Saturday, April 08, 2006

தவறிய உடைகளும் மனங்களும்

இரு நாட்களுக்கு முன் என் பையன் அவன் நண்பர்களுடன் ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்த போது , துரத்திய ஒரு சிறுவனின் டிராயர் நழுவிவிட்டது. ஒரு கையால் பிடித்துக்கொண்டே துரத்திய அவனைப் பார்த்து என் பையன் சொன்னான்."ஹே. உனக்கு வார்டுரோப் மால்ஃபங்க்ஷன்(wardrobe malfunction)." கூடியிருந்த பெரியவர்கள் சிரித்து விட்டு அவரவர் குழுவில் கதையடிக்கத் தொடங்கினர்.
எனக்கு ஒரு குறுகுறுப்பு... இந்தப் பதத்தை என்னவென இந்தச் சிறுவர்/சிறுமியர் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என அறியும் ஆவல். காதைத் தீட்டிக்கொண்டு சிறுவர்கள் கூட்டமாக இருந்து பேசுவதைக் கவனிக்கலானேன்.
ஒரு சிறுமி சொல்கிறாள் " அன்னிக்கு நியூஸ்-ல காமிச்சாங்க. ஸ்டேஜ்ல ஒரு ஆண்ட்டிக்கு கவுண் பிஞ்சுபோச்சாம்... "
கெக்கே பிக்கேவென சிரிப்பலைகள்.
"ஷேம் ஷேம்.."
"சீய்ய்..." யோடு ஒரு குரல் கேட்டது
"அந்த ஆண்ட்டி ஏன் ஜட்டி போடாம போனாங்க? வேணும்.. எங்க டீச்சர் இருந்தா அடிச்சிருப்பாங்க"

குழந்தைகள் பேச்சை விடுங்கள். ஒரு விஷயம் சரியெனவே படுகிறது எனக்கும். அண்மையில் நடந்த ஃபாஷன் நிகழ்ச்சிகளில் மேடையில் திடீரென உடைகள் அவிழ்ந்து விழுவதும், கிழிந்து போவதுமாக நடந்த அசம்பாவிதங்களை FTV காட்டியிருந்தால் சரியென்று சொல்லலாம். Breaking News என்னுமளவில் முன்னிலை தொலைக்காட்சி செய்தி சேனல்கள் பரபரப்பாக மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி அனைவரையும் பார்க்கச் செய்ததை எப்படி பத்திரிகை ஒழுங்கு என்பது? இது ஒரு முக்கியச் செய்தியா? அது குறித்து விவாதங்கள் அலசல்கள்... போதும் போதுமென சலிப்படையச் செய்துவிட்டார்கள்.
இந்த செய்திச் சேனல்கள் வீட்டில் அனைவரும் பார்க்கும் சேனல்கள் என்பதால் பெரும்பாலோர்க்கு அதிர்ச்சியாகவும், தர்மசங்கடமாகவும் இருந்தது என்றால் மிகையில்லை. ஒன்பது வயதுப்பையன் wardrobe malfunction என்னும் வார்த்தை கற்று பயன்படுத்துகிறான் என்றால் எத்தனை முறை இந்த விஷ அலைகள் அவனைத் தாக்கியிருக்கக் கூடும்?
குழந்தைகள் வெளிப்படையாகக் கேட்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. சில ஆடைகளுக்கு உள்ளாடை அணியமுடியாது. தொலைகிறது. கவுண் போன்றவற்றிற்குமா? உள்ளாடைகள் அணிந்து வரக்கூடாது எனச் சட்டமிருக்கிறதா என்ன? இதனைப்பார்க்கும்போது இந்நிகழ்ச்சிகளின் அடியோடும் குறிக்கோள் என்ன என்பதிலேயே சந்தேகம் வருகிறது.

ஒழுங்கு என்பதும் நாகரீகம் என்பதும் நவீனம்/புரட்சி என்னும் வார்த்தைகளால் கேவலப்படுத்தப்படுவது சரியல்ல என நினைக்கிறேன். எது அழகுணர்வு எது அழகு எனக் காட்டப்படுகின்ற வக்கிரம் என்ற எல்லைக்கோட்டினை இவர்கள் கடந்துவிட்டார்கள் எனத் தோன்றுகிறது. எங்கு பாலுணர்வு இருபால் தன்மைகளை கூசச்செய்து வெளிக்காட்டப்படுகிறதோ , அங்கு உரத்த குரலில் எதிர்ப்புகள் சொல்லப்படவேண்டும். மேல்மட்ட வர்க்கத்தினர் மட்டுமல்ல பார்வையாளர்கள்... தொலைக்காட்சிகளால் , அனைத்து தர மக்களின் வீட்டிலும் வழிகிறது இவ்விரசம்... அனைவருக்கும் அனைத்து நேரத்திலும் அழகுணர்வு என்னும் கோணத்தில் பார்க்க முடியும் என நினைப்பது சாத்தியமில்லை.

இம்மாடல் பெண்கள் மட்டுமல்ல அவமானப்பட்டது... பெண்ணினமே ஒரு வக்கிரமான ஆணாதிக்க பாலுணர்வு மிகுந்த கும்பலால் காட்சிப்பொருளாக சிதைபட்டது என்பது நிதர்சனம். இதற்கு இந்நிகழ்ச்சி நடத்துபவர்களும்,அவற்றிற்கு அதிகமான விளம்பரம் அளித்த ஊடகங்களும் தார்மீகப் பொறுப்பு ஏற்கவேண்டும்.

மேடையில் தவறாகச் செயல்பட்டது உடைகளல்ல... உடல் காட்டி வியாபாரம் செய்ய நினைக்கும் மனங்கள்...
என்று தணியும் இச்"சுதந்திர" தாகம்?

4 comments:

  1. டிவி பார்க்கும் பொது பெற்றோர்களின் மேற்ப்பார்வை அவசியம்.

    ReplyDelete
  2. அன்பின் நாகு,
    பின்னூட்டத்திற்கு நன்றி. மேற்பார்வை அவசியம்தான். எத்தனைதான் மேற்பார்வை பார்ப்பீர்கள்? FTV போன்ற சேனல்களைத் தடுக்கலாம். சில நிகழ்ச்சிகளை நாம் சாதாரணமாகப் பார்க்கும் சேனல்களில் தெரிந்தபோது மாற்றலாம்..
    செய்தி சேனல்கள்? இவை இதுபோன்ற காட்சிகளைக் காட்டுமுன் அறிவிப்பு செய்யலாம்.. பயங்கரமான கோரமான காட்சிகளைக் காட்டுமுன் அறிவிப்பதைப்போல. அதுவும் செய்யவில்லை. எப்போது பார்த்தாலும் இதேதான் எல்லாச் சேனல்களிலும் ஆஜ்தக் முதல் ஜீ டிவி வரை.
    நமக்கு பொறுப்பு உள்ளது.. மறுக்கவில்லை. ஊடகங்களுக்கும் பொறுப்பு உண்டு.
    வியாபாரம் மட்டுமல்ல விவஸ்தையும் எங்களுக்கு பெரிதுதான் என்பதை ஊடகங்கள் இதுவரை நிரூபிக்கவில்லை.
    அன்புடன்
    க.சுதாகர்.

    ReplyDelete
  3. சுதா,

    அமெரிக்காவில் அந்த பெண் செய்தது வேண்டுமேன்றே என்கிறார்கள்.அது ஒருபுறமிருக்க நம் மீடியாவின் ஈரல் கெட்டு பலகாலம் ஆகின்றது.

    ReplyDelete
  4. //நம் மீடியாவின் ஈரல் கெட்டு பலகாலம் ஆகின்றது.//

    அருமையான சாடல்! உண்மையும் கூட. கரோல் கிரேசியாஸ்ஸின் ஆடை நழுவியது விபத்து என்கிறார்கள்.ஆனால் கெகேர் கான் உள்ளாடை அணியாது வந்தது ஃபாஷன் உலகிலும் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
    மொத்தத்தில் வக்கிரங்கள் அரங்கேறுகின்றன....நவீனம், கலை என்னும் பெயர்களில்.எது நவீனம் எது ஆபாசம் என்னும்மெல்லிய கோடு மறைந்து வருவது கண்கூடு.
    பேசப்போனால் பழமைவாதி என முத்திரை குத்தப்படுவோம்.
    ஆமாம்... இந்த ஊடக அரசியலை ஏன் பெண்விடுதலைக் குழுக்களும் கண்டிக்கவில்லை?
    அன்புடன்
    க.சுதாகர்

    ReplyDelete