Sunday, May 18, 2014

அஜிதாவீன் காதல் என்ற கிறுக்குத் தனம்.

” இன்னிக்கு சாயங்காலம் மீட்டிங் அஞ்சு மணிக்கு. வரியா?” கேள்வியில் சற்றே பரபரப்பானேன். நண்பர்கள் குழுவின் அடுத்த சந்திப்பு. விட மனமில்லை.
“யாரு பேசறாங்க? என்ன தலைப்பு?”
“சங்ககாலக் காதல் உணர்வும், புதுக்கவிதைகளில் காதலும்”னு ரெண்டு பேர் பேசறாங்க. ஒருத்தர் எம்.கே.தாமஸ் இன்னொருத்தர்.. அப்புறம் சொல்றேன்” நிர்மலா வெங்கெட்ராமன் மெல்ல பீடிகை போட்டார்.
“தாமஸ்? போனதடவை மைக்கைப் பிடிச்சுட்டு முடிக்க மறந்தே போனாரே? அவரா?”
“டோண்ட் பி க்ரூயல். அவருக்கு மெதுவா சொல்ற விதத்துல சொல்லிட்டோம். இந்த தடவை கடிகாரம் பாத்துத்தான் பேசுவார். அடுத்த ஆள் யாருன்னு தெரிஞ்சா, நீங்க கண்டிப்பா வருவீங்க. செல்வன் வேலாயுதம்”
செல்வன்? வியப்பு மேலோங்கியது எனக்கு. பல வருடங்களாக பழக்கம் என்றாலும், அதிக நெருக்கமில்லை. அருமையாகப் பேசுவான். ஆழமான அலசல்கள் , தெளிவான சிந்தனை. மிகச் சுருக்கமாகப் பேசிவிட்டு, கேள்வி பதில்களில் நேரம் செலவிடுவான்.
“ரைட்டு. கண்டிப்பா வர்றேன். நிர்மலா. எங்க வரணும் சொல்லுங்க.”
நிர்மலா வெங்கட்ராமனின் அலுவலக கருத்தரங்க அறையை, வெள்ளிக்கிழமை மாலை, சனிக்கிழமை மதியத்திலிருந்து மாலை வரை  தமிழ் நண்பர்கள் தமிழ்ப் புத்தகம், இலக்கியம் என்று பேசுவதற்கு பெரியமனத்தோடு ஒதுக்கித் தருவார். எப்போதெல்லாம் முடியுமோ அப்போது கூடுவோம். மிஞ்சிப் போனால் பத்து பேர் இருப்போம். ஆனால் தரமான, கண்ணியமான  விவாதங்களாக இருக்கும்.
அன்று அவர் அழைத்தது ஒரு கல்லூரி ஆடிட்டோரியத்திற்கு. ‘இத்தனை பெரிய நிகழ்ச்சியா?” என்று கேட்டேன்.
“செல்வம் வழக்கமா  வெள்ளிக்கிழமை இன்னொரு குழுவுல பேசுவாராம். அவங்க எல்லாரையும் இங்க அழைச்சிருக்கார். அறுவது பேர் இருப்போம் மொத்தமா பாத்தா”
நிர்மலா என்னை விட இரண்டு வருடம் , பல்கலைக்கழகத்தில்  சீனியர். அப்போதெல்லாம் அவரைத் தெரியாது. அவர்  எம்.பி.ஏ படித்துவிட்டு சிங்கப்பூரில் இருந்துவிட்டு, இங்கு சொந்தமாக ஆலோசனை வழங்கும் நிறுவனமொன்றை நடத்திவருகிறார். பைசாவுக்குக் குறைவில்லை எனினும் இலக்கிய அறிவுக்கும் ஒரு குறையுமில்லை. பேஸ்புக் மூலம் எதிர்பாராவிதமாகக் கிடைத்த நட்பு அவர்.
சீக்கிரமாகவே போய்விட்டேன். நாற்காலிகளை அடுக்கி வைத்திருந்த இடத்திலிருந்து எடுத்துப் போட்டு, வரிசையாக வைத்துக்கொண்டிருந்த தன்னார்வலர்களோடு சேர்ந்து நானும் நாலு நாற்காலிகளை இழுத்துப் போட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வந்து அமரத் தொடங்கினர். பலரும் தெரியாதவர்கள்.
“உங்களத்தான் தேடிக்கிட்டிருந்தேன். “ நிர்மலாவின் குரலில் திரும்பினேன். “மீட் டாக்டர். அஜிதா.”  அறிமுகம் செய்யப் பட்ட பெண்மணி நடுத்தர வயதினர். கருத்த மெலிந்த உடல். கோபிப்பொட்டு அணிந்த , பெரிய நெற்றி. டிப்பிக்கல் தென்னிந்தியப் பெண் என்று சொல்லிவிடலாம். ஏதோ வங்கி மேலாளர், ரயில்வேஸ் ஆபீஸர் போன்ற மாற்றல்கள் உள்ள வேலையில் இருப்பார் எனத் தோன்றியது.
“அஜிதா எனது க்ளாஸ்மேட். எம்.பி.ஏ முடிச்சப்புறம் தவறாக ஆராய்ச்சி வழியில் செல்ல முட்டள்தனமாக முடிவெடுத்த புத்திசாலி. “ அஜிதா புன்னகையுடன் ஏதோ குறுக்கிட ,நிர்மலா தொடர்ந்தார் “ ஒரு சின்ன ஹெல்ப் வேணும் அஜிதாவுக்கு சில தமிழ் சொற்றொடர்கள் புரியாது. தாமஸ் வேணும்னே தன் மொழி வளத்தைக் காட்டணும்னு பேசுவார். நீங்க அஜிதாவுக்கு எளிய தமிழ்ல விளக்கணும். ப்ளீஸ்”
வியப்புடன் நான் அஜிதாவை ஏறிட்டேன். அவர் எப்போதும்போல புன்னகை பூத்து நின்றார். “ சரி. ஆனா, வளவளன்னு நடுவுல நான்  பேசினா, இடைஞ்சலா இருக்குமே ?”  “ ஒரு ஓரமா ஒக்காந்துக்கோங்க. எப்பவாவதுதான் அவங்களுக்கு உங்க விளக்கம் தேவையிருக்கும்.”
வலது புறம் தூணுக்கு மறுபுறம் இரு நாற்காலிகளை இட்டு அமர்ந்தோம். மேடை தெளிவாகத் தெரிந்தது. முதலில் தாமஸ் ஏறினார். நிர்மலா  சிரித்தபடி ஒரு மேசைக் கடிகாரத்தை உயர்த்திக் காட்டினார். தர்மசங்கடமாகச் சிரித்த தாமஸ் முதலில் தன் உரையைத் தொடங்கினார்.
மூன்று நிமிடங்களின் பின் பக்கவாட்டில் பார்த்தேன். அஜிதா.. நம்மூர்ப் பெயர் மாதிரி இல்லை. மலையாளப் பெயர். இந்தப் பெண் நாயர், மேனன் , குறுக்கில் என்று ஒரு இரண்டாவது பெயரும் வைத்துக்கொள்ளவில்லை. கருத்த , சற்றே மெலிந்த கையில் ஒரு தங்கவளையல் கோணலாக மணிக்கட்டில் சற்றே மேலெழுந்திருந்த எலும்பில் தட்டி நின்றிருந்தது. அதே சிரிப்பு மாறாமல் கேட்டுக்கொண்டிருந்தார். ஒரேஒரு முறை என்னை நோக்கி சற்றே சரிந்து “ குரீஇ-ன்னா என்ன?” என்றார். “அது,குருவி-ங்க.” “ ஓ. தான்க்ஸ்” என்று மீண்டும் கவனிக்கத் தொடங்கினார்.
செல்வன் மேடையேறியதும் அரங்கில் , நாற்காலிகள் முன்னோக்கி இழுபடும் சப்தம் கேட்டது. பல சங்ககாலப் பாடல்களிலிருந்தும் , சிலம்பு , மணிமேகலையிலிருந்தும் அவன் வார்த்தைஜாலத்தை நிகழ்த்தினான். கேள்வியுடன் அஜிதாவைத் திரும்பிப் பார்த்தேன். இவருக்கு குரீஇ புரியாதபோது நள்ளி, என்பது பெண் நண்டு என்ற பொருள் விளங்கியிருக்குமா? அவர் மேற்கொண்டு ஒரு கேள்வி கேட்கவில்லை. முடியுமுன்னரே, எழுந்து, மெதுவான குரலில் “நன்றி” என்று சொல்லிவிட்டு மெல்ல எழுந்து, ஓரமாய் நகர்ந்து, வெளியேறினார்.
நிர்மலாவிடமும் ஒரு வார்த்தை சொல்லிக்கொள்ளவில்லை? எதாவது குடும்ப காரணங்களால் வெளியேறுகிறாராயிருக்கும் என நினைத்துக் கொண்டேன். நிகழ்ச்சி முடிந்தபின், ஆடிட்டோரியத்தின் செலவுக் கணக்கை முடித்துக் கொண்டிருந்தபோது நிர்மலா வந்தார்.
“ரொம்ப தாங்க்ஸ். அஜிதா போன் பண்ணினாள். அவருடைய உதவிக்கு நன்றி சொல்லிடுன்னா சொல்லிட்டேன். ”
“என்ன உதவி செஞ்சேன்னு தாங்க்ஸ் சொல்றாங்க? குரீஇ -குருவின்னேன். அவங்களுக்கு எப்படி மத்த சொற்கள் புரிஞ்சது? “
“அவளுக்குப் புரிஞ்சிருக்காது. புரியவும் முடியாது. அவ மலையாளி. தமிழெல்லாம் சுத்தமா படிக்கலை”
அவரை ஏறிட்டேன். இன்னும் பில் ரெடியாகவில்லை.
“ அஜிதா, செல்வன் , நான் எல்லாரும் எம்.பி.ஏ க்ளாஸ்மேட்.  செல்வத்தை அவ காதலிச்சா. சொல்ல சங்கடப் பட்டா. நான் போய் அவங்கிட்ட சொன்னேன். அவன் நான் அவளை காதலிக்கலை-ன்னான். ஆனா அதுக்கு அப்புறமும் நண்பனாகவே நடந்துகிட்டான்.  ஆனா இவ தீவிரமாக் காதலிச்சா. ஒரு தடவை செல்வனோட அக்காவைப் போய்ப் பாத்தோம். ’நான் உங்க குடும்பத்துல நல்ல மருமகளா இருப்பேன்’னு திறந்து பேசினா அஜிதா. அவங்களுக்கு இவ ஜாதி , மொழி தடையா இருந்தது.  கல்ச்சரும் வேறு. செல்வனோட அக்கா , வீட்டுல மேற்கொண்டு பேசத் தயங்கினாங்க. அந்த முயற்சி அப்படியே நின்னு போச்சு.
“அப்ப அஜிதா,  செல்வன் கிட்ட இது பத்தி பேசவே இல்லையா? ”
“பேசினா. அவன் அவளை ஒரு காதலியா நினைக்கலைன்னு நேராவே சொல்லிட்டான். பெங்களூர்ல வேலை கிடைச்சுப் போயிட்டான். இவ அவனைத் தவிர யாரையும் நினைக்கவே மறுத்துட்டா”
“அப்போ.. இப்பவும்.. ?”
“யெஸ். இதுவரை கல்யாணமே பண்ணிக்கலை. ரிசர்ச்ன்னு அமெரிக்கா போனா. திரும்பி வந்து ஒரு பெரிய மேனேஜ்மெண்ட்  கல்லூரியில நல்ல பொஸிஷன்ல இருக்கா. செல்வத்தை அவ இன்னும் மறக்கல. எப்பவெல்லாம் அவன் நிகழ்ச்சி நடக்குதோ,அவனைப் பாக்கறதுக்கு வருவா. அவன் கண்ணுல படாம முதல்லயே போயிடுவா.”
“இதென்ன கிறுக்குத்தனம்?” திகைத்தேன் நான். ‘’அவங்க வாழ்க்கையையே வீணாக்கிட்டிருக்காங்க. அவங்களை விரும்பாத ஆளுக்கு, அவனுக்கே தெரியாம இன்னும் உருகறது, பைத்தியக்காரத்தனம். சினிமாவுல, டீன் ஏஜ் வயசுல இதுமாதிரி கேணத்தனம் சாத்தியம். அதோட விட்டுறணும்.”
“எவ்வளவோ சொல்லியாச்சு.  கேட்கலை.  ஒரு விதமான மாய மகிழ்வு. போதை. ஒரு பழமொழி சொல்வங்களே?.. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்ட மாதிரி. இவ முடவனும் இல்லை, செல்வம் கொம்புத் தேனும் இல்லை. ஆனா இவ அப்படி நடந்துக்கிறதுக்கு காதல் என்கிற பைத்தியக்காரத்தனத்தைத் தவிர எதுவும் எனக்குத் தோணலை. விடுங்க. யார்கிட்டயும் சொல்லவேணாம்.  ஓ.கே , ஃபைனல் அமவுண்ட் ஒரு தடவை செக் பண்ணிட்டு, பேமெண்ட் கொடுத்துருங்க. “
வெளிவரும்போது எல்லாரும் சென்றுவிட்டிருக்க, எனது வண்டி மட்டும் நின்றிருந்தது. படித்த, பொறுப்பான பதவியில், சமூகத்தில் உயர்தட்டில் வசிக்கும் பண்பான அஜிதாவின் இந்த செய்கைக்குக் காரணமென்ன?. உள்ளிருந்தே அவரை மெழுகாக  உருக்கும் ஒரு தீ.  அதன் ஒளி விரும்பப் படாதது. அதன் பயன் எவருக்குமில்லை.
குறுந்தொகையில், தன்னை ஏற்காத காதலனை விட்டுவிடுமாறு சொல்லும் தோழிக்கு ஒரு தலைவி சொல்கிறாள்.
“குறுந்தாட் கூதளி ஆடிய நெடுவரை
பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
உட்கை சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுப நக்கி ஆங்கு காதலர்
நல்கார் நயவார் ஆகிலும்
பல்கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே”
  –  குறுந்தொகை
“கூதளி மரத்தின் சிறிய இலைகள் ஆடும் பெருமலையிலுள்ள  மரத்தில் இருக்கும் தேன் கூட்டினடியே, கால் நடக்க இயலாது, இருக்கையில் இருக்கும் முடவனொருவன், உள்ளங்கையை, சிறு குடைபோல குவித்து, தேன் சொட்டைச் சேகரிப்பது போன்ற பாவனையில், கூட்டைக் கையால் சுட்டியபடி, கையில் இல்லாத தேனை நக்கிச் சுவைப்பது போல, காதலர் எனக்கு அன்பை தரமாட்டார், என்னோடு வாழமாட்டார் என்று தெரிந்திருந்தும், அவரை மீண்டும் மீண்டும் பார்த்திருப்பது ஒன்றே என் உள்ளத்துக்கு இனிதாயிருக்கிறது”
இந்த கேணத்தனத்தின் பேர் காதலா?

1 comment:

  1. வாழ்க்கையில் நடப்பது எல்லாவற்றுக்குமே அர்த்தம் இருக்கிறதா என்ன.. ?!

    ReplyDelete