Thursday, October 15, 2015

திருவேங்கடம் அம்மாள்



அவள் பெயர் திருவேங்கடம் அம்மாள். குட்டையாக உருண்டு இருப்பதால் செண்டு என்று யாரோ பெயர் வைக்கப்போக, அதுவே நிலைத்துவிட்டது. செண்டு அம்மாள் மிகவும் ஆசாரம்.
"கடங்காரா, எத்தனை தடவை சொல்றது? குளிக்காம திருப்பள்ளிக்குள்ள வராதேன்னு?” செண்டு அம்மாவின் திட்டுகளை காலங்காத்தாலேயே வாங்கிக்கொண்டு, அசட்டுச் சிரிப்புடன் சமையலறையிலிருந்து வெளிவராத ஆண்கள் அந்தவீட்டில் இல்லை.
அவள் சமையலறையில் இருக்கிறாள் என்றால் குளிக்காமல் உள்ளே போகக்கூடாது. காபியைக் கொண்டு அவள் வெளியே வருவாள்.. மரியாதையாக , அவள் மேல் படாமல் வாங்கிக் கொள்ளவேண்டும்.. எப்போதும் மடிசாரில்தான் இருப்பாள். அவளது புடவையை மேலே ஒரு கொடியில் உலர்த்தியிருப்பாள். குள்ளமாக இருப்பவளால் அதை எடுக்க முடியாது என்பதால் நீண்ட ஒரு மூங்கில் கழியை மூலையில் சார்த்தி வைத்திருப்பாள். அதைக்கொண்டு, கழுத்தை வளைத்து அண்ணாந்து பார்த்து, புடவையை கீழே எடுப்பதற்குள் ஒரு வழியாகிவிடும். அதுவும் நாங்கள் எடுத்துத் தரக்கூடாது. கீழே விழும்போதும் எங்கள் மீது பட்டுவிடக்கூடாது.
”சனியனே, தெரியறதோல்லியோ? நான் புடவையை எடுத்துண்டிருக்கேன்னு. அதுக்குள்ள எதுக்கு இங்க வந்து புடவைல  படறே? குளிக்காம கொள்ளாம...தெருநாய்க்குக்கூட தீட்டு தெரிஞ்சுருக்கும்...தடிமாடு மாரி இருக்கற உனக்குத் தெரியலை இன்னும்”
வெங்காயம், உருளைக்கிழங்கு எல்லாம் சமைத்துத் தருவாள். ஆனால் சாப்பிடமாட்டாள். எல்லாரும் சாப்பிட்டுவிட்டுப் போனபின்பு, என்ன அவளுக்கு மிச்சம் இருக்கும் எனத் தெரியாது. குறுகலான சமையலறையில் சுவற்றில் சாய்ந்து கொண்டு, உதட்டில் படாமல் சோற்றை வாய்க்குள் போட்டுக்கொள்வாள். “ உதட்டுல பட்டா எச்சில்டா.”
ஆனால் இந்த ஆசாரக் கெடுபிடியெல்லாம் வளர்ந்தவர்களிடம் மட்டும்தான். பேரன் பேத்திகள், மேலே தவழ்ந்து சேட்டை செய்யும்போது, அவள் புடவையை நனைக்கும்போது  “ போட்டும் விடு. எறும்புக்குத் தெரியுமோ எச்சிலும், பத்தும்?”
” எதிர்வீட்டுல டாக்டருக்கு வலி எடுத்தாச்சாம். ஆஸ்பிட்டல் போப்போறாங்க” அவசரமா யோரோ  சொன்னபோது, செண்டுமாமி கீதை படித்துக் கொண்டிருந்தாள்.
“அதுக்குள்ளயா? இன்னும் நாளிருக்கே? ” என்றாள் காலண்டரைப் பார்த்தபடி.
எதிர்வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ் நின்றிருந்தது. மேல்வீடு, கீழ்வீடு என்று அக்கம்பக்கத்திலீருந்து பெண்கள் அவ்வீட்டின் வாசலில் நின்றிருந்தனர்.
எதிர்வீட்டு டாக்டர் எங்கள் குடும்பத்தில் சட்டென பழக்கமானவர். மிகத் திறமைசாலி, கை ராசியானவர். கர்ப்பம் தரித்ததுமுதல் அவருக்கு பல சிக்கல்கள். முக்கியமாக வீட்டில் பல இடர்கள். அம்மாவீட்டிலும், மாமியார் வீட்டிலும் உறவுகள் சுமுகமாக இல்லை. இத்தனை  முதிர்ந்த கர்ப்ப நிலையில்கூட அவர் அம்மாவீட்டிலிருந்து யாரும் உதவிக்கு வரவில்லை.
“காம்ப்ளிகேஷன் ரொம்பவே இருக்கு. நம்ம ஆஸ்பத்ரியில பாத்துக்க முடியாது. டவுணுக்கு கொண்டு போயிடுங்க” குடியிருப்பு வளாகத்தின் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஆம்புலன்ஸ் அருகிலிருந்தே சொன்னார்.
யார் கூடப் போவது?
”அமெரிக்கன் ஆஸ்பத்திரி கொண்டு போறீங்கன்னா, நான் போன்ல சொல்லிடறேன். கேஸ் ஷீட் ஒரு காப்பி வைச்சுக்குங்க. துணைக்கு யார் போறாங்க? “ கேஸ் ஷீட் பைலை வைத்துக்கொண்டு அவர் கேட்க, சூழ்நிலை அப்போதுதான் அனைவருக்கும் உறைத்தது.
யாருமில்லை. அவர் கணவரும் ஒரு டாக்டர். “ நான் இருக்கேம்மா..ஆனா..” அவர் குரல் தேய்ந்தது.  தான்  என்னதான் மருத்துவம் படித்திருந்தாலும், இது முழுக்க முழுக்க பெண்களின் சமாச்சாரம். உணர்வுகள் பொங்கி, உயிருடன் பனிக்குடம் உடைந்து வரும் நேரம். அதை புரிந்துகொண்டவர்கள் வேண்டும்..
வாசலில் நின்றிருந்த பெண்களிடம் தயக்கம் தெளிவாகத் தெரிந்தது. கிட்டத்தட்ட 15 கி.மீட்டர் தூரம் பயணம் போவது கடற்கரை சாலையில். ஒரு புறம் கடல், மறுபுறம் உப்பளம்.. வழி நடுவே பிரசவம் ஆனால், ஒரு உதவியும் கிடையாது... அதோடு சிக்கலான கேஸ் வேறு.. யார் பதில் சொல்வது?
அதைவிட, அதைவிட ஒரு தயக்கம் இருளில் மறைந்து தேங்கி நின்றது.. அந்த மருத்துவரின் ஜாதி...
“இப்பவே கிளம்பினாத்தான் பதினோரு மணிக்காச்சும் அங்க போய்ச்சேர முடியும். அவங்களுக்கும் சொல்லணும்ல.. எமர்ஜென்ஸி..” தலைமை மருத்துவ அதிகாரி இருட்டில், கண்களை இடுக்கி, சாலைவிளக்கொளியில் மணிக்கட்டில் நேரம் பார்த்தார்.
. ”அவங்க அம்மா இல்ல, இந்த நேரத்தில இருக்கணும்?” கூட்டம் முணுமுணுத்து தன் நியாயங்களை சொல்லிக்கொண்டது.
“யார் வர்றீங்க?” அந்த கணவரின் பதட்டம் தெளிவாகத் தெரிந்தது.
வீட்டுவாசலில் நின்றிருந்த செண்டுமாமி முன்னே நடந்து வந்தாள். “ நான் வர்றேன். தலைச்சன் பாருங்கோ, படுத்தும்.”
“ஆங். மாமிதான் சரி. அவங்களுக்கு அனுபவம் இருக்கு” தன்மீது வராது பொறுப்பு நீங்கியதில் கூட்டத்தில் ஒரு நிம்மதி.
“ சீக்கிரம் கிளம்புங்கோ. டீ. என் செருப்பை எடுத்துப் போடு”
மஞ்சளாக ஹெட்லைட் மங்கி எரிய, அந்த மட்டடோர் வேன் கிளம்பியது.
மறுநாள் காலை ஏழு மணிக்கு  வழக்கமான வசவு இல்லாத வீடு வெறிச்சோடியிருக்க,  வாசலில் சென்றபோது, செண்டுமாமி வந்துகொண்டிருந்தாள்.
“ஐ. என்னம்மா ஆச்சு?”
“மேல படாதே. நாம்போய் குளிக்கணும். சுகப் ப்ரசவம்தான். பொண்ணு. முடி அடர்த்தியா இருக்கு தெரியுமோ?”
வாசலிலிருந்தே ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு, வீட்டைச் சுற்றி நடந்துபோய் பின் பக்கக் கதவு வழியே வந்தாள்.
“டீ, இவளே,  இன்னிக்கு கோலம் போடவேண்டாம்.” என்றாள் உள்ளே வந்தவாறே.
“ஏம்மா?”
“ பொண்ணுக்கு ப்ரசவம் ஆனாலும் சீதகம் உண்டு.”
“உம் பொண்ணா அவள்?” அவள் கணவர் சிரித்துக்கொண்டே கேட்டார்.
செண்டுமாமி ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள் “ ஆஸ்பத்திரியிலே கேட்டா. ஆமான்னு சொன்னேன். என்ன இப்போ? நாலு பொண்ணோட சேத்து அவளும் அஞ்சாவது பொண்ணு நேக்கு. உமக்கென்ன வந்தது.?.போம்”
இரண்டு மணி நேரம் கழித்து டாக்டர் கணவர் முகமெங்கும் சிரிப்புடன் இனிப்பு பெட்டியுடன் வந்தார்.
“அம்மா” என்றார் நெகிழ்வுடன். “ உங்க உதவி... என் பொண்டாட்டியும்  பொண்ணும் பிழைச்சாங்க” கையெடுத்துக் கும்பிட்டார். கண்களில் நீர் வழிய. செண்டு அம்மாள் பதிலே பேசாமல், உள்ளிருந்து காபி டம்ளரை நீட்டினாள் “ டேய்  அவருக்கு இந்த டம்ளரைக் கொடு. பாவம் மனுசன் அலையா அலைஞ்சிருக்கார்”
காபியை அருந்தியபடி மெல்ல விவரித்தார் அவர்.
அமெரிக்கன் ஆஸ்பத்திரி என்று நாங்கள் சொன்னாலும் அதற்கும் அமெரிக்காவுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. என்றோ சுவிஸ் நாட்டு பாதிரிகள் தொடங்கிய ஆஸ்பத்திரி அது. வெள்ளைக்காரர்கள் எல்லாரூம் அமெரிக்கர்கள் என்ற தூத்துக்குடி அறிவில் அது அமெரிக்கன் ஆஸ்பத்திரியானது.
இவர்கள் அங்கு போய்ச் சேர்ந்தபோது மணி பன்னிரெண்டு. குழந்தை கொடி சுற்றிக்கொண்டுவிட, ரத்த அழுத்தம் தாய்க்கு அதிகரிக்க, பெரிய கேஸாகிப் போனது.
பிரசவ அறையின் வாசலில் ஒரு பெஞ்சில் அம்மா அமர்ந்திருந்தாள். “நீங்க  படுத்துக்குங்கம்மா.  வேணும்னா கூப்பிடறோம்” என்ற செவிலியருக்கு “பரவாயில்ல,ஒக்காந்திருக்கேன்” என்றாள் அவள்..
இரண்டு மணியளவில் செவிலியரில் ஒருவர் வெளிவந்தார். “பெண் குழந்தை. சி.செக்‌ஷன் தான். ரெண்டு பேரும் நல்லாயிருக்காங்க. கவலைப்படாதீங்க. அம்மா, நீங்க தூங்கலாம்” என்றார்.
செண்டுமாமி  கைகுவித்தாள் “எல்லாம் சீவரமங்கைத் தாயார் அனுக்ரஹம்.”
செவிலி தயங்கி நின்றார் “ குழந்தைய யார் வாங்க வர்றாங்க? குளிப்பாட்டக் கொண்டு போயிருக்காங்க. அவங்க அம்மா எங்க? டாக்டர்?”
”எஸ்?” என்றார் டாக்டர் கணவர் எக்கச்சக்கமாய் உணர்வில் அழுந்தி..
“உங்கம்மா, அல்லது அவங்க அம்மா. யாரு ரிலேட்டிவ்? குழந்தைய வாங்கணும்ல?” 
டாக்டர் கணவரைத்தவிர அவர் குடும்பத்தில் யாருமில்லை.
” நான் வாங்கறேன்.”
செவிலி சந்தேகமாக செண்டு அம்மாவைப் பார்த்தார் “ நீங்க.. நீங்க யாரு அவங்களுக்கு?”
“அவ என் பொண்ணு”
செவிலி மேலும் சந்தேகமாகப் பார்த்தார் “ அவங்க வீட்டுக்காரங்க இருந்தா வரச்சொல்லுங்க,சீக்கிரமா. குழந்தைய  நாங்க வராம குடுத்திட்டீங்கன்னு நாளைக்கு எங்க கிட்ட சண்டைக்கு வரப்போறாங்க”
“ அவ என் பொண்ணு” என்றாள் அம்மா மீண்டும் திடமாக. உள்ளே போய் துவாலையில் பொதிந்து கொண்டுவரப்பட்ட சிசுவை, தன் முந்தானையில் வைத்து வாங்கினாள்.
சொல்லும்போது டாக்டர் அழுதுவிட்டார். “எம்பொண்ணு இந்த உலகத்துல வந்து காத்திகிட்டிருக்கா. யாருமே அவளை ஏந்தறதுக்கு இல்லை சார். இவங்க, தெய்வமா, பாட்டியா நின்னு வாங்கினாங்க”
செண்டு அம்மா வெளியே வந்தாள் “ இதோ பாருங்கோ. ஒரு உயிர் உலகத்துக்கு வர்றது பெரிய விஷயம். அதை வா-ன்னு வாங்கறது, அன்பைக்காட்டறதுதான் மனுஷத்தனம். இதுதான் சாஸ்த்ரம்.. அந்தகாலத்துல  உபன்யாசம் தொடங்கறப்போ சொல்லுவாளாம்.. ”இதைக் கேக்கறதுக்கு வந்திருக்கும்  பெண்ணின் கர்ப்பத்திலே இருக்கும் சிசுவுக்கும் எனது வணக்கங்கள்’ன்னு. சிசுவுக்கு அத்தனை மரியாதை உண்டு. எனக்குத் தெரிஞ்சதை நான் செஞ்சேன். அவ்வளவுதான். மத்ததெல்லாம் பெருமாள் தாயார் விட்ட வழி. சந்தோஷமா இருங்கோ”
வாசலில் துணி காயப்போட போனபோது, ஒரு பெண் கேட்டார் “ஏன் மாமி.. இத்தனை ஆசாரம் பாப்பீங்க. அவங்க சாதி தெரிஞ்சும் எப்படி போனீங்க?”
அம்மா துணியை உலர்த்தியபடியே சொன்னாள் “ ஆசாரம்னா எனக்குத் தெரிஞ்சு சுத்தம், சுகாதாரம். சாஸ்த்ரம் இப்படித்தான் சொல்றது. தாய்ப்பாலுக்கும், சிசுவுக்கும், தண்ணிக்கும் ஜாதி கிடையாது. இதைப்புரிஞ்சுக்கோங்கோ. ஒரு உயிர் அல்லாடறப்போ ஜாதியோ ஆசாரமோ தடுக்கணும்னு எந்த சாஸ்த்ரமும் சொல்லலை.”
“ அப்ப வந்த உடனே சீதகம்னு ஆரம்பிச்சியே?” என்றேன் பிற்பாடு.
“ஆமாடா, அவள் என் பொண்ணுன்னு சொல்லிட்டேனே? அப்புறம் எல்லா ஆசாரமும் நியமப்படி நடக்கணுமே?”
அந்த டாக்டர் குடும்பம் அதன்பின் கோயமுத்தூர் சென்றுவிட்டனர். 1989ல் செண்டு அம்மாள் பெங்களூரில் திடீரென இறந்து போனாள்.

2004ல் அண்ணன் வீட்டிற்கு அந்த டாக்டர் , ஒரு பெண்ணை அழைத்து வந்தார். வரவேற்பறையில் மாட்டியிருந்த அம்மாவின் போட்டோவைக் காட்டி “ சொன்னேன்ல? இதுதான் உன் பாட்டி” என்றார். அந்தப் பெண் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பதாக சொன்னார். அனைவரும் பழைய கதைகள் பேசுவதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அந்தப் பெண், விடைபெற்றுக் கிளம்பும்போது, படத்திற்குக் கீழே விழுந்து நமஸ்கரித்தாள்.
பின் அண்ணியிடம் “ பாட்டியோட போட்டோ ஒண்ணு எனக்குக் கிடைக்குமா?” என்றாள்.
செண்டு மாமி என்ற திருவேங்கடம் அம்மாளான எனது அம்மாவின்  சிரார்த்த தினம் இன்று.  

2 comments:

  1. இதைப் படித்தபின்புதான், திரு'நெல்வேலியில் எங்கள் வீட்டில் எதற்காக சமையலறையை, "திருப்பம்" என்று சொல்வார்கள் (70 கள்ல) என்று தெரிந்தது.

    ReplyDelete
  2. ஒரு சம்பவம், அனுபவம் மற்றவர்களிடம் சலனத்தையோ, பாதிப்பையோ அல்லது ஏதாவது உணர்ச்சியைத் தூண்டுவதாக இருக்கவேண்டும். அதைச் சொன்ன விதம் அருமை.

    ReplyDelete