”சரி,
இன்னிக்கே கிளம்பி வர்றோம். இல்லேல்லே, நானும் கூடவே வர்றேன். நோ எக்ஸ்க்யூஸஸ்.” கதிரேசன்
போனை வைத்துவிட்டு எதிரே இருந்தவரைப் பார்த்தார்.
”நாக்கப்
புடுங்கற மாதிரி கேக்கறான். எந்த *..யித்துக்கு கம்பெனி நடத்தறே?ங்கறான்.. அவன்பேர்ல
தப்பில்ல. கஸ்டமர் இஸ் ஆல்வேஸ் ரைட்”
முன்னிருந்த
சேகர் தர்மசங்கடத்தில் நெளிந்தார் “ ஒரு வாரம்தான் டிலே ஆச்சு சார். பஸவப்பா லீவ்ல
போயிருக்கான். வந்ததும் அனுப்பறேன்னு சொல்லியிருந்தேன்”
“பசவப்பா
இல்லேன்னா ஸ்ரீகாந்த்தை அனுப்பியிருக்கணும். நீங்க பண்னின தப்பு.. என் தலைல விடிஞ்சிருக்கு.
சரி கிளம்புங்க, பெங்களூர் இன்னிக்கே போயாணும்”
“நானுமா?”
திகைத்தார் சேகர். வீட்டில் சொல்லவில்லை. அடுத்த நாளைக்கு மாற்றுத் துணி?.
“”நீங்க
வராம ? நான் மட்டும் போய் என்ன கிழிப்பேன்? சர்வீஸஸ் டிபார்ட்மெண்ட் டைரக்டர்னா நீங்கதான்
பொறுப்பு. கிளம்புங்க. அட்மின்ல ராதாகிட்ட சொல்லி ஒரு இன்னோவா புக் பண்ணுங்க:”
“சார்,
நாளைக்கு ஒரு ட்ரஸ்ஸும் எடுத்துக்கல”
“நான்
மட்டும் ரெடியாவா நிக்கறேன்? பெங்களூர்ல வாங்கிப்போம்.” கதிரேசன் இருக்கையிலிருந்து
எழுந்தார். சேகருக்குப் புரிந்தது. இனி வேறு சிந்தனைகள் இல்லை. கதிரேசன், தன் கம்பெனியை
நாணயத்திலும், சேவையிலுமே கட்டியிருக்கிறார். அவரளவு விஷயம் போய்விட்ட பிறகு வேறு பேச்சில்லை.
எழுந்து
நடந்தவர் மனதில் நாளை மாமனார் மாமியார் வந்திறங்குவார்களே? என்ற கவலை பெரிதாக எழுந்தது.
லதா ஏற்கெனெவே சொல்லிக் காட்டியிருக்கிறாள். ‘எங்கப்பா எங்கம்மா வந்தா மட்டும் நீங்க
ஸ்டேஷன்ல போய்க் கூட்டிட்டு வரமாட்டீங்க. இதேநேரம் உங்க சித்தப்பா வரட்டும், ஒரு மணிநேரம்
முன்னாடியிருந்தே போன் ஆரம்பிச்சிரும், ’தாம்பரம் இறங்கவேண்டாம். மாம்பலத்துல நான்
வந்துடறேன், சித்தப்பா, படி ஏறவேண்டாம், ஆ, ஊன்னு”. எல்லாம் ஒரு பக்கமாத்தான் பாசம்,
நேசமெல்லாம்”
அவள்
சொன்னதிலும் நியாயம் இருக்கிறது. மாமனார் வயதானவர். மெதுவாகத்தான் இறங்க முடியும்..
ஆட்டோவெல்லாம் தானே பிடித்து வரமுடியாது.பெரும் குற்ற உணர்வுடன் லதாவுக்கு போன் செய்தார்.
எதிர் முனையில் கிடைத்த வசவுகளை வாங்கிக்கொண்டே, கதிரேசனின் கேபினைப் பார்த்தார். அவர்
மின்விளக்குகளை அணைத்துவிட்டு வெளியே கிளம்புவது தெரிந்தது.
“சரி , லதா. பெங்களூர் போயிட்டு கூப்படறேன். கணேஷை விட்டு ஓலா-வுல அப்ஸ் மூலமா ஒரு கால் டாக்ஸி ஏற்பாடு பண்ணச் சொல்லிடறேன். அவன் செஞ்சுடுவான்”
“சரி , லதா. பெங்களூர் போயிட்டு கூப்படறேன். கணேஷை விட்டு ஓலா-வுல அப்ஸ் மூலமா ஒரு கால் டாக்ஸி ஏற்பாடு பண்ணச் சொல்லிடறேன். அவன் செஞ்சுடுவான்”
அடுத்தமுனையில்
லதா ஏதோ தொடங்குமுன் இணைப்பைத் துண்டித்து விட்டு அவசரமாக நடந்தார். அதுக்குள்ளயா இன்னோவா
வந்துருச்சு?
வெள்ளை
இன்னோவாவை துடைத்துக்கொண்டிருந்த நடுத்தர வயதுக்காரர் ஒரு சலாம் போட்டார். “ வாங்க
சார். ரெடி. நேரா பெங்களூர்தானுங்களா?”
“ஆமா”
என்ற சேகர், காரின் பின்கதவைத்த் திறந்து கதிரேசன் அருகே அமர்ந்து கொண்டார்.
“நேரா பொம்மஸந்திரா இண்டஸ்ட்ரியல் ஏரியா..ஓசூர் தாண்டினதும் சொல்றேன். கிளம்புங்க”
“நேரா பொம்மஸந்திரா இண்டஸ்ட்ரியல் ஏரியா..ஓசூர் தாண்டினதும் சொல்றேன். கிளம்புங்க”
வடபழனி
தாண்டியதும் கதிரேசன் கேட்டார் “ ட்ரைவர் , பேரு என்ன சொன்னீங்க?”
“முத்து
சார்”
”முத்து,
பூந்தமல்லி தாண்டறதுக்குள்ள கொஞ்சம் நிறுத்துங்க. லைட்டா ஒரு டிபன் பண்ணிக்கலாம்.அப்படியே
கட்டி எடுத்துக்கலாம். நேரா பெங்களூர். நடுவுல ஒரு நிறுத்தமும் வேணாம்.. எத்தனை மணிக்கு
போவோம்?”
முத்து
ஒரு நிமிடம் மனதில் கணக்கிட்டார் “ ஒரு மூணுமணிக்கு போயிருவோம் சார். ஓசூர் பக்கம்
கொஞ்சம் ட்ராஃபிக் இருக்கும்..ரோடு விரிவாக்கறாங்கல்ல”
“மூணு
மணிக்கு ப்ளாண்ட்ல இருப்போம்னு, ஹெக்டேய கூப்பிட்டு சொல்லிருங்க சேகர்”
கதிரேசன்
இருக்கையைச் சாய்த்துத் தானும் சாய்ந்தார்.
“ரெண்டு
மணி நேர வேலை. இதுக்கு ஒரு வாரம் இழுத்திருக்கீங்க”
“இல்ல
சார். பசவப்பா...”
“அவன்
இல்லன்னா என்ன?” கதிரேசன் சீறினார். “ஹெக்டே சும்மா விடமாட்டான். அடுத்த பேமெண்ட் சீக்கிரம்
வராது , பாத்துட்டே இருங்க”
சிறுமழிசை
வரை சேகர் பேசவில்லை. இப்ப சமாதானமாயிருப்பார் என்ற உத்தேசத்தில் மெல்ல அழைத்தார்.
“சார்,
ஒரு மணி நேரத்துல நான் முடிச்சுருவேன். இன்னிக்கே நைட்டு திரும்பிடலாம். நாளைக்கு நீங்க
டெல்லி போணும்ல?”
கதிரேசன்
வெளியே வேடிக்கை பார்த்தவாறே பேசினார் “ ஆமா. என்ன செய்ய? இதை முடிச்சாத்தான் கிளம்ப
முடியும். பாக்கலாம். நீங்க சீக்கிரம் முடிச்சா நாம நைட்டே திரும்பிடலாம். என்ன முத்து?
ஒரு ஆறுமணி வாக்குல கிளம்பினா பன்னிரெண்டு மணிக்கு வந்துட முடியாது?”
“வந்துறலாம்
சார்” முத்து திரும்பிப் பார்க்காமலேயே பேசினார்.
“உங்க
கைலதான் இருக்கு சேகர், நாம இன்னிக்கே திரும்பறதும் திரும்பாம இருக்கறதும்”
முத்து
அதனைக் கேட்கவில்லை. அவர் மனதில் காலையில் வீட்டில் நடந்த உரையாடல்கள் ஓடிக்கொண்டிருந்தன.
“கேட்டிங்களா?”
முகம் நிறைய சிரிப்புடன் கோமதி அவரருகில் வந்தாள். “ செண்பகாவுக்கு ஸ்கூல்ல முத ரேங்க்க்காம்.
நாளைக்கு பரிசு கொடுக்காங்களாம். “
“அடேங்கப்பா,”
என்றார் முத்து மகிழ்ச்சியுடன் , தன் சீருடைச் சட்டையில் பட்டனை இட்டவாறே.
“செம்பகா,
இங்கிட்டு வா. அப்பா கூப்பிடுதாக”
அருகில்
வந்த மகளை உச்சந்தலையில் முத்தமிட்டார் முத்து, பெருமை பொங்க. “ எம்மவல்லா. அதான் படிப்புல
சுட்டி. “
“ஆமா,
நாங்க முட்டாப் பொட்டை பாரு.”
“ஏட்டி,
அப்பிடியில்லலா. ஒங்கூட என் அறிவும் சேந்திருக்குல்லா. அதான்”
“மழுப்பேண்டா.
நாளைக்கு அவுங்க ஸ்கூல்ல கூட்டிருக்காங்க. நாம ரெண்டுபேரும் போணுமாம். ஸ்கூல்ல கரெஸ்பாண்டெண்ட்கூட
நம்மூர்னுதான சொன்னீங்க?”
”ஆமா,
அதுக்கென்னா?”
“பி.ஈ
படிக்க வைக்கணும்னு ஒரு வார்த்தை போட்டு வைங்க. அவங்க நம்மூர் ஆளுங்கன்னு ஏதாச்சும்
சேஞ்சா நல்லதுங்கேன்”
முத்து
மனைவியைப் பார்த்தார். “ நீஞ்சொல்றது சரிதாண்டி. நம்ம வினை. இப்படி நாய்ப்பட்ட பாடு
படுதோம்.. செம்பகா சொந்தக் கால்ல நின்னுட்டான்னு
வையி. அடுத்தவளுக்கு கவலை இல்ல”
அடுத்த
நாள் காலையில் பத்துமணிக்குதான் விழா. அதுக்குள்ள வந்துடலாம். கரஸ்பாண்டெண்ட்டை எளிதில்
பார்க்க முடியாது. நாளைக்கு நல்ல வாய்ப்பு. முத்துவின் கால் ஜாக்கிரதையாக ஆக்ஸிலரேட்டரை
அழுத்தியது.
“சேகர், வருத்தமா இருக்கீங்களா? “
“இல்ல
சார். நாளைக்கு மாமனார் ..” சேகர் சுருக்கமாக தன் கவலையைச் சொன்னார்.
“எனக்கு
என்னங்கறீங்க? நாளைக்கு என் மனைவிக்கு தொண்டைல ஆப்பரேஷன். மூணுமாசத்துக்கு முன்னாடியே
நாள் குறிச்சாச்சு. “ நீங்க அன்னிக்கு ஒரு நாளாச்சும் எங்கூட இருங்க”ன்னா. சரின்னு
கையில சத்தியம் பண்ணிக் கொடுத்தேன். இப்ப..?”
கதிரேசன்
, சேகரின் மணிக்கட்டைத் தொட்டு அழைத்தார் “ நம்ம வேலை இருக்கே. அது நாய்ப்பாடு. இது இன்னிக்கு நேத்திக்கில்ல, அந்த காலத்துலயே இப்படி
வேலைக்குப் போய் , வீட்டு வேலையை, பொண்டாட்டி புள்ளயப் பாக்கமுடியாமப் போனவனோட வருத்தத்தை.
சங்க காலப் பாட்டுல எழுதியிருக்காங்க சேகர், உங்களுக்கு சங்க காலக் கவிதைன்னா பிடிக்குமா?
“
“அங்?”
என்று விழித்த சேகர், தடுமாறி ” ரொம்பவெல்லாம் இல்லை. ஸ்கூல்ல படிச்சிருக்கேன். யாப்பு,
அணி..”
“அதெல்லாம்
விடுங்க. பாடலை கொஞ்சம் மெனக்கெட்டு படிச்சீங்கன்னா போதும். அட, இப்படியெல்லாம் எழுதியிருக்கானா,
அந்தகாலத்துலேயே?ன்னு அசந்து போவோம்”
“ஆமா,
திருக்குறள்ல..” என்று தொடங்கி சேகர் ஒரு குறளும் தோன்றாமல் விழித்தார்.
“
சங்கப்பாடல்னாலே என்ன நினைப்போம்? தலைவன் தலைவி... சொன்னபடி அவன் வரலை, அவளுக்கு பசலை
நோய். நினைக்க முடியாத அளவுக்கு , சலிக்க வைக்கற அளவுக்கு உவமை.. இதான். ஆனா, வேலைக்குப்
போன ஆணுக்கும் இந்த தேடல் இருக்கும்னும் எழுதியிருக்கான் தெரியுமா?”
”ஆனா,
அந்த ஆணோட வருத்தம் பெண்களுக்குத் தெரியும்னு எழுதியிருக்காங்களா?” சேகர் சிரித்தார்.
லதாவின் தேள் கொட்டுவது போன்ற வார்த்தைகள் நினைவில் எழுந்தன.
“ரொம்ப
எதிர்பார்க்கறீங்க. நம்ம உணர்வு எல்லாம் யாருக்கும் புரியறதே இல்ல. வீட்டுல பொண்டாட்டிகிட்ட
சொல்லிட்டு போருக்குப் போறான். அங்க ரொம்ப நாளாயிருது. அவ வீட்டுலேர்ந்து தூது அனுப்பறா.
இவன் அதைக் கேட்டு மேலும் நொந்து போறான். ஒரு குற்ற உணர்வு. ஆனா வேலை , போர் செஞ்சாகணுமே?
அவன் நிலையை யார் சொல்லுவாங்க?”
சேகர்
சுவாரஸ்யமானார் “ அட அப்படியா?”
“ஐங்குறுநூறுல
முல்லைல சொல்றான். பாசறைப்பத்துன்னு நினைக்கறேன். ம்ம்ம்” கதிரேசன் நெற்றியைச் சுருக்கி
சொற்களை நினைவுகூர்ந்தார். “ஆங். இப்படி போகுது.
’ஐய
வாயின, செய்யோன் கிளி
கார்நாள்
உருமொடு கையறப் பிரிந்தென
நோய்நன்கு
செய்தன எமக்கே
யாமுறு
துயரம் அவள் அறியினோ நன்றே’
கடைசி
வார்த்தையைப் பாருங்க. ”யாமுறு துயரம் அவள் அறியினோ நன்றே” இந்த துன்பம் சொட்டும் வார்த்தையை
அவன் பாணன்கிட்ட தூது சொல்லி அனுப்பறான். இன்னிக்கும் நாம இதத்தான் சொல்லிட்டிருக்கோம்.
என் கஷ்டம் உனக்குப் புரிஞ்சா நல்லது. யாரு புரிஞ்சுக்குவாங்க? வேணும்னா வீட்டுக்கு
லேட்டாப் போறோம். பிடிச்சுப் போயா இப்படி டூர்ல இருக்கோம்?”
சேகர் பெருமூச்சு விட்டார்.
”கோமதிக்கும் இந்த கிறுக்குப் புத்தி உண்டும்”
முத்து நினைத்துக்கொண்டார். ஒரு தடவை குவாட்டர் பாட்டில் கார்ல கிடந்ததை வச்சு ஒரு
மாசம்லா தள்ளி இருந்தா? எளவெடுத்த எதோ கஸ்டமர் போட்டுட்டுப் போனான்னு சொன்னா நம்பணும்லா?
பொம்மஸந்திராவில்
செம்மண் சரளை சரசரக்க அவர்கள் வண்டி கம்பெனியில் நுழைந்தபோது மணி சரியாக மூன்று.
சேகர்
, இருநிமிட உபசார வார்த்தைகளின்பின் , மிஷின் இருக்கும் பக்கம் நகர, ஹெக்டேயிடம் பொறுமையாக
கதிரேசன் விளக்கிக்கொண்டிருந்தார். சாலையின் மூலையில் ஒரு டீக்கடையில் நின்றுகொண்டிருந்த
முத்துவின் செல்போன் அலறியது.
“யப்பா,
நாளைக்கு வந்துருவீங்கல்ல? “செண்பகாதான்.
“வந்துருவோம்ட்டீ.
நான் இல்லாமலா?” அடுத்த முனையில் மகிழ்ச்சியில் சிரிப்பது கேட்டது. மணியைப் பார்த்தார்.
நாலு. அஞ்சரைக்கு கிளம்பினா ட்ராஃபிக்ல மாட்டாம ஓசூர் போயிறலாம்.
சேகர்
மிஷினின் கணனியில் இருப்புகொள்ளாமல் அமர்ந்திருந்தார். ’க்விக். முட்டாள் மெஷினே, உயிர்த்துவிடு.
ரெண்டே ரெண்டு ரிப்போர்ட் துப்பிவிடு. அப்புறம் பசவப்பா வந்து பார்த்துக்கொள்வான்.’
மெஷின்
அமைதியாக இருந்தது. இயந்திரத்தின் எமர்ஜென்ஸி பட்டனை அழுத்தினார். லேசாக கூவிவிட்டு
உயிர்த்து, எதோ விசித்திரமான ஒலி எழுப்பி அடங்கியது.
சேகர்
வியர்த்தார். இது நல்ல சகுனமில்லை. வெற்றிடம் உருவாக்கும் பம்ப்பின் வாஷர் போயிருக்கிறது.
ஆணைகள் பறந்தன. பெங்களூர் ஆபீஸிலேயே வாஷர்கள் இருப்பதாக பசவப்பா தொலைபேசியில் சொன்னான்.
ஹெப்பால் வரை ட்ராபிக்கில் நீந்தி சென்று வர நாலுமணி நேரம் பிடிக்கும் என்று கணக்கிட்டார்
சேகர். ஆறுமணிக்கு கிளம்ப முடியாது. முத்து ‘பரவாயில்ல சார். போயிறலாம்” என்றார்.
இரவு
பதினோரு மணிக்கு வாஷரைப். பொருத்திவிட்டு, வெற்றிடம் உருவாக இரண்டு மணிநேரம் காத்திருந்தனர்.
இரவு ஒன்றரைக்கு, இயந்திரம் ஒரு மாதிரி ”கீங்”என்று உயிர்த்தது. நைட் ஷிப்ட் ஆட்களிடம்
சொல்லி விடைபெற்றுக்கொண்டு அவர்கள் கிளம்பும்போது மணி இரவு மூன்றரை. ஏழரை..எட்டு மணிக்கு
சென்னை போயிரலாம், முத்து கணக்கிட்டார்.
காலை
ஏழு மணிக்கு எழுந்த கதிரேசன் சேகரைத் தட்டிக்கொடுத்தார், “ வெல்டன், சேகர். நீங்க இருந்தா
ஒரு பலம் எனக்கும். நிம்மதியா வீட்டுக்குப் போலாம். நானும் டைவர்ஸ் ஆகாம பிழைச்சேன்”
நிம்மதியுடன்
சிரித்தார் சேகர். “இப்படி வீட்டுக்கு பறக்கற ஆள்களுக்கு பாட்டு ஒன்னுமில்லையா சார்?”
கதிரேசன்
கைதட்டினார் “ அப்படி வாங்க வழிக்கு. சங்கப் பாடல்கள் வொயின் மாதிரி. ஒரு தடவை குடிச்சுட்டு
நிப்பாட்ட முடியாது. சொல்றேன். ஆங். முத்து? இவரை முதல்ல இறக்கிவிட்டிருங்க. அசோக்
நகர்.
முத்து
கணக்கிட்டார். எட்டு எட்டரை. “நீங்க எங்க சார்?” என்றார் முத்து.
“
மடிப்பாக்கம். கொஞ்சம் ஸ்பீடாப் போணும் முத்து”
முத்து
உறைந்தார். ஒன்பதரை மணியாகும். அதன் பின் நான் எங்கே பத்துமணிக்கு கொரட்டூர் போய்ச்சேர?
கதிரேசன்
தொடர்ந்தார் “வேலையை முடிச்சுட்டுக் கிளம்பற தலைவன் தேர்ப்பாகன்கிட்ட சொல்றான். பட்டையக்
கிளப்பிட்டுப் போ. சீக்கிரம் “
கடும்பரி
நெடுந்தேர் கால்வல் புரவி,
நெடுங்கொடி
முல்லையொடு தளவமலர் உதிர,
வரயுபு
கடைஇநாம் செல்லின்..”
அடுத்த
வரி என்னமோ வளைன்னு வரும். அதை விடுங்க. நம்ம தேர்ப்பாகன் முத்துதான். கடும்பரி நெடுந்தேர்..
தெருவுல மண்ணைப் பறிச்சு தூவிகிட்டு சக்கரம் சுழல ஓடும் தேர்ங்கறான், வல்கால் புரவி
, வலிமையான கால்களை உடைய குதிரை. இன்னோவாவுல எத்தனை குதிரைத் திறன்? 100 bhp இருக்குமா
சேகர்.? நூறு குதிரை பூட்டிய ஆறு சக்கரத் தேர் இது. நம்ம நிலமைக்குன்னே அன்னிக்கு எழுதின
மாதிரி இருக்குல்ல? “
முத்து
அழுக்கான மஞ்சள் துண்டில் முகம் துடைத்தார். எல்லாப்பாடல்களும் தலைவன் தலைவியைச் சேர
மட்டும்தானா? பாகனுக்கும் வீடு உண்டே? அவனுக்கு யார் பாடல் எழுதுவார்கள்? பாகன் வலி
புரியுமா புலவர்களுக்கு?
மகள்
மேடையில் தனியாக இருப்பதாக காட்சி நீரில் மங்கிய அவர் கண்ணில் விரிந்தது.