Welcome! This blog is about the ripples on my mind pool by the impact of life. Your comments would be greatly appreciated
Tuesday, November 29, 2005
மஹாநாயக் -by Vishwas Patil ( contd)
______________________
தில்லி செங்கோட்டையில் 1857ல் பகதூர் ஷா, கடைசி முகலாய மன்னர் ஆங்கிலேயரால் பிடிக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்டதில் தொடங்குகிறது கதை.. அதே செங்கோட்டையில் 1940களில் மூன்று ராணுவ அதிகாரிகளை
அரசுத் துரோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நீதிபதி முன் நிறுத்துகிற காட்சி விரிகிறது. குற்றம்?
நேதாஜியின் படைக்கு ஆதரவாகச் செயல்பட்டதுதான். புலாபாய் என்ற பிரபலமான வழக்கறிஞர் அவர்களுக்கு
வாதாடுகிறார்.. ஒரு நாடகத்தனமான தொடக்கம் என்றாலும், விறுவிறுப்பு ஏறுகிறது. கொஞ்சம் "Freedom at midnight" வாசனை அடிக்கிறது.
பின் , சுபாஷ் சந்திரபோஸின் இளமைக்காலம் விவரிக்கப்படுகிறது. அவர் விவேகானந்தரின் அறிவுரைகளில் தூண்டப்பட்டு, ஒரு புரட்சிக்காரனாகவே பள்ளி,கல்லூரிகளில் ஆவதைக் காட்டுவதில் சற்றே செயற்கைத்தனம் தெரிகிறது. சுபாஷ், தனது நண்பர்களுடன் பத்ரிநாத் மலைக்கும் அப்பாலிருக்கும் ஒரு மலைக்குகையில் வசிக்கும் ஒரு துறவியைத் தேடிப்போகிறார். விவேகானந்தருடன் பழகியிருக்கும் அத்துறவி, சுபாஷிடம் " இக்காட்டில் உன் வலிமையை வீணாக்காதே. மக்களுக்காக , அவர்கள் விடுதலைக்காகப் போராடு" எனச் சொல்வதாகவும், அதன் பின் சுபாஷ் சந்திரபோஸ் கல்கத்தா மீளுவதாகவும் கூறப்படும் செய்தி ஆதாரமானதுதானா?எனச் சந்தேகம் வருகிறது. அத்துறவியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. விஷ்வாஸ் பாட்டில் எடுத்துக் கொண்டிருக்கும் ஆய்வு முயற்சியில் நம்பிக்கை இருப்பினும், சில இடங்களில் உண்மைப் பெயர்களையும் இட்டிருக்கலாம்.. கதை கலந்த வாழ்க்கை வரலாறு என்று இருப்பதால், எது கதை, எது நிஜம் எனச் சில இடங்களில் புரிபடவில்லை.
மெல்ல மெல்ல அவர் காங்கிரஸில் தீவிரப் பிரசாரம் செய்வதும், காங்கிரஸ் ப்ரஸிடென்ண்ட் ஆவதும் காட்டப்படுகிறது. இந்த இடங்கள் வரலாறு பூர்வமாக கோர்வையாக எழுதப்பட்டிருக்கிறது. திரிபுரி காங்கிரஸ் மாநாடு , போஸ்- காந்தியின் கொள்கையளவிலான மறுதலிப்பு, அரசியல் பின்னணி.. வாசிக்க அருமை..
ஆனால், மசாலா இன்னும் சேர்ந்திருக்கிறது.. தென் மாநில ஆளுநராக இருக்கும் இராஜாஜி , உ.பிரதேசத்திலிருந்து வந்திருந்த ஒரு காங்கிரஸ் தலைவரை அடக்க எத்தனிக்கையில் " நீ சும்மாயிரு, லுங்கிவாலா" என அவர் இராஜாஜியை அவமதித்ததாக எழுதப்பட்டிருக்கும் காட்சி.. உண்மையாயிருக்க சாத்தியமில்லை. என்னதான் ஆவேசப்பட்டிருப்பினும், அந்நாளைய அரசியல்வாதிகள், தொண்டர்கள் குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் இத்தகைய மொழி பேசியிருக்க சாத்தியமில்லை எனவே நினைக்கிறேன்.
எமிலி என்னும் ஆஸ்திரியப்பெண்ணுடனான காதல்.. சுபாஷின் வாழ்க்கையில் ஒரு திருப்பமாக அமையவில்லை. மாறாக, ஒரு சாதாரண மனிதனின் யதார்த்த வாழ்வின் தாக்கங்கள் , வளர்சிதை மாற்றங்களெனவே இதனைக் காட்டியிருக்கிறர் விஷ்வாஸ் பாட்டில். அந்த அளவில் கதைக்களம் சிதையாமல், சுபாஷ் என்னும் மனிதனின் ஆசாபாசங்கள், அவரது சிறு தவறுகள் நேர்த்தியாக , யதார்த்தமாகச் சுட்டிக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.
நேருவின் காந்திப் பித்து..ஆச்சார்யா கிருபளானி,கோவிந்த் வல்லப் பந்த் போன்ற மிதவாதிகளின் போஸ் எதிர்ப்பு, இடது சாரிகளின் முரண்,போஸின் தாய்நாட்டுப் பற்று , காந்தியுடனான போஸின் மோதல்கள்.. அலையலையாக வந்து, எவ்வாறு அவரது காங்கிரஸ் உறவை பிரித்தன. பின்னர் கல்கத்தாவிலிருந்து இரகசியமாக ஆப்கானிஸ்தான்/பெஷாவர் சென்று அங்கிருந்து ஜெர்மனியில் ஹிட்லருடன் தொடர்புகொள்ளும் இடம்.. அருமையாக விளக்கியிருக்கிறார்.
ஜப்பானிய ராணுவத்தினரின் சுபாஷ் குறித்தான வாக்குமூலங்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன. இது நமக்கு அறியாத கதை. மணிப்பூர் இயக்கம் என்பது ஜப்பானிய ராணுவ வல்லுநர்கள் முதலில் திட்டமிட்டுப் பின் கைவிடப்பட்ட ஒன்று. சுபாஷ் ( ராணுவ திட்டமிடுதல் பற்றிய பயிற்சி இல்லாமல்) , அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் இந்தியாவின் விடுதலை பற்றிப் பேசி, பிரதம மந்திரியை மணிப்பூர் ஆக்கிரமிப்பிற்குச் சம்மதிக்க வைக்கிறார். சுபாஷின் இந்திய விடுதலை வெறி, அவர்களை அசர வைக்கிறது. இந்திய தேசிய ராணுவத்தினருக்கு , பர்மாவில் கைப்பற்றிய ஒரு பகுதி, அந்தமான் நிகோபார் தீவுகள் முதலியன ஜப்பானியரால் கொடுக்கப்படுகின்றன. 'இந்தியாவில் கைப்பற்றும் அனைத்துப் பகுதிகளும் , போஸின் இந்திய தேசிய ராணுவத்திற்கே அளிக்கப்படும்.' என்னும் உறுதியும் கொடுக்கப்படுகிறது. அவர்களது நம்பிக்கைக்கு ஒரே காரணம்... சுபாஷ் சந்திர போஸ்.
'வரலாற்றில் எங்கும் இது போல 40 லட்சம் பேர் கொண்ட நட்புப் படைக்கு எவரும் இத்தனை மரியாதை தந்ததாகத் தெரியவில்லை.' என்கிறார் பாட்டில்.
இந்திய தேசிய இராணுவத்தின் ஒவ்வொரு முன்னேற்ற அடியையும் கவனித்து எழுதியிருக்கிறார். கொஹிமா,மணிப்புரி போர்க்களங்கள், பேச்சுக்கள், ஜப்பானின் சரணடைதலில் போஸிற்கு ஏற்பட்ட பின்னடைவு. .படிக்கையில் நெஞ்சு கனப்பது நிஜம். ( இதனை விவரிக்க விரும்பவில்லை. படித்துப் பாருங்கள். ஆசிரியரின் உழைப்பு தெரியும்)
டைபியில் (Teipei) , விமான விபத்தின் பின், அவரது உடலை இந்தியா கொண்டுசெல்ல அனுமதிக்காத தைவான் இராணுவ அதிகாரிகள் , அங்கேயே எரியூட்டியதாக எழுதியிருக்கிறார். இது, போஸின் மறைவு குறித்தான பல மர்மங்களையும், கட்டுக்கதைகளையும் வெளிக்காட்டும்... இதாவது, அம்மாமனிதனின் இறப்பு குறித்தான மர்மங்களை வேரறுத்து, உலகிற்கு அவரது தீவிர நாட்டுப்பற்றை வெளிக்காட்டட்டும். இச்சம்பவம் குறித்தான வரலாற்று உண்மைகளை விஷ்வாஸ் பாட்டில் தனது குறிப்பில் எழுதியிருக்கலாம்.
இப்பேற்பட்ட மகாமனிதரைப்பற்றி அதிகம் நமக்குச் சொல்லாத பாடத்திட்டத்தின் மேலும், அவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து அரசியல் கருதி பாரத ரத்னா விருது கொடுக்க நினைத்த நம் அரசியல் வாதிகள் மேலும் கோபம் வருவது நியாயம்தான்.
தமிழில் இக்கதை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.அந்நூல் குறித்தான தகவல் எனக்குத் தெரியவில்லை. பத்து இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இறுதியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆங்கில மொழிபெயர்ப்பு indialog பதிப்பில் வெளிவந்துள்ளது.( ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்காக விஷ்வாஸ் பாட்டிலுக்கு 20 லட்சம் ரூபாய் கொடுத்ததாகத் தகவல். அருந்ததி ராய் 3 கோடி வாங்கும்போது இது குறைவுதான் என்கிறார்கள் மராத்தி மொழிவல்லுநர்கள். இந்தக் கணக்கும் அரசியலும் நமக்குப் புரிவதில்லை!) இந்நூல் குறித்து மேலும் அறிய விரும்புவோர் இச்சுட்டியில் non fiction பகுதியில் காணலாம்.
மஹாநாயக்' -(Great Hero)-fictional biography of Subhash Chandra Bose
"சுபாஷ்! இரு. ரத்தம்!"
பதறிய ஜவஹர்லால், சுபாஷின் விரலில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க கைக்குட்டையைத் தேடினார்.
"பரவாயில்லை , ஜவஹர்" , கையை விலக்கிக்கொண்ட சுபாஷ் சிரித்துக்கொண்டே தொடர்ந்தார்," உனக்கு ரோஜா மலரையும், எனக்கு முட்களையும் கடவுள் விதித்திருக்கிறார்".
இதுபோன்ற வாசகங்களைக் கொண்ட புத்தகங்களை மிகக்கவனமாகவே நான் படிப்பது வழக்கம். மசாலா அதிகமாகவும், சரக்கு குறைவாகவும் கொண்ட வரலாறு அடிப்படையாகக் கொண்ட பல புத்தகங்கள் இத்தகைய வாசகங்கள் கொண்டும், பளபளப்பான அட்டைகள், கறுப்பு வெள்ளை மங்கலான புகைப்படங்கள் கொண்டும், சந்தையாக்கலில் ஜல்லி செய்து வந்துவிடுகின்றன. 'வாங்கிவிட்டு "சே" என இன்னுமொருமுறை ஏமாற நான் முட்டாளில்லை.'என நினைத்து, புத்தகத்தைத் திரும்ப வைக்க எத்தனிக்கையில் ஆசிரியரின் பெயர் கொஞ்சம் தயங்க வைத்தது. திரு. விஷ்வாஸ் பாட்டில்...
மராத்திய எழுத்தாளர்களில் புகழ்பெற்ற ஒருவரான விஷ்வாஸ் பாட்டில் ,சாகித்திய அகாடெமி விருது 1992-ல் வாங்கியவர். அவரது ஜாதசதாதி(Jahadazadati)என்னும் மராத்தி நாவல் புகழுடன்,சாகித்ய அகாடெமி விருதும் வாங்கித்தந்தது. நடப்புகளை , மாற்றாமல் பதிவு செய்து, நீண்ட ஆராய்ச்சிகளுக்குப் பின் , நிகழ்வுகளைக் கோர்த்து, கற்பனைவளம் சேர்த்து அவர் எழுதும் நாவல்கள் மராத்தியில் ப்ரசித்தி பெற்றவை.
சுபாஷ் சந்திர போஸ் என்னும் தியாகியை, அவர் வாழ்ந்த காலத்தின் சமூக, பொருளாதார, அரசியல் பின்னணியில் பார்ப்பதென்பது எளிதல்ல. நமக்குத் போஸ் குறித்து மிக மிகச் சிறிதளவே தெரிந்திருக்கிறது என்பதை இக்கதையைப் படித்தபின் உணரமுடிகிறது.
தன் வழக்கம்போலவே, போஸ் குறித்து எழுதுமுன் கடுமையான ஆய்வுகளை மேற்கொண்ட பாட்டில், தனது முன்னுரையில் , தான் சந்தித்த இடர்களை சிறிது குறிப்பிடுகிறார். சுபாஷ் சந்திரபோஸ்-ஸின் வாழ்க்கையும் அவரது மரணம் போலவே புதிராக இருக்கிறது. அவரது ஜெர்மன், ஜப்பான் உறவுகள் குறித்த கோப்புகள் ஜெர்மன், ஜப்பானிய, பாலி மற்றும் பெங்காலி மொழிகளில் இருப்பதாலும், பெரும்பாலானவை உலகப்போர் குறித்தான ரகசியத் தகவல்கள் அடங்கிய பெட்டிகளுக்குள் கிடப்பதாலும், மிகக் குறைவான வரலாற்று உண்மைகளே நமக்குத் தெரிகின்றன. அவற்றைத் திரட்டி, படித்துப் புரிந்து... கோர்வையாக ஒரு புத்தகத்தில் கொண்டுவர மிகக் கடின உழைப்பு தேவைப்பட்டிருக்கிறது. அயராது உழைத்திருக்கிறார் இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி.
சில நண்பர்களின் ஆதரவால், ஜப்பான் சென்று, உலகப்போரில் சுபாஷ் சந்திரபோஸுடன் சேர்ந்து போரிட்ட வீரர்களைச் சந்தித்து, அவர்களிடம் விவரங்களைச் சேகரித்திருக்கிறார். நண்பர்களின் துணையுடன் ஜப்பானின் நூலகங்களில் கிடைத்த ஆவணங்கள், அதன் பாராளூமன்ற கூட்டத்தொடர் கோப்புகள் போன்றவற்றையும் ஆதாரங்களாகச் சேர்த்திருக்கிறார். இதனூடே, பர்மாவில் இரண்டாம் உலகப்போரின்போது போரிட்ட அமெரிக்க வீரர்கள் பர்மாவிற்கு உலகப்போரின் 51ம் ஆண்டு நிறைவுக்கு வர, இவரும் அங்கே சென்று, அவர்களிடம் தகவல் சேர்த்திருக்கிறார்.
பர்மா தாய்லாந்து எல்லையில் சுமார் 1800 கிமீ தொலைவு அடர்ந்த காட்டுப்பாதையில் இந்திய சுதந்திர ராணுவம் முன்பு போரிட்ட இடங்களில் சென்று பார்த்திருக்கிறார்- தடயங்கள் மற்றும் இடங்களின் ஆதாரம் தேடியபடி. கொஹிமா, மணிப்பூர் அஸ்ஸாம் எல்லையில் போஸின் படைகள் போரிட்ட இடங்களில் தகவல் சேர்த்திருக்கிறார். மிக மிக அயராத, பொருள் மட்டும் காலச் செலவு வாய்ந்த ஆய்வுப்பணி.
இத்தனை ஆய்வுகளுக்கும் முயற்சிகளுக்கும் பின் இப்படியொரு கதை வந்திருப்பதை அறிந்த பின்.. வார்த்தைகளின் ப்ரயோகத்திற்காக மட்டும் அதனை விட்டுவைக்க மனம் வரவில்லை.
கதைக்குப் போவோம்
Saturday, November 26, 2005
நோபல்பரிசும் இந்தியரும் ( Nobel Prize and Indians)
___________________________
2005ம் ஆண்டிற்கான இயற்பியல்துறை நோபல்பரிசுக்காக கலாநிதி. சுதர்ஷன் அவர்களின் முயற்சியைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதைச் சுட்டிக்காட்டி ,நோபல் பரிசு பரிந்துரைக்குழுவிற்கு இந்திய மற்றும் அமெரிக்க அறிவியல் அறிஞர்களின் கடிதங்கள் சென்றிருக்கின்றன.நார்வே நாட்டின் இந்திய தூதுவரிடமும் இது குறித்து கருத்து கூறப்பட்டுள்ளது. நோபல் பரிசு பரிந்துரைக்குழு இக்கண்டனங்களையும் பின்னூட்டத்தையும் கவனித்து உருப்படியாக எதாவது செய்யும் என நம்புவோம்.
நன்றி ;ஹிந்துஸ்தான் டைம்ஸ்..
இது குறித்து முன்பு எழுதப்பட்ட வலைப்பதிவு
Monday, November 21, 2005
கஸாக்கிண்டெ இதிகாசம்: O.V.Vijayan's Novel
மிகச் சிறந்த கதைகள், சுய அனுபவத்தை கற்பனையில் ஏற்றி, கதாபாத்திரத்தை ஒரு குறியீடாக
அமைக்கையில் உருவாவதுண்டு. ழட்டுமொத்தமான கதைச் சூழல், பலப்பல கதாபாத்திரங்கள்
இவ்வாறு குறியீடாக அமைவது அரிது. அதிலும் அரிது, அக்கதைச் சூழல் , ஆசிரியர் முன்பு
தீர்மானித்திருந்த அமைப்பை விட்டு விலகி, 360 பாகை திரிந்து, பின்னும் சுய அனுபவம்
ஏறிய கதையாக அமைவது.
கஸாக்கிண்டெ இதிகாசம் sவ்வாறு அமைந்தது என்கிறார் ஓ.வி.விஜயன் முடிவுரையில்.
கதை அமைவது கஸாக் என்னும் மலைக்கிராமத்தின் சூழலில். கஸாக் என்னும் கிராமமே அவர்
1956க்குப் பிறகு ,கல்லூரி வேலை போனதும், தமக்கையாரின் ஆசிரியப்பணி அமைந்த
கிராமமான தசராக் கிராமத்தின் தாக்கமான பெயரில் உருவானது. அங்கு, அவருக்குப் பல
செய்திகளைத் தந்த நண்பர்களான முல்லா மற்றும் காசி (khazi) வார்த்தைகளை
நினைவுகூறுகிறார் விஜயன்.
கம்யூனிஸக் கொள்கைகளில் நாட்டம் கொண்டிருந்த ஓ.வி.விஜயன், இக்கதையை முதலில்
கம்யூனிசக் கொள்கைத் தாக்கத்தில் எழுத முயன்றார். உலகளவில் மார்க்ஸிச இயக்கத்தை
வெகு உன்னிப்பாகக் கவனித்து வந்தவர், பெல்ஜியப் புரட்சியில் Imre nagy
கொலைசெய்யப்பட்டதில், மார்க்ஸிச இயக்கத்தின் மேலிருந்த நாட்டத்தைக் கைவிட்டார். அதன்
அடிப்படையில், அவர் தனது புதிய கதையின் போக்கையே மாற்றியமைக்க நேர்ந்தது. ஒரு
முக்கிய திருப்பம் மலையாள இலக்கியத்தில் இக்கதையால் வந்ததென தனது முடிவுரையில்
குறிப்பிடுகிறார். அதுவரை மலையாள இலக்கியத்தில் எழுதிவந்த நடை கஸாக்கிண்டெ
இதிகாசத்தில் மாறியது. எளிய மலையாளம், நிகழ்வுகளை மாயநிகழ்வியல் பிiனணியில்
எழுதுவது போன்றவை பின்னிப் பிணைந்து முதன்முதலில் வந்தது இக்கதையில்தான். இதனைப்
பற்றிக் மலையாள இலக்கியம் அறிந்தவர்கள் கூறுவதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
இக்கதை மலையாள இலக்கியத்தில் மிகப் பிரபலமான பின், பல தீவிர வாசகர்கள் மேலும்
கதை பற்றி உணர்வதற்கு அக்கிராமத்திற்கே சென்றனர். அங்குள்ள மக்கள், தங்களுக்குக்
கிடைத்த புது அடையாளத்தை ஏற்றுக்கொண்டதோடு, வருபவர்களின் இலக்கியத் தேடல்களைத்
தங்கள் வாழ்வின் பகுதியாகவே ஏற்றனர். ஆர்.கே.நாராயணனின் மால்குடி கிராமமும் இவ்வாறு
அமைந்திருந்தால் எப்படியிருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.
தசராக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய இளைஞன் , ஓ.வி.விஜயனை ஒருமுறை இறுகத்
தழுவி " கிளியேட்டன் மரிச்சுப்போயி" எனத் தேம்பியழுததாகக் குறிப்பிடும் விஜயன், கதையில்
வரும் அப்புக் கிளி என்னும் கதாபாத்திரம் அக்கிராமத்தில் இருந்த ஒரு நபரைக் கொண்டு
உருவாக்கப்பட்டதில்லை எனினும், கதையின் தாக்கம் அக்கிராமமக்களிடம், எந்த அளவிற்கு
உண்டாயிருந்தது என்பதற்கு இதனை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம் எனக் குறிப்பிடுகிறார்.
கிராம மக்கள், கதையில் வரும் கதாபாத்திரங்கள் தங்கள் கிராமத்தில் இருக்கும்
மக்களைக்கொண்டே உருவாகின என்பதில் உறுதியாயிருந்தனர். இப்புதிய ஒப்பீடு, அடையாளம்
காணுதல், ஒரு cult உருவாதல் என்பது இதிகாசங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் ,
கஸாக்கிண்டெ கத ஒரு இதிகாசம் என்பதில் ஐயமில்லை.
கதையெனப் பார்த்தால், நாலுவரிகளில் அடக்கிவிடலாம். .
படித்த இளைஞன், பள்ளியில்லாக் கிராமமொன்றில், ஒரு ஆசிரியர் பள்ளி ஒன்றிற்கு வேலை
கிடைத்து வருகிறான். மதறாஸா மட்டும் உள்ள அக்கிராமத்தில், பழமைவாதத்தினைச் சமாளித்து
அவன் கல்வியறிவூட்ட முனைகிறான். இறுதியில் பழமைவாதம், செந்நாடா என்னும்
கூட்டமைப்பு வெற்றிகொள்கிறது. அவனை வேலையிலிருந்து நீக்குமுன், தானே ராஜினாமா
செய்துவிட்டு கிராமத்தை விட்டுச் செல்கிறான். கம்யூனிச சங்கங்கள் அவனுக்காக உதவ
முன்வந்து போரிடத் தயாராவதை மறுத்துவிட்டு, தான் எடுத்த முடிவின்படி ஊர்விட்டுச்
செல்கிறான்.
கதாபாத்திர வலிமை, காட்சியமைப்பு, சூழல், நேர்த்தியாக எண்ணங்களைப் ப்ரதிபலிக்கும் திறன்,
நடை இவையே இக்கதையிi வலிமை
மார்க்ஸிச அமைப்புகளுடனான அவரது அப்போது மலர்ந்த வெறுப்பு, கதையில் மார்க்ஸிய
அமைப்புகள் கதாநாயகனுக்கு உதவவரும்போது, அவi அவர்களுடன் பேசும் விதத்தில்
தெரிகிறது.
பத்மா என்னும் தோழியின் வருகை .. முதலாளித்துவத்தைக் குறித்து அவர்கொண்டிருந்த
அவநம்பிக்கையைக் காட்டுவதாகத் தோன்றுஸிறது. அதென்னமோ, இந்த பத்மா என்னும் பெயர்
பிரபலமான கதைகளில் வருவது என்ன ஒரு co incidence எனப் புரியவில்லை. சல்மான்
ரஷ்டியின் Midnight children படித்தவர்கள் இதனை உணரலாம்.
பத்மாவுடனான ரவியின் உரையாடல் இவ்வாறு போகிறது.
"நீ அந்த சாமியாரிணியைப் பார்த்தாயோ? அவள் உன்னைப்பற்றி விசாரித்தாள்"
" ஓ"
"அவளது அழகு பிரமிப்பூட்டுகிறது"
" அமெரிக்காவில் நீ லெஸ்பியனிசத்தை ஆதரிப்பதை இப்போதுதான் உணர்கிறேன்"
..... பத்மாவிடம் ரவி (கதாநாயகன்) அலட்சியமாகப் பேசுவதற்காகக் காரணம் தேவையில்லை.
ஆனால், அமெரிக்கா என்னும் காரணம் மிக மிக வலுவானது.
இறுதிக்காட்சியில் மழையின் வருணனை, பேருந்திற்காகக் காத்திருக்கும் ரவியின் காலடியில்
நெருடும் பாம்பு.. உடலெங்கும் மழைநீரில் புளகித்து, வளருவதாகத்தோன்றும் புற்கள் என
வளரும் . மாயத் தோற்றம்... விஜயனின் முத்திரை.. இதுபோலவே கோடச்சி என்பவள் வீட்டில் சாராயம் அருந்தும் வேளையில் ரவிக்கு உண்டாகும் மாயத்தோற்றம்.... சில சமயங்களில் எது கதையோட்டம், எது மாயத்தோற்றம் என்பது புரிபடவில்லை.
கஸாக்கிண்டெ இதிகாசம் படிக்க நினைப்பவர்களுக்கு, நண்பன் குரியாக்கோஸின்
அறிவுரையையே மீண்டும் சொல்கிறேன்.
"மூணுபிராயஸமெங்கிலும் வாயிக்கியா. அப்போழே கிட்டுள்ளு"
அன்புடன்
க.சுதாகர்
Sunday, November 20, 2005
ஓ.வி.விஜயன் -சிறுகதைகள்:
றுகதைகள் என எழுதிக் கலக்கியதோடு, ஒரு கார்ட்டூனிஸ்டாகவும் இருந்திருக்கிறார் என்பது
எனக்குப் புதிய செய்தி. அவரது நகைச்சுவையுணர்வு கதைகளில் கரு நகைச்சுவையாக (black
humour) இழையோடுவதை உணரமுடிகிறது.
Magical realism, myth எனப் பம்மாத்துப் பண்ணும் சில எழுத்தாளர்கள் ஓ.வி.விஜயனைப்
படிப்பது நல்லது. அவரது சிறுகதைகளைப் படித்ததும், தமிழ் எழுத்தாளர்களில் இருவரை எ
ண்ணத்தோன்றியது.
ஒன்று லா.ச.ரா
மற்றொருவர் தஞ்சை பிரகாஷ்
சில நண்பர்களுக்கு இந்த ஒப்பீட்டில் எதிர்ப்பு இருக்கலாம். இது எனது எண்ணம் மட்டுமே.
எண்ணெ (oil) என்னும் கதையில் ஒரு கிராமத்திற்கு மலைக்கு அப்பாலிருக்கும் வெளியிலி
ருந்து குடியேறிய வணிகக் குடும்பம் எவ்வாறு கலப்பட எண்ணெயால் அக்கிராமத்தையே மு
டமாக்க்குகிறது என்பதைப் பின்புலமாக அமைகிறது. அவ்வணிகக் குடும்பம் , கிராமத்து மக்
களுக்கு தேவையான பணத்தை வட்டிக்குக் குடுத்தும், மருத்துவ உதவியும் செய்து மக்களின்
நன்மதிப்பைப் பெறுகிறது. வணிகனின் கலப்பட எண்ணெயால் ஒர் தலைமுறையே முடமாகும்
போது, அவர்கள் பலனளிக்காத மருந்து தருவதை உதவியெனவே கருதும் கிராமமக்கள்,உண்ந
மயறிந்தும், செய்நன்றியால் வாய்மூடி மொளனிக்கிறார்கள். எதிர்ப்பவர்களை எவ்வாறு ஆசைக
ட்டி ,அக்குடும்பம் வளைத்துப் போடுகிறது என்பதை இறுதிவரை காட்டும் வலிமிகுந்த கதை.
இதனை ஒரு உருவகக் கதையாகக் கொள்ளலாம். பாலியல் உணர்வு தூக்கிநிற்கும் இக்கதையை
முதலில் படித்தபோது ஏமாற்றமாயிருந்தது. குரியாக்கோஸ் சொன்னபடி மீண்டும் மீண்டும்
படித்தபோது, விஜயனின் நேர்த்தியான கதைசொல்லும் விதம் கொஞ்சம் புரிந்தது.
மாஜிக்கல் ரியலிஸம், பாலியல் உணர்வு என்னும் இரு இழைகள். அவற்றை குறுக்கும் நெ
டுக்குமாக வைத்து, வேண்டிய இடத்தில் மட்டும் மாறுபட்ட உணர்வு ,காட்சிகள் என்னும் நிறங்களை ஏற்றி, நெய்யப்பட்டிருக்கும் இக்கதைச் சேலை, ஒரு கைதேர்ந்த கதைசொல்லுபவனின் அற்புத நெசவு..
Foetus என்னும் கதை முழுக்கமுழுக்க mythical புலம் சார்ந்தது. இக்கதையைக் குறியீடுகள் அமைத்துக்கொள்ளாமல் படித்துணர்வெதென்பது கடினம். முதலிலேயே அதன் புலம் அறியாமல் குறியீடுகள் கொள்வதும் கடினம். எனவே குரியாக்கோஸ் சொன்னபடி"மூணுபிராயஸெமிங்கிலும் வாயிக்கியா" . குரூர பாலியல் தோற்றங்கள் சிறிது அருவெறுப்பு ஏற்படுத்துமெனினும், கதையின் ஓட்டத்திற்கும், ஆழத்திற்கும் தேவையெனவே தோன்றுகிறது.
Wart என்னும் கதையிலும் குறியீடுகளே பிரதானம். பாலியல் காட்சிகள் சில வலியவே வந்திருப்பதாகப் படுகிறது. கேரளத்தின் மலைவனப்பு, காட்சிகள் அமையும் விதம்... அங்கேயே கொண்டு போய் காலத்தையும் சேர்த்து நிறுத்திவிடுகிறது. கதாநாயகன் தன் மகனுடன் கோவில் குளமருகே பொழுதுசாயும் நேரம் அமரும் காட்சி 'சந்தனக்குறியொண்ணு சார்த்தி, கையில் துளசிதளமுமாய், அம்பலத்திண்ட குளக்கரையிலே அங்கனே கிடக்கும்' உணர்வுகள் வார்த்தைகளினூடே எழுந்து வருவது நிஜமா அல்லது மாஜிக்கல் ரியலிசப் பொய்ப் பிம்பங்களாவென அறியா மயக்கம்... ப்ரமாதம்.
ஆங்கிலமொழிபெயர்ப்பே இப்படியிருந்தால் மூலம்..? சே இதுதான் கேரளாவில் இருக்கும்போது பொண்ணுகளை ஜொள்ளுவிட்டு நடக்காமல் ஒழுங்கா மலையாளம் படிச்சிருக்கணும்-கிறது.
Saturday, November 19, 2005
ஓ.வி.விஜயனின் கதைகள் - ஒரு கண்ணோட்டம்.
பிரபல எழுத்தாளர்களில் இருவரின் படைப்புகளைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் வெகுநாளாக இருந்துவந்தது. ஒன்று தோப்பில் முகம்மது மீரான் , மற்றொருவர் ஒ.வி.விஜயன்.
வைகிங் ( பென்குவின் வெளியீடு)பதிப்பில் வந்திருக்கும் 'ஒ.வி.விஜயனின் படைப்புகள்' எ
ன்னும் பெருவெளியீடு (Omni edition) ஆங்கில மொழியாக்கத்தில் கிடைத்தது. ஆர அமரப்
படிக்கும் நேரமும் வெகுஅதிசயமாக ஒருவாரமாகக் கிடைத்தது அதிர்ஷ்டம் எனவே சொல்லவே
வண்டும்.
ஓ.வி.விஜயனின் கதைகள் குறித்து கொச்சியில் படிக்கும்போது கேட்டிருக்கிறேன். மலையாளம்
அறிந்திருந்தாலும் , படிப்பது, எழுதுவது எனக்கு வராது. அவரது படைப்புகள் பற்றி நான் அபிப்ராயம் கேட்ட ஒவ்வொரு மலையாளியும் ஒவ்வொருவிதமாகச் சொல்லி செமத்தியாகக் குழப்பிவிட்டிருந்தனர். சில பெண்கள் "யேயே...ய்! ஒரு பாடு செக்ஸாணு. ஸாதனம் அழுக்கா' எனச் சொல்ல, காவி கதர் முண்டு கட்டிநடக்கும் மார்க்ஸிய சிந்தனைவாதியும், பல்கலைக்கழக
அப்பொழுதைய SFI அமைப்பின் முக்கிய நபருமான குரியாக்கோஸ் , தாடி சொறிந்தபடி " உ
க்கிரன்,,, கேட்டோ ? செரிக்கும் மனசிலாக்கான் ஸ்ரமிக்கியா.மூணுப்ராயஸெமிங்கிலும் வாயிச்சு
நோக்கு. அப்போழே கிட்டுள்ளு" எனச் சொன்னது மற்றொரு விதம். அப்போது , 'தற்காலம்
வேண்டாம்' என ஒத்திப்போட்டிருந்தேன்.
இந்தப் பின்புலத்தில், பல வருடம் கழிந்து புத்தகம் கிடைத்ததும் கவனமாக எந்த தாக்கலும்
இன்றிப் படிக்கத் துணிந்தேன்.
புத்தகம் மூன்று பெரும்கதைகளையும், பல சிறுகதைகளையும், ஒரு பக்கத்தில் அடங்கும் வகை
யில்லாத கதைகள்/கட்டுரைகளையும் கொண்டுள்ளது. இதில் குருசாகரம் என்னும் சாகித்ய அகாதெமி பரிசுபெற்ற கதையும் அடங்கும். ஆங்கில மொழிபெயர்ப்பினை, பெரும்பாலான கதைகளுக்கு ஒ.வி.விஜயன் அவர்களே செய்திருக்கிறார். சில மலையாளச் சொற்பிரயோகங்கள் ஆங்கிலப்படுத்தப்படுகையில் அன்னியப்படுவதை உணர முடிகிறது.
பெரிய கதைகளான 'கஸாக்கிண்டெ இதிகாஸம்', 'குருசாகரம்' போன்றவற்றை முதலில் தள்ளி
வைத்துவிட்டு, சிறுகதைகளைப் படிக்கத் தொடங்கினேன்.
இன்னும் வரும்.
Friday, November 18, 2005
ஈயத்தைப்பார்த்து....
-------------------
தென்மாநிலங்களிலிருந்து வருபவர்கள் அனைவரையுமே மதராஸிகள் எனச் சொல்லும் அறிவீனம் வட மற்றும் மேற்கு மாநிலங்களில் இன்னும் இருக்கிறது. மலையாளம் ஒரு மொழி எனவும், மலையாளி என்றால் கேரளச்சேர்ந்ததவர் என்னும் பொதுஅறிவு இன்னும் வளரவில்லை. அரசின் பண்பலை வானொலியில் கூட இரு நாட்களுக்கு முன் இரவு 9 மணி நிகழ்ச்சி நடத்தும் பெண்மணி மலையாளி தெரியாவிட்டால் தமிழ்நாடு கேரளாவில் சுமுகமாகப் போய்வரமுடியாது என திருவாய் மலர்ந்தருளினார். போகட்டும். விஷயத்துக்கு வருகிறேன்.
இன்றைய ஹிந்துஸ்தான் டைம்ஸ் மும்பைப் பதிப்பில் Unnatural politics please,we are Tamils என ஒரு கட்டுரை வந்திருக்கிறது. இதையெல்லாம் எப்படி பிரசுக்கிறார்கள் என இன்னும் எனக்குப் புரியவில்லை. குஷ்பு விவகாரம், ராமதாஸ் பேத்திகள் டெல்லியில் தமிழ் இல்லாத பள்ளியில் படிப்பது எனப் பல விஷயங்களைத் தொட்டிருக்கும் இக்கட்டுரையில் ஆழம் இல்லை. வேண்டாத சிந்தனைகளைத் தூண்டும் உணர்வே எதிரொளிக்கிறது. தொடங்குவதே "தமிழ்நாட்டில் 90களில் குஷ்புக்கு கோயில் கட்டப்பட்டது. அவ்வளவுக்கு பிரபலம் ஆனவரை இப்போது தமிழ் எதிரி என விரட்டுகிறார்கள் " என்னும்படியான பத்தியில்.
என்னமோ தமிழ்நாட்டில் அனைவரும்சேர்ந்து குஷ்புவுக்கு கோயில்கட்டி குடமுழுக்கு செய்ததுபோலவும், இப்போது ஒட்டுமொத்தமாக அனைவரும் அவரை தமிழினத்தின் எதிரி என ஓடஓட விரட்டுவதுபோலவும் சித்தரிக்கும் இக்கட்டுரையை தணிக்கை செய்யாமல் வெளியிட்டது ஹிந்துஸ்தான் டைம்ஸ்-ன் வடிகட்டிய முட்டாள்தனம். தென் மாநிலங்கள் குறித்தான சராசரி வட/மேற்கு மாநில வாழ் மக்களின் சிந்தனை என இதனைக்கொள்ளலாமா? இந்திப்படங்களில் மெகமூது 70 களில் தொடங்கிவைத்த மதராஸி இந்தி என்பதை இன்னும் தொலைக்காட்சித் தொடர்களில் சிரிப்பு (வலுக்கட்டாயமாக) வரவழைப்பதற்காக இழுக்கும் கேலிக்கூத்து தொடர்கிறது. எத்தனைபேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்? சேட் பேசும் "நம்பள் நிம்பள்' தமிழ் எல்லாம் 60 களிலேயே தமிழ்ப் படங்களில் முடிந்துவிட்டது. செருப்பால் அடித்துக்கொள்வதும், திட்டிக்கொள்வதுமே இப்போதைய நமது உயர்ந்த ஹாஸ்ய உணர்வு என இவர்களுக்குப் புரியவைக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழ்த் திரையுலகம் கடமைப்பட்டிருக்கிறது.
அமிதாப் பச்சன் அடிபட்டுக்கிடந்தபோது பலர் கோயில்களில் சிறப்பு நேர்தல்கள் செய்ததையும்,அவருக்கு சிலைவத்து பூஜை இரு வருடங்களுக்கு முன் நடத்தியதையும், கங்குலி இந்திய கிரிக்கெட்டிற்கு மீண்டும் வந்து சேவைசெய்யவேண்டுமென கல்கத்தாவில் பூஜைகள் செய்ததையும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியதை பார்த்துதான் இருக்கிறேன். அதற்காக, ஒட்டுமொத்தமாக பெங்காலிகள், வடவிந்தியர்கள் இப்படித்தான் என முத்திரை குத்துகிறோமா? முட்டாள்தனம் என்பது ஒரு இனத்திற்குச் சொந்தமில்லை என்பதை தமிழனும் குஷ்பு கோயில் மூலம் நிரூபித்திருக்கிறான். அவ்வளவே. இந்த அளவிற்கு தமிழர்கள் என்றாலே திரைப்பட நாயக/நாயகிகளுக்காக எதுவும் செய்வார்கள், இன,மொழி வெறியர்கள் எனப்படும்படி செய்திஊடகங்கள் விஷம் பரப்புவது ஆபத்தானது.
இதனைக் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ்-க்கு எழுதியிருக்கிறேன். கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையில்லை. "kudos to your article dated..." என எழுதியிருந்தால் ஒரு வேளை எடுத்துக்கொள்வார்களாயிருக்கும்...
பி.கு: இந்த குஷ்பு கோயில் கட்டியவர்களை.........
Tuesday, November 15, 2005
கொங்குதேர் வாழ்க்கை
திரு. எஸ்.சிவகுமார் எழுதிய கொங்குதேர் வாழ்க்கை -பாகம் 1( பதிப்பகம் யுனைட்டட் ரைட்டர்ஸ்) படிக்கக் கிடைத்தது. இது வந்தது 2003ம் வருடம். எப்போதுமே நான் சோம்பேறி என்பதால், என்னை இப்போதும் மன்னிக்கவும்!
நூலின் முன்னுரைக்கு முன் எழுதிய ஒரு குறியீட்டுக்காட்சி
தமிழரின் இப்போதைய தலைமுறை (புதுக்குடி)அதன் மொழி, பண்பாட்டை அறியாது எங்கோ விரைகின்றது. இதனைக் கண்டு வேதனைப்படும் கிழவனாக ஒரு குறியீடு அமைத்திருக்கிறார். தான் கண்ட கவிதைச் செல்வத்தைப் புதிய தலைமுறைக்குக் கொடுக்க நினைக்கிறான் அக்கிழவன். அது ஏற்கப்படுமா என்ற தயக்கம் அவனுக்கு இழையோடுகிறது...
உணர்வு பூர்வமான இக்குறியீடு தேவையில்லையோ எனத் தோன்றுகிறது. ஏனெனில், தெளிவாக அவரது குறிக்கோளாக உள்ளே முன்னுரையில் சொல்கிறார்
" ...என் ஆர்வ்த்தையே அடிபடையாக வைத்துச் செய்திருக்கிறேன். மரபில் ஆர்வம் இல்லாத புதிய தலைமுறையினருக்கு இத்தொகுப்பு ஆர்வத்தை ஏற்படுத்துமானால் அதையே எனக்கு கிடைத்த வெற்றியாகக் கருதுவேன்"
'எடுக்கப்பட்ட பாடல்கள் ஒரு சுவைக்கான மாதிரிதான். இதனினும் உங்களுக்குப்பிடித்த பாடல்கள் இந்நூல்களில் இருக்கக் கூடும் ..'.
இது போல பல rider clause வைத்திருக்கத் தேவையில்லை. ஏனெனில் பாடல்களின் தொகுப்பு அவரது தேர்வின் திறனைக் காட்டுவதாக ஒவ்வொரு பாடல் தேர்விலும் மிளிர்கிறது.
அகம், புறம் என திணைகளில் திணறாது இரண்டிலும் நேர்த்தியாக பாடல்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
முதலில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, காப்பியங்கள் எனப் போகிறது பாடல்களின் தேர்வு.
இரு சுவைகளை அதிகம் காட்டியிருப்பதாகப் படுகிறது.
ஒன்று :அவலச் சுவை
உதாரணமாக
பாரிமகளிர் பாடல் "அற்றைத்திங்கள் ",
கபிலர் பாடியது "தீநீர்ப் பொருங்குண்டு சுனைப்பூத்த குவளை.." ( பாரி இறந்ததும், பாரிமகளிரின் அறியாப் பருவம் கண்டு இரங்கிப்பாடியது)
சீவகசிந்தாமணி "வெவ்வாய்ஓரி முழவாக...." சீவகன் சுடுகாட்டில் பிறந்த போது விசயை பாடியபாடல்
அரிச்சந்திர புராணம் "பனியால் நனைந்தும்.."சந்திரமதி மகன் இறந்ததும் பாடிய பாடல்..
இந்த ரீதியில் போனால், பெரியபுராணத்தில் "மணமகனே பிணமகனாய்" என்னும் பாடலை எதிர் பார்த்தேன். நல்லவேளை அது வரவில்லை!
மற்றொன்று: காமச் சுவை
நீலகேசி --- துபடு துவரிதழ் துடிக்கும்.. ( நீலிப் பேய்மகளின் அழகிய உருவம்)
சீவக சிந்தாமணி, -'மீன்சேர் குழாமனைய மேகலையும்..(காந்தருவதத்தையின் அழகு)
நளவெண்பா, 'கொங்கைமுகங் குழையக் கூந்தல் ( நளன் தமயந்தி காதல் வர்ணனை)
கந்த புராணம்--- 'அன்னதொருகாலை'( முருகனை வள்ளி தழுவுதல்)
இன்னும் பல சொல்லலாம்.
இவை இலக்கிய நயத்திற்காக இடப்பட்டிருக்கின்றன என்றாலும், இலக்கியரசனை வளர பல சுவைகளையும் ஆசிரியர் எடுத்துத் தந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது.
கம்பராமாயணத்தில் குகன் பரதனைக் கண்டதும் கொள்ளும் கோபம், யுத்தகாண்ட தோற்றங்கள், வில்லிபாரத்தில் வரும் போர் வருணனைகள் , திருமங்கையாழ்வாரின் காதலால் இரங்கும் பெண்ணின் நிலை எனப் பலசுவைகளைக் காட்டியிருக்கலாம்.
சில பாடல்கள் எப்படியும் நம்மக்கள் எங்கேயாவது கேட்டிருப்பர் . "அற்றைத்திங்கள் ", "வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் '(சிலப்பதிகாரம்),'வெவ்வாய் ஓரி முழவாக '( சீவக சிந்தாமணி) , 'ஆயிரம் இராமன்நின் கேழ் ஆவரோ?' ( கம்பராமாயணம்) போன்றவை.. ஆனால் பாடல் முழுதும் தெரிந்திருக்காது. இந்த வகையில் அப்பாடல்களை எடுத்திட்டு, அதனை சிறிது விளக்கியும் இருப்பது ,படிப்பவருக்கு "அட நாம முந்தியே படிச்சதுதானே" என்னும் அனுபவத்தைத் தந்துவிடுகிறது. பின் அப்பாடல் முழுதும் படித்து முடிக்கும்வரை கீழே வைப்பது கடினம்.. இது என் அனுபவம்.
ஒரே நூலிலிருந்து ( எ.கா சீவக சிந்தாமணி, கம்ப ராமாயணம்)ஆசிரியர் , பலப் பல திறனுடைய பாடல்களைக் காட்டியிருப்பது அவரது ஆழ்ந்த அனுபவத்தின் எடுத்துக்காட்டாக இருக்கிறது.
பாகம் 2 இன்னும் பார்க்கவில்லை. தேம்பாவணி, இரட்சணிய யாத்ரீகம் போன்றவை முதல் பாகத்திலில்லாததால் இரண்டாம் பாகத்தில் இருக்குமென நினைக்கிறேன்.
மொத்தத்தில் மரபு இலக்கியத்தில் அவ்வளவாகப் பரியச்சமில்லாதோர் துவங்குவதற்கு ஒரு நல்ல படி.
திரு.எஸ்.சிவகுமார் அவர்களின் அயராத உழைப்பிற்கும், நல்ல ஆக்கத்திற்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்
அன்புடன்
க.சுதாகர்
Monday, November 14, 2005
மும்பை நாடகவிழா (பார்க்காமல் எழுதிய விமர்சனம்)
மும்பை நாடகவிழா (பார்க்காமல் எழுதிய விமர்சனம்)
-----------------------------------------------------
எந்த நேரத்துல " நாடகவிழா பாத்துட்டு வந்து எழுதறேன்"ன்னு சொன்னனோ தெரியலை... நுழைவுச்சீட்டு தருகிறேன் எனச்சொல்லியிருந்த ஆட்கள் சமத்தியா ஏமாற்றிவிட்டார்கள். தீபாவளீக்கு ஊர் சென்று திரும்பும்போது ." ஒரு சீட்டு என் நண்பன் கிட்டே இருக்கு. இந்தா அவன் தொலைபேசி எண்" எனத் தந்த நண்பனுக்கு ஆயிரம் நன்றிகள் சொல்லிவிட்டு, அவரைப் பிடிக்கப் போனால்,... குடும்பத்தோடு குஜராத்தில் தீபாவளிக்குப் போயிட்டார். புழுங்கிக்கொண்டிருந்தபோது. மிட் டே பத்திரிகை " நாடகம் பரவாயில்லை" என்ற ரீதியில் எழுதியிருந்ததைப் படித்ததும் ஒரு நிம்மதி. "சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்"?!
அநியாயத்திற்கு விளம்பரம்.. சஞ்ஜனா கபூர் பண்பலை ரேடியோவில் மணிக்கு ஒரு முறை வந்து நாடகத்தைப்பத்திப் பேசாமல், அடைமொழியும், பண்புச்சொற்களுமாக அடுக்கி ஒரு நிமிடத்திற்குப் பேசினார். கேட்டே வாழ்க்கை வெறுத்துவிட்டது.
ஜிகினா தொழில்நுட்ப வேலைகள் நிறைந்திருந்தது என்பது நம்ம பாரிவையாளர்களுக்கு புதியது. மைக் முன்பு காள் காள் எனக் கத்டுவது நாடகம் எனப் புரிந்துகொண்டிருந்தவர்கள், முதன்முறையாக நாடகம் பார்த்தார்கள் என்கிறது ஒரு விமர்சனம். பார்வையாளர்களில் பலர் நாடக விற்பன்னர்கள். அவர்களே ப்ரிஅமித்துப் போஇ " எவ்வளவு செலவு? இதுல பத்து ல ஒருபகுதி கிடைச்சிருந்தா நான் எங்க்யஓ போயிருப்பேன்" எனப் பெருமூச்சு விட்டனர். ஒளித் தொழில் நுட்பம் மட்டும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல். நம்ம ஆட்கள் நாலு கலர்கலரா விளக்கு வைச்சு நாடகம்னு போட்டுட்டு "மக்களுக்கு ரசனையே பத்தாது" என்பார்கள் பேட்டிகளில்.
"லாப்டாப் கணனிகளுக்கு நாடகத்துல என்ன வேலை?" என்றார் ஒரு நாடக நடிகர் அப்பாவித்தனமாய். பத்து லாப்டாப் வைத்து நாடகத்தின் போக்கை அவர்கள் சிறப்பாக ஆழுமை செய்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. "படுதாக்கு பின்னாடியிருந்து மெல்லமா கூப்புடவேண்டியதுதானெ?" நாம என்னிக்கு உருப்படப் போறோம்?
ஆனால், ஒன்று சொல்லவேண்டும். இது மக்களுக்கு நாடகம் பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியைக் கொடுத்திருக்கும். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மரபு கெடுக்காமல், எப்படி நவீன உத்திகளைக் கையாண்டு நல்ல படைப்பைத் தரமுடியும் எனக் காட்டியிருக்கிறார்கள். இனிட்யாவது, நவீன நாடகம் என்றல் புதுக்கதையாகத்தன் இருக்கவேண்டும் எனவும், மரபு நாடகம் எல்லாம் பார்ப்பது பத்தாம்பசலித்தனம் என நினைப்பதும் கொஞ்சம் குறையும். அதற்காகவாது சஞ்ஜனா கபூருக்கு நன்றிகள்.
Friday, November 04, 2005
ஊடகங்களும் பிறமொழிப் படைப்புகளும்
-------------------------------------
ரவி‚ɢšŠ தமிழ் இலக்கியத்தை உலகளவில் மொழிபெயர்ப்பின் மூலம் மேற்கத்தியர்கள் அறிந்திருப்பது குறித்து சு.ராவின் கருத்தைக் குறித்து எழுதிய வலைப்பதிவின் தாக்கம் இது.
பிற கலாச்சாரங்களை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களை உள்வாங்குவது குறித்து பேசுமுன் இரு முக்கியமான விடயங்களை நாம் கவனிக்கவேண்டும்.
ஒன்று : புரிந்து கொள்ளுதலில் ஊடகங்களின் பங்கு.
இரண்டு: அவ்வூடகங்கள் குறித்து நமது அணுகுமுறை.
ஊடகங்களின் பங்கு
பிற கலாச்சாரங்களை நாம் ஊடகம் மூலமே பார்க்கிறோம், உணரத் தலைப்படுகிறோம். இலக்கியம் ஒரு ஊடகமெனினும், புரிந்துகொள்ளுதல் என்பதான முயல்விற்கு அதற்கு மொழி, மொழியின் கையாடல் போன்ற ஊடகங்கள் தேவைப்படுகின்றன. குருசோவா, பீட்டர் புரூக்ஸ் போன்றோர் திரைப்படம் மற்றும் நாடக ஊடகங்கள் மூலமே பிற கலாச்சார நுணுக்ங்களை சிறப்பாக பலதரப்பட்ட பார்வையாளர் மத்தியில் கொண்டுபோக முடிந்தது.
°¼¸í¸û ÌÈ¢òÐ ¿ÁÐ «ÏÌÓ¨È"
ஐரோப்பிய கலாச்சாரத்தை விடுங்கள். நமது நாட்டு பிற மொழி இலக்கியங்கள் எத்தனை நாம் அறிந்திருக்கிறோம்? இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். எனினும், தகுந்த ஊடகங்களை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டோ ம் என்ற குற்றச்சாட்டிலிருந்து நாம் மீளமுடியாது.
திரைப்படமென்றாலே ஆபாசமும், மசாலாவும் மட்டுமே என மலிந்திருக்க, நாடகங்கள் "வெகுஜன நாடகங்கள்' என்ற போர்வையில் அபத்தங்களை சிரிப்பு நாடகமென்ற பெயரில் துப்பிக்கொண்டிருக்கின்றன. நலமான முயற்சிகளை கவனமாக " இதெல்லாம் அறிவு ஜீவிகளுக்கு" எனத் தள்ளிப்போக்கிவிடுகிறோம்.
மலையாளத்தில் இருக்கும் வடக்கன் வீரகத எத்தனை தமிழருக்குத் தெரிந்திருக்கும்? அவை அப்படியே இலக்கிய வடிவில் தமிழில் கட்டாயப்பாடமாக்கிய்ருந்தாலும் நாம் அசட்டை செய்திருப்போம். ஒரு திரைப்படமாக M.T.வாசுதேவன் நாயர் கொண்டுவந்ததும் மலையாளத்திலேயே கொஞ்சம் அதிகமாக அது பேசப்பட்டது.
இலக்கியம் , கலாச்சாரப் பிண்ணனியின்றி உணரவியலாது. உணர்வதற்கு ஆரோக்கியமான ஊடகங்கள் வேண்டும். ஊடகங்கள் குறித்தான ஆரோக்கியமான புரிதல் வேண்டும். திரைப்படம் பொழுதுபோக்கு என்றும், அது வியாபார நோக்கம் மட்டுமே சார்ந்தது எனவும் சப்பைக்கட்டுவதை திரைப்படத் துறையினரும் நிறுத்தவேண்டும். அவ்வாறு வரும் திரைப்படங்களை மக்கள் வரவேற்பதையும் குறைக்கவேண்டும்.
நாடகங்கள் குறித்து நமது புரிதல் வெகுவெகு பாதாளத்தில் இருக்கிறது என்பது வருந்தத்தக்க விசயம். நாடகங்கள் குறித்து பேசுவதும், அலசுவதும் தமிழ்நாட்டில் மிகக்குறைவு.
ப்ருத்வி நாடகமன்றம் மும்பையில் இந்த முறை ஆங்கில நாடகக் குழுஒன்றின் படைப்பான ஷெக்ஸ்பியரின் measure for measure நாடகமேற்றியிருக்கிறது. ஏழு ஆண்டுகள் தொடர்ந்த முயற்சியின் விளைவாக அக்குழு முதன்முறையாக இந்தியாவில் மேடையேற்றியிருக்கிறது. பண்பலை வானொயிலும், செய்தித்தாள்களிலும் அடிக்கடி விளம்பரம் செய்து ப்ரபலப்படுத்திவிட்டார்கள். மாணவர்களுக்கும், வயோதிகர்களுக்கும் 50% தள்ளுபடி . இதெல்லாம் நம்மூரில் செய்ய என்ன தடை?