Sunday, April 24, 2016

பாசுரமும் குழந்தை வளர்ப்பும்

”இந்த பாசுரங்களைப் படிப்பதில் என்ன ப்ரயோசனம்? ” என்றார் புருஷோத்தமன். அவர் எனது கஸ்டமர் என்பதால் எனது  பேச்சுக்கு  ஒரு வரையறை உண்டு. மவுனமாகக் கேட்டிருந்தேன்.

”ஊர்ல , எங்கப்பா டெய்லி மூணுமணி நேரம் பூஜைன்னு உக்காருவாரு. ஒரு குழந்தை கிருஷ்ணர் விக்ரகம் உண்டு. அதைக் குளிப்பாட்டி, பூவைச்சு, என்னமோ பண்ணுவாரு. அம்மா அவ்வளவு அடுப்படி அவசரத்துலயும் சந்தனம் அரைச்சு வைக்கணும், பால் ஒரு கிண்ணில எடுத்து வைக்கணும். எவ்வளவு மெனக்கெட்ட உழைப்பு?”

“அது அவங்க விருப்பப்பட்டு செய்யற விஷயம் புருஷோத்தமன். உங்களுக்கு கஷ்டமாத் தெரியறது, அவங்களுக்கு சுகமான சுமையாக்த் தெரியலாம். உங்கம்மா எப்பவாச்சும் இது முடியலைன்னு சொல்லியிருக்காங்களா?”

“அப்பா மேல இருக்கிற பயம்னு நினைக்கறேன்” என்றார் அவர்,சிந்தித்தபடி.  தெலுங்கும் தமிழும் வளர்ந்து விளையாடிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

“அப்பா தமிழ் பாசுரம் பத்தி நிறைய சொல்லுவார். . நமக்குத்தான் ஒன்னுன் ஏறலை. ஆனா வருத்தமில்ல, சுதாகர். என்ன பெரிசாத் தெரிஞ்சுகிடப் போறோம். ?”

“என்ன அப்படி சொல்லீட்டீங்க?” என்றேன் சற்றே திகைத்து.

“பின்னே? குழந்தைக்கு மை கொண்டு வா, பால் ஊட்டு, குளிப்பாட்டு-ன்னு பாடறதுல அன்னியோன்னியம் இருக்கும். உணர்வு பூர்வமான பக்தி இருக்கும். அது புரியுது. ஆனா, சடங்கா மாறும்போது, தடையாகுதோன்னு சந்தேகம் வருது. ஏன் , இந்த சடங்கு இல்லாம, பாசுரத்தை ரசிக்க முடியாதா, இல்ல பக்திதான் வராதா?”

“பாசுரத்தை உள்வாங்குவதற்கு சடங்கு துணையாக இருக்கக் கூடும்.  நமது ஈடுபாடு, பாடலின் பரியச்சம், விளங்கிக்கொள்ளும் தன்மை நாளுக்கு நாள் அனுபவத்தில் மாறலாம்” என்றேன்.

“அது ஒரு சாத்தியம் என்று மட்டும் சப்பைக் கட்டு கட்டாதீர்கள். இந்த பாசுரங்களால் குழந்தை வளர்ப்பு பலப்படுமா, இல்லை என் பக்திதான் பலப்படுமா? ஒன்றுமில்லை. நான் அவரது உணர்வை மதிக்கிறேன். ஆனா அதிகமாப் போகுதோ என்றும் நினைக்கிறேன். அவ்வளவுதான்”
அதன்பின் நாங்கள் அதைப்பற்றிப் பேசவில்லை.

ஒருவாரம் முன்பு அவருடன் மதிய உணவு.

“பொண்டாட்டி,  பிள்ளைகளோட ரெண்டு வாரம்  ஊருக்குப் போயிருக்கா. பிசாசுகளுக்கு லீவு விட்டாச்சு பாருங்க.” என்று தொடங்கினார்.

“ பெரியவ ஏழாம் வகுப்பு. ஒரு புத்தகத்தைக் கொடுத்துட்டா, ஒரு ஓரமா உக்காந்திரும். பசி ,தாகம் கிடையாது. சின்னது ரொம்ப வாலு. எங்கப்பா. பூசைக்கு வச்சிருக்கிற பழத்தை கடிச்சு வச்சிரும். பாலைக் கொட்டிரும். ஏய்னு அதட்டினா, ஒரு மாதிரி முழிச்சு பாக்கும் பாருங்க.. பொண்டாட்டி போன்ல சொல்றா , அப்பா ஒண்ணுமே சொல்லமாட்டேங்கறாங்க. ரொம்ப செல்லம். ”

“எப்படி சொல்லுவாரு?” என்றேன் “ அதுக்குத்தானே பூசையே பண்றாரு. ”எண்ணெய்க் குடத்தை உருட்டி , இளம்பிள்ளை கிள்ளிஎழுப்பி, கண்ணை உருட்டி விழித்து கழகண்டு செய்யும் பிரானே”ன்னுதானே தினமும் கூப்பிடறாரு முன்னால வந்து நிக்கறப்போ கோவம் எப்படி வரும்? “
“இது சரியில்லன்னேன். அவ செய்யற சேட்டை, பெரியவ கணக்குல கொஞ்சம் மந்தமா இருக்கறதுன்னு என் மனைவி, பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட சொல்லிட்டிருந்திருக்கா. அப்பா கோவப்பட்டு ‘இதெல்லாம் பேசாதே”ன்னுட்டாரு. குழந்தைகளுக்கு என்ன ப்ரச்சனைன்னு அம்மாக்காரி சொல்லக்கூடாதுன்னா.. ஓவர் இல்ல?”

“இல்ல” என்றேன் “ மத்தவங்க முன்னாடி ,குழந்தைகள் காதுபட அவங்க தவறுகளைச் சொல்லாதீங்க. அது திருத்தறதுக்குப் பதிலா, ஒரு தாழ்வு மனப்பான்மையை விதைக்கும்னு” நினைச்சிருப்பாரு”
“ஆங்” என்றார் வியந்து “ அப்படித்தான் சொன்னாரு. அந்த குழந்தைக்கு என்ன புரியும்? இதெல்லாம் அதுங்க மனசுக்குள்ள  போகாதுங்க. சும்மா பயப்படறாரு”
“உளவியல் வல்லுநர்களும் இப்படித்தான் சொல்றாங்க. நம்மைப் பற்றிய வார்த்தைகள்தாம் சிறுவயதில் நம்மை செதுக்குகின்றன. அவை நல்வார்த்தைகளாக  இருப்பின், நற்பண்புகள் சாத்தியம். திட்டுகள், தளர்ச்சியை, சுய ஐயத்தைக் கொடுக்கும்.” பாசுரம் தந்த பாடம் இது”

“இதுக்கும்  பாசுரத்துக்கும் என்ன தொடர்பு? சும்மா... எல்லாத்துக்கும் ஆகா ஓகோன்னுட வேண்டியது”

“கண்ணன் பால் தயிர் வெண்ணெய்ன்னு எல்லாத்தையும் திருடுவதை அறிந்தும் யசோதை சொல்கிறாள் “ சிறந்த நற்றயலார்கள் தூற்றும் என்பதாலே பிறர் முன்னே மறந்தும் உரையாடமாட்டேன்; மஞ்சனமாட நீ வாராய்” அவனது தவறுகளை அறிந்த அன்னை அதனை தனியாகத் திருத்த முற்படவேண்டுமே தவிர, பிறரிடம் குழந்தைகள் கேட்க, குறைபட்டுக்கொள்ளக் கூடாது. “ இதுங்க என் பேச்சைக் கேக்கறதே இல்லை” என்ற சொல், குழந்தைகளுக்கு  ஒரு அன்னையிடம் எப்படி அவள் சொற்படிக் கேட்கவேண்டும் என்ற படிப்பினையைத் தரும்? அதான் யசோதையே கண்ணனைப் பற்றி பிறரிடம் பேசமாட்டேன் என்கிறாள்.  கற்கப்  பலவும் கிட்டும்.  கற்கும் எண்ணம் இருந்தால்.  “

அவர் பேசவில்லை. தலைமட்டும் இல்லை என்பது போல் ஆடினாலும், உள்ளே ஒரு சிந்தனை முளைத்திருப்பது உணர முடிந்தது.

2 comments:

  1. உங்கள் பதிவு என்னை ஒரு பதிவு எழுதத் தூண்டியது .நன்றி

    ReplyDelete
  2. உங்கள் பதிவு என்னை ஒரு பதிவு எழுதத் தூண்டியது .நன்றி

    ReplyDelete