Saturday, April 19, 2014

பார் கோடு படுத்தும் பாடு.


காலங்காத்தாலேயே எனது டீலரும் வெகுநாள் நண்பணுமானவன் போன் செய்தான் “ *** லேர்ந்து ராவ் போன் பண்ணினார். நம்ம டெண்ட்ரை ரிஜெக்ட் பண்றாங்களாம். நம்ம சாப்ட்வேர் டெக்னிகலா அவங்க தேவையை பூர்த்தி செய்யலைன்னாரு” அதெப்படி? அவரை டெலெகான்ஃபரன்ஸில் அவன் இழுக்க, மூவருமாக உரையாடினோம்
“ உங்க சாப்ட்வேர்ல பார் கோடு இருக்கா?” என்னமோ உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?ங்கற மாதிரி ஆரம்பித்தார்.
“சார். இதெல்லாம் ஸ்டாண்டர்ட் செயல்பாடுகள். எல்லாம் இருக்கு” அதுவும் இரு பரிமாண பார் கோடு வேறு கொடுத்திருக்கிறோம். பிறரெல்லாம் ஒரு பரிமாணத்தில் இருக்கும்போது.
“ எங்க? போடலயே உங்க கொட்டேஷன்ல?”
இதெல்லாம் எழுதப் போனா நாலு பாக்ஸ் ஃபைல் சைஸில் ஒரு கொட்டேஷன் வருமென்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. இல்லை, புரிய முயற்சிக்கவே இல்லை.
வழக்கம்போல “ கவெர்மெண்டு பாருங்க. எல்லாம் முறைப்படி இருக்கணும். இப்ப இந்த விவரத்தோட, என் சீனியர்கிட்ட கொடுப்பேன். அவர் கையெழுத்துப் போட்டு, டிஜிஎம் கிட்ட கொடுப்பாரு. அவர்கிட்டேயிருந்து பர்ச்சேஸ். அப்புறம்..: அரசாங்கம் என்ற இயந்திரத்திடம் வேலை செய்ய அசாத்தியப் பொறுமை வேணும்.
அவருக்கு ஒரு பரிமாண பார் கோடு ( நாம் சாதாரணமாகப் பார்ப்பது ஒரு நேர் கோட்டில் ஒல்லியாகவும், தடியாகவும் இருக்கும் சிறு கோடுகள்) இருபரிமாண பார் கோடு ( ஒரு கட்டம் போல ஒன்றில் கச்சா முச்சா என இருக்கும்) வித்தியாசம் தெரியவில்லை. எவனோ காம்பெடிஷனில் ஒருவன் நேராக ஒரு பார் கோடை போட்டு, அதையே செங்குத்தாகவும் வரைந்து, இதுதான் இரு பரிமாண பார் கோடு என்று அடித்துச் சொல்ல மனிதர் நம்பியிருக்கிறார். நான் எடுத்துச் சொல்லச் சொல்ல மறுத்தார்.
”சரி, உங்க கிட்ட 2டி பார்கோடு இல்லை. கோடு 39 என்ற ஸ்டாண்டர்ட் இருக்கா?”
பற்றிக் கொண்டு வந்தது எனக்கு “ இருக்கு. சார், 2 டி க்கு இதெல்லாம் தேவையில்லை. எவனோ உங்களை குழப்பி...”
“அதெல்லாம் இல்லை. எனக்குத் தெரியும். நீங்க குழப்பறீங்க இப்ப.” என்றார் கோபத்தோடு.
என் டீலர் இடைப் புகுந்தார் “ சார், ஒரு பரிமாணத்துக்கே கோடு 39 Standard வேணும்னா, இரு பரிமாணத்துக்கு அதை விட அதிகமா வேணுமில்லையா?” நான் திகைத்துப் போனேன். இவன் என்ன புதுக் கதை விடுகிறான்.?
“ஆமா “ என்றார் ராவ் , சற்றே யோசித்து.
“நாங்க கோடு 128 standard என்று ஒன்றூ தருகிறோம். பாருங்க, 39 -ஐ விட பல மடங்கு அதிகம்.”
ஒரு நிமிடம் மவுனம். ராவ் பின் உயிர்த்து “ கரெக்ட். நீங்க அதிகம் தர்றீங்க. உங்களுக்கு இது அட்வாண்ட்டேஜ். சரி நான் கம்பேரிஸன் எழுதி சார்கிட்ட கொடுத்துடறேன்” என்று போனை வைத்தார்.
“என்னடா இது? இப்படிச் சொல்லறியே? கோடு 128 இப்போ எல்லாரும் கொடுக்கலாம். அதுவும் 2 டி பார்கோடுல இது எங்க இருந்து வந்தது?”
அவன் தடுத்தான் “ ஒன்னு புரிஞ்சுக்க. இது ஆனைக்கு அல்வா அரைக்கிலோ கணக்கு”
பழங்காலத்தில் , அரசு அலுவலகத்தில், ஆயிரம் ரூவாய்க்கு கணக்கு இடிக்கிற்து என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு அல்வா ரசீது ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, செலவின் விவரத்திற்கு “ ஆனைக்கு அல்வா அரைக்கிலோ கொடுத்த மேனிக்கு - ஆயிரம் ரூவாய்” என்று எழுதினால் போதும் என்பார்கள். ரசீது வேண்டும், விவரம் வேண்டும். ஆனை அல்வா திங்குமா? அதுவும் அரைக்கிலோவுக்குஆயிரம் ரூவாயா? என்றெல்லாம் கேட்கமாட்டார்கள் அரசாங்கத்தில். இப்படி ஒரு சொல்வழக்கு. அதை ராவ் இன்று நிரூபித்தார்.
சரி. முடிந்தது என, MTNL -ன் Broad band சேவை மீண்டும் எடுத்துக் கொள்ள படிவம் வாங்கப் போயிருந்தேன். அவர்கள் வலைத்தளத்தில் ஒரு போட்டோ, நீங்கள்கூட நம்புவதற்கரிய போட்டோ இருக்கும் ஆதார் அட்டை காப்பிகள் போதும் என்று சொல்லியிருந்தாலும், அங்கு போனதும், எதிர்பார்த்தபடியே “ எலக்ட்ரிஸிடி பில், வாட்டர் பில் எதாச்சும் இருந்தா கொண்டுவாங்க” என்றார்.
ஆதார் அட்டையைப் பார்த்ததும் ஒரு ப்ச் கொட்டி திருப்பித் தந்தார். அந்த அளவுக்கு மோசமாகவா இருக்கேன்?
“ இதுல ஒரு பார் கோடு இருக்கும்,. அதுவும் வேணும். சும்மா அவங்க சொன்னாங்கன்னு க்ரெடிட் கார்டு சைஸ்ல கிழிச்சிருக்கீங்க. செல்லாது” என்றார் அப்பெண்மணி.
“இதுலதான் என் மூஞ்சி பக்கத்துலயே ஒரு 2 டி பார் கோடு இருக்கே? அதோட, கீழ ஒரு நம்பர் வேற இருக்கு. அதை டைப் பண்ணினாலே என் டேட்டா முழுதும் வந்துடும்”
என்றெல்லாம் சொன்னதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
"தப்புங்க, நீங்க சொல்றது. பார் கோடுன்னா என்னன்னு தெரியுமா? இந்த பிக் பஜர்ர், ரிலையன்ஸ் மார்ட்ல எல்லாம் ஒரு ஸ்கேனர் வச்சு , சின்னதா ஒரு லேபிலை சிவப்பு லைட்ல அடிப்பாங்க பாருங்க...” ஒரு பேப்பரைத் தேடி எடுத்து, பால்பாயிண்ட் பேனால்வால் சில கோடுகளைக் கீற்றினார். ‘ இப்படி இருக்கும்”
இனிமே யாராவது பார் கோடு என்றால் ஓடிவிடவேண்டும்.

No comments:

Post a Comment