Saturday, February 24, 2018

சுய இரக்கம்.


“நல்லா நினைவிருக்கு. ஸ்கூல் படிக்கறப்போ ஒரேயொரு தேய்ஞ்சுபோன செருப்பு மட்டும்தான் உண்டு. அதுவும் அண்ணன் போட்டுப் போட்டு ,குதிகால் பக்கம் ஓரமா ரொம்பத் தேஞ்சுபோன ரப்பர் செருப்பு. அப்பாகிட்ட, ஒரு புதுச் செருப்பு கேட்டேன்.” நண்பர் நிறுத்தினார். அவர் கண்கள் சற்றே இளகி  ஈரமாக இருந்தன.  பூனா போகும் வழியிலொரு ரெஸ்டாரண்ட்டில் காரை நிறுத்திவிட்டு டீ குடிக்க அமர்ந்திருந்தோம்.
“கண்டபடி திட்டிப்போட்டார். சே, ஒரு செருப்புக்கு இவ்வளவு திட்டு தேவையா?ன்னு அன்னிக்கு நினைச்சேன் சுதாகர். இன்னிக்கு வரை எனக்குன்னு நான் ஒரு செருப்பு எடுக்கறதில்ல”
அவர் கால்களைப் பார்த்தேன். ஷு பளபளத்தது
“ஆபீஸுக்கு ஷூ போட்டுப் போறேன். அது என் பொண்டாட்டி வாங்கித் தந்தது. என் பணத்துல , எனக்குன்னு ஒரு செருப்பு வாங்க மாட்டேன்.:”
மெல்ல எழுந்தபோது, அவருக்கு என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அய்யோ பாவம் என்றா? அல்லது “உங்க உறுதியை நினைச்சு பெருமையா இருக்கு என்றா? அல்லது “இப்படித்தான் நானும் சின்ன வயசுல..என்று தொடங்கி என் கதையைச் சொல்லி அழுவதா?

மனிதர் தொடர்ந்தார் “ என்னவெல்லாம் கஷ்டப்பட்டிருப்பேன்னு இப்ப நினைச்சாலும் கண்ணீர் வந்துரும். தனியா சில நேரம் படுக்கையில படுத்திருக்கறச்சே, அப்படியே கண்ணீர் வழிஞ்சு தலையணையை நனைக்கும். என் பொண்டாட்டி, எதுக்கு இப்ப அழறீங்க?ன்னுவா. நான் ஓண்ணுமிலன்னுருவேன். என் கஷ்டம் என்னோட போகட்டும்”

நிஜத்தில் அவர் கஷ்டம் , பலரோடு போகிறது. என் நண்பர்கள் பலரும் “அந்த செருப்பு கதையைச் சொல்லியிருப்பாரே?”என்று சொல்லிச் சிரித்திருக்கிறார்கள். அவர், தன் கதையைக் கேட்டு அனைவரும் ப்ச் ப்ச் என்றூ அனுதாபப்படுகிறார்கள் என்று நினைத்திருக்கிறார். நினைப்பு ஒன்று, நடைமுறை ஒன்று.

இது பலருக்கும் புரிவதில்லை. “ நான் படிக்கறச்சே ஒன்பது கிமீ நடந்தே போவேன். சைக்கிள் வாங்க காசுகிடையாது.” என்பது, இக்காலத்து இளைஞர்களிடம் புரிதலையோ, empathyஐயோ ஏற்படுத்திவிடாது. ஏனெனில், ஒன்பது கிமீ நடப்பதன் வலியை அவர்கள் உணர்திருக்கும் சாத்தியம் குறைவு. ஏதோ அழுமூஞ்சி சினிமாவைப் பார்ப்பது போன்ற உணர்வுடன் , நம்முன் கஷ்டப்பட்டு தங்கள் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

இளைஞர்களுக்கும் இந்த விபரீத பகிர்வுணர்வு உண்டு. தான் காதலிக்கும் பெண்ணிடம் நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன் தெரியுமா?என்பதாக இது போன்ற கதைகளைச் சொல்லி அவளை ஓடியே போக வைத்த பலரை எனக்குப் பெர்சனலாகத் தெரியும்!

ஏன் இப்படி சுய இரக்க உணர்வோடு  சொல்கிறோம்?  ”‘நான் கடந்து வந்த பாதை கரடுமுரடானது’ என்று சொல்வது,”நான் வீரன். அவ்வளவு கஷ்டத்திலும் விடாமுயற்சியுடன் முன்னேறி வந்திருக்கிறேன்”  என்று சொல்வதை ஒக்கும்” என்ற தவறான நினைப்பு. ’பாதை கடினம், நான் கஷ்டப்பட்டேன்’ என்பது யதார்த்தமான ஒன்று. அதில் ’என் வெற்றிக்கு இப்படி வழி வகுத்தேன்’ என்பது மறைமுக தற்பெருமை.  இது தற்பெருமையோ? என்ற சந்தேகம், சொல்பவரின் கவனத்திலிருந்து மறைந்து, கேட்பவரின் நினைவில் உதிக்கும்.  விளைவு?, கேட்பவரின் உணர்வு நிலை, சொல்பவரின் உணர்வு நிலையில், அதன் ஆழத்திலிருந்து பெரிதும் வேறுபட்டது. 

அதோடு, தன்னைப் பற்றிக் கேட்கத் தானே சொல்லும் வாய்ப்பு இது என்கிறார்கள் உளவியலாளர்கள். என் கடந்தகாலத்தை நான் மட்டுமே அறிவேன். அதை எவரும் பாராட்ட இல்லாத்த்தால், நானே சொல்லிக்கொள்கிறேன்’ என்பதை மறைபொருளாகக் கொண்டு வெளிவரும் பகிர்வுகள் இவை. எத்தனைக்கு இதனைத் தவிர்க்கிறோமோ, அத்தனைக்கு நம்மை இயல்பாகப் பிறர் எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

சொல்பவரின் உணர்வு நிலையைப் புரிந்துகொள்ள இயலாத கேட்பவர், அவரது கவனக்குறைவை ஏதேனுமொரு வகையில் வெளிக்காட்டினால் ( உடல் மொழியாகவோ, கேட்கின்ற நேரத்தில் வேறொரு உரையாடலில், வாசிப்பதில், செய்துகொண்டிருக்கும் வேலையில் , தொலைபேசிப் பேச்சில் ஈடுபட்டாலோ), சொல்பவருக்கு அக்கவனக் குறைவு ‘என்னை அசட்டை செய்கிறார்” என்பதாகத் தோன்றி, மேலும் ஏமாற்றத்தில், கோபத்தில் துவளச்செய்யும். மேலும் ஒரு குறை அவரது கணக்கில்  சேர, இன்னும் தீவிரமான குறைசொல்லும் வாய்ப்பு வளர… இது ஒரு விஷச் சுழற்றி.

சுய இரக்கமென்பது ஏதோ ஒருவர் கேட்கும்போது சொல்லும் கதையிலோ, படம் பார்க்கும்போது, அதன் காதாபாத்திரத்துடன் தன்னை இணைத்துப்பார்ப்பதிலோ மட்டும் வருவதல்ல. இயல்புவாழ்க்கையில், அடித்தளத்தினின்று செயல்படும் சுய இரக்கம், நம் சிந்தனையையும், செயலையும் மாற்றும் சக்திவாய்ந்த்து. இதனைத் தவறாக “இரக்கம், உணர்வுபூர்வமான புரிதல்” ( Empathy, sympathy) என்று வகைப்படுத்திவிடுகிறோம்.
உதாரணமாக, வேலைக்கு ஆளெடுக்கிறீர்களென வைத்துக்கொள்வோம். தகுதி படைத்த சிலர் இருக்கையில், ஒருவர் உங்களைபோன்றே சிறுவயதில் பல சிரமங்களை அனுபவித்தவர்.. அல்லது உங்கள் இனத்தவர். ‘என்னை மாதிரி கஷ்டப்படிருக்கிறாரே” என்ற எண்ணம் அவருக்குச் சாதகமாக முடிவை எடுக்கத் தூண்டுகிறது. இந்த வேலையைப் படித்தெடுக்க அதிகம் நாளாகாது. கொடுத்த்தால் தவறில்லை” என்ற எண்ணம், தகுதிபடைத்த பலரை ஒதுக்கிவைக்கும். உங்கள் முடிவு ஒரு வகையில் தவறில்லாமல் இருக்கலாம். ஆனால் சரியல்ல.

அனைவருக்குமே, குறைந்தது ஒரு கதை இருக்கிறது. பெரும்பாலும், அதில் சுய இரக்கம் சார்ந்த, நம் கவலைகள், இடர்கள் சவால்கள் சார்ந்த பக்கங்கள் உண்டு. அவற்றைச் சொல்வதில் சில நுணுக்கங்கள் தேவைப்படுகின்றன.  எப்படி, யாரிடம் , எந்த சூழ்நிலையில், எந்த மனப்பக்குவத்தில் இருந்து சொல்கிறோம்? என்பதைப் பொறுத்து, நமது கதையின் தாக்கம் வளர்கிறது.

ஒரே வார்த்தையில் ஒரே செயலில் பலத்த தாக்கத்தை உருவாக்கிய பலர் உண்டு. நமக்குத் தாக்கம் உண்டாக்கிய கதைகளும் நிகழ்வுகளும் உண்டு.  அப்படித்  தாக்கம் உண்டாக்குமளவிற்கு நம் கதை முக்கியமானதா? என்ற ஒரு கேள்வி வெகு நேராக யோசித்துக் கேட்டுக்கொண்டபின், நம் கதையைச் சொல்லத் தொடங்குவது நல்லது. நம் கதைகளை மிக ரசிப்பவர் உண்டு. அவரிடம் கூட யோசித்தே சொல்லவேண்டும். அந்த ரசிகர்- நாம்.

தினமணி.காம் மின் தாளில் ‘நேரா யோசி” தொடரின் 24/2/2018ல் வந்த 9-ம் அத்தியாயம் இது.

http://bit.ly/2FQXozf

No comments:

Post a Comment