Sunday, April 19, 2015

கருப்பு ,வெள்ளை, க்ரே உலகம்

”எல்லாம் டிஜிட்டல்தான், இல்லயா சார்?” என்றேன். 1987ல் எலக்ட்ரானிக்ஸ் , பி.எஸ்ஸி பயல்களை ப்ரமிக்க வைத்திருந்த காலம். Electronics For You போன்ற புத்தகங்கள் சிலரை கோட்டி பிடிக்க வைத்திருந்தன.
கிருஷ்ணன் சார் சிரித்தார். “டே, எல்லாமே டிஜிட்டல்ங்கறது கொஞ்சம் ஓவர்டே. பூலியன் அல்ஜீப்ரா சில விசயத்துக்குத்தான் பொருந்தும். உலகம்கறது கருப்பு வெளுப்பில்லை. கொஞ்சம் க்ரே கலராத்தான் இருக்கும்.”
“சார், ஒண்ணு வாழறோம், இல்ல சாகறோம், பாஸ் ஆகறோம் இல்ல பெயில் ஆறோம். இதெல்லாம் டிஜிட்டல்தானே சார்?”
“ இந்த ரெண்டுலேயும் இல்லாததுதான் வாழ்க்கை. அன்பு, காதல், பாசம் எல்லாம் வெறுப்பு, தவிர்ப்புங்கறதுக்கு எதிர் மறை இல்ல. இது இருந்தா அது இருக்காதுன்னும் இல்ல. சரி, புரிய இன்னும் வயசிருக்கு உனக்கு. செமஸ்டருக்கு ஒழுங்கா படி. வெளங்குதா?”
அதன்பின் மார்க்ஸிய கொள்கை வாதம், கடவுள் மறுப்பு என்று நீண்டு, அதனின்று விலகி வாழ்க்கை வேறு பாதைகளில் ஓடி விட்டதுதான்.
ஒரு கேள்வி உறுத்திக்கொண்டே இருந்தது. ரியலிஸம், யதார்த்தம், இன்று கண் முன்னே , கருவிகள் முன்னே புலன்களினுடே புரிவது மட்டுமே நிஜம். அதைத்தான் அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. நிரூபிக்கப்படாவிட்டால் அது நிஜமில்லை.
ஆனால், அறிவியல் நிருபிக்கப் படாததை விலக்குவதில்லை. சான்று கிட்டும்வரையில் அதனை இருக்கலாம் என்ற நிலையில் ஒத்தி வைக்கிறது.
இருத்தல், இல்லை, இருக்கலாம் என்ற நிலை தாண்டி, இவையனைத்தும் அல்லாத ஒரு நிலையும் , நிலையற்ற ஒர் நிலையும் சாத்தியமா? ஜைன மதத்தின் ஏழு நிலைகள் சொல்லப்படுகின்றன. இதனை அரவிந்தன் நீலகண்டனின் இந்த அழகிய கட்டுரையில் காணலாம்.
ஒன்றின் இருத்தல் கொண்ட புரிதல் கொண்டே, அதன் இல்லாதிருத்தல் என்ற நினவு நிலை தோன்றுகிறது. நாம் அறியாத ஒன்றை இருக்கிறது என்றோ இல்லாதது என்றோ சொல்லமுடிகிறதா?
நேற்று வெறுமே இருந்த நிலையில் திருவாய்மொழியையை வாசித்துக் கொண்டிருந்தேன்.
அறிந்த, அறியா நிலையில் பரம் என்பதை நம்மாழ்வார் காட்டுகிறார்.
”ஆணல்லன் பெண்ணல்லன் அல்லால் அலியுமல்லன்
காணலுமாகான், உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணும்கால் பேணும் உருவாகும்; அல்லனுமாம்
கோணைத்திறம் படைத்த எம்பெம்மானைக் கூவுதலே?”
”அவன் ஆண் பெண், அவையற்ற நிலை என்ற பால் கொண்டவன் அல்லன். காண இய்லாதவன். இருப்பவன் அல்ல. இல்லாதிருப்பவன் அல்ல.
என்ன மாதிரி நினைக்கிறோமோ அந்த உருவில் இருக்கிறான். இதுதான் அவன் இயல்போ என்றால், அதனையும் தாண்டி அது அல்லாதவனாக இருக்கிறான். இவனை எப்படி அழைப்பேன்?”
உளன் அல்லன் ,இலன் அல்லன், அல்லனுமாம்.
உலகம் பலதிறப்பட்டது.
திருவாய்மொழியை மூடி வைத்து,கண்களை மூடினேன். கண்ணுக்குள் கண்ணனும், க்ருஷ்ணன் சாரும் சிரிக்கிறார்கள்.

1 comment:

  1. எதை எப்படித் தொடர்புபடுத்தியிருக்கிறீர்கள். வெகு நன்று. திறமை இருக்கிறது. நீங்கள் திருவாய்மொழியில் பல பாடல்களுக்கு இவ்வாறு தொடர்புபடுத்தி புனைவை எழுதவேண்டும். அப்படி எழுதும்போது, பாசுரத்தின் அர்த்தத்தையும் (பொது மொழியில்) எழுதவேண்டும். Over a period, it would become எண்ணிப் பெருமைகொள்ளும் படைப்பாகிவிடும்.

    ReplyDelete