Sunday, April 16, 2006

தூத்துக்குடி தெய்வங்கள் 3 (1)

அடுத்தநாள் ஆங்கிலத் துறையில் திரு.சங்கரன் சார் அவர்களிடம் சென்று பொதுஅறிவுப்போட்டிக் குழுவில் எனது பெயரையும் சேர்க்க விண்ணப்பம் கொடுத்தேன். அடுத்ததாக தமிழ்த்துறையில் ஜெகதீசன் அய்யாவிடம் கவிதைப்போட்டிக்குப் பெயர் கொடுத்தேன். தமிழ் பேச்சுப்போட்டி, ஆங்கிலப் பேச்சுப்போட்டி, தமிழ் கட்டுரைப்போட்டி , ஆங்கிலக் கட்டுரைப்போட்டியென சகட்டுமேனிக்கு பெயர்கொடுத்துவிட்டு ஒரு வெறியில் வெளிவந்தேன்.

ஆங்கிலப் புத்தகங்களில்தான் தடுமாறினேன். சில பெயர்கள் தவிர எனக்கு ஆங்கில அறிஞர்கள் பெயர்கூடத் தெரியாது. சங்கரன் சார் அவர்களை அணுகினேன்.

ஆங்கில இலக்கியம் .... அதுவரை பாடம் மட்டும்தான். சங்கரன் சார் அறிவுரைப்படி ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்க முனைந்தேன். மீண்டும் குட்டியும் நானும் ஜோடி சேர்ந்தோம்.

ஹார்பர் பொது நூலகத்தில் எங்களுக்கு அவ்வளவு நல்ல பெயர் கிடையாது. பள்ளியின், நீண்ட விடுமுறைகளில் காலையிலேயே போய் , அப்புசாமி சீதாப்பாட்டி கதைகளில் வரும் ஜோக்குகளுக்கு கெக்கே பிக்கேவென நூலகத்தில் சிரித்து "ஷ்..சத்தம்போடாதீங்கடா.. சவத்து மூதிகளா"என பேப்பர் படிக்க வரும் பெரியவர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டிருந்தோம். பின்னும் எதாவது ஜோக் படித்து சிரித்து " ஏலா, சும்மா இருக்க முடியாது? வந்தேன்னா பின்னிருவேன். தெரியும்லா?" என உள்ளிருந்து நூலகரிடமும் வசவு வாங்கிய பின்னரே அங்கிருந்து போவோம்.

எனவே, நாங்கள் போய் ஆங்கிலப் புத்தகங்களைப் எடுக்கப்போனபோது அவர் நம்பவில்லை.

"இங்கிலீஷ் புத்தகம் படிக்கற மூஞ்சிகளப் பாரு" என்ற வாசகத்தை அவர் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தார். King Arthur and Knights, Don Quixote போன்ற அடிப்படைநிலைக் கதைகள் இருந்தன. அது தாண்டினால் Early churches of Erstwhile Travancore Province' என சுத்தமாகப் புரியாத ஆராய்ச்சிக் கட்டுரைகள் இருந்தன.

சங்கரன் சார் சிபாரிசு செய்த புத்தகங்கள் ஸ்பிக் நகர் ஜிம்கானா லைப்ரரில இருக்கும் என்றான் குட்டி.
எங்கள் குவார்டர்ஸிலிருந்து ஸ்பிக் நகர் குடியிருப்பு 7 கிமீ இருக்கும். கடற்கரை எதிர்காற்றில் சைக்கிள் மிதித்துப் போய் ஒரு புத்தகம் எடுத்து வருவோம். புத்தகங்களைத் தேடும்போது,கையில் கிடைத்த ஒரு புத்தகத்தின் அட்டைப்படம் விவகாரமாக இருக்கவே, அதனை குட்டி என்னிடம் மறைமுகமாகக் காட்டினான்.

"பாத்தியால? சரோஜாதேவி புக் எல்லாம் வைச்சிருக்காங்க"

அது James Hadley Chase என்பது பின்னரே விளங்கியது.

கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு ஆங்கிலப் புத்தக உலகு அறிமுகப்பட்டது. ஒரு பெரும் உலகின் வாயிற்கதவுகள் எனக்குத் திறந்ததென உணர்ந்தேன்.

ஒரு வெறியுடன் படித்துவந்ததில், சுவாரசியமும் கூடவே, ஆசிரியர்களிடம் தைரியமாக ஆலோசனை கேட்கும் பக்குவமும், புத்தகங்களை விவாதிக்கும் மனதிடமும் வந்தது. ஆசிரியர்கள் 'இதைப்படித்துப் பாரு' என அறிவுறுத்த, பல புத்தகங்கள் அறிமுகமாயின. பல பொதுஅறிவு, கவிதை,பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் தலைகுப்புற வீழ்ந்தாலும், பலவற்றில் வெற்றியும் கிடைத்தது. ( இதைக்கொண்டாட ஸ்ட்ரைக் செய்யவில்லை என்ற வருத்தம் இல்லாமலில்லை!)

2 comments:

  1. நமக்கு எந்த மொழியெல்லாம் படிக்க வருமோ அதிலெல்லாம் முடிந்த வரையில் படிக்க வேண்டும். நல்ல முயற்சிதான் உங்கள் முயற்சி. இதற்குப் பலன் கிடைத்ததா?

    ReplyDelete
  2. நன்றி ராகவன்,
    இது மிகுந்த பலனளித்தது.Pulp Fiction தொடங்கி நல்ல கதைகள் கட்டுரைகள் வரை ஆங்கில இலக்கியம் குறித்து ஒரு விவரம் கிடைத்தது. பேச முயன்றதை விட இது நல்ல முயற்சியெனவே இன்றும் நான் கருதுகிறேன்.
    அன்புடன்
    க.சுதாகர்.

    ReplyDelete