Saturday, April 11, 2015

நகையுணர்வும் உணவும்

"அட, டோல் கேட்டுக்கு முன்னாடின்னு சொன்னேனே?” த்ரிபாத்தி ரெண்டாவது முறையாக எழுந்து வாசலுக்குப் போய் போனில் கத்திக்கொண்டிருந்தார்.
விசயம் இதுதான். இரண்டு வாடகைக் கார்கள். ஒன்றில் நாங்கள் முதலில் இமாசலப் பிரதேசத்தில் பத்தி என்ற இடத்தைத் தாண்டி குல்லு நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எங்களுக்கு முன்பு சென்றவர் பத்தி ஓட்டலில் ஏதோ மறந்து வைத்துவிட, அதனை நாங்கள் எடுத்து வந்திருந்தோம். வழியில் பசி அதிகமாகிவிட ஒரு தாபாவில் அமர்ந்துவிட்டோம். முன்னே சென்றவர் எங்களைச் சந்திக்க திரும்பி வந்தார். வருபவர் இடம் தெரியாமல் பத்து போன்கால்கள்.. நாங்கள் பத்து போன் கால்கள்... ரொட்டி ஆறிப்போய்விட்டது. இந்தாள் வருவதாகத் தெரியவில்லை.
கடையின் பெயர் என்னமோ, போர்டில் பெரிதாகத் தெரிந்தது தெஜீந்தர் தங்க்டி கபாப் ( சரி நம்மூர் லெக் பீஸு).. அதுதான் ஸ்பெஷல் போலும். நாங்கள் சைவமாக ஆர்டர் கொடுத்திருந்தோம். கல்லாவில் நடுத்தர வயதுப்பெண்மணி ஒருவரும் அவரது தோழியாக மற்றொருவரும் மட்டும்.
“மார்பிள் கம்பெனிக்கு நேர் எதிரே”ன்னு சொல்லுங்க. “ என்றார் கல்லாப் பெண்மணி. அதோடு உரக்க முணுமுணுத்தார்.
“என்ன டிரைவர் இவன்? குல்லு போறவழியில தெஜிந்தர் தங்க்டி கபாப் தெரியாதவன் மனுசனே இல்லை”
அவர்கள் கார் ஓட்டலைத் தாண்டிப் போய்விட்டது போலும். டோல் கேட் என்று பெயர் கேட்டதும் அந்தப் பெண்மணி கடகடவென சிரித்தார்.
“இன்னும் கொஞ்ச தூரம் போனா, வீட்டுக்கே போய் தால் ரொட்டி சாப்பிட்டுட்டு வரலாம் உங்க நண்பர்”
மற்ற பெண் சிரித்தாள் “ யாரு கண்டா? வீட்டுல பொண்டாட்டி ஊட்டி விடறேன்னு சொல்லியிருப்பாங்க. அதான் அய்யா , இவங்க யாரும் வேணாம்னு சண்டிகார் போயிட்டாரு”
இரு பெண்களும் கடகடவென சிரித்தனர். நாங்கள் வியந்து போய், அச்சிரிப்பில் கலந்து கொண்டோம்.
“பெஹன் ஜி, நீங்க சொல்றது மாதிரி , வீட்டம்மா கூட்டாங்கன்னு போனாச் சரி, வேற யாராவது ....” என்றேன்
கடகடவென சிரிப்பு “ இருக்காது. உங்க நண்பருக்கு முதல்லயே , நம்ம கடைக்கு பக்கத்துல இருக்கற பெண்கள் கல்லூரி பேரு சொன்னீங்களே? அப்பவே அந்தாளுக்குத் தெரியலை. சாதுவா இருப்பாரு போலிருக்கு”
திருப்பாத்தி சிரித்தார் “ அப்படியெல்லாம் ஆண்களை நம்பிடாதீங்க”
அதானே என்றாள் அப்பெண்ணுடன் இருந்த தோழி “ தெஜிந்தர் இப்ப சண்டிகார்ல யார் ஊட்டி விட்டு சாப்பிட்டுக்கிட்டு இருக்காரோ?” என்றாள் சீண்டலாக.
அப்பெண்மணி உரக்கச் சிரித்தார் “ தெஜிந்தர் அப்படி மட்டும் செஞ்சுட்டு வரட்டும். அப்புறம் கடைப் பெயர் உண்மையாகே தெஜிந்தர் தங்க்டி கபாப்னு தெஜிந்தர் லெக் பீஸ் கிடைக்கும்”
ஓட்டல் முழுதும் அவர்களது சிரிப்பலையால் நிரம்பியது.நண்பர் வந்து சேர, அவரையும் சீண்டினார்கள். பசியுடம் அவர் ஒரு மாதிரி ஹி ஹி என்றார். அவுக் அவுக் என திங்கத் தொடங்கியவர், பாதி சாப்பாட்டில்
“தயிர் புளிக்குதே பெஹென் ஜி” என்றார் அவர்.. அதற்குள் நாங்கள் இருவர் தயிரை எடுத்துக்கொண்டிருந்தோம். பாதி தயிர் காலி.
“அப்படியா, மகனே. இரு” என்றவாறு உள்ளே சென்றார். மற்றொரு தால் மக்னி ப்ளேட்.
“வேற தயிர் இல்லை. பசியோட இருப்பே. தால் மக்னியோடு இன்னும் ரெண்டு ரொட்டி சாப்பிடு. போடறேன்”
பில்வந்தபோது அதில் தால் மக்னியும், ரொட்டியும், தயிரும் இல்லை. வாங்க மறுத்துவிட்டார்.
“பசின்னு வந்தான் அவன். பெஹன் ஜி தயிர் நல்லாயில்லையேன்னு சொன்னதும் என்னமோ ஆகிப்போச்சு. இங்க வந்தா நிறைஞ்ச வயிறும், மனசுமா மக்கள் போகணும். கல்லா தானா நிறையும் பாயி சாப்”
த்ரிபாத்தி வழியில் கேட்டார் “இந்த ஆரோக்கியமான சிரிப்பும், நகையுணர்வும், உண்மையான மன மகிழ்வும், எனது உத்தரப் பிரதேசத்தில் நான் பார்த்ததில்லை. தென்னகத்துல எப்படி?”
“இல்லை” என்றேன் உறுதியாக “ எனது அனுபவத்தில் உண்மையான உபசரிப்பும், நேயமும் பார்த்திருக்கிறேன். நகையுணர்வு பஞ்சாபிகளுக்கு மண்ணோடு கலந்திருக்கிறது போலும்”

1 comment:

  1. “பசின்னு வந்தான் அவன். பெஹன் ஜி தயிர் நல்லாயில்லையேன்னு சொன்னதும் என்னமோ ஆகிப்போச்சு. இங்க வந்தா நிறைஞ்ச வயிறும், மனசுமா மக்கள் போகணும். கல்லா தானா நிறையும் பாயி சாப்”

    இந்தியாவில் மனிதம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதற்கு பெஹன் ஜி போன்றோரின் நேயமே அல்லாமல் பிரிதொன்றில்லை.

    ReplyDelete