Tuesday, October 01, 2013

தி லஞ்ச் பாக்ஸ்- திரைப்பட விமர்சனம்

நேற்று காலை “தி லஞ்ச் பாக்ஸ்” சினிமா. காட்பரிஸ் சில்க் சாக்லேட் விளம்பரத்தில் வரும், லேசான மாறுகண் உள்ள நம்ரத் கவுர் இப்படத்தின் ஹீரோயின். இர்ஃபான் கான் முக்கிய கதாபாத்திரம். இவர்களோடு உலகப்பிரசித்தி பெற்ற , உணவுக் கேரியர்களைக் கொண்டுசெல்லும் மும்பை டப்பாவாலா-க்கள் அங்கங்கே. இப்படியொரு காஸ்டிங் வைத்துக்கொண்டு முழு நீளப் படத்தை எடுப்பதற்கு அசாத்தியத் துணிச்சல் வேணும்.

பெண்களின் மன அழுத்தம், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகளின் சிதைவுகள் என இஸம் பேசி ஜல்லியடிப்பவர்களுக்கு இந்த்ப்படம் ஒரு ரெபெரென்ஸாக அமையலாம். அதையெல்லாம் தாண்டி, பிதுங்கும் நெரிசலில், தடங் தடங் என ஓடும் ரயில் வண்டியின் குலுக்கல்களுக்கிடையே சில மனித மனங்களைச் சந்தித்துவிடும் ஆச்சரியங்கள் மும்பை லோக்கல் ரயில்களில் நடந்துவிடுவது போலவே, இந்தப்படமும் வியப்பில் ஆழ்த்துகிறது. இர்ஃபானின் நடிப்பு என்பதைப் பற்றி மட்டுமே இரண்டு பக்கம் எழுதலாம். எல்லாரும் எழுதுவதால் அது க்ளிஷே என முத்திரை குத்தப்படும் அபாயம் இருப்பதாலும், நம்ரதாவுக்கு நடிக்கவேண்டிய கட்டாயமே கொடுக்காததால் அது குறித்து ஒன்றும் எழுத வேண்டாததாலும், நடிப்பு என்பதிலிருந்து சற்றே நகர்கிறேன்.

வேலைப்பளுவில் உழன்று , மனைவியின் சுக துக்கங்களில் பங்கு பெறாத ஒரு கணவன், சிறு பெண்குழந்தை, மேல் அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் அசரீரியான தேஷ்பாண்டே ஆண்ட்டீ என சிறு 1BHK குடும்பத்தலைவியாக “ஈலா” என்ற பெண், தன் கணவனுக்காக ஸ்பெஷலாக சமைத்துக் கொடுத்துவிட்ட லஞ்ச்பாக்ஸ் இடம் மாறி , ரிடையர் ஆகப்போகும் சாஜன் பெர்னாண்டஸிடம் வருவதில் தொடங்குகிறது கதை. அந்த லஞ்ச்சில் இருந்து அவர்களது கடிதப் பரிமாற்றம் தொடங்குகிறது. தொடர்ந்து கணவன் தனது சிறு சிறு மாற்றங்களையும், வியர்வை பொங்க சிறப்பாகச் செய்து தந்த உணவைப் பாராட்டாமலேயே இருப்பதாலும், அவள் , தான் சந்தித்து அறியாத மூன்றாம் மனிதனிடம் தனது மன அழுத்தத்தை வெளிக்காட்டுகிறாள். அதற்கு , காலியாய்ப் போன டீக் குவளையில் மிச்சமிருக்கும் இளஞ்சூட்டில் , வீங்கிய கால்களுக்கு ஒத்தடம் கொடுப்பது போல , இதமான அறிவுறைகளை பெர்னாண்டஸ் வழங்குவது வரை கதை படு டீசண்ட்டாகப் போகிறது. அட, ஆஸ்கார் போயிருக்க வேண்டிய ஒன்றாச்சே இது, என்று புலம்ப வைத்துவிடுகிறது. இதற்குப் பிறகு டைரக்டருக்கு சனி பிடித்துவிட்டது போலும். அந்த இதமான புரிதல் சற்றே கோடு கடந்து, உன்னோடு நானும் பூட்டானுக்கு வரட்டா? என்று முதிய , முதிர்ந்த மனிதர் எழுதுவதும், அதற்கு அந்தப் பெண் சட்டெனக் காதல் வயப்பட்டு விடுவதும் ...ம்ம்ம்ம் “ பாப்கார்ன் வாங்கிட்டு வரட்டுமா?” என்று சால்ஜாப்போடு வெளியே வர மனசு எத்தனிக்கிறது.
இந்த இடத்தில் திரும்பவும் உட்கார வைத்துவிடுகிறார்கள். சட்டென ஒரு புரிதல் வர, இர்ஃபான் தன் உந்துதலைத் தடுக்கிறார். அவரைப் பார்க்க நினைத்த வேகத்தில் ,மகளுடன் ஆபீஸுக்கே அப்பெண் வந்துவிடுகிறாள், பின் பூட்டான் செல்ல எத்தனிக்கிறாள். ஒரு எதிர்பார்ப்போடு படம் முடிகிறது.

வேலை அழுத்தத்தில் மனைவி கொடுத்தனுப்பும் கத்திரிக்காய் கறிமது நன்றாக இருக்கிறது என்று சொல்லாவிட்டால் , மனைவி மாற்றானோடு, பூட்டானுக்கு ஓடிப் போய்விடுவாள் என்ற பயம் இனிமேலாவது கணவன்களுக்கு இருக்கட்டும் என்ற Moral of the story கணவன்மாருக்கு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறதோ?. வேலை அழுத்தத்துடன் வீட்டைக் கவனிக்காத ஆண்கள் கள்ளத் தொடர்பு வைத்திருப்பார்கள் என்ற புளித்துப் போன லாஜிக்கை இன்னும் எத்தனை கதைகளில் (பால குமாரனின் ”அடுக்கு மல்லி” யும் இதில் அடக்கம்), படங்களில் பார்க்கப்போகிறோம்? எனக்கு வேலை ஜாஸ்தி என்று சொல்லவே இப்போது தயக்கமாக இருக்கிறது. இந்தமு மிகைப்படுத்துதலும், வேண்டாத ஈர்ப்புக் கண்ணோட்டமும் இல்லாமல் ஒரு நட்பாகவே ஆரோக்கியமாகக் காட்டியிருந்தால் , ஆஸ்கர் கிடைக்காவிட்டாலும், நமது முழுக் கைதட்டல்களையும் லஞ்ச் பாக்ஸ் பெற்றிருக்கும்.

பாலிவுட், கோலிவுட் படங்களுக்கு இடையில் இப்படி ஒரு வித்தியாசமான சிந்தனை, இயக்கம்... பாராட்டவேண்டும். கொஞ்சம் உப்பு தூக்கல் என்பதை விட்டுவிட்டால், முழுதும் வளைச்சு அடிக்க வேண்டிய லஞ்ச்தான்.

2 comments:

  1. //வேலை அழுத்தத்தில் மனைவி கொடுத்தனுப்பும் கத்திரிக்காய் கறிமது நன்றாக இருக்கிறது என்று சொல்லாவிட்டால் , மனைவி மாற்றானோடு, பூட்டானுக்கு ஓடிப் போய்விடுவாள் என்ற பயம் இனிமேலாவது கணவன்களுக்கு இருக்கட்டும் என்ற Moral of the story கணவன்மாருக்கு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறதோ?.//

    ஹாஹா ஹாஹா........... இதுதான் படத்தைவிட எனக்குப் பிடிச்சிருந்தது:-))))

    ReplyDelete
    Replies
    1. அப்ப நீ அந்த மாதிரி தான் பண்ணுவ போல.அவுசாரிங்க அந்த மாதிரி தான் பண்ணுவாங்க.

      Delete