Saturday, April 11, 2015

இந்தியம்

 “இன்று ஒரு துக்க நாள்.” சித்தார்த் மேல்நிலைப்பள்ளியின் ஏழு ஸி வகுப்பறையில் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை, வழக்கம்போலக் கூடிய சங்கத்தின் மாதக்கூட்டத்தில் தலைவர் மேகநாத் சொல்லிக்கொண்டிருந்தார். ”பாக்கிஸ்தானியர்கள் வெறித்தனமாக மும்பை மீது தாக்குதல் நடத்திய கொடுமைக்கு மேலாக அவர்களது சதி இன்று வெளிப்பட்டிருக்கிறது”. 

ஏதோ ஒரு மொபைல் அலறியது. எரிச்சலில் மற்றவர்கள் ப்ச் கொட்ட, மொபைலின் சொந்தக்காரர் அவசரமாக அதனை யாருக்கும் தெரியாவண்ணம் ஸ்விட்ச் ஆஃப் செய்தார். கூட்டங்களில் மொபைல் அலறுவது, அபான வாயு வெளிப்படுவதைப்போல சங்கடமான ஒன்று.

தலைவர் கண்டுகொள்ளாதமாதிரி தொடர்ந்தார். “ அந்த கொலைகாரக் கும்பலில் தலைவன் சயீத் லக்வியை பாகிஸ்தான் இன்று விடுதலை செய்திருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்திய மண்ணில் சாகக் காரணமாக இருந்தவன் கொண்டாடப்படுகிறான். இதனை எதிர்த்து நமது சங்கம் இன்று கறுப்புப் பட்டை அணிந்து, இறந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏற்றி, ஊர்வலமாக வந்து அஞ்சலி  செய்யுமென தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். வருகிறவர்கள் இங்கு பதிந்து கொள்ளலாம்.”

“யாரைக்கேட்டு இந்த முடிவை எடுத்தீர்கள்?” தமிழரசன் உரக்கக் கேட்டார்.
கேட்காத மாதிரி பாவனை செய்து கொண்டே தலைவர் “ கருப்புப் பட்டையை இடது புறம் நிற்கும் திருமதி. லதாங்கியிடம் பதிவு செய்து பெற்றுக்கொள்ளுங்கள். மெழுகுவர்த்திகள், டி.வி கவரேஜ் எல்லாம் சேர்த்து தலைக்கு இருநூறு ரூபாய் வருகிறது. அதனைச் செலுத்தி”

”ஹலோ. கூட்டம் எப்போது இந்த தீர்மானத்தை நிறைவேற்றியது? எங்க கிட்ட கேக்கவேயில்ல?” தமிழரசன் எழுந்திருந்தார்.

“உக்காருங்க” என்பது போல சைகை காட்டினார் , சைக்கியா, மேடையிலிருந்தவாறே. அதற்குள் பரதீப் வர்மா தமிழரசன் கையை இழுத்து வெளியே அழைத்தார். திமிறிக் கையை விடுவித்தவாறே தமிழரசன் மீண்டும் கூவினார் “ எனக்கு இந்த தீர்மானத்தில் ஒப்புமை இல்லை. முதலில் கூட்டத்தில் கேட்டுவிட்டு முடிவெடுங்கள்.”

கூட்டம் சலசலத்தது. தமிழரசனை வலுக்கட்டாயமாக ப்ரதீப்பும், முகேஷ் ஜோஷியும் அருகிலிருந்த ஏழு டி வகுப்பறைக்கு அழைத்துப் போனார்கள்.
”என்ன பிரச்சனை தமிழ் உங்களுக்கு? எதுவாயிருந்தாலும் மீட்டிங்குக்கு அப்புறம் பேசிக்கலாம்”

“மீட்டிங்க்தான் பிரச்சனை சார். யார்கிட்ட கேட்டு இந்த முடிவை எடுத்தீங்க?”

“யார்கிட்ட கேக்கணும்? இந்தியர்களுக்கு எதிரா நடக்கிற ஒரு விசயத்துக்கு நாம எதிர்வினையைக் காட்டறோம், ஒரு இந்தியக் குடிமகனாக. இதில் என்னா தமிழ், தப்பு கண்டுட்டீங்க?”

“பாகிஸ்தானை எதுத்து இங்க காட்டறதுக்குப் பேரு ஒற்றுமை இல்ல ப்ரதீப் சார். மனுசத்தனத்துக்கு எதிரா நடக்கற கொடுமைக்கு என்ன சொல்லியிருக்கோம் இதுவர?”

“ஏன் செய்யலை? போன வாரம், அந்தேரியில ஒரு பெண்ணை தூக்கிட்டுப் போய் கற்பழிச்சு ஆரே காடுகள்ல வீசினதக் கண்டிச்சு ஊர்வலமாப் போய் ஒரு பெட்டிஷன் கொடுத்தோமே? அது பேரு என்ன?”

மனீஷ் ஜோஷி இடை மறித்தார். “அத விடுங்க, போன வருஷம், பெஷாவர்ல நூத்துக்கும் மேலா குழந்தைகளை அநியாயமா பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொன்னுபோட்டதுக்கு நாம இங்க போபால் பப்ளிக் ஸ்கூல் பிள்ளைங்களை வச்சு, மெழுகுவர்த்தி ஏற்றிய ஊர்வலம், அனுதாபக் கூட்டம், மலர்வளையம் வைக்கலையா?”

தமிழரசன் தன் உள்ளங்கையில் குத்தினார் “ அப்படி வாங்க சார். வெள்ளையும் சொள்ளையுமா பாகிஸ்தான் பிள்ளைங்க, அதுவும் ஆர்மி ஸ்கூல்ல படிக்கற செல்வந்தக் குழந்தைங்க செத்துப் போனதுக்கு இங்க இருக்கிற பிரபல பள்ளியில, நல்லாத் தின்னு வளர்ந்த வெள்ளைத்தோல் செல்வந்த பிள்ளைங்கள வச்சு அனுதாபக் கூட்டம்.  ஏன் கும்பகோணம் பள்ளியில தொண்ணூறு கருப்புக் குழந்தைங்க , எரிஞ்சு கரியாப் போனப்போ , ஒரு பள்ளியிலேர்ந்தும் ஒரு அனுதாபக் கூட்டமும் வரலை. ஏன், நம்ம சங்கம்கூட நடத்தலை.  ”

“ஏன் வைக்கல? நாம ஒரு நிமிசம் மவுன அஞ்சலி வைச்சோம், அடுத்த மீட்டிங்கல, இல்ல ஜோஷி?”

தமிழரசன் வறண்ட குரலில் சிரித்தார் “ என்ன மீட்டிங் சார் அது? ஓய்வு பெற்ற ஒரு பேராசிரியை டெல்லிலேர்ந்து வந்தாங்கன்னு, மாச மீட்டிங் கோட்டாவை அவங்களைப் பேச வைச்சு முடிச்சீங்க. ஏன் அவங்க?ன்னு கேட்டா, தலைவரோட சொந்தக் காரங்க. மும்பை மீட்டிங்க்ல பேசறேன்னதும் ஆவலா ஒத்துகிட்டாங்க. ரெண்டு குழந்தைகளுக்கு பரிசு கொடுக்கற மாதிரி , டைம்ஸ்ல ஒரு போட்டோ வந்திருக்கும்.”

“தமிழரசன், ஓவரா போறீங்க”

“அப்படியா? சரி. மவுனமா ஒரு நிமிசம் நின்னது அந்தக் குழந்தைங்க இறந்ததுக்கு இல்ல. சங்கத்தோட மூத்த சந்தாதாரர் செத்துப்போயிட்டார்னு நின்னோம். நல்லா யோசிச்சுப் பாருங்க மிஸ்டர். எனக்கு மறக்கல.”

ஜோஷி மவுனமாக நின்றார். அவருக்கு இது சுத்தமாக நினைவில் இல்லை.
“ஏன் அந்த குழந்தைகளை நினைவு கூரலை? அவங்க கருப்பு, குட்டையா, குச்சியா நோஞ்சானா நீங்க நினைக்கிற டிபிக்கல் திராவிட குழந்தைகள். இதே ஒரு பஞ்சாபி சாயல் குழந்தை செத்திருந்தா ஒப்பாரி வைச்சிருப்பீங்க. “

“ நோ, யூ ஆர் ராங், தமிழ்” 

“ நாட் அட் ஆல். அத விடுங்க, வடகிழக்கு மாணவர்களை டெல்லியில சீனி, சீனின்னு சீனாக்காரன்னு ஏளனம் பண்ணி அடிச்சாங்க, பெங்களூர்ல அடிச்சாங்க. அதுக்கு எங்க உங்க கண்டனக் கூட்டம். நம்ம சங்கத்துல இருந்த ஓரேயொரு மணிப்புரிக்காரருக்கும் அழைப்பு அனுப்பறத நிறுத்திட்டிங்க”

“இல்ல, அனுப்பினோம். அதுக்கெல்லாம் மதிப்பு கொடுத்து க்ருஷ்ண தாஸ் மீட்டிங்குக்கு வர்றதேயில்ல. “

“ஓகோ. அவர் பேரு பாத்து முதல்ல ஏதோ பெங்காலின்னு நினைச்சு அழைப்பு அனுப்பினீங்க. அவர் சப்பை மூக்கா வந்து நின்னதும், அடுத்த மீட்டிங்குக்கு  அழைப்பு போகவேயில்லை. லெட்ஜரைப் பார்க்கலாமா? நான் பாத்துட்டுத்தான் சொல்றேன் மிஸ்டர் ஜோஷி.”

ஜோஷி கையைப் பிசைந்தார். இது யதேச்சையாக நடந்திருக்கும், தமிழ் அதைப்பிடிச்சுக் கொண்டுவிட்டார். 

சங்கர ராமன் அறையில் நுழைந்தார். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் அவர் மும்பை வந்து நான்கு வருடங்கள் ஆகியிருந்தன. சங்கத்தின் கூட்டங்களில் தவறாது கலந்து கொள்வார். நீறு அணிந்த விசாலமான நெற்றி. கருத்த உடல், தூய நாலு முழ வேட்டி, வெள்ளை சட்டை என தனித்துத் தெரிவார். 

“தமிழ் சார், விட்டுறுங்க. அப்புறம் பேசலாம்” என்றார் ராமன்.

”என்ன சார், அப்புறம் பேசறது? நீங்களும் இந்த ஆரிய மாயை உள்ள ஆளுதான? ஏன் பேசமாட்டிங்க?”

சங்கர ராமன் சிரித்தார். “ என் தோலைப் பாத்து சொல்லுங்க, தமிழ்.   இங்க இருக்கறவன் எவனைக் கேட்டாலும் “அந்த கருப்பு மதராஸி”ன்னுதான் சொல்லுவான். 60கள்ல டெல்லியில , பைல் கட்டுகளைக் கூட, நான் தொட்டா ஒரு மாதிரிப் பாத்தவன்கள் உண்டு. தமிழ்நாட்டின்  60களின் எச்சம் இன்னும் உங்களை விடல  போலுக்கு. சரி வுடுங்க. கூட்டத்துல  கலந்துக்கலாம். வாங்க”

“வரலை ராமன். இவங்களோட போலி வேசம் வெறுப்பா இருக்கு. பாகிஸ்தான்ல குழந்தை செத்தா இவனுக அழுவானுக. இந்தியாவுலேயே செத்தா கண்டுக்கவே மாட்டாங்க. பேசாம தனி நாடா வாங்கி நாண்டுகிட்டு செத்திருக்கலாம்”

ராமன் அமர்ந்தார் “ சரி, நீங்க என்னத்தைக் கண்டுகிட்டீங்க?”

“அங்?” 

“ஆந்திராவில் ஒரிசா கொத்தடிமைகளைக் குறித்து நீங்க ஏன் பேசலை?. கேரளாவுல படகு கவிழ்ந்து பல குழந்தைகள் இறந்தன. தமிழ்நாட்டுலயே எத்தனை பேர் கண்டுகிட்டோம்? தமிழ்நாட்டு ஓட்டல்ல வேலை பாக்கற வடகிழக்கு ஆளுங்கள என்ன சொல்லிக் கூப்பிடறீங்க? அவங்கள ஒழுங்கா இந்தியரா , அட ஒரு மனுசரா பாத்திருக்கமா?விடுங்க, இங்க தாராவியில இருக்கிற தமிழர்கள்ல எத்தனைபேர் மிக மோசமா நடத்தப்படறாங்க? தமிழ்நாட்டுல வேணாம், மும்பையிலேயே நீங்களும் நானும் என்னிக்காவது குரல் கொடுத்திருப்போமா? குழந்தைகள் தோல்ல நிறம் பாக்கறதா சொல்றீங்களே? ஒரு விதத்துல நீங்க பாக்கறதும் அப்படித்தான். நைஜீரியாவுல பள்ளி கல்லூரி மாணவர்களை சுட்டுக் கொன்னதுக்கு குரல் கொடுக்கணும்னு நீங்க சொல்றீங்களா? இல்லையே? ஏன் அவங்க, நம்ம விட கருப்புன்னா?”

“ராமன், பேச்ச மாத்தாதீங்க. இவங்களுக்கு மனிதத்துவம் இல்லன்னு சொல்லிட்டிருக்கேன்”

“அதுக்கு முதல்ல நாம , நமக்கு இருக்கான்னு பாக்கணும். நாம மனுசனா, இந்தியனா, தமிழனா இருக்கமான்னு பாத்துட்டு பேசணும். இங்க தப்பு செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும், தமிழ்”

“ எனக்கு இது பிடிக்கலை”

“அப்ப பிடிச்சதைச் செய்யுங்க. தாராவியிலயோ, ஆரே பக்கம் உள்ள குடிசைலயோ இருக்கறவங்கள பத்தி தமிழன் தமிழ்ன்னு முதல்ல உதவி செய்ங்க. அப்புறம் எதிர்க்கலாம்.”

“ராமன்” தமிழரசன் மிக அருகில் வந்தார். “உங்களுக்கு இவங்க செய்யற போலித்தனம் பிடிச்சிருக்கா?. ஆமான்னா, எனக்கு சொல்லறதுக்கு ஒண்ணுமே இல்லை. கோ அஹெட்”

சிரித்தார் சங்கர் ராமன் “ இத விட நிறவெறியும், போலித்தனமும் நிறைஞ்ச நாம குறைசொல்லறதுங்கறது “ ஈயத்தைப் பாத்து இளிச்சதாம் பித்தளை”ங்கற மாதிரி இருக்கும். ஏதோ நம்மால முடிஞ்சத செய்வோம். இந்தியனா எப்ப நமக்கு துடிக்கறதோ, எப்ப மனுசனா துடிக்கறதோ, அப்ப மத்தவங்களைப் பத்தி பேசலாம், தமிழரசன்.”

தமிழரசன் எழுந்தார். வாசலை நோக்கி நடந்தார். சங்கர ராமன் உள்ளே பார்த்தார். அடுத்த அறையில் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. 

No comments:

Post a Comment