Saturday, May 14, 2005

ஏட்டில் எழுதாக் கவிதைகள்-4

தாலாட்டில் தந்தைப்பேறு

தாய்மை எவ்வளவுக்கு முக்கியமாக மதிக்கப்படுகிறதோ, அத்தனைக்கு, மறைமுகமாக தந்தைப்பேறும் சமூகத்தில் கவனிக்கப்படுகிறது. இதற்காகவே, குழந்தைப்பேறில்லா மனிதன் பல புண்ணியம் சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறான். அவனது பரிவு கண்டு மனைவி, தன் கணவனின் அரும்பணிகளை ,தாலாட்டில் தன் பிள்ளைக்குச் சொல்வது போல, தன் பாராட்டையும் ,நன்றியையும் தெரிவிக்கிறாள்.
"மைந்தன் பெற வேண்டுமென்று
வருந்திய பாண்டியர்கள்
சாலைகள் போட்டுவைப்பார்
சத்திரம் கட்டிவைப்பார்"
எனத் தொடங்கிய வரிகளில்,அறப்பணிகளுக்கான காரணம் தெளிவாகச் சொல்லப்படுகிறது.
"நெல்லியிலை பிடுங்கி
நேர்த்தியாய் தொன்னை தைத்துப்
பசியறிந்து அன்னமிடும்
பாண்டியர்."
எனப் புகழ்பவள் ,அடுத்த வரிகளில் அவரது அறச்செயலின் ஈடுபாட்டைப் பாடுகிறாள் - ஒரு சிறு கதை மூலம்.
ஊரில் கடும்பஞ்சம். மக்கள் வெளியூர்களுக்கு புலம்பெயர்கின்றனர். வருபவர்க்கெல்லாம் சோறிடுகிறான் தலைவன். அத்தோடு நிற்கவில்லை. பசித்தவர்களைத் தேடி, விளக்கோடு செல்கிறான். உணவின்றி உறங்குபவர்களை,அவர் முகம்பார்த்து, எழுப்பி உணவிடுகிறான். இச்செயலை
"கொப்பரையில் சோறும்
குடத்தில் இளநீரும்
பந்தம் கொளுத்திவந்து
பசித்தார் முகம்பார்த்து
அந்த நகர்ச் சோலையிலே
அமுதிடுவார்"
எனப்பாடுகிறாள் தாய்.தந்தையின் அறச்செயலைக் கேட்டு உறங்குகிறது குழந்தை.
"சீக்கிரம் தூங்கலே... பூச்சாண்டிகிட்ட பிடிச்சுக் கொடுத்திருவேன்" என மிரட்டி குழந்தைகளைத் தூங்கவைக்கும் தாய்மார்கள் படிக்கவேண்டிய வரிகள் இவை.

கடவுளுக்கு மாலை சார்த்துகிறான் தலைவன்.மிக்க கவனத்துடன் பூக்களைப் பறித்து மாலை செய்கிறான். அதில் பூக்களை எவ்வாறு கொய்கிறானென்பதை விவரிக்கிறாள்
"கையாலே பூவெடுத்தா
காம்பழுகிப் போகுமின்னு..
விரலாலே பூவெடுத்தா
வேரழுகிப் போகிமின்னு
பொன்னூசி கொண்டு
பூத்த மலரெடுத்து
வெள்ளூசி கொண்டு
வெடித்தமலரெடுத்து
செடிசெடியாய்ப் பூவெடுத்து
செண்டு செண்டாய் மாலைகட்டி"
சார்த்துகிறானாம் தலைவன். அவனது கவனத்தையும் சிரத்தையையும் உறங்கும் குழந்தைக்குச் சொல்லிக்கொடுக்கிறாள்.

"தாமரையின் நூலெடுத்து
தனிப்பசுவின் நெய்யுருக்கி
போட்டாரே நெய்விளக்கு -உங்கய்யா ஒரு
புத்திரனே வேணுமின்னு"

தன் தந்தையின் அறச்செயல்களையும், அவர் பட்ட பாடுகளையும் கேட்டு உறங்குகிறது குழவி. இதல்லவோ பிற்காலத்தில் "மகன் தந்தைக்குச் செய்யும் உதவி" யை செவ்வனே செய்ய உந்துதலாகும்?. இவ்வாறு தான் பிறந்த வரலாறையும், தன்பெற்றோர் செய்த நற்செயல்களையும் கேட்டு வளரும் குழந்தைகள் இருந்த காலத்தில் கண்டிப்பாக "முதியோர் இல்லம்" தேவைப்படவில்லை.

No comments:

Post a Comment