Wednesday, March 16, 2005

Kaisikam -2 (concluding) கைசிக புராணத்தில் சமூகப்புரட்சி சிந்தனை

கைசிக புராணத்தில் சமூகப்புரட்சி சிந்தனை
-------------------------------------------------------

பக்திஇயக்கம் சாதியமைப்பு உள்ள சமூகச் சூழலில், இறைவனைத் துதிக்க ஜாதியில்லை என்ற புரட்சிக் கொள்கையை முக்கியமாக முன்வைத்தது. பக்தி இயக்கத்திற்கு முன்பும் இது காணப்பட்டது.ஆழ்வார்களும், நாயன்மார்களும்,ஆச்சார்யார்களும் இதனைத் தங்கள் வாழ்விலும், இயற்றிய நூல்களிலும் பல இடங்களில் உணர்த்தியிருக்கிறார்கள்.

கைசிகபுராணக் கதையமைப்பு இதனைத் தன் கருவில் கொண்டிருக்கிறது. கைசிகபுராணத்தைக் கொண்டுள்ள வராஹ புராணமும் இதனை மற்ற இடங்களிலும் தெளிவாக்கியுள்ளது.
பலவகையான பக்தி நிலைகளை விவரித்தபின் ,
"இத்தகைய பக்தி எவனொருவன் அமையப்பெற்றுள்ளானோ, அவன் எக்குலத்தைச் சார்ந்தவனாக இருப்பினும், அவனோடு பிற பக்தர்கள் கொடுக்கல் வாங்கல் செய்யலாம்" என்கிறது வராஹ புராணம்.

இதில் எவனொருவன் என்னும் ஒற்றை விளி, ஜாதியற்று பொதுநிலையில் காணப்படுவதை கவனிக்கவும்.

"ஒரு வைணவ பக்தன், சக வைணவபக்தனின் ஜாதியைச் சோதித்தால் அவன் தன் தாயின் கருப்பையைச் சந்தேகித்த பாவத்தை செய்தவன் " என்கிறது ஆச்சார்ய ஹ்ருதயம்."மாத்ரு யோனி பரீக்க்ஷா".(நன்றி: திரு. பி.ஏ. கிருஷ்ணன்- புலி நகக் கொன்றை ஆசிரியர்)

இவ்வாறே பக்தரிடம் ஜாதி வேறுபாடில்லை என்பதை கைசிகபுராணம், பிற முற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் விரதங்களுக்கு நிகராக, பிறப்பினால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நம்பாடுவான் என்னும் பக்தனின் ஏகாதசி விரதத்தை சிறப்பாகக் காட்டுகிறது.
வைணவ பக்தர்களில் முக்கியமானவர்களுக்கு நம் என்ற அடைமொழி மிகுந்த மரியாதையுடன் வழங்கப்படுகிறது. நம்மாழ்வார், நம்பிள்ளை, நஞ்சீயர்,நம்பெருமாள், நம்பிராட்டி என்பதோடு நம்பாடுவான் என்று பாணர் குலப் பக்தனின் பெயர் கைசிகபுராணத்தில் காணப்படுவதால், இப் பக்தனின் சிறப்பு பன்மடங்காகிறது.

,இறைவனைப் பாடித்துதித்தல் என்பது பக்தியின் முக்கிய வெளிப்பாடு என்பதையும் கைசிகம் காட்டுகிறது.

ஆண்டாள் பாடல்களில் பாடித்துதிப்பதற்கு மிகமுக்கியத்துவம் இருப்பதைத் தெளிவாக அறியலாம்.
"வாயினற்பாடி மனத்தினாற் சிந்தித்து.."
"ஓங்கியுலகளந்த உத்தமன் பேர்பாடி.."
"உன்னைப்பாடிப்பறைகொண்டு நாம் பெற்ற சன்மானம்" போன்ற வரிகள் இதனை விளக்குகின்றன.
மாணிக்கவாசகரின் திருவாசகமும் "சோதித்திறம்பாடி" இறைவனைத் துதிக்கத் தூண்டுகின்றது.

புராணக்கதையின் வழக்கு இப்படியென்றால், நாடகம் இன்னும் சிறப்பாக தன் செய்தியை வலுவுடன் தெரிவிக்கின்றது.
பேராசிரியர் இராமானுஜம், கீழ்க்கண்டவற்றை இந்நாடகத்தின் சிறப்பென்கிறார்.
1. நாடகக் கலைஞர்கள் , பிரம்மராட்சசன் தவிர அனைவரும் பெண்கள். பொதுவாக , மேடையில் ஆண்கள் பெண்வேடமணிந்து நடிக்கும் வழக்கிற்கு மாறாக பெண்கள் ஆண்வேடமணிந்து நடிக்கும் புதுமை இந்நாடகத்தில் நூற்றாண்டுகளாக வழங்கிவருகிறது.
2.இப்பெண்கள் தேவதாசி குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் என்றும், அவர்கள், ஏகாதசி விரதமிருந்தே, நாடகத்தில் பங்குகொண்டனர் என்றும் அறியப்படுகிறது.
3.விரதமிருக்கும் உயர்குலத்தோர் தரையில் அமர்ந்திருக்க, இந்நாடகம் மேடையில் நடிக்கப்பெறுகிறது.

நாடகம் என்ற ஊடகம் ,சினிமா, தொலைக்காட்சி போன்ற ஊடகத்திலிருந்து வேறுபடுவதில் ஒரு முக்கிய காரணம் நாடகத்தில் பார்வையாளர்களின் பங்கு. ஒவ்வொரு நாடகமும், வேறு வேறு சமயங்களில், தளத்தில் செயலாக்கப்படும்போது, அதன் வீச்சு, பார்வையாளர்களின் பங்கு கொண்டு மாறுபடும். It is a cocreative activity.

கைசிகநாடகத்தில், கிழவராக வரும் நம்பிப் பெருமான், தன் பங்கு முடிந்ததும் "நாமும் நம் இடம் செல்வோம்" எனக்கூறி மேடையிலிருந்து இறங்கிச் செல்லும் போது, இரு புறமும் அமர்ந்திருக்கும் மக்கள் அவரை வணங்குவதும், நாடகம் முடிந்ததும், நடிகர்கள் வேடம் கலைக்குமுன், பக்தர்கள் அவர்களை வணங்கும் வழக்கம் இன்றும் காணலாம். இப்படியொரு பார்வையாளர்களின் பங்களிப்பை ஆழமாகக் கொண்டுள்ளது கைசிக நாடகம்.

இந்நாடகத்தில் பரதக்கலை, கூடியாட்டம் மற்றும் யக்ஷகானம் போன்றவற்றின் தாக்கம் தெரிகிறது. எனினும், தனது புரட்சியான வடிவமைப்பை சிதைக்காமல், பிற ஒழுங்குகளையும் தன்னகத்தே ஏற்றுக்கொண்டுள்ளது இதன் சிறப்பு.

பொதுவாக புரட்சியான கருத்தை முதலில் உள்வாங்கி, அதற்கு ஏற்ப சடங்குகள் (rituals) அமைவது வழக்கம். கைசிகநாடகத்தில், முதலில் நாடகப்பாங்கு அமையப்பெற்று, அதனுள் கைசிகம் தன் கரு சிதையாமல் உள்வாங்கப்பட்டுள்ளது என்கிறார் பேராசிரியர்.இராமானுஜம்.
இதனை நோக்கும்போது, இந்நாடகப்பாங்கு மிகத் தெளிவாகச் சிந்திக்கப்பட்டு, அதனுள் கதை சிதையாமல் ஏற்கப்படும் விதம் அமைக்கப்பட்டுள்ளது எனக் கருதலாம்.

சமூகப் புரட்சியென்பதை , மதத்தின் வாயிலாக, மதக்கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் அனுட்டானச் சைகைகள் (rites) மற்றும் சடங்குகள் மூலமாகவும் (rituals) மெல்லப் பரப்பி மக்களை அடிமனத்திலிருந்து உணரவைக்க இயலும்.புரட்சியென்பது முரட்டுத்தனமான எதிர்ப்பு மட்டுமே கொண்டு வருவதல்ல. சமூகத்தில் தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்ட, ஏற்படுத்தப்பட்ட புரையோடிப்போன கொள்கைகளை, அச்சமூகம் நம்பும் பிற கொள்கைகள் , நம்பிக்கைகள் கொண்டும் சீர்திருத்த இயலும். ஆயின், இச்சீர்திருத்த எண்ணங்கள் மீண்டும் சடங்குகளாக மட்டுமே உள்வாங்கப் பெறின், அதன் மூலங்கள் மீண்டும், அனுட்டானங்களின் சாம்பல் மண்டி, உள்மட்டும் கனன்றுகொண்டிருக்கும் அபாயம் இருக்கிறது.

கைசிகநாடகம் மீண்டும் புத்தொளி பெற்றதில், இவ்வமைதியான புரட்சி மீண்டும் காண்பவர் மனத்தில் எழும் வாய்ப்பு இருக்கிறது என்னும் நம்பிக்கையே மகிழ்ச்சியளிக்கிறது.

இந்நாடகம் காணவிரும்புவோர், வைணவத் தலங்களைத் தொடர்பு கொண்டால், கைசிகஏகாதசி நாளறிந்து, திருக்குறுங்குடி சேரலாம். நெல்லையிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.

No comments:

Post a Comment