Saturday, August 27, 2016

பேசாதே..வாயுள்ள ஊமை நீ...

ஒழுங்காகப் பேசுவதாக நினைத்து எசகுபிசகாக உளறி விட்டு, பேந்தப்பேந்த விழிப்பதென்பது சிலருக்கு வாழ்வியல் விதி. பெரும்பாலும் இதில் ஆண்களே மாட்டுவார்கள். மறதியோடு, விபரீதமாக வேறொரு நினைவைத் தொடர்புபடுத்திக் கொள்பவர்களுக்கு “ அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா”.

ஊர்ப்பக்கம் போனால் மிக ஜாக்கிரதையாக இருந்தாலும் ஏதோ உளறி மாட்டிக்கொள்வேன். மறதி அதிகமானதைக் காட்டிக்கொள்ளாமல் இருக்க ஒருபோலி தன்னம்பிக்கையுடன் ”அங்! நீங்க செல்லமுத்துதானே?” என்பேன். கேட்கப்பட்ட அன்வர் பாய் என்னை அடிக்க யாரை அழைக்கலாம்? என்று தீவிரமாகச் சிந்தித்து அங்கிருந்து நகர்வார். அதன்பின் நிஜமான செல்லமுத்துவிற்கு ஞானஸ்நானம் அளித்து ’ டே, தொம்மையோட தம்பிதானே நீயி?’ என்றிருப்பேன். விடுங்கள், இதெல்லாம் அதிகம் பாதிப்பில்லாதவை.

சிலவருடங்கள் முன்பு ஒரு கலியாண மண்டபத்தில் வாயெல்லாம் சிரிப்பாய் வரவேற்ற ஒருவரிடம் “கங்க்ராஜுலேஷன்ஸ்! பொண்ணுக்கு சீமந்தமாமே?! எப்ப டெலிவரி?” என்றேன். அவர் , ஜாங்கிரியை வாயில் அடைக்கும்போது எதிரே வந்த மனைவியைக் கண்டு விழி பிதுங்கும் டயாபடீஸ்காரனைப் போல ஒரு முகபாவம் வைத்துக்கொண்டு அங்கிருந்து அவசரமாய் நகர்ந்தார்.

 இருநிமிடங்களில் அங்கு விரைந்து வந்த மங்கை “ அவர்கிட்ட என்ன கேட்டுத் தொலைச்சீங்க?” என்றாள்.

”பொண்ணுக்கு எப்ப டெலிவரி?ன்னேன். போன மாசம் சீமந்தத்துக்குப் பத்திரிகை வந்ததே?”

“நாசமாப் போச்சு. அது இவர் அண்ணன் பொண்ணுக்கு..”

“அப்ப இவர் பொண்ணுக்கு எப்ப டெலிவரி?” நான் விடவில்லை.

“வாயை மூடுங்க. அதுக்கு இன்னும் கலியாணமே ஆகலை”

”அண்ணன் தம்பிகளெல்லாம் பொண்களுக்கு ஒரே நேரத்தில் கலியாணம் செய்துவைக்க மாட்டார்களோ? அல்லது இந்தப் பெண்கள்தான் ஒரே நேரத்தில் டெலிவரி வைச்சுக்கொள்ளாதுகளோ?” என்று லாஜிக்கே இல்லாமல் உளறி, மேற்கொண்டு அவள் எதுவும் சொல்லுமுன் நகர்ந்துவிட்டேன்.

உறவுகள், ஒரே மாதிரியாக இருத்தல் என்பதில் வரும் சிக்கல்,. பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பதில்லை. யாருடைய அத்தைபெண்ணை யாருடைய மூன்றாவது தம்பிக்கு எங்கே கலியாணம் செய்து கொடுத்தார்கள் என்பதிலிருந்து, இப்ப பிறந்த சிசுவரை கணக்கு கரெக்டாய் வைத்திருப்பார்கள்.
இந்த உறவுகள், உட்கணங்கள், சார்புகள் எளிதில் அவர்கள் அறிவதால்தான், கம்ப்யூட்டர் பொறியியல், கணக்கியல் போன்றவை அவர்களுக்கு எளிதில் வந்துவிடுகின்றன போலும். பசங்க, முட்டி முட்டிப் படிச்சுதான்  ஜாவா, .நெட் , பைதான் கோட் எழுதுவான்கள்.
.
Aravindan Neelakandan பார்க்கும்போதெல்லாம் “ எளமையா இருக்கீங்களே?”ன்னுவார். “தம்பி, எம் ஜி யார் கலர்ல சும்மா செவ செவன்னு இருக்கீங்களே?”என்று கேட்கப்பட்ட வடிவேலு நினைவில் வந்துபோவார்.

முன்பொருமுறை, மிகக்கரிசனமாகக் கேட்பதாக நினைத்து “மாமா,, காடராக்ட் ஆபரேஷன்னு கேள்விப்பட்டேன். அரவிந்த் ஆஸ்பிட்டல்லயா? வலது கண் சிகப்பா இருக்கே?” என்க , மாமா மேலும் கீழும் பார்த்து , தனது எம்.ஜி.ஆர் கூலிங்கிளாஸை எடுத்துவிட்டு, கோபத்தில் மேலும் சிவந்த விழிகளால் , செங்கட் சீயமாய் நோக்கி “ ஆபரேஷன், இடது கண்லடா, அறிவு கெட்டவனே” என்றார்.

கொஞ்சம் சந்தேகமாக இருந்தாலே, இப்போதெல்லாம் ஒரு மந்தகாசப் புன்னகையுடன் அமைதியாக இருந்துவிடுகிறேன். “போனமாசம்தான் ஒரு ஹெர்னியா ஆபரேஷன்... அதான் மெதுவா டாக்ஸில வர்றேன். ஆட்டோ குலுங்கறது” என்றவரின் அண்ணன் அடுத்த திருமண மண்டபத்தில் ஆட்டோவில் வந்து இறங்குகையில் “ சார் பாத்து, ஆபரேஷன் ஆன இடம்” என்று ஏகக் கரிசனமாகச் சொல்லி , அவரிடம் இருப்பதை இல்லாமல் போக வைக்க விருப்பமில்லை.

இது புரியாமல் இன்னும் நண்பர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் நானும் ஜாதவ் என்பவரும் , எங்களது முந்திய கம்பெனி சக ஊழியரைச் சந்திக்க அவர் வீட்டிற்குப் போயிருந்தோம். ”பிள்ளைகளுக்கு வரன் பாத்துகிட்டிருக்கோம், இன்னும் அமையலை” என்றார் அவரது மனைவி மிகக்கவலையாக. உள்ளேயிருந்து வந்த ஆஜானுபாகுவான இளைய உருவம் ,குர்த்தாவை இழுத்துவிட்டுக்கொண்டு, எங்களை கால் தொட்டு வணங்கி, தலைமுடி சிலுப்பி, “பை அங்கிள்” என்று கனத்த தொண்டையில் சொல்லிவிட்டு வாசலில் விரைந்தது.
“அட, இவ்வளவு ஹாண்ட்ஸம் ஆன, அடக்கமான பையனுக்கு பொண்ணு வரிசையில நிப்பாங்க. கவலையே படாதீங்க” என்றார் ஜாதவ், மிகக் கரிசனத்துடன். நண்பரின் மனைவி முகத்தில் ஒரு இறுக்கம்.. உள்ளே சென்றுவிட்டார்.

காரைக் கிளப்ப்பும்போது ”ஜாதவ்ஜி, என்ன சொன்னீங்க?” என்றேன்
.
“நல்ல ஹான்ஸம்மான பையன்-ன்னேன் இல்லையா பின்னே?”

“அது அவரோட மூத்த பொண்ணு”

1 comment:

  1. good memory is blessing...
    recollecting people with their names gives a delightful feeling to the persons you just spoke...
    try that man....

    ReplyDelete