Sunday, November 29, 2009

சில கோபங்களும் அதன் பின்னணியும்

"என்னலே உளறுத? இவங்க ஊர்க்காரனுக்கு மட்டுந்தான் வேலைன்னா நாளைக்கு ஒன்னையும் ' ஊரைப்பாத்து ஓடுல மூதி'-ன்னு அடிச்சு வெரட்டிருவான் வெளங்குதா?"
- சொன்ன ராபர்ட்டு, "இன்னும் தண்ணீர் வேண்டும்" என பணியாளரிடம் சைகை காட்டினான்.
ஸீப்ஸ் ( seepz)க்கு அருகில் துங்கா பாரடைஸ் ஓட்டலில் அமர்ந்து நானும் எனது நண்பர்களும் குடித்துக் கொண்டிருந்தோம்( அப்படிப் பார்க்காதீர்கள்...வெறும் காபிதான்). மகாராஷ்ட்டிர அரசு உற்பத்தி நிறுவனங்களில் மராட்டியருக்கு 80% கட்டாய இட ஒதுக்கீடு கொள்கையை அறிவித்தது முதல் சில சலசலப்பு எங்கும் கேட்கப்படுகிறது. இது இப்போது எங்கள் காபி மேசையிலும்...
"என்னைப்பொறுத்ததவரை இது வரவேற்கத் தகுந்தது" என்று நான் சொன்னதுக்குதான் ராபர்ட் இன்ன குதி குதித்தான்.. தூத்துக்குடிப்பக்கம் சொந்த ஊர் என்பதால் " எந்தூரு உங்களுக்கு?" என நான் கேட்டதற்கு பல்லெல்லாம் தெரிய சந்தோஷப்பட்ட ஒரு வாடிக்கையாளர்& நண்பன்.

"சளம்ப்பாதவே" என்றார் சண்முகம். திருநெல்வேலிக்காரர் என்பதால் மரியாதை அவரது ஒவ்வொரு சொல்லிலும் விளையாடும்.வயதில் பெரியவர் எங்கள் எல்லாரையும் விட எனபதாலும், அவரது உரிமையாகப் பேசும் குணம் எங்கள் அனைவருக்கும் பிடித்துப்போனது என்பதாலும், அவரது (அரிதான) அத்துமீறல்களும்,கெட்டவார்த்தை பொழியும் திட்டுகளும் பொறுக்கப்படுகின்றன. “ என்ன சொல்லிட்டான்னு இப்படி எகிறுதே? ஒழுங்கா இருக்கணும்னா இரு, இல்லேன்னா பொத்திக்கிட்டுப் போ-ங்கான். இது தப்பால?” என்றவாறே “ ஒரு ப்ளேட்டு வடை” என்றார்.
ஆர்டர் கொடுத்த எல்லாம் வரும்வரை அமைதியாக இருந்தோம். ”டே, நம்ம ஊர்ல இவ்வளவு வெளியூர்க்காரன் வேலை கேட்டு வரமாட்டான். இந்தி நம்மூர்ல கிடையாதுல்லா? அதுலயே சுணங்கிருவான்.” என்ற சண்முகம் தொடர்ந்தார் “ தவிர, எத்தனை தொழிற்சாலை இருக்கு நம்மூர்ல வேலை கொடுக்க? அதுனால ந்ம்மூர்க்காரனுக்கு இந்த எரிச்சல் புரியாது. வெளங்குதா?” என்றார்.
எனக்கு அதுக்கும் மேலேயே காரணம் தேவைப்பட்டது. இதுக்கும்மேலே எதோ காரணங்கள் இருக்கவேண்டும்.இத்தனை வெறுப்பு ஒரு குறிப்பிட்ட இன மக்களிடம் மீது இருக்கவேண்டுமென்றால் அரசியலும், சமூக சூழ்நிலையும் மட்டும் போதாது. வேலையை அயலான் எடுத்துக்கொள்வது என்பது மட்டுமல்ல, அதனையே அரசியலாக்கும் ஒரு கட்சி மட்டுமல்ல, அதற்கும்மேலே ஏதோ காரணங்கள் வேண்டும்.. இத்தனை வெறுப்புக்கு.

ராபர்ட் பேசவில்லை. ”நீ சொல்வ்து நியாயமாகத்தான் படுது” என்றார் சண்முகம் சிறிது நேரத்திற்குப் பிறகு. “ ஏன்னா, வெறுப்பாப் பேசறது அடிமட்ட நிலையில் இருக்கும் மராத்தியர் மட்டுமில்லை. நடுமட்ட, மேல்மட்ட ஆள்கள்தான் அதிகம். அவனுக்கு என்ன வந்தது? “ என்றார்.

எனது நண்பனின் தந்தை சொன்னது நினைவுக்கு வந்தது. மும்பையின் நகரப்பேருந்து நிறுவனத்திற்கு “பெஸ்ட்” என்று பெயர். பேருந்துகளும் அதிகம். பயணம் செய்பவர்களும் அதிகம். இருப்பினும் அதில் சீட் கிடைத்துப் போவதென்பது மிக அரிது..குறிப்பாக் வேலைக்குப் போகும் பெண்களின் பாடு மிகவும் மோசம். நெரிசல்கள், அதில் ஆதாயம் தேடும் அற்பர்கள்... அவர் ஒருநாள் கேட்டார். “ நான் நடுமட்ட மும்பை வாசி. எனது வரிப்பணம் முழுதும் தவறாமல் கட்டுகிறேன். ஆனால், எனது நகரத்தில், ஒரு நகரப்பேருந்தில் என்னால் பயணம் செய்ய முடிவதில்லை. எங்கிருந்தோ உ.பி, பீஹாரிலிருந்து வந்தவன், ஒரு பைசா வரி கட்டாமல், இந்த சலுகைகளை அனுபவிக்கிறான். அவனது வருமானம் உ.பிக்கும் பிஹாருக்கும்,பங்களாதேஷுக்கும் போகிறது. நான் ஏன் அவர்களை வரவேற்கவேண்டும்?” இது கொஞ்சம் ஓவர் என்றாலும், அவரது வேதனை அவருக்குத்தான் தெரிகிறது. அரசியல் கூச்சலில், ஓட்டுச் சேகரிக்கும் இரைச்சலில் அவர்போன்ற முதியவர்களின் முனகல்கள் அழுந்தித்தான் போகிறது.
”எல்லா இடங்களிலும் குடியேறிகளின் பிரச்சனையும், குடியேறிகளால் வரும் பிரச்சனைகளும் ஒரு போலத்தான்” என்றேன். சமூகத்தின் பல மட்டங்களிலும் புதியவர்கள் வரவேற்கப்படுவதில்லை. அவர்களால் வரும் பிரச்சனைகள் பெரிதாகத்தான் தெரியும்.” இதே பெஸ்ட் பேருந்துகளில் ஏழை மராட்டியர்கள் செல்லவில்லையா?” எனக் கேட்டால் “ இந்த் மாதிரி பெண்களை தொல்லைப்படுத்தும் வக்கிரம் அவர்களுக்கு இல்லை” எனப் பதில் வருகிறது.மறுக்கவும் முடியவில்லை. ஏனெனில், அப்படி ஈனத்தனமாக நடந்து பிடிபட்டவர்கள் பலரும் வட மாநிலத்தவர். பெண்களும் இதனை உறுதிபடுத்துவது போலச் சொல்வதால், அவர்களது வாக்குமூலங்களும் வடமாநிலங்களிலிருந்து குடிபெயர்வர்களுக்கு எதிராகவே உள்ளது. ஒரு தமிழனோ, மார்வாடியோ, குஜராத்தியோ, ஒரியாக்காரரையோ இந்த மும்பை இப்போது தனிப்படுத்தி வெறுக்கவில்லை. ஏன் இருமாநிலங்கள் மட்டும்?

பீஹாரும் உ.பி யும் இப்படித்தான் இருப்போம் என மெதப்பில் இருந்தால், பல புறக்கணிப்புகள் மேலும் பெருகும். பெங்களூர், மும்பைபோலத் தொடங்கிவிட்டது. அஸ்ஸாமின் ஆத்திரம் அனைவரும் அறிந்தது.

இந்த மாநிலங்களில் மக்களுக்கு சமூக நடத்தை குறித்து தன்னார்வலக் குழுக்கள், அவர்களது சமூக நலச்சங்கங்கள் எடுத்துச் சொன்னால், அவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
”எவன் செய்வான்?” என்றார் சண்முகம், சாப்பாட்டுக்குப் பணம் கொடுத்தபடி. சில கேள்விகள் பதிலுக்காகக் கேட்கப்படுவதில்லை. சில விளைவுகளுக்குக் காரணங்கள் முழுதும் அலச வேண்டியதில்லை. அவை நமக்கே தெரியும்.

Saturday, November 28, 2009

26/11 சில குறிப்புகள்.

மும்பை தீவிரவாத தாக்குதலின் பின் ஒருவருடம் ஓடிவிட்டது. ஊடகங்கள் கழுதையாகக் கத்தி ஓய்ந்துவிட்ட நிலையில் ஒருவருட நினைவுநாளில் தீனமாகக் கத்தமுயற்சித்தன.. ஷில்பா ஷெட்டி திருமணம், குர்பான் திரைப்படம், என்ற படுமுக்கிய நிகழ்ச்சிகளின் நடுவே இதற்கும் நேரம் ஒதுக்குவதென்பது ஊடகங்களுக்கு தர்மசங்கடம்தான். எனினும் முதல்பக்க நிகழ்ச்சியாக வெளியிட்டு தங்கள் நாட்டுப்பற்றை நிலைநிறுத்திக்கொண்டன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சராசரி மும்பைவாசியின் வாக்குக்பதிவு பலருக்கு குழப்பத்தையும் கோபத்தையும் விளைவித்திருந்த்து. முதுகெலும்பில்லாத ஓர் அரசு மீண்டும் ஆட்சி அமைத்து , அதே மந்திரிகள் மீண்டும் அதே பொறுப்பை(?) ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். காவல்துறை பலியாடாக்கப்பட்டது.

” ஏண்டே இப்படி இருக்கிறீங்க? “ எனக் கேட்டால், மும்பைவாசிகள் “ போங்கல.. இதெல்லாம் சகஜம்..93’லிருந்து வெடிகுண்டுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.. வேலைக்கு நேரமாச்சு..கேக்கிறாங்கய்யா கேள்வி” என அசட்டையாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் . இது புகலகவாசித்தனம் ( immigratory attitude?) எனலாம். ’இதுதான் சாக்கு’ என ராஜ் தாக்கரே பிடித்துக்கொண்டு “ அவனவன் ஊரைப்பாத்து ஓடுங்கலே” என முழங்கவும் செய்யலாம். அப்படிச் செய்தால் தவறு இல்லை எனவே நான் நினைக்கிறேன். இருக்கிற இடத்துக்கு விசுவாசமாக இல்லாதவன் தேவையே இல்லை. வாக்கு அட்டைகள் தங்களை மும்பையோடு ஒட்டிவைக்க உதவுமென்பதால் பல சேரிவாழ் மக்கள் ( இருப்பவர்கள், இல்லாதவர்கள் , இனிமே வரப்போகிறவர்கள் ) அவசரமாக வாக்கு அட்டை வழங்குமிடத்தில் நிரம்பி வழிந்தார்கள். அரசியல்வாதிகளும்( குறிப்பாக வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ) அதற்கு தூபம் போட்டு மும்பையில் இல்லாதவர்களுக்கும் வாக்குரிமை அளிக்க வைத்தனர். ஆக, பாதுகாப்பு என்பது அரசியலாக்கப்பட்டது. மிடில் கிளாஸ் மாதவன்கள் “ ஹையா, இன்னிக்கு லீவு” என வாக்குப்பதிவு தினத்தன்று, வெறும் பனியன்களில் வீட்டில் முடங்கி திரைக்கு வந்து சிலமாதங்களேயான புத்தம்புதிய திரைப்படங்களைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கிடந்தனர். அவர்கள் வாக்குகளை பங்களாதேஷிகள் நிரப்பினர். இப்படியாக புதிய அரசு அமைந்தது.

என்ன எதிர்பார்க்கமுடியும் இவர்களிடம்?

அரசியல்வாதிகளுக்கு தங்கள் நாற்காலிகள், உ.பி , பீஹார், பங்களாதேசமக்களுக்கு அவர்களது மும்பை போலி குடியுரிமை நிஜமாக்கப்படுதல், நடுத்தர வர்க்கத்துக்கு அன்றாடைய பொழுதுபோக்கு, மேல்தட்டு மக்களுக்கு “ இதெல்லாம் எனக்கெதுக்கு?’ என்ற மெத்தனம்.. ஒன்றும் புதிதாக நாம் கற்றுவிடவில்லை. இன்னும் மும்பையில் வருபவர்களைக் கண்காணிக்க சிறந்த அமைப்பு இல்லை. எவன்வேணுமானாலும் வரலாம். கேட்டால் “ சுதந்திர இந்தியாவில் எங்குவேணாலும் யார் வேணுமானலும் போகலாம், வரலாம்” என வீராவேசமாகப் பேசுவார்கள். காஷ்மீரில் அப்படிப் போய் இந்த மும்பைக் குடிசைகளைப் போடுங்களேன் பார்ப்போம்.

ஒரு அஸ்ஸாம் உ.பி, பீஹாரிகளை வெறுக்கிறது. ஒரு கர்நாடகத்தில் அவர்கள் விரட்டப்படுகின்றனர். மும்பையில் பேசினால்மட்டும் அது அரசிய்லாக்கப்படுகிறது. மும்பையில் அசிங்கத் தோற்றத்திற்கும், சுகாதாரமற்ற நிலைக்கும் இந்த புகலக மெத்தனப்போக்கும் ஒரு காரணமென்றால், அது தவறில்லை. ராஜ் தாக்கரேயும், சேனாவும் எடுக்கும் முறை தவறாக இருக்கலாம்.. அடிப்படைக் காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.

இன்னுமொரு 26/11 நடந்தாலும் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்ற பதில் கிடைத்துக்கொண்டேயிருக்கும்வரை தீவிரவாதிகளுக்குக் கொண்டாட்டம்தான்.

Saturday, November 07, 2009

விபரீத விளையாட்டுத் தகடுகள்

விபரீத விளையாட்டுத் தகடுகள்.

விளையாட்டு மின் தகடுகள் குறித்து எனக்குப் பெரிதாக மதிப்பு இருந்ததில்லை. வீட்டுக்கு வெளியே சென்று பல சிறுவர்களுடன் கூடி விளையாடுவதைக் கெடுத்ததில் இந்த விளையாட்டுத்தகடுகளுக்கு பெரும்பங்கு உண்டு என்பது கண்கூடு. இல்லாமை , இருப்பது குறித்தான ஏற்றத்தாழ்வுகளை சிறுவர்கள்/சிறுமிகள் மனத்தில் உண்டாக்குவதிலும் மறைமுகமாக இவற்றின் பங்கு உண்டு. பல உளவியல் வல்லுநர்களும் அதிகமான இவ்விளையாட்டுகளால் உண்டாகும் தீங்குகளைக் குறித்து அறிவித்தும், பெற்றோர்கள் “ எம்புள்ளைக்கு லேட்டஸ்ட் வாங்கிக்கொடுக்கவேண்டாமா? நீ ஆடுடா செல்லம்” எனக் கூறுகெடுத்து வைத்திருப்பதைத் தடுத்துச் சொல்வது, செவிடர் காதில் ஊதிய சங்குதான்.

”சரி, ஒழிகிறது. என்னமோ காலத்தின் கூத்து” என விலகி நிற்பவர்களும், ” எம்பெண்ணு நாற்பது தகடுகள் வைச்சிருக்கா. அவ கூட என்னாலயே ஆடி ஜெயிக்கமுடியாது” எனப் பெருமையடித்துக்கொண்டிருப்பவர்களும்,” அடுத்த பரீட்சையில கணக்குல நூத்துக்கு நூறு வாங்கினா புது விளையாட்டு சி.டி வாங்கித் தருவேன்” எனப் பேரம் பேசுபவர்களும் கவனிக்க..

தனியாக மாட்டிக்கொள்ளும் ஒரு தாயையும் மகளையும் மானபங்கப் படுத்துவது எப்படி என்று ஒரு விளையாட்டுத் தகடு வந்திருக்கிறது. வந்து பலமாதங்களாகிவிட்டாலும், ”இப்போதுதான் ப்ரபலமடைந்து வருகிறது. கடைகளில் கிடைக்காவிட்டால் பிளாட்பாரத்தின் ஓரத்தில் கிடைத்துவிடும்..பலான தகடுகளுடன்..ஜோராக கறுப்புகலர் ப்ளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்துவிடுவார்கள்.
என்னவென்றே தெரியாமல் வாங்கிவந்து பிறகு நெளிந்து கொண்டிருக்காமல் கவனமாக இருங்கள்.
”என்னடா இதெல்லாம் ஒரு விளையாட்டா?” என அதிர்பவர்கள் மேலும் அதிர வைக்கும் இந்த விளையாட்டு...ஒவ்வொரு லெவலிலும் மிகுந்துகொண்டே போகும் குரூரம்..

”எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ?” என வேதனையில் புலம்பவைக்கும் இத்தகடுகள் சிறுவர் சிறுமியர் கையில் கிடைத்தால் என்னவாகும்?
லுங்கியைக் கழுத்தில் கட்டிக்கொண்டு ” அப்பா, நான் சூப்பர்மேன் பாரு” எனக்கட்டிலிலிருந்து குதிக்கும் பயல்கள், அந்த சூப்பர்மேனாகவே தன்னை நினைத்துக்கொள்ளும்போது, இவ்விஷ விதைகள் மனத்தின் ஆழத்தில் விழுந்து முளைத்தால் என்னவாகத் தன்னை நினைத்துக்கொள்ளுவான்கள்? பெண்களை மானபங்கப்படுத்துவது விளையாட்டு என வரும்போது, மனிதாபிமானம், பெண்ணுரிமை என்பதெல்லாம் மனத்தில் வளருமா?

இதைத் தடை செய்யமுடியாதா? என்றால் அங்குதான் நம் அரசின் கேணத்தனம். இது சைபர் குற்றப்பிரிவின் அடியில் வருகிறது. அவர்கள்தான் பிடிக்கமுடியும். நம்ம போலிஸ் வழக்கம்போல மாமூல் வாங்கிக்கொண்டு விட்டுவிடலாம். சட்டம் அவர்களைக் கட்டுப்படுத்தாது.
திருட்டு வி.சி.டி, டி.வி.டி குறித்து நடவடிக்கை எடுக்கும் அரசு இந்த விஷயத்தில் கண்டும் காணாது இருப்பது ஏன்? சினிமாத்துறை, அரசியலுக்கு பைசா கொடுக்கும்..விளையாட்டு சி.டி விற்பவன் என்ன கொடுப்பான்? என்ற மதிப்பீடாக இருக்குமோ?

சரி, பெண்ணுரிமைச் சங்கங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன?

Monday, May 18, 2009

ஊடகங்களுக்கு பொறுப்புணர்வு தேவையில்லையோ?

“எங்கடா பிணம் கிடக்கும்?” என அலைவது வல்லூறுகள் மட்டுமல்ல, வீடியோ கேமெராவும், மைக்கும் , சாட்டிலைட் ஆண்டெனா பொருத்தப்பட்ட வேனுமாகத் திரியும் இந்த ஊடகக்காரர்களும்தான்...

பிரபாகரன் மரணம், புலிகளின் ஒட்டுமொத்தத் தலைவர்களின் மரணம் என்பது அதிர்ச்சியான செய்தி, வலிமிகும் செய்தி - ஒரு இன மக்களுக்கு... அவர்கள் விரும்பினார்களோ இல்லையோ,ஒட்டு மொத்தத் தமிழர்களுக்கும் இது பின்னடைவுதான். தமிழ்மக்கள் குறித்து ஒரு பயலுக்கும் உணர்வில்லை- இந்திய ஆங்கில ஊடகங்கள் இதில் முன்னணி.

செய்தி தருவதிலும், ஆராய்வு செய்வதிலும் ஒரு பொறுப்புணர்வு தேவை. அவசியமேயில்லாமல் சில பரபரப்பு வார்த்தைகள் தொலைக்காட்சியில்...
“ எல்.டி.டி.ஈ அழிந்தது”.
என்ன கேணக்கூத்து இது? இவன்களுக்கு டெல்லி, மும்பை தவிர ஒரு சாலையிலும் செல்லத் தெரியாது.. வட இலங்கையின் காட்டுக்குள்ளே வலியுடன் போரடுபவர்களைக்குறித்து ஏ.ஸியில் இருந்து “ அவன்களா, செத்துட்டாங்கடே.. லங்கா ஆர்மி அழிச்சேபோட்டுட்டான்” எனப் பேசுபவர்களை இழுத்து நாலு அறைவிடலாமா என ஆத்திரம் வருகிறது. தொழில் மரியாதை தெரியாத பதர்கள்...

ஓட்டு எண்ணும் இடங்களில் கூடியிருந்து, தலையைத் தலையை முன்னும் பின்னும் ஆட்டி, என்னமோ மிகப் பெரிய உண்மைகளைக் கண்டுபிடித்தமாதிரி பேசும் பத்தாம்பசலிகளும், ஸ்டூடியோவில், கோட்டும் சூட்டும் மாட்டி, தெரிந்த மாதிரி புள்ளிவிவரங்களை அள்ளிவிடும் படுபுத்திசாலிகளும், இலங்கை மாதிரி மிக சென்சிடிவான விசயங்களை விவாதிக்காமல் இருப்பது நல்லது. அதான் தோத்த, ஜெயித்த கட்சிப்புள்ளிகள் இருக்காங்களே....அவங்ககிட்ட வழக்கம்போல “ எப்ப உ.பி கிராமங்கள்ல மின்சாரம் வரும்?” எனக் கேட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதானே? இந்திய வடகிழக்கு மாகாணங்கள் எத்தனை உண்டு என்பதே இவர்களில் பலருக்குத் தெரியாது.
இருக்கிற தமிழர்களையே கண்டுகொள்வதில்லை ( ஓட்டு மட்டும் வேணும்). இவன்கள் எங்கே இலங்கை பத்தி உருப்படியா சொல்லப்போகிறான்கள்?
ஒரு வேளை இவர்களிடம் நான் ரொம்பவே எதிர்பார்த்துவிட்டேனோ?
ஒண்ணு நிச்சயம்.. இனி ஒரு விரிசல் இருக்கும்.... தமிழன் - தமிழல்லாதவன் என... குறைந்தபட்சம் என்னைப் பொறுத்தவரை.

முடிவு?.....

இவர்களெல்லாம் மனிதர்களா?

பிரபாகரன் இறந்ததாக செய்தி வந்ததில் சிறிது குலைந்துதான் போனேன். புலிகள் கையாண்ட வன்முறையில் எனக்கு சம்மதமில்லை எனினும், ஒரு தமிழ் இயக்கம் என்ற அளவிலும், குறி நோக்கியே நகர்ந்து, பல உயிர்த்தியாகங்களில் வளர்ந்த அவ்வியக்கத்தில் எனக்கு பெருமதிப்பு உண்டு. ஒரு இயக்கத்தின் ஒரு அங்கம் சோகமான முடிவுக்கு வந்தது குறித்து எனக்கு வருத்தம் உண்டு... இலங்கைத்தமிழர்களின் அவலநிலைக்கு இவ்வியக்கம் , சற்று நிதானித்திருந்தால் , பல குழுக்களுடன் கூடி ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும்.

செய்தியை வலைத்தளத்தில் படிக்கும் போது வருத்தம் கொதிப்பாக மாறியது. கமெண்ட்ஸ் இடுகைகள் ( ரிடிஃப்.காம்) பிரபாகரன் இறந்ததைக் கொண்டாடுவது கண்டு கோபம் மூள்கிறது. ஒருமனிதன்.. எத்தனை கொடுமைகள் சந்தித்திருந்தால் இப்படி ஒரு நாட்டையே குலை நடுங்க வைக்கும் அளவு மாறியிருப்பான்? எத்தனை பேர் அவனது சொல்லுக்குக் கட்டுப்பட்டு உயிர்த்தியாகம் செய்திருப்பார்கள்? ஏன் இந்திய பஞ்சாபிகள், பெங்காலிகள் இன்னும் 1947 பிரிவினைக் கொடூரங்கள் குறித்து கொதிப்பது நியாயமென்றால், இலங்கையில் எரிவது கண்டு கொதிப்பது எந்த விதத்தில் குறைந்துபோனது.
ஒரு கமெண்ட்... “ இன்று கொண்டாடுங்கள்.. ஸ்டாக் மார்க்கெட் 14000, காங்கிரஸ் வெற்றி, பிரபாகரன் மரணம்..” சே! என்ன மனிதர்கள் இவர்கள்? ஸ்டாக் மார்க்கெட் ஏற்றம் போன்ற அல்ப காரணங்களும், ஒரு மரணமும் ஒன்றாகுமா?

ஒருவேளை, ராஜபக்சேக்குத் தெரிந்தேதான் இருநாட்கள் பொறுத்திருக்கும்படி இந்திய அரசு சொல்லிற்றோ? எங்கள் தேர்தல் முடிவுகள் வெளியானதும் வெட்டுங்கள் என? அழுக்கான அரசியலில் எதுவும் சாத்தியம்.

இன்று மனம் கனத்திருக்கிறேன். ஒரு தமிழன் என்ற அளவில் எதையோ இழந்த சோகம்... இழந்தது இனத்தின் மானமா? வேதனை என் கையாலாகத்தனம் குறித்தா? வெட்கமா? தெரியவில்லை.
இறந்த தமிழ்வீரர்களின் ஆன்மா அமைதியடையட்டும்.
இனியாவது, கொஞ்சம் சுரணை சேர்த்து வாழத் தலைப்படுவோம்.

Sunday, May 17, 2009

அவர்கள் உறங்கவில்லை.

அந்த சப்தத்திற்கு நிச்சயமாக யாரும் உறங்க முடியாது. நான் விழித்திருந்தது வியப்பில்லை.

தாரை தப்பட்டைகளுடன் ஆடியபடி ஆணும் பெண்ணுமாக ஒரு கூட்டம். பின்னால் ஒரு சிறிய மாட்டுவண்டி., மின்விளக்குகள் பச்சை, ஆரஞ்சு, வெள்ளை, நீலமென பொருத்தமேயில்லாதபடி கன்னாபின்னாவென சொருகப்பட்டு, ஜெனரேட்டர் ( அல்லது பாட்டரி?) மின்சாரத்தில் அடிக்கவரும் நிறக்கலவையாக மின்னியபடி மெதுவாக அக்கூட்டத்தின் பின்னால் வந்துகொண்டிருந்தது. சிறுவர்களும் சிறுமியர்களும் அதிலிருந்து நிரம்பி வழிந்துகொண்டிருந்தனர்.

கணபதி பூஜை வருவதற்கு பல மாதங்களிருக்கின்றனவே? இது என்ன புதுசா இப்போது? என நான் யோசித்துக்கொண்டிருக்கையில், கீழிருக்கும் அப்பார்ட்மெண்ட்டில் இருப்பவர் அருகே வந்தார். “ அட, இவங்களா?” என்றார். நான் விழித்தேன்.

”இவர்கள் பூர்வீகக் குடியினர். முன்பு தாணே மலைப்பகுதியிலிருந்து பால்கர் கடற்கரை வரையிலிருக்கும் பரப்பளவில் வசித்தவர்கள். வேலை தேடி வந்தவர்கள் ,இப்போ சேரிப்பகுதியில் குடியிருக்கிறார்கள். அவர்கள் பண்டிகைகள் வேறு காலங்களில் வரும். நம்ம பக்கமும் இருக்காங்களா? “ என வியந்தார். * வேண்டுமென்றேதான் அக்குடியினரின் பெயர் சொல்லாமல் விட்டிருக்கிறேன். கூகிளில் தேடினால் கிடைக்கும்.

நானும் அவர்களைப் பார்த்திருக்கிறேன். பால்கர் ரயில் நிலையத்தில், இளநீர், சப்போட்டா , நாவல் பழம் என எதாவது காட்டில் விளைவதை விற்றுக் கொண்டிருப்பார்கள். பெண்களின் உடை சற்று வித்தியாசமாக இருக்கும். பெரிதாகப் பொட்டு நெற்றியில்...

சிவாஜி காலத்திலேயே சுதந்திரமாக இருந்த இம்மலைவாழ் மக்கள், ஆங்கிலேயர் காலத்திலும் அதிகம் பாதிக்கப்படவில்லை . சுதந்திரத்தின் பின்னே, அரசியல் வாதிகளால் அவர்கள் இருப்பிடம் கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டப்பட்டு, வேலை தேடி வேறிடம் குடிபுக நேர்ந்தனர்.

காலப்போக்கில் மும்பை கலாச்சாரத்தில் இணையவும் முடியாமல், தங்கள் வாழ்வுமுறையை முற்றிலும் மாற்றவும் முடியாமல் திண்டாடி, சிலர் திருடுவதைத் தொழிலாகக் கொண்டனர். பலர் தொழிற்பட்டறைகளிலும், சிறு சிறு வேலைகளிலும் ஈடுபட, வெகு சிலரே படித்து முன்னேறினர். எங்கள் அலுவலகத்தில் பணியாளராக இருக்கும் இருவர் இந்தக் குடியினர். அதில் சந்திரா என்பவன் கொஞ்சம் சகஜமாகப் பேசுவான்.

மறுநாள் சந்திராவை அழைத்து “நேத்து என்ன விசேஷம்?” என்றேன்.முதலில் தயங்கினான்.
பின்னர் காபி குடிக்கப் போனபோது பேண்ட்டரியில் தனியாக இருப்பதை உறுதிசெய்தபின்னர் மெதுவாகப் பேசத்தொடங்கினான். “ அது எங்க கிராமங்கள்ல எங்க கடவுள்களுக்கு செய்யிற மரியாதை. கிராமங்களெல்லாம் காட்டுப்பக்கமா இருக்குமா? பூஜை முடிந்து திரும்பிப் போகும்போது , காட்டுல எதாச்சும் மிருகங்க தாக்கும். அதுக்காக நாங்க கூட்டமாக, சப்தம் எழுப்பியபடியே போவோம். இந்தப் பயலுவ இங்கயும் வந்து இதச் செய்யறானுக?” என தர்ம சங்கடமாகச் சிரித்தான். தனது இனத்தவர் ஏதோ தவறு செய்த குற்றவுணர்வு அவன் குரலில் ஒலித்தது.

“ கணபதி ஊர்வலம் போவது உனக்குச் சரியாகப் படுகிறதா?’ என்றேன். “என்னடா இப்படிக் கேணத்தனமாக் கேக்கிறான்?” என்ற கேள்வி தொக்கிநிற்க, வேகமாக “ ஆமா”
எனத் தலையாட்டினான். “ அது சரிதான் என்றால், சந்திரா, இதுவும் சரிதான்” . என்றேன். அவன் நம்பியதாகத் தெரியவில்லை. தலையை அப்படியும் இப்படியுமாக ஆட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

மாலையில், சிறிது வேலையிருந்ததால் 7 மணி வரை அலுவலகத்தில் இருந்தேன். ஒவ்வொருவராகக் கிளம்பிப் போய்க்கொண்டிருக்க, எனது வேலையும் ஒருமாதிரியாக முடிந்தது. கிளம்பிக்கொண்டிருக்கையில் சந்திரா என் கேபின் வாசலில் மெதுவாக வந்து நின்றான்.

“ஸாப். ஒரு நிமிடம்.” என்றான். உள்ளே அழைத்தேன். அவன் அதிகம் வந்து தொல்லை செய்வதில்லை. கடன் கேட்பதெல்லாம் சுத்தமாகக் கிடையாது.

“ நீங்கள் சொன்னதை யோசித்தேன். சரியென்றே பட்டது. கணபதிக்கு நாங்களும் ஆடிச்செல்வோம். பைசா பிரித்து பெரிதாகப் பந்தல் போடுவோம். பிரசாதம் வினியோகிப்போம். ஆனால்...” எனத் தயங்கினான். மெதுவாகத் தலைநிமிர்ந்தவன் , மெல்லிய குரலில் தொடர்ந்தான்.
“ எங்கள் பண்டிகையை நாங்கள் மட்டுமே கொண்டாடுவோம். வேறு சாதியினர் யாரும் வருவதில்லை. சாமி கும்புடுவதில்லை. ஏன் பிரசாதம் கூட வாங்கிக் கொள்வதில்லை. மலைசாதி மக்கள் நாங்கள் பாருங்கள்.”

நான் சற்று குலைந்துதான் போனேன். மும்பைச் சேரிகளிலும் வித்தியாசமுண்டா? பண்டிகைகள் , கிராமங்களில் வேண்டுமானால் சாதி பிரிவினால் வேறுபடலாம். இங்குமா?

”உங்க பண்டிகை பிரசாதம் இருக்கா ? இருந்தா எனக்கு நாளைக்குக் கொண்டுவா” என்றேன். அவன் தயங்கினான். “ இல்லை சார். அடுத்ததடவை கண்டிப்பாக் கொண்டு வர்றேன்” என்றான். பொய் சொல்கிறான் எனத் தோன்றியது. தயக்கம், மற்றும் எனது இந்தக் கேள்வி எனது அனுதாபம் மட்டுமே கொண்டதுயெனும் நினைப்புமாக இருக்கலாம். அவனது சிந்தனைக்கும் , கலாச்சாரத்திற்கும் எனது மதிப்பும் மரியாதையும் இருக்கவேண்டும் என்பதால் நான் மேலும் வற்புறுத்தவில்லை.

“ நிச்சயமாக் கொண்டுவா. ரொம்ப தித்திப்பா இருக்காதுல்ல? எனக்கு சர்க்கரைவியாதி உண்டு. தெரியுமில்லையா?” எனச் சிரித்தேன். அவனும் சிரித்தான். இருவர் சிரிப்பிலும் ஒரு செயற்கை இருந்தது என் காதுகளுக்குக் கேட்டது. எங்கள் இருவருக்கும் இடையே இருந்த மேசையின் நாலு அடி அகலம் என்னவோ மிகப் பெரியதாகப் பட்டது.

Saturday, May 16, 2009

கல்வித்தரக் காமாலை

”பையன் இந்த வருசம் 75க்கு மேல மார்க் எடுத்திருக்கான். ஐ.சி.எஸ்.ஸி சிலபஸ் இருக்கிற நல்ல பள்ளிக்கூடம் பக்கத்துல ஒண்ணு இருக்கா?” கேட்ட நண்பரை அனுதாபத்துடன் பார்த்தேன்.
“இப்ப இருக்கிற பள்ளிக்கூடம் நல்ல பேர் வாங்கினதுதானே? எதுக்கு மெனக்கெடறீங்க?” என்ற எனது கேள்வி அவருக்கு புரியவில்லை.

“ இந்த ஸ்கூல் மாநில சிலபஸ்... ஐ.சி.எஸ்.ஸி-ன்னா நல்ல தரம் இருக்கும்லா?” எனக்கு எங்கே போய் முட்டிக்கொள்ளவெனத் தெரியவில்லை.

மாநில சிலபஸ் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள் என்னமோ மட்டம் என்றும் , சி.பி.எஸ்.ஸி, ஐ.ஸி.எஸ்.ஸி சிலபஸ் உள்ள பள்ளிக்கூடத்தில் படிப்பவர்களுக்கு மட்டுமே எதிர்காலம் என்றும் ஒரு தவறான எண்ணம் - பெரும்பாலும் மத்தியதர , உயர் மத்தியதர மக்கள் மட்டத்தில்... இவர்களில் பலரும் மாநில சிலபஸ் பள்ளிகளில் படித்தவர்களாகத்தான் இருக்கக்கூடும்.

இதற்குமேல் ஒரு கேலிக்கூத்து...தாய்மொழியில் அல்லது மாநில மொழியில் பாடங்கள் படிக்கும் மாணவர்களை விட ஆங்கிலமொழியில் படிப்பவர்கள் புத்திசாலிகள் என்னும் பேச்சு. ஆங்கில மொழிக் கல்விக்கூடமென்றால் அடிதடி.. தமிழ், மராட்டிய மற்றும் பிற பிராந்திய மொழி வகுப்புகளுக்கு ஆளே இருக்காது இங்கெல்லாம்.


எனது மனைவி பணிசெய்த கல்லூரிகளில் சேரும் மாணவர்களைக்குறித்து சொல்வது நினைவுக்கு வருகிறது. ”தாய்மொழியில் கற்ற மாணவர்களும், ஐ.சி.எஸ்.ஸியில் படித்து வரும் மாணவர்களும் சேரும் வகுப்பில் பார்த்தால், அடிப்படை அறிவும், முயற்சியெடுக்கும் பண்பும் தாய்மொழிக்கல்வி மாணவர்களுக்கு அதிகம். ஐ.சி.எஸ்.ஸி , சி.பி.எஸ்.ஸி மாணவர்கள் “ இதெல்லாம் நாங்க ஸ்கூல்லேயே படிச்சுட்டமாக்கும்” என்ற மெத்தனப் போக்கு கொண்டு திரிந்துவிட்டு, கடைசியில் லபோ லபோவென அடித்துக்கொண்டு படிப்பார்கள்.”என்பார். என்ன, ஐ.சி.எஸ்.ஸி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை நிறைய உண்டு. தைரியமாக ஆங்கிலத்தில் பொளந்து கட்டுவார்கள். இந்த பேச்சுத்திறமை, தெளிவாகத் தனது வாதத்தை முன் வைத்தல் போன்ற மென் தொடர்புத் திறமைகள் (soft skills) அவர்களது பெரும் பலம்... தாய்மொழிக்கல்வி மாணவர்களின் பலவீனம்.

இதனை சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இண்டர்வியூவுக்கு வரும் பல மென்பொருள் நிறுவன மனிதவள அதிகாரிகள் முன்பு சிலாகித்ததுண்டு.” தென்னிந்திய மாணவர்களுக்கு தொடர்புத் திறமை மிகக்குறைவு. ஆனால் அடிப்படை நுட்ப அறிவு அதிகம். மும்பை, டெல்லியில் வாய்ப்பந்தல் ஜாஸ்தி... ஆனால் நம்மை , அவர்களது தன்னம்பிக்கை, பேச்சுத்திறமையில் நம்ப வைத்துவிடுகிறார்கள்” என்பார்கள். இப்போது நிலமை மாறியிருக்கலாம்.

மாநிலக் கல்வித் திட்டம் பிற திட்டங்களைவிடத் தாழ்ந்தது என்பதை நான் நம்பத் தயாராயில்லை. எனது மகனை மாநிலக் கல்வித்திட்டம் சார்ந்த பள்ளியில்தான் சேர்த்திருக்கிறோம். அவனது நண்பர்கள் பலர் ஐ.சி.எஸ்.ஸி பள்ளிக்குப் போகிறார்கள். அதிகமான பாடச்சுமை... அடிப்படை புரியாதபடி வேகமாகப் போகும் வகுப்புகள்... அடிக்கடி தேர்வுகள் என சுமையில் அச்சிறுவர்கள் அழுந்துவது வருத்தமாகத்தான் இருக்கிறது.

இப்போதும் எனது நிறுவனத்தில் சேரும் பல இளைஞர்/இளைஞிகளின் அடிப்படை அறிவியல் அறிவு சுமாராகத்தான் இருக்கிறது. முக்கியமாக கணக்கு... பெருக்குதல், வகுத்தல், சதவீதம் என்றால் கால்குலேட்டர் இல்லாமல் அவர்களால் முடிவதில்லை. கையில் கம்புடன் “ ம்..சொல்லுல... 84ஐ நாலால வகுந்தா என்ன வரும்?” என்று எட்டாம் வகுப்பின் கணித ஆசிரியர் குருமலை சாரிடம் படித்த என்போன்ற மாணவர்கள் என்ன குறைந்து போய்விட்டனர்? அரை நிமிடத்தில் பதில் வரவில்லையென்றால் பிரம்பு முட்டியில் பாயும்...நூறு முறை பதினாறாம் வாய்ப்பாடு எழுதிவர, பதினாறாம் வாய்ப்பாடு ஜென்மத்துக்கும் மறக்காது. அடிப்பதை நான் வரவேற்கவில்லை. வாய்ப்பாடு, மனக்கணக்கு என்பதெல்லாம், கூகிளை மேய்ந்து , பக்கம் பக்கமாக ” ஆர்க்டிக் பனிக்கரடிகளின் வாழ்வு முறை” என எழுதுவதை விட மிக முக்கியம் என்பது என் கருத்து.

தேர்தல் முடிவுகளும் இலங்கையும்

காங்கிரஸ் கூட்டணிகள் வெற்றி பெற்றுவிட்டதாக சரவெடிகள் அதிரத்தொடங்கிவிட்டன. மன்மோகன் சிங்கும் உப்புக்குக் நியாயமாக “ராகுல் காந்தியும் சட்டசபையில் இருந்தால் நல்லாயிருக்கும்” என நேரு குடும்பத்துக்கு வழக்கமான கும்புடு போட்டுவிட்டார். பிரதமர் பதவி நிச்சயம். எல்லாத் தொலைக்காட்சிகளும் நாளை முதல் வழக்கமாக அழுவாச்சி தொடர்களை நம்பி டி.பி.ஆர் ரேட்டிங் குறித்து கவலைப்படத் தொடங்கிவிடும்...

எல்லாம் சரிதான்வே....எவன் இலங்கை பற்றிக் கவலைப்படப்போகிறான்?

தேர்தலுக்கு முன்பு “தனி ஈழம்”, உண்ணாவிரதம் என அடித்த அந்தர் பல்டிகள் எல்லாம் இப்போது நின்றுவிடும். சாகிறவர்கள் செத்துக்கொண்டே இருப்பார்கள். புது அரசு எந்த அதிரடிச் செயலையும் செய்யாது... “அவங்க வூட்டுப் பிரச்சனை” என மன்மோகன் தேர்தலுக்கு முன்பேயே சொல்லிவிட்டார். தமிழ்நாடும் ஒன்றும் பெரிதாகச் செய்து விடாது... புலிகள் இந்தியாவில் புகுந்துவிடுவர் என்னும் சாக்கில் ,உதவிப்பணிகளும் ஒன்றும் நடக்காது. நடக்க விடமாட்டார்கள்.

ஐ.நாவும் செஞ்சிலுவைச் சங்கமும் “நினைக்கமுடியாத பெரும் அழிவு” என அறிவித்தும் ஒன்றும் நடக்கிறதாகத் தெரியவில்லை. சசி தாரூர் போன்ற ஐ.நா அறிந்த வல்லுநர்களும் திருவனந்தபுரத்தில் தேர்தல் வெற்றிக் களிப்பில். தமிழர்களில் ஒருவர்கூடவா உலகளவில் பிற அமைப்புகள்/நாடுகளின் கவனத்தை இலங்கை அழிவின்மேல் திருப்ப முடியவில்லை?

எனக்கு இது என்னமோ கையாலாகத்தனமாகப் படவில்லை. அரைமனத்துடன் செயல்படும் தமிழக அரசு, மெத்தனப்போக்கில் ஒரு மத்திய அரசு என இந்தியா உறங்கிக்கொண்டிருக்க, உலக அளவில் சில நகரங்களில் மெழுகுவர்த்திப் பேரணிகளும், சில சன்னல்கள் உடைப்பதும் மட்டும்தான் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டமுயற்சியாகத் தெரிகிறது.

கொஸோவா போரின்போது பி.பி.சியும், சி.என்.என் போன்ற தொலைக்காட்சிகளும் அடித்துக்கொண்டு புலம்பியது இப்போது எங்கே? வெள்ளை நிற மனிதர்கள் அடிபட்டால் அழும் இவை, நிறவெறியின் காமாலை கொண்டுதான் இலங்கையைக் காண்கின்றனவோ? உலக அளவில் மனிதாபிமானத்தைக் காட்டும் வகையில் போர்க்கால நடவடிக்கையாக , அப்பாவி மக்களைக் காக்கும் வகையில் எந்த மீட்புப்பணியினை, இலங்கையில் யார் செய்கிறார்கள்? அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஒரு கண்ணில் வெண்ணை, மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு போலும்...
தமிழர்களில் யாரும் அமெரிக்காவின் பெரிய வங்கிகளை நிர்வகிக்கவில்லை என்பது இதில் தெளிவு.


நாம் ரியாலிடி ஷோக்களும், சீரியல்களுமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என வரையறுத்து வாழ்ந்துகொண்டிருக்கும் வரை, இலங்கை எரியத்தான் போகிறது.

Tuesday, March 03, 2009

எங்கூரு பேப்பருலா!

போன வருடம் விநாயக சதுர்த்திக்கு இரு வாரங்கள் முன்பு சிவனே என சிக்னலுக்காகக் காத்திருந்தபோது , குறுக்காகச் சென்ற மும்பை நகரப் பேருந்தைப் பார்த்து என் மகன் கத்தினான் “ அப்பா , என்னமோ தமிழ்ல எழுதியிருக்காங்க”. கொட்டையெழுத்தில் “மும்பையில் விரைவில் வருகிறது - தினத்தந்தி” என விளம்பரம் பார்த்து வியந்தேன். அட, நம்மூரு சமாச்சாரம்..

தினமலர், மாலைமுரசு எனப் பல பேப்பர்கள் இருந்தாலும், தினத்தந்தி மேல் எனக்கு ஒரு தனிப் பாசம். எங்கூரு பேப்பருல்லா... சின்னவயதில்,காலங்கார்த்தாலே, அடுத்த தெரு மரக்கடைக்கு ஓடுவேன். நானும் என் நண்பர்களும் சேர்ந்து எழுத்துக்கூட்டி “சிந்துபாத்” படிப்போம்.(அதென்னமோ அன்றிலிருந்து இன்று வரைக்கும் லைலா ஒரு ஒற்றைக்கண் அரக்கன், பெரிய பாம்பு, பிரமாண்டமான கடல் விலங்கு என ஏதோ ஒரு கேணக்கிறுக்கிடம் மாட்டிக்கொண்டிருக்கிறாள்...). கூடுதலாக நீர்மட்டம் அட்டவணை பார்ப்பேன். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் எவ்வளவு அடி நீர் இருந்தா தூத்துக்குடி/அம்பாசமுத்திரத்தில் இருக்கும் எனக்கு என்ன? வாய்விட்டுப் படிப்பதால் பக்கத்தில் ஓசி பேப்பர் படிக்கவருபவர்களிடம் ஏச்சும் கிடைக்கும்.
“சவத்து மூதிகளா, சளம்பாம படிங்கலே..இன்னொரு தடவை சத்தம் வந்தது..**டியில ரெண்டு போடு போடுவம்” என தேவர் தாத்தா மரக்கட்டையை ஓங்கியதும்தான் அடங்குவோம். ”மூதிகளா, வெள்ளாமையா பண்ணுதீய? நீர்மட்டம் பாக்குறானுவ..கேணப்பயலுவ” எனச் சிரிப்பார்.இருந்தாலும் விடாமல் ஒவ்வொருநாளும் நீர்மட்டம் பார்க்கத் தவறுவதில்லை. எளிதில் புரியும் என்பதால் படித்தேன் என இன்று நினைக்கிறேன்.
ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார் என ஒரு கார்ட்டூன்.. அரைகுறை ஆடையோடு ஒரு பெண்...பக்கத்தில் ஒரு ஜொள்ளு.. எட்டிபார்த்தபடி ஆண்டியார்.. ஒரு விசயமும் இருக்காது.. இருந்தாலும் புரியாமலே சிரிப்போம். இப்ப அது ஆண்டியார் பாடுகிறார் என பரிமணித்திருக்கிறது.

ஆயினும் தினத்தந்தி எங்கள் தமிழ் படிப்பறிவை வளர்த்தது என்பது என்னமோ உண்மை. கொட்டையெழுத்தில் சிறு சிறு செய்திகள் படிக்க எளிது. நாலு வரி முதல்பக்கத்தில் படிக்குமுன்னேயே “ நாலாம் பத்தி பார்க்க” என வந்துவிடும். ஆர்வமும் போய்விடும். உடனே அடுத்த செய்திக்கு தாவுவோம். பள்ளியில் , படித்த செய்தியை பீற்றிக்கொள்வதும் நடக்கும். என்னமோ , வகுப்பில் சிறுமிகளுக்கு இதெல்லாம் ஒரு ஆர்வமாகப் படவில்லை. போங்கலே என சுளித்துவிட்டு “வாங்கடி, விளையாடுவம்” என கொடுக்காப்புளிக்கொட்டை, புளியாங்கொட்டைகளை வைத்துக்கொண்டு “ ஓரி உலகெல்லாம், உலகெல்லாம் சூரியன், சூரியன் தங்கச்சி, சுந்தரவல்லிக்கு..” என என்னமோ பாடிக்கொண்டு விளையாடுவார்கள். படிச்சதை வைச்சு பொண்ணுகளை இம்ப்ரஸ் பண்ணமுடியாது என்பதை அன்றே உணர்ந்திருந்தேன்.

”ஹிண்டு படிடே. இங்கலீஷ் நல்லாவரும்” என ஆசிரியர்களும், வீட்டில் பெரியவர்களும் வற்புறுத்தினாலும், ஆங்கிலத்தில் படிப்பது என்பது பெரும் அறுவையாக இருந்தது. ”ஒரு எழவும் புரியல மக்கா” என நண்பர்களுடன் மட்டுமே புலம்பித் தீர்த்துக்கொண்டிருந்தேன். சொன்னா அடிவிழும் “ சோம்பேறி மூதி. படிக்கணும்னா போர் அடிக்கோ?” என முதுகில் நாலு சாத்து சாத்துவார்கள் எனப் “பட்டறிவு” உணர்த்தியிருந்தது. என்ன செய்ய ? அதனாலேயே தினத்தந்தி ஒரு சொர்க்கமாக இருந்தது.

மும்பையில் வேலை பார்க்கும்போது தினத்தந்தி தேடினேன். கிடைக்கவில்லை. “ரெண்டுநாள் முந்தின பேப்பரு வரும் சார்” என்றனர் மாதுங்காவில். விட்டுவிட்டேன். இப்போது மும்பைப் பதிப்பு கிடைக்கப்போகிறது. கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது.
முதல்நாள் எங்கள் பேப்பர்காரன் கொண்டுவரவில்லை. “ ஆமா சார் என்னமோ தமிழ் பேப்பர் வந்திருக்கு.. வேணும்னா சொல்லுங்க” என வியாபரமாகப் பேசிச் சென்றுவிட்டான். நான் விடவில்ல. பேப்பர் பிரித்து கட்டுக்கட்டாக சைக்கிளில் வைக்கும் இடங்களில் சென்று தேடினேன். கிடைக்கவில்லை. மலாட் ரயில் நிலையம் அருகே மதியம் செல்ல நேர்ந்தது. அங்கே ஒரு கடையின் உள்ளே... ஒரேயொரு தமிழ்பேப்பர்.. தினத்தந்தியா?
கேட்டால் அவனுக்குப் புரியவில்லை. “மதராஸிப் பேப்பர் ஏக் ஆயா ஹை” என்றான் சுரத்தில்லாமல். எடுக்கசொல்லி பார்த்தேன். ஆகா.. நம்மூரு பேப்பருல்லா கிடக்கு?!

படு விவரமாக, நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டக்காரர்களைக் குறிவைத்தே அச்சடித்திருக்கிறார்கள். ஒரு முழுப்பக்கம் இந்த ஊர்க்காரர்களுக்கென்றே.. அந்த ஊர்ச் செய்திகள்.
“பணகுடி அருகே தந்தை மகன் வெட்டிக்கொலை. போலீசார் தீவிர புலன் விசாரணை”
“பாளை பேருந்து நிலையத்தில் பயங்கரம். ஓடஓட அருவாளால் வெட்டினர்”
“ஏரலில் பட்டதாரி இளம்பெண் காதலனுடன் ஓட்டம். போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்”
என நாட்டுக்கு மிக முக்கியமான, நல்ல செய்திகளுடன் உங்கள் காலை தொடங்கினால்... வெளங்கினாப்போலத்தான்.

“முடிவைத்தானேந்தல்ல நேற்று என் மருமவன் பால்குடம் எடுத்தான்லா” என்னுமளவுக்கு சிறுசெய்திகளின் கலவையாக ஒரு முழுப்பக்கம். என்னமோ கோஸு தின்றுகொண்டு, டீ கிளாசை கையில் பிடித்தவாறு , பெஞ்சில் ஹாய்யாக கால்மேல கால்போட்டு உட்கார்ந்து , பக்கத்துல இருப்பவரிடம் “ இந்த ஊரு வெளங்குமாடே?” என அரட்டை அடிக்கும் அனுபவம்,மும்பையில் உங்கள் வீட்டில் கிடைக்கும்போது “செய்தி என்னவா இருந்தா என்ன?” எனத் தோன்றி , அந்த அனுபவத்திற்காகவே படிக்கும் கோஷ்டியில் நானும் ஒருவன்.

என் மகனையும் எழுத்துக்கூட்டி படிக்க வைத்திருக்கிறேன். தமிழ்ப் புத்தகங்களை விட அவனுக்கு இது எளிதாகவும் இருக்கிறது. “இண்ட்ரஸ்டிங்க்” என்கிறான். முதல் பக்கத்தை விட்டு அவன் செல்வதில்லை. அதற்குள் எனது தணிக்கை வந்துவிடும்.. இல்லையென்றால் அதென்ன இதென்ன என ஆயிரம் கேள்விகள் வரும். நாயை அடிப்பானேன்...*யைச் சொமப்பானேன்? ( ”திரிஷாவின் கைகளில் என்ன? இதயத்திலேயே குடியிருக்கிறேன் என்கிறார் விஜய் ”என என்னமாவது சினிமா சில்மிஷங்களுக்கு நாம் விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்க முடியாது). இப்போது கொஞ்சம் வேகமாக வாசிக்கிறான்.

எனது அலுவலக மேலாளர் தேஷ்பாண்டே தனது கணனியில் மராத்தி பேப்பர் வாசிப்பவர். நான் வீட்டில் தினத்தந்தி வாங்குவதைச் சொன்னதும் “இணையதளத்தில் தமிழ்ப் பேப்பர்கள் இருக்குமே? எதுக்கு பேப்பர் வாங்குற?” என்றார். கையில் பேப்பர் வைத்து, காலையில் நம்மவூர் செய்திகளைப் படிப்பது சுகம் என்றேன். ஒத்துக்கொண்டார். ”அதெதுக்கு இந்த பேப்பர் செலக்ட் பண்ணினே?” என்றார். ஒரே பதில்தான்.

எங்கூரு பேப்பருல்லா!

Saturday, February 28, 2009

உலகத் தமிழன்?

”இத்தனை பேரு சாகறாங்களே? இதே சண்டை பங்களாதேஷ்-ல நடந்திருந்தா பிரணாப் முகர்ஜி என்ன செஞ்சிருப்பாரு?”
கேட்டவன் தமிழனில்லை.
ப்ரமோத் ஷிண்டே என்னுடன் பணிசெய்யும் ஒரு சாதாரண மும்பைக்காரர். 7.20 ரயிலில் டோம்பிவில்லியில் தொத்தி, காட்கோப்பரில் இறங்கி அவசரமாக ஒரு பேருந்தில் திணிபட்டு , ஐ.ஐ.டி பவாய் அருகில் துப்பப்படு, அலுவலகத்திற்கு கசங்கி வரும் ஒரு பெயரில்லா மும்பைக்கர்.. தமிழ்நாடு என்றாலே ”இராமேஸ்வரம் தெரியும்” என்னும் வகை. எல்லா தென்னிந்தியனும் மதராஸி என்று கேட்டு வளர்ந்தவன்.
இலங்கை, அதன் தவிப்பு எல்லாம் அவனுக்கு வெகுதூரம்.
அவன் இப்படிக்கேட்டதும் வியந்துபோனேன். “ இலங்கை பிரச்சனை இன்று நேற்றதல்ல. பிரணாப் முகர்ஜிக்கு முன்பே பலர் இதில் அரைகுறை மனசோடு கைவைத்ததின் விளைவு இன்று இப்படி..” என விளக்கத் தொடங்கிய என்னை நிறுத்தினான்.
“ எனக்கு அதெல்லாம் தெரியாது. என்ன, . புலிகள் என்று ஒரு அமைப்பு ஒரு பக்கம். ராணுவம் ஒருபக்கம். மாட்டிகிட்டு பாவம் மக்கள் சாகிறாங்க. இது சரியாகப் படலை. ஃபிஜித் தீவுல பீஹாரிகளுக்கு சளி புடிச்சா, டெல்லி தும்மும்.. இங்கே செத்தாலும் ஒண்ணுமில்லன்னா என்னமோ மாதிரியிருக்கு” என்றான்.
மனிதாபிமானம் என்பது மொழி, இனம், மீடியா கடந்தது. இங்கு ஊடகங்கள் என்ன காட்டுகின்றன?
“புலிகளின் கடைசி இருப்பிடத்தை நோக்கி இலங்கை ராணுவம் முன்னேற்றம்”. “ பிரபாகரனின் சொகுசு பதுங்குகுளி கைப்பற்றப்பட்டது’ “பிரபாகரன் தப்பி ஓட்டம்”. -ஹிண்டுஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா ( ஹிந்துவை விடுங்கள்)வின் கடைசி பக்கச் செய்திகள் கொசுறு போல இலங்கைப் போர் பற்றி. இதுவா நிஜச் சித்தரிப்பு?
”அகதிகளின் நிலை அரசியலாக்கப்படுகிறது - தமிழகத்தில்”- இதுதான் செய்தி சிறப்புப் பார்வைகளில். இம்மேதாவிகள் தி.மு,க, வை,கோ, அ.தி,மு.க தவிர தமிழர்களே இல்லை என்கிறார்களா? தமிழரின் கருத்துக்கள் என்ன? தமிழன் என்றால் யார்?

தமிழன் என்பது ஒரு இனம். உலகின் பல மூலைகளில் பெருமையுடனோ/தவித்தோ உயிருடன் இருக்கத் தவிக்கும் ஒரு தனி இனம். தமிழன் என்பவன் இந்தியாவின் ஒரு மாநிலத்தின் மண்ணின் மைந்தர்கள் மட்டுமல்ல. தமிழ் என்னும் பெரும் மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் காக்கத் தவறிய முட்டாள் மனிதர்களின் மொத்த அடையாளம். சினிமாவில் தன்னைத்தொலைத்து, தொலைந்ததும் தெரியாமல் வாய் பிளந்து மலங்க மலங்க முழித்துக்கொண்டிருக்கும் ஒரு மந்தை மனிதர்கள்.

”யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை ஒரு முறை நியூ ஆர்லியன்ஸில் எனது பிற நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். “ உலகமயமாக்குதலின் தீர்க்கதரிசனத்தின் உச்ச கட்டம் இது” என்றனர் பலர் வியந்து. ”இத்தனை பரந்த மனப்பான்மை படைத்த உங்கள் இனம் ஏன் ரோமானியர் போல புகழ் பெறவில்லை?” என்றார் ஒருவர். “ அடக்கியாள்வதும், பிற கலாச்சாரத்தினை அழித்து தன்னுடையதைப் பரப்புவதும் தமிழனின் பண்பாடில்லை” என்றேன். முன்பு படித்த வரலாறு கைகொடுத்தது. “வியப்பாக இருக்கிறது.நாங்கள் என்னமோ அடிமட்ட நிலையில் சுரண்டப்படும் ஒரு இனம் என்றல்லவா நினைத்தோம்?” என்றனர். அது அமெரிக்க அசட்டுத்தனம்.. விடுங்கள்.”
ஒரு புலம் பெயர்ந்த தமிழருடன் பேசிக்கொண்டிருந்த போது, தற்செயலாக அங்கு வந்த எனது அமெரிக்க நண்பர் “உங்கள் மொழியில் எப்படி வித்தியாசம் கண்டுகொள்வீர்கள்?” என்று கேட்டார். நான்”“ தமிழ்நாட்டில இருந்து வந்தவங்க தமிழ்ல பெரும்பாலும் ஆங்கிலம் இருக்கும்- படிச்சவங்க என்று காட்டிக்கிற அடையாளம். இலங்கைத்தமிழர் பேசினா அது தமிழா மட்டுமே இருக்கும்” என்று விளக்கினேன். ”ஆக உலகத்தமிழர் என்று இல்லை. பிராந்திய அளவில் வேற்றுமை கண்டுகொள்ளலாம் இல்லையா?” எனக் கேட்டு சிந்தித்தார். சிந்திக்க வைத்தார்.
உலகத்தமிழர்கள்? இந்த பதத்திற்கு என்ன பொருள்? நாம் இப்படிச் சிந்தித்திருக்கிறோமா? இலங்கைத் தமிழர்/ சிங்கைத் தமிழர்/மலேசியத் தமிழர்/ மும்பைத்தமிழர்.....போகிற போக்கில் மதுரைத்தமிழர்/சென்னைத்தமிழர்/ நெல்லைத்தமிழர் எனவும் வருமோ? நெல்லையில் எவனாவது புகுந்து அடித்தாலும்( ”எவம்ல எங்க ஊர்ல புகுந்து அடிப்பான்னு சொல்றது? ”என நெல்லைக்காரர்கள் அருவாளுடன் எனக்காகக் காத்திருக்கவேண்டாம்) இப்படித்தான் நாம் புலம்புவோமா? ப்ரணாப் முகர்ஜியை எதிர்நோக்கிக் காத்திருப்போமோ?

உணர்ச்சி வசப்பட்டு, தான் மரிப்பதால் எவனுக்கும் லாபமில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமலே தீக் குளிப்பதும், அத்தழலில் அரசியல்கட்சிகள் குளிர்காய்வதும் முதல் பக்க செய்திகளாயிருந்து இப்போது கடைசிப்பக்கத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்க, இலங்கையில் இருக்கும் நாலு தமிழனும் தினமும் சாவை நோக்கிச் சென்று கொண்டிருக்க, நாம் இன்னும் நயன் தாராவுக்கும், அசினுக்கும் கலைமாமணி கொடுத்து கவுரவித்துக்கொண்டிருப்போம். தமிழனது கலை உணர்வை உலகம் அறியவேண்டாமா?

”நிஜமான” ஸ்லம்டாக் மில்லியனர்

டொமினிக் லாப்பியர்-ன் ”சிட்டி ஆப் ஜாய்” புத்தகம் படித்த நண்பர்கள் ”ஸ்லம்டாக் மில்லியனர்” குறித்து என்ன சொல்கிறார்கள் எனக் கேட்க ஆவலாயுள்ளேன்.
எனக்கு இப்படிப் படுகிறது.
நடைமுறை வாழ்க்கை குறித்தது ஒன்று, மற்றொன்று சல்மான் ரஷ்டி சொன்னதுபோல “கற்பனைக்கும் எட்டாத நடக்கவியலாத” மற்றொன்று. உண்மையான ஏழ்மையையும் அடிமட்ட சுரண்டலையும் , வாழ்க்கைப் போராட்டத்தையும் காட்டியது ஒன்று;பணக்காரக்கனவுகளையும், நிதர்சனத்தையும் குழப்பியடித்த கொலாஜ் மற்றொன்று. இரண்டும் ஆழமானவை. மனத்தைத் தாக்கக்கூடியவை.
ஸ்லம்டாக், திரைக்கதைக்கான தகுதியைப் பெற்றிருந்தது. 2 மணிநேரத்திற்குள் ஒரு போராட்டத்தைச் சொல்லவேண்டும் என்ற நிர்பந்தத்தை சுளுவாக சமாளித்தது. சிட்டி ஆப் ஜாய்- அப்படியல்ல. மெதுவாக உள்வாங்கி அசைபோடவேண்டும். பொறுமையும், நிதானமும் வேண்டும். அது கதை. ஸ்லம்டாக்- திரைக்கதை. டொமினிக் லாப்பியர் கல்கத்தாவில் ஆராய்ச்சி செய்தபோது மனத்தை அசைத்த அதிர்வுகளின் உண்மை வெளிப்பாடு .மற்றொன்று மும்பையின் வாழ்வுத்தாக்கத்தில், ஓடிய கற்பனையில் உருப்பாடு. கற்பனையின் படிவம் இருப்பதால் சினிமா உருவாகியதில் ஆச்சரியமில்லை.

இதற்கு ஆஸ்கார்? ஹாலிவுட் வேறு உலகம். ரகுமானுக்கும் ரசூல் பூக்குட்டிக்கும் விருது கிடைத்ததற்கு சந்தோசப்படலாம். அவ்வளவுதான். ரெண்டு மணிநேரம் தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு இந்தப்படம் உண்மையான தாராவிச் சேரியையும் சித்தரிக்கவில்லை.. “என்ன ஆக்டிங் பாரு!” என ஆச்சரியப்படுமளவு யாரும் நடிக்கவும் இல்லை. சேரித்தனம் வியாபாரமாக்கப்பட்டிருக்கிறது. வழக்கம் போல அமெரிக்கா “வாவ்” என ஆச்சரியப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். பேசாமல் எதாவது அழுவாச்சி சீரியலைப் பாருங்கள். ”நேரத்தை வீணே செலவழித்தேன்” என்ற உண்மை தெரிந்த நிறைவோடாவது உறங்குவீர்கள்.

ஏழ்மையையும், வறுமையையும் குறுகுறுப்பாகப் பார்க்கும் மேல்நாட்டுப் பழக்கம் இன்று நேற்றதல்ல. மதர் இந்தியா புத்தகத்தில் “ இந்தியா ஒரு திறந்தவெளி கழிப்பிடம்” என காதரின் மேயோ எழுதியதற்கு, காந்தி “ இப்புத்தகம் ஒரு சாக்கடை மேலாய்வாளரின் அறிக்கை” எனக் கண்டனம் தெரிவித்தது பலருக்கும் தெரிந்திருக்கலாம். உண்மை வேறு.. உண்மையை குழியாடி/குவியாடிகளால் ஒளியியல் பம்மாத்து செய்து விகாரமாக எதிரொளித்து “இதாண்டா ரியலிஸம்” எனச் சொல்வது வேறு.ஸ்லம்டாக் இரண்டாவது வகை.
மும்பைக்கு வரும் பல முதல்முறை சுற்றுலாப் பயணிகள் “ தாராவிக்கு எப்படிப் போகணும்?” எனக் கேட்பது வழக்கம். அங்கு சென்று வருவது ஒரு சுற்றுலா ஆக்கப்பட்டிருக்கிறது. ஏழ்மையை ரசிப்பது கொடூரமா இல்லையா என்பதல்ல எனது கேள்வி.. இந்தியாவில் எத்தனையோ பார்க்கவும், பழகிக்கொள்ளவும் இருக்க... இது என்ன கேணத்தனம்? என்ற எண்ணம் எனக்கு எழுவதில் எந்தத் தவறும் இல்லையெனவே நினைக்கிறேன்.
சேரிகள் இந்தியாவுக்கு மட்டும் சொந்தமல்ல. பங்களாதேஷ், பாக்கிஸ்தான் போன்றவைகளும்தான் சேரிகளைக் கொண்டுள்ளன. அங்கு இல்லாத எந்த அதிசயத்தை இங்கே கண்டுவிட்டனர்? ஒரே வித்தியாசம்... மும்பை சேரிகள் வெறும் ஏழ்மை வலிக்கோடுகளல்ல. முயற்சியும், வலியும், சொந்தங்களும், நட்புகளும், மத, இன வெறிக் கொலைகளும், அதன் நடுவே உயிரைக்கொடுத்தாவது மற்றவனைக் காப்பாற்றும் உணர்வுகளும் கூடிய ஒரு கலவை. ஒரே சமயத்தில் சாக்கடை நாற்றமும், அத்தரும், குல்கந்தும், ரத்த வாடையும் வீசும் விபரீத கலவை. இந்த நவீன சித்திரத்தை எப்படிப் பார்க்கிறோம் என்பதில் இருக்கிறது நமது சாமர்த்தியம். அமெரிக்கா தவறாமல், 1900களில் பார்த்ததுப்போலவே இன்றும் பார்த்திருக்கிறது.

தாராவியில் இருந்து உயர்ந்த மனிதர்கள் ஏராளம். நானே பார்த்திருக்கிறேன். இன்று ஒருவர் ஒரு பெரும் அமெரிக்க நிறுவனத்தில் , ஜப்பானிய ஆய்வு சாலையின் தலைவர். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ராணுவ வீரர்கள், விஞ்ஞனிகள், தொழிலதிபர்கள் பலர் தாராவியில் இருந்து வந்திருக்கின்றனர். இன்றும் தாராவி என்றால் வெறும் ஏழ்மையல்ல. அச்சுத் தொழில், தோல் பொருட்கள் ஏற்றுமதி என்று பல தொழில்கள் பெருகிய, துடிப்பான ஒரு பகுதி. என்ன துரதிருஷ்டம் என்றால்... இவர்களைக் குறித்து உண்மையையும் எவரும் எழுதவில்லை... திரைக்கதையையும் ஒருவரும் எழுதவில்லை.

நமது இளைய தலைமுறை எதைப் பார்க்கும்? தாராவியின் வறுமையும், வலியுமாக ஓடும் சாக்கடையாக இப்புத்தகம், தொலைக்காட்சி காட்டியவை கண்டு முகம் சிறுக்கும் அவர்களுக்கு, இவ்வூடகங்கள் தெரிந்தே விட்டுப்போன மாணிக்கங்கள் அச்சாக்கடையின் உள்ளே அழுந்திக் கிடப்பதைப் பார்க்க இயலாது. சாக்கடையை யார் கிளறுவது? எவருடைய பணி இது?

Sunday, January 11, 2009

பசுத்தோல் போர்த்திய..

பசுத்தோல் போர்த்திய..
இந்தியாவில் பிறந்த ஆங்கிலப் புத்தகௌலகில் சிறப்பாகப் பேசப்படுமொரு பெண்மணி எழுதிய புத்தகங்களை இதுவரை படிக்கவில்லையே என்னும் வருத்தம் இருந்து வந்தது. இப்போது இல்லை..மும்பை தாக்குதலைத் தொடர்ந்து அவர் கார்டியனில் எழுதியபோது நான் இங்கிலாந்தில் இருந்தேன். "சே, என்ன மனிதர்கள் இவர்கள் ?"என்று தோன்றிவிட்டது.

அவர் எழுதியபோது பல தகவல்கள் வெளிப்படவில்லை. தாக்குதல் தீவிரவாதத்தனமானது என்பது மட்டும் டெளிவு. இது போதாதா, தீவிரவாதத்தைக் கண்டிக்க?

இதுபோன்றவர்களின் அதிமேதாவித்தனத்தை மெச்சாமல் அவர்களுக்கு உரிய இடத்தைக் காட்டுவது நல்லது என நினைக்கிறேன். எதற்காக இவர்கள் இப்படி எழுதிகிறார்கள்? புகழ்... மற்றவன் சாவிலும் சலசலப்பை ஏற்படுத்தித் தன் பெயர் வரவேண்டும் என்னும் தாரள குணம். இவர்கள் எழுதியது எவ்வளவு நல்ல கதையாக இருந்தால் என்ன ?ஏன் புலிட்சர் & புக்கர் பரிசு கிடைத்தல் என்ன? மனிதத்துவம் இல்லாதவர்களின் வார்த்தைகளைக் படிக்காமல் போனால் ஒன்றும் குறைந்துவிடுவதில்லை என நினைக்கிறேன்.

எனது நண்பர்களில் சிலர் இதனை ஏற்கவில்லை.
"குளத்தோடு கோவிச்சுகிட்டு கழுவாமப் போனா.."
" கலை, இலக்கியம் நாடு கடந்தது"
இது போன்ற வார்த்தைகள் வந்தாலும், வருமானாலும், நான் கவலைப்படப் போவதில்லை.

தன் வீட்டின் ஒரே வருமானமும் தனது பணி ஓய்வுக்குப் பின் நின்றுவிட, "தனது மகன் வேலைக்குப் போய்விட்டான், இனிமே கவலையில்லை" என்றும் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த தந்தை, மகனின் ரத்தம் தோய்ந்த உடலைப் பெற்றுக்கொள்ளும்போது உதடு துடிக்க மராட்டியில் எதோ சொல்வது தொலைக்காட்சி அறிவிப்பாளரின் ஓசையில் கேட்கவில்லையெனினும்...

வலித்தது, உணர முடிகிறது. எந்த இலைக்கியம் அவருக்கு ஆறுதல் கூறிவிட முடியும்? எந்த இலக்கியம் இதைவிட பாதிப்பை ஏற்படுத்திவிட முடியும்?

பிற மனிதனின் வலியறியாது பேசுபவர்களை முற்றிலும் புறக்கணிப்பது, அவர்களுக்கு மரியாதை ( பெயர்/ நினைவு) தர மறுப்பது என்பது பைதியக்காரத்தனமாகப் படலாம். ஆனால், அவர்கள் முய்ற்சியே , நாம் அவர்களைப் பற்றி பேசுவதும், நினைப்பதும்தானே? அதனை தர மறுத்தால் அவர்கள் முயற்சியை முறியடித்ததாக ஆகுமல்லவா?

ஒரு வரம் முன்பு ஒரு வினாடி வினாவுக்கு தயார்செய்து கொண்டிருந்த என் மகன் இப் பிரபல ஆசிரியரது நாவல்கள் குறித்துக் கேட்டான். "தெரியாது" என்றேன். அவனையும், இக்கேள்விக்கு தெரியாது எனவே பதில் சொல்லவும் சொன்னேன். வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை. இத்தீவிரவாதத்டை முறியடிக்கவேண்டும்.

ஹேமந்த் கர்கரே, சாலஸ்கர், மற்றும் பெயர்தெரியாத வீரர்களுக்கும், உயிர்துறந்த அப்பாவி மனிதர்களுக்கும் நாம் செய்யும் சிறு முட்டாள்தனமான வீரவணக்கம்.

மும்பை குறித்த பதிவுகள்

மும்பை குறித்து 26/11க்குப் பிறகு எழுதப்பட்ட வலைப்பதிவுகளை முழுதும் படிக்கவில்லையெனினும் சில பதிவுகளைக் காண நேர்ந்தது.
வீடு தீப்பிடித்து எரியும் போது பீடிக்கு நெருப்பு கேட்ட கதையாய் சிறிதும் சிந்திக்காமல் எழுதப்பட்ட சில பதிவுகளைக்குறித்து சில வார்த்தைகள்.
மும்பையில் சில வருடங்கள் இருந்ததால் அதன் வாழ்க்கையைக் குறித்து அறிந்ததாக எழுதும் இவர்கள் பார்வை வருந்தத்தக்கது.
சில கருத்துக்களைக் கவனிப்போம்.
1. விலைவாசி அதிகம். அதனால் "பெங்களூரில் சில ஆயிரங்களில் வசதியாக இருந்த என்போன்ற மத்திய தர வர்க்கங்கள் வீடு கிடைக்காமல் திண்டாடியதற்கு" மும்பைக்காரர்கள் ஏளனமாகப் பார்த்தனராம். என்ன கதை யிது? மும்பையில் பெரும்பாலும் மத்திய தர மக்கள்தான் வசிக்கின்றனர். பெங்களூரிலும், சென்னையிலும் இல்லாத ஆடம்பர வாழ்வா இவர்கள் இங்கு எல்லாரிடமும் கண்டுவிட்டனர்? மும்பை ரயிலில் அனுதினமும் செல்லும் மக்களைப்பார்த்தால் தெஇரியும் - எவரிடம் பணம் கொழிக்கிறது என்று. மக்கள் நெருக்கடி, இடமில்லாமை, பில்டர்களின் லாபி... மும்பையில் அதிகம். சென்னையில் இப்போது வேளச்செரியிலோ, பெங்களூரிலோ இப்போது இவர்கள் முன்பு போல வீடு வாங்கமுடியுமா?
2005 யில் மழை கொட்டியபோதும் பங்குச்சந்தை குறித்து மட்டும் பேசினராம்... மக்கள் எழுதுமுன் கொஞம் யோசிக்கவேண்டும். சராசரி மும்பைக்கர் மனித நேயம் என்பதை உலகிற்குக் காடிய நாட்கள் அவை. சான்றுகள் ஆயிரம். மீண்டு உயிர்த்து வருவது என்பது மும்பைக்கே உரிய தனித்தன்மை. 1993 குண்டு வெடிப்பிலும் சரி, 2005 மழையிலும் சரி, 2007 ரயில் குண்டு வெடிப்பிலும் சரி, மும்பை அடிபட்ட அளவு எந்த நகரும் அடிபடவில்லை. அகமதாபாத்-ஐ சேர்க்கலாம் ஒரு வகையில்.மேற்சொன்ன அனைத்து நிகழ்வுகளையும் மும்பையில் இருந்து பார்த்தவன் என்ற அனுபவத்தில் இதை எழுதுகிறேன்.

"தாஜ் ஓட்டலில் உயர்மட்டத்தினர் மட்டும் அடிபட்டதற்கு இன்ன குதி குதிக்கின்றனர்" ஹலோ, என்ன கதை யிது? பழரசம் விற்பவன் சி.எஸ்.டி ரயில் நிலையத்தில் மரிக்கவில்லையா?எத்தனை ஏழைமக்கள் ரயில் நிலையத்தில் அநியாயமாகச் சாகவில்லையா? இவர்கள் எல்லாம் உயர் மட்டத்தினரோ?
தாஜ் குறிவைக்கப்பட்டது. அத்தோடு நரிமன் இல்லமும்...
என்ன பாதுகாப்பு மும்பையில்? மும்பையில் மத்தியதர மனிதன் கட்டும் வரி அதிகம். அடிப்படையான பாதுகாப்பு கேட்பது தவ்றாகப் பட்டது என்றால் என்ன சொல்ல?
மும்பை கட்டும் தனிநபர் , கார்பொரேட் வரிக்கு, அதற்கு என்ன கிடைத்திருக்கிறது?

காஷ்மீரத்தையும், குஜராத்தையும் கண்டுகொள்வதில்லையாம்... கார்கில் போர் நடந்த போது மும்பை மக்கள் செய்ததும் சிந்தித்ததும் தினசரி ரயில் பயணங்களில் நான் அறிவேன். கார்கில் சண்டையின்போது , விராரில் புதிதாக வந்த ராணுவ வீரர் குடும்பத்தை, அந்தனை நெரிசலிலும், இடம் கொடுத்து, மரியாதையுடன் தாதரில் இறக்கிவிட்ட எனது நண்பர்கள் கூட்டம் இன்னும் விரார் 7.40 மணி ரயிலில் செல்கிறது. ஒருசேரச் சென்று மும்பை சென்ட்ரல் நிலையத்தில் ரத்ததானம் செய்ய நின்றதும், கம்பார்ட்மென்டில் உண்டியல் குலுக்கி( அவர் ஒரு தகவல் தொடர்பு நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் மேல் அதிகாரி), இராணுவ வீரகள் குடும்பத்தினருக்கு கணிசமான தொகை அனுப்பியதும் இன்றும் நினவிருக்கிறது. என்னால் அவர்களைக் காட்டவும் முடியும். ரயில் சினேகம் என்பது எதுவரை என்பதை மும்பை வாழ்வு காட்டும்.சராசரி மும்பை மனிதன் நெரிசலில் நசுங்கி மாள்கிறான் எனினும், மனிதநேயம் இங்கு இன்னும் இருக்கிறது, மும்பை குப்பையில்- மற்ற சுத்தமான நகர்ங்களை விட..
நான் இங்கு 20 வருடங்களாக வாழ்பவன். மும்பையை பல காரனங்களுக்காக வெறுக்கவும் முடியும். மதிகவும் முடியும்.
பணம் சும்மா கொட்டவில்லை இங்கு. உழைக்கிறார்கள். உழைக்க விடுகிறார்கள்.

மும்பையை வெறுக்கப் பலகாரண்க்கள் இருக்கலாம். அதற்காக, ஒரு நகரம் ரத்தம் சிந்தும்போது, இந்தியன் அல்லது ஒரு மனிதன் என்ற அளவிலாவது நின்று உதவிகரம் நீட்டாமல் இது நொட்டை இது நொள்ளை எனக் குற்றம் சொல்வது கீழ்த்தரமானது.

பி.கு. சராசரி மும்பைக்கர் இதையும் கண்டுகொள்ளாமல் அவன் பாட்டுக்கு ரயிலில் தொத்தி போய்க்கொண்டே யிருப்பான். அதுதான் அவனது வெற்றி.