Saturday, March 12, 2005

Kaiskam -1

கைசிகம் - ஒரு அறிமுகம்
(இக் கட்டுரையின் கருத்துகள் பேராசிரியர் சே.ராமானுஜம் அவர்களுடனான எனது கலந்துரையாடல்களையும், "சே.ராமானுஜம் -நாடகக் கட்டுரைகள்" தொகுப்பு- சி. அண்ணாமலை ,காவ்யா வெளியீடு புத்தகத்தையும், அடிப்படையாகக் கொண்டவை. கட்டுரைகளின் அடிக்குறிப்புகள் பக்கங்களின் எண்களில் தரப்பட்டிருக்கின்றன )
நமது முன்னோர்கள் தங்களது செய்திகள் மக்களைக் காலம் காலமாகச் சென்றடைய பல உத்திகளைப் பயன்படுத்தினர்.
அனுட்டானச் சைகைகள் (rites), அவற்றைச் செய்யும் வழிமுறைகள் கொண்ட சடங்குகள்( rituals),
நிகழ்வுச்செயல்களை(events)ப் படம்பிடிக்கும் மீள்நிகழ்வுகள்(enactment), நிகழ்வுச் செயலாக்கங்கள் (performance) என இவற்றை வரையறுக்கலாம்.
இவற்றால் , தங்களது மரபுச் சிந்தனைகளை மட்டுமே, சந்ததிகளுக்குச் செய்தியாகத் தந்தனர் என்ற கோட்பாடு , சற்றே மீள்பார்வைக்கு வைக்கப்படவேண்டும் என்று ஒரு நாடகம் சிந்திக்க வைக்கிறது.
அது கைசிகபுராண நாடகம்.

கைசிகபுராணக் கதை வராஹ புராணத்தில் காணப்படுவதிலிருந்து அதன் தொன்மையை உணரலாம். ( வராஹ புராணம் -நாற்பத்தியெட்டாம் அத்தியாயம்). (பக்: 341)
வராஹ புராணத்தின் வியாக்கியானம் பராசரபட்டரால் ( கி.பி 12ம் நூற்றாண்டு) மணிப்ப்ரவாள நடையில் எழுதப்பட்டது எனக்காணக்கிடைக்கிறது.(பக் 347)

பெருமாளை கைசிகப்பண்கொண்டு பாடிய பக்தன் ஒருவனின் சிறப்பை விளக்குவதாக அமைந்துள்ளது இப்புராணக்கதை. கைசிகப்பண் என்பது தமிழ்ப்பண் -பைரவி ராகம் எனலாம்..
கைசிகபுராணம் , கைசிக அமாவாசையின் மறுநாள் -துவாதசியன்று வைணவத் திருத்தலங்களில் மணிப்ப்ரவாள நடையில் வாசிக்கப்பட்டு போற்றப்படுகிறது. பக் 341
முக்கியமாக, நிகழ்வுச் செயலாக்கமாக ( performance), நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த திருக்குறுங்குடி என்னும் வைணவத் தலத்தில் நாடகமாக நடிக்கப்பட்டு வருகிறது. பல நூற்றாண்டுகளாக செயலாக்கப்பட்டு வந்த இந்நாடகம் காலத்தின் மாற்றத்தால் பொலிவிழந்து, சடங்காக ஆக்கப்பட்டு, "கைசிகம் கண்டால் புண்ணியம் உண்டு' என்ற எண்ணத்தால் மட்டுமே உந்தப்பட்ட சில பக்தர்களால் மட்டுமே காணப்பட்டு வந்தது அண்மையில் சில ஆண்டுகள் முன்பு வரை.

திருமதி. அனிதா ரத்தினம் (T.V.S group) அவர்களின் முயற்சி மற்றும் கொடையாலும், பேராசிரியர். இராமானுஜம் அவர்களின் முயற்சியாலும், இந்நாடகம் புதுப்பிக்கப்பட்டு, புது வாழ்வு பெற்று பொலிவுடன் மீண்டும் அரங்கேறியிருக்கிறது என்பது மகிழ்வான செய்தி.
இந்நாடகம் ஆண்டுதோறும் திருக்குறுங்குடி ஊரில் (நெல்லைமாவட்டம் நாங்குநேரியருகில் ) கார்த்திகை மாதம் வளர்பிறை 11ம் நாள் ஏகாதசிதினத்தன்று சிறப்பாக தற்போது நடைபெற்று வருகிறது.

கைசிக புராணத்தின் கதைச் சுருக்கம்:
நம்பாடுவான் என்ற , நால்வகை வருணத்தாரினும் தாழ்த்தப்பட்ட குடிப்பிறந்த வைணவ பக்தன், தனது யாழினால் திருக்குறுங்குடி நம்பிப் பெருமாளை தினமும் பாடி வணங்கிவந்தான். ஒரு கார்த்திகை மாதத்து ஏகாதசியன்று இரவில் பெருமானைப் பாடிவணங்கச் சென்ற போது, அவனை ஒர் பிரம்ம ராட்சசன் பிடித்துக்கொண்டு கொன்று தின்னப்போவதாகச் சொன்னது. உயிர்போவது குறித்து வருந்தாத நம்பாடுவான், ஓர் ஏகாதசி இரவில் பெருமானைப்பாடும் வாய்ப்பு போகிறதே என வருந்தி, " நான் வணங்கி வந்தபின் என்னைப் புசித்துக்கொள்" எனப் பிரம்மராட்சசனிடம் கூறினான்.முதலில் நம்பாத பிரம்மராட்சசன், பின் இரக்கம் கொண்டு அவனைக் கோவிலுக்குச் செல்ல அனுமதித்தது. கோவிலில் பண்பாடி வணங்கித் திரும்பிவந்த நம்பாடுவான் தன்னைப்புசித்துக்கொள்ளும்படி பிரம்மராட்சசனிடம் சொன்ன சொல் தவறாது திரும்பிவந்தான். இதனால் மனம்மாறிய ப்ரம்மராட்சசன் "உன்னைக்கொல்ல மனம் வரவில்லை. இன்று நீ இறைமுன் பாடியதின் புண்ணியத்தைக் கொடு " என இறைஞ்ச, நம்பாடுவான் மறுத்தான். "நீ கைசிகப் பண் கொண்டுபாடியதின் புண்ணியத்தையாவது கொடு" என ப்ரம்மராட்சசன் மன்றாட, இறுதியில் நம்பாடுவான்"தந்தேன்" எனச் சொல்ல, பிரம்மராட்சசனாக சபிக்கப்பட்டிருந்த ஒர் அந்தணன் ,சாபவிமோசனமடைந்து, நம்பாடுவானை வணங்கி, இறைவனின் திருவடிகளை அடைந்தான்

இக்கதையில், நம்பாடுவான் கோவிலிலிருந்து திரும்பி ப்ரம்மராட்சசனிடம் வர முயலும்போது, திருக்குறுங்குடிப் பெருமாளான நம்பி , ஒர் கிழவன் வடிவம் கொண்டு " நீ தப்பிச்செல்லலாம்" என நம்பாடுவானிடம் ஆசைகாட்டிச் சோதிக்க , "வைணவ பக்தன் சொன்ன சொல் தவறான்" எனச்சொல்லி நம்பாடுவான் ப்ரம்மராட்சசனிடம் செல்ல உறுதியாயிருக்கிறான் எனவும் வருகிறது. இது நாடகத்தில் காணப்பெறுகிறது.

இக்கதையின் மூலம் திருக்குறுங்குடி தலபுராணம் பக் XXVI -XXVII - என சே.ராமானுஜம் நாடகக் கட்டுரைகள் பக் 346 ல் காணக்கிடைக்கிறது

இந்நம்பாடுவானைக்குறித்து வைணவப் பெரு நூலான நாலாயிரத்திவ்யப் ப்ரபந்தத்தில் காணப்பெறவில்லை. ஆயின் நம்பிள்ளை ஸ்வாமியின் ஈடுரையிலும், பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்திலும் , கைசிகம் எடுத்துக்காட்டப்படுகிறது.
இவ்வாறே புகழேந்திப்ப்புலவரின் பாடலிலும், பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் பாடலிலும் நம்பாடுவான்பற்றி விவரங்கள் காணக்கிடைக்கின்றன ( பக் 346-7)

இக்கதையின் புரட்சிகரமான சமூகச்சிந்தனை வெளிப்பாடு நாடகத்தில் எவ்வாறு காணக்கிடைக்கிறது என்பதைப் பின் காண்போம்.

4 comments:

  1. is this the same story as Kaisika Ekadasi puranam as against vaigunda Ekadasi? I have heard people say that it is much more important.Thanks for the story.I've always wanted to know this.

    ReplyDelete
  2. yes.this is the kaisika ekadasi puranam. It does not have relevance to vaikunda ekadasi. The kaisika puranam as enacted in thirukurungudi is more special.
    For the complete story,pls refer the book.That is more authentic and complete.

    ReplyDelete
  3. இந்த இடுகையை தஸ்கியில் இட்டுவிட்டீர்கள் போலிருக்கே.

    ReplyDelete
  4. நன்றி செல்வராஜ்,
    நான் இப்போதுதான் கவனித்தேன். யூனிகோட் மாற்றியை பயன்படுத்துமுன பதிந்துவிட்டேன். சுட்டியதற்கு நன்றிகள்

    ReplyDelete