Wednesday, April 27, 2005

வேலியே பயிரை மேய்கையில்..

வேலியே பயிரை மேய்கையில்..

இதுகாறும் மும்பை பெண்களுக்கு மிகவும் பத்திரமான இடம் என்னும் கருத்து நிலவி வந்தது. இன்றும் பெருமளவு இது உண்மைதானெனினும், அண்மையில் ஒரு கல்லூரிப் பெண், பட்டப்பகலில், ஒரு காவலனால், காவல் நிலையத்தினுள்ளேயே கற்பழிக்கப்பட்ட செய்து, மும்பையின் பெருமிதத்தைத் தகர்த்து விட்டது.

மூன்று நாட்களுக்கு மக்களின் ஆத்திரம், கொந்தளிப்பு வீதியில் உணரப்பட்டது. மெரைன்லைன்ஸ் என்னும் பகுதியில்( இச் சோகச் சம்பவம் நிகழ்ந்த இடம்), பொதுமக்கள் சாலையை மறித்து காவல்துறையினரை, அக் காமுகனைத் தங்களிடம் விடுமாறு கோஷமெழுப்பினர். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சமூக,பொருளாதார மட்டத்தில் மிக மிக உயர்ந்த தளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறை சரியான விளக்கம் அளிக்கத் திணறியது. "மிகவும் சீரியஸான விஷயம். தக்க தண்டனை வழங்கப்படும்" என்றெல்லாம் காவல்துறை மேலிடம் அறிக்கை விட்டது. துணை முதலமைச்சர்" அப்பெண்ணின் வீட்டில் தானே சென்று மன்னிப்புக் கேட்பதாகவும், அப்பெண்ணின் புனர்வாழ்விற்கு என்ன வேண்டுமானாலும் செய்ய அரசு தயாராக இருப்பதாகவும் " சொன்னார்.
இதிலெல்லாம் எவரும் சமாதானமானதாகத் தெரியவில்லைல்.

தலைவலியாக, சிவசேனாவின் சங்கப் பத்திரிகையான சாம்னா " பெண்கள் படு கவர்ச்சியாக ஆடை அணிவதைத் தவிர்க்கவேண்டும்" எனச் சொன்னதோடு நிற்காமல் " இதெல்லாம்தான் ஒரு மனிதனை இவ்வாறு தவறான செயல்களுக்குத் தூண்டுகின்றன" என்றும் சொல்லிவைத்து, ஒர் விவாதத்தைக் கிளப்பி வைத்திருக்கிறது.
பெண்கள் கவர்ச்சியாக ஆடைஅணிவதால் ஒரு மனிதன் , அதுவும் காவல் துறையில் இருப்பவன் கற்பழிக்கும் அளவிற்குத் தூண்டப்படுகிறான் என்பது நியாயமல்ல. காவல்துறைக்கு இச்செயல் பெரும் களங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. சீருடையில் இருக்கும் ஒரு மனிதன் இவ்வாறு செய்யத் துணிகிறான் என்றால்,அடிப்படையில் அவன் அத்தொழிலுக்கே அருகதையற்றவன். காவல்துறையின் செலக்ஷன் முறைகளில் மாற்றம் வேண்டும்.
காவலர்கள் பணிநேரம் மிக அதிகமாக இருப்பதால், பெரும் மனச் சோர்வு, உடல் தளர்ச்சியும் அடைகிறார்கள் என்றும், அவர்களுக்கு இம்மனச்சுமைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை அளிக்கப்படவேண்டும் என மனவியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃ இண்டியா மும்பை கூறுகிறது. மனத்தையும் உடலையும் சீராக வைத்திருக்க கட்டாய உடற்பயிற்சி, யோகா, கட்டாய வார விடுமுறைகள் அளிக்கப்பட வேண்டும் எனவும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
உளவியல் வல்லுநர்களின் இக்கருத்துகள் பலமுறை வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் காவல் துறை எதையும் செயல்படுத்தியதாகத் தெரியவில்லை. மேலும், ராணுவம், அதிகரிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையில் உளவியல் வல்லுநர்களைப் பயன்படுத்துவதை, காவலர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையிலும் பயன்படுத்தினால், மிருகங்கள், காவல்துறையில் சேர்வதைத் தடுக்கலாம்.

எது எப்படியோ, வேலி பயிரை மேய்ந்துவிட்டது. "இது முதல்முறையல்ல - முதல்முறை வெளிவந்த செய்தி என்கிறார்கள்" பெண்ணுரிமை வாதிகள்.
ஒரு கல்லூரிப் பெண்ணின் வாழ்வே குலைந்திருப்பதும் மும்பைக் காவல்துறையின் சீருடை கறைபட்டிருப்பதும் மட்டும் இப்போது நிதர்சனம்.

4 comments:

  1. //சீருடையில் இருக்கும் ஒரு மனிதன் இவ்வாறு செய்யத் துணிகிறான் என்றால்,அடிப்படையில் அவன் அத்தொழிலுக்கே அருகதையற்றவன். //
    இதை இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சொல்லமுடியாது எனபது என்கருத்து. சம்பவத்த அடிப்படையாய் கொண்டுதான் யோசிக்கவேண்டும். போலிஸ் என்றாலும் அவனும் மனிதன் தான். உடனே கற்பழிக்க சொல்கிறேனா என்று கேட்காதீர்கள். சிவசேனாவின் ஸ்டேட்மெண்டு அலசப்படவேண்டியதுதான் என்றாலும், சிவசேனாவின் நோக்கத்தை தூக்கி உடைப்பில் போடுங்கள்.

    ReplyDelete
  2. இதை மொத்த ஸிஸ்டத்தின் ஒரு இன்ஸ்டன்ஸ் ஆகத்தான் பார்க்கிறேன். அந்த சம்பத்தபட்ட ஒரு போலீஸ்காரனை தண்டிப்பதால்மட்டுமே மொத்த சமுதாயமும் சரியாகிவிட்டதாய் ஆகிடாது. *அவனையும்* தண்டிக்கவேண்டும்.

    ReplyDelete
  3. முந்தாநாள், இதேப் போல பெங்களூர் பல்கலைகழகத்தில் ஒரு பெண் டாக்சி டிரைவர்களால், கடத்தப்பட்டு, 6 பேரால் கற்பழிக்கப்பட்டு, தூக்கி எறியப்பட்டார். இதுல கொடுமை, அப்பெண் வழக்கு பதிவு பண்ணுவதற்காக சென்றபோது இந்த சரகம் இல்லை, அந்த சரகம் இல்லை என்று பந்தாடப் பட்டிருக்கிறார்.

    பம்பாயில், சீருடையில் இருந்த ஒருவர் செய்ததனால் இவ்வளவு பரபரப்புக்கு உள்ளாகியிருக்கிறது இது. பங்களூரில், ம்ஹூம். சத்தத்தையே காணோம். இதுக்கு நடுவுல, மஹாராஷ்டிராவில் பார் நடனப் பெண்கள் அற்புதமாக ஒரு பாயிண்ட்டினை கையிலெடுத்திருக்கிறார்கள். அவர்கள் ஆடுவதெல்லாம், பாலிவுட் பாடல்களுக்கு தான், எங்களுக்கு தடை விதித்தால், இதுப் போன்ற ஹிந்திப் பாடல்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படிப் போடுங்க அரிவாளை.

    எனக்கென்னவோ, நடன விடுதிகள், விலைமகளிர் போன்ற விஷயங்களை நிறுத்தினால் தான் நிறைய குற்றங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  4. கார்த்திக்ரமாஸ் மற்றும் நரேன் ,
    நன்றிகள். சமுதயத்தை சுலபமாகக் குறைகூறிவிடலாம். யாரையெனத் தண்டிப்பது அதில்? மாற்றங்கள் நிகழவேண்டுமெனில் எஹ்டேனும் ஒரு trigger தேவைப்படும்.
    டான்ஸ் பார் மும்பையில் ஒரு தலைவலி நரேன். மனிதனின் அடிமட்ட காமஉணர்ச்சிகளுக்குத் தூபம் போடுவதாக அவை அமைந்திருக்கின்றன. தெல்கி இதுபோன்ற ஒரு டான்ஸ் பார் பெண்ணிடம் 50 லட்சம் ரூபாய் ஒரே நாளில் வீசியெறிந்தது நினைவு கூறத்தக்கது. அவற்றினால் விலைமகளிர் தொழிலில் பெண்கள் ஈடுபடுத்தப்படுவதும், ஒரு நெட் வொர்க் இதன்பின்னால் இயங்குவதும் போலீஸ் அறிந்தும் ஒன்றும் செய்யமுடியாத நிலை. பணப்புழக்கம் அப்படி.
    இவையில்லாமல் ஒரு நகரம் உருப்படுமா என்பது எப்படி பதிலளிக்கமுடியாத கேள்வியோ, அதுபோலவே, இவை இருப்பின் ஓரளவு குற்றங்கள் கட்டுப்படுமா என்பதும் பதிலளிக்க முடியதவையே.

    ReplyDelete