Thursday, April 13, 2006

தூத்துக்குடி தெய்வங்கள் -2

தெய்வம் -2 ஆங்கிலத்தில் பேசு

பத்தாவது வகுப்பு வரை நான் தமிழ் மீடியத்தில்தான் படித்தேன். ஆங்கில மீடியம் என்றால் பணம் கட்டவேண்டும்
ஆங்கிலம் ஒரு பாடமாகவே இருந்ததே தவிர, தொடர்புகொள்ளும் ஊடகம் என நான் கருதவில்லை. படித்தால் புரி
யும். சரளமாகப் பேச, எழுதத் தெரியாது. இது ஒரு பெரிய குறையாக அன்று நான் நினைக்கவில்லை.
பதினோராம் வகுப்பில் சேர்ந்தது ஆங்கில மீடியத்தில். புரிந்துகொள்வது கடினமாக இருக்கவில்லை. படித்ததைச் சொல்லத்தான் தெரியவில்லை.
ஒரு நாள் இயற்பியல் வகுப்பில் " what is the phenomenon of surface tension?" ஆசிரியர் கேட்டதற்கு விழித்தேன்.
surface tension தெரியும்... phenomenon என்றால் யார்? என்ற கேள்விகளுடன் நின்றுகொண்டிருந்தேன்.
ஆசிரியர் பொறுமையிழந்தார் , " Don't you understand ?"
"ஆமாம்" என தலையாட்டினேன்
"என்ன ஆமா? இங்கிலீஷ்லதான கேக்கிறேன்? இது கூடப் புரியலைன்னா என்ன படிச்சே இத்தனை வருசமா?"
எனது வகுப்பில் ஆங்கில மீடியத்திலேயே படித்து வந்த பையன்கள் பலர் இருந்தனர். அவர்களுக்கு இது புதிது போலும்.. வியப்பாக என்னைப் பார்த்தார்கள்.
எனக்கு அவமானம் பிடுங்கித் தின்றது.. பேசாம தமிழ் மீடியத்திலேயே போய்ச் சேர்ந்துரலாம் என முடிவு செய்தேன்.
"Get out of the class" ஆசிரியர் அன்பாகப் பணித்தார். எங்கள் பள்ளி வழக்கப்படி வகுப்பை விட்டு வெளியேறினாலும், கதவு பக்கமே நிற்கவேண்டும் ஒரு ஓரமாக.

முதல்முறையாக வகுப்பைவிட்டு வெளியேற்றப்பட்டேன். கதவருகில் நின்றுகொண்டேன்.
"Outstanding student" என்றார் ஆசிரியர். அர்த்தம் புரிந்த பையன்கள் சிரித்தார்கள். எனக்குப் புரியவில்லை.
எதோ என்னைக்குறித்தான கேலி என்பது மட்டும் தெரிந்தது. உள்ளுக்குள் கொதித்தாலும் சொல்ல முடியாத நிலை.
பியூன் வந்து அழைத்தார்.
" அசிஸ்டெண்ட் ஃபாதர் கூப்புடறாரு. போ"
தந்தை சிகாமணி ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றவர். எங்களுக்கு ஆங்கில வகுப்பு எடுத்தார்.
"என்ன வகுப்புக்கு வெளியே நிக்கிற?"
சொன்னேன்.
" ஃபாதர், நான் தமிழ் மீடியத்துக்கு போயிடறேன். இது கஷ்டமாயிருக்கு. புரியமாட்டேங்குது"
அவர் என்னை நேராக கண்ணில் ஊடுருவிப் பார்த்தார்.
" சரி. எதாவது கஷ்டமாயிருந்தா அதைவிட்டு ஓடிடணும்.அப்படித்தானே?"
மெளனமாய் நின்றேன்.
"நான் தமிழ்மீடியம் சார். எனக்கு இங்கிலீஷ் தெரியாது"
"எல்லாரும் பிறக்கும்போதே இங்கிலீஷ் தெரிஞ்சேவா வர்றோம்? நீ அத ஒரு பாடமா மட்டுமே பார்க்கிற. பேசற மொழியா நினைச்சு பயிற்சி பண்ணு.வந்துடும்."

"ஃபாதர். யார் கிட்ட பேசுவேன்?இங்கிலீஷ்ல பேசினா பசங்க சிரிப்பாங்க."

"அம்மணமா அலையறவங்க ஊர்ல , கோவணம் கட்டினவன் கோட்டிக்காரன்தான்" அவர் குரல் உயர்ந்தது.
" நீ அம்மணமா அலையணுமா, கோவணம் கட்டிகிட்டு வேட்டி கட்ட முயற்சிக்கணுமாங்கிற முடிவை நீ தான் எடுக்கணும்." .

தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தேன். அவரது மேசையின் மூலையில்
கைவிரல்களால் தன்னிச்சையாகக்கோடு போட்டவாறே.

"நானும் உனக்கு ஆங்கிலம் எடுத்திருக்கேன். எடுக்கிறேன். நீ இப்படி
கோழைத்தனமா விலகி ஓடினேன்னா, நான் உன்னை சரியா படிப்பிக்கலைன்னு
அர்த்தம்.வெளங்குதா?"என்றதோடு "நீ போகலாம்" என்று தலையசைத்தார்.

வெளியே வந்தேன். உச்சி வெயில் சுட்டெரித்தது.

இன்னும் வரும்

5 comments:

  1. போன பதிவில் எதேனும் கழித்து விட்டீர்களா எனக் கேட்டேன்.
    இப்போது மன்றாடிக் கேட்கிறேன்,
    மேலே ஏதும் எழுதாதீர்!
    படிக்க முடியாது!
    'உச்சி வெயில் சுட்டெரித்தது!'
    இதை விட ஒரு முத்தாய்ப்பு வாக்கியம் இருக்க முடியுமா?

    தூ.தெ.3-க்குப் போங்க!

    ReplyDelete
  2. யாரும் எல்லாம் தெரிந்து கொண்டே பிறப்பதில்லை. நமக்கு ஒன்று தெரிய வேண்டுமென்றால் அதை நாம்தான் முனைந்து கற்க வேண்டும். அந்த ஃபாதர் சொல்லியது மிகவும் சரிதான்.

    ReplyDelete
  3. அன்பின் எஸ்.கே,
    தங்கள் உணர்ச்சிபூர்வ பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள்! இரண்டுங்கெட்டான் சிறுநகரங்களில் வளர்வதென்பதின் அவஸ்தை உங்களைப்போன்றோர் உணர்வதே பெரிது.நன்றிகள் ஐயா!
    அன்புடன்
    க.சுதாகர்.

    அன்பின் ராகவன்,
    நன்றி. சவேரியார் பள்ளியில் நான் அறிந்தவரை ஃபாதர்களாக இருந்தவர்கள் நிஜமான தந்தைகளாகவே அன்பும் கண்டிப்பும் காட்டினர். அது ஒரு காலம் சாமி!
    அன்புடன்
    க.சுதாகர்

    ReplyDelete
  4. அங்கே நீங்கள் எந்த வருடம் படித்தீர்கள்?

    ReplyDelete
  5. நன்றி யோசிப்பரே,
    '80 முதல் 84 வரை. 80ல் எட்டாம் வகுப்பு.84ல +2 தேறினேன்.

    ReplyDelete