Tuesday, April 08, 2014

திறமைக்கு என்ன விலை?

அந்தப் பிரபலமான தனியார் மருந்து தயாரிக்கும் கம்பெனியின் கார்ப்பரேட் அலுவலகத்தில் நானும் என் விற்பனைத்துறைப் பிரிவு நண்பர்களும்  அமர்ந்திருந்தோம். இரண்டு நாட்கள் முன்புதான் ஆர்டர் தருவதாகச் சொல்லி இனிக்க இனிக்கப் பேசி வாக்குறுதி கொடுத்திருந்தார்கள். இன்று காலை ஒரு போன் “ சேர்மன், ஆர்டரை நிறுத்தி வைச்சுட்டாரு. வந்து பேசுங்க.”
என்னமோ ஏதோவென அடித்துக் கொண்டு  வந்திருந்தோம். மார்ச் இறுதி வேறு, ஆர்டர்கள்  வராவிட்டால் வீட்டில் அடுப்பு எரியாது.

இத்தனைக்கும் அவர்கள் எங்களது பழைய வாடிக்கையாளர்கள். நிறைய கருவிகள் எங்களிடமிருந்து வாங்கியிருக்கிறார்கள். என்ன திடீரென்று? எனத் தெரியவில்லை. காம்படிஷன் , விலையைக் குறைத்துவிட்டானோ?
”சேர்மன் கூப்பிடறாரு” வந்து சொன்ன பர்ச்சேஸ் ஆபீஸர் முகத்தில் ஈ ஆடவில்லை. எங்களுக்கு பரிந்து பேசப்போய் அவர் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் போலும். சேர்மன் ஒரு பஞ்சாபி. தங்க கோதுமை நிறம். பாக்கிஸ்தான் பிரிவினையில் மூல்தானிலிருந்து நடந்தே இந்தியா வந்தவர். இங்கு போராடி ஜெயித்து... இப்போதும்  கம்பீரம் குறையாத, பார்த்தவுடன் மதிப்பை ஏற்படுத்திவிடும் முகவெட்டு.
பெரிய விலையுயர்ந்த மர டேபிளின் மறுபுறம் அவர் கோட்டு சூட்டுடன் அமர்ந்திருந்தார். தங்கமெனப் பளபளக்கும் இரு நீண்ட ஃபவுண்டன் பேனாக்கள் அவரது டேபிளில்  தற்கொலை செய்து கொண்டிருப்பதைப் போல தலைகுத்தி நின்றிருந்தன. மிக விலையுயர்ந்தவை. இன்றும் அவர் கையெழுத்து, ஃபவுண்டன் பேனாவில்தான் இடப்படும். அவர் பின்னால் சுவரில் பெரிய ஓவியம். Souza , மேத்தா என்று யாராவது இருக்கும். அதெல்லாம் பார்க்கும் நிலையில் நாங்களில்லை.
“சார். கூப்பிட்டீஙகளாமே?” தயங்கித் தயங்கி விற்பனைத்துறை நண்பர் தொடங்கினார். எனக்கு சேர்மனை வெகுகாலமாகத் தெரியும். ஆனால் இன்று கண்டுகொள்ளாத்து போல் காட்டிக் கொண்டார். புரிந்தது - பேரம் பேசப் போகிறார் மீண்டும்.

“என்னயா கொட்டேஷன் கொடுத்திருக்கே?” சேர்மன் ஒரு காகித்த்தை தூக்கி எங்கள் முன் போட்டார். கோபம் காகிதம் தொப் என விழுந்ததில் , எங்கள் மேலே தெறித்தது.
“சரியாத்தான் சா...”
சேர்மன் பேசி முடிக்க விடவில்லை. விடமாட்டார் எப்பவும்
“என்ன சரி? கடைசி ஐட்டம் பாரு.”
“ ட்ரெயின்ங் மெட்டீரியல். இது புதுசா சேர்ந்திருக்கவங்களுக்கு வேணும்னு...”
“ அது ஷிப்மெண்ட்ல வராது. டவுன்லோட் பண்ணனும்னு போட்டிருக்கே?”
“ஆமா, இதெல்லாம் ஈ. புக் சார். ஆன் லைன்லயும் ட்ரெயினிங்க் எடுக்கலாம். எப்ப வேணும்னாலும் அவங்க விட்ட எடத்துலேர்ந்து தொடர்ந்து, எத்தனை தடவை வேணும்னாலும் படிக்கலாம்.”
“முந்தியெல்லாம், உங்க ஷிப்மெண்ட்ல தடி தடியா, வழுவழுன்னு பேப்பர்ல அச்சு போட்டு புக் வரும். அதுக்கு விலை அதிகம். நீ பைசா கேட்டே, நியாயம். இப்ப என்னடான்னா, நீ ஒரு இ மெயில் அனுப்பிவியாம். அங்? அதுல யூஸர் பெயர், பாஸ்வேர்டுன்னு கொடுப்பியாம். நான் அதை வச்சு, உன் வலைத்தளத்துலேர்ந்து டவுன்லோடு பண்ணனுமாம்.”
“கரெக்டு சார். இப்பவே வேணும்னாலும் டவுன்லோடு பண்ணலாம். கருவி வர்றதுக்கு முன்னாடியே இவங்க பயிற்ச்சி “
 “ ஒரு இ மெயிலுக்கு இத்தனை டாலரா? கொள்ளை அடிக்கறீங்க. ஒரு பிரிண்ட் செலவு, பைண்டிங்க் செலவு, பேப்பர் செலவு, அனுப்புற செலவு கிடையாது. இதுக்கு எதுக்கு இவ்வளவு டாலர் கொடுக்கணும்? வுடு. ஆர்டர் கேன்ஸல் பண்றேன்”
விற்பனைத் துறை நண்பர் சங்கடமானார். இந்த முதியவருக்கு எப்படி புரிய வைப்பது. அதுவும் சேர்மன்,.. ரொம்ப பேசவும் முடியாது. பரிதாபமாகத் திரும்பிப் பார்த்தார்.
“சார்” என்றேன். “என்னை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்..”

“ நீ என்ன சொல்லப் போற? ஏன் அதே விலைன்னு விளக்கமெல்லாம் சொல்லாதே. எனக்கு நேரமில்லை”
“ அதில்ல சார். உங்க கிட்ட முந்தி ஒரு எம்.எஃப் ஹூசைன் ஓவியம் இருக்கும். அதைக் காணமேன்னு கேக்க..”
“இங்க” என்றார்,  மார்பில் தொட்டுக் காட்டியபடி, புன்னகைத்து.
“ அதுல  இருக்கிற மெட்டீரியலை தனியா விலை போட்டா எவ்வளவு இருக்கும் சார்? தங்க முலாம் விட்டுறுங்க. ப்ரேம் சார்ஜ் தனியா..”
“ஹ ஹா” சிரித்தார் “ இதெல்லாம் இருக்கிற மெட்டீரியலுக்கு மதிப்பில்லை மேன்.அதெல்லாம் அந்த திறமைக்கு மதிப்பு.”
“இந்த ட்ரெயினிங்க் மெட்டீரியல் புத்தகமெல்லாம், கடைக்குப் போட்டா மிஞ்சிப் போனா நூறு ரூவா கிடைக்கும். ஆனா , நீங்க பத்தாயிரம் கொடுத்து வாங்கினீங்க போன வாட்டி”
” ஸோ?” என்பது போல பார்த்தார்.
“ 9990 ரூபா, அத எழுதினவனோட திறமைக்குக் கொடுத்தீங்க. இல்லையா.? அதே திறமைதான் சார் இந்த ஈ புக்லயும் இருக்கு. நீங்க முந்தி கொடுத்த விலைதான் இப்பவும் கேக்கறோம். “
அவர் சற்று நேரம் விழிகளில் ஊடுருவினார். மணியை ஒலித்து ப்யூனை வரவழைத்து”சாய் - நாலு” என்றார். நாங்கள் பெருமூச்சு விட்டோம். மனிதர் சஹஜமாகிவிட்டார். ஆர்டர் பிழைத்த்து. நாங்கள் பிழைத்தோம்.


எதுக்கு சொல்ல வந்தேன்? ஆங். ” மின் புத்தகங்களுக்கு ஏன் சார் இவ்வளவு விலை? இலவசமாக, இல்லே மிகவும் மலிந்த விலையில் , கொடுக்கவேண்டியதுதானே? பேப்பர் விலை, அச்சடிக்கும் விலை, விற்பனைக் கூடத்தின் விலை என்று ஒன்றுமே இல்லையே இதில்?”  என்று சிலர் கேட்டிருந்தனர்.

No comments:

Post a Comment