Saturday, September 14, 2013

பல் பிடுங்கும் படலம்



“இதப் புடுங்கியே ஆகணும்” என்றார் டாக்டர் ஷோபா ஹெக்டே, ஆ வெனப் பிளந்திருந்த என் வாயில் கோணலாக வளர்ந்திருந்த கடைவாய்ப்பல்லை, நுனியில் கொக்கி போல வளைஞ்சிருந்த ஒரு கருவியால் தட்டி நோண்டி, தீர்மானமாக. ”அதெல்லாம் வேணாம்” என்று சிரித்து மழுப்பமுயன்றேன். “ அனாவசியமாப் பல்லைப் பிடுங்கறீங்களே? பல்லிடுக்குலே ஒரு சிறு தாணா மாட்டிக்கொண்டால் அதை எடுக்கறதுல என்ன சுகம் தெரியுமா? ஒண்ணுமே கிடைக்கலேன்னாக்கூட, ஒரு குச்சியை உடைச்சு, உரிச்சு, நோண்டற சுகம் இருக்கே?”  ஷோபா, என்னை கடுப்போடு பார்த்தார். “பக்கத்துல இருக்கற பல்லும் கெட்டுப் போகுது. அப்புறம் குத்தறதுக்குப் பல்லே இருக்காது. இதுவும் ஜோக்கா உங்களுக்கு?” எக்ஸ்ரேயில், படுத்தபடி இருந்த கடைவாய்ப்பல்லைக் காட்டினார். ”எப்பவோ பிடுங்கியிருக்கணும். மூணு வாரம் கழிச்சு வாங்க. வெளிநாட்டு டூர் போறேன். வந்ததும் கூப்பிடறேன்” . அவர் எழுதிக்கொடுத்த புதிதாக ஒரு மவுத் ரின்ஸ்ஸும் ( மண்ணு மாதிரி டேஸ்ட். மார்க்கெட்டுக்கு அனுப்பறதுக்கு முன்னாடி டேஸ்ட் கூடப் பண்ணிப் பாக்க மாட்டீங்களாடா?) ,அஸித்ரோஸின் மாத்திரைகளுமாக, என் பல்புடுங்கும் படலத்தின் முதல் அடி எழுதப்பட்டது.
கிட்டத்தட்ட இதனை மறந்தே போயிருந்தேன். திடீரென அவரிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று முந்தாநாள் வந்தது. ”நாளை மாலை 730க்கு வரவும்”  அதோடு ஓரு போன் வேறு “ சாப்பிட்டுட்டு வந்துருங்க. சுகர் எல்லாம் நார்மல்தானே?” இல்லையென்றால் விடப்போகிறார்களா? விதியே எனப் போனேன்.
“டூர் எங்க போயிருந்தீங்க?”டென்ஷனைக் குறைக்கத்தான் கேட்டேன்.          “ ஆஸ்ட்ரியா, செக் ரிப்பப்ளிக்.” என்றார். மரண வலி மேடையை அவரது அசிஸ்டெண்ட் சுத்தம் செய்துகொண்டிருக்க, பீதியை மறைத்தபடி “ ஆஸ்ட்ரியால எங்க?” என்றேன். “சால்ஸ்பெர்க். சரி , சேர்ல உக்காருங்க. மவுத்வாஷ் இருக்கு, யூஸ் பண்ணிக்குங்க”
சற்றே வியந்தேன். “ Sound of Music ஷூட் பண்ணின இடமெல்லாம் பாத்தீங்களா?” என்ன கேள்வி இது என்பதுபோலப் பார்த்தார். திருப்பதி போறவங்களை எங்க கோயிலுக்கா? என்றா கேட்பீர்கள்? “மொசார்ட் காம்போசிஷன்ஸ் எனக்கு ரொம்ப்ப் பிடிக்கும். அதான் குறிப்பா சால்ஸ்பெர்க். பத்து நாள்.” என்றார். எனக்கு அதுவரை அவர் மேற்கத்திய சாஸ்த்ரிய சங்கீதத்தில் ரசனை உள்ளவர் என்பது தெரியாது. அவரது கொடூரக் கருவிகள் தயாரகும் வரை, மொசார்ட்டின் இளமைக்கால வரலாறு குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். ராணி தெரெசாவின் மடியில் அமர்ந்த சிறுவன், பெரும் புகழ் பெற்ற இசைக்கலைஞன் இறுதியில் ஒரு அனாதையாக மரித்த வரலாறு. ’நல்லடக்கம் கூடக் கிடைக்காமல், ஒரு வண்டியில் கொண்டுபோய் வீசப்பட்டது அவன் உடல்’ என்று உணர்ச்சிப் பிழம்பாகப் பலதும் சொல்லியபடியே  மின்விளக்கை என் வாய் நோக்கிச் சரித்தார். “கொஞ்சம் முதல்ல வலிக்கும். ஒரு பக்கமா வீங்கறமாதிரி, நாக்கு தடிக்கிறமாதிரித் தோணும்போது சொல்லுங்க. என்ன? ஆங். மொசார்ட் கடைசிகாலத்துல, குளிருக்கு கையுறை கூட இல்லாம, கால்ல கிடந்த சாக்ஸை கையில் போட்டுகிட்டு, அப்புறம், அதைக் கழட்டி கால்ல மாட்டிக்கிட்டு.. ரொம்ப்ப் பரிதாபம். அப்படியும் அவன் எழுதறத விடலை பாருங்க... அதான் டெடிக்கேஷன். வீங்குதா?”
“ஆஆங்” குழறினேன். இன்னும் இரு ஊசிகள் ஈறுகளில். ஜிவுஜிவு என ஒருபக்கம் வீங்கிவர, அவர் எலக்ட்ரிக் சுழல் ரம்பம் ஒன்றை எடுத்தார். இரும்புக் குழாய்களை அறுக்கும்போது, பால் மாதிரி ஒன்றை அறுக்குமிட்த்தில் ஊற்றிக்கொண்டேயிருக்க, ரம்பம் அறுத்துச் செல்லும். அதேபோல, கறுஞ்சிவப்பாய் ஒன்றை வாயில் ( ஆ. பால் ஊத்தறாங்களா?) அவரது அசிஸ்டெண்ட் ஊற்றி வர, ’சொய்ங்க்’ என்ற ஒலியுடன் வாயுள் ரம்பம் நுழைந்தது. சில நிமிட வலியின் பின் “ 10 பவுண்ட் அழுத்தம் கொடுத்துத்தான் பல்லை நெம்பி எடுக்கறேன். கொஞ்சம் தாடையை அகலமா வைச்சுக்குக்ங்க. மீனாக்‌ஷி, அந்த சி.டியைப் போடுங்க. “
இசை மெலிதாக இழைந்து வர, திடீரெனெ வயலின்கள் உச்சஸ்தாயியில் எகிற, அனைத்து இசைக்கருவிகளும் பித்துப் பிடித்தாற்போல் அலறத் தொடங்க... அட இதென்ன  அவர் கையில்?.. பெரிய குறடு.

“மிஸ்டர் சுதாகர். இப்படி காலையெல்லாம் உதைக்கக்கூடாது. கையைக் கட்டுங்க. உங்க பையன் கூட ஒழுங்காக் காமிச்சான். மீனாக்‌ஷி, அடுத்த ட்ராக் போடுங்க.”
மெதுவாக அது எப்போதோ தொடங்கியிருக்க வேண்டும். சவத்தெளவு மேற்கத்திய இசையில் எப்ப தொடங்குகிறது , மேலே போகிறது என்று சொல்லவே முடியாது.  இசை திடீரென உச்சஸ்தாயியை எட்டியது. அசிஸ்டெண்ட் ரப்பர் உறையிட்ட கைகளால், என் இரு கன்னங்களையும் தட்டிக்கொண்டிருக்க, “ முடிஞ்சிடுத்து. இப்ப உங்க பல்லு என் கையில. ஒரே நிமிஷம். இன்னும் கொஞ்சம் ஆ -ன்னு “ 
ஆ வென அலறினேன். எதோ என்னிலிருந்து பெயர்த்தெடுத்த உணர்ச்சியில். “ Good. keep that jaw opened".. இசை ஒரு முகட்டில் கீச்சிடும்போது, பாஸ் கருவிகள் அதிர, ,குறடு வெளியே வந்தது
”பல்லைப் பாக்கணுமா? ” ஏதோ பிரசவ வார்டில், குழந்தையைக் காட்டறா மாதிரியில்ல கேக்கறாங்க.? ரத்தம் தோய்ந்த அந்த வெள்ளை வஸ்துவை நான் பார்க்க விரும்பவில்லை. “ நீங்க கொண்டுபோறீங்களா? “
“ எனக்கு பல் தேவதைகளிடம் நம்பிக்கை இல்லை” என்றேன் தீனமாக. அப்படிச் சொல்லியதாக நினைத்துக்கொண்டு குழறினேன்.
அவர் சிரித்தார். ”டெண்ட்டல் மாணவி ஒருத்தி வந்து இதனை சேகரித்துச் செல்வாள். இந்த புடுங்கிய பற்களில் முதலில் படிப்பார்கள். நான் படிக்கும்போது ஒவ்வொரு பல் ஆஸ்பத்திரியாக நடந்திருக்கிறேன். “
அவர் முன் நாற்காலியில், ஒரு ஐஸ் பேக்கை கன்னத்தில் வைத்தபடி அமர்ந்திருந்த போது, கேட்டார் “ மொசார்ட் சிம்பனி 40 எப்படி இருந்தது?”
முன்பிருந்த தாளில் எழுதிக்காட்டினேன். “முதலில் போட்ட ட்ராக், மொசார்ட் இல்லை. அது வில்லியம் டெல் ஓவர்ச்சர்.” ” “Good observation" என்றார். ” பல்லைப் புடுங்கும்போது  மொசார்ட்தான் ஓடிக்கொண்டிருந்தது. சரியாக ஒரு கோடா - குறடு புடுங்கியது கரெக்ட் டைமிங்” என்று எழுதினேன். அவர் புன்னகைத்தார்.
வீட்டுக்கு வந்தபின் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் “சைக்கோவ்ஸ்கி கேட்டுக்கொண்டிருக்கிறேன்.  அவனுக்கு நிச்சயம் பல் பிடுங்கப் பட்டிருக்கவேண்டும். இல்லையென்றால் அவனால் இவ்வளவு ஆழமான வலியுடன் Symphony Pathetique இயற்றியிருக்க முடியாது. மொசார்ட் வாழ்வில் அனுபவித்த துயரங்களோடே பல்லும் பிடுங்கியிருந்தால் அவன் முடிக்காது விட்டிருந்த சிம்பனியை ஒரு pathetique ஆக முடித்திருப்பான்”

அவரிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை. 

Friday, September 06, 2013

டீ எப்ப வரும்?

டீ எப்ப வரும்?
_________

மூன்று மாதங்கள் முன்பு , நான் முன்பு வேலை பார்த்த கம்பெனியில் சர்வீஸ் எஞ்சினீயராகப் பணிபுரிந்த நண்பரை ஒரு கஸ்டமர் அலுவலகத்தில் சந்திக்க நேர்ந்தது. நண்பரின் வீடு அருகிலேயே இருக்கிறதென்பதால், “ வாங்க ஒரு டீ சாப்பிட்டுட்டுப் போலாம்” என்றார். நல்ல மனிதர், தானுண்டு தன் வேலையுண்டு என்று , ஒரு அரசியலிலும் இறங்காத அப்பழுக்கற்ற அவரது வேண்டுகோளை மறுக்கமுடியாமல் , அவருடன் சென்றேன். மும்பையின் வழக்கமான சிறிய வீடு. படு புத்திசாலித்தனமாக சிறிய அறைகளிலும் அனைத்தையும் கச்சிதமாக வைத்திருந்தார்கள்.  அவன் மனைவியையும் , மாமியாரையும் அறிமுகப்படுத்தினான். மாமனார், பேரனுடன் வெளியே போயிருக்கிறார் என்று அறிந்தேன்.

டீ க்கு சர்க்கரை வேணுமா? “ என்ற கேள்வியின் பின் அவர்கள் இருவரும்  சென்று விட , ஒரு கிழவர் உள்ளே நுழைந்தார். கூடவே ஒரு சிறுவனும்.

“என் மாமனார்” . கைகூப்பி வணக்கம் தெரிவித்தவருக்கு சுமார் எழுவது வயதிருக்கும். கணீரென்ற குரல். இஸ்திரி போட்ட வெள்ளைவெளேரென்ற சட்டை, பைஜாமா. “இந்தூரில்தான் வேலை பார்க்கத் தொடங்கினேன். பத்து இடமாற்றங்கள். அப்புறம் இந்தூர்லயே ரிடையராகிட்டேன். இவ ரெண்டாவது பெண். மூத்தவ ராய்ப்பூர்ல இருக்கா.” அதென்னவோ, ரிடையர் ஆகிவிட்டால், பயோடேட்டா, கேக்காமலேயே தந்துவிடுகிறார்கள்.

‘தாத்தா” என ஓடிவந்த பையன் என்னைக்கண்டதும், சற்றே வெட்கி, வளைந்து அவரது கால் முட்டைப் பிடித்துக்கொண்டு, ஓரக்கண்ணால் என்னைப்பார்த்தபடியே, அவரது பைஜாமாவைக் கடித்து நின்றான். “ முதல்ல கொஞ்சம் வெட்கப்படுவான். அப்புறம் கலகலன்னு... நாலு வயசுதான் ஆகிறது. ஆனாப் பாருங்க, அசாத்திய மூளை.டேய் சொல்லுறா...” நான் உஷாரானேன். விருந்தினர் எதிரே தங்கள் பிள்ளை,பேத்திகளின் மூளைத்திறனை எக்ஸிபிஷன் போட்டுக் காட்டும் காலமெல்லாம் எப்பவோ போயாச்சே? எனக்கு இந்த சூழ்நிலைகளில் எப்படி ரியாக்ட் செய்யவேண்டுமெனத் தெரிவதில்லை. அசடு வழிந்துகொண்டு, ஒரு செயற்கைச்சிரிப்போடு “வெரிகுட்” என்பதோடு என் பதில்கள் நிற்கும். எப்படா இங்கிருந்து கிளம்புவோம் என்ற துடிப்பின் விளிம்பில் நிற்பேன். அத்தகைய சந்தர்ப்பமொன்று இது...

“ சூரஜ் பேட்டா, 459 ஸ்கொயர்  என்ன?” . என்ன இது மலேசிய அபாக்கஸ் கிளாஸுக்கு ஆள் சேக்கறாங்களா? ’விடுங்க , குழந்தையைப் போட்டு..” என்றேன்.

என் நண்பர் வாயெல்லாம் பல்லாக “ இவருக்கு இதெல்லாம் பிடிக்கும் மாமா. 6174 -ன்னு தமிழ்ல - தமிழ்லதானே? ஒரு கணக்கு புக் எழுதியிருக்காரு” . அடப்பாவிகளா, கணக்கு புக்கா? ஏண்டா எழுதினோம்னு நினைத்த பல தருணங்களில் ஒன்று கூடியது.  இவனிடம் இப்படிச் சொன்னவனை துருப்பிடித்த பழைய ப்ரின்ஸ் பிளேடால் கன்னத்தில் கிழிக்கவேண்டும்.

பையன் எதோ முணுமுணுத்தான். முகத்தை தாத்தாவின் மடியில் புதைத்துக்கொண்டான். அவர் மீண்டும் மீண்டும் நச்சரித்து, குனிந்து கேட்டு ஒரு எண்ணைச் சொன்னார். பெருமிதமாக ”கரெக்ட்” என்றார். ” இந்தூர் ரயில்வேஸ் குவாட்டர்ஸ்ல இருந்தப்போ எங்க சீஃப் அக்கவுண்டண்ட்  மதன்மோகன் மிஸ்ரான்னு ஒருத்தர். அவருக்கு கால்குலேட்டரே வேண்டாம். எல்லாம் மனக்கணக்குத்தான். ஒரு வருஷம் அவரை நச்சரிச்ச அப்புறம் ரகசியமா கணக்குல இருக்கிற குறுக்கு வழிகள்- ன்னு சில ட்ரிக்குகளைச் சொல்லிக்கொடுத்தார். காலங்காலமா அவர்கள் குடும்பத்துல பழகி வர்ற ஒரு வித்தை. வேதகாலத்துலேர்ந்து இருக்கிற வித்தை. அவர் குடும்பத்துக்கு அப்புறம் நாந்தான் வெளியாள் அதைக் கத்துகிட்டது. அடுத்த மாசம் பாருங்க, சூரஜ், ஸ்கொயர் ரூட் கத்துகிட்டிருவான் அதுவும் அஞ்சு டிஜிட் எண்களுக்கு. ”
ஒரு பிளாஸ்டிக் புன்னகையை முகத்தில் அப்பியபடி, தலையை ஆட்டி ‘க்ரேட்” என்றேன்.

 டீ எப்ப வரும்?

”இதெல்லாம் டை கட்டி, கோட் போட்டு இன்னும் வெளிநாட்டுக்காரங்களுக்கு வால் பிடிக்கிற உங்களுக்கெல்லாம் பிடிக்காது. தெரியும். மைக்ரோசாஃப்ட் எக்ஸெல்-ல போடவேண்டியதையெல்லாம் எதுக்கு மூளைல போடணும்? -னுவீங்க. நம்ம நாட்டு வித்தை.. அதெல்லாம் உங்களுக்கு மதிக்கத் தெரியாது. வெளிநாட்டுக்காரன் எது செய்தாலும் சரி. உங்களைச் சொல்லிக் குத்தமில்லை. வளர்ப்புதான்.  டேய். நீ எப்படி ஆன்ஸர் கண்டுபிடிச்சேன்னு மாமாக்கு சொல்லு”

நம்ம ஊர்களில் சிறுமிகளை “ இந்த மாமிக்கு, அலைபாயுதே பாட்டு தெரியாதாம். ஒருதடவை நீ பாடிக்காட்டுடி செல்லம்மா” என்று நாங்கள் ஊருக்குப் போகும்போதெல்லாம்  என் மனைவியை முட்டாளாக்கி, தன் பெண்களை பிசிறும் குரலில் அலைபாயுதே பாடவைத்துப் பரவசப்பட்ட பெண்மணிகள் எனக்கு நினைவுக்கு வந்தனர். இப்போது நான். அவள் வெகு இயல்பாக நடந்து கொண்டு  விடுகிறாள். எனக்கு அதெல்லாம் வருவதில்லை. மூஞ்சியே காட்டிக்கொடுத்து விடுகிறது.

 டீ எப்ப வரும்?

ஆ. வந்து விட்டது. பத்து நிமிடம்  அந்த முதியவர், அமைதியாக டீ குடிக்கவிடாமல்,  வெளிநாட்டவரிடம் கைகட்டி வேலைசெய்யும் எனது வேலையெல்லாம் இழி தொழில் என்ற புதிய உண்மையை உணர்த்திவிட்டு, இந்தியாவின் பழம்பெரும் கல்விச் செல்வங்களை அறியாது வீணடிக்கும் அறிவிலிகள் நாட்டுப் பற்றும் , கலாச்சார உணர்வும் இல்லாத மடையர்கள் எனவும் அறிவுறுத்திவிட்டு, அவர் எழுந்து சென்றார்.

காரில் என்னை பஸ் நிறுத்தம் வரை கொண்டு விட வந்த நண்பர் தர்ம சங்கடமாகச் சிரித்தார். “ அவர் சொல்வதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாதீர்கள். என்னையும்தான் திட்டுவார் - அமெரிக்க கம்பெனியின் அடிமை என்று. ஆனால் , அந்த கணித சூத்திரங்கள்... அமேசிங் இல்லையா? உங்களுக்கு அடுத்த புத்தகத்துக்கு உதவும்”  நான் என்ன தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்திற்குப்  பத்தாம் கிளாஸ் கணக்குப் புத்தகமா எழுதுகிறேன்? என்று வாய் வரை வந்தது. ஒரேயொரு வார்த்தை மட்டும் சொல்லிவிட்டு, வந்த பேருந்தில் ஏறினேன்.

“அவர் சொன்னது ட்ராக்டென்பர்க் சிஸ்டம் ஆஃப் ஸ்பீட் மாத்தமேட்டிக்ஸ். சூரிச்-சில் விளைந்தது - இந்தூரில் இல்லை” 

Saturday, August 31, 2013

பேரு சொல்லக் கூடாது

திடீரென நண்பரிடமிருந்து காலையில் போன். “ வே , நீரு இன்னும் வண்டிய எடுக்கலேல்லா?. அந்தப்பக்கமாத்தான் வர்ரேன். ஆபீஸ்ல கொண்டு விட்டுடுதேன். என்னா?” மழையில் ஊர்ந்து கொண்டிருக்கும் நெரிசலில் க்ளட்ச்சுக்கும், ஆக்ஸிலரேட்டருக்குமாக அல்லாடும் கால்கள் நம்முடையதல்ல இன்றைக்கு என்னும் குஷியில் ‘ மெயின்ரோட்டுல நிக்கேன். அஞ்சே நிமிசம்” என்றேன். நண்பர் ரேடியோவில் பாடும் பாட்டோடு சேர்ந்து தானும் கர்ணகடூரமாக , இன்றாவது பாடாமல் இருக்கவேண்டும் என்ற வேண்டுதலோடு காத்திருந்தேன். “ஆடியோ ரிப்பேராயிட்டுல்லா. நாளைக்குத்தான் புதுசு மாட்டணும்” என்ற நற்செய்தியோடு மனிதர் கிளப்பினார். ஆண்டவரே,நன்றி. இன்று எனது நாள். 

”அந்தக் கோட்டிப்பய ராபின் வந்திருந்தான்லா போனவாரம்? என்னன்னு கேளும் கதய” என்றார். ராபின் அவரது இம்மீடியட் பாஸ் - மான்செஸ்டரில் இருக்கிறான். வருஷா வருஷம் “மும்பையில் மாதம் மும்மாரி பெய்கிறதா? கஸ்டமரெல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்களா?” என்ற சடங்குமயமான வருகை ஒன்று அவனுக்கு உண்டு. “ம்” என்றேன். நெரிசல் அதிகமாகவே இருந்தது. 

” லண்டன் ஒலிம்பிக்ஸ்ல நாங்க ஒரு பெரிய ஆர்டர் வாங்கியிருந்தோம் பாத்துக்கோரும். நம்மூர்ல, பெருசா ரெபரன்ஸ் சொன்னாத்தான கஸ்டமர் நம்புவான்? எல்லா எடத்துலயும் சொல்லிட்டேன். இவன் போன வாரம் வாரான். கேக்கீராவே?”

“ஆங்.கேட்டுகிட்டுத்தான் இருக்கேன். நீரு பாடறத விட நல்லாத்தான் இருக்கு. சொல்லும்”

“அங். ஒரு கஸ்டமர் விசிட் கொண்டுபோயிருந்தேன். அவரு புட்டு புட்டு வைக்காரு. ’ஒலிம்பிக்ஸ்ல பெரிய ஆர்டரு வாங்கினீயளாம். இந்த மாரி பெரிய இடத்துல வித்தீயன்னு சொன்னா , நமக்கும் ஒரு நம்பிக்க வருதுல்லா. சரி. என்ன டிஸ்கவுண்ட்டு ?’ன்னு நேரா அடிமடியில கை வச்சுட்டாரு. குஜராத்தியில்லா. முதல்ல டிஸ்கவுண்ட். அப்புறம்ந்தான் என்ன விசயமா வந்தீ?யன்னுவாரு. இவன் மூஞ்சி அப்படியே சிறுத்துட்டு. வெளிய வந்து எங்கிட்ட கறாராச் சொல்லுதான். இந்தா நமக்கும் ஓலிம்பிக்ஸ் கமிட்டிக்கும் ஒரு லீகல் உடன்படிக்கை இருக்கு. அவங்க பெயரை எந்த இடத்துலயும் இழுக்கக்கூடாது.இந்த மாதிரிச் சொல்லிட்டுத் திரிஞ்சீருன்னு அவனுக்குத் தெரிஞ்சிச்சீ, நாம காலி”ங்கான். “
“என்ன புதுக்கதயா இருக்கு? இங்கனக்குள்ள, வாங்கலைன்னாலும், டாட்டா, பிர்லா, ரிலயன்ஸுன்னு எல்லாப்பொரையும் போட்டுத்தான நாம பேசுவம்?”
“அந்தக் கூ**யானுக்கு விளங்கலவே! வேணும்னா “இங்கிலாந்துல ஒரு பெரிய விளையாட்டு நிகழ்ச்சியில போதைப்பொருள் டெஸ்ட் பண்ண எங்க கருவியும் பயன்படுத்தினார்கள்”ன்னு வெளக்கெண்ண கணக்காச் சொல்லுங்கான். பேரைச்சொன்னா அது சட்டப்படி உடன்படிக்கையை மீறுதாம். சவத்தெளவு”

“வுடும். உமக்கு எப்படியும் ஆர்டர் கிடைச்சுருமுல்லா?”

”அது போவட்டு. அவனுக்கு கடைசிநாளு, ஒரு ஓட்டல்ல எங்குடும்பத்தோட போயி விருந்து கொடுத்தேன். என்ன ஆச்சு.. ஓட்டல்ல எம்மவன் நிக்க மாட்டேக்கான். ஒரே முரண்டு. அங்க ஓடுதான்...இங்க ஓடுதான். அம்மா , இவளபபாத்து “ அவனப் பிடிடி”ன்னு அடிக்கடிச் சொல்லிக்கிட்டிருந்தாங்க. இவன் கடைசில ஒண்ணு கேட்டான் பாத்துகிடுங்க”

பாலம் கடந்தும் நெரிசல். சிக்னல் தாண்டும்வரை இப்படித்தான் என்னிக்கும்.

“ நாம் அப்பலேர்ந்து பாக்கேன். உங்கம்மா ஏன் அவனப் வேற பேர் சொல்லில்லா கூப்பிடறாங்க?". நாஞ்சொன்னேன் “ அவனுக்கு எங்கப்பா பேருல்லா விட்டிருக்கு. அதான் அவங்க கூப்பிடறது வேறபேரு.” “அதென்னா?”ன்னான். “ புருஷன் பேரு சொல்லிக் கூப்பிடமாட்டாங்கடே. லே சதாசிவம், வாரியா இல்லயா. சாத்திருவேன்” -ன்னு அவங்க சொல்ல முடியுமா ?”ன்னேன். கக்கேபிக்கே-ன்னு சிரிச்சான்”

சிக்னல் அருகே வந்துவிட்டோம். 

“நாஞ்சொன்னேன் “ முகமேயில்லாத, ஒரு ஒலிம்பிக்ஸ் கமிட்டி, அது சொன்னதுக்கு இவ்வளோ பம்மி, பேரச் சொல்லக்கூடாதுன்னு சொல்லிதியே? இத்தன வருசம் கூடவே இருந்த மனுசன், குடும்பத்தைக் காப்பாத்தின ஒரு ஆளுக்கு மரியாதை எவ்வளோ இருக்கணும்? அவர் பேரைச் சொல்லக்கூடாதுன்னு ஒருத்தங்க தனக்கே ஒரு கட்டுப்பாடு போட்டுக்கிட்டா, அது சிரிப்பா இருக்காடே?” -ன்னேன்”. 
பக்கவாட்டில் திரும்பி என்னைப் பார்த்துச் சிரித்தார்.

நான் கொஞ்சம் அசந்துதான் போனேன். சிக்னலைத் தாண்டியிருந்தோம். கார் வேகமெடுத்தது.

“ சரிவே. நல்லாத்தான் சொன்னீரு. ரோட்டைப் பாத்து ஓட்டும்வே. வல்லாத்த, ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப்போவுது”

“ நாம ஒழுங்காத்தான் ஒட்டிக்கிட்டிருக்கோம். வெளங்கா?. நடுவுல எவனாச்சும் கொழுப்பெடுத்து வந்து விழுந்தா, அது அவன் விதி. மடியில கனமில்லவே. வழியில எதுக்கு பயம்ங்கேன்?”

Monday, August 26, 2013

செங்கால் நாரை - சிறு கதை

இக்கதை தஞ்சாவூரிலிருந்து வெளிவரும் "சொளந்தர்ய சுகன்" இலக்கியப் பத்திரிகையில் வெளிவந்தது

செங்கால் நாரை
--------------------------

"ஹை! அது என்ன அங்கிள்? பெரிசா ஒரு க்ரேன்?" வைஷ்ணவி துள்ளிக் குதித்தாள். "ஸ்... கார் ஓட்டும்போது மாமாவைத் தொந்தரவு செய்யாதே"பின்னாலிலி
ருந்து அவள் அம்மா ப்ரேமா அடக்கினாள். சாலையோர மைல்கல்,காருகுறிச்சி இரண்டு கிலோமீட்டர் என்றது. எனது மாருதி அம்பாசமுத்திரம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது.சிங்கப்பூரிலிரிந்து குடும்பத்தோடு வந்திருந்த நண்பன் சுந்தரம், குலதெய்வத்திற்கு வழி பாடு செய்யவேண்டுமென்று சொன்னதால், எனது காரிலேயே கிளம்பியிருந்தோம்.
"கேட்கட்டும். விடும்மா. குழந்தைகளுக்கு இதெல்லாம் பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்கும்"
"அது கொக்கு இல்லேம்மா. நாரை. செங்கால் நாரை."
சாலையிலிருந்து சுமார் ஐம்பதடி தூரத்தில் இருந்த நீர்த்தேக்கத்தில் நாரைகளும் இதர தொலைதூரத்திலிருந்து வந்திருந்த பறவைகளும் சோம்பலாக மீன்பிடித்துக்கொண்டிருந்தன.
"அங்கிள்.கொஞ்சம் பக்கத்துல போய்ப் பார்க்கலாமா?" வைஷ்ணவி கெஞ்சினாள்.
"ரொம்பத்தான் செல்லம் இவளூக்கு... காலாகாலத்துல கோயிலுக்குப் போனோமா,
வந்தாமான்னு இல்லாம.. இதுவரை கொக்கே பாக்காத மாதிரி" பொருமிய பிரேமாவை சுந்தரம் எரிச்சலாகப்பார்த்தான்.
காரிலிருந்து வைஷ்ணவியை இறக்கினேன். ஈரப்பதம் நிறைந்த குளிர்காற்று முகத்தைத் தாக்கியது.
"ரொம்பத் தள்ளிப் போகாதே, வைஷ்ணவி.. கண்ட கண்ட தண்ணில எல்லாம் கால் வைச்சு, காய்ச்சல் வந்துடப் போகுது"
பறவைகளீன் வினேதமான சப்தங்களும்,ஒரு விதமான துர்நாற்றமுமாகப் பரவியிருந்த,பாசி நீர்ப்பரப்பில் மெதுவாக நடந்தோம்.

வைஷ்ணவியைப் பறவைகளுக்குப் பிடித்துவிட்டது போலும்.. அனாவசியாமாக ஒன்றும் பறந்து சலசலப்பை உண்டாக்கவில்லை.
ஒரு பெரிய நாரை எங்களை நோக்கி மெதுவாக நடந்து வந்தது. வைஷ்ணவி பிரமித்தாள்." இதுவா அங்கிள்,நீங்க சொன்ன நாரை?"
"ம்.. இதுதான் செங்கால் நாரை. அது காலைப்பாரு.. செகப்பாஇருக்குல்ல. அதுனாலதான் அந்தப்பேரு"
பக்கத்தில் வந்த நாரை,கழுத்தை வளைத்து எங்களைப் பார்த்தது. மெதுவாக தண்ணீரில் அலகு ஆழ்த்தி மீன் பிடிப்பது போல் பாசாங்கு செய்தது.
"அதுக்குப் பயமா இருக்காது? நம்ம எதாவது செய்திடுவோம்-னு"? குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வதென்பது அனுபவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம்..
" இல்லேம்மா. செங்கால் நாரைக்கும் மனுசனுக்கும் ரொம்ப காலமா நெருங்கின சினேகிதம்.அதுக்கு தாராள மனசு. அது கிட்டே எதாவதுஉதவி கேட்டேன்னா, செய்துட்டுதான் கிளம்பிப்போகும்"
வைஷ்ணவி நம்பாமல் என்னைப் பார்த்தாள்" சும்மா சொல்றீங்க. பறவைக்கு இதெல்லாம் ஒண்ணும் தெரியாது"
" செங்கால் நாரைக்குத் தெரியும் வைஷ்ணவி. அது கிளி,புறா மாதிரி புத்திசாலிப் பறவையில்ல. ஆனா அதுக்கு ஈரமான இதயம் உண்டு.அதுனாலதான் அந்தக் காலத்துல, ஒரு புலவன் நாரை விடு தூது-ன்னு செங்கால் நாரைகிட்டே தன்னோட கஷ்டம் பத்தி, மனைவிக்குச் சொல்லறதுக்கு கவிதை பாடி அனுப்பினான்"
"நாரை போய் சொல்லிச்சா அங்கிள்?"
"அது தெரியாதும்மா. ஆனா,நெஞ்சு நிறைந்த அன்பாலேயே உயிரை விட்ட நாரையை எனக்குத் தெரியும்"
நினைவுகள் பின்னோக்கி ஓடின.

தெருவில் விளையாடிக்கொண்டிருந்தவன், யதேச்சையாக, எதிரில் வருபவரைப் பார்த்துவிட்டு, வீட்டுக்குள் நோக்கிக் கத்தினேன்.
"அம்மா, மாமா வந்தாச்சு.ஹைய்யா... மாமா வந்தாச்சு" ஓடிப்போய் அவரது கையைப் பிடித்துத் தொங்கினேன்.தோதாத்திரி மாமா எனது சொந்தத் தாய் மாமா இல்லை. அம்மாவிற்கு, ஒன்று விட்ட தம்பி. ஆயினும், மாமா என்றாலே எங்கள் வீட்டில் நினைவிற்கு வருபவர் தோதாத்திரி மாமாதான்.
குட்டையான் உருவம். பின்னால் வழித்து வாரப்பட்ட தலைமுடி. வாயில் எப்பவும் மணக்கும் வெற்றிலை. . கையில் மடக்கப்பட்ட "கிளி மார்க் டீ வாங்கிடுவீர்". என்னும் மஞ்சள் பை. எப்போதும் சிரித்த முகம்.தீர்க்கமான நெற்றியில் பாதி கலைந்த ஸ்ரீ சூர்ணம்... இவைதான் மாமாவின் அடையாளங்கள். எப்பவும் சிகப்பாகவே இருக்கும் அவர் நாக்கைப் பார்த்து எனக்கும் பெரியவனானதும் அப்படி வரவேண்டுமென்று நினைத்துக் கொள்வேன்.

"டேய்,,டேய்.. விடுடா..." அட்டகாசமாகச் சிரித்தார் மாமா.
"குரங்கு மாதிரி கையைப் பிடிச்சு தொங்காதே-ன்னு எத்தன தடவை சொல்லியிருக்கேன்?" என்னும் மற்றவர்களிடமிருந்து மாமா மிகவும் விலகித் தெரிந்தார்.
உள்ளே வந்தவர், அம்மாவை "அக்கா, செளக்கியமா?" என்றார். நெடுஞ்சாண்கிடையாக விழுந்து சேவித்தார்.
"நன்னா இருப்பா.. ருக்மிணி வரலையா?"
"இல்லேக்கா. பரீட்சையெல்லாம் நடந்துண்டிருக்கு. யாராவது ஒருத்தர் காருகுறிச்சியிலே இருந்தாகணும்" மாமாவும், மாமியும் ஒரே பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள்.
"என்ன தோதாத்திரி இந்தப்பக்கம்?" என்றர் அப்பா."ஒண்ணுமில்லே அத்திம்பேர். ஊர்க்காரன் ஒருத்தனுக்கு கிணறு வெட்ட கடன் பத்திரம் எழுதணும்னான். நம்ம சரவணன் தான் பொறுப்புல இருக்கான். அதான் நேர்ல வந்து சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன். உங்களையும் பாத்துட்டுப்போலாம்னு எட்டிப்பார்த்தேன். உம்மோட ப்ரஷர் எப்படியிருக்கு? திருநெல்வேலி போயிட்டு வந்தீராமே..உடம்பு முடியலைன்னு? நாணா சொன்னான். உடம்பைப் பாத்துக்கும்"
தோதாத்திரி மாமாவுக்கு சொந்தமாக ஒரு வேலைன்னு வரவேமாட்டாரோன்னு தோன்றும்.
"மாமா, எனக்கு லீவு விட்டாச்சு. உங்ககூட காருகுறிச்சி வரட்டா?"ஆர்வமாகக் கேட்ட என்னை,அண்ணன் முறைத்துப் பார்த்தான்."யாரும் வீட்டுக்கு வந்துடக்கூடாதே.. நான் வரட்டா-னு முந்திரிக்கொட்டையா கேட்டுறவேண்டியது. மூதேவி" அவன் கடுகடுப்பது தெரிந்தது.மனதுக்குள் அலட்சியமாக" போடா" என்றேன்.
" வாயேன். அக்கா.. இவனைக் கூட்டிண்டு போறேன். கொஞ்ச நாள் மாறுதலாக இருக்கட்டுமே"
"அவன் ராத்திரி அழுவான் தோதாத்திரி. போனதடவை இப்படிதான் தூத்துக்குடி கூட்டிண்டு போயிட்டு,வரதன் அடுத்த நாளே கூட்டிண்டு வந்துட்டான். ராத்திரி பூரா ஒரே அழுகை"
"நான் ஒண்ணும் அழ மாட்டேன்" என்றேன் வீராப்பாக."சரி அக்கா. இங்க இருக்கிற காருகுறிச்சிதானே. எதாவது ஏக்கமாயிருந்தான்னா ஒரு மணி நேரத்துல கொண்டு வந்துடலாம். என்னடா அழுவியா ?
"மாட்டேன் மாமா" என்றேன் உறுதியாக.

" மாமா, அங்கே பாருங்க. ஒரு பெரிய கொக்கு" மாமாவின் சைக்கிளில் முன் பாரில் உட்கார்ந்திருந்த எனது கத்தலில், சில பறவைகள் பயந்து பறக்க முயன்றன. மாமா ஒரு கல் மேல் கால்வைத்து, சைக்கிளை நிறுத்தினார்.
" அதோ ஒரு பழுப்பு கலர்ல தெரியறது பாரு... அது செங்கால் நாரை" என்றார் மாமா.
" அது ஏன் மாமா அசிங்கமா இருக்கு?"
"அசிங்கமா இல்லேடா. அது ரொம்ப நல்ல பறவை. மனுசங்க கிட்டே ரொம்ப பிரியமா இருக்கும். பாசமா இருக்கற பறவை அழகா இல்லேன்னா என்ன? "
ஒரு நாரை தாழப் பறந்து,எங்களருகே சாலையோரம் தண்ணீரில் இறங்கியது. தண்ணீரில் அலைமோதும் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.மாமா மெதுவாகப் பாடினார்
"நாராய் நாராய். செங்கால் நாராய்.
பனம்படுபனையின் கிழங்கு பிளந்தன்ன கூர்வேல்வாய்
செங்கால்நாராய்"
எனக்குப் புரியவில்லை. "என்ன மாமா சொன்னீங்க?"
"இந்த நாரையைத்தான் ஒரு ஏழைப் புலவன் தன் பொண்டாட்டிகிட்டே தூது அனுப்பினான். இந்த நாரையோட அலகு 'பனங்கிழங்கு பிளந்தமாதிரி இருக்கு'-ன்னு சொன்னான். எவ்வளவு அழகான உவமை பாரு.." மாமா தனக்குள் பாடி ரசித்தார்.உற்றுப்பார்த்தேன். அலட்சியமாகப் பார்த்துவிட்டு நாரை எங்கள் அருகே வந்து கழுத்தை உயர்த்தி போஸ் கொடுத்தது.
"இதுக்குக் கொஞ்சம்கூட பயமே கிடையாதா மாமா?"
" மனுசங்க ஒண்ணும் பண்ணமாட்டாங்க-ன்னு ஒரு நம்பிக்கைதான். சரி போவமா?"
மீண்டும் அடுத்தநாள் அந்த நாரை குளக்கரையோரம் தெரிந்தது. அடுத்தடுத்த நாட்களில்
நானும் அதுவும் மிகவும் பழகி விட்டோம். அதன் குச்சி கால்களும், பெரிய சிறகுகளும், சற்றும் பொருந்தாத மிகப்பெரிய அலகும் எனக்கு அசிங்கமாகத் தெரியவில்லை. ஒரு முறை,சிறகு விரித்து அலகு பிளந்து காட்டியது. சிவப்பாகத் தெரிந்தது.. அதுவும் வெற்றிலை போடுமோ?

ஒருவாரத்தில் எல்லாப் பறவைகளும் திரும்பிப் பறக்கத் தொடங்கின. எனது நாரை மட்டும் குளத்திலேயே திரிந்தது. மும்முரமாக மீன் பிடித்துக்கொண்டிருந்தது.
"இது ஏன் மாமா இங்கேயே இருக்கு? எல்லாம் பறந்து போயிட்டிருக்கு?"
"எதோ ஏழைப் புலவன் தூது இன்னும் கொடுக்கலை போலிருக்கு.." மாமா காவிப்பற்கள் தெரியச் சிரித்தார். இந்த முறை நான் நம்பினேன்.

நான் அம்பாசமுத்திரம் போகும்நாள் வந்தது. மாமா சைக்கிளில் முன் பாரில் இருந்து சாலையோரத்தில் பார்த்துக் கொண்டே வந்தேன்.நாரையைக் காணவில்லை.
மாமா சட்டென்று சைக்கிளை நிறுத்தினார். சாலையோரம் அவசரமாகச் சென்று தண்ணீரில் பார்த்தார்.
" அடப்பாவமே"
தண்ணீரில் அரைகுறையாக மூழ்கி மங்கலாக ,பிளந்த அலகுகள் தெரிந்தன. சில இறகுகள் மிதந்துகொண்டிருந்தன. கால்கள் சிவப்பான சாயம் பூசினது போல சிதறிக்கிடந்தன. வேதனையில் வளைந்திருந்தன.
"எவனோ அடிச்சிருக்கான். சே.. பாவம்."
எதிரே வந்த ஒருவன் மாமாவை நெருங்கினான்" என்னாச்சு வாத்தியாரைய்யா?"
"நாரையை எவனோ அடிச்சிருக்காம்பா.. ஒரு வாரமா கரையோரமா நின்னிட்டுருந்தது.. பாவம்"
"கொன்னவன் நம்ம ஊர்க்காரனா இருக்கமாட்டான்யா. எவனோ வெளியூர்க்காரன் வேலை... எப்ப பார்த்தீங்க?""இப்பத்தான். எடுத்து அடக்கம் பண்ணிருவோம். எடு முருகேசா"
முருகேசன் தண்ணீரில் இறங்கி, அலகுகளைப் பற்றி இழுத்தான். தண்ணீர் வழிய சாலையில் போட்டபோது, அதன் ஓரங்களில் ரத்தச்சிவப்பு தெரிந்தது...

இரண்டு நாட்கள் நான் சரியாகத் தூங்கவில்லை. அம்மா,"எதையோ பாத்து பயந்திருக்கான்" என்றாள். விபூதி பூசினார்கள்.கோயில்யானையிடம் தும்பிக்கையில் தண்ணீர் கொடுத்து முகத்தில் பீச்சினார்கள்.எட்டாம் வகுப்பில் தாமஸ் சார் - "இருனூறு வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதுக-"எனக்குப் பிடித்த விலங்கு அல்லது பறவை"" என்று கட்டுரைப்போட்டி வைத்தபோது எழுதினேன். "எனக்குப் பிடித்த பறவை அழகாகப் பேசும் கிளியோ, ஆடும் மயிலோ அல்ல.எனக்குப் பிடித்தது செங்கால் நாரை. ஏனெனில் அது மனிதர்களை நேசிக்கிறது, நம்புகிறது, உதவுகிறது. நாம்தான் நன்றி மறந்து அதனைக் கொல்கிறோம்" காருகுறிச்சிக்கு அதன்பிறகு நான் போகவில்லை.

கோயிலில் வழிபாடு நடந்துகொண்டிருந்தது. சுந்தரம் குடும்பம் உள்ளே நின்று கொண்டிருக்க, நான் காரில் அருகே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
"யாரு,சீனுவா? எப்படா வந்தே?"- கேட்டவனைப் பார்த்ததும் ஒரு கணம் குழம்பி னேன். இவன் கண்ணன்தானே? தோதாத்திரி மாமாவோட மூத்த பையன். இங்கே எப்படி? "இப்பத்தான் கண்ணா. சினேகிதன் குடும்பத்தோட வந்தேன். எப்படிடா இருக்கே? அம்மா அப்பாவெல்லாம் எப்படியிருக்காங்க?"
கண்ணன் ஒரு கணம் மொளனமனான்." அப்பா ஒரு மாசம் முன்னால இறந்துட்டார். .டெலிகிராம் அடிச்சோம். அப்புறம்தான் தெரிஞ்சது
உனக்கு மாத்தலாயிருச்சுன்னு.." நான் உறைந்தேன் " எப்படா? எப்படியாச்சு?" "நன்னாத்தான் இருந்தார். ரிடையர் ஆனதும், முத மாசப் பென்ஷன் வாங்கிட்டு
வர்றேன்னு போனார்.,இன்னொருத்தருக்கு பிராவிடண்ட் •பண்ட் •பாரம் வாங்கிண்டு வர்றதுக்கு நேரமாயிருச்சு. சாயங்காலம் ரொம்ப இருட்டிண்டு வந்ததுல எதிர்த்தாப்பல வந்த லாரி தெரியலை.அடிச்சுப்போட்டுட்டுப் போயிட்டான். ரோட்டிலேயே ரத்தவெள்ளத்துல கிடந்திருக்கார். ஒருத்தரும் உதவிக்கு வரலை. விஷயம் தெரிஞ்து.நாங்க போறதுக்குள்ள உயிர் போயிருச்சு" கண்ணன் மேலே சொன்னது எதுவும் கேட்கவில்லை. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது.

ரோட்டில் ஒரு பெரிய நாரை இறக்கை விரித்துக் கிடந்தது. அதன் அலகுகள் பிளந்து ரத்தச் சிவப்பாக .. வெற்றிலை போட்டு உமிழ்ந்தது
போல்....நாரையின் உடலுக்குப்பதில் மாமா தெரிந்தார். கைகளில் பி.எ•ப் பாரம் சுருண்டிருக்க, சட்டைப்பையில் நூறு ரூபாய் நோட்டுகள்
மடக்கி வைக்கப்பட்டிருந்தன..

காரில் செல்லும்போது வைஷ்ணவி கேட்டாள்."அங்கிள், 'காட்டுல இருக்கிற நல்ல மிருகங்களெல்லாம், மனுசங்களாயிடும்'-ன்னு எங்க பாட்டி
சொன்னாங்க. அப்போ, நல்ல மனுசங்களெல்லாம் என்னவா ஆவாங்க? இப்ப பாத்த சாமி மாதிரி ஆயிடுவாங்களா?"
"நல்ல மனுசங்களெல்லாம் நாரை ஆயிடுவாங்கம்மா. அதுவும் செங்கால் நாரை "
சொன்ன எனது கண்கள் நிறைந்ததில், எதிரே சாலை மங்கலாகத் தெரிந்தது.

வீடு - சிறுகதை

குட்டி என்னேடு எப்போது பேசத் தொடங்கியதென்று நினைவில்லை. அதனை யாரும் பார்த்ததில்லை-நான் உள்பட.. குரல் என்னைப்போல் இருப்பதால் குட்டி ஆணாக இருக்கலாமென்று நினைக்கிறேன். அது வந்திருக்கும் நேரமெல்ல்லம் என்னைக் கண்டவர்கள் " இவன் என்னல? காக்கா பார்வை வெறிச்சிகிட்டிருக்கான்?" என்றும் "எவன்ட்டல பைத்தியங் கணக்கா தனியா பேசிட்டிருக்க?" என்று நண்பர்களும் சீண்டினார்கள். படித்த, முதிர்ந்த நண்பர்கள், பின்னாளில், நான் வேறு மன அலைகளில் இருக்கிறேனென்றும், தனக்குள்ளே பேசுவதென்பது- ஒரு நோயில்லை என்றும் என் மனைவியைத் தேற்றினார்கள். எனக்கு split personality என்று அச்சுறுத்தியவர்களும் உண்டு.
குட்டி என்னைவிட அறிவாளியில்லை. அது செய்யும் மிக உருப்படியான வேலை - என்னை தன்னுடன் சில இடங்களூக்கு, சில நேரங்களில் கூட்டிச் செல்லும். எதில் போகிறோம் என்பதெல்லாம் தெரியாது. பெரும்பாலான இடங்களும், ஆட்களும் பரியச்சமானவர்களாயிருந்தாலும், குட்டியுடன் போவதால் நான் அங்கிருப்பதை யாரும் உணர முடியாது. நானும் சும்மா நடப்பதை பார்த்துக் கொண்டிருக்ககலாம். அவ்வளவுதான்.

குட்டி எப்பத்தான் வருமென்று விவஸ்தையில்லை.நீண்ட பேருந்துப் பிரயாணங்களில், டாய்லெட்டில்,அஜீரண இரவுகளில்,ஆஸ்பத்திரி படுக்கையில் என்று எப்ப வேணுமானாலும் வரும். எங்கு வேண்டுவேண்டுமானாலும் கூட்டிப் போகும்." வால , போல' என்று பேசினாலும்,சில நேரங்களில் ' வாரும்வே, போரும்வே' என்று மரியாதையும் கிடைக்கும். இதையெல்லாம் நான் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.

இப்படித்தான் முந்தாநாள் உச்சிவெயிலில்,குட்டி வந்தது. 'வால,... ஒரு விசயம் சொல்லணும்' ' எங்க வரணும்? வெயில் கிடந்து பொரிக்கி.. இங்கனையே பேசுவம்' 'ஆறுமுகம் வீட்டு வரை போயிட்டு வருவம்- வால-ன்னா..' 'எந்த ஆறுமுகம்?' 'தெரியாதாங்கும். அதான்ல.. உன் பழைய ஆளு கலைவாணியோட அண்ணன்.' 'இந்தா... ஆளு அது இது-ன்னா, பேத்துருவேன்.அவளுக்கு கல்யாணம் ஆயிட்டது, தெரியும்லா?' 'சரிய்யா.. சொணங்காதயும்.சும்மானாச்சுக்கும் சொன்னா, இப்படி பேசுதீரே? வாரும்வே, விசயமிருக்கு' குட்டி விடாது. கிளம்பினேன். வெயில் சுள்ளென்று உச்சந்தலையில் இறங்கியது. வடக்கு ரதவீதி தாண்டி, இரண்டாம் குறுக்குத்தெருவில், கடைசி வீட்டுக்கு முன் வீட்டில் நின்றோம்.

வீடு பெரியதில்லை. சுண்ணாம்பு அடித்து வருசமாயிருக்கும்போல. குனிஞ்சுதான் உள்ளே போகமுடியும்.கூடத்தின் உயரமும் குறைவுதான். என்ன வெயிலடிச்சாலும் உள்ளே 'சில்'-லென்று இருக்கும் .ரொம்பப் பழைய வீடு. ஆறுமுகத்தின் அம்மா வேலம்மா மட்டும்தான் அங்கு இருக்கிறாள். அவன் திருநெல்வேலியில் 'புராதன அல்வாக்கடை இதுதான்' என்று போர்டு போட்டு மிட்டாய்க்கடை வைத்திருக்கிறான்.கலைவாணி சென்னையில் இருக்கிறாள். அவளும் எதோ டிரவல்ஸ்ஸில் வேலை பார்ப்பதாக ஆறுமுகம் முன்பு சொல்லியிருக்கிறான். வேலம்மாளுக்கு மெலிந்த தேகம். சுருக்கம் விழுந்த முகம்.சும்மாவே இருக்கமாட்டாள்.விழுந்த தென்னை மட்டையை உரித்து விளக்குமாறு செய்வாள்.கோழிமுட்டை விற்பாள். இத்தனைக்கும் அவளுக்கு விதவை ஓய்வூதியம் வேறு வருகிறது. 'தெரியுமால. ஒருகாலத்துல இந்த வீட்டுல எத்தனை பேர் இருந்தாகன்னு?' குட்டி கேட்டது 'ம்ம்ம். பத்துபேருக்கும் மேல இருந்தாக-நான் பார்த்து.. ஆறுமுகம் சித்தப்பு கூட இங்கதான இருந்துச்சு?' "எல்லாரையும் வேலம்மாக்கிழவிதான் வளர்த்துச்சு. இப்ப தனி மரமா நிக்கி" "இதச் சொல்லத்தான் இஙக கூட்டியாந்தியாக்கும்?" "கோவப்படாதவே. கொஞ்சம் பொறும்" வாசலில் யாரையும் காணலை. வேப்பமரத்தின் மேலே ஒரு காக்கா சோம்பலாகக் கத்திக்கொண்டிருந்தது. "சரி, போகலாம். வேலையத்துக் கிடக்கேன்னு நினைச்சியா?" குட்டியிடம் சீறீனேன். "ஷ்.. இந்தா பாரு, வந்துட்டாங்க"

கேட் திறக்கும் சப்தம் கேட்டு, ஊஞ்சலில் இருந்தபடியே கேட்டாள்,"யாரு?" நின்றுகொண்டிருந்த இருவரில் இளையவனாக இருந்தவன் முதலில் பேசினான். "நாந்தாம்மா, மணிவண்ணன்" கூடவந்தவர் அடிக்குரலில் சீறினார்."மூதி,உம்பேரு கிழவிக்கு ரொம்பத்தெரியும் பாரு" குரலை உயர்த்தினார்."யம்மா, நான் செல்லமுத்து நாடான் வந்திருக்கேன். ஆறுமுகம் வரச்சொல்லிச்சு" வேலம்ம்மாள் வாசலுக்கு வந்தாள்"வாங்க நாடாரைய்யா.ஒங்க பையனா? பேரு தெரியலை. அதான். வா தம்பி" செல்லமுத்து பணிவாய்க்கேட்டார்."தூங்குறவகளை எழுப்பிட்டமோ?" "இல்ல, இல்ல, இப்பத்தான் உக்காந்தேன்" வந்த இருவரும் கீழே பாயில் உட்கார்ந்தனர்.

ஓட்டுக்கூரையில் பதித்திருந்த கண்ணாடி வழியே வந்த ஒளிக்கற்றையில் தூசிப்படலம் சோம்பலாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. கீழே, பச்சைத்துண்டில் பருப்பு உலர்த்தியிருந்தது. "வாசல்ல காக்கா தொல்லை ஜாஸ்தி. எல்லாத்தையும் கொத்திப்போடுது.அதான் உள்ளாறவே.. சொல்லுங்க. ஆறுமுகம் இன்னிக்கு வாறேன்னானா? இன்னும் வரலையே?" "மத்தியானம் வாரன்னான்" "அப்ப வருவானாயிருக்கும். என்ன விசேஷம் நாடாரைய்யா?" செல்லமுத்து தயங்கினர். சில விஷயங்களை தொடங்குவதுதான் கடினம். வெற்றி தோல்வி அதில்தான் இருக்கிறது. மணிவண்ணன் முந்தினான்."நாங்க இப்போ கட்டுமனை வித்து, வீடும் கட்டித்தறோம்மா. கிழக்கால இந்து ஆரம்பப்பாடசாலைல இருந்து மேல்ரோடு வரை இப்ப .." அவன் முடிக்கவில்லை. வேலம்மா சொல்லமுத்துவைப் பார்த்துக் கேட்டாள்,"ரத்னா நல்லாயிருக்காய்யா?" "வந்திருக்கும்மா. அஞ்சு மாசம் இப்ப.இந்த தடவையாச்சும் புள்ள தங்கணும்" "அதான.. செல்லாத்தா போன வாரம் சொன்னா,'நாடார் வீட்டம்மாவை பஸ்ஸ்டாண்டுல பாத்தேன்-திருச்சிக்குப் போறேன்னு சொன்னாக-ன்னு"இதானா? நல்லது சாமி. கவலைப்படாதீங்க. எல்லாம் நல்லா நடக்கும். நீ என்ன சொல்லிட்டிருந்த ராசா? வீட்டு விசயம் கேட்டதுல நீ சொன்னது கவனிக்கல" செல்லமுத்து தொடரவேண்டாமொன்று சைகை காட்டினார் வாசலில் நிழல் தெரிந்தது.

"ஆறுமுகம்தான். வந்துட்டான்" உள்ளே வந்தவன் சிரித்தபடி"வாங்க"என்றான்."கொஞ்சம் லேட்டாயிருச்சு.கடைப்பையன் வரலை.அப்பவே வந்துட்டீங்களோ?" "சாப்புடுதியா ராசா? நீங்களும் உக்காருங்கய்யா.அஞ்சே நிமிசந்தான்" கிழவி பரபரத்தாள். "இப்ப பசியில்ல. பொறவு பாத்துக்கலாம்.அம்மாகிட்ட சொல்லிட்டீங்களா, மணிவண்ணணன்?" "இல்ல. நீ வரட்டும்னு காத்துகிட்டிருந்தோம்" "அம்மா, இவங்க மனை வாங்கி வீடு கட்டித்தாராங்களாம்.இந்தத் தெருவுல மத்த வீட்டையெல்லாம் விலை பேசியாச்சாம்.இப்ப, நம்ம வீட்ட பேச வந்திருக்காங்க" கிழவி மெளனமாயிருந்தாள். ஆறுமுகம் கேட்டான் "எவ்வளவு கிடைக்கும் சார்?" "ஒரு லட்சம் போவும்" மீண்டும் மெளனம்.. செல்லமுத்து மொதுவாய் தொடங்கினார்'அம்மா, உங்களுக்கும் வயசாயிட்டு வருது. உங்க வீட்டு விசயத்துல பேசறேன்னு நினைக்க வேண்டாம்.பேசாம இந்தப் பழைய வீட்டை வித்துட்டு, ஆறுமுகம் கூட நெல்லைல போயிருக்கறது உங்களுக்கும் நல்லது.அவனுக்கும் ஆத்தாகூட இருக்கான்னு சந்தோசமாயிருக்கும்" வேலம்ம்மா குனிந்திருந்து கொண்டே கேட்டாள். "வீட்டை என்ன செய்வீங்க நாடாரே?"

மணிவண்ணன் முந்தினான்,"இடிச்சிருவோம்.புதுசா அஸ்திவாரம் போட்டுருவோம்" செல்லமுத்து நறநறத்தார்.'இந்தப் பயலுக்கு இன்னமும் தொழில் சுழுவு தொரியவில்லை.வீட்டுக்குப் போயித்தான் திருத்தணும்' மீண்டும் மெளனம் நிலவியது. ஆறுமுகம்,"வித்தறலாம்மா.ஒரு லட்சம்னா லாபம்தான்" வேலம்மா ஒன்றும் பேசவில்லை.பச்சைத்துண்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். "அப்போ, உங்களுக்கு சம்மதம்னா, பத்தரத்தை நாளைக்கே முடிச்சறலாம்.நாளைக்கு அமாவாசை.நிறைஞ்ச நாளு."செல்லமுத்து முடிக்கவில்லை; வேலம்மாள் கூர்மையாக செல்லமுத்துவைப் பார்த்தாள். "அப்போ, நாளைக்கே நான் செத்தும்போவணும்-கறீங்க"

செல்லமுத்துவின் முகத்தில் வலி தெரிந்தது. "நான் அப்படியாம்மா சொன்னேன்?" வேலம்மாவின் குரல் உயர்ந்தது "நாடாரே, கேட்டுக்கோரும்.இந்த வீட்டுல நான் மருமவளா வரும்போது, எனக்கு புரட்டாசி புறந்தா எட்டு வயசு.எத்தனை வருசமாச்சுன்னெல்லாம் தெரியாது எனக்கு. இவனை மட்டுமில்லையா.. இவன் சித்தப்பனுக்கும் நாந்தான் பால் குடுத்து வளர்த்தேன்.வாழ்ந்து வந்த வீடுய்யா.இடிக்கணும்கீயளே? உமக்கும் பேரன்,பேத்தி பொறக்கணும் - பாத்துக்கோரும்" செல்லமுத்து ஆடிப்போனார். "யம்மா" ஆறுமுகம் அதட்டினான்."என்ன பேசற/" "நீ சும்மாயிருல" வேலம்மாவின் குரல் இன்னும் உயர்ந்தது. செல்லமுத்து வியர்வையைத் துடைத்துக் கொண்டார். "நல்லா யோசிச்சு முடிவெடுங்கம்மா. எத்தனை நாளைக்கு இப்படி தனியா இந்த வீட்டுல இருக்கப் போறீங்க? பிள்ளைங்க எல்லாம் வெளியூருகுப்போயிட்டது. அவனவன் குடும்பம்னு யாயிறுச்சு" "குஞ்செல்லாம் சிறகு முளைச்சுப் பறந்துட்டது. குருவிக்கூட்டுக்கு இனியென்ன வேலை? கலைச்சுறு-ங்கறீங்க" "அதில்லம்மா" செல்லமுத்து திணறினார். இது உணர்ச்சி கலந்த விஷயம்.தவறாக வாய் விட்டால் தொலைந்தது. தர்மசங்கடமான மெளனம் மீண்டும்.


"அப்போ நாங்க வர்றோம்மா.வறோம்பா ஆறுமுகம்" "கை நனைக்காம போறீயளே? ஒரு வாய் சாப்டுட்டுப் போவலாம்" "காரியம் கிடக்கும்மா. இன்னொரு நாள் ஆவட்டும்" வெளியே போகும்போது, செல்லமுத்து ஆறுமுகதை அழைத்தார். "கஷ்டம்தான் தம்பி.அம்மா புரிஞ்சுக்க மாட்டேங்குது. நீதான் எடுத்துச் சொல்லணும். வரட்டா?" அவர்கள் போனதும் , உள்ளே வந்தவன் கத்தினான் "சே! நல்ல விலை வந்தது. வேண்டாம்னுட்டியே" "இந்த வீட்டை விக்கச் சொல்லறியா?. நான் போன பிறவு நீயும் உன் சித்தப்பனும் என்ன வேணும்னாலும் செய்யுங்க.. நான் விக்க மாட்டேன்" "புரியாம பேசறியேம்மா. எனக்கு நாப்பதாயிரம் இருந்தா, பக்கத்துக்கடைய வாங்கிப்போட்டுறுவேன்.சித்தப்பு கூட 'பணமுடை. அம்பதாயிரம் வேணும்'னுச்சு" "அதான் சொல்லிட்டேன்லா. நான் விக்கமாட்டேன்" "நாளைக்கே பத்திரம் எழுதக் கொண்டு வர்றேன். எப்படி விக்க மாட்டேன்னு சொல்லறே-ன்னு பாத்திருதேன்" "பத்திரம் எழுது..எம் பாடையை எடுத்தப்புறம்" திடீரென்று வேலம்மா அழத்தொடங்கினாள் நான் குட்டியை முறைத்தேன்." இந்த அழுவாச்சியப் பாக்கத்தான் கூட்டியாந்தியா? நான் போறேன். வேலையத்த பயலுக சகவாசமெல்லாம் இப்படித்தான்" எழுந்து நடந்தேன். "ஏல.நில்லு.நாஞ் சொல்லறதக் கேளு.."


ராத்திரி நாலு மணியிருக்கும். குட்டி அவசரமாய் எழுப்பியது. "எந்திரிலா..முக்கியமான விசயம்" "போல.. என்ன தலைபோற வேலை இப்ப? காலைல பாத்துக்கலாம்" "தலை போற வேலைதாம்-ல. வான்னா வரணும்" வேலம்மா வீட்டுப் பின்புறம் கிணற்றடிக்குக் கூட்டிப் போனது குட்டி. வேலம்மா விழுந்து கிடந்தாள்- வலப்பக்கம் தலை சரிந்து கிடக்க, கைகால்கள் பரத்தி. தலைப்பக்கம் கிணற்றுக் கயிற்றிலிருந்து ஒரு பித்தளைக்குடம் வெளிவந்து நசுங்கிக் கிடந்தது. கால்பக்கம் அரணை ஒன்று ஓடியது. இன்னமும் விடியவில்லையாதலால் சுவர்க்கோழிகளின் சப்தம் அதிகமாயிருந்தது. "மயங்கிக் கிடக்காளோ?" பரபரத்தேன் " நீ வேற. உசிரு போயி ரெண்டு நிமிசமாச்சி" "அரணை நக்கியிருக்குமோ?" "அரணையுமில்ல, அரவுமில்ல.தலைப்பக்கம் பாருவே. குடம் கிடக்கு நசுங்கிப் போயி" "தண்ணி மொண்டு விடும்போது, வழுக்கித் தலைமேல குடம் இடிச்சிருக்கும்போல" "குடம் இடிச்சிருச்சோ,இடிச்சாங்களோ - என்னைய இதுக்கு மேல ஒண்ணும் கேக்காத.புடதில புத்தியிருந்தாப் புரிஞ்சுக்கோரும். ஒண்ணு மட்டும் நிச்சயம்வே. கிழவிக்கு துர்மரணம்னாலும் கபால மோட்சம். உச்சந்தலை பிளந்து உசிர் போறத நான் பார்த்தேன்"


என் மனைவி புலம்பிக்கொண்டிருந்தாள்."ராத்திரி தூங்கப் போகும்போது நல்லாத்தான் இருந்தாரு டாக்டர். அஞ்சு மணிக்கு முனகற சப்தம் கேட்டுப் பார்த்தேன். உடம்பு அனலாய்க் கொதிச்சுக்கிட்டிருந்தது. ' வீட்டை இடிக்கறாங்க, வீட்டை இடிக்கறாங்க"-னு புலம்பறாரு.பயமாயிருக்கு டாக்டர். டவுன் ஆஸ்பத்திரில கொண்டு போயிரலாமா?" "வேண்டாம்மா. ஊசி போட்டிருக்கேன்.கொஞ்சம் பார்ப்போம்"

குட்டியின் வரவை இப்போதெல்லாம் அறவே வெறுக்கிறேன்.

Sunday, May 19, 2013

6174 நாவல் விவாதிக்கப் படுவதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதில் இருக்கும் அறிவியல் கருத்துக்களும், தமிழ்ப் புதிர்களும் அலசப்படுமானால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். நான் திருத்திக்கொள்ளவும் பயனாக இருக்கும். கதைக் களம், போக்கு, கதையின் தொடர்ச்சி, தொய்வில்லாமல் போகுதல், திருப்பங்கள் போன்றவை குறித்துப் பல கருத்துக்கள் வந்துள்ளன. எழுதிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இனி வரும் கதைகளில் நான் இவற்றில் கவனம் செலுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

6174 கதையை அறிவியல் புனைகதை என்று வகைப்படுத்துவது சரியா என்பது எனக்கும் ஒரு கேள்வியாக இருக்கிறது. எது அறிவியல் புனைகதை என்பது வரையறுக்கப்படுதல் முதலில் அவசியம். 6174 நாவல் குறித்தான உரையாடல்கள் , பரிந்துரைகள்,  ரிவ்யூக்கள் கீழ்க்கண்ட  சுட்டிகளில் இருக்கின்றன.

http://www.facebook.com/6174thenovel

http://discoverybookpalace.com/search.php?search_query=6174&x=31&y=11

http://udumalai.com/?page=search&serach_keyword=6174

பிரபல கதாசிரியர் ஜெயமோகன் “21012ன்  10 சிறந்த தமிழ் நாவல்கள்” என்ற பட்டியலில் 6174 நாவலுக்கும் ஓரிடத்தை அளித்தது அவரது பெருந்தன்மை.


அனுபவமிக்க, மரியாதைக்குரிய எழுத்தாளர் இரா.முருகன் அவர்கள், அவரது சிறந்த 100 நாவல்கள் பட்டியலில் 6174க்கு 20வது இடத்தை அளித்திருக்கிறார். அவர் தரும் ஊக்கத்திற்கும் ஆசிகளுக்கும் எனது வணக்கங்கள்.

http://www.eramurukan.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

முனைவர் வேலுமணி அவர்களுடனான சந்திப்பு


தொழில் சார்ந்த வாழ்வில் பெருவெற்றி பெற்ற பலரும், தமது நேரத்தை வீணே செலவிடாமல் இருப்பதில் குறியாக இருப்பார்கள். அதுவும் விற்பனைத் துறையிலிருந்து போயிருக்கிறோமென்றால், நமது நேரத்தை விடுங்கள், நம்மை ஒரு மனிதனாகவே பலரும் மதிக்கமாட்டார்கள் வெகு சிலரே நாம் நமது நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கவும் அதைத் திறம்படப் பயன்படுத்தவும் நிஜமான அக்கறையோடு பேசுவார்கள், நடந்துகொள்வார்கள்.. இப்படிப்பட்ட யதார்த்த்த்தில்தான் போன வாரம் நான் முனைவர். திரு. வேலுமணி அவர்களைச் சந்த்தித்தேன்.
தைரோகேர் நிறுவனம், இந்தியாவில் , மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்று. 90களில் மிக சாதாரண நிலையில் தொடங்கப்பட்டு, இன்று இந்தியாவின் பெரும் க்ளினிகல் டயாக்னாஸ்டிக் சங்கிலித் தொடர் ஆராய்வு நிலையங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கும் தைரோகேர் நிறுவனத்தின் அதிபரான முனைவர். வேலுமணி அவர்களைக்குறித்து கேள்விப்பட்டிருப்பினும், அவரை சந்திப்பது இதுவே முதல் முறை. அவரைச் சந்திக்குமுன் எனது டெக்னிகல் உரையாடல்களும், டெமோவும் முடிந்துவிட்டிருந்தன. நாங்கள் பேசியதைச் சுருக்கமாக அவரிடம் ரெண்டு நிமிடத்தில் சொல்வதற்குத் தயாராகியிருந்தோம். ஒரு சராசரி சி.இ.ஓ எப்படி மேலோட்டமாக டெக்னிகல் விஷயங்களைக் கேட்பாரோ, அந்த அளவில் அவரிடம் உரையாடலை எதிர்பார்த்திருந்தோம்.
ஆனால், அவரோ கருவிகளின் அறிவியல் தொழில்நுட்பத்தின் ஆழ அடிப்ப்படைகளை “நீ சொல்வதிலிருந்து இப்படித்தான் நான் புரிந்துகொண்டிருக்கிறேன். “ என்று சொல்லியவாறே தொடங்கியபோது வியந்து போனோம். இவ்வளவு சுருக்கமாகவும், தெளிவாகவும், அந்த அளவு உயர்நிலையிலிருக்கும் ஒரு மனிதர் பேசுவது மிக அரிது. எனது முறை வந்தபோது ஆய்வுச்சாலை மென்பொருள் குறித்து நாங்கள் பேசினோம்என்றேன். அவர் சுவாதீனமாகத் தலையைத் தடவியவாறே “மென்பொருள் என்றால் என்ன? மூன்றே வார்தைகளில் சொல்லணும்என்றார். “சார். மூன்று மணி நேரம் பேச்ச்சொன்னால் பேசுவேன். மூணு வார்த்தைகளில் என்றால் ஐ ஆம் சாரி என்ற மூன்று வார்த்தைகள் மட்டும்தான் வருதுஎன்றேன். அவர் சிரித்தபடி “மிகவும் அடித்தளத்திலிருந்து யோசி. பயன்படுத்துபவனுக்கு என்ன வேணும்? பயன்படுத்த எளிதான திரையமைப்பு, அவனுக்கு வேண்டியதைத் தேடுவதற்கு எளிதான தேடல் இயந்திரம், மிக எளிதான அறிக்கை தயாரிக்கும்  ரிப்போர்ட்டிங்க் கருவி. இந்த மூணுதான் ஒரு ஆய்வுச்சாலையில் முக்கியமானது. இதுக்கு ஏற்றமாதிரி உன்னோட மென்பொருளில் என்ன இருக்குன்னு சொல்லு. எல்லாருக்கும் ஆர்வம் வரும். சும்மா, என்னோடது ஏ.எஸ்.பி டாட் நெட் ப்ளாட்ஃபார்ம்,பேக் எண்ட் ஆரக்கிள், க்றிஸ்டல் ரிப்போர்ட் கனெக்டிவிடி, ஆண்ட்ராய்ட் அப்ஸ்.ன்னு படம் போடறது ஒரு பிரமிப்பை, கவர்ச்சியைத் தருமே தவிர, ரொம்ப நேரம் பயன்படுத்துபவனை இழுத்துப் பிடிச்சு வைக்காதுஎன்றார். சற்றே யோசித்துப் பார்த்தேன். உண்மைதான். ஸ்பெஸிஃபிகேஷன் எண்களிலும், தொழில் நுட்பத்தின் வலைப்பின்னல்களின் அழகிலும் நாம் மயங்கலாம். பயன்படுத்துபவர்கள் அதில் நாட்டமுடையவர்களாவார்களா என்று சொல்லமுடியாது. பவர்பாயிண்ட் ப்ரெசெண்ட்டேஷன்களும், டெமோக்களும் நமது அறிவையும், அனுபவத்தையும் காட்டலாம். ஆனால், வாங்குபவனுக்குத் தேவையானதைக் காட்டுமா என்றால் சந்தேகம்தான். மிக அடிப்படையான அளவிலேயே வாங்குபவர்களின் விருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. அந்த்த் தளத்தை உதறிவிட்டு, நாம் தொழில்நுட்ப, அறிவியல் தளங்களில் இருந்து பேசுவது , அவர்களை நிறைவு கொள்ளச்செய்துவிடாது.மாறாக, அன்னியப்படுத்திவிடும் அபாயம் அதில் உண்டு.
அதன்பின், அவர் பேசுவதில் சற்றே கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினேன். கணிதம் படித்த அவர், கெமிஸ்ட்ரியும் , பயாலஜியும் புரிவதற்கு ஆறாம் வகுப்புப் பாடப் புத்தகத்திலிருந்து தொடங்கி படிப்படியாக சொந்தமாகவே படித்து விற்பன்னராக ஆனதைச் சொன்னதைக் கேட்கையில், வியப்பாக இருந்த்து. அது எப்படிக் கைகூடியது? என்பதை மராத்தியில் இரு வார்த்தைகளில் சொன்னார் “நாம் எதிலும் வெற்றி பெறுவதைத் தடுக்கும் தடைகள் இரண்டு. ஒன்று “ எனக்கு நேரமில்லை , இரண்டாவது “ போகுது. போரடிக்குது” “

 ஊன்றிக் கவனியுங்கள். முதலாவது , நாம்  நம்மையே ஏமாற்றிக்கொள்ள சொல்லிக்கொள்ளும் சப்பைக்கட்டு .   ’காலையில் எழுந்து ஆபீஸ் போவதற்கே நேரமில்லை. பின்னே ஆபீஸில் பிழியப்பிழிய வேலை. சாயங்காலம் வீடு வந்து சேர்ந்தா எப்படா படுக்கைல விழுவோம்னு இருக்கிற களைப்பு. ஞாயித்துக்கிழமை அக்கடான்னு ரெஸ்ட் எடுக்கறதுக்கும், சொந்த வேலைகளைக் கவனிக்கற்துக்குமே சரியாப்போகுது. இதுல எங்க மேல படிக்க.? உழைக்க?’ – நாம் எல்லாருக்கும் கிடைத்திருக்கும் சால்ஜாப்பு. மிகச் சரியாக நாம் உறுதிப்படுத்தும் காரணங்கள். அவை பொய்யில்லை. மாயம். Not lies - just illusions. இதைத் தாண்டி முன்னேற உழைப்பவனே வெற்றியடைகிறான்.
இரண்டாவது, நமது மனம் விரும்பும் சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடு. இனர்ஷியா(inertia) என்னும் பதம் இயற்பியலில் மிக முக்கியமானது. ஒரு பொருளுக்குக் கொடுக்கப்படும் ஆற்றல், இனர்ஷியாவிற்கு அதிகம் இருந்தால்தான் ஒரு இயக்கம் ஏற்படும். இது எட்டாம் வகுப்பு இயற்பியல். ஆனால் எண்பது வயதிலும் நமக்கு இது புரிவதில்லை. சோம்பேறித்தனம் என்ற இனர்ஷியாவை நாம் தாண்டும் வரையில் வெற்றி நோக்கிய இயக்கம் இருக்காது. ஒவ்வொருமுறையும் சோம்பேறித்தனம் என்ற இனர்ஷியாவைத் தாண்டி நமது உந்து சக்தி இருக்குமானால், வெற்றி நோக்கிய இயக்கம் நிச்சயம்.
மிகவும் சுவாரசியமான ஒரு பதத்தை அறிமுகப்படுத்தினார் முனைவர் வேலுமணி.. நமது நேரத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதன் ஒரு அழகான அலகு அது .MAIH என்னும் அப்பதத்தைக் குறித்து அடுத்த வாரம் எழுதுகிறேன்.

Saturday, December 29, 2012

டெல்லி நிகழ்வு - சில சிந்தனைகள்


டெல்லியில் நடந்த கோரமான வன்புணர்வு ஏதோ டெல்லியில் ஒரு பெண்ணிற்கு மட்டும் நடந்த தீங்காக எண்ணிவிடமுடியாது. இது சமுதாயப்பிரச்சனை. பண்பாட்டின் இழை  சமூகத்தில் வெட்டப்பட்டிருக்கிறது. யார் வெட்டினார் என்பதல்ல. எதனால் வெட்டுப்பட்டது என்பது அறியப்படவேண்டும். சிலர், பெருகிவரும் பாலிவுட் கலாச்சாரம், வெளிநாட்டு மோகம், மேற்கத்திய நாகரிகப் பாதிப்பு எனக் காரணங்கள் கூறுகிறார்கள். அது முழுமையான தீர்வாகப் படவில்லை. ஒரு முகம் மட்டுமே.

பண்பாடு என்பது வீட்டிலிருந்து , தெருவில் நடந்து மீண்டும் வீட்டிற்கு வரும்வரையான நடத்தையும் அடங்கியது. ஏதோ  விருந்தினர் முன்பு காட்டும் மரியாதையும், அடக்கமும் என்ற அளவிலே நாகரிகம் காட்டப்படுமானால், அது போலி பொய் வேஷமாகிறது. ஸ்டீபன் கோவே கூறுகிறார் “சோதனைக் காலங்களில் மன உறுதியை விடாமல் , தான் வாழும் தத்துவங்களில் பிடிப்பு உள்ளவனாக நடத்தல் , மிக முக்கியமானது”. இதுதான் அடிப்படைக் கல்வி என நான் நினைக்கிறேன்.
ஊடகங்களும், ஆசிரியர்களும், பள்ளிக்கூடக் கட்டுமானங்களும் வளர்க்கப்பட்டுவிடலாம். மாணவர்கள் தேர்வுகளில் வெற்றிபெறும் புள்ளி விவரங்களும் நாம் பெருமிதப்படும் அளவுக்குப் பெருகிவிடலாம். ஆனால் அடிப்படையில் அவர்கள் மனிதத்தை வளர்த்துக்கொள்ளாவிட்டால், அத்தனை முயற்சிகளும் பயனற்றுப் போய்விடும். மிகச் சிறந்த அறிவாளிகளும், பெரும் செல்வம் பொங்கி வரும் நகரங்களும், சிறந்த பள்ளிகளும், கல்லூரிகளும், தூய வீதிகளும், சுகாதாரமான உள்கட்டமைப்பும் இருந்தும் , மனிதன் மனிதத்தனத்தோடு வாழாவிட்டால் என்ன பயனாய் அவை இருக்கும்?

அடிப்படையில் நமது கல்விமுறையிலும், சமுதாயத் தட்டமைப்பிலும் பிறழ்வுகள் இருக்கின்றன. மும்பையில் பார்க்கிறேன். ஆட்டோ டிரைவரும் ரோட்டில் துப்புகிறான். ஆடி காரில் பயணிப்பவனும் ரோட்டில் துப்புகிறான். இது செல்வம் , வாழ்க்கைத் தரம் சார்ந்ததன்று. அவன் உள்வாங்கிய பண்பாடு, சமூகப் பொறுப்புணர்வு, தன்னாளுமை முதலியன , அவன் மனிதனாக நடக்கிறானா? என்பதைத் தீர்மானிக்கின்றன. பள்ளிகளை மட்டும் தனித்து  இதனை வளர்ப்பதில் தோல்வியடைந்ததாகக் கொண்டுவிட முடியாது. வீட்டில் பெற்றோருக்கு முதலில் பண்பாடு குறித்த பொறுப்புணர்வும் சுய அறிதலும் தேவை. குழந்தைகளிடம் அவர்கள் அறியும் வகையில் நாகரிகம் குறித்தான பகிர்தல்கள், உரையாடல்களைப் பெற்றோர் முன்னின்று நடத்த வேண்டும். முக்கியமாக, சோதனைக்காலங்களில் மன உறுதியுடன் , பண்பாட்டுக் கொள்கைகளில் பிடித்துநிற்க வலுவூட்டவேண்டும்.

டெல்லியில் நடந்தது , பிற இடங்களில் நடக்காமல் இருக்க வேண்டுமானால்,  நமது பண்பாடு மரபுகளை மீட்கொண்டு வர நாம்தான் முயற்சி செய்ய வேண்டும்.  “ தெரியற மாதிரி ட்ரெஸ் போடாதே, சும்மா கண்டவங்க கூட சுத்தாதே” எனக் கட்டுப்பெட்டித் தனமாக இருப்பதுதான்  மரபு எனத் தவறாகப் புரிந்து கொண்டு அறிவுறை செய்யப்போனால், இளைய தலைமுறையால்  நாம் தவறாகக் கணிக்கப்படுவோம். நமது அக்கறைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படும்.
எது வேண்டுமென நாம் சிந்திக்கவேண்டியது மட்டுமல்ல, செயலாற்றவும் அவசியமன சூழலில் இருக்கிறோம்.

Thursday, September 13, 2012

எனது முதல் தமிழ் புனைகதை 6174 வெளியீடு

  எனது முதல் தமிழ் புனைகதை 6174 செபடம்பர் 3 2012 ன்று வெளியாயிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழின் இரு பெரும் எழுத்தாளர்கள், திரு. பி.ஏ.கிருஷ்ணன் மற்றும் திரு. இரா.முருகன் அவர்களின் வாழ்த்துக்களுடனும் நல்லாசிகளுடனும் கதை வெளி 
வந்திருக்கிறது .உங்கள் ஆதரவை நாடுகிறேன். கதை குறித்தான உங்களது கருத்துக்களைத் தயங்காமல் இப்பக்கத்தில் தெரிவியுங்கள்.

http://www.facebook.com/6174thenovel

புத்தகம், ஆன் லைனில்  கீழ்க்கண்ட வலைத் தளங்களிலும் கடையிலும் 


பெற்றுக்கொள்ளலாம்
 .

http://discoverybookpalace.com/products.php?product=6174

1. Discovery book palace, No. 6, Munusamy road, First floor, Mahaveer Complex,West k.k. nagar, 
Chennai - 78
Contact person : Mr. Vediyappan
Contact number : 9940446650
2.   http://udumalai.com/?prd=6174&page=products&id=11731

3.The New Booklands,52, C North Usman Road, T. Nagar, 
Chennai - 600 017
Contact person : Srinivasan
Contact number : 9840227776

செ குவாரா (Che Guevara) எழுதி முடித்ததும் இதனைக் குறித்து அறிவிக்கலாம் என இருந்தேன். அது முடியப் பல மாதங்களாகும் என்ற நிலையில் 6174-ன் வெளியீடு இத்தருணத்தில் வர வேண்டியதாயிற்று. 
நண்பர்களின் ஆதரவையும், படித்தபின் மேலான கருத்துக்களையும் நாடுகிறேன். 

Saturday, April 28, 2012

முழுச் சுதந்திரம் - ஒரு முரண் பார்வை

சுதந்திரம் என்பதற்கு “ இரு எல்லைகளையும் பொருட்படுத்தாதிருப்பது சுதந்திரம்” (Liberum adversarium indifferentiae) என்றொரு விளக்கம் உண்டு. இது ஸ்காப்பன்ஹோயர் காலத்தது என்று நினைக்கிறேன். விருப்பு வெறுப்பு என்ற இரு எல்லைக்ளைச் சேராது, ஒன்றைக் குறித்து கவனிப்பதைத் தவிர்ப்பது சுதந்திரம் என்றால் , சமூகத்தின் பல சவால்களைச் சந்திக்கத் தயங்கி ஒதுங்கி இருப்பது சுதந்திரம் என்று அபத்தமான பொருள் புரிந்து கொள்ளமுடியும். தனிமனித சுதந்திரம் என்பது ஒதுங்கி இருப்பது, ஒதுக்கி வைப்பது என்ற பொருள் வருமானால் சுதந்திரம் குறித்தான சமூகப் பொறுப்புணர்வு என்பது ஒரு ‘தளை’ என்று சொல்லிவிடமுடியும். இது அதனிலும் அபத்தம்.


பெண்ணியம் என்பதனை எடுத்துக்கொள்வோம். அதன் எல்லைகள் என்ன என்பதை வரையறுக்காமல், பெண்ணியம் என்பது முழுச்சுதந்திரம் என்று பொருள் கொண்டால். எதிலிருந்து சுதந்திரம் என்பதை வரையறுக்கவேண்டும். மேற்கூறியபடி ஒதுங்கியிருத்தல் எனக்கொண்டால், சமூகத்தில் பெண்ணியம் என்பதன் பொருள் புரிவதென்பது இயலாது. இது முரண்.

பெண்ணியம் என்பது பெண்களின் இருத்தல் குறித்தான உணர்வு எனக் கொள்வது ஒரு எல்லை. பெண்ணியம் என்பது ஆண்களை வெறுத்தல் எனக்கொள்வது மற்றொரு எல்லை. இப்படிப் பல எல்லைகள் கொண்ட வரையறுத்தல், பெண்ணியம் என்பதன் கோட்பாட்டை ஒரு வட்டத்தில் அடைக்கிறது. வட்டத்தில் அடைபடுதல் சுதந்திரமன்று என்பது மற்றொரு வரையறை. இப்படிப்போனால் ’வரையறுத்தல் இல்லாதது சுதந்திரம்’ என்பதே ஒரு வரையறுத்தல் ஆவதால், அது சுதந்திரத்தின் வரையறுத்தல் என்ற கோட்பாடே முரணாகிறது. இது வரையிலி (infinity)ஐ வரையறுத்தல் போன்றது.

ஆக, ’எது பெண்ணியம்?’ என்ற கேள்வி சுதந்திரம் என்ற பதத்தை ஒரு singularity போலக் கவனமாகத் தாண்டவேண்டும். வரையறுத்தல் என்பது பலருக்கும் அவரவர் கணிப்பின்படி மாறுவதால், விவாதத்திற்குரியதாகிற்து. இவ்வாறு விவாதிப்பது என்பதே சுதந்திரம் என்று பொருள்கொண்டால், கருத்துப் பரிமாற்றங்கள் ஏதுவாகிறது. இலகுவாகிறது. ஆயினும், அவ்விவாதங்கள் பெண்ணியத்தை வரையறுப்பதில்லை. அதனை விரும்பலாம், வெறுக்கலாம். உதாசீனப்படுத்துவது என்பது தனிமனித சாய்ஸ் என்றாலும், அச்சுதந்திரம் ஆரோக்கியமானதன்று.

வரையறைகளுக்குள் நின்று , எல்லையற்றதைக் காண்பதே ஒரு நிஜமான அனுபவமாக இருக்கமுடியும். எல்லைகளற்ற வெளியில் முதலிலிருந்தே  நின்று, ’எல்லையற்றதை ரசிக்கிறேன்’ என்று சொலவது இயலாது. ஏனெனில், எல்லை என்பதை உணர்ந்தவனாலே மட்டுமே, எல்லையற்றதை வேறுபடுத்திக் காணவும் , உணரவும் இயலும்.

இதைத்தான் ஒரு சுஃபி கவிஞன் சொன்னான்.

“ எல்லைகளற்ற வெட்டவெளியில், சட்டங்களாலான கதவைத் திறந்து வைத்து உனக்காகக் காத்திருக்கிறேன்”.

இதனை சுதந்திரமாக முழுமையாக அனுபவியுங்கள்.

Sunday, February 12, 2012

செ குவாரா ஒரு புரட்சிகரமான வாழ்வு -பகுதி 3



மனிதனின் சிந்தனைகளும், செயல்களும் அவன் இருக்கும் சமூக, பொருளாதார சூழ்நிலை, ஊடகங்கள் மூலம் உணரும் சூழ்நிலைகள் மற்றும் பிறருடனான தொடர்பு மூலமே பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆண்டர்சன் எர்னெஸ்ட்டோவின் சிந்தனைகள்,செயல்கள் தூண்டப்படுவதற்கான அவன் இருக்கும் சூழ்நிலைகளையும், புத்தகங்கள், தகவல் தொடர்பு மூலம் அறியும் பிற நாட்டு சூழ்நிலைகளையும்-(குறிப்பாக க்யூபா), அவன் தொடர்புகொள்ளும் மனிதர்களையும்(உருசிய தூதரகத்தைச் சேர்ந்த லெனனோவ், அவன் காதலி - பிற்கால மனைவி, அவனது நண்பர்கள்) விவரிக்கிறார். இந்த விவரங்கள் எர்னெஸ்ட்டோவின் அக்காலத்தைய மனநிலையை நாம் அனுமானிக்க உதவுகிறது.

சே குவாராவின் சிந்தனைகள் மார்க்ஸிஸம் சார்ந்த பொதுவுடமைக் கொள்கை சார்ந்தவை. சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருப்பவனின் வலிகளை உணர்ந்து, அவனுக்காகப் போராடத் தூண்டவேண்டியவை- வலியில் துடிப்பவன் யாராயிருப்பினும்.ஆனால், சே குவாராவின் சிந்தனைகளில் லத்தீன் அமெரிக்க மக்கள் (ஐரோப்பாவிலிருந்து குடியேறிய , குறிப்பாக ஹிஸ்பானிய மக்களின் வழிவந்தவர்கள்)மீதான வட அமெரிக்க நாட்டுச் அநியாயச் சுரண்டலே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெரு நாட்டில் மட்டுமே பழங்குடி மக்கள் மீதான அக்கிரமப் போக்கு , அதுவும் அமெரிக்க நாட்டு மக்களின் அலட்சியப்போக்கு மட்டுமே அவன் கண்களில் தெரிந்தன. பிற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், மெக்ஸிக்கோவிலும் பழங்குடி மக்களும், கறுப்பர்களும் அடக்குமுறை செய்யப்படுவதை அவன் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவன் மெக்ஸிகோவில் ஒரு நகரமே வெளளத்தில் மூழ்கியபோது எர்னெஸ்ட்டோ தன் அன்னைக்கு எழுதுகிறான் “ பாதி நகரம் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. ஆயின் பாதிக்கப்பட்ட மக்கள் எந்த ஒரு தரத்திலும் இல்லாத பழங்குடி இந்தியர்கள் மட்டுமே” . இக்காமாலைப் பார்வை, அவனது அர்ஜெண்டினிய வளர்ப்பு கொடுத்ததாக முன்னமே ஜோன் லி ஆண்டர்சன் குறிப்பிட்டிருக்கிறார்.

வசிக்கும் சூழ்நிலைகள் மட்டுமே எர்னெஸ்ட்டோவின் சிந்தனைகளைத் தாக்கியதென்றால், மெக்ஸிக்கோவில், கண்முன்னே,அப்பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் அவன் கொதித்திருக்கவேண்டும். மாறாக, கடல் கடந்து க்யூபாவில் அதிபர் பாட்டிஸ்டாவின் சர்வாதிகாரமும், அதனை எதிர்த்தான ஃபிடல் காஸ்ட்ரோவின் இயக்கமும் அவனை ஈர்த்தன. க்யூபா மக்கள் ஸ்பானிய வம்சாவழி மக்கள். 1950களில் க்யூபா, அமெரிக்கா 1901-ல் செய்துகொண்ட ப்ளாட்ட் ஒப்பந்தப்படி , அமெரிக்காவின் இஷ்டப்படி ஆட்டுவிக்கப்படும் கையிலாகாத அரசின் பிடியிலிருந்தது.க்யூபாவின் 40 ஆண்டுகால அரசியல் பின்னணி அதில் வெடிக்கவிருக்கும் புரட்சிக்கு சாதகமாக அமைவதை ஆண்டர்சன் காட்டுகிறார். எப்படி ஒரு மனிதன் தனது சுய வாழ்வில் அனுபவிக்கும் சுரண்டல்களை,அடக்குமுறைகளை, சமூக அநீதிகளின் வெளிப்பாடுகளாகக் காண்பித்து, சமூகப் புரட்சியாக வெடிக்க வைக்கிறான் என்பதற்கு மற்றுமோர் சான்று - ஃபிடல் காஸ்ட்ரோ. இந்தப் பின்னணி அழகாக விளக்கப்பட்டிருக்கிறது. ஃபிடல் காஸ்ட்ரோவைக் குறித்தான மூன்று பக்கங்கள் ,செ குவாராவை அறிவதற்கு அவசியம்.

ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்த குடும்பம் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தது. வேளாண்மையும் வியாபாரமும் செய்துவந்த அவனது தந்தை, தனது கரும்புத் தோட்டத்தில் விளைபவை அனைத்தையும் அடிமட்ட விலையில் யுனைட்டட் ப்ரூட்ஸுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலைக்கு விற்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இந்த வலுக்கட்டாய சுரண்டல்கள், லஞ்சம், அடக்குமுறையில் அத்துமீறும் காவல்படை, அட்டூழியங்களின் ஆணிவேராக, க்யூபாவின் அமெரிக்கக் கைப்பாவை அரசு, அதன் அரசியல் பின்னணி முதலியன ஃபிடலை அமெரிக்கா மற்றும் க்யூபாவின் அரசு மீது வெறுப்பு கொள்ள வைத்திருந்தது. க்யூபாவின் கலாச்சாரத்தையும், மக்களின் மென் உணர்வுகளையும் அவமதித்த அமெரிக்க கடற்படையினரின் செயல்கள், அமெரிக்கர்கள் க்யூபாவை விபச்சார விடுதிகளால் நிரப்பியது போன்றவை ,ஃபிடல் போன்ற இளைஞர்களை புரட்சிப்பாதையில் போகத் தூண்டியது. இந்தப் பின்னணி இன்றும் பல நாடுகளில் அமெரிக்காவால் தொடரப்படுவது கண்கூடு.

ஃபிடல் மற்றும் அவனது சகோதரன் ரவுல் காஸ்ட்ரோவை மெக்ஸிக்கோவில் சந்திக்கும் எர்னெஸ்ட்டோ அவர்களது கொள்கைகளாலும், பேச்சுக்களாலும் ஈர்க்கப்படுகிறான். க்யூபாவில் போர் புரிவது என்பதைத் தீர்மானிக்கிறான், அவன் காதலி,( தற்போது மனைவி) கர்ப்பமுற்றிருப்பதை அறிந்தபின்னும். ஏர்னெஸ்ட்டோவின் அகச்சிந்தனைகளுக்கும் அவனது வெளிப்பரிமாற்றங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை மெல்லிதாகக் கோடிட்டுக்காட்டுகிறார் ஆண்டர்சன். கர்ப்பமான மனைவியை அவள் கெஞ்சக் கெஞ்சப் பிடிவாதமாக பல மயன் இடிபாடுகளின் படிகளில் ஏறிவருமாறு வற்புறுத்தும் ஏர்னெஸ்ட்டோ, மிகவும் ஆபத்தான , தூக்கித் தூக்கிப்போடும் படகுச் சவாரியில் மனைவியைக் கொண்டுசெல்லும் ஏர்னெஸ்ட்டோ, படகில் தடுமாறும் மனிதர்களை எள்ளி நகையாடி, புகைப்படம் எடுக்கும் ஏர்னெஸ்ட்டோ என இரக்கம், அன்பு , நாகரீகம் போன்ற மென்னுணர்வு மனப்பாங்கு அறவே இவனுக்கு இல்லையோ? என்று ஐயப்படும் அளவுக்கு, ஆண்டர்ஸன் எர்னெஸ்ட்டோவை சித்தரிக்கிறார். மார்க்ஸிச பொதுவுடமைக் கொள்கைகளில் ஊறிய அவனது போராளி மனது, தனி மனித நேயம் இரக்கம், பாசம் போன்ற மென் உணர்வுகள் மரித்த , வறண்ட பாலைவனமாக இருக்கிறது என நாம் கருதும்வேளையில் , பிறந்து பத்து நாளான தனது குழந்தை குறித்து ஒரு கடிதத்தைத் தன் அன்னைக்கு எழுதுகிறான். “ பிற சிசுக்களைப் போலவே இவளும் தோல் உரிந்து அசிங்கமாக இருக்கிறாள். பிற குழந்தைகளுக்கும் இவளுக்க்கும் ஒரேயொரு வேறுபாடு. இவளது தந்தையின் பெயர் எர்னெஸ்ட்டோ குவாரா”
வறண்ட பாலையிலும் பாசம் சிறிதாகக் கசிவதை உணரமுடிகிறது.

Saturday, December 31, 2011

’சே’ குவாரா -புரட்சிகரமான வாழ்வு - பகுதி 2

’சே’ குவாரா -புரட்சிகரமான வாழ்வு - பகுதி 2
Che Guevara - A Revolutionary Life , by Jon Lee Anderson
தெளிவான சிந்தனைகளுக்காவும், செயலாற்றல்களுக்காகவும் பாராட்டப்பட்ட அனைவரும் , வாழ்வின் அனைத்து முகங்களிலும் தெளிவாக இருந்து விடுவதில்லை. ஏனெனில் அடிப்படையில் அவர்கள் மனிதர்கள். மனிதர்க்ளின் சிந்தனைகள் காலத்திலும் தளங்களிலும் மாறுபடுகின்றன. தளங்களும், நேரமும் மாறும் பயணங்கள், அனுபவங்களை சாத்தியமாக்குகின்றன. அனுபவங்கள் மனதில் தாக்கங்களை சாத்தியமாக்குகின்றன. சிந்தனைத் தாக்கங்கள் , முன்பு எடுத்திருந்த முடிவுகளை மாற்றவும்,வேறு முடிவுகளைக் கைக்கொள்ளவும் தைரியம் ஊட்டுகின்றன.

எர்னெஸ்ட்டோ குவாராவுக்கும் இதுதான் நடந்தது. தென் அமெரிக்கப்பயணத்தின் பின், மருத்துவப் படிப்பைத் தொடர்கிறார். 40 பேப்பர்களை ஒரே வருடத்தில் வெறியோடு எழுதி முடித்துவிட்டு டாக்டர் பட்டம்பெற்றவர் , வெனிசூவேலா சென்று, நண்பன் அல்பெர்ட்டோவுடன் தங்கியிருந்து பணம் சேர்த்து, ஐரோப்பா செல்ல, நண்பன் கலீக்காவுடன் திட்டமிடுகிறார். ஒரு உரையாடலில் கலிக்காவிடம், தான் இறுதியில் இந்தியா செல்ல விரும்புவதாகக் கூறுகிறார். அவர் இந்தியா வந்திருந்தால் அவரது கொள்கை நிலைப்பாடு மற்றும் இந்தியாவின் அரசியல் நிலைமை மாறியிருந்திருக்கலாம்.

இப்படி மிகத் தெளிவாகத் தனது மருத்துவ வாழ்வை வெனிசுவேலாவில் தொடரத் தீர்மானித்தவர், பொலிவியா, பெரு வழியே ஈக்குவடார் சென்று அதன் கடற்கரை நகர் ஒன்றில், அடுத்த வேளைச் சோற்றுக்கே திணறிக்கொண்டு,பனாமா செல்லக் கப்பலுக்காகக் காத்திருக்கிறார். ஒரு நாள் அவரது நண்பர்களில் ஒருவர் “குட்டமாலா நாட்டில் அரசாங்கத்தின் சுரண்டலுக்கு எதிரே போராளிகள் ஆயுதங்கள் தூக்குவது “குறித்துக் கூறிக்கொண்டிருக்க, அங்கேயே , அப்போதே தனது மருத்துவ வாழ்வுத் தீர்மானத்தை அம்போவெனக் கைவிடுகிறார். சில தீர்மானங்கள் கைவிடப்படுவது, அதிலும் பெரிய தீர்மானங்களை கைகளில் ஏந்துவதற்காகத்தான் போலும். இந்தப் பகுதி, எர்னெஸ்ட்டோவின் தெளிவற்ற, தடுமாற்றங்கள் நிறைந்த வாழ்க்கைப் பகுதியைக் காட்டினாலும், அதனினும் பெரிய ஆவல் அவர் மனத்தில் புகைந்து கொண்டிருப்பதைக் காட்டுவதாகத்தான் எனக்குப் படுகிறது. அது குட்டமாலாவாகட்டும்,இந்தியாவாகட்டும்..எங்கெல்லாம் சுரண்டலின் பிடியிலிருந்து தப்ப முயற்சிகள் நடக்கின்றனவோ, அடிமட்டத்திலிருக்கும் சமூகங்கள் முன்னேற அரசாங்க அமைப்புகள் தடையாயிருக்கின்றனவோ, அங்கு சென்று போராட அவரது அடிமனதில் வெறி கனன்றுகொண்டிருப்பதை அவருடன் இருந்தவர்கள் அப்போது உணரவில்லை.


கோஸ்ட்டோ ரிக்காவின் ஸான் ஓசேயில் நாடுகடத்தப்பட்டு மறைந்து வாழும் லத்தீன் அமெரிக்க தலைவர்களை சந்திக்கிறான் எர்னெஸ்ட்டோ. அதில் மார்க்ஸிஸத்தில் உறுதியாக இருப்பவர்களை மிகவும் மதிப்பதாகச் சொல்கிறான். அங்கிருந்து குட்டமாலா சென்று சேர்ந்தபின்னரே, எர்னெஸ்ட்டோவின் சிந்தனைகளில் ஒரு தெளிவும் உறுதியும் பிறக்கிறது. இங்குதான் மருத்துவம் படித்து, தெளிவற்று ஊர் சுற்றும் அர்ஜெண்டின இளைஞன், மனித உரிமைகளுக்காக ஆயுதம் தாங்கும் போராளியாக, புரட்சிக்காரனாகப் பரிணாமிக்கிறான். எர்னெஸ்ட்டோ குவாரா டி லா ஸெர்னா, “செ’ குவாராவாக அழைக்கப்படுவதும், மாறுவதும் இங்குதான்.

கலங்கிய மனங்கள், தெளிவுற்று உறுதிபெற ஒரு உந்துதல் எங்கிருந்தோ கிடைப்பதை வரலாற்றில் பல இடங்களில் பார்க்கலாம். Zen and The Art of Motor Cycle Maintenance புத்தகத்தில் பிர்ஸிக் இவ்வாறு கூறுகிறார். “ ஆழ்ந்த சிந்தனைகளில் மனம், பெரும் செறிவை அடைந்த கரைசல்(super saturated solution) போன்றதாகிறது. அதில் கரைந்திருக்கும் உப்புக்கள் படிவமாகதற்கு சிறு சலனம் தேவைப்படுகிறது. மிக மெல்லிய தீண்டல்..வேண்டாம்.. வீச்சு மிக்க ஒரு ஒலி போதும் அதற்கு. " இந்த உந்துதலை ஒரு “தெய்வீகக் காட்சி(Divine Vision)”யாகவோ அல்லது வேறுதளத்தில் உணரப்படுகிற ஒரு அனுபவமாகவோ பல தலைவர்களின் வாழ்க்கையில் வரலாறு ஆவணப்படுத்துகிறது. அன்னை தெரசாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் பயணம் செய்யும்போது கிடைத்த “தெய்வீக காட்சி அனுபவம்” அவரை தொண்டு செய்வதில் உறுதி கொள்ளச் செய்தது போல.

எர்னெஸ்ட்டோ, இதுபோன்ற ஒரு விவரிக்க முடியாத ஆழ்ந்த உணர்வை குட்டமாலாவில் அனுபவிக்கிறான். பின்னாளைய பயணக்குறிப்பினில், காகிதத்தின் மார்ஜின் பகுதியில் இந்த அனுபவத்தை எழுதிச் செல்கிறான். Notes On the Margin (NOM) நோம் என்று மிகவும் கொண்டாடப்படுகிற இந்த குறிப்பு, அளவில் குறுக்கப்பட்டு இப்புத்தகத்தில் இரு பத்திகளாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மிக மிக அருமையான பொருள் செறிந்த வரிகள் இவை. மொழிபெயர்க்கப்பட்டு, குறுக்கப்பட்டதே இத்தனை உயிர்ப்புடனும், உணர்ச்சிப் ப்ரவாகமுமாக இருக்குமானால், மூலத்தைக் குறித்து சொல்ல வார்த்தைகள் இல்லை. பின்னாளில் வரப்போகிற நிகழ்வுகளை, அவை தரப்போகின்ற வலிகளையும், ஏமாற்றங்களையும் சேர்த்து அப்படியே தெள்ளத்தெளிவாக முன்கூட்டியே கண்ட பின்னும் தான் செய்யவேண்டிய தியாகங்களை வரையறுத்து, அவற்றை ஏற்றெடுக்கத் துணிவும், மன முதிர்வையும் எர்னெஸ்ட்டோ கொள்வதற்கு அக்காட்சி அனுபவம் தேவைப்பட்டிருக்கிறது. காட்சியில் கண்டதை , உணர்ந்ததை வார்த்தைகளில் வடிப்பதென்பது இயலாததென்றாலும், ‘நோம் " நம்மை அங்கேயே தளம் பெயர்க்கும் இழுப்பு நிறைந்த காட்டாறு. எர்னெஸ்ட்டோ ,”செ “ குவாராவாக மாறியதின் காரணங்களை, முன் பின் நிகழ்வுகளின் தேவையின்றி உணர வைக்கிறது ‘நோம்”.

ஜோன் லீ ஆண்டர்சனின் வெற்றி, எர்னெஸ்ட்டோவின் அன்றாட வாழ்வை ஆவணப்படுத்துவதில் இல்லை. மாறாக, எர்னெஸ்ட்டோ , “செ” என்னும் போராளியாக மாறும் களங்களை விவரிப்பதில் இருக்கிறது. தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்க “ வாழைப்பழ குடியரசுகள்” குறித்து இரு பக்கங்களுக்கு விவரிக்கிறார். இதில் கலங்கலான அக்கண்டத்தின் அரசியல் , அதன் பின்புலங்கள் , கொடுங்கோலர்களின் அமெரிக்க சார்புக் கொள்கைகள் ஏன் ஏற்பட்டன என்பன மிகத் தெளிவாக விளங்குகிறது. 1930-1954 வரையான தென் அமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகளின் அரசியல் நிலை, எர்னெஸ்ட்டோ ஒரு புரட்சியாளனாக மாற வைத்திருக்கிறது.

கலங்கலான அக்கால அரசியலை ஊன்றிக்கவனிக்கிறான் எர்னெஸ்ட்டோ. காதலியுடன் குட்டமாலாவில் வாழ்கிறான். சரியான வேலை கிடைக்காமல் அவளது சார்பில் வாழ்க்கை நடத்துகிறான். இதன் சில வருடங்கள் முன்பு குட்டமாலாவின் அதிபர் அர்பென்ஸ், சக்தி வாய்ந்த அமெரிக்கக் கம்பெனி “ யுனைட்டர் ஃப்ரூட்ஸ்”-ஐ வெளியேற்றி,அதன் மற்றும் அமெரிக்க அரசின் பகையினை சம்பாதித்துக்கொண்டார். . யுனைட்டட் ப்ரூட்ஸ், பல நாடுகளில் பெருமளவில் நில ஆக்ரமிப்பு செய்து, கொத்தடிமைகளாக அங்கிருக்கும் விவசாயிகளை வேலை வாங்கி, வேளாண்மைப் பொருட்களை ஏற்றுமதி செய்து பணம் ஈட்டும் கொள்ளை நிறுவனம். அதன் சக்தி, வாஷிங்டனிலும், சி.ஐ.ஏவிலும் பரவியிருந்தது. அமெரிக்க அரசு சி.ஐ.ஏ மூலமும், யுனைட்டட் ப்ரூட்ஸ்ஸின் பண உதவி கொண்டும், குட்டமாலாவின் அரசை போர் செய்து கவிழ்க்கிறது. அதிபர் அர்பென்ஸ் நாடு விட்டுச் செல்லும் நாள், ஏர்ப்போர்ட்டில் நிர்வாணப்படுத்தப்பட்டு , அவமானப்படுகிறார்.
எர்னெஸ்ட்டோ இதெல்லாம் நேரில் கண்டு குமுறுகிறான். தெளிவாக ஒரு முடிவு எடுக்கிறான். “ ஏகாதிபத்தியத்தை பூண்டோடு ஒழிக்க போரிடுவேன். நான் கம்யூனிஸத்தில் சேருகிறேன். ஒரு முடிவுக்கு வருவதற்கு இரு பாதைகள் இருக்கின்றன. ஒன்று அதன் கொள்கையில் நம்பிக்கை கொள்ளவேண்டும். இல்லை, பிற கொள்கைகளில் நம்பிக்கை அற்றுப் போகவேண்டும். நான் இரண்டாவது வழியில் வருகிறேன். ஏன் இந்த அமெரிக்கர்கள் மத்திய, லத்தீன் அமெரிக்க நாட்டு மக்களை துச்சமாக நடத்துகின்றனர் என ஆராய்ந்து பார்த்ததின் விடையும், என் குட்டமாலா, பெரு, பொலிவிய அனுபவங்களும் என்னை கம்யூனிசக் கொள்கையில் சேர வைத்திருக்கின்றன.” எனப் பிரியமான அத்தை பீட்ரைஸ்க்கு மடல் எழுதுகிறான். எர்னெஸ்ட்டோ ஒரு கம்யூனிஸ்டாக பரிணாமிக்கிறான். இந்த பின்புல விவரணம் மிக முக்கியமானது எனப் படுகிறது. இல்லாவிட்டால் அர்ஜெண்டினாவில் ஒரு பணக்காரனாக ,ஒரு புகழ்பெற்ற மருத்துவனாக மிக சொகுசாக வாழ வேண்டியவன், வேறு எதோ நாட்டில் ஏன் போரிட்டு மடியவேண்டும்?

தொடரும்

Friday, December 30, 2011

’சே’ குவாரா -புரட்சிகரமான வாழ்வு -1

’சே’ குவாரா -புரட்சிகரமான வாழ்வு -1
Che Guevara - A Revolutionary Life , by Jon Lee Anderson

வாழ்க்கைச் சரிதைகள் சலிப்பூட்டும் வகையில் ஒரே புகழ்ச்சி மயமாக இருக்கும். இலலையென்றால், சர்ச்சைக்குரிய நிகழ்வுகள்(?) அங்கங்கே வேண்டுமென்றே வீசப்பட்டு, கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகளின் தொகுபபாக, சில புகழ் விரும்பிகளின் உழைப்பாக பதிக்கப்படும். இரண்டுக்கும் மத்தியிலே, எதைப்படிப்பது என்பது கத்தி மேல் நடப்பதைப் போல. பல சரித்திர நாயகர்களின் வாழ்வுச்சரிதைகள் இப்படித்தான் வருகின்றன. செ குவாரா இந்த விசயத்தில் சற்றே அதிர்ஷ்டமானவர்.

ஜோன் லி ஆண்டர்சனின் “செ”குவாரா , புரட்சிகரமான வாழ்வு’’ , நிஜமான நடுநிலையில் இயங்குகிறது. அவருக்கு செ குவாரா-வை போற்றவோ, தூற்றவோ வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை. முன் முடிவுகள் அற்ற ,”இப்படித்தான்யா இருந்திருக்காரு” என தைரியமாக அவரால் எழுதிவிட முடிந்திருக்கிறது. இது அத்தனை எளிதான வேலையில்லை. க்ம்யூனிசக் கொள்கை தாங்கிய போராளிகளளாலும், குறிப்பாக க்யூபா, தென் அமெரிக்க நாட்டு கம்யூனிச ஆதரவாளர்களாலும், கிட்டத்தட்ட ‘கடவுள்’ நிலையில் வைத்துக் கொண்டாடப்படும் செ குவாரா-வைக்குறித்து “ அவர் சில வெள்ளை வெறித்தன சிந்தைகளில் எழுதினார்” எனச் சொல்லவும், ஆதாரங்கள் காட்டவும் தலைப்படுதல் அத்தனை சுலபமாக இருந்திருக்க முடியாது.
’ தலைவன் முதலில் மனிதன்’ என ஒத்துக்கொள்ளும் பரந்த மனப்பான்மை இருந்தாலொழிய, அவன் சிறு வயதிலோ அல்லது தலைவனாகுமுன் தனக்குள் நடத்திய சுய போராட்டத்திலோ , செய்த தவறுகளை தவறுகள் என அடையாளம் காணும் பக்குவம் வந்துவிடமுடியாது. இது , அரசியல் மற்றும் சமயத் தலைவர்களுக்கும் பொருந்துவது மட்டுமல்ல, கம்யூனிச, போராளிகளின் தலைவர்களுக்கும் பொருந்தும். இந்த ‘சனநாயக”ச் சிந்தனை என்னும் பதம் முரணாக இருந்தாலும் “பொதுவுடமை”வாதிகளுக்கும் பொருந்துவது இயல்பு.

எனவே ஆண்டர்சன் சில எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. மறைந்து போயிருந்த ஆவணங்களை மீண்டெடுத்தல், மனிதர்கள் உருவாக்கிய கட்டுக்கதைகளிலிருந்து உண்மையை வெளிக்கொணர்தல் என்பன 70களில் சாத்தியப்படாதவை. காலம் ,சிறிது ஓடிக் களைத்ததில், ஆண்டர்சனின் முயற்சிக்கு சற்றே விட்டுக்கொடுத்து பொலிவியக் காடுகளிலும், க்யூபாவிலும், சில மனிதர்களின் நினைவுகளிலும் புதைந்து கிடந்த உண்மைகளை வெளிக்கொணர வைத்திருக்கிறது.

முப்பது வருடங்கள் கழித்து பொலிவியக் காடுகளினூடே ஒரு ஏர்ஸ்ட்ரிப்பின் அருகே அடையாளம் தெரியாத அளவிற்கு, புதைக்கப்பட்டிருந்த சில சடலங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. மணிக்கட்டிலிருந்து கைகள் வெட்டியெடுக்கப்பட்டிருந்த ஒரு சடலம் சற்றே மரியாதையாக புதைக்கப்பட்டிருக்கிறது. அதனருகே ஆறு சடலங்கள் அப்படியே வீசியெறியப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கின்றன. செ குவாராவின் கைகள் அவர் சுடப்பட்டபின் வெட்டியெடுக்கப்பட்டு, பார்மால்டிஹைட்டில் மூழ்க வைத்து பொலிவியா அரசால் ரகசியமாக காக்கப்பட்டிருந்தன. இறந்தவர் செ குவாராதான் எனக் கண்டறிய, விரல் ரேகைப்பதிவுகளுக்கு வேண்டி, கைகள் வெட்டப்பட்டிருந்தன.

இப்படி ஒரு முன்னுரையோடு புத்தகம், மெல்ல அவரது பிற்ந்த நாளினைக்குறித்தான சர்ச்சையோடு தொடங்குகிறது. திருமணமாகுமுன்னே கர்ப்பம் தரித்த அவரது தாய், ப்யூனே அயர்ஸிலிருந்து கிளம்பிப் போய் காட்டுப்பகுதியில் கணவரோடு வாழ்ந்து, எர்னெஸ்டோ பிறந்த சில மாதங்கள் கழித்து, பிந்திய ஒரு நாளைப் பிறந்த தேதியாகப் பொய்யாகப் பதிவு செய்கிறார். முதலிலிருந்தே சர்ச்சையோடு வாழத் தொடங்கிய எர்னெஸ்டோ குவாராவின் இளமைக்காலம் இரண்டாம் உலகப்போரின் தாக்கம் பெற்று வளர்கிறது. ஹிட்லரை வெறுக்கும் எர்னெஸ்ட்டோ, அமெரிக்காவின் ஏகாதிபத்யத்தையும் வெறுக்கிறான். அவனது அசுரத்தனமான புத்தகப் வாசிப்பு, பல கண்ணோட்டங்களை அவனது சிந்தனையில் புகுத்துகிறது. அர்ஜெண்ட்டினப் புத்தகங்கள் மட்டுமன்றி, ப்ரெஞ்சுப் புத்தகங்களிலும் அவன் நாட்டம் விரிகின்றது. நேருவின் கொள்கைகள் அவனுக்குப் பிடித்திருப்பதாக தனது நண்பர்களிடம் சொல்கிறான். எங்கோ அர்ஜெண்டினாவில் , தனது நாட்டு அரசியலை மட்டுமன்றி உலகளாவிய மனித வளர்ச்சி நோக்கு கொண்ட ஒருவன் , ஒரு புரட்சியாளனாக வாழ்ந்ததில் வியப்பில்லை. ஏனெனில், பாரதி “மாகாளி உருசிய நாட்டின்கண் கடைக்க்ண் பார்வை வைத்தாள் “ எனப்பாடியதும் “பெல்ஜிய நாட்டின்” நிகழ்வுகளைக் குறித்துப் பாடியதும் ஒரு புரட்சி வாழ்வின் அடையாளமே.

அமெரிக்க வெறுப்பு சிறு வயதிலேயே மனதில் ஏறிய எர்னெஸ்டோ , அக்காலத்தில் வாழ்ந்த வெள்ளையர் வீட்டுப் பிள்ளைகள் செய்யும் அநியாயங்களைத் தானும் செய்கிறான். வீட்டு வேலைக்காரியாக இருக்கும் இந்தியப் பழங்குடிப்பெண்ணுடன் பாலினத் தொடர்பு, பல பெண்களுடன் தொடர்கிறது. இடையில் மலர்ந்த காதல் நொறுங்கிப்போக.... எர்னெஸ்டோ குவாரா ஒரு போராளியாக மாறியதில் வியப்பில்லை.

மகாத்மா காந்தி இந்தியாவை அறிய ரயில் பயணம் மேற்கொண்டது போல, எர்னெஸ்ட்டோவின் அமெரிக்கப் பயணம் அமைந்திருப்பதாக எனக்குப் படுகிறது. பயணங்கள் நமது கொள்கைகளை மாற்றிவிடக் கூடியவை. ஒரு புதிய கொள்கையின் வித்துக்கள் விழுந்து விட சாத்தியங்களை ஏற்படுத்திக்கொடுப்பவை. எர்னெஸ்ட்டோ, பெருவிலும், பொலிவியாவிலும் பழங்குடி இந்தியர்கள் படும் பாட்டை நேரில் காண்கிறான். நில ஆக்ரமிப்பு செய்து பெரும் பணம் ஈட்டும் நிலச் சுவாந்தார்கள் மீதும், அமெரிக்க சுரங்கக் கம்பெனிகள் மீதும் அவனது வெறுப்பு பன்மடங்காகிறது. எர்னெஸ்ட்டொவுன் அவனது நண்பன் வும் மேற்கொண்ட தென் அமெரிக்கப் பயண அனுபவங்கள் “மோட்டார் சைக்கிள் டைரிகள்” எனப் புத்தகமாக வந்திருக்கின்றது. அதனை கிட்டத்தட்ட இரண்டு அத்தியாயங்களாக ஆண்டர்சன் காட்டியிருக்கிறார்.

வெனிசுவேலாவில் கறுப்பர்களை முதன்முதலாக அருகிலிருந்து கவனிக்கும் வாய்ப்பு எர்னெஸ்ட்டோவுக்குக் கிடைக்கிறது. அவர்களைக்குறித்தான அவரது கருத்துக்கள் , அக்காலத்திய அர்ஜெண்டீனிய வெள்ளை நிற வெறியைக் காட்டுவதாக அமைகிறது. இதனை ஆண்டர்சன் சர்வ சகஜமாக எழுதிப்போகிறார். இது கண்டிப்பாக க்யூபாவிலும், உலகளவில் செ குவாரா அபிமானிகளின் வட்டத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்ககூடும்.

தொடரும்.

Saturday, April 09, 2011

அண்ணா ஹசாரே-ஏன் திடீரென பரபரப்பு?

உலகக்கோப்பை வெற்றிக்கூச்சலின் நடுவே எப்படி ஒரு எளிய மனிதனின் குரல் உரக்கக் கேட்கிறது என்பதே பலருக்கு வியப்பாக இருக்கிறது. அண்ணா ஹசாரே மராட்டிய மாநிலத்தில் பரவலாகக் கேட்டபெயராக இருக்கலாம். பிற மாநிலங்களில் வெகு அரிது.

அவர் உண்ணா விரதத்தைத் தொடங்கியதும் சரியான நேரமில்லை தொலைக்காட்சி சேனல்கள் உலகக்கோப்பை முடிந்ததும் , ஐ.பி.எல், அஸ்ஸாம், தமிழ்நாடு தேர்தல்கள் என அங்கங்கே சென்றுவிட்ட நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு காந்தியவாதியின் உண்ணா விரதம் மேற்கொள்வ்து பெரிதாகக் காட்டப்பட காமிராக்களுக்குப் பஞ்சம்.அனைத்தையும் தாண்டி, அண்ணாவின் சத்தியாகிரகம் வென்றிருக்கிறது. சரத் பவார் கீழிறங்கினார் முதலில். பின் ஒரு நாள் முரண்டு பிடித்து, டெல்லி பணிந்தது. லோக் பல் தீர்மானம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்ற வாக்குறுதிகளுக்கு செவி சாய்க்காமல், அண்ணா அடம்பிடித்தது வீணாகவில்லை.

டெல்லி, மும்பை, சென்னை, பங்களூர், ஹைதராபாத்... எல்லா நகரங்களும் அன்ணாவுக்கு ஆதரவாக திரண்டபோதும், ஃபேஸ்புக், ட்விட்டர், இணைய தளங்கள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் என இளைஞர்களும், முதியவர்களும் அசத்திவிட்டார்கள். நான் ஆவாஸ்.ஒர்க் -கில் எனது ஆதரவைப் பதிவு செய்த போது, ஒவ்வொரு நொடியிலும் பெயர்கள் வந்தவண்ணமிருந்தது கண்டு வியந்துபோனேன். நான் பதிவு செய்த ஒரு நிமிடத்தில் என் மகனும் பதிவு செய்தான். அவனது நண்பர்களுக்கு ஃபேஸ்புக் மூலம் செய்தி விசிறியடிக்கப்பட்டது. அண்ணா பேசியபோது “ இது இளைஞர்களின் வெற்றி” எனச் சென்னது சும்மாயில்லை.
ஏன் அண்ணா? இது நமது விரக்தியின், வெகுகாலமாக ஏமாற்றப்பட்ட வெறுப்பின் வெளிப்பாடு. நாம் பல வருடங்களாகவே தூய்மையான ஒரு தலைவரை எதிர்பாத்து ஏமாந்து போயிருக்கிறோம். மன் மோகன் சிங் என்னும் மனிதருக்காவே ஓட்டுகள் விழுந்தனவேயன்றி காங்கிரஸ் என்னும் கட்சிக்கல்ல என்பது அக்கட்சிக்காரகளுக்கு நன்றாகவே தெரியும். அவரும் 2ஜி யில் வழுக்கிப் பேசியதும், வெறுப்படைந்து போயிருக்கின்றனர் இந்தியர்கள்.

ஒரே ஒரு குரல் நல்லாட்சிக்காக ஒலித்ததும், அக்குரலின் சொந்தக்காரனின் தூய்மை பற்றிக்கேள்விப்ப்பட்டதும், பல வருட ஏமாற்றத்தின் வெளிப்பாடு, அண்ணாவுக்கு ஆதரவாகப் பொங்கியது. சுய ஒழுக்கமும், உண்மையிலஉறுதியும், தூய்மைக்கேட்டை அகற்றத் தான் முன்னின்று போர் நடத்தும் தைரியமும் இருக்கும் ஒருவனை இன்னாடு பல ஆண்டுகளாக ஏங்கி எதிர்பார்த்து நின்றிருக்கிறது. அண்ணாவின் குரல் ஒலித்ததும், அவரை நோக்கித் தங்கள் எதிர்பார்ப்பைக் கொட்டிவிட்டார்கள் மக்கள். அதுவும் காந்திய வழியில் அவர் காட்டிய அமைதியான எதிர்ப்பு, மீண்டும் நமது கலாச்சாரப் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டியிருக்கிறது.

இன்னொரு எகிப்து, துனீசியாவை தன் மண்ணில் இந்திய அரசு விரும்பவில்லை. லஞ்சத்துக்கு எதிரான இந்த இயக்கம் பெரும் உள்நாட்டுப் போராக வெடித்துவிடும் என்பதை அரசு அறிந்ததும், பணிந்து போனது. இதுபோல இயக்கங்கள் மேலும் வந்தால்தான் நமக்கு வாழ்வு.
தைரியமாக அண்ணாவுக்கு ஆதரவைத் தெரிவியுங்கள். நாளை இன்னொரு தீமையை எதிர்த்து மற்றொரு இயக்கம் வரலாம். அதற்கும் துணை நிற்கத் துணிவு நம்மிடத்தே வேண்டும்.

Sunday, November 29, 2009

சில கோபங்களும் அதன் பின்னணியும்

"என்னலே உளறுத? இவங்க ஊர்க்காரனுக்கு மட்டுந்தான் வேலைன்னா நாளைக்கு ஒன்னையும் ' ஊரைப்பாத்து ஓடுல மூதி'-ன்னு அடிச்சு வெரட்டிருவான் வெளங்குதா?"
- சொன்ன ராபர்ட்டு, "இன்னும் தண்ணீர் வேண்டும்" என பணியாளரிடம் சைகை காட்டினான்.
ஸீப்ஸ் ( seepz)க்கு அருகில் துங்கா பாரடைஸ் ஓட்டலில் அமர்ந்து நானும் எனது நண்பர்களும் குடித்துக் கொண்டிருந்தோம்( அப்படிப் பார்க்காதீர்கள்...வெறும் காபிதான்). மகாராஷ்ட்டிர அரசு உற்பத்தி நிறுவனங்களில் மராட்டியருக்கு 80% கட்டாய இட ஒதுக்கீடு கொள்கையை அறிவித்தது முதல் சில சலசலப்பு எங்கும் கேட்கப்படுகிறது. இது இப்போது எங்கள் காபி மேசையிலும்...
"என்னைப்பொறுத்ததவரை இது வரவேற்கத் தகுந்தது" என்று நான் சொன்னதுக்குதான் ராபர்ட் இன்ன குதி குதித்தான்.. தூத்துக்குடிப்பக்கம் சொந்த ஊர் என்பதால் " எந்தூரு உங்களுக்கு?" என நான் கேட்டதற்கு பல்லெல்லாம் தெரிய சந்தோஷப்பட்ட ஒரு வாடிக்கையாளர்& நண்பன்.

"சளம்ப்பாதவே" என்றார் சண்முகம். திருநெல்வேலிக்காரர் என்பதால் மரியாதை அவரது ஒவ்வொரு சொல்லிலும் விளையாடும்.வயதில் பெரியவர் எங்கள் எல்லாரையும் விட எனபதாலும், அவரது உரிமையாகப் பேசும் குணம் எங்கள் அனைவருக்கும் பிடித்துப்போனது என்பதாலும், அவரது (அரிதான) அத்துமீறல்களும்,கெட்டவார்த்தை பொழியும் திட்டுகளும் பொறுக்கப்படுகின்றன. “ என்ன சொல்லிட்டான்னு இப்படி எகிறுதே? ஒழுங்கா இருக்கணும்னா இரு, இல்லேன்னா பொத்திக்கிட்டுப் போ-ங்கான். இது தப்பால?” என்றவாறே “ ஒரு ப்ளேட்டு வடை” என்றார்.
ஆர்டர் கொடுத்த எல்லாம் வரும்வரை அமைதியாக இருந்தோம். ”டே, நம்ம ஊர்ல இவ்வளவு வெளியூர்க்காரன் வேலை கேட்டு வரமாட்டான். இந்தி நம்மூர்ல கிடையாதுல்லா? அதுலயே சுணங்கிருவான்.” என்ற சண்முகம் தொடர்ந்தார் “ தவிர, எத்தனை தொழிற்சாலை இருக்கு நம்மூர்ல வேலை கொடுக்க? அதுனால ந்ம்மூர்க்காரனுக்கு இந்த எரிச்சல் புரியாது. வெளங்குதா?” என்றார்.
எனக்கு அதுக்கும் மேலேயே காரணம் தேவைப்பட்டது. இதுக்கும்மேலே எதோ காரணங்கள் இருக்கவேண்டும்.இத்தனை வெறுப்பு ஒரு குறிப்பிட்ட இன மக்களிடம் மீது இருக்கவேண்டுமென்றால் அரசியலும், சமூக சூழ்நிலையும் மட்டும் போதாது. வேலையை அயலான் எடுத்துக்கொள்வது என்பது மட்டுமல்ல, அதனையே அரசியலாக்கும் ஒரு கட்சி மட்டுமல்ல, அதற்கும்மேலே ஏதோ காரணங்கள் வேண்டும்.. இத்தனை வெறுப்புக்கு.

ராபர்ட் பேசவில்லை. ”நீ சொல்வ்து நியாயமாகத்தான் படுது” என்றார் சண்முகம் சிறிது நேரத்திற்குப் பிறகு. “ ஏன்னா, வெறுப்பாப் பேசறது அடிமட்ட நிலையில் இருக்கும் மராத்தியர் மட்டுமில்லை. நடுமட்ட, மேல்மட்ட ஆள்கள்தான் அதிகம். அவனுக்கு என்ன வந்தது? “ என்றார்.

எனது நண்பனின் தந்தை சொன்னது நினைவுக்கு வந்தது. மும்பையின் நகரப்பேருந்து நிறுவனத்திற்கு “பெஸ்ட்” என்று பெயர். பேருந்துகளும் அதிகம். பயணம் செய்பவர்களும் அதிகம். இருப்பினும் அதில் சீட் கிடைத்துப் போவதென்பது மிக அரிது..குறிப்பாக் வேலைக்குப் போகும் பெண்களின் பாடு மிகவும் மோசம். நெரிசல்கள், அதில் ஆதாயம் தேடும் அற்பர்கள்... அவர் ஒருநாள் கேட்டார். “ நான் நடுமட்ட மும்பை வாசி. எனது வரிப்பணம் முழுதும் தவறாமல் கட்டுகிறேன். ஆனால், எனது நகரத்தில், ஒரு நகரப்பேருந்தில் என்னால் பயணம் செய்ய முடிவதில்லை. எங்கிருந்தோ உ.பி, பீஹாரிலிருந்து வந்தவன், ஒரு பைசா வரி கட்டாமல், இந்த சலுகைகளை அனுபவிக்கிறான். அவனது வருமானம் உ.பிக்கும் பிஹாருக்கும்,பங்களாதேஷுக்கும் போகிறது. நான் ஏன் அவர்களை வரவேற்கவேண்டும்?” இது கொஞ்சம் ஓவர் என்றாலும், அவரது வேதனை அவருக்குத்தான் தெரிகிறது. அரசியல் கூச்சலில், ஓட்டுச் சேகரிக்கும் இரைச்சலில் அவர்போன்ற முதியவர்களின் முனகல்கள் அழுந்தித்தான் போகிறது.
”எல்லா இடங்களிலும் குடியேறிகளின் பிரச்சனையும், குடியேறிகளால் வரும் பிரச்சனைகளும் ஒரு போலத்தான்” என்றேன். சமூகத்தின் பல மட்டங்களிலும் புதியவர்கள் வரவேற்கப்படுவதில்லை. அவர்களால் வரும் பிரச்சனைகள் பெரிதாகத்தான் தெரியும்.” இதே பெஸ்ட் பேருந்துகளில் ஏழை மராட்டியர்கள் செல்லவில்லையா?” எனக் கேட்டால் “ இந்த் மாதிரி பெண்களை தொல்லைப்படுத்தும் வக்கிரம் அவர்களுக்கு இல்லை” எனப் பதில் வருகிறது.மறுக்கவும் முடியவில்லை. ஏனெனில், அப்படி ஈனத்தனமாக நடந்து பிடிபட்டவர்கள் பலரும் வட மாநிலத்தவர். பெண்களும் இதனை உறுதிபடுத்துவது போலச் சொல்வதால், அவர்களது வாக்குமூலங்களும் வடமாநிலங்களிலிருந்து குடிபெயர்வர்களுக்கு எதிராகவே உள்ளது. ஒரு தமிழனோ, மார்வாடியோ, குஜராத்தியோ, ஒரியாக்காரரையோ இந்த மும்பை இப்போது தனிப்படுத்தி வெறுக்கவில்லை. ஏன் இருமாநிலங்கள் மட்டும்?

பீஹாரும் உ.பி யும் இப்படித்தான் இருப்போம் என மெதப்பில் இருந்தால், பல புறக்கணிப்புகள் மேலும் பெருகும். பெங்களூர், மும்பைபோலத் தொடங்கிவிட்டது. அஸ்ஸாமின் ஆத்திரம் அனைவரும் அறிந்தது.

இந்த மாநிலங்களில் மக்களுக்கு சமூக நடத்தை குறித்து தன்னார்வலக் குழுக்கள், அவர்களது சமூக நலச்சங்கங்கள் எடுத்துச் சொன்னால், அவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
”எவன் செய்வான்?” என்றார் சண்முகம், சாப்பாட்டுக்குப் பணம் கொடுத்தபடி. சில கேள்விகள் பதிலுக்காகக் கேட்கப்படுவதில்லை. சில விளைவுகளுக்குக் காரணங்கள் முழுதும் அலச வேண்டியதில்லை. அவை நமக்கே தெரியும்.

Saturday, November 28, 2009

26/11 சில குறிப்புகள்.

மும்பை தீவிரவாத தாக்குதலின் பின் ஒருவருடம் ஓடிவிட்டது. ஊடகங்கள் கழுதையாகக் கத்தி ஓய்ந்துவிட்ட நிலையில் ஒருவருட நினைவுநாளில் தீனமாகக் கத்தமுயற்சித்தன.. ஷில்பா ஷெட்டி திருமணம், குர்பான் திரைப்படம், என்ற படுமுக்கிய நிகழ்ச்சிகளின் நடுவே இதற்கும் நேரம் ஒதுக்குவதென்பது ஊடகங்களுக்கு தர்மசங்கடம்தான். எனினும் முதல்பக்க நிகழ்ச்சியாக வெளியிட்டு தங்கள் நாட்டுப்பற்றை நிலைநிறுத்திக்கொண்டன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சராசரி மும்பைவாசியின் வாக்குக்பதிவு பலருக்கு குழப்பத்தையும் கோபத்தையும் விளைவித்திருந்த்து. முதுகெலும்பில்லாத ஓர் அரசு மீண்டும் ஆட்சி அமைத்து , அதே மந்திரிகள் மீண்டும் அதே பொறுப்பை(?) ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். காவல்துறை பலியாடாக்கப்பட்டது.

” ஏண்டே இப்படி இருக்கிறீங்க? “ எனக் கேட்டால், மும்பைவாசிகள் “ போங்கல.. இதெல்லாம் சகஜம்..93’லிருந்து வெடிகுண்டுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.. வேலைக்கு நேரமாச்சு..கேக்கிறாங்கய்யா கேள்வி” என அசட்டையாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் . இது புகலகவாசித்தனம் ( immigratory attitude?) எனலாம். ’இதுதான் சாக்கு’ என ராஜ் தாக்கரே பிடித்துக்கொண்டு “ அவனவன் ஊரைப்பாத்து ஓடுங்கலே” என முழங்கவும் செய்யலாம். அப்படிச் செய்தால் தவறு இல்லை எனவே நான் நினைக்கிறேன். இருக்கிற இடத்துக்கு விசுவாசமாக இல்லாதவன் தேவையே இல்லை. வாக்கு அட்டைகள் தங்களை மும்பையோடு ஒட்டிவைக்க உதவுமென்பதால் பல சேரிவாழ் மக்கள் ( இருப்பவர்கள், இல்லாதவர்கள் , இனிமே வரப்போகிறவர்கள் ) அவசரமாக வாக்கு அட்டை வழங்குமிடத்தில் நிரம்பி வழிந்தார்கள். அரசியல்வாதிகளும்( குறிப்பாக வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ) அதற்கு தூபம் போட்டு மும்பையில் இல்லாதவர்களுக்கும் வாக்குரிமை அளிக்க வைத்தனர். ஆக, பாதுகாப்பு என்பது அரசியலாக்கப்பட்டது. மிடில் கிளாஸ் மாதவன்கள் “ ஹையா, இன்னிக்கு லீவு” என வாக்குப்பதிவு தினத்தன்று, வெறும் பனியன்களில் வீட்டில் முடங்கி திரைக்கு வந்து சிலமாதங்களேயான புத்தம்புதிய திரைப்படங்களைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கிடந்தனர். அவர்கள் வாக்குகளை பங்களாதேஷிகள் நிரப்பினர். இப்படியாக புதிய அரசு அமைந்தது.

என்ன எதிர்பார்க்கமுடியும் இவர்களிடம்?

அரசியல்வாதிகளுக்கு தங்கள் நாற்காலிகள், உ.பி , பீஹார், பங்களாதேசமக்களுக்கு அவர்களது மும்பை போலி குடியுரிமை நிஜமாக்கப்படுதல், நடுத்தர வர்க்கத்துக்கு அன்றாடைய பொழுதுபோக்கு, மேல்தட்டு மக்களுக்கு “ இதெல்லாம் எனக்கெதுக்கு?’ என்ற மெத்தனம்.. ஒன்றும் புதிதாக நாம் கற்றுவிடவில்லை. இன்னும் மும்பையில் வருபவர்களைக் கண்காணிக்க சிறந்த அமைப்பு இல்லை. எவன்வேணுமானாலும் வரலாம். கேட்டால் “ சுதந்திர இந்தியாவில் எங்குவேணாலும் யார் வேணுமானலும் போகலாம், வரலாம்” என வீராவேசமாகப் பேசுவார்கள். காஷ்மீரில் அப்படிப் போய் இந்த மும்பைக் குடிசைகளைப் போடுங்களேன் பார்ப்போம்.

ஒரு அஸ்ஸாம் உ.பி, பீஹாரிகளை வெறுக்கிறது. ஒரு கர்நாடகத்தில் அவர்கள் விரட்டப்படுகின்றனர். மும்பையில் பேசினால்மட்டும் அது அரசிய்லாக்கப்படுகிறது. மும்பையில் அசிங்கத் தோற்றத்திற்கும், சுகாதாரமற்ற நிலைக்கும் இந்த புகலக மெத்தனப்போக்கும் ஒரு காரணமென்றால், அது தவறில்லை. ராஜ் தாக்கரேயும், சேனாவும் எடுக்கும் முறை தவறாக இருக்கலாம்.. அடிப்படைக் காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.

இன்னுமொரு 26/11 நடந்தாலும் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்ற பதில் கிடைத்துக்கொண்டேயிருக்கும்வரை தீவிரவாதிகளுக்குக் கொண்டாட்டம்தான்.

Saturday, November 07, 2009

விபரீத விளையாட்டுத் தகடுகள்

விபரீத விளையாட்டுத் தகடுகள்.

விளையாட்டு மின் தகடுகள் குறித்து எனக்குப் பெரிதாக மதிப்பு இருந்ததில்லை. வீட்டுக்கு வெளியே சென்று பல சிறுவர்களுடன் கூடி விளையாடுவதைக் கெடுத்ததில் இந்த விளையாட்டுத்தகடுகளுக்கு பெரும்பங்கு உண்டு என்பது கண்கூடு. இல்லாமை , இருப்பது குறித்தான ஏற்றத்தாழ்வுகளை சிறுவர்கள்/சிறுமிகள் மனத்தில் உண்டாக்குவதிலும் மறைமுகமாக இவற்றின் பங்கு உண்டு. பல உளவியல் வல்லுநர்களும் அதிகமான இவ்விளையாட்டுகளால் உண்டாகும் தீங்குகளைக் குறித்து அறிவித்தும், பெற்றோர்கள் “ எம்புள்ளைக்கு லேட்டஸ்ட் வாங்கிக்கொடுக்கவேண்டாமா? நீ ஆடுடா செல்லம்” எனக் கூறுகெடுத்து வைத்திருப்பதைத் தடுத்துச் சொல்வது, செவிடர் காதில் ஊதிய சங்குதான்.

”சரி, ஒழிகிறது. என்னமோ காலத்தின் கூத்து” என விலகி நிற்பவர்களும், ” எம்பெண்ணு நாற்பது தகடுகள் வைச்சிருக்கா. அவ கூட என்னாலயே ஆடி ஜெயிக்கமுடியாது” எனப் பெருமையடித்துக்கொண்டிருப்பவர்களும்,” அடுத்த பரீட்சையில கணக்குல நூத்துக்கு நூறு வாங்கினா புது விளையாட்டு சி.டி வாங்கித் தருவேன்” எனப் பேரம் பேசுபவர்களும் கவனிக்க..

தனியாக மாட்டிக்கொள்ளும் ஒரு தாயையும் மகளையும் மானபங்கப் படுத்துவது எப்படி என்று ஒரு விளையாட்டுத் தகடு வந்திருக்கிறது. வந்து பலமாதங்களாகிவிட்டாலும், ”இப்போதுதான் ப்ரபலமடைந்து வருகிறது. கடைகளில் கிடைக்காவிட்டால் பிளாட்பாரத்தின் ஓரத்தில் கிடைத்துவிடும்..பலான தகடுகளுடன்..ஜோராக கறுப்புகலர் ப்ளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்துவிடுவார்கள்.
என்னவென்றே தெரியாமல் வாங்கிவந்து பிறகு நெளிந்து கொண்டிருக்காமல் கவனமாக இருங்கள்.
”என்னடா இதெல்லாம் ஒரு விளையாட்டா?” என அதிர்பவர்கள் மேலும் அதிர வைக்கும் இந்த விளையாட்டு...ஒவ்வொரு லெவலிலும் மிகுந்துகொண்டே போகும் குரூரம்..

”எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ?” என வேதனையில் புலம்பவைக்கும் இத்தகடுகள் சிறுவர் சிறுமியர் கையில் கிடைத்தால் என்னவாகும்?
லுங்கியைக் கழுத்தில் கட்டிக்கொண்டு ” அப்பா, நான் சூப்பர்மேன் பாரு” எனக்கட்டிலிலிருந்து குதிக்கும் பயல்கள், அந்த சூப்பர்மேனாகவே தன்னை நினைத்துக்கொள்ளும்போது, இவ்விஷ விதைகள் மனத்தின் ஆழத்தில் விழுந்து முளைத்தால் என்னவாகத் தன்னை நினைத்துக்கொள்ளுவான்கள்? பெண்களை மானபங்கப்படுத்துவது விளையாட்டு என வரும்போது, மனிதாபிமானம், பெண்ணுரிமை என்பதெல்லாம் மனத்தில் வளருமா?

இதைத் தடை செய்யமுடியாதா? என்றால் அங்குதான் நம் அரசின் கேணத்தனம். இது சைபர் குற்றப்பிரிவின் அடியில் வருகிறது. அவர்கள்தான் பிடிக்கமுடியும். நம்ம போலிஸ் வழக்கம்போல மாமூல் வாங்கிக்கொண்டு விட்டுவிடலாம். சட்டம் அவர்களைக் கட்டுப்படுத்தாது.
திருட்டு வி.சி.டி, டி.வி.டி குறித்து நடவடிக்கை எடுக்கும் அரசு இந்த விஷயத்தில் கண்டும் காணாது இருப்பது ஏன்? சினிமாத்துறை, அரசியலுக்கு பைசா கொடுக்கும்..விளையாட்டு சி.டி விற்பவன் என்ன கொடுப்பான்? என்ற மதிப்பீடாக இருக்குமோ?

சரி, பெண்ணுரிமைச் சங்கங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன?

Monday, May 18, 2009

ஊடகங்களுக்கு பொறுப்புணர்வு தேவையில்லையோ?

“எங்கடா பிணம் கிடக்கும்?” என அலைவது வல்லூறுகள் மட்டுமல்ல, வீடியோ கேமெராவும், மைக்கும் , சாட்டிலைட் ஆண்டெனா பொருத்தப்பட்ட வேனுமாகத் திரியும் இந்த ஊடகக்காரர்களும்தான்...

பிரபாகரன் மரணம், புலிகளின் ஒட்டுமொத்தத் தலைவர்களின் மரணம் என்பது அதிர்ச்சியான செய்தி, வலிமிகும் செய்தி - ஒரு இன மக்களுக்கு... அவர்கள் விரும்பினார்களோ இல்லையோ,ஒட்டு மொத்தத் தமிழர்களுக்கும் இது பின்னடைவுதான். தமிழ்மக்கள் குறித்து ஒரு பயலுக்கும் உணர்வில்லை- இந்திய ஆங்கில ஊடகங்கள் இதில் முன்னணி.

செய்தி தருவதிலும், ஆராய்வு செய்வதிலும் ஒரு பொறுப்புணர்வு தேவை. அவசியமேயில்லாமல் சில பரபரப்பு வார்த்தைகள் தொலைக்காட்சியில்...
“ எல்.டி.டி.ஈ அழிந்தது”.
என்ன கேணக்கூத்து இது? இவன்களுக்கு டெல்லி, மும்பை தவிர ஒரு சாலையிலும் செல்லத் தெரியாது.. வட இலங்கையின் காட்டுக்குள்ளே வலியுடன் போரடுபவர்களைக்குறித்து ஏ.ஸியில் இருந்து “ அவன்களா, செத்துட்டாங்கடே.. லங்கா ஆர்மி அழிச்சேபோட்டுட்டான்” எனப் பேசுபவர்களை இழுத்து நாலு அறைவிடலாமா என ஆத்திரம் வருகிறது. தொழில் மரியாதை தெரியாத பதர்கள்...

ஓட்டு எண்ணும் இடங்களில் கூடியிருந்து, தலையைத் தலையை முன்னும் பின்னும் ஆட்டி, என்னமோ மிகப் பெரிய உண்மைகளைக் கண்டுபிடித்தமாதிரி பேசும் பத்தாம்பசலிகளும், ஸ்டூடியோவில், கோட்டும் சூட்டும் மாட்டி, தெரிந்த மாதிரி புள்ளிவிவரங்களை அள்ளிவிடும் படுபுத்திசாலிகளும், இலங்கை மாதிரி மிக சென்சிடிவான விசயங்களை விவாதிக்காமல் இருப்பது நல்லது. அதான் தோத்த, ஜெயித்த கட்சிப்புள்ளிகள் இருக்காங்களே....அவங்ககிட்ட வழக்கம்போல “ எப்ப உ.பி கிராமங்கள்ல மின்சாரம் வரும்?” எனக் கேட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதானே? இந்திய வடகிழக்கு மாகாணங்கள் எத்தனை உண்டு என்பதே இவர்களில் பலருக்குத் தெரியாது.
இருக்கிற தமிழர்களையே கண்டுகொள்வதில்லை ( ஓட்டு மட்டும் வேணும்). இவன்கள் எங்கே இலங்கை பத்தி உருப்படியா சொல்லப்போகிறான்கள்?
ஒரு வேளை இவர்களிடம் நான் ரொம்பவே எதிர்பார்த்துவிட்டேனோ?
ஒண்ணு நிச்சயம்.. இனி ஒரு விரிசல் இருக்கும்.... தமிழன் - தமிழல்லாதவன் என... குறைந்தபட்சம் என்னைப் பொறுத்தவரை.