Saturday, May 10, 2014

ஆடுகளம்

ஜிம்-ல் வழக்கம்போல,நண்பன்  மனீஷ்  ட்ரெட்மில்லில் ப்ரோக்ராம் செய்து தந்தான். “இன்னிக்கு கொஞ்சம் ஸ்பீடும் கூட்டியிருக்கேன் நெஞ்சு வலிச்சா உடனே சொல்லு என்ன?”. நான்  புதிதாக ஜிம்மில் சேர்ந்த்தில் மனீஷுக்கு பெரும் பங்கு உண்டு. எப்படியும் வியர்க்க ஓடினால், சர்க்கரை நோய் பறந்துவிடும் என்று சத்தியம் செய்து தந்திருந்தான். இன்று ஆறாவது நாள்.
வியர்க்க வியர்க்க ஓடிக்கொண்டிருந்தவன், கால் வலியை மறக்க சற்றே நிலைக்கண்ணாடியில் பார்க்க, பின்னே ஒரு சைக்கிளில் பயிற்சி செய்துகொண்டிருந்த பெண் கண்ணில் பட்டாள். ஸ்லிம்மான , கட்டான உடல். மிகவும் டிப்பிகலான வட்டமான பெங்காலி முகம். பெரிய கண்கள்.
அவள் சிறிய பூத்துவாலையில் கழுத்தைத் துடைத்தபடியே , பயிற்சி கொடுப்பவரிடம் ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டிருந்தவன், திடீரென வேகம் கூடியதைக் கவனியாமல் தடுமாறிவிட்டேன். மனீஷ் பார்த்துவிட, சற்றே அசடுவழிந்து  சமாளித்தேன்.
” பாத்து, ஜொள்ளு விடாம வீட்டுக்கு ஒழுங்காப் போய்ச்சேரு.”
சட்டென கோபம் எழ “ அவ யாராயிருந்தா என்ன? இங்கதான் நிறைய டி.வி நடிகைகளையும், மாடல்களையும் பாக்கறோமே? இவ என்ன பெரிய அழகியா?” என்றேன்.
“ சுபாங்கியைப் பாத்துட்டு சும்மா போனவன் குறைவு மச்சான். அவ பக்கத்துல இப்ப ஒருத்தன் இருக்கான் பாரு.“ என்று கிசுகிசுத்தான் மனிஷ்.
பெரிதாக தொந்தியுடன் ஆறடி உயரத்தில் ஒரு வட நாட்டவன் அவளருகே நின்று பேசிக்கொண்டிருந்தான். அவளை அணைத்து முத்தமிட்டுப் பின் அவன் நிலை சைக்கிள் ஒன்றில் ஏறினான்.
“அவர் இப்ப ஓடிக்கிட்டிருக்கிற  பிரபல மாமியார் மருமகள் சீரியல்லோட இயக்குனர். இப்ப ஒரு லீடு ரோல்ல இருக்கற பெண்ணை எடுத்துட்டு சுபாங்கியைப் போடப் போறாங்களாம்” மனீஷ் பிலிம் சிட்டியினுள் பல செட்டுகளில் காண்ட்ராக்டுகள் எடுத்தவன். அவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
“ இந்த ரோலுக்கு அவ ஒரு வருஷமா அலைஞ்சா. ரெண்டு தடவை  அவர் பார்ட்னரோட கோவா, டெல்லியில ஃபார்ம் ஹவுஸ், அப்புறம் இவர்கூட தொடர்பு கிடைச்சதும், ஸ்பெயின்ல பத்துநாளு…”
அவள் வெளியேறும்போது நானும் மனீஷும் எனது காரில் ஏறிக்கொண்டிருந்தோம். ஸ்கூட்டியில் வந்த ஒருவன் அவளிடம் எதோ பேச, அவள் அவன் பின் ஏறிக்கொண்டாள்.
“ அவதான் அவ புருசன்” என்றான் மனீஷ் சீட் பெல்ட் அணிந்தவாறே. நான் அவனை அவன் சொசயிட்டியில் இறக்கிவிட்டுப் போனேன். மும்பையில் பிலிம் ஸிட்டியின் அருகே இருந்துவிட்டு, இதற்கெல்லாம் ஆச்சரியப் படமுடியாது. எங்கள் அபார்ட்மெண்ட்டிலேயே இரு பெண்கள் இருந்தனர்.சீரியலில் வருவார்கள் என்று சொன்னார்கள்.  பின்னர் ஓபாராய் அபார்ட்மெண்ட்டில் 1 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி சென்றுவிட்டனர்.
அடுத்த நாள் ஜிம் பயிற்சியாளர் எனது ட்ரெட்மில்லின் ப்ரோக்ராமை சரிசெய்தபோது அவள் உள்ளே வந்தாள். ஒரு கற்றை ரூபாய் நோட்டுகளை அவனிடம் கொடுத்துவிட்டு மெலிதான குரலில் “ ரிசீப்ட் அப்புறம் வாங்கிக்கறேன்” என்றாள். என்ன குரல்?! என்ன உடல் வாகு?! எப்படி இவள் இன்னும் ஒரு பெரிய ஹீரோயினாக வரவில்லை?
சுபாங்கி சீக்கிரமே சென்றுவிட, பயிற்சியாளரிடம் பேச்சு கொடுத்தேன். “ இவள் இதன் முன் இங்கு வந்த்தில்லையே?”
“நேத்திக்கு வந்த டைரக்டர் இவளோட ஜிம்-க்கு பைசா கொடுத்திருக்காரு. எல்லாம் கறுப்புப் பணம். அடுத்த மாசம் ஷூட்டிங் தொடங்குது. அதுக்கு முந்தி இன்னும் உடல் குறையணுமாம்” சிரித்தார். பின்னர் தொடர்ந்தார்.
“ இவ வீட்டு வாடகை இன்னொருத்தன் கொடுக்கறான். மளிகை ஒருத்தன். காரு பழைய டைரக்டரோடது. இப்ப புதுசா டயோட்டா வந்திருக்கு.”
“ அவ புருஷன் , ஸ்கூட்டியில வர்றான்?” என்றேன். இன்னும் பத்து நிமிடம் ட்ரெட்மில்ல ஓடணும். அதன்பின்  வியர்வை அடங்கியதும் கிளம்பிவிடலாம்.
“ அவன் இவ புருஷன் இல்ல. இவளோட பாதுகாவலன்ன்னு வச்சுக்கலாம். அவனும் டீ.வி ஆக்டர்தான். சிஐடி சீரியல்ல முந்தி வருவான். இப்ப மார்க்கெட் மப்பா போவுது அவனுக்கு. இவ பாத்துக்கறா”
“அட. பரவாயில்லையே.?” வியந்தேன்.
“ சுபாங்கிக்கு ஊர், வங்காளத்துல  ஒரு கிராமம். ஒருத்தன நம்பி ஊர்லேந்து கல்கத்தாவுக்கு ஓடிப் போயிட்டா. அவன் தலைமறைவாயிட்டான். அங்கேயிருந்து ஊர் போகமுடியாம, அவன் மும்பையில பிலிம் சிடியில சின்ன சின்ன வேசத்துல நடிச்சுக்கிட்டிருக்கான்னு தெரிஞ்சு இங்க வந்தா.. அவன் , இவளத் தெரியவே தெரியாதுன்னு சாதிச்சிட்டான். இவ, சீரழிஞ்சு , ரெண்டு வருஷமா பலரோட இருந்து.. இப்ப அவளும் ஒரு நடிகை. இங்க அவ புருசன்கிட்ட அவளைக் கூட்டிட்டு வந்தவந்தான் நீங்க ஸ்கூட்டில பாத்தது. அவனுக்கு குடும்பம் இருக்கு. இவ அவனோட இருக்க முடியாது. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருந்துக்கறாங்க. “
மெல்ல மெல்ல ட்ரெட்மில்லின் வேகமும் கூடியது. மூச்சு இறைக்கத் தொடங்கியது.
“எல்லாம் ஆக்டர்கள்தான் சார். ஒருத்தன் புருஷனா நடிச்சான். ஒருத்தன் புருசனா வாழ்ந்தான். அவ பலருக்கு பல மாதிரியா நடிச்சிகிட்டிருக்கா. ஒருத்தனுக்கு மட்டும் அன்பான மனைவியா , கட்டாத பொண்டாட்டியா வாழ்ந்துகிட்டிருக்கா. அதுவும் ஒருநாள் நடிப்புன்னு ஆகும்.”
பயிற்சியாளர், வேகத்தைக் கூட்டினார். “அஞ்சு நிமிசம் இதே ஸ்பீடுல ஓடுங்க.  ஆட்டோ கூல் ஆஃப்-க்கு தானா போயிடும்” அவர் நகர்ந்து போக, நினைவுக்கு வந்தது ஓர் சொல்.
ஆடுகளம். ஆடுகள மகள். ஆடுகள மகன்.  கூத்து ஆடும் பெண், கூத்தாடி.

கிராமத்துக் குடும்பப் பெண், காதலால் வீடு நீங்கி, தன் வாழ்வில் நடித்த ஓர் நடிகனைத் தேடிப்போய் , தானும் நடிகையாகி, தன்னைக் காத்தவனோடு வினோத உறவு கொண்டு நிஜமாக வாழ்வது என்பது நிஜமா, நடிப்பா?  எது ஆடுகளம்? எது கூத்து?
”மள்ளர் தழீஇய விழவினாலும்
மகளிர் தழீஇய துணங்கையானும்
யாண்டும் காணேன் மாண்தக் கோனை:
யானுமோர் ஆடுகள மகளே. என்னைக்
கோடுஈர் இலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே.” -  ஆதி மந்தியார், குறுந்தொகை.

No comments:

Post a Comment