Wednesday, May 14, 2014

ஜூலி

                   தோளில் யாரோ தட்டியது போலத் தோன்ற திரும்பிப் பார்த்தேன். சுருட்டியிருந்த பேப்பரால் தலையில் ஒரு அடி இம்முறை “ இடியட், இவ்வளவு பக்கத்துல இருந்து எத்தனை தடவை உன்னை கூப்பிடறேன்.? திரும்பியே பாக்காம அப்படி என்ன சிந்தனை?” நட்ட நடு ரோட்டில் இப்படி ஒருத்தி நிறுத்தி வைத்து, உரத்த குரலில் கேட்கிறாள் என்றால் அது ஜூலியாகத்தான் இருக்கவேண்டும். என் ஊகம் தப்பவில்லை.
                “அதென்ன மேன், ஸ்கர்ட் போட்ட ஒரு பெண் உன்னைக் கூப்பிடறது கூடத் தெரியாம எங்கயோ பாத்துகிட்டுப் போறே?” பஸ் ஸ்டாப்பில் இருவர் வியப்பாக அவளை ஏறிட்டனர். ஜூலியின் கேள்விகளைப் புதிதாகக் கேட்பவர்களுக்கு வேண்டுமானால் வியப்பாக இருக்கலாம். அவளுடன் பத்து வருடம் பணி புரிந்த எனக்கு அல்ல.
               “ ஸ்கர்ட் போட்ட பெண், பாக்கிற மாதிரி இருந்தா திரும்பிப் பாப்போம். பெண் மாதிரி ஒன்று இருந்தா?” என்றேன். இடி இடியெனச் சிரித்த ஜூலியின் பெருவுடல் குலுங்கியது. கழுத்துக்குக் கீழே ஒரு உடல் பாகத்துக்கும் ஒரு வஞ்சனையுமில்லாமல், சீரான உருளை போலிருப்பாள் அவள், இருவது வருடங்கள் முன்பும், அன்றும் அப்படித்தான். பத்து வருடங்களுக்கு முன்பே அவளுக்கு வயது நாற்பது.
                 “நாட்டி ராஸ்கல்ஸ். எல்லாப் பயல்களும் இன்னும் இப்படித்தான் இருக்கிறீர்களா? மனோஜ் துபாய் போயிட்டான். சொன்னானா?…” பழைய ஆட்களின் கதைகளை தான் சொல்லியும், கேட்டும் பரவசப்பட்டாள் ஜூலி.
                90களில் டைப்பிங், ஷார்ட் ஹேண்ட் தெரிந்தவர்கள் கம்ப்யூட்டருக்கு மாறுகிற நிலை வந்தபோது தடுமாறிய பழங்கால செக்ரட்டரிகளில் ஒருத்தி ஜூலி பர்னாந்து. அவளது ஃபேஸிட் டைப் மெஷினை ஒருத்தர் தொடவிடமாட்டாள். துடைத்துத் துடைத்து, தானே , சிவப்பு நிற ஸிங்கர் எண்ணெய் ட்ராப்பர் மூலம் தினமும் இரு சொட்டு எண்ணெய் விட்டு, டைப் மெஷின் ரிப்பன்களைத் தானே மாற்றி…என எல்லாம் தானே செய்து வந்தாள். கம்பெனியில் அனைத்து ஸேல்ஸ், சர்வீஸ் எஞ்சினீயர்களிடமும் உணவு வேளையில் வாயடிப்பாள். சற்றே பச்சையாகப் பேசுவாள் என்பதாலும், டைப்பிஸ்ட் இராமன் நாயரை வம்பிழுப்பதில் அவளுக்கு இருந்த ஆர்வத்தாலும், எப்போதும் அவள் இருக்குமிடம் கலகலப்பாக இருக்கும்.
               “இவளு ஸ்த்ரீயல்லா கேட்டோ மோனே? யட்சியானு. காம யட்சி. பர்த்தாவு ஷிப்-பிலா. எப்போழெங்கிலே வருள்ளு. அதுகொண்டாணு காமாக்னி இங்கன தகிக்குண்ணு” என்பார் இராமன் நாயர், தினமும் அவளிடம் வாக்குவாதத்தில் தோற்றபடி.
               ”ஐ மெட் ராமன் நாயர் லாஸ்ட் இயர் சுதா. அவன் மகள் கல்யாணம்னு கொஞ்சம் கடன் கேட்டான். கொடுத்தேன். ஒரு லட்சம்”
நான் அவளை ஏறிட்டேன்.
              “ஐ நோ. அவன் திருப்பிக் கொடுக்க சான்ஸ் இல்லை. பாவம், என்ன செய்வான்? மூத்தபையனுக்கு காக்காவலிப்புல வேலை போச்சு.. ப்ரெட் வின்னர் வேற யாரு இருக்காங்க ராமனுக்கு?. பூவர் ஃபெல்லோ”
              இருவரும் பேசியபடியே உடுப்பி ரெஸ்டாரண்ட்டில் நுழைந்தோம். அந்தேரி ஸ்டேஷனுக்கு அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வந்ததால், நெரிசல் அதிகம். இருவருக்கும் பஸ் இன்னும் வரவில்லை.
              ஜூலியின் கணவர் கப்பல் வேலையிலிருக்கும்போதே வீட்டுக்கு அருகே ஒரு மருந்துக் கடை ஒன்று வைத்திருந்தார் ஜூலியின் தம்பி ஃபார்மஸி படித்திருந்த்தால், வீட்டோடு அந்த வியாபரம் ஜோராக நடந்து வந்தது. கணவன் கான்ஸரில் மரித்தபின், அவள் மூத்தபெண்ணுக்கு கலியாணம் செய்து கொடுத்தாள். கல்யாணத்துக்குப் போயிருந்தேன். டீயை உறிஞ்சியவாறே ‘அவள் துபாயில் இருக்கிறாள்’ என்றாள்..
             “ எங்கே இருக்கிறாய் ஜூலி? ஹோலிக்ராஸ் ஹாஸ்பிடல் பக்கம் இருந்த அதே வீடுதானா? ”
            “ஆமா.” என்றாள் திடீர்த் தயக்கத்தோடு. அவள் முகம் சற்றே மாறியதைக் கவனித்தேன். பத்து நிமிடத்தில் வெளி வந்தபோது, பயணிகள் வரிசை பஸ் நிலையத்தில் பாம்பாக நீண்டிருந்தது. பஸ் நிலையத்தில் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம், பஸ்கள் ஓடாது என்று வதந்தி பரவியது. ஆளாளுக்கு ஆட்டோக்களை நிறுத்தி ரெண்டு மூன்று பேர்களாக, பல்லிகளைப் போல் ஒட்டிக்கொண்டு விரைந்துகொண்டிருந்தனர்.
           சட்டென ஒரு ஆட்டோவை நிறுத்தினேன். அவளை ஏற்றி விட்டு, நானும் ஏறிக்கொண்டு, நான் போகுமிடத்தைச் சொன்னேன். நடுவில் சற்றே விலகி, ஜூலியை அவள் வீட்டில் விட்டுவிடலாம்.
“ரெண்டாவது பெண் என்ன செய்கிறாள்?நிஷா?/நிக்கி..” பேர் நினைவுக்கு வர முயற்சித்தேன்.
          “நிகிதா. அவள் செத்துவிட்டாள் “ என்றாள் ஜூலி உணர்ச்சியற்று.
“எப்போ, எப்படி?” திகைத்துத் திணறினேன். நான் பத்து வருடம் முன்பு பார்க்கும்ப்போது அவள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.
          “எனக்கு செத்துவிட்டாள். காலேஜ் படிக்கும்போது, எங்க கடைக்கு செண்ட்டு சப்ளை பண்ணின ஒரு பையனோட ஓடிப்போயிட்டா.. அவன் அபுதாபியில சொந்தமா பிஸினஸ் பண்ணறதா என்னமோ இவ கிட்ட கதை விட்டுருக்கான். இன்னும் பணம் இருந்தா பெருசா வியாபாரம் பண்ணலாம்னு சொல்லி இவள நம்ப வச்சிருக்கான். இவ வீட்டுலேர்ந்து நகை, பணம்னு ஒன்றரை லட்சத்துக்கும் மேல எடுத்துக்கிட்டுப் போயிட்டா”
           ஆட்டோ சத்தத்திலும், அவள் லேசாக அழுவது கேட்டது. டிரைவர், கண்ணாடியில் பின்னாடி நடப்பதைப் பார்ப்பது எனக்குத் தெரிந்தது. அவன் வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர்க்க, “ஹோலிக்ராஸ் ஹாஸ்பிடல் பக்கம் போங்க” என்றேன்.
“பணம் போனது ஒரு பெரிய விஷயமில்ல மேன். நாயருக்கு ஒர் லட்சம் கொடுக்கறவ, பெண்ணுக்குக் கொடுக்க மாட்டேனா? இத்தன வருஷம் வளத்தவ பத்தி ஒரு நிமிசம் யோசிச்கலையே அந்த பொண்ணு? ஆபீஸ்ல பழகின நாயர் ‘ஜுலி, ஒரு லட்சம் வேணும்’னு கேட்ட நம்பிக்கைகூட,பெத்த பொண்ணுக்கு இல்லையே?. நான் அவ்வளவு மோசமானவளா, சொல்லு?”
         “இல்லை” என்று தலையாட்டினேன். தொண்டையில் ஏதோ ஒன்று அடைத்தது.
“எவ்வளவோ தேடினோம். அட்வர்ட்டைஸ்மெண்ட், போலீஸ், எங்க சர்ச் ஆளுங்க… அபுதாபில யார் யாரையோ தொடர்புகொண்டு மூத்த பொண்ணு தேடினா. இது வரை கிடைக்கலை” கர்ச்சீப்பை வாயில் வைத்துக்கொண்டு ஜூலி குலுங்கினாள்.
“ப்ளீஸ் ஜூலி, கண்ட்ரோல் யுவர்செல்ஃப்” என்று சொன்னாலும், அந்தச் செயல் அபத்தமாகவே எனக்குப் பட்டது. நான் யார் அவளை அழாதே என்று சொல்ல? பிரிவின் வலி அவளுக்கல்லவா தெரியும்.?
          சட்டென டிரைவரின் தோளைத் தட்டி,” அந்த பச்சை நிற பில்டிங் வாசல்ல நிறுத்து” என்றாள்.
“ஜூலி, உன் வீட்டுலயே இறக்கி விட்டுடறேன். இங்கேருந்து நீ ஒரு கிலோமீட்டர் நடக்கணுமே?”
“பரவாயில்ல. நீ …நீ .. வீட்டுக்கு வரவேணாம்”
            அதிர்ந்துபோனேன். ஒரு கோபம் பொங்கியெழ “ உன் நன்மைக்குச் சொன்னேன். நான் ஒண்ணும் உன் வீட்டுக்கு வரணுங்கற எண்ணத்துல சொல்லலே” என்றேன்.
            “ப்ளீஸ் புரிஞ்சுக்கோ. நீ என் பையன் மாதிரி. ஆனா, ப்ளடி சொசயிட்டி அப்படி நினைக்காது. எல்லார்கிட்டயும் வெளிப்படையா நான் பேசறதுனாலதான் எம்பொண்ணு ஓடிப்போனா-ன்னு என் காதுபடவே சொல்றாங்க. சர்ச்சுல நான் உக்கார்ற இடத்துக்கு முன்னாலயும் பின்னாலயும், கிசுகிசுன்னு பேச்சு.. வேணாம். இன்னும் நான் கேக்க விரும்பலை.”
           நான் இயந்திரம் போல இறங்க, பின்னே இறங்கிய ஜூலி, நடுங்கும் கைகளால் என் கைகளைப் பற்றினாள்.அவள் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன.
         “ என் பொண்ணு என்னிக்காவது வருவாங்கிற நம்பிக்கை எனக்கு கொஞ்சம் கொஞ்சமா போயிட்டிருக்கு. நம்பிக்கைகளிலிருந்து நான் விலகிக் கிட்டிருக்கேன். இந்த சமூகத்தின் பேச்சைக் கேட்டு வாழ்கிற தெம்பு சுத்தமா அழிஞ்சு போறதுக்கு முந்தி நான் ஒரு பெட்டிக்குள்ள போயிறணும். அதான் இப்போதைக்கு ஒரே ஆசை. நல்லா இரு.” திரும்பிப் பார்க்காமல், விருவிருவென நடந்தாள் ஜூலி.
           காதல், ஓடிப்போதல் என்பதை உயர்த்திக் காட்டும் பெரிய பாலிவூட் போஸ்டர்கள் சாலையோரம் ஒளிர்ந்துகொண்டிருந்தன. அவற்றின் பின்னால், இருளில் கருநிழல் கவிந்து அடர்ந்திருந்தது,பல பெற்றோர்களின் புலம்பல்களைத் தன்னுள் அடக்கியதாக.
         “ஓடிப் போன பொண்ணு கேஸா சாப்”?” என்றான் டிரைவர் மேற்கொண்டு செல்கையில்.நான் மவுனமாயிருந்தேன். அவன் தொடர்ந்தான். “ அவள வித்திருப்பான் சார்.. லோக்கல்ல விட மாட்டனுங்க. டெல்லி பக்கம் எங்கயாச்சும் ஒரு பார்ம் ஹவுஸ், துபாய்ல அபார்ட்மெண்ட்டுன்ன்னு வச்சு ஒரு மேடம் பாத்துக்குவா. பாஸ்போர்ட்டு அவ கையில இருக்கும். இங்க மீரா ரோடு பக்கம் இப்படித்தான் ஒரு கேஸு..” அவன் சொல்லச் சொல்ல கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. தாக்கம் தனக்கு இல்லையென்றால் என்னெவெல்லாம் ஊர் பேசுகிறது?
           இதைக் கேட்பதற்குப் பதில் ஜூலி சவப்பெட்டிக்குள் போகலாம்.
பல நூறு வருடங்களுக்கு முன் ஒரு தாய், ஓடிப்போன தன் மகளைக் குறித்துப் புலம்புகிறாள்.
இரும்புனிற்று எருமைப் பெருஞ்செவிக் குழவி
பஒந்தாது எருவின் வகு துயில் மடியும்
செழுந்தண் மனையொடு எம் இவண் ஒழியச்
செல்பெரும் காளை பொய் மருண்டு…
…………
குவளையுண்கண் என் மகளோர் அன்ன,
செய்போழ் வெட்டிய பொய்தல் ஆயம்
மாலை விரி நிலவிற் பெயர்புறங் காண்டற்கு
மாயிருந்து தாழி கவிப்பத்
தாஇன்று கழிக என் கொள்ளாக் கூற்றே.”
- நற்றிணை
          ”புதிதாக ஈன்றப்பட்ட பெரிய காதுகளை உடைய எருமைக்கன்று தொழுவில் உறங்கும் செழிப்பு உடைய என் வீட்டிலிருந்து , தாமரை போன்ற கண்களுள்ள என் மகள், ஒருவன் சொன்ன பொய்களில் மயங்கி ஓடிப்போனாள். தேடிச்சென்றவர்கள் அவளுடன் திரும்பிவருவதைக் காணவிடாமல் இந்த விதி தடுக்கிறதே? யமன் என் உயிரை பறித்து, உடல் விரைவில் ஒரு தாழியில் இட்டு, புதைக்கப்படட்டும்”

3 comments: