Sunday, April 24, 2005

தாய்மொழியும், உணர்வு வெளிப்பாடும்

தாய்மொழியும், உணர்வு வெளிப்பாடும்

தாய்மொழி மூலம் கல்வி என்பது அரசியலாகிவிட்டது. எந்த காரணத்திற்காக கல்வியியல் வல்லுநர்கள் தாய்மொழி மூலம் அடிப்படைக் கல்வியாவது வேண்டும் என அறிவுறுத்திக்கொண்டிருக்கிறார்களோ, அது விவாதங்களில் செறிவடையாமல் நீர்த்து வருவது வேதனைக்குரியது. சரி, கல்விக்கூடங்களில்தான் தமிழ் இல்லை... வீட்டிலாவது இருக்கவேண்டாமா என்னும் கேள்விக்கு " ஆங்கிலத்தில், ஹிந்தியில் பேசச்பேசத்தான் அதில் சரளமாக புழங்க வரும்" என்னும் வாதத்தை முன்வைக்கின்றனர் பெற்றோர். அவர்களின் கவலை, உலகமயமாக்கலில், ஆங்கிலம் பேச எழுதத் திணறினால், தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதில் சற்றுதான் உண்மையிருக்கிறது.

அண்மையில் சென்னையில் நடந்து முடிந்த சிறுவர் நாடகப் பயிற்சி முகாமிற்கு சென்று வந்த பேராசிரியர் இராமானுஜம் ,குழந்தைகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த அவர்கள் பேசிவரும் தமிழ்+ஆங்கிலம் கலந்த "இரண்டும் கெட்டான்" மொழி பெரும் தடையாக இருப்பதாகச் சொன்னார். சென்னை நகரிலிருந்து வந்திருந்த குழந்தைகளைக் குறித்துக் கூறுகையில் "குழந்தைகள் உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்த இயல்பாக தாய்மொழி உதவும். வேற்று மொழியில் அவர்களால் ,சொற்செறிவில் தங்கள் உணர்வுகளைத் தோய்க்க இயலுவதில்லை. அவ்வாறு வலுவான வேறுமொழிச் சொற்களைக் கையாடினாலும், அவை தனது உணர்வுகளைச் செய்தியாகச் சுட்டும் வார்த்தைக் கோர்வையாக மட்டுமே காணப்படுகின்றன. உணர்வுகளின் உயிர் அதிலில்லை. இது அக்குழந்தைகளின் பெற்றோர் பெரும்பாலும் உணர்வதில்லை " என்றார். முகாமிற்கு குழந்தைகளை அழைத்து வந்திருந்த தாத்தா,பாட்டிகள் இதனைப் பெரிதும் ஆமோதித்து வரவேற்றனர் என்றும், மாறாக,குழந்தைகளின் பெற்றோர் இதிலிருக்கும் சிரமங்களை முன் வைத்தனர் என்றும் சொன்னார்.அதே நேரத்தில், தான் கிராமங்களில் நடத்திய நாடகப் பயிற்சி முகாம்களில் பங்கேற்ற சிறுவர் சிறுமியர் , தமிழ் சொற்றடர்களையும் அதிலூடும் உணர்வுகளையும் உள்வாங்கி, தமிழில் தனக்குத் தெரிந்த அளவில் உயிரோடு வெளிப்படுத்துகின்றனர் என்றார்.

நமது குழந்தைகள் நம்மிடம் சொல்லுவதின் செய்தி மட்டும் அறிகிறோம். அவர்கள் தங்கள் சிறிய உலகத்தில் சேர்த்துவைத்திருக்கும் வார்த்தைகளின் வெளிப்பாடுகள், உடல் மொழி வெளிப்பாடுகள் முதலியனவற்றை நாம் பெரும்பாலும் கவனிக்கத் தவறுகிறோம். அவர்கள் சரியாக தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மேலும் மேலும் வார்த்தைகளை அறியவேண்டியிருக்கிறது. இது அவர்களுக்கு பெரும் சுமையல்ல. குழந்தைகள் வெகு விரைவாக வார்த்தைகளைக் கிரகித்துக்கொள்ளூம் சக்திபெற்றவர்கள் என சிறுவர் மன நல வல்லுநர்கள் கூறுகின்றனர். தாய்மொழிச் சொற்கள் மிக விரைவாக அவர்களின் மூளைக்கும், நெஞ்சிற்கும் சென்றடைகின்றன. பிற மொழிச் சொற்கள் மூளையைச் சென்றடைந்து, வெறும் லாஜிக்-கில் பேசும்போது பிரயோகிக்கப்படுகிறது. இதுவே உயிரற்ற சொற்றொடர்கள் உமிழப்படுவதின் காரணம் என நான் நினைக்கிறேன்.

அவர்களுக்குத் தாய்மொழியில் சரியான வார்த்தைகளை அறிமுகம் செய்து வைக்கவேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.

தஞ்சாவூர் அருகே ஒரு கிராமத்தில்(வடக்குப்பட்டு) நான் நேராகக் கண்ட அனுபவம் இது. உலையில் இருக்கும் நெருப்பு "தீ" என்று அழைக்கப்படுவதில்லை. "அனல்" என்கின்றனர். அது"அணைக்க"ப் படுவதில்லை. "இறக்கப்" படுகிறது. மீண்டும் " ஏற்றப்" படுகிறது. அடுப்பின் இருக்கும் நெருப்பு உயிரைக் காப்பதால் "அணைக்கப்" படுவதில்லை. மீண்டும் "மூட்டவும்" படுவதில்லை. அருமையான வாழ்வியல் தத்துவங்களை தீ, நெருப்பு, அனல் போன்ற சொற்களைப் பயன்படுத்துபவர் தமிழ்ப் புலவர்களோ, அறிஞர்களோ இல்லை. கிராம மக்கள். இது ஏன் நகரக் குழந்தைகளுக்குச் சொல்லித்தரப்படக் கூடாது?
தாய்மொழியில் வீட்டில் பேசுவது என்பது, குழந்தைகளின் மன வளர்ச்சிக்குப் பெரிதும் உதவக்கூடும்.
தொலைக்காட்சி சீரியல்களிலிருந்து சற்றே மீண்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தமிழில் பேசுவதென்பது சிரமமானாலும், இயலாததில்லை.

7 comments:

 1. நல்ல பதிவு - நன்றி!

  குழந்தைகளுக்கான ஆரம்ப கல்வியை தாய்மொழியில் கற்பிப்பது - மொழிக்கல்ல - அதை கற்கும் குழந்தைகட்கு நல்லது. உட்பொருளை விரைந்து உள்வாங்க உதவும்.

  பிறமொழியை 12/13 வயதிலிருந்து கற்பிக்கலாம்.

  ஆனால் இப்பொது நடைமுறையில் தாய்மொழி கல்வி இழிவாக பார்க்கப்படுவது வருத்தத்திற்குறியது. இந்நிலைக்கு ஊடகங்களும் ஒரு முக்கிய காரணம்.

  தமிழ் நாட்டை பொறுத்தமட்டில், தமிழ் மொழி கல்வி தேவை குறித்து பேசுபவர்களின் நேர்மையை முன் வைத்து இவ்விடயத்தை அணுகி, தாய்மொழி கல்வியின் முக்கியத்துவத்தை குறைக்கும் அரசியல் நடக்கிறது.

  எப்படியாயினும் இழப்பு மொழிக்கல்ல என்ற புரிதல் இரு சாராருக்குமே தேவை.

  நந்தலாலா

  ReplyDelete
 2. sudhakar,

  could you pls drop me a line at

  mathygrps at yahoo dot com

  nandri sudhakar.

  ReplyDelete
 3. நந்தலாலா அவர்களே,
  தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. மிகச்சரியாகச் சொன்னீர்கள்... ஆங்கிலம் கற்பிப்பதை 10 வயதிற்கு மேல் ஆரம்பிக்கலாம் என. தமிழுமில்லாத, ஆங்கிலமுமில்லாத ஒரு கலவையில் ஒரு குழவி எப்படி தன் உணர்வுகளை வெளிப்படுத்தும்? சிறுவர்கள் பேசுவதை சற்றே கவனித்தால் அவர்கள் ஒரு சொற்றடரை சரியாகச் சொல்வதற்கு சற்று அவகாசமெடுத்துக்கொள்வதையும், திணறுவதையும் கவனிக்கலாம். இதெல்லாம் சரியான வார்த்தைகள், சிந்தனையில் அகப்படாததின் விளைவே.
  பெற்றோர்கள் இதனை சரிசெய்யாவிட்டால் , சரியாகச் சொல்லத்தெரியாமல் திணறும் தமிழ் சமுதாயத்தைத்தான் நாம் நாளை காண வேண்டிவரும்

  ReplyDelete
 4. அப்படித்தானே நான் படிக்கும்போது இருந்தது? ஆங்கில எழுத்துக்களையே ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆரம்பித்தனர். ஒன்பதாம் வகுப்பு வரை ஆங்கிலத்தைத் தவிர மற்ற எல்லா பாடங்களுமே தமிழில்தான். பத்தாவது மற்றும் எஸ்.எஸ்.எல்.சியில் மட்டும் பொறியியல் பிரிவில் சேர்ந்ததால் ஆங்கிலப் படிப்பு என்றாகியது. இதுவே சரியான முறை என்று நான் கூறுவேன். 6 மொழிகள் அறிந்த நிலையில் இருக்கும் நான் இப்போது கூட எண்களைக் கூட்டுவது தமிழில்தான்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 5. Anonymous9:59 PM

  But Dondu,

  Didn't you learn Sanskrit before Tamil. What was the effect? :)

  ReplyDelete
 6. எனக்கு வடமொழி தெரியாது. பள்ளியில் சிறப்புத் தமிழ்தான் படித்தேன்.
  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 7. உங்கள் கூற்றை சற்று மறுதலிக்கின்றேன். இளமையிலேயே ஆங்கிலத்தில் பரிச்சியமும் புலமையும் கொண்ட ஒரு பிள்ளை, ஆங்கிலத்திலேயே தனது உணர்வுகளை உண்மையாகவும் பூரணமாகவும் வெளிபடுத்தலாம் என உணரும், உணருகின்றார்கள். இங்கு தாய்மொழியென்பது ஒரு பிள்ளை எம்மொழியில் தன் உணர்வாடலை தன்னுள் வைத்திருக்கிறதது என்பதில் இருந்துதான் வரையறுக்கமுடியும்.

  ReplyDelete