Friday, May 23, 2014

சிகப்பு இன்னோவா

”கலியாணம் முடிஞ்சாச்சு. அந்த சிகப்பு இன்னோவா வண்டி சாட்சி” அந்தப் பெண் மீண்டும் சொன்னாள்.

நான் கையைப் பிசைந்துகொண்டு நின்றிருந்தேன். என்ன சொல்வது இவளுக்கு? இவளது தாய் சுஷ்மாவுக்கு?

சுஷ்மா என்ற பெயர் சொன்னால்,  நீங்கள் அவள் ஏதோ கால் செண்ட்டரில்,  ஏதோ பன்னாட்டு நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் ட்ரெய்னீ அல்லது ஃபிலிம் ஸிட்டியில் ஒரு துணை நடிகை என்ற அளவிலாவது எதிர்பார்த்திருப்பீர்கள்.

சுஷ்மா எங்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு வீட்டுப் பணியாளர். வட பிஹாரில் ஏதோவொரு கிராமத்தில் கோசி நதி வெள்ளத்தில்  வாழ்வாதாரம் அடித்துச் செல்லப்பட, மஹாநகர் மும்பைக்கு வந்து  தனக்குத் தெரிந்த ரொட்டி , சப்ஜி செய்வது, வீட்டை பெருக்கி மொழுகுவது என்று உபரி வேலைகளைச் செய்து வயிற்றைக் கழுவி, தாக்கரேக்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கும் வட நாட்டு முகமற்ற அகதிகளில் ஒருத்தி.

பிஹாரி உச்சரிப்பில் ’நமக்’ ( உப்பு ) என்பதற்கு நிம்பாக்கு என்று சொல்வதில் ஆரம்பித்து, அனைத்திற்கும் ஏதோவொரு புதுப் பெயர் சூட்டினாள். இரண்டு வீடுகளில் வேலையை ஆரம்பித்து மெள்ள மெள்ள ஐந்து ஆறு வீடுகளில் அமர்ந்தாள். இடுப்பில் பல வீடுகளின் சாவிகள் தொங்க, அவள் கிலுங்க் கிலுங்க் என்ற ஒலியோடு சப்பாத்தி இடுவது ஏதோ மாட்டுவண்டியில் இரட்டை மாடுகள் ஒலியெழுப்பி ஓடுவது போலிருக்கும்.

இரு மாதம் முன்பு ஒரு பெண்ணை அழைத்து வந்தாள். பதினாறு பதினேழு வயதிருக்கும். கருத்த , சற்றே குண்டான உடல்வாகு. மிரண்ட கண்களுடன் அவள் அப்போதுதான் பிடித்து அடைக்கப்பட்ட கரடி போல் பயந்திருந்தாள். “பைட் ரே பேட்டியா” என்று அவளை ஹாலில் அமர வைத்து விட்டு, உள்ளே சப்பாத்திக்கு மாவு பிசையச் சென்றவள் வேலைமுடிந்ததும் ஒன்றும் சொல்லாமல் அழைத்துச் சென்றாள்.

அது அவளது இரண்டாவது பெண்ணாம்” என்றார்   304லிருக்கும் பாஸ்கர் ராவ். ”கொஞ்சம் கொஞ்சமாக வேலைகளைப் பழக்கிக் கொடுக்கப்பார்க்கிறாள். என் மனைவி சொல்லிவிட்டாள் ‘சிறுமிகளை வேலை வாங்காதே. செஞ்சே, நானே போலீஸ்ல சொல்லிடுவேன்.’ அதுலேந்து வர்றதில்லை. படிக்க வைக்காதுகள் இதுகள்”

அந்தப் பெண் , சுஷ்மா வராத நாட்களில் வந்து வீட்டு வேலை செய்து போனாள். சிறுமி என்பதால் பாவமாக இருந்தது. எங்கள் ஓரிருவர் வீடுகள் தவிர பிறர் ‘ வேலை நடந்தால் போதும்’ என்று விட்டுவிட்டனர். மராட்டி வேலைக்காரிகள் சுஷ்மாவின் வளர்ச்சியில் கொதித்தனர்.

ஒரு மாதமுன்பு, திடீரென சுஷ்மா வரவில்லை. வீடுகளில் ரெண்டு வேளை பாத்திரங்கள் அப்பப்படியே கிடந்து நாறின. வீட்டு எஜமானிகள் போனிலும், கீழே பார்க் பெஞ்சுகளிலும் ஆத்திரத்தோடு அவள் சொல்லாமல் கொள்ளாம போனதைக் கடுமையாக விமர்சித்து, அரைப்பதற்கு அடுத்த அவல் வந்ததும் சுஷ்மாவை மறந்தனர். ’பையாணிகளை (பிஹார், உ.பி பெண்களை) வேலைக்கு அமர்த்தினால் இப்படித்தான்’ என்று சில தீவிர மராட்டியர்கள் சொசைய்ட்டி மீட்டிங்கில் பேச, புதிய மராட்டிய வேலைக்காரிகள் அமர்த்தப் பட்டனர். சுஷ்மா மறைந்து போனாள்.

ஒரு வாரம் முன்பு பெங்களூர் நிம்ஹான்ஸ் மன நல மருத்துவமனையில் ஒரு கருவியின் டெக்னிகல் மீட்டிங்கிற்காக  நானும் என் தென்னிந்திய ப்ராந்திய கிளை மேலாளரும் போயிருந்தோம். வேலையை முடித்துக் கொண்டு காருக்குக் காத்திருக்கும் வேளையில் மரத்தடியில் ஒரு பெண்ணின் கீச்சுக்குரல் பிசிறியடித்தது. அதைத் தொடர்ந்து மற்றொரு பெண்ணின் கோபக் குரலும், யாரோ கையால் அடிக்கும் ஒலியும் கேட்டது. வேடிக்கை பார்க்க மெதுவே கூடிய கூட்டம், காவலாளி விலக்க, அசட்டுச் சிரிப்புடன் கலைய, அசுவாரஸ்யமாக திரும்பிப் பார்த்தேன்.

தலையைச் சுற்றி புடவையால் முட்டாக்கு அணிந்தவாறு சுஷ்மா நின்றிருந்தாள். அருகில் குந்தி அமர்ந்திருந்த ஒரு பெண்ணை கையால் முதுகில் கோபத்தில் அறைந்து கொண்டிருந்தாள். “சனியனே. செத்துப் போயிருக்க வேண்டியதுதானே? என்னையும் சேத்துக் கொல்லு”

சுஷ்மா என்று நாலு முறை அழைத்தபின்னரே அவள் திரும்பிப் பார்த்தாள் “சாஹீப்” என்றவள் கை கூப்பினாள். “ மாஃப் கரியே.: காலில் விழப்போனவளை நிறுத்தினேன். “மேரி பேட்டிக்கோ தேக்கியே சாஹப்” ( என் பெண்ணைப் பாருங்கள்) என்று அழ ஆரம்பித்தவளை நிச்சலனமாக அண்ணாந்து வெறித்த அந்தப் பெண்ணை எளிதில் அடையாளம் கண்டு கொண்டேன்.

“இவள்.. உன் பெண்தானே?”

”இவளுக்கு கல்யாணம் பேசி முடிச்சிருந்தோம். கட்டிக்கப் போறவன், டெல்லியில கட்டிடம் கட்டற ஒரு கம்பெனியில இருந்தான். இவகிட்ட அடிக்கடி போன்ல பேசியிருக்கன். இதெல்லாம் கூடாதுன்னு எச்சரிச்சு வச்சேன். இவளும், சரி கட்டிக்கப் போறவந்தானேன்னு,  எனக்குத் தெரியாம நிறைய தடவ பேசியிருக்கா. ஒரு மாசம் முன்னாடி, டெல்லியில, அவங்க பாட்டி பொண்ணைப் பாக்கணும்கறான்னு, இவளை டெல்லி கூட்டிட்டுப் போனேன். ” ஒரு நிமிடம் நிறுத்தினாள்.

அவளது பெண் மெல்ல முணுமுணுத்தாள் “ கலியாணம் முடிஞ்சாச்சு. அந்த இன்னோவா வண்டி சாட்சி. வண்டியில ஏ.ஸி இருந்துச்சு.”

“என்ன சொல்கிறாள்?”

சுஷ்மா பெருமூச்சுடன் தொடர்ந்தாள் “  கலியாணத்துக்கு ட்ரெஸ் எடுக்க காஃபர் கான் மார்க்கெட்டுக்கு போயிருந்தோம். அங்க குஜ்ரால்ஸன்ஸ் கடைப் பக்கம் மாப்பிள்ளைப் பையனும்.  அவங்கூட மாமா மகன், சித்தப்பா பையன், நண்பன்னு மூணுபேரும் சந்திச்சாங்க. இவள வெளிய அவங்கிட்ட பேசவிட்டுட்டு, நான் ஒரு கடையில துணி பாத்திட்டுருந்தேன். மாப்பிள்ள, இவ கிட்ட வெளியெ பேசிட்டிருந்தது கேட்டுச்சு. கேக்காத மாதிரி உள்ளே புடவை பாத்திட்டிருந்தேன்.

“எங்கூட வர்ரியா ? உனக்கு நான் ஒரு புடவ எடுத்துத் தர்றேன்”
“அய்யோ, அம்மா இருக்காங்க. திட்டுவா.”

“பத்தே நிமிசந்தான். மெட்ரோ ஸ்டேஷனுக்குப் பக்கத்துலதான் இருக்கு.”

”நஹிஜி. நான் வரலை. கல்யாணம் ஆனப்புறம்தான்”

“சரி கல்யாணம் பண்ணிடுவோம்”

“ஆ?”

“நிஜமாத்தான்”

ஒரு நிமிஷம் புடவை பாக்கறதுல லயிச்சிட்டேன். திரும்பிப் பாக்கறேன். இவளக் காணோம்.”

சுஷ்மா சற்றே மவுனித்தாள். அந்தப் பெண் மரத்தடியில் இருந்த புல்லைப்  பிடுங்கி தூக்கிப் போட்டபடியே பேசினாள் “ மந்திர்ல சிந்தூர் எடுத்தியே? நெத்தியில குங்குமம் வச்சு நமக்கு கல்யாணம் இப்ப ஆயிட்டுன்னு சொன்னியே?”

சுஷ்மா தொடர்ந்தாள்.” அப்புறம், ஒரு புடவையையும் வாங்கிக் கொடுத்துட்டு “கல்யாணம் முடிஞ்சாச்சு. சாட்சிக்கு என் அண்ணன், தம்பி, நண்பனெல்லாம் இருக்காங்க பாரு. இப்ப உங்கம்மா இருக்கற கடைக்குப் போவோம்.”ன்னு சொல்லியிருக்கான்.”

“மெட்ரோ, ஆங், கரோல்பாக் மெட்ரோ ஸ்டேஷன்தான்.. அது தாண்டி, சிகப்பு கலர் இன்னோவா வண்டில ஏறினோமே? மறந்துடுச்சா?”  அந்தப் பெண் மீண்டும் திடீரென  பேசவும் சற்றே திடுக்கிட்டேன்.

”இவளும் அவனும் ஏறினதும் வண்டிய எங்கயோ கொண்டு போயிருக்காங்க. ஓடற வண்டியில இவள....” சுஷ்மா முடிக்கமுடியாமல் திணறினாள்.

“ இன்னோவா நின்னிட்டிருந்துதே? கல்யாணம் முடிஞ்சுபோச்சு. அம்மா கிட்ட போவோம்.ஏய். ஏன் தொடற? நீயும் ஏண்டா தொடறே? ஏய். நான் கத்துவேன். சில்லாவுங்கீ..ஈஈஈஈ”

“ கடையில இவளைக் காணாமத் தேடி , எங்க வீட்டுக்கு, அவங்க வீட்டுக்குன்னு போன் மேல போன் பண்ணி, ஆட்கள் டெல்லி முழுக்கத் தேடித்தேடி, குர்கான்வ் தாண்டி மனேஸர் போற வழியில ரோடு ஓரமா இவ கிடந்ததை ராத்திரி எட்டு மணிக்கு கண்டு பிடிச்சோம். சஃபதர்ஜங் ஆஸ்பத்திரி அது இதுன்னு அலைஞ்சு ஒருவழியா இவ கண்ணு தொறந்தப்போதான்  இவளுக்கு சித்தம் கலங்கியிருக்கறது தெரிஞ்சுது."

"மாப்பிள்ளப் பையன், இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா மானக்கேடு-ன்னு ’நான்  செய்யலே”ன்னு சொல்லிட்டான். அவங்க வீட்டுலயும் ’உங்க பொண்ணு எவன்கூடயோ ஓடிப்போனதுக்கு என்வீட்டுப் பையனச் சொல்லாதீங்க’ன்னு சண்டைக்கு வந்தாங்க.  இவ இப்படி உளர்றதைத் தவிர, அவந்தான் இவளைக் கெடுத்தான்னு நிரூபிக்க ஒரு ஆதாரமும் இல்லே. நிம்மான்ஸ்க்கு வந்து பாத்தா எதாவது தெரியுமான்னு பாக்கறோம். நாளைக்கு வரச் சொல்லியிருக்காரு பெரிய டாக்டர். “

“அவன் மாமா மகன், சித்தப்பா மகன்.. அந்த இன்னோவா? அதெல்லாம் சாட்சியா பிடிக்கலாமே? போலீஸ்ல சொன்னியா?“

“ அவங்க எல்லாரும் நாங்க யாரும் இவன்கூட அங்க வரவேயில்லங்கறாங்க. அதுக்கு பொய்யா சில ஆதாரங்களும் வச்சிருக்காங்க. அவங்க ஆட்கள். விட்டுக் கொடுக்க மாட்டாங்க. அந்த  சிவப்பு இன்னோவா.. அது பொய் சொல்லாது சாஹேப்.. அது கிடைக்கணுமே சாஹிப்.?”

”கலியாணம் முடிஞ்சாச்சு. அந்த சிகப்பு இன்னோவா வண்டி சாட்சி” அந்தப் பெண் மீண்டும் சொன்னாள்.

அழுதவாறே சுஷ்மா, ‘எழுந்திரு” என்று ஜடமாக அமர்ந்திருந்த அவளை எழுப்பி நடத்திச் செல்வதை சில நிமிடம் பார்த்து நின்றேன்.

ஜடப் பொருட்கள் பொய் சொல்வதில்லை.

பல நூறு வருடங்களுக்கு முன் , தன்னை மணமுடிப்பதாக ஏமாற்றிய ஒருவனைக் குறித்து ஒருத்தி திகைப்பில் பாடுகிறாள்.

”யாரும் இல்லை, தானே கள்வன்:
தான் அது பொய்ப்பின் , யான் எவன் செய்கனோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங்காலின்
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டே, தான் மணந்த ஞான்றே?”
- குறுந்தொகை.

என்னை ஏமாற்றியது நீயன்றி வேறொருவரில்லை. திருமணம் செய்து கொள்வதாகச் சொன்ன உனது வார்த்தைகளை நீயே பொய்த்தால், நான் என்ன செய்வேன்.? யாருமற்ற பொழுதில்,  நீ என்னைத் திருமணம் புரிந்த போது, தினைப்பயிரின் மெல்லிய இலை போன்ற மெலிந்த பசுமையான கால்களை உடைய , நாரை ஒன்று , ஓடிக்கொண்டிருந்த நீரில், ஆரல் மீன்களை உண்ணக் காத்திருந்ததே? அதுவே சாட்சி. ”

1 comment:

  1. காலம் பற்பல நூறாயிடினும் காட்சிகள் தொடர்தல் யாரிட்ட சாபம் ?

    ReplyDelete