Friday, May 16, 2014

சொர்ண முத்துக் குமாரி

”ஸாரி சார்”
     திருநெல்வேலி பேருந்து நிலையம் அருகே சாந்தி அல்வாக்கடைவாசலில் “நூறு அல்வா, திங்க, காக்கிலோ பார்ஸல்” என்ற குரல்களுக்கு இடையே., வாழையிலையில் வழுக்கிக் கொண்டிருந்த அல்வாத் துண்டை வாயிலிட்டு, கையில் பளபளத்த நெய்யை ’பச்சக்’ என என் முன்கைகளில் இடமாற்றிவிட்டு ,இளித்த ஆளை எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தேன்.
     “கூட்டம் தள்ளிட்டு..கேட்டியளா.வேணும்னு செய்யலே” என்றார் மேலும் சாய்ந்தவாறே. சட்டென விலகி , வெளிவந்து,  கையை ஒரு துண்டு பேப்பரால் துடைத்துக் கொண்டிருக்கையிலே அவள் கண்ணில் பட்டாள்.
     “நீங்க சொர்ண முத்துக் குமாரிதானே?” அவள் திகைத்துப் போய்த் திரும்பினாள். முகம் அறிந்ததும், வியப்பில் கையிலிருந்த பிக் ஷாப்பர் பைகளைத் ’தொப்’ என்று  கீழே வைத்துவிட்டு ”எய்யா, யாரைப் பாக்கேன்? நல்லாருக்கியாலே?” என்றாள்.கூட்டம் நெருக்க, நான் பைகளை எடுத்துக் கொள்ள,  அல்வாக்கடையின் அடுத்திருந்தும் ஒரு மனிதனும் தவறிப்போய்க்கூட நுழைந்துவிடாத சைவசித்தாந்த நூல் பதிப்புக் கழகத்தின் புத்தக விற்பனைக் கடை வாசலில் தள்ளி நின்றோம்.
     சொர்ணா என்னோடு பள்ளியில் படித்தவள். முதல் ராங்க் எடுப்பதிலிருந்து, பேச்சுப்போட்டி வரை, அவள்தான் அனைத்திலும் வருவாள். ஏழாம் வகுப்பிலிருந்து பெண்கள் வேறு வகுப்பில் வைக்கப்பட்டனர். அப்போதுதான் என் வகுப்பிலிருந்து அவள் பிரிந்தாள்.
     “லே, முப்பது வருசமிருக்குமா பாத்து? எங்கிட்டிருக்கே?” என்றாள் வியப்பு அடங்காமல். RmKV  என்று பெரும் கடைகளைப் பைகள் பறைசாற்றினாலும், அவள் கழுத்திலிருந்த அழுக்கேறிய மஞ்சள் கொடியும், ஓரிரு கண்ணாடி வளையல்களும், அவள் நிதி நிலையைப் பறைசாற்றின. “ அக்கா மவ முடியிறக்கம்,. அதான் ஊருக்கு வந்திருக்கேன், சொர்ணா. பம்பாயில இருக்கேன். நீ எப்படியிருக்கே?”
     “எனக்கென்னா? இருக்கேன். அவுக கடை வச்சு நசிச்சுப் போச்சி. இப்ப பெங்களூரு பக்கம் எதோ வீட்டு வளாகத்துல செக்யூரிட்டியா இருக்காக. சரி, ஒம்பொஞ்சாதி எங்க? காங்கலயே? வரலியோ?”
     “வீட்டுல இருக்கா. நான் இங்கிட்டு பாளயங்கோட்டை  வரப் போயிட்டு இப்பத்தான் வாறன். தூத்துக்குடி பஸ் இங்கிட்டு நிக்கும்லா? ” கேட்டதில் அவள் முகம் சட்டென மாறியது.
     “பாளையில   யாரு இருக்காங்க ஒனக்கு?”
     “அங்கிட்டு  ஒரு ஆளை” பேர் தவிர்த்தேன். “அத விடு.   நீ பாளைலதான இருந்தே? இப்பவும் அங்கிட்டுத்தானா? வாய்க்காப் பக்கமால்லா முந்தி ஒங்க வீடு இருந்திச்சி,என்ன?”
     “இப்பம் ஊசிகோபுரம் தாண்டி உள்ளாற இருக்கம்” என்றாள் சுரத்தில்லாமல். இவளுக்கு அவனைத் தெரிந்திருக்குமா? கேட்டுப் பார்த்துவிடுவோம் எதற்கும்.
     “ஒனக்கு குமாரைத் தெரியுமா? ஊசி கோபுரத்துப் பக்கந்தான் வீடு அவிங்களுக்கு. அவ தங்கச்சி வள்ளி-ன்னு நம்ம கிளாஸுல இருந்தா. ஒனக்கு அப்பெல்லாம் பெரிய ஃப்ரெண்டுல்லா அவ?” நினைவுபடுத்த சீண்டினேன். வள்ளியின் வனப்பான உடல் வாகிற்கு எட்டம் கிளாஸ் பையன்கள் ஜொள்ளு விட்டிருந்த காலம் அது. குமாரை நான் தேடுவதற்குக் காரணம் இருந்தது.
     அவள் குனிந்து தன் பைகளை எடுத்துக்கொண்டு விறுவிறுவென அருகிலிருந்த ஒரு ஓட்டலுக்கு நடந்தாள். சற்றே திகைப்புடன் அவளைத் தொடர்ந்தேன்.
     குமார் மும்பையில்தான் எனக்குப் பரியச்சமானான். நான் இண்டர்வியூ சென்ற காம்பெடிஷன் கம்பெனி ஒன்றில் அக்கவுண்ட்ஸில்  இருந்தான். சந்தித்தபோது, பாளையங்கோட்டை சொந்த ஊர் என்றதில் பாசம் மிகுந்து ஊர் விசயங்களைப் பேசி நண்பனாகி விட்டான். அவன் தங்கைதான் என் வகுப்பில் படித்த வள்ளிஎன்பது தெரிந்ததும் எச்சரிக்கையானேன். வள்ளிக்கு தப்புத் தப்பான தமிழில் லூர்து எழுதிய காதல் கடிதத்தை, அவளது ப்ளாஸ்டிக் புத்தகக் கூடையில் வைத்தது நான்தான் என்பதும், சில்வியா டீச்சர் அதற்கு ஆரோக்கியசாமியைப் பிரம்பால் பின்னி எடுத்ததும் அவனுக்குத் தெரியாததால், நானும் சொல்லவில்லை.
     திடீரென ஒரு நாள் அவன் போனில் அழைத்தான். “அர்ஜெண்ட்டா ஊருக்குப் போணும். அம்மாக்கு சொகமில்ல. பத்தாயிரம் தரியா? ஒரு மாசத்துல திருப்பிருவேன்” வள்ளியின் அம்மா என்ற குற்ற உணர்வால் பத்தாயிரத்தை அவனுக்குக் கொடுத்தேன். ஊருக்குப் போனவன் பல மாதங்களாகத் தொடர்பில்லை. அவன் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டபின் அவன்  ஆபிஸுக்கு நேராகச் சென்றேன். ” குமார்? அவன் ராஜினாமா பண்ணிட்டுப் போயிட்டானே? மஸ்கட் போறதாச் சொன்னான்”
     பத்தாயிரம் போனதை மறந்திருந்தேன். இடையில் ஒருவன் குமார் பாளையங் கோட்டைக்குத் திரும்பியிருப்பதாகவும், அங்கு ஊசிகோபுரம் அருகே ஒரு பெரிய பங்களாவில் வசிப்பதாகவும்  சொன்னதன் அடிப்படையில் இங்கு வந்து பார்த்தால் அவன் இல்லை, அலுவலக டூர் போயிருக்கிறான் என்கிறார்கள், இந்த கேணச்சி சொர்ணாவும் சொல்லாமல் எங்கோ ஓடுகிறாள்.
     ஓட்டலில். “ரெண்டு காபி. சக்கரை போடாம ஒண்ணு” என்று ஆர்டர் கொடுத்து, வெயிட்டரை அனுப்பி விட்டு என்னை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்கள் நிறைந்திருந்தன.
     “நீ சொல்ற குமாரை எனக்கு நல்லாத் தெரியும். ஒங்கிட்ட பணம் வாங்கியிருந்தானா?”
     “ஆமா” வியப்புடன் ஏறிட்டேன்.
     “மறந்திரு, கேட்டியா? நிறையப் பேருகிட்ட இப்படி பைசா வாங்கி ஏமாத்தியிருக்கான். கேட்டா, ’உன்னைப் இதுக்கு முன்னாடி பாத்ததே இல்லே’ம்பான். அரசியல்வாதிங்க, லோக்கல் ரவுடின்னு அவனுக்கு பலம் , வீச்சு ஜாஸ்தி. ஒழுங்கா ஊரு போய்ச்சேரு, வெளங்கா?”
     “சொர்ணா, இதெல்லாம் உனக்குத் தெரியும்?”
     “நான் அவங்கூட சின்ன வயசுல ஓடிப்போனேன்.”
     திகைப்பில் வாயைத் திறந்தேன். அவள் தொடர்ந்தாள் “ கெட்ட நேரம், கெட்ட புத்திம்பாங்கள்லா? அதான்.  அவனோட ஒரு விடிகாலேல கிளம்பிட்டென். மும்பையில ரெண்டு மாசம் இருந்தோம். அவங்க அப்பா ஆட்கள் பிடிச்சுட்டாங்க. என்னிய எங்க வூட்ல விட்டுட்டு ‘ இவ இனிமே அவனப் பாத்தா.. கொன்னுருவோம்”ன்னாங்க. அப்பா அந்த அதிர்ச்சியிலேயே போயிட்டாரு. “ காபி வரவே நிறுத்தினாள். வெயிட்டர் போகவும் தொடர்ந்தாள்.
     “ இந்த ஊர்ல ஒருத்தி ஓடிப்போனா , பொறந்த பிள்ளைக்குக் கூடத் தெரிஞ்சுபோவும். எங்க சாதியில என்னைக் கட்ட ஆளு இதுனால கிடைக்கல., கடைசியில, மிலிடரில இருந்த மாமாக்கு ரெண்டாந்தாரமா கட்டி வச்சாங்க. அவரு ஆஸ்த்துமா, குடி… என் விதி-ன்னு வையி.”
     “குமார் என்ன சொன்னான்?”
     “தாழ்ந்த சாதிப் பொண்ணயெல்லாம் கட்டாதல’-ன்னு மிரட்டி , அவங்க ஜாதியிலேயே ஒரு பொண்ண கட்டி வச்சாங்க..அவகூட இருந்தா, மாமனார் பிசினெஸ பாத்துகிட்டு சொகமாயிருக்கலாம்னு அவனுக்கு புரிஞ்சி போச்சி . மாறிட்டான். இப்ப அவன் காரு, பங்களான்னு சொகமாயிருக்கான். “ காபியை அவசரமாகக் குடித்தாள்.
     “எப்பவாச்சும் தெருவுல அவனப் பார்ப்பேன் பாத்துக்க. யாரோ, எவளோன்னு கண்டுக்காத மாரி போவான். இவனாலதான நான் சீரழிஞ்சேன்?ன்னு ஆத்திரமா வரும். என் பீத்தப் புத்தி. என்னைத்தான் செருப்பால அடிக்கணும்.” அவள் குரல் பொங்கியது. சிரமப்பட்டு அடக்கினாள்.
     “என் நகை பத்து பவுனு, அவங்கிட்ட இருந்திச்சி. இதுவர திருப்பித் தரலை.கேக்கப் போனேன்.. தெருவே நார்ற மாதிரி திட்டி விரட்டினாங்க.  நான் இருக்கிற நிலமை தெரியும் அவனுக்கு. தெரியாத மாதிரி நடிக்கான். சாதி , சமூகம் எல்லாம் அவன் கண்ண மறைச்சிட்டு. நாளைக்கே நான் செத்தேன்னா, யார் பொணமோ எரியுதுன்னு கடந்து போவான் பாத்துக்க. அதான் அவன் புத்தி. நீ போயி அவமானப்பட வேண்டாம். ஒம்பணத்த மறந்திரு”
     எழுந்தாள். நான் மறுத்தும் கேளாமல், காபிக்கு பணம் செலுத்திவிட்டு, பைகளை எடுத்துக் கொண்டு நெல்லையின் நெரிசலான தெருக்களில் காணாமல் போனாள்.
     ஓட்டலின் உள்ளே உறைந்து அமர்ந்திருந்தேன். காதல் என்பது சாதி, மதங்களைக் கடந்த்து என்பதெல்லாம் ஒரு மாயையோ? எத்தனை சொர்ண முத்துக் குமாரிகள் இன்னும் இருக்கிறார்கள்?. அவர்களது வெம்மூச்சுக் காற்றில் இந்த காதல் பற்றி எரியட்டும். எவனுக்கு வேண்டும் இந்தக் காதல்?
     பல நூறுவருடங்களுக்கு முன் ஒரு சேரிப்பெண் தன்னைக் காதலித்த உயர்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவன் அலட்சியமாகத் தவிர்ப்பதைத் வெதும்பிப் போய்ச் சொல்கிறாள்.
”ஓர்ஊர் வாழ்கினும் சேரி வார்கிலார்.
சேரி வரகிலும் ஆர முயங்கார்’
ஏதிலார் சுடலை போலக்
காணக் கழிப மன்னே – நாண் அட்டு
வில்உமிண் கணையின் சென்று சேண் படவே”
-பாலை பாடிய பெருங்கடுங்கோ,  குறுந்தொகை
     ” என்னைக் காதலித்தவன் இதே ஊரில் வாழ்பவனாயிருந்தும் நான் வாழும் சேரிக்கு வரமாட்டான். இங்கு வந்தாலும், என்னைச் சேரமாட்டான். அயலார் சுடுகாட்டில் எதோ ஒரு பிணம் எரிவதைப் பார்த்துச் செல்பவருக்கு எப்படி ஒரு உணர்வும் வராதோ அதுபோல என்னைக் கண்டு செல்கிறான். பிற பெண்,  செல்வத்தில் அவன் கொண்ட, நல்லறிவு இழந்த வெட்கமற்ற காமம்,   வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு இலக்கைச் சேர்வதைப்போல அத்தீயவற்றையே சென்றடையட்டும். ”

1 comment:

  1. வித்தியாசமான வாசிப்பனுபவம்! உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன்! வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதவும்

    ReplyDelete