Monday, February 12, 2018

திக்குவாய் - முயற்சி திருவினையாக்கும்

மூன்று மாதகாலமாக எனக்கு அதிகம் வரும் உள்பெட்டி உரையாடல்கள் திக்குவாய் சார்ந்தவை.
நான் திக்குவாயால் சிரமப்பட்டவன் என்பதை பொதுப்படையாகவே சொல்லி வருகிறேன். இதில் எந்த வெட்கமோ, அவமானமோ இல்லை. எனக்குத் திக்குவாய் மிக மோசமாக இருந்தது. 1ம் வகுப்பிற்குப் பின் , 12 வகுப்பு வரை ஒரு பேச்சுப்போட்டியிலும் கலந்து கொண்டதில்லை. வகுப்பில் 3ம் 4ம் பெஞ்சில் ஓரத்தில் இருந்துவிடுவேன். டீச்சர் கேள்விகளுக்குப் பதில் தெரிந்தாலும்.. எதுக்கு வம்பு?
மெல்ல மெல்ல சில பயிற்சிகளாலும், ஜோசப் ஜெயராஜ் என்ற எனது 10 வகுப்பு ஆசிரியரின் ஊக்குவிப்பாலுமே அது நீங்கியது என்பதை “தூத்துக்குடி தெய்வங்கள்” என்ற ப்ளாக்பதிவில் எழுதியிருக்கிறேன்.
மிகச் சிறுவயதில் அடிக்கடி தாக்கிய காய்ச்சல்களில், வலிப்பு வரும். அது மூளையைத் தாககியிருக்கும். அன்றைய மருத்துவர்கள் இப்படிச் சொன்னார்கள் “ இவனுக்குக் கணக்கு சரியா வராது. கேட்டிங்களா? கொஞ்ச்ம் மந்தமாத்தான் இருப்பான். போகப்போக செரியாகலாம். நல்லதே நினைங்க”
அக்கா சொல்லித்தான் இது தெரியுமென்றாலும், சிறுவயதிலேயே எனக்குக் கணக்கு வராது என்ற நினைவுத் தடங்கலே, பெருந்தடையாக இருந்தது. உண்மையான நரம்புத் தளர்ச்சியோ, மூளைப் பாதிப்போ அதிகம் பாதிக்கவில்லை.
இப்போதும் சில நேரங்களில் திடீரென சிந்தனை சிதறும். பல வகையிலும் சிந்தனை மின்னலைகள் தாறுமாறாகப் பாய்ந்து வர, நிதானமாக கண்களை மூடி சாய்ந்துவிடுவேன். அந்த தாறுமாறான மின்னலைப் புயல்கள் மூளையைத் தாண்டிச் செல்ல சில நிமிடங்களே ஆகும். அதன்பின் ஒரு சோர்வு ஒரு மணிநேரமிருக்கும். அவ்வளவுதான். “ இது தாண்டும்வரை பொறுமையாக அமைதியாக இரு” என்பதாக மட்டுமே சொல்லிக்கொண்டிருப்பேன். அதன்பின் எல்லாம் அமைதி.
திக்குவாயால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலும் நான் பார்த்தது - மனத் திடமின்மை. நான் திக்குவதில் மற்றவர்கள் பரிகசிப்பார்கள் என்ற முன் முடிவு, என்னால் ஒழுங்காகப் பேச முடியாது எ ன்ற எதிர்மறை கருத்து நாக்கைப் பிடித்து இழுப்பது, மூளையிலிருந்து வரும் தவறான சிக்னலை விட மோசமானது. தவறு செய்துவிடுவோமோ என்ற பதட்டத்தில் மேலும் படபடவென சொற்களை உதிர்க்க முயல, வாய்க்கும், மூளைக்குமான தவறான தகவல் தொடர்பில், வாய் தோற்கும்.
அதோடு “ பாத்தியா? சொன்னேன்ல, உன்னால ஒழுங்காப் பேசமுடியாது” என்ற முடிவு , நம் எதிர்மறை எண்ணத்தை உறுதி செய்கிறது. இது ஒரு விஷச் சுழற்றி.
இதனை உடைக்க, மெல்லப் பேசும் பயிற்சியும், பதட்டப்படும்போது “அமைதி அமைதி” என்று அமைதிப்படுத்தும் கட்டளையும், என்னால் பேச முடியும் என்ற நிதானமான உறுதியும் பழக வேண்டும். ஊக்கப்படுத்தும் நண்பர்களும், வீட்டினரும், மனது வைத்தால் எனக்குத் தெரிந்து 75% பேர் திக்குக்வாயிலிருந்து விடுபடலாம்.
மருத்துவரை அணுகிக் கேட்பது மிகப் பலன் தரும்.
ஓவ்வொரு உள்பெட்டி உரையாடலிலும் சொல்வதை மீண்டும் சொல்கிறேன்.
1.நீங்கள் அறிந்தவருக்குத் திக்குவாய் இருந்தால் இயல்பிலிருந்து மாறி அநியாயத்திற்கு இரக்கம் காட்டாதீர்கள். அவர்கள் விரும்புவது இரக்கமல்ல ,இயல்பாக அவர்களை நடத்தும் பாங்கு.
2.அவர்கள் திக்கும்போது, வேறு பேச்சு மாற்றாதீர்கள். “என் திக்குவாயால், இவர்களுக்குப் போர் அடித்துவிட்டது போலும்” என நினைப்பு வந்து, மேலும் சுய பச்சாதாபத்தில் சுருங்குவார்கள்.
3.பொறுமையாக அவர் பேசு அனுமதியுங்கள். வார்த்தைகளை நீங்கள் முன் சொல்லி எடுத்துக் கொடுக்காதீர்கள். அது அவர்களை மேலும் சுருங்க வைக்கும். அவர்களுக்கு அந்த வார்த்தைகள் தெரியும். சொல்ல மட்டுர்மே. தடங்கல்.
4.அவர்கள் திக்கும்போது , எக்காரணம் கொண்டும் சிரிக்காதீர்கள். வேறு ஒரு ஜோக்கிற்கு நீங்கள் சிரித்திருக்கலாம். அது அவர்களைச் சொன்னதாகவே அந்த நேரத்தில் படும்.
5. அவர் திக்கிச் சொல்லி முடித்தபின், அதனை வரவேற்று அதன் தாக்கமாக உரையாடலைச் சிறிது நேரம் தொடருங்கள். வேறு வகையில் உரையாடலை உடனே மாற்றினால், ’என் பேச்சு இவர்களுக்குப் பிடிக்கவில்லை போலும்’ என்ற எண்ணமே அவருக்கு மேலோங்கும்.
உங்களூக்குத் திக்குவாய் இருந்தால்.
1. பயப்படாதீர்கள். திக்குவது இயல்பு. என்ன, நமக்குக் கொஞ்சம் இயல்பு அதிகமா இருக்கு. அவ்வளவுதான். சட்டென பேச்சை நிறுத்தி, அமைதி அமைதி என மனதுக்குள் சொல்லுங்கள். மெல்ல மெல்ல ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்ல முயலுங்கள். நண்பர்கள் எடுத்துக் கொடுக்க முன்வந்தால், தடுத்து, சொல்வதைத் தொடர முயலுங்கள்.
2.சில இடங்களில் இது யதார்த்தமாக இல்லாது போகலாம். டிக்கட் எடுக்கும்போது, கான்ஃபெரன்ஸில் பேச வேண்டிய போது ... அங்கு “சாரி, எனக்குத் திக்கும்” என்று புன்னகையுடன் சொல்லீவிடுங்கள். எதிரே இருப்பவரும் மனிதரே. புரிந்து கொள்வார்கள். அவர்களுக்கு இறுதியில் ஒரு நன்றி சொல்லுங்கள் . நாமும் மனிதரே என்று காட்டுவது முக்கியம். இது நமது சுயமரியாதையை வளர்க்கும்.
3. தினமும் பயிற்சி செய்யுங்கள். தளரவேண்டாம்.
திக்குவாய் உங்களிடமிருந்து திக்கித் திணறி ஓடும் நாள் வெகுதொலைவி்லில்லை .

No comments:

Post a Comment