Saturday, April 11, 2015

கம்பனை ரசித்தல் - 2

மும்பை தமிழ்ச்சங்க நூலகத்தில்\ நூலகர் 7 மணிக்கு அடைத்துவிட்டுப் போகக் காத்திருந்தார். கடைசி ஆளாக நான். இருக்கிற நாலு பட்டியல்களில் ,ரமணி சந்திரன் புத்தக வரிசை ரெண்டு பக்கம் ஓடுகிறது. பி.எஸ். இராமையா, லா.ச.ரா என்றால் தேட வேண்டியிருக்கிறது.
ஒரு வழியாக இரண்டு லா.ச.ரா புத்தகங்களை எடுத்துக்கொண்டு கீழிறங்குகையில் வாசலில் நின்றிருந்த அந்த மனிதர் அழைத்தார். இரு முறை அவரை நூலகத்தில் பார்த்திருக்கிறேன். பேசியதில்லை.
“பேஸ்புக்ல உங்க பதிவு பாத்தேன். கம்பனோட பாடல்களுக்குள்ளயே தொடர்பு இருக்குங்கறீங்க.கம்பனோடு, பிற புலவர்களின் பாடல்களுக்கும் இது மாதிரி தொடர்பு இருக்கும் இல்லயா?”
“உங்களுக்கு பதில் சொல்லுமளவு அனுபவமும், அறிவும் எனக்கு இல்லை” என்று முதலிலேயே சொல்லிவிட்டேன். Caveat கொடுத்துவிட்டு பேசுவது நல்லது. வாயைத் திறப்பதன் மூலம் முட்டாள்தனத்தை வெளிக்காட்டிக்கொள்ளும் வரிசையில் நான் முதலாவதாக இருப்பதை அறிவேன்.
“ அட, சும்மாத்தான் பேசறோம். உங்கள மேற்கோள் காட்டி புக்கா எழுதப்ப்போறேன்? வாங்க ஒரு டீ குடிச்சுகிட்டே பேசலாம். “ என் ஆக்டிவாவில் அவரைப் பின் தொடர்ந்து , சயான் மருத்துவமனை அருகே ஒரு சிறு ஓட்டலின் வாசலில் நின்றோம்.
“நீங்க எழுதியிருந்த வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியாரின் புத்தகங்கள் எங்க கிடைக்கும்?” என்று தொடங்கினார். சொன்னேன்.
“அதுல இப்படி கேள்விகளுக்கு பதில் இருக்குமா? எதுக்கு கேக்கறேன்... வாங்கிப்போட்டு சும்மா கிடக்கும் பாருங்க.”
“அவர் விளக்கவுரையில பல புத்தகங்களின் மேற்கோள் காட்டியிருப்ப்பார். பெரும்பாலும் அவை வைணவ நெறி சார்ந்த புத்தகங்களாகவே இருக்கும். நம்மாழ்வார் பாசுரங்கள், பிள்ளை லோகார்யனின் கிரந்தங்கள் என்பதிலிருந்து இருக்கும்” என்றேன்.
“எனக்கு இவையெல்லாம் அதிகம் பழக்கமில்லையே?நான் நினைக்கற மாதிரி கம்பன் படிக்கணும்னா நம்மாழ்வார் பாசுரம் படிக்கணுமா? ”
“நம்மாழ்வார்னு இல்லை. கம்பன் ஆழ்வார்களில் ஆழ்ந்தவன். கம்பநாட்டாழ்வான் என்றே இன்று அழைக்கப்படுகிறான். திருப்பாவைன்னு கேட்டிருக்கீங்களா?”
“தெரியும் சார்.” சிரித்தார். “ ஓரேடியா மட்டம் தட்டிறாதீங்க.”
“ஸாரி. உங்கள குறைவா எடை போடலை. கேட்டுக்கறது நல்லது பாருங்க. அதுல ஒரு பாசுரம் “ சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்திற்கினியானே “ன்னு ராமனைப் பாடுவாள் ஆண்டாள்”
அவர் முணுமுணுப்பது கேட்டது..” அங். கேட்ட மாதிரி இருக்கு. திருப்பாவை புஸ்தகத்துல பாத்துடறேன். சொல்லுங்க”
“சினத்தால் இலங்கையரசனை அழித்தான் இராமன். சினம் என்றால் கோபம் என்றும் விரைவு என்றும் பொருள் உண்டு. இதுல நாம கோபம் என்று மட்டும் வைச்சுக்கலாம்.”
”சரி”
“அப்படியே கம்பனுக்கு வாங்க. யுத்த காண்டம் .. ராவணனது உயிரற்ற உடல் ஆகாயத்திலிருந்து கீழே விழுது. ராமனும் ஆகாசத்துலேர்ந்து இறங்கி, அருகே போய் ராவணனோட உடலைப் பாக்கறான். ராவணன் முதுகில் தந்தங்கள் குத்தி வட்ட வட்டமா தழும்பு தெரியுது. திசையானைகளின் பெரிய தந்தம். ராமன் விபீஷனன் கிட்ட சொல்றான்” இப்படி யானைத் தந்தம் முதுகுல குத்தற மாதிரி புறமுதுகு காட்டியோடியிருக்கானே? இவன் கூட போரிட்டதுல என் வீரத்துக்கு இழுக்கு”
“அட. அங்!. இப்படி வேற இருக்கா?”
“படிச்சுப் பாருங்க. அழுதுகிட்டிருக்கான் விபீஷணன்.. அண்ணன் செத்துட்டானேன்னு. இதுல ராமன் வேற இப்படி குத்திப் பேசறான். விபீஷணன் ராமன் கிட்ட சொல்றான் “ ராமா, ஒரு வீரனைப்பத்தி இப்படி பேசறது உனக்கு அழகில்லை. ராவணனை வென்றவர்கள் ரெண்டே பேர். ஆயிரம் கை உடைய கார்த்தவீரியார்ச்சுனன் மற்றும் வாலி. இவங்க ரெண்டுபேருமே தேவர்கள் தந்த வரத்தின் வலிமையால் மட்டுமே ஜெயிச்சாங்க. தாயைத் போல தொழத்தக்க சீதை மேற் கொண்ட தகாத காதல் என்ற செயலும், அதனால் விளைந்த உனது சினமும் இல்லாவிட்டால் அவனை யார் வெல்ல முடியும்?”
'”ஆயிரம் தோளினானும், வாலியும், அரிதின், ஐய!
மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த;
மெய்ம்மை தாயினும் தொழத் தக்காள்மேல் தங்கிய காதல்-தன்மை
நோயும் நின் முனியும் அல்லால், வெல்வரோ நுவலற்பாலார்”
என்கிறான். ராமன் ”அடடா! இராவணன் பெரிய வீரந்தான்” என்கிறான். என்னமோ இவனுக்குத் தெரியாத மாதிரி கேக்கறதும், விபீஷணன் வாயாலயே ராவணன் புகழை உலகுக்குத் தெரியப்படுத்தறதுமா ஒரு நாடகம்.
இப்ப திருப்பாவை வாசகத்தைப் பாருங்க ” சினத்தினால் தென்னிலங்கை கோமனைச் செற்ற” ஆக, இராமனின் சினம் என்பதே இராவணனின் அழிவை ஏற்படுத்தியது என்பதை இருவரும் சினம், முனிவு என்ற வாக்கை வைத்து விளையாடியிருக்காங்க பாருங்க”
“ப்ச் ப்ச்” என்று உச்சுக் கொட்டினார் அவர். ”வாங்கிற வேண்டியதுதான். அடுத்த தடவ மெட்ராஸ் போறப்ப, வை.மு.கோ உரையில இப்படியெல்லாம் இருக்கோ?”
நான் பதில் சொல்லாமல் விடைபெற்று வண்டியைக் கிளப்பினேன். இது இல்லையென்றால் என்ன? உரையிலெத்தனையோ அருமையான விளக்கங்கள். அப்படியாவது அவர் அந்த உரையை வாங்கிப் படிக்கட்டும்.

No comments:

Post a Comment