Saturday, May 10, 2014

மலர் விழும் ஓசை

பூங்காவில் அன்று ஆட்கள் குறைவாக இருந்தனர். காலை ஆறு மணிக்கு வேனிற்காலத்தில் பூங்காவில் முன்னே செல்பவர்களின் காலில் இடறாமல் நடக்க முடியாது. சீக்கிரமே வந்துவிட்டேனோ? விறுவிறுவென இருபது நிமிடம் நடந்துவிட்டு, பெஞ்சில் அமர்ந்தேன். அட, இன்னிக்கு வந்திருக்காரே?
நடேசனுக்கு எழுபது இருக்கும். ஆனால் அறுபதுபோல் தெரிவார். நேரான உடல், பாண்ட் எயிட் வடிவத்தில் விபூதி பட்டை. அயர்ன் பண்ணின அரை டிராயர். அயர்ன் செய்த டீ ஷர்ட், ஒளிர் பச்சை நிற ரீபாக் காலணிகள். படு கச்சிதமான ஆடை அணிந்திருப்பார். ஏன், சாக்ஸ்கள் கூட ஒரே நீளத்தில் காலைத் தழுவியிருக்கும்.
மனிதர் மிலிடரியோ? என்று சந்தேகித்து ஒரு முறை கேட்டேன். டெல்லியில் ஏதோ மத்திய அரசின் பணித்துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். பூங்காவினை அடுத்து இருக்கும் பெரிய அடுக்கு மாடிக் கட்டிடத்தில் மகனுடன் இருக்கிறார். மகள் பெங்களூரில் என்பதால் இரண்டு நகரங்களுக்கும் நடுவே போய் வந்து கொண்டிருப்பார்.
‘சுத்தம், நேர்மை எல்லாம் ஒண்ணுதான். உடல் சுத்தமா இல்லாதவனால மனசுல நேர்மையா இருக்க முடியாது. நேர்மையா இல்லாதவன் சுத்தமா இருந்தாலும் செயற்கையா இருக்கும். அதி சுத்தமா எவன் இருக்கானோ அவனுக்கு உள்ளே எதோ சாக்கடை ஓடுதுன்னு அர்த்தம். நம்ம அரசியல்வாதிகளப் பாருங்க. வெளுத்த உடைகள், கதர், கஞ்சி போட்டு மொற மொறன்னு.. ஆனா உள்ளே?”
நான் சிரித்துக் கொண்டே வேறு பேச்சுகளுக்குத் தாவி விடுவேன். அவருக்கு என கொள்கைகளை வைத்திருப்பார். என்ன சொன்னாலும், செவி மடுப்பாரே தவிர ஏற்றுக் கொள்ளமாட்டார் ..
”மாடர்ன் தமிழ் லிட்ரேச்சர்? ம்.. பள்ளி கொண்டபுரம் படிச்சிருக்கேன். கொஞ்சம் நகுலன். என்ன சார் கல்கி, சாண்டில்யன் ? காதல் வீரம் இருந்தா கதையாயிடுமா? கதை படிக்கவே தமிழனுக்குத் தெரியாதுங்கறேன். ஜெயமோகன் நன்னா எழுதறான், கேட்டேளா? இப்ப யாரு சங்க இலக்கியம் பத்தி கதை ,கட்டுரைன்னு எழுதறா சொல்லுங்கோ? விஷ்ணுபுரம்னு ஒண்ணு எழுதியிருக்கானாமே? படிச்சிருக்கேளா?”
ஒரு முறை கம்பராமாயணம் பத்தி ஆரம்பித்தேன். அவர் பையிலிருந்து நாலாய் மடித்துவைத்திருந்த ஒரு காகிதத்தை எடுத்தார். “ குறுந்தொகை பாடல்கள். பத்து இருக்கு. ஒரு நாளைக்கு பத்து படிச்சிடறதுன்னு வச்சிருக்கேன். நற்றிணை முடிச்சாச்சு. குறுந்தொகையில ஒண்ணொண்ணும் முத்து கேட்டேளா? இதக் கேளுங்கோ, தலைவியோட காதல் பத்தி வீட்டாருக்கு சொல்லாம சொல்றா, அவ தோழி. என்னமா மறைச்சு சொல்றா?  அகவன் மகளே, அகவன் மகளே”
சங்கம் தவிர்த்து வேறு பேசமாட்டார் அவர் என்று தெரிந்ததும், மெல்ல தவிர்த்தேன். உறுதியான பாறைகள் கவர்கின்றனதான். ஆனால் பாறைகளோடு பேச முடிவதில்லை. அவற்றிற்கு மெல்லுணர்வு கிடையாது. சங்கப் பாடல்கள் அதன் உள்ளே ஓடும் நீரோட்டம் அவ்வளவே. சமூகம் குறித்தான மெல்லுணர்வுகள் பாறைகளுக்கில்லை.
’ஹலோ சார்’ என்றேன். அவர் கையை அசைத்து அருகில் அமரப் பணித்தார். பேசவில்லை. அப்போதுதான் கவனித்தேன். முகம் முழுதும் வேர்வை. கழுத்தில் ஒரு வியர்வைப் படலம் காலை வெயிலில் பளபளத்தது. கண்கள் சற்றே தளர்ந்திருந்தன.
“என்ன ஆச்சு சார்? “ பரபரத்தேன்.
“ஒன்றுமில்லை” என்றார் தீனமாக. “ ஷுகர் குறைஞ்சிருச்சு. பார்க் காவலாளிகிட்டே, வெளியே டீக் கடைலேர்ந்து கொஞ்சம் ஜீனி வாங்கிவரச் சொல்லியிருக்கேன். சரியாயிடும். உக்காருங்கோ”
அவர் நடுங்கும் கையால் என் மணிக்கட்டைப் பற்றினார். அவர் உள்ளங்கை சூடாக இருந்தது.”டாக்டர்கிட்ட போலாம். கொஞ்சம் கைத்தாங்கலா நடக்க முடியுமா? கார்ல  போயிடலாம்”
அதற்குள் வாட்ச்மேன் ஒரு காகிதத்தில் பொதிந்த சக்கரையுடன் ஓடி வர, அவர் நடுங்கும் கையால் சிறிது எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். அவன் கொடுத்த தண்ணீரைக் குடித்தவாறே சற்றே சாய்ந்தார். கூடிய சிறு கூட்டத்தை காவலாளி கலைக்க, நான் அவரருகே அமர்ந்து கொண்டேன்.
சார், வீட்டுக்குப் போயிரலாமா? பையன் நம்பர் சொல்லுங்க.“ அடுத்த பில்டிங்க் என்பதால் கைத்தாங்கலாக அழைத்துப் போய்விடலாம்.
“வேணாம்.” என்றவாறு தலையசைத்தார். “ அந்த  வீட்டில எந்திரங்கள்தான் இருக்கு. ஒண்ணு மல்ட்டி நேஷனல்ல வைஸ் ப்ரெஸிடெண்ட். இன்னொன்னு இன்வெஸ்ட்மெண்ட் பேங்க்கர். என் மனைவி ஓய்ந்து போன எந்திரம். நான் ஓயப் போற ஒண்ணு. பாக்டரிக்கு அப்புறம் போலாம் “
துணுக்குற்றேன். இப்படி அவர் பேசியதேயில்லை. அவர் குடும்பத்தைப் பற்றி அவர் இதுவரை ஒன்றும் சொன்னதில்லை. அவர் சற்றே தெளிவானதும் நிமிர்ந்து அமர்ந்தார்.
”குறுந்தொகை படிச்சிருக்கேளா சுதாகர்? ”
விடமாட்டார். அதுவும் இப்போதிருக்கும் நிலையில், குறுந்தொகை ஒன்றுதான் பாக்கி. ” அப்புறம் பேசலாம் சார். முதல்ல வீட்டுக்குப் போற வழியப் பாப்போம்.” வலுக்கட்டாயமாக அவரது பையனின் நம்பரை அவரிடமிருந்து வாங்கி, அழைத்து பார்க்கிற்கு வரச்சொன்னேன்.
“ குறுந்தொகையில ஒரு பாடல். எழுதினது…ஒக்கூர் மாசாத்தியாரா? மறந்துடுத்து. எனிவே.. தலைவிக்கு தூக்கம் வரலை. சொல்றா “ தோழி, ஊரெல்லாம் தூங்கிடுத்து. எனக்கு உணர்வுகள் முழுசும் முழிச்சிண்டிருக்கு. அவனானா, இன்னிக்கு ராத்திரி வர்றேன்னுட்டு, இன்னும் காணலை. இந்த வீட்லேர்ந்து கொஞ்ச தூரத்துல இருக்கிற மலைலே, மயிலோட காலடி மாதிரி இருக்கிற இலை கொண்ட நொச்சி மரத்திலேர்ந்து கொத்து கொத்தா நீலப் பூக்கள் இந்த இரவிலே உதிர்றது. அந்த மலர் உதிர்கிற ஓசை எனக்குக் கேக்கறதுடீ” ங்கறா. மலர் உதிர்கிற சத்தம் கேட்டிருக்கேளா சுதாகர்?”
“சார் அப்புறம் பேசலாம்”
“எங்க ஊர் குமிழி பக்கம். மலைக்காடு வீட்லேர்ந்து பாத்தா தெரியும். மலர் உதிர்ற ஓசை கிராமத்துல கூட கேக்கறது சிரமம். ராத்திரி திடீர்னு எருமை ம்மான்னு அலறும். சுவர்க்கோழி கத்திண்டே இருக்கும். இந்த இயற்கை ஓசையிலேயே மலர் விழறது கேக்காது. ஆனா, நம்ம உணர்வுகள் விழிச்சிருந்தா, காது தீட்டியிருந்தோம்னா கேக்கும். ஒரு பூ விழுந்தாக் கூட கேக்கும். கொத்தா பூ மலையில உதிர்ந்தா பெரிசாவே கேக்கும். யானை தோட்டத்துல நுழைஞ்சா மாதிரி..”
தூரத்தில் அவசரமாக யாரோ வருவது தெரிந்தது.
“ நகரத்துல இந்த பூ உதிர்ற சப்தம் நிச்சயமா கேக்காது. ஏகப்பட்ட இயந்திர இரைச்சல். அதோட நம்ம காதும் செவிடாயிடுத்து. நேர்மையான மனுஷாளா இருந்தா, சிசு உடல்ல ஜனனம் சேர்ற ஒலியும், உடல்ல மரணம் உரசற ஒலியும் கேக்கணும். அது எந்த ஜீவனாயிருந்தாலும் கேக்கணும். கிராமத்து மனுஷாளுக்குக் கேட்டது. எப்படி தூரத்துக் காட்டுல எந்த பூ விழுந்தாலும் அவளுக்கு கேக்கறதோ, ஒரு பூ விழுந்தாலும், ஆயிரம் பூக்கள் விழுந்தாலும் கேக்கறதோ, அதுமாதிரி. அதுக்கு உணர்வு விழிச்சிருக்கணும். இந்த பூ, அந்தப் பூ, இத்தனை பூக்கள் , அத்தனைப் பூக்கள் -னு பிரிக்கப் படாது. இப்படிப் பாகுபாடில்லாம இருந்தா அவள். அதான் முடியலை. என்னாலயும் முடியலை. பூ விழும் ஓசை படுத்தறது. இந்த எந்திரங்களின் இரைச்சலையும் மீறிக் கேக்கிற  மலர் உதிர்ற ஓசை பொறுக்காம அங்கேயிங்கே ஓடறேன். எங்க ஓடமுடியும்? திரும்பி வந்தா இரைச்சல்தான்.  குறுந்தொகை கொடூரமானது கேட்டேளா? “
“டாட் ,ஆர் யூ ஓகே?” என்றவர் என்னை விட ஐந்து வயது இளையவராக இருப்பார். விவரத்தைக் கூறினேன். கை குலுக்கி நன்றி தெரிவித்து விட்டு நடேசனை மெல்ல அழைத்துப் போனார்.
ஒரு ப்ரமை பிடித்த நிலையில் வீட்டுக்கு வந்தேன். வந்ததும் குறுந்தொகையில்  தேடினேன். அப்பாடலை எழுதியவர் கொல்லன் அழிசி.
“கொனூர் துஞ்சினும், யாம் துஞ்சலமே
எம்இல் அயலாது எழில் உம்பர்:
மயிலடி இலைய மாக்குரல் நொச்சி
அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே”
நேர்மை, சுத்தம், மென் உணர்வுகள்  கடுமையானவை. குறுந்தொகை கொடியது.

No comments:

Post a Comment