Saturday, March 19, 2005

Eccha mikuthikal -எச்ச மிகுதிகள்

எச்ச மிகுதிகள்
___________

என்றும்போலவே
அன்றும்,
கடமைக் கனலில்
கனன்று சிவந்தபடி
மாலைக் கங்கில்
எரிந்ததைத் தேடியலுத்து
இருளில் புகைகிறேன்.

வினையெச்சத்துடன்
பெயரும் பிற எச்சங்களும் கூட்டி
நாளை விரிக்க
சுருட்டிப்பந்தாக்கி
மிடறு விழுங்கித் திணறுகிறேன்..
நினைவில் சேர்த்த
கனத்தில்
காற்றில் அழுந்தியபடி.


தோட்டத்து மூலையில்
மூடச் செடிகளோவெனில்
மூடிய மலர்களில் நம்பிக்கையைச்
சேர்த்துவைத்து வைக்கின்றன
வெறுமே நாளை விரியுமென அறிந்திருந்தும்.

பரிணாமத்தில் திரும்புதல்
சாத்தியமிருக்கிறதா?
மலர்கள் குலுங்கும்
அம்மல்லிகைக் கொடியாகாவிட்டாலும்
நாய் கூட முகராத
பேர்தெரியாத அப்புதராக மாறினாலும்
போதும்.

2 comments:

  1. சுதாகர்,
    பரிணாம வளர்சியில், நாம் தொடக்கம் என்று நினைப்பதேல்லாம் தொடக்கமல்ல.
    முடிவு என்று நினைப்பதெல்லாம் முடிவும் அல்ல.
    இன்றைய மாறுதல், நாளய மாறுதலுக்கு முன்னோடி, அவ்வளவே.
    நம்பிக்கையுடன் தண்ணீர் ஊற்றுவோம்.

    ReplyDelete
  2. ஜீவா,
    கருத்துக்கு நன்றி. ஒரு நாளின் தினவு கூடும் மாலையில் அசைபோடும் மனிதன், நம்பிக்கையின் எச்சம் மட்டும் கொள்ளாது, தினவின் எச்சம் மட்டும் மனதில் கொள்வதையே எச்ச விகுதிகளில் காட்ட நினைத்தேன். நீங்கள் சொன்னது சரியே. நம்பிக்கையை விட்டுவிட்டு கடந்ததை நினைத்து அழுவதில் பயனில்லை என்பதை பூக்கள் காட்டுவதை ஏனோ நாம் பார்க்கத் தவறுகிறோம். பரிணாமத்தில் பின்னால் சென்றாவது, செடிகளிடம் இதைக் கற்றுக்கொள்ளலாம்.
    தமிழா தமிழாவில் ஏனோ எனக்கு எழுத்துரு பிரச்சனை. சரியாகப் படிக்க முடிவதில்லையே. என்ன எழுத்துரு தேவைப்படும்?

    ReplyDelete