Thursday, April 24, 2014

சிறியன சிந்தியாதான்

"தாயென உயிர்க்கு நல்கித் தருமமும் தகவும் சால்பும்
நீயென நின்ற நம்பி!நெடிது நீ நோக்கும் நோன்மை
நாயென நின்ற எம்மால் நவையற உணரலாமே?!
’தீயன பொறுத்தி’ என்றான், சிறியன சிந்தியாதான்”

- வாலி வதைப் படலம்.
இறக்கும் தருவாயில் கிடக்கும் வாலி, இராமனிடம் வாதம் செய்து, இலக்குவன் நடுவே புகுந்து ஒரு விளக்கமும் அளித்த பின்னர், வாதத்தை நிறுத்திக் கொண்டு சொல்கிற வார்த்தைகள் இவை.



’சிறியன சிந்தியாதான்’ என்ற அற்புத புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். வாலி வாதம் & வாலி வதம் குறித்த அருமையான தகவல்களும், சிந்தனைப் பாங்குகளுமாக திரு.எஸ்.இராமகிருஷ்ணன் தந்திருக்கும் பெருஞ்செல்வப் பெட்டகம் அது. 1957ல் வெளிவந்து 1967 வரை மறுபதிப்பு கண்ட புத்தகம் திடீரென மறைந்து விட்டது. இப்போது மீண்டும் வந்திருக்கிறது. https://www.nhm.in/shop/100-00-0000-727-6.html இல் கிடைக்கிறது.

இந்த பாடல் வரை இராமனுக்கும் வாலிக்கும் நடக்கும் விவாதத்தை கம்பரின் சொல்லாட்சியையும், அதில் இரு சாரருக்கும் நடுவே நின்று, இருவரின் வாதங்களிலும் சீர் தூக்கிப் பார்க்கும் சிந்தனை செய்து, நம்மையும் ஆ என வாயைப் பிளக்க வைக்கும் திரு. இராம கிருஷ்ணன் அவர்களின் எழுத்து மாட்சியில் வியந்து வணங்கி நிற்கிறேன்.

இந்த பாடலுக்குப் பின் அவர் இரு வார்த்தைகளைக் கொண்டு விளக்குகிறார். ’தீயன பொறுத்தி” ,  “ நெடிது நோக்கும் நோன்மை” ( தீர்க்கதரிசனமாக பின் வருங்காலத்தின் நிகழ்வுகளை முன்னே அறியும் திறமை).
இராமன் வாலியைக் கொன்றதற்குச் சொன்ன காரணங்களை வாலி ஏற்றுக் கொள்ளவில்லை. இளைய பெருமாளான இலஷ்மணன் சொன்ன விளக்கத்தையும் ஏற்கவில்லை. வாலி சுக்ரீவனை  அவன் காலில் விழுந்தபின்னும் அடித்ததும், அவன் மனைவியான உருமையைக் கவர்ந்ததும் அவனது விலங்கு வழக்கப்படி குற்றமல்ல. மிஞ்சிப் போனால், நீதி அறிந்த ஒருவனுக்கு அது குறையாகும். கொல்லும் அளவுக்கு அது குற்றமாகாது என்கிறார் ஆசிரியர்.

பின்னே இராமன்  கொன்றது சரி என்று வாலி எப்படி ஏற்றுக் கொண்டான்?

வாலி அக்னி சாட்சியாக , இராவணனிடம் தோழமையும் அவனுக்கு உதவி செய்யவும் உறுதி பூண்டது, நீதி அறிந்த ஒரு மன்னனுக்கு அழகல்ல. இராவணன் பிறரை வருத்தும் போது, அவனை விட வலியனான வாலி, இராவணனை அடக்கி பிறரைக் காத்திருக்கவேண்டும். அதை விடுத்து தன் கிட்கிந்தையில் மட்டும் தனது வலிமையைக் காட்டி ஆட்சி செய்தது ஒரு குற்றமாகிறது.

ஒரு அரசன் தீய செயல்களை விட்டுவிடுவது மட்டுமல்லாது, நல்லது அனைத்தையும் தன் கடைமையாகச் செய்யவேண்டும். இதில் வாலி பிறழ்ந்து விட்டான். ஒரு தீய நட்பைத் தேடியது இழுக்கைத் தருகிறது. ஒரு குற்றமாகிறது. தண்டனை கிடைக்கிறது. வாலியே இதனைச் சொல்கிறான் “என் பழம்வினைத் தண்டமே அடியனேற்கு உறுபதம் தருவதே”   அவனது தீச்செயலின் தண்டனை அவனுக்கு வைகுந்தம் அளிக்கிறதாம்! என்ன ஒரு தீர்க்கமான, தெளிவான சிந்தனை?!இறக்கும் தருவாயிலும், தனது குறைகளை எண்ணி, இதனால் வந்த விளைவு என்று பெரிதாக எண்ணுவதால் அவன் ’சிறியன சிந்தியாதான்”.

 நாளை இராம இராவண யுத்தம் நடக்கும்போது, தோழனாக வாலி , இராவணன் பக்கம் நின்று போரிட வேண்டி வரும். தருமத்தின் பாதையை எதிர்த்து நிற்க வேண்டி வரும். இதனை தொலைநோக்குப் பார்வையாக இராமன் கருதியே , தன்னை இப்போதே கொன்றான் என்று வாலி எண்ணுகிறான். இராவணனுடன் தோழமை கொண்ட ‘தீயன பொறுத்தி” என்கிறான்.

புத்தக முடிவில் ஆசிரியர் வியக்கிறார் “ எப்பேர்ப்பட்ட மாவீரன் இறந்துவிட்டான்?!” நாமும் தாரை போல் திகைத்துப் போகிறோம் “ தேறேன் யானிது , தேவர் மாயமோ? வேறோர் வாலி கொலோ விளிந்துளான்?”  ( நான் இதை நம்ப மாட்டேன். தேவர்கள் செய்யும் மாயைச் சூழ்ச்சியோ?வேறு ஒரு வாலிதான் இறந்து கிடக்கிறான். என் வாலி அல்ல)

நம் வாலி என்றும் சாகான்.

என்னிடம் இருப்பது ‘67ம் வருடத்திய பிரதி. பழைய எழுத்து வடிவம், சிக்கென இருக்கும் பழைய எழுத்துரு... Nostalgic. பம்பாய்த் தமிழ்ச்சங்க நூலகத்திற்கு நன்றிகள். 

5 comments:

  1. Anonymous10:06 AM

    வணக்கம்

    பதிவு நன்றாக உள்ளது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...
    தங்களின் பக்கம் என்னுடைய வருகை முதல் வருகையாக உள்ளது இனிதொடர்கிறேன்....


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நன்றி ரூபன்.

    ReplyDelete
  3. இந்த புத்தகம் எஙகு எப்படி கிடைக்கும் தயவுசெய்து தெரிவிக்கவும்

    ReplyDelete
  4. இந்த எஸ் ஆர் கே யைத்தான் ஜெயகாந்தன் தனது அரசியல்/இலக்கிய குருவாகப் போற்றி வந்தார். இவர் ஒருவரிடம் மட்டும்தான் கொஞ்சம் அடக்கிப் பேசுவார்.

    ReplyDelete
  5. எஸ் ஆர் கே யின் கம்பனும் மில்டனும் ஒப்பிலக்கிய ஆராய்ச்சிக்கு ஒரு முன்னோடி.

    ReplyDelete