Friday, April 24, 2015

முற்பகல் செய்யின்...


ஏர் இந்தியா விமானம் தாமதமாகக் கிளம்புகிறது என்று குறுஞ்செய்தி வந்தது. “இந்தியப் பிரதமர் பெயர் மோடி” என்பது போன்ற செய்திகளை நான் வாசிப்பதே இல்லை. எப்போது போனாலும் ஒரு மணி நேரம் கழித்தே கிளம்புமென்பதால் தில்லி T3 அடையுமுன் முன்பு ஆர்மி ஹாஸ்பிட்டல் அருகே இருந்த போக்குவரத்து நெரிசல் ஒரு பொருட்டாகவே படவில்லை.

நிறைய நேரமிருந்ததால் லவுஞ்சில் அமர்ந்து கொண்டேன். இங்கே யாரும் காச் மூச் என்று செல்போனில் கத்தமாட்டார்கள். எந்த குழந்தையும் அலறா...
’வீல் வீல்’ என்று சத்தம். இங்குமா? கடவுள் என்ற கொடியவனை திட்டிக்கொண்டிருக்கும்போதே எனது பயத்தை முன்னே கண்டேன்.

ஒரு குழந்தை , கீச் கீச் என்ற ஷூக்கள் சப்திக்க தளர்நடை போட்டு வந்து உட்கார்ந்திருந்த எனது முழங்காலைப் பிடித்து பேண்ட்டைக் கடித்து நின்றது. துணியைக் கடித்தால் திக்குவாய் வருமாமே? என்று கவலையுடன் அதன் வாயிலிருந்து மெல்ல பேண்ட்டை உருவினேன்.

அதற்குள் ஒரு கத்தல். பின்புறம் ஒன்று வைக்கலாமா? என்று கை துறுதுறுத்தபோது, அதன் அம்மா ஓடிவந்தாள்.

ஒரு வரிசை பின்புறம் தள்ளி அமர்ந்திருந்த அவள் குழந்தையை செல்லம் கொடுப்பதையும், அது மீறி அடம்பிடித்து கால் உதைத்து அலறுவதையும் கேட்கும் கொடுமையில் தள்ளப்பட்டேன்.

அருகில் அமர்ந்திருந்த மனிதர் புன்னகையுடன் என்னைப் பார்த்து சிரித்தார். இரு கோக் ஜீரோ கேன்களை எடுத்துவந்து ஒன்றை என்னிடம் நீட்டினார். நன்றி என்றவன் ,பின்னால் கேட்ட அலறலில் மீண்டும் முகம் சுருங்கினேன்.

“ கொடுமை என்னவென்றால், எந்த குழந்தை அழுகிறதோ அது நம்முடம் பயணிக்கும். எது தூங்குகிறதோ அது வேறொரு விமானத்தில் பறக்கும்” என்று பொன்மொழி உதிர்த்தார் அவர்.

’உமது தலையில் இடி விழ’ என்று நினைத்துக்கொண்டே அவருடன் பரியச்சமானேன். கல்கத்தா போகிறார். தத்தா என்று பெயர் சொன்னார்.

”நமது வயதில் இப்படியெல்லாம் அதிருப்தியைக் காட்டக்கூடாது. பெரியவனா லட்சணமா நடந்துக்கத் தெரியலை என்று திட்டுவார்கள். பைல்ஸ் இருப்பதைக் காட்டாமலேயே முகத்தில் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு நாற்காலியில் அமர்பவர்களைப் போல இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்: என்றார்.

“அட. பறக்கும்போது சரி, காற்று அழுத்த வேறுபாடு.. காது வலிக்கும், கத்தும். இப்ப என்ன கேடு இதுகளுக்கு?”

“உங்களுக்கு புரியவில்லை. அது பழிவாங்குகிறது”

“அங்?” என்றேன்.

“சும்மா விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையைப் பிடித்திழுத்து வாயில் திணிக்கும் தாய்மார்களை , அவை என்ன செய்ய முடியும், திமிறினால், கையைக் காலை அழுத்திப் பிடித்துக்கொண்டுவிடுவார்கள். எனவே, எப்போது தாய் தந்தைகள் ஓய்வெடுக்கின்றனரோ, அப்போது இவை கத்தி, விறைத்து உயிரை வாங்குகின்றன. பழிக்குப் பழி.”

“அட, இப்படி ஒரு தத்துவம் இருக்கிறதா? இது என்ன இஸம்? ” என்றேன்.
“Natal Fatalism நேட்டல் ஃபேட்டலிஸம் " என்றார் தத்தா பெரிதாகச் சிரித்துக் கொண்டே. கோக் புரையேறி மேலும் அதீத ஒலிகளை எழுப்பி அனைவரையும் எங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.

உடல் குலுங்கி, செருமி, தண்ணீர் குடித்து அவர் சரியாகும் வரை நான் என் நினைவுகளில் மூழ்கினேன்.

இந்தப் பெண் , சராசரி இந்தியத் தாயாக, அந்தக் குழந்தை தூங்கும்போது குளிப்பாட்டி, அலற வைத்து, உடலெங்கும் ஜான்ஸன் பேபி பவுடர் போட்டு, மூடிய விழிகளை மெல்லத் திறந்து, மை இட்டு, மாட்டு மூத்திர மஞ்சள் கலரில் இருக்கும் மல்ட்டி வைட்டமின் சொட்டு மருந்து ஒன்றை, இங்க்பில்லர் போன்ற ஒரு ட்ராப்பரில் ஒரு மி.லி எடுத்து, நாக்கை மடித்து ழக் ழக் என்று வினோத ஒலி எழுப்பி, குழந்தையை பீதியில் அலற வைத்து, அதன் உதட்டின் ஓரமாக இங்க் ஃபில்லரை நுழைத்து , அது க்ளக் கள்க் என்று ஒலியெழுப்பி பெருங்குரலில் அழுமுன் வாயில் புகட்டியிருப்பாள்.
மடியிலிருந்து விறைத்து உன்னித் துள்ளித் தாவும் குழந்தையின் காலையும் , கையையும் அழுந்திப் பிடித்துக்கொள்ளும் சிறுவர் சிறுமிகளையும் அதன் விழிகள் கவனிக்கத் தவறுவதில்லை. நீயா படத்தில் வரும் இச்சாதாரிப் பாம்பு எல்லாரையும் கண்ணில் போட்டோ எடுப்பது போல நமது பிம்பங்கள் அதன் மூளையில் பதிவாகியிருக்கும். சிறுவயதில் இது போல “டேய், இது காலைப் பிடிடா” என்ற அழைப்பிற்கு ஓடிப்போய் குழந்தைகளுக்கு செய்த கொடுமைகள் நினைவுக்கு வந்தன.

தன் வினை தன்னைச் சுடும்.

I bloody well deserve what I go through.

No comments:

Post a Comment