Saturday, May 21, 2005

விஜெய் டென்டுல்கர்- சில குறிப்புகள்

விஜெய் டென்டுல்கர்- சில குறிப்புகள்

இந்திய நாடக உலகில் நவீன நாடகங்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்களில் முக்கியமானவர் விஜெய் டென்டுல்கர்.மராத்தியிலும், இந்தியிலும் அவர் எழுதிய நாடகங்கள் நாடக உலகை ஒரு கலக்கு கலக்கின. ஐம்பது வருட சாதனையாக அவர் முப்பதுக்கும்மேற்பட்ட நாடகங்களையும், 23 ஓரங்க நாடகங்களையும் எழுதியிருக்கிறார். இது தவிர 11 குழந்தைகள் நாடகங்களையும் மராத்தியில் எழுதியுள்ள அவருக்கு பத்மபூஷன், சங்கீத நாடக அகாடமி ஃபெல்லோஷிப் தேடி வந்ததில் ஆச்சரியமில்லை.

மராத்தி நாடக உலகில் பெரும் புகழும் மரியாதையும் வழங்கப்பெற்ற டென்டுல்கர், பு.லெ. தேஷ்பாண்டேயின் சக கால படைப்பாளியாக இருந்ததில் , மராத்தி நாடகம் செழித்தது. துணிவாகவும் நேரடியாகவும் ஜொலிக்கும் கதாபாத்திரங்களைக் கொண்ட அவரது நாடகங்கள் சமூக எதிர்ப்பையும் சிலசமயங்களில் பெற்றன.
சாக்காராம் பைண்டர் ( Sakharam Binder) என்ற நாடகம் 1974ல் முதன்முறையாக அரங்கேற்றப்பட்டதும், இந்திய அரசால் தடை செய்யப்பட்டது.நாடகக் கருவும், பேசப்பட்ட மொழியும் அன்று அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அமெரிக்கா "விஜெய் டென்டுல்கர் விழா" என 2004-ல் அவரது படைப்புகளை மேடையேற்றி கெளரவித்தது. இதனை இந்திய அமெரிக்க கலைக்குழு ( Indo American Art Council) மற்றும் South Asian Theater Group,American Theater Grop, Queeen's Museum of Art, the Pan Asian Repoertory, The Play Company போன்ற குழுக்கள் செப்டம்பர் 04- நவம்பர் 04 வரை அமெரிக்காவில் பல இடங்களில் நடத்தி சிறப்பித்தன.
விஜெய் டென்Tடுல்கரை இந்தியாவில் விட பிற நாடுகளில் அதிகம் தெரிந்து வைத்திருக்கின்றனர். முக்கிய காரணம், அவரது நாடகங்களை பிற இந்திய மொழிகளில் உருவாக்கப் பலரும் தயக்கம் காட்டியமையே.

அவரது காதம்பரி II என்ற சமீபத்திய நாடகத்திற்கு அண்மையில் ப்ரியதர்ஷினி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. தனது நாடகங்களுக்கு தற்போது கிடைத்துவரும் சிறப்பான இயக்கங்களுக்கும், நாடக நிகழ்வுகளின் தரத்திற்கும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் இம்முன்னோடி,"இவ்வாறான சிரத்தை காணப்பெறும்போது, 50 வருடங்களாக நாடகங்கள் இயற்றிவரும் என்போன்றவர்களும் மேலும் ஊக்குவிக்கப்படுவது ஆச்சரியமில்லை" என்கிறார் மனநிறைவோடு.

தமிழில் அவரது நாடகங்களை எவரேனும் எடுத்துச் செயலாற்றினால் , தமிழுலகம் வி.சி. காண்டேகர் என்னும் எழுத்தாளரை முன்பு அறிந்ததோடு தேங்கி நிற்காமல், பு.லெ. தேஷ்பாண்டே என்னும் பெரும் நாடக ஆசிரியரை பெயரளவில் அறிந்ததோடு நிற்காமல்,நவீன நாடகங்களில் புது ஓட்டத்தோடு பொலிவு பெறும்.

Saturday, May 14, 2005

ஏட்டில் எழுதாக் கவிதைகள்-4

தாலாட்டில் தந்தைப்பேறு

தாய்மை எவ்வளவுக்கு முக்கியமாக மதிக்கப்படுகிறதோ, அத்தனைக்கு, மறைமுகமாக தந்தைப்பேறும் சமூகத்தில் கவனிக்கப்படுகிறது. இதற்காகவே, குழந்தைப்பேறில்லா மனிதன் பல புண்ணியம் சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறான். அவனது பரிவு கண்டு மனைவி, தன் கணவனின் அரும்பணிகளை ,தாலாட்டில் தன் பிள்ளைக்குச் சொல்வது போல, தன் பாராட்டையும் ,நன்றியையும் தெரிவிக்கிறாள்.
"மைந்தன் பெற வேண்டுமென்று
வருந்திய பாண்டியர்கள்
சாலைகள் போட்டுவைப்பார்
சத்திரம் கட்டிவைப்பார்"
எனத் தொடங்கிய வரிகளில்,அறப்பணிகளுக்கான காரணம் தெளிவாகச் சொல்லப்படுகிறது.
"நெல்லியிலை பிடுங்கி
நேர்த்தியாய் தொன்னை தைத்துப்
பசியறிந்து அன்னமிடும்
பாண்டியர்."
எனப் புகழ்பவள் ,அடுத்த வரிகளில் அவரது அறச்செயலின் ஈடுபாட்டைப் பாடுகிறாள் - ஒரு சிறு கதை மூலம்.
ஊரில் கடும்பஞ்சம். மக்கள் வெளியூர்களுக்கு புலம்பெயர்கின்றனர். வருபவர்க்கெல்லாம் சோறிடுகிறான் தலைவன். அத்தோடு நிற்கவில்லை. பசித்தவர்களைத் தேடி, விளக்கோடு செல்கிறான். உணவின்றி உறங்குபவர்களை,அவர் முகம்பார்த்து, எழுப்பி உணவிடுகிறான். இச்செயலை
"கொப்பரையில் சோறும்
குடத்தில் இளநீரும்
பந்தம் கொளுத்திவந்து
பசித்தார் முகம்பார்த்து
அந்த நகர்ச் சோலையிலே
அமுதிடுவார்"
எனப்பாடுகிறாள் தாய்.தந்தையின் அறச்செயலைக் கேட்டு உறங்குகிறது குழந்தை.
"சீக்கிரம் தூங்கலே... பூச்சாண்டிகிட்ட பிடிச்சுக் கொடுத்திருவேன்" என மிரட்டி குழந்தைகளைத் தூங்கவைக்கும் தாய்மார்கள் படிக்கவேண்டிய வரிகள் இவை.

கடவுளுக்கு மாலை சார்த்துகிறான் தலைவன்.மிக்க கவனத்துடன் பூக்களைப் பறித்து மாலை செய்கிறான். அதில் பூக்களை எவ்வாறு கொய்கிறானென்பதை விவரிக்கிறாள்
"கையாலே பூவெடுத்தா
காம்பழுகிப் போகுமின்னு..
விரலாலே பூவெடுத்தா
வேரழுகிப் போகிமின்னு
பொன்னூசி கொண்டு
பூத்த மலரெடுத்து
வெள்ளூசி கொண்டு
வெடித்தமலரெடுத்து
செடிசெடியாய்ப் பூவெடுத்து
செண்டு செண்டாய் மாலைகட்டி"
சார்த்துகிறானாம் தலைவன். அவனது கவனத்தையும் சிரத்தையையும் உறங்கும் குழந்தைக்குச் சொல்லிக்கொடுக்கிறாள்.

"தாமரையின் நூலெடுத்து
தனிப்பசுவின் நெய்யுருக்கி
போட்டாரே நெய்விளக்கு -உங்கய்யா ஒரு
புத்திரனே வேணுமின்னு"

தன் தந்தையின் அறச்செயல்களையும், அவர் பட்ட பாடுகளையும் கேட்டு உறங்குகிறது குழவி. இதல்லவோ பிற்காலத்தில் "மகன் தந்தைக்குச் செய்யும் உதவி" யை செவ்வனே செய்ய உந்துதலாகும்?. இவ்வாறு தான் பிறந்த வரலாறையும், தன்பெற்றோர் செய்த நற்செயல்களையும் கேட்டு வளரும் குழந்தைகள் இருந்த காலத்தில் கண்டிப்பாக "முதியோர் இல்லம்" தேவைப்படவில்லை.

Thursday, May 12, 2005

ஏட்டில் எழுதாக் கவிதைகள் -3

பிள்ளைக்கலி - பெண்ணின் மேலான சமூக அழுத்தங்கள்.

பெண்கள் தாய்மையில் முழுமையடைவதாக சமூகம் எண்ணுகிறது. இது தலைமுறை வளர்ச்சிக்காக சமூகத்தின் அக்கறை என்னுமளவில் ஆரோக்கியமான எண்ணம். ஆயின் தாய்மையடையும் வரை , மணமாண பெண் ஒரு நெரிசலில் உட்படுத்தப்படுகிறாள். "மலடி" என்னும் அடைமொழி, அவள் நினைக்கமுடியாத பயங்கரமான சமூக அங்கீகாரம். இதற்காக அவள் பல வழிமுறைகளையும், சம்பிரதாயங்களையும் கைக்கொள்கிறாள். அவ்வாறான திணறல்களை அவள் வெளிப்படுத்தப் பாடல்களை நாடுகிறாள். அவளது மேலான சமூக அழுத்தங்களைப் பாருங்கள்,




"மலடி மலடியென்னே
வையத்தார் ஏசாதே
மலடியென்ற பெயரை
மாற்றிவைக்க வந்த கண்ணோ?

இருசி இருசியென்றே -என் அப்பா!
என்னைத் தேசத்தார் ஏசாதே
இருசியென்ற பெயரை
எடுத்துதைக்க வந்த கண்ணோ?

இத்தகைய அழுத்தங்களை போக்குவதற்காகவே பிள்ளைக்கலி தீர்க்கச்சொல்லி தெய்வங்களை வேண்டுகிறாள். சடங்குகளையும், விரதங்களையும் மேற்கொண்டு,உடல் வருத்தி மனவருத்தத்தைத் தவிர்க்கப் படாதபாடு படுகிறாள். எப்படியென்றால்,

"காணாக் கோவிலுக்கு
கற்பூரத் தீபமிட்டு
தூரத்துக் கோவிலுக்கு
சுடர்விளக்கு நேர்ந்தாளோ?"

"தை ஆறு மாசமா
தரைமொழுகிச் சாதமுண்ண
நிச்சயமா ஆறுமாசம்
நிலமொழுகிச் சாதமுண்ண
மாசமுடிவிலே மனமொடிஞ்சி நிக்கையிலே..."

"வெள்ளி முழுகி வெகுநாளாத் தவசிருந்து
ஊசி முனையிலே உனக்கே தவசிருந்தேன்"

"விளக்கிலிட்ட நெய்போலே நான் வெந்துருகி நிக்கையிலே"
என்னும் சொல்லில் பிள்ளைக்காக ஏங்கும் ஒரு பெண்ணின் வேதனையடர்ந்த ,எதிர்பார்ப்புச் சுமைகளுடன் நம் நோக்கி நீள்வது நிஜம்.
பிள்ளையில்லாத பெண்களை நமது சமுகம் எவ்வாறு நடத்துகிறது என்பதின் அழுத்தத்தை இந்நாட்டுப்புறப் பெண்கள் தாலாட்டிலேயே சொல்லிவைத்தது, நமது சசமுதாயத்தில் பெண்களைக் குறித்தான கண்ணோட்டம் தெளிவாகிறது.

Sunday, May 08, 2005

ஏட்டில் எழுதாக் கவிதைகள் -2

ஏட்டில் எழுதாக் கவிதைகள் -2

கடவுள் துதி

பெரும்பாலான பாடல்கள் மதுரை மாவட்டத்தில் கம்பம்பள்ளத்தாக்குப் பகுதியில் சேகரிக்கப்பட்டவை.சுருளியாறு, மலைப்பகுதி, முல்லை நிலப்பகுதி,வேளாண்மையாகும் மருதநிலப்பகுதியென நிலப்பகுதிக்கான தெய்வங்கள் வணங்கப்பட்டன. கணபதியும்,முருகனாரும், அம்மனும், விஷ்ணுவும் வணங்கப்படுவதில் இப்பாடல்களின் பரவல்களை உணரலாம்.

"முந்திமுந்தி விநாயகரே
முருகா சரஸ்வதியே
கந்தனுக்கு முன்பிறந்த
கணபதியே முன் நடவாய்" ( பக் 32)

"மந்தையிலே மாரியாயி
மலைமேல மாயவரே
இந்திரரே சூரியரே
இப்ப வரவேணுமய்யா" ( பக் 32)
இப்பாடல் "தண்ணீர் தண்ணீர்" படத்தில் ஒரு பாடலில் வந்துள்ளது.

சுருளி மலைவளம் குறித்து இப்பாடல் சுருக்கமாகச் சொல்கிறது.
"இஞ்சி படருமலை
ஏலக்கா காய்க்குமலை
மஞ்சி படருமலை
மகத்தான சுருளிமலை"

பொதுவாக நாட்டுப்புறப்பாடல்கள் எளிமையானவை. நேராக விசயத்திற்கு வந்துவிடுபவை. எளிய பதங்கள், எளிய இசை. ஆயின் மிக மிக நுட்பமான வார்த்தைகளில் அவற்றின் ரத்தினச் சுருக்கமான பொருள்கள் பொதிந்து வைக்கப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது.
"எட்டடிக் குச்சுக்குள்ளே- சுப்பைய்யா
எப்படி நானிருப்பேன்
தங்கமயிலேறி-சுப்பைய்யா
வந்திட வேணுமைய்யா"
எட்டடிக் குச்சு என்பது ஒரு மாளிகையல்ல. எண்சாண் உடம்பு எனக் கொள்க. சுப்பைய்யா என்பது சுப்பிரமணிய கடவுளைக் குறிக்கிறது.

"போலீஸ்காரன்மகள்" படத்தில் வரும்
" எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த
என் தலைவன் விட்டுவிட்டுச் சென்றானடி" என்ற பாடலின் உந்துதல் இங்கிருக்கிறது.

"ஆறும் பெரியாறு- சுப்பய்யா
ஆறுமுகனாறு
இந்த ஆறு கடந்து -சுப்பய்யா
எப்படி நான் வருவேன்" (பக் 40)

இதில் ஆறு என்பதற்கு வழி எனப் பொருள்கொண்டு பார்க்கையில், பக்தியின் உச்ச நிலை புலப்படுகிறது.

நாட்டுப்புறப்பாடல்கள் அனைத்தும் எளிமையெனவும் நேராகவே பொருள்கொள்ளலாம் எனவும் நாம் இதுகாறும் நினைத்திருந்ததற்கு நல்ல பாடம்! மிகக் கூர்மையான, பெரும்புலமைகொண்ட புலவர்களின் பாடல்களை மட்டுமே இதுவரை இவ்வாறு அலசியிருந்தவர்கள், கொஞ்சம் நாட்டுப்புறப்பாடல்களை அக்கண்ணோட்டத்தில் காண்பின் பல கவிதை விந்தைகள் வெளிவரும்.

Saturday, May 07, 2005

ஏட்டில் எழுதாக் கவிதைகள் -1

ஏட்டில் எழுதாக் கவிதைகள் -1

சில வாரங்களுக்கு முன்பு 1947 முதல் நாட்டுப்புறப்பாடல்களைத் திரட்டிய அமரர் திரு. அன்னகாமு அவர்களின் முயற்சி குறித்து எழுதியிருந்தேன். "ஏட்டில் எழுதாக் கவிதைகள்" என அவரது திரட்டு வெளியிடப்பட்டது. மிகக்குறைவாகவே பதிக்கப்பட்ட அந்நூலினைப் படித்த அனுபவம் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்நூலின் தோற்றுவாய்ப் பாடல் நாம் வெகுவாக அறிந்த திரைப்படப்பாடலாக வெளிவந்தது.
"பாடறியேன், படிப்பறியேன்,
பள்ளிக்கூடம் தானறியேன்.."

"நாட்டுப்புறப்பாடலென்னும் பாற்கடலை நக்கிக்குடிக்கத் துணிந்த பூனையின் கதை" இது என ஆசிரியர் அன்னகாமு தன் முயற்சி பற்றிக் கூறுகிறார். அவருடன் இருந்து நாட்டுப்புறப்பாடல்களைத் திரட்டிய மாணவர்கள் அவரது அவையடக்கம், மென்மையான பண்பு முதலியவற்றை இன்னும் நினைவுகூறுகின்றனர்.
இந்நூலிற்கு சிறப்புரை திரு.கிவா.ஜ தந்திருக்க, தலையுரை திரு. அவினாசிலிங்கம் தந்திருக்கிறார்.

திரட்டிய பாடல்களை பதினாறு அத்தியாயங்களாக வகுக்கப்பட்டிருக்கின்றன. பாடல்களின் பொருள் வகையில் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. கடவுள் துதியிலிருந்து, மாழை,நாட்டுச்சிறப்பு, பிறப்பு வளர்ப்பு, திருமணம், தொழிற்பாட்டு, திருமணம், குழந்தைகளின் விளையாட்டு, நவீனங்கள், களியாட்டங்கள், கதைப்பாட்டுக்கள், சோதனைகள், வேதாந்தப்பாடல்கள், ஆதிவாசிப்பாடல்கள் , முடிவில் மங்களம் என வகுக்கப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு வகைப்பாடலுக்கும், ஆசிரியர் தனது விளக்கங்களையும், அப்பாடலின் தோற்றக்கதையினையும் இயன்றவரை வழங்கியிருக்கிறார்.
நாட்டுப்புறப்பாடல்கள் /கருப்பொருளை ஏதோவொரு நிகழ்வின் அடிப்படையிலும் சொல்ல முயற்சிப்பதால், தோற்றப்பின்னணி அறியப்படின்,பாட்டின் அறிதலின் சுவை கூடுகிறது.

இப்பாடல்களைக் குறித்து மேலும் காண்போம்

Tuesday, May 03, 2005

மரவெட்டு விழா

மரவெட்டு விழா
Grow trees,Chop cars என அலறுகிறது ஒரு விளம்பரப் பலகை, மும்பையின் மேற்கத்திய விரைவுச்
சாலையின் ஓரம். காரணமில்லாமல் இல்லை.

மும்பையின் மேற்குவிரைவுச் சாலை புறநகர்ப்பகுதியில் அழகன மரங்களின் வரிசை இருபுறமும்
கொண்டது. சாலையை விரிவுபடுத்தவேண்டி, மரங்களை சகட்டுமேனிக்கு வெட்டிச் சாய்க்கிறார்கள்.
மரங்களை மீண்டும் நடும் முயற்சியில் செய்வதாகத் தெரியவில்லை. ஜூன் மாதம் பருவமழை
தொடங்குமுன்னே சாலையின் விரிவாக்கப்பணிகளை முடிக்கவேண்டிய அவசரம் மட்டுமே தெரிகிறது.

இயற்கைச் சூழல் பெரிதும் பாதிக்குமென பல தன்னார்வலக் குழுக்கள் கொடிபிடித்தும் பயனில்லை.
எதிர்ப்பு மிகக் குறைந்து பிசுபிசுத்துப்போனது. இதே போல இரு மழைக்காட்டு மரங்கள் , மும்பை
நகருள், சாலையின் நடுவே இருந்தனவற்றை வெட்ட முயன்றபோது எழுந்த எதிர்ப்பு, பல மரங்கள்
வெட்டப்படும்போது இல்லை. மும்பை நகருள் நடப்பதென்றால் ஒரு வித கவனிப்பும்,
நகர்ப்புறமென்றால் ஒருவித கவனிப்புமாக தன்னார்வலக் குழுக்களும் செயல்படுவது பெரும் அவலம்.
இங்கும் மழைக்காட்டு மரங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன என்கிறது டைம்ஸ் ஆஃப்
இந்தியா(புகைப்பட ஆதாரங்களுடன்).
சாலை விரிவாக்கம், முன்னேற்றம் வேண்டியதுதான். ஆயின் அது எந்த விலை கொடுக்கப்பட்டு
பெறப்படுகிறது என்பதையும் நோக்கவேண்டும். இந்த மரங்களை சாலையோரம் மீண்டும் நடுவதற்கும்
பராமரிப்பதற்கும் தனியார் நிறுவனங்கள் முன்வரலாம்.
மும்பையின் மர அடர்வு குறைந்துகொண்டே வருகிறது எனக் கவலைப்படுகின்றனர் mமும்பை
சுற்றுப்புறசூழல் சங்கத்தினர். அவர்களுடனாவது கலந்து ஆலோசித்து, தக்க அனுபவமும், திறமையும்
வாய்ந்த நிறுவனங்களிடம், மரம் பெயர்த்து மீண்டும் நடுவதின் கான்டிராக்ட் அளித்திருக்கலாம்.
ராவோடு ராவாக மரங்கள் சாய்க்கப்பட்ட மர்மம் புரிபடவில்லை.
முனிசிபாலிடி அலுவலர்கள் என்றேனும் சுற்றுப்புறச் சூழல் மாசுபடல் குறைப்பு போன்றவற்றில்
அடிப்படை அறிவு பெறுவரா? என்ற ஆதங்கத்துடன் நான் அனுதினமும் செல்லும்
விரைவுச்சாலையின் இடப்புறம் தெரியும் மரங்களைப்பார்க்கிறேன்.
கடைசி தடவையாக(?)

Monday, May 02, 2005

கோடை - கவிதை

கோடை
------

தேனீர்க்கடை பெஞ்சுகளை
நனைத்துச் சொட்டி, சாலையோரம்
சிறுகுட்டையாய்ச் சேர்ந்த நீர்
அந்நாளின் முதல் பேருந்தின் பின் சக்கரத்தில்
சகதியாய்ச் சிதறிப் பயணிக்க,

நாக்கில் நீர்சொட்டி,
நக்கிக் குடிக்கவந்த
கறுப்பு நாய்
தொங்கிய முலைகள்
கோபமாய் ஊசலாட,
பேருந்தின் பின்னோடி
எழுப்பிய குரைப்புகள்.

மின்வெட்டில் தயங்கி நின்ற
மின்விசிறிகளின்
அழுத்திய மொளனத்தில்
மூடிய கதவுகளினின்றும்
மிதந்து நீளும்
வியர்வைப்
பெருமூச்சுகள்..

இவைபோதும்
கோடைவந்ததென்று
அறிவிக்க.
சூரிய உதயங்களின் அவசியமேயின்றி.

Sunday, May 01, 2005

HIV-யும் சமூக விழிப்புணர்சியும்

HIV-யும் சமூக விழிப்புணர்சியும்

அண்மையில் கேரளாவில் , எயிட்ஸ்-ஆல் இறந்த மனிதர்களுக்கு சர்ச்சுகளில் இறுதி வழிபாடும் , சாதாரண சவ அடக்க உரிமையும் மறுக்கப்பட்டது என்னும் செய்தி பெரிதாக வந்திருந்த பொழுதும் ,அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

100% படிப்பறிவு பெற்ற கேரளத்திலேயே இந்த நிலையென்றால், சமூக விழிப்புணர்விற்கும், படிப்பறிவிற்கும் உள்ள தொடர்பு ஆரம்பகால நிலையிலேயே இன்னும் உள்ளது என்றே தோன்றுகிறது. சமூகக் கட்டுப்பாடுகளை புரட்சியால் மீற எத்தனித்த கேரளம் இன்று, ஒரு நோயாளிக்கு அவன் மனிதன் என்னும் அடிப்படை உரிமை மறுதலிக்கப்படும்போது எதிர்ப்பு தெரிவிக்காதது மிக்க ஏமாற்றமளிக்கிறது.

எனது இல்லத்திலிருந்து இரு கி.மீ தொலைவில் இருக்கிற மோட்டார் ரிப்பேர் கடையில் வேலை செய்து வந்த மார்வாடி இளைஞனுக்கு HIV positve என தெரியவர, முதலாளி அவனது தந்தையை ராஜஸ்தானிலிருந்து கூப்பிட்டனுப்பினார். மிகவும் பின் தங்கிய கிராம மனிதனார அவர், மும்பையில் வந்ததும் பலர் ' இவனை இங்கேயே எப்படியோ பிழைக்கட்டும் என விட்டுவிட்டுப் போங்கள்" என அறிவுறுத்தினர். மனிதர் குனிந்த தலை நிமிராமல் இருந்துவிட்டு இறுதியில் மகனை அழைத்துப்போனார். அவர்கள் சமூக ஆட்கள் எதிர்த்துக் கேட்டதில் ஒரே வார்த்தையில் பதில் சொன்னார் " இன்நோய் வருமுன்னேயே இவன் எனது மகன்."
மிகப் பின் தங்கிய கிராமத்தில் அவர்கள் ஒதுக்கிவைக்கப் படும் சூழ்நிலை இருப்பினும், அவரது அரவணைப்பு, எயிட்ஸ் நோயாளிகளை விலக்கிவைக்கும் நமது சமூகத்திற்கு ஒரு பாடம்.

எவ்வளவுதான் விளம்பரம் செய்தாலும் நாம் எயிட்ஸ் என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டுவிட்டதைப் போல ஒதுங்குகிறோம். எத்தனை பேர் எயிட்ஸ் நோய் குறித்த விளம்பரங்களையும் , தகவல்களையும் கவனித்து உள்வாங்குகிறோம்? இது குறித்து பேசினாலே " வேற எதாவது சொல்லுங்க சார்" என்னும் பதில் வருகிறது.
அடிப்படையில் நமக்கு ஒரு எண்ணம்- ஏதோ நாம் படு புனிதமானவர்களென்றும், நமது சமூகத்தில் இதெல்லாம் சாத்தியமே இல்லையென்றும். எயிட்ஸ் நோயாளியென்பவன் நம்து சமூகத்தின் களங்கமெனவும், இருக்கவே கூடாதென்னும் புனிதப்படுத்தும் முயற்சியில் நமக்குப் பாத்தியதை இருக்கிறதெனவும் ஒரு purging &cleaning attitude எங்கிருந்தோ போலியாக வந்துவிடுகிறது. இது சமுதாயத்தைக் குறித்தும், செக்ஸ் குறித்தும் நாம் கொண்டுள்ள கறுப்புப் படிவங்கள். இதிலிருந்து சற்றே மாறுபட்டுப் பேசினால் முத்திரை குத்தப்படுகின்றனர்
" இத் தன்னார்வலக் குழுக்கள் புகழ் தேடி இவ்வாறு செய்கின்றன" அல்லது " இவனுக்கும் இருக்கிறதோ?" இதெல்லாம் படுசாதாரணமாகக் கேட்கப்படுகின்றன.

பஞ்சாப் போலீஸ் தனது படையில் HIV infected ஆக இருக்கும் காவலாளிகளை அடையாளம் கண்டபின், சற்றும் பெரிதுபடுத்தாமல், அடித்தளத்தில் பெருமளவில் பரிசோதனை செய்யச் உத்தரவிட முயற்சியெடுத்திருக்கிறது. பாராட்டப்படவேண்டிய செயல். அக்காவலாளிகள் விலக்கிவைக்கப் படவில்லை.

HIV மற்றும் AIDS குறித்து தடுப்புக் காப்புகள் அவசியம். எனினும், தாக்கப்பட்டவர்களை எவ்வாறு சமூகத்தில் நடத்தவேண்டும் என்பதிலும் நாம் கவனம் செலுத்தவேண்டும். இல்லையென்றால் மும்பையின் பிரபலமான மருத்துவமனைகளில் Hiv infected மனிதர்கள் அடுத்தடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள்.