக்கழிப்பவர்.
வாராவாரம் அவர் வீட்டில் இலக்கிய உரையாடல் நடக்கும்.
வேதநாயகம்
புன்னகைத்தார் “ ஜேம்ஸ், சும்மா மேலோட்டமா இலக்கியம் பேசக்கூடாது. கொஞ்சம் உள்ள போனாத்தான்,
அதிலுள்ள உளவியலெல்லாம் புரியும். மணிமேகலையில ஆதிரை பிச்சையிட்ட காதைன்னு படிச்சிருக்கியா?”
“இல்ல”
என்று தலையசைத்தான் ஜேம்ஸ். சேகர் நெளிந்தான். இதோட ரெண்டு தடவை செல்போனில் கல்யாணி
அழைத்துவிட்டாள். ஜேம்ஸுக்கு ப்ரச்சனையேயில்லை. அவன் வீடு அடுத்த வீடுதான் என்பதால்
எந்த நேரம் எஸ்தர் அழைத்தாலும் போய்விட முடியும். இந்த சந்திப்பை முடித்துக்கொண்டு
இப்பவே எழுந்து போய்விடலாமா? என்று நினைத்துக்கொண்டிருக்கையில் வேதநாயகம் பேசத் தொடங்கினார்.
“மணிமேகலைக்கு
கிடைச்ச அட்சய பாத்திரத்துல முதல் பிச்சை போடறது ஒரு கற்புக்கரசியா இருக்கணும். அப்பத்தான்
பாத்திரம் எப்பவும் உணவு கொடுத்துகிட்டே இருக்கும். மணிமேகலா தெய்வம் ஆதிரைன்னு ஒருத்தி
கதையச் சொல்லுது. அவ புருசன், சாதுவன் என்கிறவன் அவளை விட்டுப் பிரிஞ்சு பணத்தையெல்லாம்
தொலைச்சு, பொருளீட்டுவதற்கு கப்பல்ல போறான். கப்பல் முங்கிருது. இதெல்லாம் , நல்ல மனைவியைப்
பிரிஞ்ச பாவத்தின் சம்பளம் இல்லையா?”
“அவ
கற்புக்கரசியா இருந்தா, அவன் பிழைச்சிருக்கணும்ல?”
“ஜேம்ஸ்.
நல்லாயிருக்கே! அவன் பிழைக்கணும்னா அவ கற்போட இருக்கணும். ஆனா அவன் என்ன வேணும்னாலும்
செய்யலாம், என்ன?!” விவாதம் சூடாவதை உணர்ந்த சேகர் இடைமறித்தான்.
“இதப்பத்தி
அப்புறம் பேசுவம் சார். சாதுவன் என்னானான்?”
“சாதுவன்
நீந்தி, காட்டு மனுசங்க வாழற ஒரு தீவுல ஒதுங்கறான். அவனை அவங்க பிடிச்சு, தலைவன்கிட்ட
கொண்டு போறாங்க. அந்த இடம் எப்படி இருந்துச்சின்னா....
”கள்அடு
குழிசியும் கழிமுடை நாற்றமும்
வெள்என்பு
உணங்கலும் விரவிய இருக்கை”
கள்ளை
ஒரு குடுகையில நிரப்பி வைச்சிருக்கான். பச்சை இறைச்சியின் நாற்றம் வருது. இறந்த விலங்குகளின்
உலர்த்தப்பட்ட வெண்மையான எலும்புகள் போடப்பட்ட இருக்கை - அதுல அந்த தலைவன் அமர்ந்திருக்கான்.”
“அங்.!
அவங்க இருக்கற இருப்பை மட்டும் சொல்லிட்டு விட்டா எப்படி? அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை
இருக்குமுல்ல? அவனுக்குன்னு ஒரு ஒழுங்கு இருக்கும்.
அதத்தான் பேசணும்.” என்றான் ஜேம்ஸ்.
“ஹ.ஹ..”
சிரித்தார் வேதநாயகம். “. இந்த ஒழுக்கமெல்லாம் அவரவர் பார்வைக்கு ஏத்தபடி மாறும். எனக்கு
ஒழுக்கமாத் தெரியறது, உனக்கு ஒழுங்கீனமாத் தெரியும். அந்த தலைவன் இருப்பைச் சொன்னாத்தானே,
உனக்கு அவன் கூட்டம் ஒழுங்கீனமா, அருவெறுப்பாத் தெரியும்? அந்த இருக்கையில, தலைவன் , ஒரு பெண்ணோட இருக்கான். அதுவும் எப்படி...
ஆண்கரடி, காமத்துல பெண்கரடியோட கூடி இருப்பதைப்போல’ங்கறாரு.
“எண்குதன்
பிணையோ டிருந்தது போல
எண்கு-ன்னா
ஆண் கரடி. பிணைன்னா பெண் கரடி. ஏன் கரடிக்காமம்? இதுதான் சூச்சுமம்.” வேதநாயகம் டீயை
உறிஞ்சினார். சேகர் முன்னே குனிந்து அவரை ஆர்வமாகப் பார்த்தான்.
“அதென்ன
கரடிக்காமம்?” என்றான் சேகர்.
“யானைப்
புணர்வு, மான் புணர்வுன்னு சொல்லிப் போயிருக்கலாம். கரடி? அது பாடல்கள்ல வர்றது அரிது.
அதோட ஆச்சரியம், அது கூடியிருக்கிற நிலையைப் பத்திச் சொல்றது. கரடியிருக்கே?, அது இனப்பெருக்க
காலத்துல, பெண்கரடியோடு அடிக்கடி புணரும். சில நேரம் ஒரே நாள்ல இருபது தடவை... அன்றில்,அன்னம்
போல காதல்னு சொல்லமுடியாது. தீராக் காமம். அடித்தள உணர்வான, வெக்கமற்ற காட்டுவெறி காமம்.
அதுமட்டும்தான். ’அதுமாதிரியான காமத்துல ஒரு
பெண்ணோடு, அனைவரும் காண அவன் இருந்தான்’ங்காரு. இது ஒழுக்கமற்ற நிலைன்னு இல்லாம, கீழான
ஒழுக்க நிலை-ன்னு எடுத்துக்கணும்.”
“சாதுவனுக்கு
என்னாச்சு?” என்றான் ஜேம்ஸ், கதைகேட்கும் ஆர்வத்தில்.
”
அவன் கடல்ல செத்துப்போயிட்டான்னு தப்பி வந்தவங்க சொல்ல, ஆதிரை தீக்குளிக்கப் பாக்கறா.
தீ அவளச் சுடாம இருக்கு. சாதுவன் இன்னொரு கப்பல்ல ஊருக்கு வந்து சேர்றான். இப்படி திரும்பி
வர்றதுக்கு ஆதிரையோட கற்பு நெறி காரணம்ங்கறாரு புலவர்”
எஸ்தர்
அழைக்க, ஜேம்ஸ் எழுந்து போனான். ‘”என்னமோ மெட்ராஸ்ல பிலிம் எடுக்கப் போறேன்னு சொல்லிட்டுத்
திரியறாம்பா இந்த ஜேம்ஸு. நீயாச்சும் சொல்லிப் பாரு. நாஞ்சொன்னா கேட்கமாட்டான்” என்றார்
வேதநாயகம்.
ரசூல்
இரு வாரங்கள் கழிந்து வந்தபோது ‘ஜேம்ஸ், குடும்பத்தோட
மெட்ராஸ் போயிட்டான் ”என்ற செய்தியைச் சொன்னான்.
ஆறு
மாதம் கழிந்தபின், ஒரு மாலையில் அலைபேசி சிணுங்கியது. ரசூல் “ சேதி தெரியுமா? ஜேம்ஸ்
ஓடிப்போயிட்டானாம்”
”என்ன?”
திகைத்தான் சேகர் “மெட்ராஸ்லதான இருந்தான்.?”
”கடன்
தொல்லை. எல்லார்கிட்டயும் பத்தாயிரம், ஐம்பதாயிரம்னு வாங்கி ஒரு பிலிம்ல போட்டிருக்கான்.
படம் முடங்கிப்போச்சு. ஆட்கள் பைசா கேக்கறாங்க. வேலைய எப்பவோ விட்டு நின்னாச்சு அவன்.
ஸோ..”
”அப்ப
அவன் மனைவி? பிள்ளைங்க?”
“பிள்ளைங்க
ஏது? எஸ்தர் அங்க ஏதோ ட்ராவல்ஸ் கம்பெனியில வேலை பாக்கறதாச் சொன்னாங்க. தெரியாது”
இருநாட்கள்
கழித்து, உரையாடலை முடித்துக் கிளம்பும்போது வேதநாயகம் அவனை நிறுத்தினார்.
“ஜேம்ஸு,
எங்கிட்ட இருபதினாயிரம் ரூபாய் வாங்கிட்டுப் போயிருக்கான். நீ மெட்ராஸ் போனேன்னா, அவங்கிட்ட
அனுப்பிவைக்கச் சொல்லு, அந்தப் பொண்ணுக்குத் தெரியவேண்டாம், என்ன? எஸ்தர்,கண்ணகி மாதிரி.
செயினைக் கழட்டிக்கொடுத்தாலும் கொடுத்துறும். மானஸ்தி.”
“சரி”என்று
தலையசைத்து வந்தான் சேகர். இவருக்கு ஜேம்ஸ் பத்தின உண்மை தெரியாதோ? சொல்லவேண்டாம்.
ஒரு
வாரம் கழித்து அவன் சென்னை போக நேர்ந்ததில், ஜேம்ஸ் நினைவு வந்தது. அவனது பழைய அலைபேசி
எண்ணுக்கு எங்க இருக்கப்போறான்? என்ற அவநம்பிக்கையிலேயே அழைத்தான்.
“ஹலோ”
என்றது ஒரு பெண்ணின் குரலில். சேகர் தயங்கி “ இது ஜேம்ஸ் நம்பரா? நான் மதுரைலேர்ந்து
சந்திரசேகர் பேசறேன்.”
தயங்கியது
மறுமுனை “ நான் எஸ்தர். அவர் இல்ல. என்ன வேணும்?”
“இல்லம்மா”
அவனும் தயங்கினான்... எப்படிச் சொல்ல? அவளே
கேட்டாள்.“உங்ககிட்டயும் பணம் வாங்கியிருக்காரா?”
.”இல்ல,
வேதநாயகம் சார்கிட்ட”
“சார்கிட்டயா?”
அவள் திகைத்தது தெரிந்தது.அவன் சொல்லச் சொல்ல அவள் அமைதியாகக்கேட்டாள். “ வீட்டு அட்ரஸை
எஸ் எம் எஸ்ல நாளைக்கு காலேல அனுப்பறேன். சாயங்காலம் நாலு மணிக்கு வாங்க. வேதநாயகம்
சார் பைசாவை கொடுத்திடறேன் “
”இன்று
இனிமே என்ன செய்யலாம்?”என்று சிந்தித்தபோது, ஹைதராபாத்தில் இருக்கும்போது கூட வேலை
பார்த்த பவன் குமார் நினைவுக்கு வர, அலைபேசியில் அழைத்தான்.
“வீட்டுக்கு
வந்துரு சேகர். ராத்திரி டின்னர் எங்கவீட்டுல”
பவன்குமாருடன்
கதைகள் பேசி , காலாற நடை செல்லலாமென லிஃப்டில் இறங்கியபோது, யாரோ இடிக்க, தள்ளாடி நிலைகுலைந்தான்.
“ஸாரி”
என்ற அந்த மனிதன், தள்ளாடி லிப்டில் நுழைந்தான்..ஒரு பெண்ணை அணைத்தபடி. லிஃப்டின் கதவுமூடும்
போது கண நேரம் பார்த்ததில்..இவள் ..இவள் ?
“பேரு
தெரியாது. வீட்டு ஓனர் இவன். அவ இங்க தங்கியிருக்கா” கண் சிமிட்டினான் பவன்.
“என்ன
வேலை தெரியாது. நேரம் காலம் இல்லாம வருவா, போவா. இவன் மட்டும் இங்க வருவான். ஒண்ணு
கீப்பா இருக்கணும். இல்ல அயிட்டம் கேஸ்-ஸா இருக்கும். நமக்கென்ன, இந்த அபார்ட்மெண்ட்ல
யார் யார் என்ன செய்ய்யறாங்க?ன்னு பாக்கறதா நம்ம வேலை?”
\
பவன்குமாரிடம்
விடைபெற்றுக் கிளம்புகையில் மணி பத்தாகி விட்டிருந்தது.காவலாளியிடம் துருவிக்கேட்டு,
அவள் வீட்டை அறிந்தான். கொசுக்கடியைப் பொறுத்துக்கொண்டு பூங்காவின் பெஞ்ச்சில் காத்திருந்தான்.
பதினோரு
மணியளவில் மேலும் பொறுக்கமுடியாமல், வீட்டின் கதவைத் தட்டினான்.
கதவைத்
ஒரு பாதி திறந்தவள் முகம் சுருக்கினாள் “யெஸ்? யாருவேணும்?”
“நான்
சேகர், எஸ்தர்”
வீட்டின்
வரவேற்பறையில் ஐந்து நிமிடம் இருவரும் பேசாது அமர்ந்திருந்தனர்.
“கடன்
நெருக்கடி, அதோட வீட்டுல வந்து அவங்க கேட்க ஆரம்பிச்சாங்க. என் நகை, அவரு பைக்கு...எல்லாத்தையும்
வித்தாரு. அப்படியும் முடியல.வீட்டு வாசல்ல நின்னு கத்த ஆரம்பிச்சாங்க. அவமானம் பொறுக்க
முடியாம, ஒருநாள் என்னையே அடமானம் வச்சுட்டேன்... வைக்க வச்சுட்டாங்க”
சேகர்
பேசாது அவளை வெறித்துப் பார்த்திருந்தான்.
“வேற
வழியில்ல. மானத்தைக் காப்பாத்த மானத்தை விக்கத்தான் வேண்டியிருந்துச்சு. விசயம் தெரிஞ்சு
போய் ஜேம்ஸ் சொல்லிக்காம எங்கயோ போயிட்டாரு. அவரை நான் குத்தப்படுத்தல. எனக்கு அவர்
நிலமை புரியுது” குனிந்து தரையைப் பார்த்துக்கொண்டு பேசியவள், நிமிர்ந்து அவனை நோக்கித்
தொடர்ந்தாள்.
“கடன்
இன்னும் இருந்துச்சு. பெரிய அமவுண்ட். ஏதோ ஒரு அழுகிய பொணத்தைக் காட்டி, இதுதான் ஜேம்ஸுன்னு
என்னைச் சொல்லச்சொன்னாங்க. இன்ஷ்யூரன்ஸ் கொஞ்சம் வந்துச்சு. அதுல கடனை அடைச்சுட்டேன்.
ஆனா, மேற்கொண்டு வாழ்க்கைக்கு?. “
“ஜேம்ஸ்
இன்னும் உயிரோட இருக்கானா?”
“ராஜமுந்திரி
பக்கம் பாத்ததா யாரோ சொன்னாங்க. என்னைப் பொறுத்த வரை அவர் செத்திருந்தா நல்லது. எவன்
எவனோட காமத்தீக்கெல்லாம் என் உடம்பு இரையாக ஆயாச்சு. இனிமே அவரு வந்தாக்கூட வாடிக்கையாளராத்தான்
வரணும்.” எழுந்து “வாங்க” என்றபடி உள்ளே போனாள்.
சேகர்
வீட்டின் உட்புறம் புகுந்தான். திறந்திருந்த அறையொன்றில் மங்கலாக ஒளி படர...படுக்கையறை..
குப் என்ற மது நெடி. மெத்தையில் பீங்கான் தட்டுகள் பரந்து கிடக்க, அதில் இறைச்சி கடித்து எடுக்கப்பட்ட, மீதி எலும்புத்துண்டுகள்
நிறைந்து கிடந்தன. மெத்தையில், கரிய உருவமொன்று, தொப்பை மேலெழ மூச்சு விட்டு உறங்கிக்கிடந்தது..கரடி
”.எண்கு தன் பிணவோடு இருந்தது போல..”
”கள்அடு
குழிசியும் கழிமுடை நாற்றமும்
வெள்என்பு
உணங்கலும் விரவிய இருக்கை”
கள்ளும்,
இறைச்சியும், பெண்ணும் நுகர்வதற்கே என்பதான கரடிக்காமத்தில், கற்புக்கு என்ன அடையாளம்?
”நான் சீதையோ, கண்ணகியோ, சார் அடிக்கடி சொல்கிற
ஆதிரையோ இல்ல. “ எஸ்தரின் கிசுகிசுத்த குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தான். அவளது நீட்டிய
கையில் பருமனான ஒரு தங்கச்சங்கிலி.
“இத
வித்து, நாளைக்கு சாரோட பணத்தைக் கொடுக்கலாம்னு இருந்தேன்.”
அவன்
கையில் சங்கிலியைத் திணித்தாள். “சார்கிட்ட , நான் நல்லா இருக்கேன்னு சொல்லி வைங்க.
அவர் நினைப்புல நான் ஆதிரையாகவே இருந்துட்டுப் போறேன். புருசன் செத்துப்போனான்னுகேட்டு
தீயைச் சுட்டா அவ. சாகாத புருசன், செத்துட்டான்னு, காமத்தீயில சுட்டு கருகறேன் நான்.
ஒற்றுமை ரெண்டுபேருக்கும் ஒண்ணுதான் - புருசன் சரியில்ல”
“ஜேம்ஸ் வெளிய போயிருந்தான், பணத்த எஸ்தர் கொடுத்தா”
என்றான் சேகர் சுருக்கமாக வேதநாயகத்திடம்..
”அட!
எஸ்தரைப் பாத்தியா? எப்படியிருக்கா?”என்றார் வேதநாயகம் ஆர்வமுடன்.
”காப்பியங்கள்ல
வர்ற தம்பதிகள் மாதிரி “ என்றான் சுருக்கமாக.
“அஹ்!
கோவலன் கண்ணகி துன்பமா முடிஞ்சுபோச்சு. அவன் சாதுவன் இல்ல. ஆனா அவ ஆதிரைதான். அவ போட்ட
அட்சயபாத்திர பிச்சையா இத எடுத்துக்கறேன்” என்றார் வேதநாயகம், ரூபாய் நோட்டுகளை கையில்
எடுத்தபடி.
சேகர்,கண்கள்
கலங்கத் திரும்பி நின்றுகொண்டான்.. இருபதாயிரத்துக்கு ஒரு மொபைல் வாங்கித் தொலைத்தாக
கல்யாணியிடம் சொல்லிக்கொள்ளலாம். சங்கிலி எஸ்தர் வீட்டுப் பூஞ்சாடியில் பத்திரமாக இருக்கும்.