Wednesday, April 30, 2014

எம் டி என் எல்லும் இணைய எதிர்பார்ப்பும்.

பிரதமராக யார் வந்தாலும் ஒரு எதிர்பார்ப்பை முன் வைக்கிறேன். இந்த பாழாய்போன MTNL போன்றவற்றை அதானிக்கோ, அம்பானிக்கோ வதேராவுக்கோ விற்றுவிடுங்கள் இல்லேன்னா இலவசமாகவாது கொடுத்துவிடுங்கள். புண்ணியமாகப் போகும்.
15 நாளாச்சு. இதுவரை மஹாநகர் டெலிபோன் கனெக்‌ஷன் + broadband வரவில்லை. போன சனிக்கிழமைக்கு முந்திய சனிக்கிழமை விண்ணப்பம் செய்தபோது, பார்கோடு லெக்சரெல்லாம் செய்தவர்கள் , விண்ணப்பத்தை பதிவு செய்து வொர்க் ஆர்டர் தயாரிக்கும் நேரத்தில் கணனிகள் நின்றுவிட்டன . “ கனெக்டிவிடி இல்ல சார்” இவங்களுக்கே இல்லன்னா, வாடிக்கையாளர்கள் கதி? சரி போவுது என்று நினைத்திருக்கும்போது “ திங்கள் செவ்வாயில் வந்துடும்” என்றார்.
ஓட்டுப் போட்டிருந்தால் 200 ரூபாய் கழிவு வேறு என்று போர்டு பார்த்தேன். அதைக் கேட்டால் அசடு வழிந்து, “சிஸ்டம்ல வரலை. வந்தா பாக்கறேன்” என்றார். 'அப்புறம் எதுக்கு போர்டு வச்சிருக்கீங்க?' என்றால், 'அது மார்கெட்டிங்க் சமாச்சாரம். எங்களுக்கு சம்பந்தமே இல்லை' என்றார்கள்.
திங்கள்லேர்ந்து வெள்ளி வந்தது. போன் வர்ற வழியாக் காணோம். இந்த லட்சணத்துல, இருந்த ஏர்ட்டெல் கனெக்‌ஷனையும் கத்தரித்துவிட்டேன். அரசனை நம்பி, புருஷனை கை விட்ட கதையாப் போச்சே என நினைத்திருந்தேன். இருந்த ஏர்ட்டெல் ப்ராட்பேண்ட்-உம் போய்விட டாட்டா டோக்கோமோவில் எப்பவாவது இணையம்.
சனிக்கிழமை போய்க் கேட்கும்போது அந்தப் பெண்மணி இல்லை. அந்த நாற்காலியில் இருந்த ஒரு மனிதர் அடுக்கி வைத்திருந்த பல விண்ணப்பப் படிவங்களில் தேடி உதட்டைப் பிதுக்கினார்.” நீங்க கொடுத்துட்டுத்தான் போனீங்களா? வேற எக்ஸ்சேஞ்சுக்கு போயிட்டீங்களோ? எதுக்கும் அடுத்த பில்டிங்க்ல, ரெண்டாவது மாடியில, பவார்-ன்னு ஒருத்தர்...”
நான் கோபமாக சொல்ல எத்தனிக்குமுன் , அருகிலிருந்த மேசை டிராயரை அவர் காஷுவலாகத் திறக்க... எனது விண்ணப்பப் படிவமும், செக் இதழும்.. “ சார். இதான் சார் என்னோடது” என்றேன். அவர் திகைத்துப் போய் அடுத்திருந்த பெண்ணிடம் “ இதப் பாத்தீங்களா?” என்றார். அவர் இல்லை என்றார்.
“ டிராயர்ல வச்சிருந்தா அவங்க எப்படி வொர்க் ஆர்டர் போடமுடியும்?” என்றார் லாஜிக்காக என்னிடம். “ நானா சார் வைக்கச் சொன்னேன்? எனக்கு கனெக்‌ஷன் ஏன் கொடுக்கலைன்னு கேட்டா, உங்க தப்புக்கு என்கிட்ட ஏன் கேக்கறீங்க? என்றேன் குரலை உயர்த்தி.
மனிதர் ” எலக்‌ஷன் டூட்டிக்குப் போறதுக்கு முன்னாடி அந்தம்மா இது இங்க இருக்குன்னு சொல்லலைங்க. அதான் நானும் பாக்கலை” என்றார். அடுத்த 10 நிமிடத்தில் ஒரு dot matrix printer கொண்டு, லேசாகத் தெரிகின்ற மையில் அடித்த இரு கம்ப்யூட்டர் பேப்பர்களைக் கொடுத்தார். “ அடுத்த வாரம் வந்துடும். சாரி சார். அந்தம்மா மறந்துடுச்சு. “ என்றார்.
“அடுத்த வாரம்னா?”
“ திங்கள் இல்லே செவ்வாய். நிச்சயமா”
திங்களிலும் வரவில்லை. நேற்று ஒருத்தர் வந்து “ட்யூட்டி முடிஞ்சு போச்சு. மறந்துட்டேன். சரி, நாளைக்கு வந்து கனெக்‌ஷென் கொடுத்துடறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
இன்றும் வரலை. நாளை மே தினம். சாதாரண நாட்களிலேயே வேலை செய்யாதவர் நாளையா செய்யப் போகிறார்?
MTNL க்கு மறதிக்கு மருந்தான ப்ரம்மி மாத்திரைகளை சப்ளை செய்யும் காண்ட்ராக்ட் எடுக்கலாமோ?
ஏர் இந்தியா விமானம் சரியான நேரத்துக்கு வரும் என்பது போல ப்ராட்பேண்ட்-ஐ எதிர்பார்த்திருக்கிறேன்.
Waiting for the Godot.

1 comment: