Wednesday, April 30, 2014

எம் டி என் எல்லும் இணைய எதிர்பார்ப்பும்.

பிரதமராக யார் வந்தாலும் ஒரு எதிர்பார்ப்பை முன் வைக்கிறேன். இந்த பாழாய்போன MTNL போன்றவற்றை அதானிக்கோ, அம்பானிக்கோ வதேராவுக்கோ விற்றுவிடுங்கள் இல்லேன்னா இலவசமாகவாது கொடுத்துவிடுங்கள். புண்ணியமாகப் போகும்.
15 நாளாச்சு. இதுவரை மஹாநகர் டெலிபோன் கனெக்‌ஷன் + broadband வரவில்லை. போன சனிக்கிழமைக்கு முந்திய சனிக்கிழமை விண்ணப்பம் செய்தபோது, பார்கோடு லெக்சரெல்லாம் செய்தவர்கள் , விண்ணப்பத்தை பதிவு செய்து வொர்க் ஆர்டர் தயாரிக்கும் நேரத்தில் கணனிகள் நின்றுவிட்டன . “ கனெக்டிவிடி இல்ல சார்” இவங்களுக்கே இல்லன்னா, வாடிக்கையாளர்கள் கதி? சரி போவுது என்று நினைத்திருக்கும்போது “ திங்கள் செவ்வாயில் வந்துடும்” என்றார்.
ஓட்டுப் போட்டிருந்தால் 200 ரூபாய் கழிவு வேறு என்று போர்டு பார்த்தேன். அதைக் கேட்டால் அசடு வழிந்து, “சிஸ்டம்ல வரலை. வந்தா பாக்கறேன்” என்றார். 'அப்புறம் எதுக்கு போர்டு வச்சிருக்கீங்க?' என்றால், 'அது மார்கெட்டிங்க் சமாச்சாரம். எங்களுக்கு சம்பந்தமே இல்லை' என்றார்கள்.
திங்கள்லேர்ந்து வெள்ளி வந்தது. போன் வர்ற வழியாக் காணோம். இந்த லட்சணத்துல, இருந்த ஏர்ட்டெல் கனெக்‌ஷனையும் கத்தரித்துவிட்டேன். அரசனை நம்பி, புருஷனை கை விட்ட கதையாப் போச்சே என நினைத்திருந்தேன். இருந்த ஏர்ட்டெல் ப்ராட்பேண்ட்-உம் போய்விட டாட்டா டோக்கோமோவில் எப்பவாவது இணையம்.
சனிக்கிழமை போய்க் கேட்கும்போது அந்தப் பெண்மணி இல்லை. அந்த நாற்காலியில் இருந்த ஒரு மனிதர் அடுக்கி வைத்திருந்த பல விண்ணப்பப் படிவங்களில் தேடி உதட்டைப் பிதுக்கினார்.” நீங்க கொடுத்துட்டுத்தான் போனீங்களா? வேற எக்ஸ்சேஞ்சுக்கு போயிட்டீங்களோ? எதுக்கும் அடுத்த பில்டிங்க்ல, ரெண்டாவது மாடியில, பவார்-ன்னு ஒருத்தர்...”
நான் கோபமாக சொல்ல எத்தனிக்குமுன் , அருகிலிருந்த மேசை டிராயரை அவர் காஷுவலாகத் திறக்க... எனது விண்ணப்பப் படிவமும், செக் இதழும்.. “ சார். இதான் சார் என்னோடது” என்றேன். அவர் திகைத்துப் போய் அடுத்திருந்த பெண்ணிடம் “ இதப் பாத்தீங்களா?” என்றார். அவர் இல்லை என்றார்.
“ டிராயர்ல வச்சிருந்தா அவங்க எப்படி வொர்க் ஆர்டர் போடமுடியும்?” என்றார் லாஜிக்காக என்னிடம். “ நானா சார் வைக்கச் சொன்னேன்? எனக்கு கனெக்‌ஷன் ஏன் கொடுக்கலைன்னு கேட்டா, உங்க தப்புக்கு என்கிட்ட ஏன் கேக்கறீங்க? என்றேன் குரலை உயர்த்தி.
மனிதர் ” எலக்‌ஷன் டூட்டிக்குப் போறதுக்கு முன்னாடி அந்தம்மா இது இங்க இருக்குன்னு சொல்லலைங்க. அதான் நானும் பாக்கலை” என்றார். அடுத்த 10 நிமிடத்தில் ஒரு dot matrix printer கொண்டு, லேசாகத் தெரிகின்ற மையில் அடித்த இரு கம்ப்யூட்டர் பேப்பர்களைக் கொடுத்தார். “ அடுத்த வாரம் வந்துடும். சாரி சார். அந்தம்மா மறந்துடுச்சு. “ என்றார்.
“அடுத்த வாரம்னா?”
“ திங்கள் இல்லே செவ்வாய். நிச்சயமா”
திங்களிலும் வரவில்லை. நேற்று ஒருத்தர் வந்து “ட்யூட்டி முடிஞ்சு போச்சு. மறந்துட்டேன். சரி, நாளைக்கு வந்து கனெக்‌ஷென் கொடுத்துடறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
இன்றும் வரலை. நாளை மே தினம். சாதாரண நாட்களிலேயே வேலை செய்யாதவர் நாளையா செய்யப் போகிறார்?
MTNL க்கு மறதிக்கு மருந்தான ப்ரம்மி மாத்திரைகளை சப்ளை செய்யும் காண்ட்ராக்ட் எடுக்கலாமோ?
ஏர் இந்தியா விமானம் சரியான நேரத்துக்கு வரும் என்பது போல ப்ராட்பேண்ட்-ஐ எதிர்பார்த்திருக்கிறேன்.
Waiting for the Godot.

Thursday, April 24, 2014

சிறியன சிந்தியாதான்

"தாயென உயிர்க்கு நல்கித் தருமமும் தகவும் சால்பும்
நீயென நின்ற நம்பி!நெடிது நீ நோக்கும் நோன்மை
நாயென நின்ற எம்மால் நவையற உணரலாமே?!
’தீயன பொறுத்தி’ என்றான், சிறியன சிந்தியாதான்”

- வாலி வதைப் படலம்.
இறக்கும் தருவாயில் கிடக்கும் வாலி, இராமனிடம் வாதம் செய்து, இலக்குவன் நடுவே புகுந்து ஒரு விளக்கமும் அளித்த பின்னர், வாதத்தை நிறுத்திக் கொண்டு சொல்கிற வார்த்தைகள் இவை.



’சிறியன சிந்தியாதான்’ என்ற அற்புத புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். வாலி வாதம் & வாலி வதம் குறித்த அருமையான தகவல்களும், சிந்தனைப் பாங்குகளுமாக திரு.எஸ்.இராமகிருஷ்ணன் தந்திருக்கும் பெருஞ்செல்வப் பெட்டகம் அது. 1957ல் வெளிவந்து 1967 வரை மறுபதிப்பு கண்ட புத்தகம் திடீரென மறைந்து விட்டது. இப்போது மீண்டும் வந்திருக்கிறது. https://www.nhm.in/shop/100-00-0000-727-6.html இல் கிடைக்கிறது.

இந்த பாடல் வரை இராமனுக்கும் வாலிக்கும் நடக்கும் விவாதத்தை கம்பரின் சொல்லாட்சியையும், அதில் இரு சாரருக்கும் நடுவே நின்று, இருவரின் வாதங்களிலும் சீர் தூக்கிப் பார்க்கும் சிந்தனை செய்து, நம்மையும் ஆ என வாயைப் பிளக்க வைக்கும் திரு. இராம கிருஷ்ணன் அவர்களின் எழுத்து மாட்சியில் வியந்து வணங்கி நிற்கிறேன்.

இந்த பாடலுக்குப் பின் அவர் இரு வார்த்தைகளைக் கொண்டு விளக்குகிறார். ’தீயன பொறுத்தி” ,  “ நெடிது நோக்கும் நோன்மை” ( தீர்க்கதரிசனமாக பின் வருங்காலத்தின் நிகழ்வுகளை முன்னே அறியும் திறமை).
இராமன் வாலியைக் கொன்றதற்குச் சொன்ன காரணங்களை வாலி ஏற்றுக் கொள்ளவில்லை. இளைய பெருமாளான இலஷ்மணன் சொன்ன விளக்கத்தையும் ஏற்கவில்லை. வாலி சுக்ரீவனை  அவன் காலில் விழுந்தபின்னும் அடித்ததும், அவன் மனைவியான உருமையைக் கவர்ந்ததும் அவனது விலங்கு வழக்கப்படி குற்றமல்ல. மிஞ்சிப் போனால், நீதி அறிந்த ஒருவனுக்கு அது குறையாகும். கொல்லும் அளவுக்கு அது குற்றமாகாது என்கிறார் ஆசிரியர்.

பின்னே இராமன்  கொன்றது சரி என்று வாலி எப்படி ஏற்றுக் கொண்டான்?

வாலி அக்னி சாட்சியாக , இராவணனிடம் தோழமையும் அவனுக்கு உதவி செய்யவும் உறுதி பூண்டது, நீதி அறிந்த ஒரு மன்னனுக்கு அழகல்ல. இராவணன் பிறரை வருத்தும் போது, அவனை விட வலியனான வாலி, இராவணனை அடக்கி பிறரைக் காத்திருக்கவேண்டும். அதை விடுத்து தன் கிட்கிந்தையில் மட்டும் தனது வலிமையைக் காட்டி ஆட்சி செய்தது ஒரு குற்றமாகிறது.

ஒரு அரசன் தீய செயல்களை விட்டுவிடுவது மட்டுமல்லாது, நல்லது அனைத்தையும் தன் கடைமையாகச் செய்யவேண்டும். இதில் வாலி பிறழ்ந்து விட்டான். ஒரு தீய நட்பைத் தேடியது இழுக்கைத் தருகிறது. ஒரு குற்றமாகிறது. தண்டனை கிடைக்கிறது. வாலியே இதனைச் சொல்கிறான் “என் பழம்வினைத் தண்டமே அடியனேற்கு உறுபதம் தருவதே”   அவனது தீச்செயலின் தண்டனை அவனுக்கு வைகுந்தம் அளிக்கிறதாம்! என்ன ஒரு தீர்க்கமான, தெளிவான சிந்தனை?!இறக்கும் தருவாயிலும், தனது குறைகளை எண்ணி, இதனால் வந்த விளைவு என்று பெரிதாக எண்ணுவதால் அவன் ’சிறியன சிந்தியாதான்”.

 நாளை இராம இராவண யுத்தம் நடக்கும்போது, தோழனாக வாலி , இராவணன் பக்கம் நின்று போரிட வேண்டி வரும். தருமத்தின் பாதையை எதிர்த்து நிற்க வேண்டி வரும். இதனை தொலைநோக்குப் பார்வையாக இராமன் கருதியே , தன்னை இப்போதே கொன்றான் என்று வாலி எண்ணுகிறான். இராவணனுடன் தோழமை கொண்ட ‘தீயன பொறுத்தி” என்கிறான்.

புத்தக முடிவில் ஆசிரியர் வியக்கிறார் “ எப்பேர்ப்பட்ட மாவீரன் இறந்துவிட்டான்?!” நாமும் தாரை போல் திகைத்துப் போகிறோம் “ தேறேன் யானிது , தேவர் மாயமோ? வேறோர் வாலி கொலோ விளிந்துளான்?”  ( நான் இதை நம்ப மாட்டேன். தேவர்கள் செய்யும் மாயைச் சூழ்ச்சியோ?வேறு ஒரு வாலிதான் இறந்து கிடக்கிறான். என் வாலி அல்ல)

நம் வாலி என்றும் சாகான்.

என்னிடம் இருப்பது ‘67ம் வருடத்திய பிரதி. பழைய எழுத்து வடிவம், சிக்கென இருக்கும் பழைய எழுத்துரு... Nostalgic. பம்பாய்த் தமிழ்ச்சங்க நூலகத்திற்கு நன்றிகள். 

Saturday, April 19, 2014

பார் கோடு படுத்தும் பாடு.


காலங்காத்தாலேயே எனது டீலரும் வெகுநாள் நண்பணுமானவன் போன் செய்தான் “ *** லேர்ந்து ராவ் போன் பண்ணினார். நம்ம டெண்ட்ரை ரிஜெக்ட் பண்றாங்களாம். நம்ம சாப்ட்வேர் டெக்னிகலா அவங்க தேவையை பூர்த்தி செய்யலைன்னாரு” அதெப்படி? அவரை டெலெகான்ஃபரன்ஸில் அவன் இழுக்க, மூவருமாக உரையாடினோம்
“ உங்க சாப்ட்வேர்ல பார் கோடு இருக்கா?” என்னமோ உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?ங்கற மாதிரி ஆரம்பித்தார்.
“சார். இதெல்லாம் ஸ்டாண்டர்ட் செயல்பாடுகள். எல்லாம் இருக்கு” அதுவும் இரு பரிமாண பார் கோடு வேறு கொடுத்திருக்கிறோம். பிறரெல்லாம் ஒரு பரிமாணத்தில் இருக்கும்போது.
“ எங்க? போடலயே உங்க கொட்டேஷன்ல?”
இதெல்லாம் எழுதப் போனா நாலு பாக்ஸ் ஃபைல் சைஸில் ஒரு கொட்டேஷன் வருமென்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. இல்லை, புரிய முயற்சிக்கவே இல்லை.
வழக்கம்போல “ கவெர்மெண்டு பாருங்க. எல்லாம் முறைப்படி இருக்கணும். இப்ப இந்த விவரத்தோட, என் சீனியர்கிட்ட கொடுப்பேன். அவர் கையெழுத்துப் போட்டு, டிஜிஎம் கிட்ட கொடுப்பாரு. அவர்கிட்டேயிருந்து பர்ச்சேஸ். அப்புறம்..: அரசாங்கம் என்ற இயந்திரத்திடம் வேலை செய்ய அசாத்தியப் பொறுமை வேணும்.
அவருக்கு ஒரு பரிமாண பார் கோடு ( நாம் சாதாரணமாகப் பார்ப்பது ஒரு நேர் கோட்டில் ஒல்லியாகவும், தடியாகவும் இருக்கும் சிறு கோடுகள்) இருபரிமாண பார் கோடு ( ஒரு கட்டம் போல ஒன்றில் கச்சா முச்சா என இருக்கும்) வித்தியாசம் தெரியவில்லை. எவனோ காம்பெடிஷனில் ஒருவன் நேராக ஒரு பார் கோடை போட்டு, அதையே செங்குத்தாகவும் வரைந்து, இதுதான் இரு பரிமாண பார் கோடு என்று அடித்துச் சொல்ல மனிதர் நம்பியிருக்கிறார். நான் எடுத்துச் சொல்லச் சொல்ல மறுத்தார்.
”சரி, உங்க கிட்ட 2டி பார்கோடு இல்லை. கோடு 39 என்ற ஸ்டாண்டர்ட் இருக்கா?”
பற்றிக் கொண்டு வந்தது எனக்கு “ இருக்கு. சார், 2 டி க்கு இதெல்லாம் தேவையில்லை. எவனோ உங்களை குழப்பி...”
“அதெல்லாம் இல்லை. எனக்குத் தெரியும். நீங்க குழப்பறீங்க இப்ப.” என்றார் கோபத்தோடு.
என் டீலர் இடைப் புகுந்தார் “ சார், ஒரு பரிமாணத்துக்கே கோடு 39 Standard வேணும்னா, இரு பரிமாணத்துக்கு அதை விட அதிகமா வேணுமில்லையா?” நான் திகைத்துப் போனேன். இவன் என்ன புதுக் கதை விடுகிறான்.?
“ஆமா “ என்றார் ராவ் , சற்றே யோசித்து.
“நாங்க கோடு 128 standard என்று ஒன்றூ தருகிறோம். பாருங்க, 39 -ஐ விட பல மடங்கு அதிகம்.”
ஒரு நிமிடம் மவுனம். ராவ் பின் உயிர்த்து “ கரெக்ட். நீங்க அதிகம் தர்றீங்க. உங்களுக்கு இது அட்வாண்ட்டேஜ். சரி நான் கம்பேரிஸன் எழுதி சார்கிட்ட கொடுத்துடறேன்” என்று போனை வைத்தார்.
“என்னடா இது? இப்படிச் சொல்லறியே? கோடு 128 இப்போ எல்லாரும் கொடுக்கலாம். அதுவும் 2 டி பார்கோடுல இது எங்க இருந்து வந்தது?”
அவன் தடுத்தான் “ ஒன்னு புரிஞ்சுக்க. இது ஆனைக்கு அல்வா அரைக்கிலோ கணக்கு”
பழங்காலத்தில் , அரசு அலுவலகத்தில், ஆயிரம் ரூவாய்க்கு கணக்கு இடிக்கிற்து என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு அல்வா ரசீது ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, செலவின் விவரத்திற்கு “ ஆனைக்கு அல்வா அரைக்கிலோ கொடுத்த மேனிக்கு - ஆயிரம் ரூவாய்” என்று எழுதினால் போதும் என்பார்கள். ரசீது வேண்டும், விவரம் வேண்டும். ஆனை அல்வா திங்குமா? அதுவும் அரைக்கிலோவுக்குஆயிரம் ரூவாயா? என்றெல்லாம் கேட்கமாட்டார்கள் அரசாங்கத்தில். இப்படி ஒரு சொல்வழக்கு. அதை ராவ் இன்று நிரூபித்தார்.
சரி. முடிந்தது என, MTNL -ன் Broad band சேவை மீண்டும் எடுத்துக் கொள்ள படிவம் வாங்கப் போயிருந்தேன். அவர்கள் வலைத்தளத்தில் ஒரு போட்டோ, நீங்கள்கூட நம்புவதற்கரிய போட்டோ இருக்கும் ஆதார் அட்டை காப்பிகள் போதும் என்று சொல்லியிருந்தாலும், அங்கு போனதும், எதிர்பார்த்தபடியே “ எலக்ட்ரிஸிடி பில், வாட்டர் பில் எதாச்சும் இருந்தா கொண்டுவாங்க” என்றார்.
ஆதார் அட்டையைப் பார்த்ததும் ஒரு ப்ச் கொட்டி திருப்பித் தந்தார். அந்த அளவுக்கு மோசமாகவா இருக்கேன்?
“ இதுல ஒரு பார் கோடு இருக்கும்,. அதுவும் வேணும். சும்மா அவங்க சொன்னாங்கன்னு க்ரெடிட் கார்டு சைஸ்ல கிழிச்சிருக்கீங்க. செல்லாது” என்றார் அப்பெண்மணி.
“இதுலதான் என் மூஞ்சி பக்கத்துலயே ஒரு 2 டி பார் கோடு இருக்கே? அதோட, கீழ ஒரு நம்பர் வேற இருக்கு. அதை டைப் பண்ணினாலே என் டேட்டா முழுதும் வந்துடும்”
என்றெல்லாம் சொன்னதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
"தப்புங்க, நீங்க சொல்றது. பார் கோடுன்னா என்னன்னு தெரியுமா? இந்த பிக் பஜர்ர், ரிலையன்ஸ் மார்ட்ல எல்லாம் ஒரு ஸ்கேனர் வச்சு , சின்னதா ஒரு லேபிலை சிவப்பு லைட்ல அடிப்பாங்க பாருங்க...” ஒரு பேப்பரைத் தேடி எடுத்து, பால்பாயிண்ட் பேனால்வால் சில கோடுகளைக் கீற்றினார். ‘ இப்படி இருக்கும்”
இனிமே யாராவது பார் கோடு என்றால் ஓடிவிடவேண்டும்.

Monday, April 14, 2014

அவார்டுக்கு எப்படி எழுதுவது?

ரைட்டு. இனி எழுத்து எப்படி இருக்கவேண்டுமென்று பார்ப்போம். விருதுக்கு என்றால், முன், பின் நவீனத்துவ, சர்ரியலிஸ பாணிகளை விழுங்கிவிட்டிருக்க வேண்டும். புக்கர் கிடைத்த புத்தக்ங்கள் வாசிக்கவும். 

“அவன் காலையில் வாசலுக்கு வந்து தெருவைப் பார்த்தான்” என்று ஒரு வரியில் எழுதக் கூடாது. 

வரிக்கு வரி சமூக அவலத்தினை அப்பட்டமாக வெளிக்கொணர்ந்து, அதிர்ச்சியை, படிப்பவன் மூஞ்சியில் அறைவது போல் கொடுக்கவேண்டும். மேற்கண்ட வார்த்தையை ஞானபீடம் வேண்டுமென்றால் “ கிராமத்தின் அந்த சாலை, வெறியுடன் புணர்ந்து விலகிச் சென்ற மனிதர்கள் விட்டுச் சென்ற படுக்கை போல அலங்கோலமாக்க் கிடந்தது. தெருவின் ஓரமான சாக்கடையில் நிர்வாணமாய் ஒரு குழந்தை குத்திட்டு மலங்கழித்துக் கொண்டிருக்க, அதன் பின் , வைக்கோல் போரில் பண்ணையார், வேலைக்காரியை ***** ( எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு கூசுகிற மாதிரி எழுதுங்கள். அவார்ட் வேணுமா வேண்டாமா?). மூடியது போலத் திறந்திருந்த கதவை மூடியபடி திறந்து வெளிவந்த அவன், எதிரே இருந்த யாளித் தூணைக் கவனித்தான். காலங்காலமாக அது அங்கு இருந்து வருவதை அவன் அறிவான். ஒவ்வொரு முறையும், அந்த யாளியுன் முகம் கோபமாக அன்றி, ஏதோ யானை விழுங்கி, மலச்சிக்கலில் திணறும் முகமாகவே அவனுக்குப் பட்டது. இந்த சிந்தனையை அவன் பகிர்ந்தபோது, முதலாளித்துவ பூர்ஷ்வாக்கள் யாளியின் கால்களுக்கு இடையில் அவனைக் கட்டி வைத்தனர். யாளியின் மூத்திர நெடியில் அவன் மூச்சு கொதித்த்தை அவர்கள் உணர்ந்தவரில்லை எனினும், அந்த சதுர வட்டத்துளினின்று அவன் கட்டுடைத்து வெளியேறும் நாள் அருகிவிட்டது என்பதை, காலைச் சூரியனின் கறுநிற ஒளி நிழலில் கண்டிருந்தனர். “

இப்படியெல்லாம் எழுதுவதை விட்டுவிட்டு, நான் புரிய்ற மாதிரித்தான் தமிழ்ல எழுதுவேன் என்று அடம் பிடித்தீர்களென்றால்... welcome to the victims group.

தமிழ் நாவல்? கோட்டி பிடிச்சிறுச்சா?

நண்பர் திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர் நாவல் எழுதப் போவதாக அறிவித்திருக்கிறார். அதுவும் தமிழ் நாவல்.

நல்லா இருந்த ஒரு மனுசன் இப்படி நிம்ஹான்ஸ் கேஸ் ஆகிப்போய்விடுவாரோ என்ற பயத்தில்தான் இந்த பதிவை எழுதுகிறேன். 

முதலில் எதற்கு எழுதுகிறோம்? என்று தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். ஞானபீட, சாகித்ய அகாடமி கனவு என்றால் முதலில் பேனாவை மூடி வைத்துவிடுங்கள். முன்னேற்பாடுகள் பல செய்யவேண்டும் அதற்கு.

1. யாருக்கும் புரியாத, ஆனால் பரிசு வாங்கியிருக்கிற கதைகளை வாங்கிவையுங்கள். படிக்கவெல்லாம் சொல்லவில்லை. நீங்கள் படிக்க அவர்கள் எழுதவுமில்லை. அந்த பெயர்களை அங்குமிங்கும், பேஸ்புக்கில் அவ்வப்போது எடுத்து விடவேண்டும்.

2.முடிந்தால் த.மி.தா நினைவு பள்ளியின் 7 பி செக்சனில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கும், ஜெய்ப்பூர் லிட்டெரெரி பெஸ்டிவலுக்கும் போய்வரவும். அருந்த்தி ராய், எதோவொரு பெங்காலி எழுத்தாளர் கூட எடுத்த போட்டோக்களை பேஸ்புக்கில் போட்டு :என்ன பாக்கியம் செய்தேன்? என்று எமோஷனலாக எழுதவும்.

3. குறிப்பிட்டு ஒரு மத த்தை தாக்கி எழுதவும். அருந்ததி , மேதா போன்றவர்கள் எழுதிய ரிவ்யூக்களுக்கு ரிவ்யூ எழுதவும். இதை சொந்த காசில் சூனியம் வைத்து ப்ரசுரிக்கவும். எவரும் படிக்கமாட்டார்கள். அது பத்தி நமக்கு என்ன கவலை? இந்த ப்ரசுரங்களை சோஷியல் மீடியாக்களில் ப்ரகடனம் செய்யவும்.

4. வாய்ப்பு கிடைத்தால் மோதியை அடிக்கவும். இல்லை அவர் நல்லவர்னு நினைக்கறேன் என்று சொல்பவர்களை அடிக்கவும். இப்போ ஒரு நல்ல சான்ஸ். க்ரூஸ் என்பவரை ரவுண்டு கட்டி அடிக்க முனைந்திருக்கிறார்கள். உடனே சேர்ந்து, அவர் மீது துப்பிய எச்சிலில் எனது எச்சிலும் இருக்கிறது என்பதை டி.என்.ஏ பரிசோதனை மூலமும் நிறுவ வேண்டும்.

இப்படி செய்தால் ஒரு வட்டம், அல்லது வட்டத்தினை புகழ்ந்து நிற்கும் மற்றொரு முட்டாள் வட்டம் இவற்றில் சேரமுடியும். இந்த இரண்டும் இல்லாவிட்டால், இந்துத்வ எதிர்ப்பு என்ற வெறுப்பை உமிழ்ந்து கொண்டே இருக்கவும். இளிச்ச்ச் வாயன் எவனாவது கிடைத்தால் அவன் சுவற்றில் உங்கள் வெறுப்பை நக்கலாகவோ, தார்மீக கோபத்தோடோ தெரிவிக்கவும். ஆங்! இப்ப நீங்க அங்கீகரிக்கப் பட்டுவிட்டீர்கள்.

'சரி, என்னவே எழுதணும்? அதை சொல்றதை விட்டுட்டு என்னமோ சளம்பிக்கிட்டிருக்கீரே?” என்று கேட்காதீர்கள். என்ன எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல. யார் சார்ந்து எழுதுகிறோம் என்பதுதான் தமிழ்ச் சூழலில் முக்கியம்.

பெண்ணொருத்தி வந்தால்....

”நானும் வந்தேதான் ஆகணுமா,?” என்ற அந்தப் பெண்ணை வியப்புடன் பார்த்தேன். அவர் அப்படியெல்லாம் சொல்கிற ரகமில்லை. இளம் வயதிலேயே அனுபவமிக்க ஆலோசகர். 2003ம் வருடத்திய ப்ராஜெக்ட் அவார்ட் ஒன்று பெற்றவர்.

“நீ வராமல் , அந்த கிழட்டு சர்தார் ஆர்டர் கொடுக்கமாட்டாம்-மா. ஒரு நாள் தகவல் சேகரிக்க , அடுத்தநாள் ப்ரசெண்டேஷன் கொடுக்க என்று ரெண்டு நாள் போதும். இப்ப வேற ப்ராஜெக்ட்ல நீ பிஸி இல்லையே?”
“இல்ல. ஆனா..” என்று இழுத்துவிட்டு ‘ சரி “ என்றார். ஒரு தடவை அந்த நடுத்தர அளவிலான எஞ்சினீயரிங் டிஸைன் கம்பெனிக்குப் போய் வந்திருக்கிறார், எனக்கு முன்பு.

மும்பையின் புறநகர்ப் பகுதி ஒன்றில், கரடு முரடான சாலையில் ஒரு பழைய மில் காம்ப்பவுண்ட் ஒன்றினுள் அந்த கம்பெனி இருந்தது. வாடிக்கையாளர்கள் கேட்டவித்த்தில், கருவிகளோ, அதன் பாகங்களோ டிஸைன் செய்து, ப்ரோட்டோ டைப் கொடுப்பார்கள். சரியாக வந்துவிட்டால், பின்னர் முழு தயாரிப்பும் நடக்கும். வெளிநாட்டு , வணிகம் கணிசம்.

தாங்கள் செய்யும் வேலைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருப்பதால் நாட்கள் அதிகமாகிறதோ என்ற எண்ணம் உருப்படியாக சிலருக்கு உதிக்க, எங்களை, அவர்களுக்கு வேண்டியது போல மென்பொருள் ஒன்றை உருவாக்கித் தரச் சொல்லியிருந்தார்கள். 2002-ல் தொடங்கி ஒரு வருடமாகப் பேச்சு வார்த்தை நடந்து, இறுதியில் எங்களை ஒரு சாம்பிள் workflow ஒன்றை உருவாக்கிக் காட்டப் பணித்திருந்தனர். கிழட்டு சர்தாரை நான் ஒரு முறைதான் சந்தித்திருக்கிறேன். பலமாக சிரிப்பார். சர்தார்ஜிகளூக்கே உண்டான திறந்த பேச்சு, உரத்த குரல், விலை என்று வரும்போது புலியாக பேரம் பேசுதல்...விடுங்கள்.

நானும் , ஆலோசகரும் அங்கு போனபோது காலை ஷிப்ட் ஷிப்ட் முடிந்து ஆட்கள் வெளிவந்து கொண்டிருந்தனர். பெண்கள் ஒரு குழுவாக இருந்து மொத்தமாக வெளிவந்து ஓட்டமும் நடையுமாக பஸ் நிறுத்த்த்திற்கு விரைந்தனர். சாலையின் ஓரம் விளக்குக் கம்பங்கள் சாய்திருந்தன. மாலை ஷிப்ட் ஆட்கள் நுழைய வேண்டும்.
சர்தார்ஜியின் அறையில் நிபுணர் அமைதியாக அமர்ந்திருந்தார். சர்தாரின் பேச்சு பொதுவாக இருந்தாலும், பார்வை அவர்மீதே இருந்தது. ஜொள்ளுக்கு வயதில்லை.

“நீ வேணுமான, ஷிப்ட் இன் சார்ஜ்கிட்ட தேவைகள் பத்தி பேசப் போலாம்மா” என்றார் சர்தார். நிபுணர் அமைதியாக எழுந்து வெளியேறினார். இன்னும் இருவர் வந்து சேர, சர்தாரின் அறைக்கு அடுத்த கான்பரன்ஸ் அறையில் புகுந்தோம். நான் கம்பெனியின் தோற்றம் வளர்ச்சி, நாலு வருட பைனான்ஷியல் புள்ளி விவரம் (சற்றே ஜோடிக்கப் பட்டவை) குறித்து அளந்து கொண்டிருந்தேன்.
இத்தனை வருட அனுபவத்தில் தெரியும் ஒரு விவரம் - நீங்கள் கார் கேரேஜில் கம்பெனி தொடங்கி நாலு பில்டிங் வாங்கிப் போட்ட்தையும், இரு பணியாளர்களோடு தொடங்கிய கம்பெனி இன்று 200 பேர் அமெரிக்காவில் ( 150 பெஞ்ச் -இல்) இருப்பதையும் ஒரு பயலும் கேட்கமாட்டான். சுத்த வேஸ்ட். நேராக பாயிண்ட்டுக்கு வந்துவிடுங்கள்.

எனது செல்போன் அதிர, மன்னிப்புக் கேட்டபடி எடுத்துப் பார்த்தேன். மெஸ்ஸேஜ்? அதுவும் என் நிபுணரிடமிருந்து? ..” Please come out. Urgent" என்ற வகையில். அதிர்ந்து போனாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல் ’ஒரு நிமிடம்’என்றபடி வெளியே வந்தேன். அவர் கண்களில் நீர் கட்டியிருந்தது.

“இந்த ப்ராஜெக்ட் வேணாம் சுதாகர். இவங்க.. நடத்தை சரியில்ல. போன தடவையே கவனிச்சேன். மேல வந்து விழறது, கையப் பிடிக்கறது. தொட்டுக் கூப்பிடறது... இன்னிக்கு அவங்க ரூம்ல பேசிட்டிருக்கும்போதே, கொஞ்சம் விரசமா ஜோக்.. அதுவும் இன்னொருத்தனும் சேந்துகிட்டு..”

”ஆல் ரைட். நான் சர்தார் கிட்ட பேசிக்கறேன். டீம் பூரா ஆம்பளைங்களாப் போட்டுறலாம்.”

“இல்ல. ப்ராஜக்ட விட்டுறலாம்-ங்கறேன். இங்க வேலை பாக்கற பொம்பளைங்களும் ரகசியமா சொன்னாங்க. பைசா கொடுக்க மாட்டாங்களாம். வேணும்னே அது இதுன்னு சொல்லி, லீகல் கேஸ் வரை போவாங்களாம். பார்ட்டி , விட்டாப் போதும்னு ஒடவைப்பாங்களாம். இதுக்கு முன்னாடி மூணு கம்பெனி விட்டுட்டுப் போயிருக்காங்க. பொம்பளைங்களுக்கு பாதுகாப்பே கிடையாதுங்கறாங்க”

நான் அமைதியாக இருந்தேன். என் டார்கெட்-ல் பெரிசாக ஓட்டை விழும். அமதாபாத்தில் பாஸ் குதியோ குதி என்று குதிப்பான்.

உள்ளே நுழைந்தேன். “ ஸாரி, என்னோட வந்தவருக்கு அவசரமாக மற்றொரு ப்ராஜெக்ட்டில் அவசர அழைப்பு வந்திருக்கிறது. எனவே அவர் இப்பவே போகிறார்”

“அப்ப டெமோ?” என்றார் சர்தார் கோபமாக. “ நாளைக்கு , அடுத்த நாள் வந்து டெமோ கொடுக்கச் சொல்லுங்க. நீங்க அனாவசியமா வரவேணாம்”.

“அத அப்புறம் பேசலாம்” எனத் தவிர்த்தேன். பின் சர்தாரின் அறைக்குச் சென்றபின் அவரது பேச்சைக் கூர்ந்து கவனித்தேன். அடிக்கடி ஒரு ஜோக். அதுவும் சற்றே X ரேட்டிங். அருவருக்கக் கூடியதில்லை எனினும் பெண்கள் இருக்கையில் பேசும் பேச்சல்ல. அவரோ மிகவும் வெளிப்படையாக , பெண் சூபர்வைஸர் வ்ந்து நிற்கும்போதும் ஜோக்குகளை வீசினார். கூட இருப்பவர்கள் எடுத்து விட, தனது கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்களின் பெயர் கொண்டே சில ஜோக்குகள். எனக்கு ஓரளவு கம்பெனியின் தரம் புரியத் தொடங்கியது.

இரு நாட்கள் கழித்து சர்தாரிடமிருந்து போன் வந்தது.. “ ஸாரி” என்றேன். “ எங்கள் முழு டீம், மற்றொரு ப்ராஜெக்டில் ஈடுபட்டுவிட்ட்து. அடுத்த ப்ராஜெக்ட் நாங்கள் எடுக்க இன்னும் ஆறுமாதமாகும்” சர்தார் திட்டியபடி போனை வைத்தார். அமதாபாதில், எனது பாஸ்-க்கும் அவரது தலைவருக்கும், ஹெச். ஆர் தலைவருக்கும் ஏன் இந்தப் ப்ராஜெக்ட் நாம் எடுக்க்க் கூடாது? என்பதை விளக்கி ஒரு மின்ன்ஞ்சல் அனுப்பினேன். அனைவருமே அந்த முடிவை ஆதரித்தனர். வேறு ப்ராஜெக்ட் கிடைக்காமலா போய்விடும்?. ஆர்டகளுக்கு, இன்னும் கொஞ்சம் கூடுதலாக நாய் மாதிரி சுத்தணும். ஆனா நாய் மாதிரி எல்லா எலும்புத் துண்டுக்கும் வாலாட்டக் கூடாது.

11 வருடங்களின் பின் இன்று அதே வளாகத்தில் சென்றிருந்தேன். அந்தக் கம்பெனி அங்கு இப்பொது  இல்லை. தெருக்கள் அகலமாக, விளக்குக் கம்பங்கள் சீராக இருந்தன. ஒவ்வொரு கம்பெனியின் நுழைவாயிலிலும், உள்ளே கட்டிடங்களின் சுவர்களிலும்,” வேலை செய்யுமிடத்தில் பாலியல் வன்கொடுமை, சீண்டுதலுக்கு ஆளாகிறீர்களென்றால், பயப்படாமல், எங்களிடம் பேசுங்கள்” என்று பெரிய சுவரொட்டிகள் , செல்போன் எண்களுடன், மனித வள துறை அதிகாரியின் மின்னஞ்சல் விவரங்களுடன்...மாலை ஷிப்ட்டில் பெண்கள் எவரும் இல்லை.
Anathakrishnan Pakshirajan பி.ஏ.கே சார் டிவியில் சொன்னது போல் எதிர்காலம் இன்னும் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை வருகிறது. எங்கிருந்து எங்கு வந்துவிட்டோம்! இன்னும் போகலாம். போகவேண்டும்.

ஜெய வருடம் நம்பிக்கையையும், தைரியத்தையும் தரட்டும்.

Tuesday, April 08, 2014

திறமைக்கு என்ன விலை?

அந்தப் பிரபலமான தனியார் மருந்து தயாரிக்கும் கம்பெனியின் கார்ப்பரேட் அலுவலகத்தில் நானும் என் விற்பனைத்துறைப் பிரிவு நண்பர்களும்  அமர்ந்திருந்தோம். இரண்டு நாட்கள் முன்புதான் ஆர்டர் தருவதாகச் சொல்லி இனிக்க இனிக்கப் பேசி வாக்குறுதி கொடுத்திருந்தார்கள். இன்று காலை ஒரு போன் “ சேர்மன், ஆர்டரை நிறுத்தி வைச்சுட்டாரு. வந்து பேசுங்க.”
என்னமோ ஏதோவென அடித்துக் கொண்டு  வந்திருந்தோம். மார்ச் இறுதி வேறு, ஆர்டர்கள்  வராவிட்டால் வீட்டில் அடுப்பு எரியாது.

இத்தனைக்கும் அவர்கள் எங்களது பழைய வாடிக்கையாளர்கள். நிறைய கருவிகள் எங்களிடமிருந்து வாங்கியிருக்கிறார்கள். என்ன திடீரென்று? எனத் தெரியவில்லை. காம்படிஷன் , விலையைக் குறைத்துவிட்டானோ?
”சேர்மன் கூப்பிடறாரு” வந்து சொன்ன பர்ச்சேஸ் ஆபீஸர் முகத்தில் ஈ ஆடவில்லை. எங்களுக்கு பரிந்து பேசப்போய் அவர் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் போலும். சேர்மன் ஒரு பஞ்சாபி. தங்க கோதுமை நிறம். பாக்கிஸ்தான் பிரிவினையில் மூல்தானிலிருந்து நடந்தே இந்தியா வந்தவர். இங்கு போராடி ஜெயித்து... இப்போதும்  கம்பீரம் குறையாத, பார்த்தவுடன் மதிப்பை ஏற்படுத்திவிடும் முகவெட்டு.
பெரிய விலையுயர்ந்த மர டேபிளின் மறுபுறம் அவர் கோட்டு சூட்டுடன் அமர்ந்திருந்தார். தங்கமெனப் பளபளக்கும் இரு நீண்ட ஃபவுண்டன் பேனாக்கள் அவரது டேபிளில்  தற்கொலை செய்து கொண்டிருப்பதைப் போல தலைகுத்தி நின்றிருந்தன. மிக விலையுயர்ந்தவை. இன்றும் அவர் கையெழுத்து, ஃபவுண்டன் பேனாவில்தான் இடப்படும். அவர் பின்னால் சுவரில் பெரிய ஓவியம். Souza , மேத்தா என்று யாராவது இருக்கும். அதெல்லாம் பார்க்கும் நிலையில் நாங்களில்லை.
“சார். கூப்பிட்டீஙகளாமே?” தயங்கித் தயங்கி விற்பனைத்துறை நண்பர் தொடங்கினார். எனக்கு சேர்மனை வெகுகாலமாகத் தெரியும். ஆனால் இன்று கண்டுகொள்ளாத்து போல் காட்டிக் கொண்டார். புரிந்தது - பேரம் பேசப் போகிறார் மீண்டும்.

“என்னயா கொட்டேஷன் கொடுத்திருக்கே?” சேர்மன் ஒரு காகித்த்தை தூக்கி எங்கள் முன் போட்டார். கோபம் காகிதம் தொப் என விழுந்ததில் , எங்கள் மேலே தெறித்தது.
“சரியாத்தான் சா...”
சேர்மன் பேசி முடிக்க விடவில்லை. விடமாட்டார் எப்பவும்
“என்ன சரி? கடைசி ஐட்டம் பாரு.”
“ ட்ரெயின்ங் மெட்டீரியல். இது புதுசா சேர்ந்திருக்கவங்களுக்கு வேணும்னு...”
“ அது ஷிப்மெண்ட்ல வராது. டவுன்லோட் பண்ணனும்னு போட்டிருக்கே?”
“ஆமா, இதெல்லாம் ஈ. புக் சார். ஆன் லைன்லயும் ட்ரெயினிங்க் எடுக்கலாம். எப்ப வேணும்னாலும் அவங்க விட்ட எடத்துலேர்ந்து தொடர்ந்து, எத்தனை தடவை வேணும்னாலும் படிக்கலாம்.”
“முந்தியெல்லாம், உங்க ஷிப்மெண்ட்ல தடி தடியா, வழுவழுன்னு பேப்பர்ல அச்சு போட்டு புக் வரும். அதுக்கு விலை அதிகம். நீ பைசா கேட்டே, நியாயம். இப்ப என்னடான்னா, நீ ஒரு இ மெயில் அனுப்பிவியாம். அங்? அதுல யூஸர் பெயர், பாஸ்வேர்டுன்னு கொடுப்பியாம். நான் அதை வச்சு, உன் வலைத்தளத்துலேர்ந்து டவுன்லோடு பண்ணனுமாம்.”
“கரெக்டு சார். இப்பவே வேணும்னாலும் டவுன்லோடு பண்ணலாம். கருவி வர்றதுக்கு முன்னாடியே இவங்க பயிற்ச்சி “
 “ ஒரு இ மெயிலுக்கு இத்தனை டாலரா? கொள்ளை அடிக்கறீங்க. ஒரு பிரிண்ட் செலவு, பைண்டிங்க் செலவு, பேப்பர் செலவு, அனுப்புற செலவு கிடையாது. இதுக்கு எதுக்கு இவ்வளவு டாலர் கொடுக்கணும்? வுடு. ஆர்டர் கேன்ஸல் பண்றேன்”
விற்பனைத் துறை நண்பர் சங்கடமானார். இந்த முதியவருக்கு எப்படி புரிய வைப்பது. அதுவும் சேர்மன்,.. ரொம்ப பேசவும் முடியாது. பரிதாபமாகத் திரும்பிப் பார்த்தார்.
“சார்” என்றேன். “என்னை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்..”

“ நீ என்ன சொல்லப் போற? ஏன் அதே விலைன்னு விளக்கமெல்லாம் சொல்லாதே. எனக்கு நேரமில்லை”
“ அதில்ல சார். உங்க கிட்ட முந்தி ஒரு எம்.எஃப் ஹூசைன் ஓவியம் இருக்கும். அதைக் காணமேன்னு கேக்க..”
“இங்க” என்றார்,  மார்பில் தொட்டுக் காட்டியபடி, புன்னகைத்து.
“ அதுல  இருக்கிற மெட்டீரியலை தனியா விலை போட்டா எவ்வளவு இருக்கும் சார்? தங்க முலாம் விட்டுறுங்க. ப்ரேம் சார்ஜ் தனியா..”
“ஹ ஹா” சிரித்தார் “ இதெல்லாம் இருக்கிற மெட்டீரியலுக்கு மதிப்பில்லை மேன்.அதெல்லாம் அந்த திறமைக்கு மதிப்பு.”
“இந்த ட்ரெயினிங்க் மெட்டீரியல் புத்தகமெல்லாம், கடைக்குப் போட்டா மிஞ்சிப் போனா நூறு ரூவா கிடைக்கும். ஆனா , நீங்க பத்தாயிரம் கொடுத்து வாங்கினீங்க போன வாட்டி”
” ஸோ?” என்பது போல பார்த்தார்.
“ 9990 ரூபா, அத எழுதினவனோட திறமைக்குக் கொடுத்தீங்க. இல்லையா.? அதே திறமைதான் சார் இந்த ஈ புக்லயும் இருக்கு. நீங்க முந்தி கொடுத்த விலைதான் இப்பவும் கேக்கறோம். “
அவர் சற்று நேரம் விழிகளில் ஊடுருவினார். மணியை ஒலித்து ப்யூனை வரவழைத்து”சாய் - நாலு” என்றார். நாங்கள் பெருமூச்சு விட்டோம். மனிதர் சஹஜமாகிவிட்டார். ஆர்டர் பிழைத்த்து. நாங்கள் பிழைத்தோம்.


எதுக்கு சொல்ல வந்தேன்? ஆங். ” மின் புத்தகங்களுக்கு ஏன் சார் இவ்வளவு விலை? இலவசமாக, இல்லே மிகவும் மலிந்த விலையில் , கொடுக்கவேண்டியதுதானே? பேப்பர் விலை, அச்சடிக்கும் விலை, விற்பனைக் கூடத்தின் விலை என்று ஒன்றுமே இல்லையே இதில்?”  என்று சிலர் கேட்டிருந்தனர்.