Saturday, March 01, 2014

நாட்டுப்புறத் தினவு - கோவா




 வாஸ்கோ பஸ் நிலையத்தை நெருங்குமுன்பே மழை சிறிதே வெறித்திருந்தது.ஆட்டோவிலிருந்து இறங்கி பயணச்சீட்டு வாங்க நிற்கும்போது , முன்னேஇருந்தவர் தலையைச் சிலுப்ப , கண்ணில் நீர் தெறித்தது.
"மன்னிக்கவும். தெரியாமல் .." திரும்பிப் பார்த்தவரின் கண்களில் நிஜமாகவே மன்னிப்புக் கேட்கும் பாங்கு தெரிந்தது."பரவாயில்லை" என்றவன் புன்னகைத்தேன். என்னைக்கேட்காமலே எனக்கும் சேர்த்து
பயணச்சீட்டு எடுத்தவர், என்ன சொல்லியும் பணம் வாங்க மறுத்துவிட்டார்.
அது வாஸ்கோவிலிருந்து கிளம்பினால் பன்ஜிம் வரை நிற்காமல் போகும்
கடம்பா ட்ரான்ஸ்போர்ட்-டின் வேகப் பேருந்து. மினி பஸ் போல இருக்கும்
அந்த வண்டியில் , பயணச்சீட்டு வாங்கி ஏறிக்கொண்டபின், கதவு அடைக்கபடும். பன்ஜியில் போய்த்தான் நிற்கும். ஒரு மணிநேரப் பயணம் போவதே தெரியாது. அருகருகே அமர்ந்தோம்

"நான் சிரீஷ் காமத்" என அறிமுகப்படுத்திக்கொண்டார். "வாஸ்கோவில் கடை வைத்திருக்கிறேன். இரும்புக் கம்பிகள் ஏஜென்ஸி.பான்ஜியில் பெண் இருக்கிறாள். இன்று போய் அவள் வீட்டில் இருந்துவிட்டு நாளை வீடு திரும்புவேன். முளுகாமல் இருக்கிறாள்..." இரு நிமிடங்களில் வெகு சகஜமாகப்பேசவாரம்பித்துவிட்டார். முன்வழுக்கையில் பளபளத்த தலையும், எடுப்பானநாசியுமாய் ,சிரீஷ் , என்றோ பரோடாவில் பார்த்த ப்ரவீன் ஜெயின் என்ற நண்பரை நினைவுபடுத்தினார். சிலரைப் பார்த்ததும் பிடித்துவிடுகிறது. மனது, நாம் அறியாமலே, நமக்கு அறிமுகமானவரோடு தொடர்பு படுத்திப் பார்க்கிறது. சிரீஷ் அந்த ரகம்.

மழை மீண்டும் தொடங்கியது. சாலையோரம் புதுப்பசுமை மழையில் கனத்துதலைவணங்கி நின்றன. சாலை, புது மழை வெள்ளத்தில் லேசாகப் பளபளத்தது திட்டுத் திட்டாக. "சன்னல் கண்ணாடியை மூடிவிடுங்கள்" என்றேன். அவர் மூடியபின்னும், ஓட்டுனர்அருகேயிருந்த சன்னலிலிருந்து அடித்த சாரலில், தொடையில் பேண்ட்டைநனைத்தது.

"இந்த வருசம் நல்ல மழை. போனவருடம் நீங்கள் பார்த்திருக்கவேண்டும். மிகக்குறைவு. ஜுவாரி நதி பெருகவேயில்லை. மங்கேஷ் நாதர் அருளில் இன்னும்பெய்யட்டும்" காமத் பேசிக்கொண்டேயிருந்தார். பேருந்து வேகம் குறைந்து சாலையோரம் நின்றது. ஓட்டுனர் குதித்து இறங்கினார்.
"ப்ரேக் சரியாக வேலைசெய்யவில்லை. வண்டி மேலே போகாது. அடுத்தடுத்துவரும் வண்டியில் ஏறிக்கொள்ளுங்கள்" என்றவரை சரமரியாக
வண்டியிலிருந்தவர்கள் திட்டிக்கொண்டே இறங்கினர்.
பலரும் குடைகளை விரிக்க, நிற்க இடம் கூடுதலாகத் தேவைப்பட்டது. அதிக தூரம் செல்லவும் மனமில்லை. பேருந்து முன்னேயே நிறுத்தி ஆட்களை ஏற்றிக்கொண்டுவிட்டால்நெரிசலில் குடைகள் இடித்துக்கொள்ள, நான் , காமத்தின் குடைக்குள் நின்றேன்.முதலில் வந்த பேருந்தில் அடித்துக்கொண்டு பலரும் ஏற முயற்சிக்க, சிரீஷ் என்னைத் தடுத்தார்." அடுத்த வண்டியில் போகலாம். நெரிசல் அதிகம் இதில்". கோவாவில், மக்கள் மெதுவாகவே எதையும் செய்யும் பழக்கம்.. மும்பையில் அடித்துக்கொண்டு ஓடும்என்னால் இதைப் பெரும்பாலும் சீரணிக்க முடிவதில்லை. சிரீஷ் சொன்னதுக்காக நின்றேன்.
அடுத்த வண்டி, சிரீஷ் சொன்னபடியே காலியாக வந்தது. ஏறி அமர்ந்ததும்,
என்னைப்பார்த்து சிரித்தார் " சொன்னேன் பார்த்தியா" என்படு போல. மழை
நிற்பதாகத் தெரியவில்லை.

"இங்கே கொங்கணி , மராட்டி தவிர சில கிராமங்களில் பேசும் மொழி
வித்யாசமாக இருக்கும். அவை வட்டார மொழிச்சொற்கள் என்றாலும்,
புரிந்துகொள்வது சற்று சிரமம்" என்ற சிரீஷ் காமத், நான் இலக்கியம் குறித்து கேட்டதும், உற்சாகமானார்.
"நான் கொங்கணியில் கவிதைகள் எழுதுவேன். கொஞ்சம் இலக்கிய ரசனை உண்டு”:என்றவர், மேலும் தொடர்ந்தார்.”போர்த்துகீசியர்கள் வருமுன் இருந்த மொழி பெரிதும் மாறிவிட்டது. Inquistion போது , பல அடக்குமுறைகளுக்கு உட்பட்ட மக்களோடு,மொழியும் மாறிவிட்டது" என்றார் பெருமூச்சுடன்.
நாட்டுப்புறப் பாடல்களின் இன்றைய நிலை என்ன என நான் கேட்டுக்கொண்டிருந்தபோது, கோவா மருத்துவக் கல்லூரியருகே பேருந்து நின்றது.ஏறிய மூவரில் இருவர் கணவன் மனைவி போல இருந்தனர். பின் ஏறிய வயதானபெண், அவர்களுக்கு முந்திய இருக்கையில் அமர்ந்தாள். மூவரின் முகத்திலும் சோகம் அப்பிக்கிடந்தது. கலைந்த ஆடைகளும், அழுக்கான தோற்றமும், அவர்களது பொருளாதார நிலையைச் சொல்லாமல் சொல்லியது.

பேருந்து கிளம்பியதும் , தொடங்கியது அவ்வழுகையொலி. பலரும் திரும்பி நோக்கினர். அம்மூதாட்டி, உரக்க அழுதுகொண்டிருந்தாள். சிலர் எரிச்சலில் உச் கொட்டினர். நடத்துனர் அவளருகே சென்றவர் , என்ன சொல்வதெனத் தெரியாமல், தயங்கி முன் சென்றார்.
சிரீஷ் காமத் " அவள் புலம்புவது மிகவும் அரிதான வட்டார வழக்கு மொழி.பலருக்கும் இங்கே புரியாது." என்றவர், அவளது புலம்பல்களை உன்னித்துக் கவனிக்கத் தொடங்கினார். சிறிது எட்டிக் குனிந்து, முன் சீட்டில் அமர்ந்திருந்த அம்மனிதனிடம் என்னமோ கேட்டார்.
"ச்.சே. பாவம்" என்றவாறே அமர்ந்து , என்னைத் திரும்பிப் பார்த்தார்.
" அவளது மகன் குறித்தான சோகம். மருத்துவமனையில் இறந்திருக்கிறான். சடலத்தை எடுத்து வர பணமில்லை. கிராமத்திற்குச் சென்று, உறவினருடன் வருவதற்காக , தன் மூத்த மகனோடும், அவன் மனைவியோடும் போகிறாள்." என்ற விவரம் சொன்னார்.

அப்பெண்ணின் அழுகை கூடிக்கொண்டே போனது. கூடவே என்னமோ சொல்கிறாள்.யாருக்கும் புரிபடாமல்,...திரும்பித் திரும்பிப் பார்த்தவர்களில், ஒருவர் எழுந்து வந்தார்.அப்பெண்ணிடம் ஏதோ சொல்லக் குனிந்தவர், மெதுவாகத் தன் இருக்கைக்குத்திரும்பினார்- ஒன்றும் சொல்லாமலே.
சிரீஷின் கண்களில் ஈரம் கசிந்தது. "என்ன சொல்கிறாள்?" எனக் கேட்டேன்..சோகம் எல்லாருக்கும் ஒன்றுதானே. மரணம் , இறந்தவனை விட இருப்பவர்களையே அதிகம் தாக்குகிறது.
" அவளது பிலாக்கணத்தின் ஆழம் என்னை அசைக்கிறது. என்னால் முழுதுமாக மொழிபெயர்க்க முடியாது. இருப்பினும் முயற்சிக்கிறேன் " என்றார் சிரீஷ் ஆங்கிலத்தில்.

" இந்த மாரிக்காலத்திற்கா
இத்தனை கோடைகளைத் தாண்டி வந்தேன்?
இந்தக் கண்ணீர்த் தாரைகளுக்காகவா
ஜூவாரியில் நீராடி கண்களில் நீர்சேர்த்திருந்தேன்?
நமது தென்னைகளுக்காக நீ வெட்டிய
கால்வாய்களில்,
குருதி மழை பெய்வதாக
நேற்றிரவு கனாக்கண்டேன்.
இக் கனாவின் மூலம்
என் கண்களெனில்
அவை உன் உடலோடு
எரிந்து போகட்டும்
கனவின் மூலம்
என் உயிரேயெனில்,
உன்சிதையில் அதுவும்
கருகட்டும்.
மகனே!
ஊருக்கு உன் மரணம் சொல்லிவிடுவேன்
என் மனதுக்கும் உன் மரணம் சொல்லிவிடுவேன்
வீட்டின் தெற்குமூலையில்
நீ போன வருடம் நட்ட
தென்னையின் புதிய ஓலைக்குருத்து
நான் வீடு போனதும்,
நீ எங்கேயென காற்றிலாடிக்
கேட்குமே?
அதற்கென்ன சொல்லுவேன்?"

சிரீஷ் ஒருநிமிடம் மெளனித்தார். அவர் குரல் கம்மியது. அப்பெண்ணோடு, அவள் மகனும் ,மருமகளும் இறங்கிச் செல்வதை மங்கலான பேருந்தின் உட்புற குழல்விளக்கின் ஒளியில் பார்த்தபடி உறைந்திருந்தேன்.

மழை மீண்டும் பலமாகத் தொடங்கியிருந்தது.

வீடு - சிறுகதை

வீடு

குட்டி என்னேடு எப்போது பேசத் தொடங்கியதென்று நினைவில்லை. அவனை யாரும் பார்த்ததில்லை-நான் உள்பட.. குரல் என்னைப்போல் இருப்பதால் குட்டி ஆணாக இருக்கலாமென்று நினைக்கிறேன். அவன் வந்திருக்கும் நேரமெல்லாம் " இவன் என்னல? காக்கா பார்வை வெறிச்சிகிட்டிருக்கான்?" என்று உடனிருந்தவர்களும், "எவன்ட்டல பைத்தியங் கணக்கா தனியா பேசிட்டிருக்க?" என்று நண்பர்களும் சீண்டினார்கள். படித்த, முதிர்ந்த நண்பர்கள், பின்னாளில், நான் 'trance'-ல் இருக்கிறேனென்றும், soliloquy- ஒரு நோயில்லை என்றும் என் மனைவியைத் தேற்றினார்கள். எனக்கு split personality என்று அச்சுறுத்தியவர்களும் உண்டு.

குட்டி என்னைவிட அறிவாளியில்லை. நான் பேசுவதை வேறு கோணத்தில் பார்த்து வாக்குவாதம் செய்யும். அது செய்யும் மிக முக்கியமான வேலை - என்னை தன்னுடன் சில இடங்களூக்கு, சில நேரங்களில் கூட்டிச் செல்லும். பெரும்பாலான இடங்களும், ஆட்களும் பரியச்சமானவர்களாயிருந்தாலும், கூட்டிப் போகும் நேரமும், நிகழ்வுகளும் வித்தியாசமானவையாக இருக்கும். குட்டியுடன் போவதால்  நான் அங்கிருப்பதை யாரும் உணர முடியாது. நானும் சும்மா நடப்பதை பார்த்துக் கொண்டிருக்ககலாம். அவ்வளவுதான்..

குட்டி எப்பத்தான் வருமென்று விவஸ்தையில்லை.நீண்ட பேருந்துப் பிரயாணங்களில், டாய்லெட்டில்,அஜ“ரண இரவுகளில்,ஆஸ்பத்திரி படுக்கையில், உறங்கிய விடுமுறை மாலைகளில் என்று எப்ப வேணுமானாலும் வரும். எங்கு வேண்டுவேண்டுமானாலும் கூட்டிப் போகும்." வால , போல' என்று பேசினாலும்,சில நேரங்களில் ' வாரும்வே, போரும்வே' என்று மரியாதையும் கிடைக்கும். இதையெல்லாம் நான் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.
முந்தாநாள் உச்சிவெயிலில்,குட்டி வந்தது.
'வால,... ஒரு விசயம் சொல்லணும்'
' எங்க வரணும்? வெயில் பொரிக்கி.. இங்கனையே பேசுவம்'
'ஆறுமுகம் வீட்டு வரை போயிட்டு வருவம்- வால-ன்னா..'
'எந்த ஆறுமுகம்?'
'தெரியாதாங்கும். அதான்ல.. உன் பழைய ஆளு கலைவாணி அண்ணன்'
'இந்தா... ஆளு அது இது-ன்னா, பேத்துருவேன்.அவளுக்கு கல்யாணம் ஆயிட்டது, தெரியும்லா?'
'சரிய்யா.. சொணங்காதயும்.சும்மானாச்சுக்கும் சொன்னா, இப்படி பேசுதீரே? வாரும்வே, விசயமிருக்கு'
குட்டி விடாது. கிளம்பினேன்.
வெயில் சுள்ளென்று உச்சந்தலையில் இறங்கியது. வடக்கு ரதவீதி தாண்டி, இரண்டாம் குறுக்குத்தெருவில், கடைசி வீட்டுக்கு முன் வீட்டில் நின்றோம்.
வீடு பெரியதில்லை. சுண்ணாம்பு அடித்து வருசமாயிருக்கும்போல. குனிஞ்சுதான் உள்ளே போகமுடியும்.கூடத்தின் உயரமும் குறைவுதான். என்ன வெயிலடிச்சாலும் உள்ளே 'சில்'-லென்று இருக்கும் எப்பவும்.ரொம்பப் பழைய வீடு.

ஆறுமுகத்தின் அம்மா வேலம்மா மட்டும்தான் அங்கு இருக்கிறாள். அவன் திருநெல்வேலியில்      'புராதன அல்வாக்கடை இதுதான்' என்று போர்டு போட்டு மிட்டாய்க்கடை வைத்திருக்கிறான்.கலைவாணி சென்னையில் இருக்கிறாள். அவளும் எதோ டிரவல்ஸ்ஸ’ல் வேலை பார்ப்பதாக ஆறுமுகம் முன்பு சொல்லியிருக்கிறான்.
வேலம்மாளுக்கு மெலிந்த தேகம். சுருக்கம் விழுந்த முகம்.சும்மாவே இருக்கமாட்டாள்.விழுந்த தென்னை மட்டையை உரித்து விளக்குமாறு செய்வாள்.கோழிமுட்டை விற்பாள். இத்தனைக்கும் அவளுக்கு விதவை ஓய்வூதியம் வேறு வருகிறது.
'தெரியுமால. ஒருகாலத்துல இந்த வீட்டுல எத்தனை பேர் இருந்தாகன்னு?' குட்டி கேட்டது
'ம்ம்ம். பத்துபேருக்கும் மேல இருந்தாக-நான் பார்த்து.. ஆறுமுகம் சித்தப்பு கூட இங்கதான இருந்துச்சு?'
"எல்லாரையும் வேலம்மாக்கிழவிதான் வளர்த்துச்சு. இப்ப தனி மரமா நிக்கி"
"இதச் சொல்லத்தான் இஙக கூட்டியாந்தியாக்கும்?"

"கோவப்படாதவே. கொஞ்சம் பொறும்"

எனக்கு ஞாபகமிருக்கிறது. ஆறுமுகம் என் வீட்டில் சும்மா கிடந்த டேபிள்ஃபேனை இரண்டு மாதம் வேணும்னு எடுத்துப் போனான்;கலைவாணி குழந்தையுடன் வருகிறாளென்று. அவர்கள் வீட்டில் மின்விசிறி கிடையாது- வேலம்மா வாங்க விடவில்லை.

'உத்தரத்துல மாட்டற விசிறியெல்லாம் வேண்டாம்யா. உங்க சித்தப்பு நிக்கான் -அரைப்பனை உசரத்துக்கு.பனியன் மாட்ட கைதூக்கினா, வெட்டிறும்'

சென்னையில் பிறந்த கலைவாணியின் குழந்தை, ஃபேனில்லாமல் தூங்காது என்றும், அதற்கு சுவாசமுட்டு வருமென்றும் பயமுறுத்தியபின், அரைமனதாக டேபிள் ஃபேனுக்கு சம்மதித்தாள். அதுவும் நற்காலி மேல வைத்து, இறுகக் கட்டியபின்.."தவழ்ற புள்ள தம்பி, புடிச்சு எந்திக்கப் பாக்கும். கரண்டு அடிச்சுட்டா?'

மறுநாள், நாற்காலியும் தூணோடு கட்டப்பட்டிருந்தது" மேல விழுந்துட்டுன்னா?'

வீட்டிற்குள் யார் நுழைந்தாலும் சொல்லுவாள்.."நிலை பாத்து வா ராசா. இடிச்சுறப்போவுது"

"சரி, போகலாம். வேலையத்துக் கிடக்கேன்னு நினைச்சியா?" குட்டியிடம் சீறீனேன்.
"ஷ்.. இந்தா பாரு, வந்துட்டாங்க"

கேட் திறக்கும் சப்தம் கேட்டு, ஊஞ்சலில் இருந்தபடியே கேட்டாள்,"யாரு?"
"நாந்தாம்மா, மணிவண்ணன்"

கூடவந்தவர் அடிக்குரலில் உறுமினார்."மூதி,உம்பேரு கிழவிக்கு ரொம்பத்தெரியும் பாரு"

குரலை உயர்த்தினார்."யம்மா, நான் செல்லமுத்து நாடான் வந்திருக்கேன். ஆறுமுகம் வரச்சொல்லிச்சு"

வேலம்ம்மாள் வாசலுக்கு வந்தாள்"வாங்க நாடாரைய்யா.ஒங்க பையனா? பேரு தெரியலை. அதான். வா தம்பி"

செல்லமுத்து பணிவாய்க்கேட்டார்."தூங்குறவகளை எழுப்பிட்டமோ?"
"இல்ல, இல்ல, இப்பத்தான் உக்காந்தேன்"

வந்த இருவரும் கீழே பாயில் உட்கார்ந்தனர். ஓட்டுக்கூரையில் பதித்திருந்த கண்ணாடி வழியே வந்த ஒளிக்கற்றையில் தூசிப்படலம் சோம்பலாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. கீழே, பச்சைத்துண்டில் பருப்பு உலர்த்தியிருந்தது.

"வாசல்ல காக்கா தொல்லை ஜாஸ்தி. எல்லாத்தையும் கொத்திப் போடுது.அதான் உள்ளாறவே.. சொல்லுங்க. ஆறுமுகம் இன்னிக்கு வாறேன்னானா? இன்னும் வரலையே?"

"மத்தியானம் வாரன்னான்"

"அப்ப வருவானாயிருக்கும். என்ன விசேஷம் நாடாரைய்யா?"

செல்லமுத்து தயங்கினர். சில விஷயங்களை தொடங்குவதுதான் கடினம். வெற்றி தோல்வி அதில்தான் இருக்கிறது. மணிவண்ணன் முந்தினான்."நாங்க இப்போ கட்டுமனை வித்து, வீடும் கட்டித்தறோம்மா. கிழக்கால இந்து ஆரம்பப்பாடசாலைல இருந்து மேல்ரோடு வரை இப்ப .." அவன் முடிக்கவில்லை. வேலம்மா சொல்லமுத்துவைப் பார்த்துக் கேட்டாள்,"ரத்னா நல்லாயிருக்காய்யா?"

"வந்திருக்கும்மா. அஞ்சு மாசம் இப்ப.இந்த தடவையாச்சும் புள்ள தங்கணும்"

"அதான.. செல்லாத்தா போன வாரம் சொன்னா,'நாடார் வீட்டம்மாவை பஸ்ஸ்டாண்டுல பாத்தேன்- திருச்சிக்குப்      போறேன்னாவ-ன்னு’ இதானா?  கவலைப்படாதீய. எல்லாம் நல்லா நடக்கும். நீ என்ன       சொல்லிட்டிருந்த ராசா? வீட்டு விசயம் கேட்டதுல நீ சொன்னது கவனிக்கல"

செல்லமுத்து தொடரவேண்டாமொன்று சைகை காட்டினார். வாசலில் நிழல் தெரிந்தது."ஆறுமுகம்தான். வந்துட்டான்"

உள்ளே வந்தவன் சிரித்தபடி"வாங்க"என்றான்."கொஞ்சம் லேட்டாயிருச்சு.கடைப்பையன் வரலை.அப்பவே வந்துட்டீங்களோ?"

"சாப்புடுதியா ராசா? நீங்களும் உக்காருங்கய்யா.அஞ்சே நிமிசந்தான்" கிழவி பரபரத்தாள்.

"இப்ப பசியில்ல. பொறவு பாத்துக்கலாம்.அம்மாகிட்ட சொல்லிட்டீங்களா, மணிவண்ணணன்?"

"இல்ல. நீ வரட்டும்னு காத்துகிட்டிருந்தோம்"

"அம்மா, இவங்க மனை வாங்கி வீடு கட்டித்தாராங்களாம்.இந்தத் தெருவுல
மத்த வீட்டையெல்லாம் விலை பேசியாச்சாம்.இப்ப, நம்ம வீட்ட  பேச வந்திருக்காங்க"

கிழவி மௌனமாயிருந்தாள். ஆறுமுகம் கேட்டான் "எவ்வளவு கிடைக்கும் சார்?"

"ஒரு லட்சம் போவும்"

மீண்டும் மௌனம்..

செல்லமுத்து மொதுவாய் தொடங்கினார்'அம்மா, உங்களுக்கும் வயசாயிட்டு வருது. உங்க வீட்டு விசயத்துல பேசறேன்னு நினைக்க வேண்டாம்.பேசாம இந்தப் பழைய வீட்டை வித்துட்டு, ஆறுமுகம் கூட நெல்லைல போயிருக்கறது உங்களுக்கும் நல்லது.அவனுக்கும் ஆத்தாகூட இருக்கான்னு சந்தோசமாயிருக்கும்"

வேலம்ம்மா குனிந்திருந்து கொண்டே கேட்டாள்."வீட்டை என்ன செய்வீங்க நாடாரே?"

மணிவண்ணன் முந்தினான்,"இடிச்சிருவோம்.புதுசா அஸ்திவாரம் போட்டுருவோம்"

செல்லமுத்து நறநறத்தார்.'இந்தப் பயலுக்கு இன்னமும் தொழில் சுழுவு தொரியவில்லை.வீட்டுக்குப் போயித்தான் திருத்தணும்' மீண்டும் மௌனம் நிலவியது.

ஆறுமுகம்,"வித்தறலாம்மா.ஒரு லட்சம்னா லாபம்தான்"

வேலம்மா ஒன்றும் பேசவில்லை.பச்சைத்துண்டையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அப்போ, உங்களுக்கு சம்மதம்னா, பத்தரத்தை நாளைக்கே முடிச்சறலாம்.நாளைக்கு அமாவாசை.நிறைஞ்ச நாளு."செல்லமுத்து முடிக்கவில்லை;

வேலம்மாள் கூர்மையாக செல்லமுத்துவைப் பார்த்தாள்.

"அப்போ, நாளைக்கே நான் செத்தும்போவணும்-கறீங்க"

செல்லமுத்துவின் முகத்தில் வலி தெரிந்தது."நான் அப்படியாம்மா சொன்னேன்?"

வேலம்மாவின் குரல் உயர்ந்தது. "நாடாரே, கேட்டுக்கோரும்.இந்த வீட்டுல நான் மருமவளா வரும்போது, எனக்கு புரட்டாசி புறந்தா எட்டு வயசு.எத்தனை வருசமாச்சுன்னெல்லாம் தெரியாது எனக்கு. இவனை மட்டுமில்லையா.. இவன் சித்தப்பனுக்கும் நாந்தான் பால் குடுத்து வளர்த்தேன்.வாழ்ந்து வந்த வீடுய்யா.இடிக்கணும்கீயளே? உமக்கும் பேரன்,பேத்தி பொறக்கணும் - பாத்துக்கோரும்"

"யம்மா" ஆறுமுகம் அதட்டினான்."என்ன பேசற?"

"நீ சும்மாயிருல" வேலம்மாவின் குரல் இன்னும் உயர்ந்தது.செல்லமுத்து வியர்வையைத் துடைத்துக் கொண்டார்.

"நல்லா யோசிச்சு முடிவெடுங்கம்மா. எத்தனை நாளைக்கு இப்படி தனியா இந்த வீட்டுல இருக்கப் போறீங்க? பிள்ளைங்க எல்லாம் வெளியூருகுப்போயிட்டது. அவனவன் குடும்பம்னு யாயிறுச்சு"

"குஞ்செல்லாம் சிறகு முளைச்சுப் பறந்துட்டது. குருவிக்கூட்டுக்கு இனியென்ன வேலை? கலைச்சுறு-ங்கறீங்க"

"அதில்லம்மா" செல்லமுத்து திணறினார். இது உணர்ச்சி கலந்த விஷயம்.தவறாக வாய் விட்டால் தொலைந்தது.தர்மசங்கடமான மௌனம் மீண்டும்.

"அப்போ நாங்க வர்றோம்மா.வறோம்பா ஆறுமுகம்"

"கை நனைக்காம போறீயளே? ஒரு வாய் சாப்டுட்டுப் போவலாம்"

"காரியம் கிடக்கும்மா. இன்னொரு நாள் ஆவட்டும்"

வெளியே போகும்போது, செல்லமுத்து ஆறுமுகதை அழைத்தார்.
"கஷ்டம்தான் தம்பி.அம்மா புரிஞ்சுக்க மாட்டேங்குது. நீதான் எடுத்துச் சொல்லணும். வரட்டா?"

அவர்கள் போனதும் , உள்ளே வந்தவன் கத்தினான் "சே! நல்ல விலை வந்தது. வேண்டாம்னுட்டியே"

"இந்த வீட்டை விக்கச் சொல்லறியா?. நான் போன பிறவு நீயும் உன் சித்தப்பனும் என்ன வேணும்னாலும் செய்யுங்க.. நான் விக்க மாட்டேன்"

"புரியாம் பேசறியேம்மா. எனக்கு நாப்பதாயிரம் இருந்தா, பக்கத்துக்கடைய வாங்கிப்போட்டுறுவேன்.சித்தப்பு கூட 'பணமுடை. அம்பதாயிரம் வேணும்'னுச்சு"

"அதான் சொல்லிட்டேன்லா. நான் விக்கமாட்டேன்"

"நாளைக்கே பத்திரம் எழுதக் கொண்டு வர்றேன். எப்படி விக்க மாட்டேன்னு சொல்லறே-ன்னு பாத்திருதேன்"

"பத்திரம் எழுது..எம் பாடையை எடுத்தப்புறம்"

திடீரென்று வேலம்மா அழத்தொடங்கினாள்

நான் குட்டியை முறைத்தேன்." இந்த அழுவாச்சியப் பாக்கத்தான் கூட்டியாந்தியா? நான் போறேன். வேலையத்த பயலுக சகவாசமெல்லாம் இப்படித்தான்" எழுந்து நடந்தேன்.

"ஏல.நில்லு.நாஞ் சொல்லறதக் கேளு.."

ராத்திரி நாலு மணியிருக்கும். குட்டி அவசரமாய் எழுப்பியது.
"எந்திரிலா..முக்கியமான விசயம்"

"போல.. என்ன தலைபோற வேலை இப்ப? காலைல பாத்துக்கலாம்"
"தலை போற வேலைதாம்-ல. வான்னா வரணும்"

வேலம்மா வீட்டுப் பின்புறம் கிணற்றடிக்குக் கூட்டிப் போனது குட்டி. வேலம்மா விழுந்து கிடந்தாள்- வலப்பக்கம் தலை சரிந்து கிடக்க, கைகால்கள் பரத்தி. தலைப்பக்கம் கிணற்றுக் கயிற்றிலிருந்து ஒரு பித்தளைக்குடம் வெளிவந்து நசுங்கிக் கிடந்தது. கால்பக்கம் அரணை ஒன்று ஓடியது. இன்னமும் விடியவில்லையாதலால் சுவர்க்கோழிகளின் சப்தம் அதிகமாயிருந்தது.

"மயங்கிக் கிடக்காளோ?" பரபரத்தேன்

" நீ வேற. உசிரு போயி ரெண்டு நிமிசமாச்சி"

"அரணை நக்கியிருக்குமோ?"

"அரணையுமில்ல, அரவுமில்ல.தலைப்பக்கம் பாருவே. குடம் கிடக்கு நசுங்கிப் போயி"

"தண்ணி மொண்டு விடும்போது, வழுக்கித் தலைமேல குடம் இடிச்சிருக்கும்போல"

"குடம் இடிச்சிருச்சோ, இடிச்சாங்களோ என்னவோ - என்னைய இதுக்கு மேல ஒண்ணும் கேக்காத.புடதில புத்தியிருந்தாப் புரிஞ்சுக்கோரும். ஒண்ணு மட்டும் நிச்சயம்வே. கிழவிக்கு துர்மரணம்னாலும் கபால மோட்சம். உச்சந்தலை பிளந்து உசிர் போறத நான் பார்த்தேன்"

என் மனைவி புலம்பிக்கொண்டிருந்தாள்."ராத்திரி தூங்கப் போகும்போது நல்லாத்தான் இருந்தாரு டாக்டர். அஞ்சு மணிக்கு முனகற சப்தம் கேட்டுப் பார்த்தேன். உடம்பு அனலாய்க் கொதிச்சுக்கிட்டிருந்தது.

' வீட்டை இடிக்கறாங்க, வீட்டை இடிக்கறாங்க"-னு புலம்பறாரு.பயமாயிருக்கு டாக்டர். டவுன் ஆஸ்பத்திரில கொண்டு போயிரலாமா?"

"வேண்டாம்மா. ஊசி போட்டிருக்கேன்.கொஞ்சம் பார்ப்போம்"





Saturday, January 25, 2014

பாரதியின் “என் சேவகனும்” ஆழ்வாரின் “ நம் சேவகனாரும்”

”எல்லாக்கவிஞர்களும் கடவுளை தாயா, தந்தையா, தோழனா, காதலனா வைச்சுத்தான் பார்த்திருப்பாங்க. ஆனா நம்ம பாரதிதான் கண்ணன் என் சேவகந்ன்னு அவனை ஒரு சேவகனா நினைச்சு எழுதியிருக்கான்” பல இடங்களில் சிறுவனாக இருந்தப்போது கேட்டது. “ஏ” என்று பெருமிதத்தில் குதித்த அந்த நாட்களில், ஒரு முதியவர் என் பலூனில் ஊசி குத்தினார் “டேய், அதுக்கு முன்னாடி தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலையிலே ,ஸ்ரீரங்கதுப் பெரிய பெருமாளை நம் சேவகனார் -ன்னு சொல்லியிருக்கார் தெரியுமா?”
திருமாலையும் தெரியாது, ஆழ்வார் பாடலும் புரியாது கொஞ்சம் குழம்பியிருந்தேன். ஒரு வைணவ சீலரிடம் அந்தப் பாசுரத்தைப் பற்றிக் கேட்டேன். புருவத்தை வியப்பில் உயரத் தூக்கினார். “டேய். அப்படியெல்லாம், ஆழ்வார் பாடல் புரியாம அதச் சொன்னார், இதச்சொன்னார்னு சொல்லிண்டு திரியாதே. குறைகுடமாக் கூத்தாடப்படாது, தெரிஞ்சுதா?”

ஆக, பாடலின் பொருள் புரியாமல்,பாரதியையும் பற்றி ஒழுங்காகப் புரியாமல் தவித்துக்கொண்டிருக்கையில்தான் ‘திருமாலை, பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் , சுதர்சனம் ஆசிரியரின் விரிவுரையுடன் கூடியது” என்ற புத்தகம் கிடைத்தது. ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ, திருவரங்கத்தின் வெளியீடு.
பாசுரம் இதுதான்
ஒருவில்லால் ஓங்கு முந்நீரடைத்து உலகங்களுய்ய
செருவிலே அரக்கர்கோனைச்செற்ற நம் சேவகனார்
மருவிய பெரியகோயில் மதிள்திருவரஙகம் என்னா
கருவிலே திருவிலாதீர்! காலத்தைக் கழிக்கின்றீரே

இந்த “நம் சேவகனார்” தான் படுத்திய சொல். வியாக்கியானத்தில் “சேவகன்” என்பதற்கு  அதன் முன்னிருந்த சொற்களைச்சேர்த்துப் படிக்கவேண்டும். செருவிலே அரக்கர்கோனைச் செற்ற நம் சேவகனார் - போரில் ராவணனை வென்ற நமது வீரன் என்ற பொருளில் அவன் சேவகன்  என்று கண்டேன். சரி சேவக் என்று வீரர்களை டி.வி சீரியலில் அழைப்பதில்லையா? என்று கரடுமுரடாகத் தெளிந்தபோதுதான் மற்றும் சில விஷயங்களைக் கண்டேன்.

நஞ்சீயர் என்ற ஆச்சாரியார், பட்டர் ( அவரின் ஆச்சாரியர்) இடத்தில் இதன் விளக்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, சிந்தனை வயப்பட்டு தெருவில் சென்றார். அங்கே ஒரு ராஜ சேவகன் ஒரு பெண்ணை மிரட்டிக்கொண்டிருந்தான் “ நான் ராஜாவின் ஊழியன்” என்றபோது அவள் எதிர்க்கிறாள் “ உன்னால் என்னை என்ன செய்ய முடியும்.? என்னைப் போன்ற ஏழைகளைக் காக்கத்தான் ராஜா முடிசூட்டிக் கொண்டிருக்கிறார்”. நஞ்சீயர் இதைக்கேட்டு ஆச்சரியப்படுகிறார்.  நமது சேவகனார் என்பதை ஒரு பெண் எளிதாக விளக்கிவிட்டாளே?

சீதை, தாயார் என்றும் நாம் அவளின் குழந்தைகள் என்றும் கொண்டால், ராமன் அவளைக் காத்த சேவகனார் என்றால், அவன் நம்மையும் காக்கின்ற சேவகன் ஆகிறான். எனவே’  நம் சேவகனார் ‘ -எப்படியெல்லாம் உரிமை கொண்டாடிவிடுகிறோம் சட்டென்று?

பட்டர் , மற்றொரு முறை இதைத் தெளிவிக்கும்போது “ கடற்கரை வெளியைக் கண்டு இரும்” என்றாராம். கடற்கரை வெளியில் அன்று குரங்குகள் ராமனுக்கு பாலம் கட்ட முனைந்தபோது, அவற்றைக் காத்து நின்ற சேவகனார் ராமன் என்ற பொருளில் ராமாயணத்தில் வரும் சுலோகத்தை உணர்த்துகிறார்.
இதில் சேவகனார் என்ற ஆர் - ஒரு பெரியவருக்கான மரியாதை விளி இல்லை எனவும். சேவகம் உறையும் இடம் என்பதால் சேவகம் ஆர் என்றும் விரிவு கண்டேன்.

சரி, முண்டாசுக் கவிஞன் சொன்ன சேவகன்?
அவன் சேவகன் - ஊழியன் என்ற அளவிலேயே வைத்து அதிகாரத்துடன் புனைந்த கவிதையல்லவா அது? ஆழ்வார் சொன்ன நம் சேவகனாருக்கும், பாரதி சொன்ன சேவகனுக்கும் எத்தனை வித்தியாசம்.?  கடவுளை ஊழிய சேவகனாக் காட்டியது பாரதி மட்டும்தான். மட்டும்தான்.

நெஞ்சு விரிகிறது இன்று இரட்டிப்பு சந்தோஷம். 

Friday, January 24, 2014

முதிர்ச்சி.

”இதை எதுக்கு எடுத்துண்டு வந்தாய்? “ குரல் கேட்டுத் திரும்பினேன். கருத்த மெலிந்த , சற்றே வழுக்கை ஏறிய உயரமான மனிதர். யாரைத் திட்டுகிறார்? அவர் சற்றே விலகி, ஒரு இருக்கையில் அமர்ந்த பின்னரே பின்னால் அந்த மாமி தெரிந்தாள். சற்றே கூன் விழுந்த உருவம். ரெட்டை மூக்குத்தியும், காதில் பெரிய தோடுமாக மாமி நடந்து வந்ததில், கையிலிருந்த ஒரு பை அதிகமாகவே ஆடியது.

”எங்க கேட்-டுனு ஒங்கயும் போடலையே?”
மாமா சற்றே கண்ணாடியைக் கழற்றி, வாயை விரித்து, கண்ணைச் சுருக்கிப் பார்த்தார். பின் கண்ணாடியைப் போட்டும் இத்தனை கோணஷ்டைகளைத் திரும்பவும் செய்து பார்த்துவிட்டு’யாராவது நம்படவா வருவா. அவாட்ட கேப்பமா?”என்று சொல்லிக்கொண்டிருந்த போது நான் இடையில் புகுந்தேன். ஹாங்காங் ப்ளைட்டா? அதுக்கு கீழே போணும். நிறையநேரம் இருக்கு. இங்க உக்காந்த்துக்கோங்க. “ என்றேன்.
மாமா திரும்பிப் பார்த்தார். “ ஓ. நீங்களும் அதுலதான் போறேளா சார்” “ஆமா” என்றேன். மாமிக்கு அருகிலிருந்த சீட்டில் அமர்ந்தேன். 

மாமி, என்னை கைகாட்டி அழைத்தாள் “ அம்பி. எங்கயாக்கும் இருக்காய்?” குரல் பிசிறு தட்டியிருந்தது.
”பம்பாய், மாமி: 
“பார்யா என்ன பண்றா?” சொன்னேன்.
“குழந்தைகள் இருக்காளோன்னோ?”
மாமா அதட்டினார் “ என்னது, சாரோட ஜாதகத்தையே கேட்டுண்டிருக்காய்? சாரி சார். அவள் அப்படித்தான், எதாவது வழ வழன்னுண்டே இருப்பள்”
”சேச்சே, அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா. பெரியவா கேக்கறா. இதுல என்ன இருக்கு?” என்றேன்.
மாமியின் முகம் சற்றே விகசித்தது. மஞ்சளாக, தாறுமாறாக இருந்த பற்களைக் காட்டிச் சிரித்தாள்.
“இந்தப் ப்ராம்ணருக்கு எல்லாரையும் சார்னே கூட்டுப் பழக்கம். ரயில்வேஸ்ல இருந்தாரோன்னோ? அதான். “ மாமா பக்கம் திரும்பி “ நம்ம பத்து மச்சினன் மாதிரி இருக்கான்ல்யா? . அம்பி நோக்கு என்ன வயசாறது?”
மாமா சங்கடத்தில் நெளிந்து மறுபுறம் பார்க்க , நான் “ நாப்பத்தஞ்சு ” என்றேன்.
“அதான். எங்காத்து பத்து , பத்மனாபன்னு பேரு, அவன் மச்சினனுக்கும் நாப்பத்தாறு நடக்கறது. அவன் மாமா பொண்ணைத்தான் கொடுத்திருக்கா. வர்ர ஆனிக்கு நாப்பத்து ஆறு முடியும். ஏன்னா ஆனிதானே?” 
அவர் யாருக்கும் புரியாதமாதிரி முணுமுணுத்து , தலையை மீண்டும் மறுபுறம் திருப்பிக்கொண்டார்.
” நாங்க நாலுமாசமா வந்து இருந்தாச்சு. ஒன்றரை வயசுல ஒரு குழந்தை இருக்கு அவனுக்கு. அவளும் பாவம் ஜோலி பாக்கலை. குழந்தையோட நீயும் வாம்மா-ன்னான் இவர் அம்மா படுத்துண்டு இருந்தாளே?..,சூலிப் பொண்ணையும், மாமியாரையும் நாந்தான் பாத்துண்டேன். மாமியார் ஆடத் திவசம் முடிச்சுட்டு நாலு மாசம் முன்னாடி கிளம்பினோம்.கும்பகோணம் பக்கத்துல ...”
“நிறுத்தறயா? பிறத்தியார் என்ன மூட்ல இருக்கான்னே பாக்காம, பனரப் பனரப் பேசிடவேண்டியது. இது நல்லதில்லை கேட்டியா?” 

“சார், நீங்க எங்க பே ஏரியாவா? எந்த கம்பெனி, எங்க இருக்கேள்?’போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு ”பத்மநாபன் என்ன செய்யறார்?” என்றேன்.
“அவன் ஹைதராபாத்ல நல்ல சம்பளத்துலதான் இருந்தான், கேட்டேளா? ஒருத்தன் மெயின் ஃப்ரேன் ஸ்கில் வேணும்னுட்டு இவனை நைச்சியமா பேசி அமெரிக்கா போறியான்னான். இவன் எல்லாரும் போறாளே? நம்மளும் போனா என்னான்னு ஆசை.. கண்ணைக் கட்டிடுத்து அப்ப. அட்லாண்ட்டால ரெண்டு வருஷம். அப்புறம் சியாட்டில்.”
”அங்கதான் அவனுக்கு வேலை போச்சுடா அம்பி” என்றாள் மாமி, புடவையில் மூக்கைத்துடைத்தவாறே.
“ கிடைச்சது, அப்புறம், என்னமோ கிரகம் படுத்தறது. இர்வைன், ஆஸ்டின்-ன்னு அலைஞ்சுண்டே இருக்கான். இப்ப என்னமோ திரும்பவும் இர்வைன்ல கொஞ்ச நாளா இருக்கான். சரி, குடும்பத்த கூப்பிட்டுகறேன்னான். ”
மாமி, தாழ்ந்த குரலில் பேசினாள். “ கஷ்டப் படறதுகள்டா, அம்பி. எங்களுக்கு மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ் எடுக்கணும். இவருக்கு சுகர். எனக்கு ப்ரஷர் உண்டு. செலவு இருக்கில்லயா? அதான், குளிர் ஒத்துக்கலேப்பா, ஊர்ல விஷேஷமெல்லாம் வரும்னுட்டு கிளம்பிட்டோம். ”
மாமா ஒரு நிமிடத்தின் பின் தொடர்ந்தார் “ சார், இங்க இருந்தா லைட்டா இருக்கணும். எங்கள மாதிரி சுமைகளெல்லாம் இருந்தா அவாளுக்கும் கஷ்டம், அதப் பாத்து நமக்கும் கஷ்டம். நம்ப மாட்டேள். என் பென்ஷன டாலர்ல மாத்தினா , இவளுக்கு மாத்திரை வாங்க மட்டும்தான் அது வரும். “
நான் எதோ சொல்ல வாயைத் திறந்தேன். நிதர்சனமும், அதனைப் புரிந்து கொண்ட முதிர்வின் நிதானமும் கட்டிப் போட்டுவிட்டன.
“மெட்ராஸ்ல ஒரு வீடு இருக்கு கேட்டேளா?. நாங்க ரெண்டு பேரும்னா என் பென்ஷன் தாராள்மாப்போறும். சமாளிச்சுடுவோம். சரி, கிளம்பலாமா சார்.? இவள் மெள்ளத்தான் நடக்க முடியும்.”
நான் சென்று பார்த்துவிட்டு வந்தேன். ஒரு தளம் கீழே இறங்கவேண்டும். எஸ்கலேட்டர் இருந்தது.
“ஓ அந்த பாழாப்போன எஸ்கலேட்டரா? அதுல நேக்கு பயம்டா அம்பி. படிக்கட்டு இருந்தா, மொள்ள பிடிச்சுண்டு இறங்கிடறேன்” என்றாள் மாமி.
”நீங்க வாங்க. நான் கையப் பிடிச்சுக் கூட்டிண்டு போறேன் என்று இரு முறை உறுதியளித்தபின் தான் மாமி எழுந்தாள்.
எஸ்கலேட்டரில் மாமா ஸ்டைலாக, இறங்கிச் செல்ல, நான் நின்று மாமியின் கையைல் பிடித்து மெல்ல அதில் ஏற்றினேன். 
“அந்தப் பையைக் கொடுங்க எங்கிட்ட. “ என்றதற்கு மறுத்துவிட்டாள்.

“பரவாயில்ல, எடுத்துகிட்டு ஓடிற மாட்டேன்” என்றேன் புன்னகையுடன்.
“பேஷா எடுத்துண்டு போயேன். தட்டை, நாலு முறுக்கு, மைசூர்பாக்குனு வழிக்கு வச்சிருக்கேன். இவனெல்லாம் என்ன சாப்பாடு போடறான்?. வெஜ் மீல்ஸ்னா ஒரே உப்பு. வாயில வைக்க முடியலை. இந்தப் ப்ராம்ணரானா, சாட்டுண்டே இருக்கார். உப்பு ஆகாது. சொன்னா கேக்கமாட்டார். அம்பி, இதுல கொஞ்சம் மைசூர்பாக்கு இருக்கு. உங்காத்துப் பையனுக்கு எடுத்துண்டு போ. நோக்கும் ரெண்டு தட்டை எடுத்துக்கோ. ப்ளேன்ல எங்க ஒக்காருக்காயோ?”

புரிந்து கொள்ளுதலும், கொடுத்தலுமே வாழ்வான இவர்களிடமிருந்து யார் எதை எப்படித் திருடமுடியும்? இவர்களா சுமைகள்?

பாத்ரூம் எந்தப் பக்கம்?

இந்த முறை அமெரிக்கப் பயணம் கொலம்பஸுக்கு நேர் எதிராகச் சுற்றிச் செல்லும் வழியில். மும்பை -ஹாங்காங்- சான் ப்ரான்ஸிஸ்கோ வழியில் டயாப்பர் மாற்றவோ , பால் கேட்டோ வீறிடாத குழந்தைகள் வரவேண்டுமே என்று ஆஜ்மீர் சிஷ்டி தர்காவிலிருந்து , முக்காலங்குடி முச்சந்தி விநாயகர் வரை வேண்டாத தெய்வமில்லை. இந்த டாய்லெட் விசயங்களைக் கொஞ்சமும் கூச்சமே படாது அந்த சிறுசுகள் அலறித் தீர்ப்பதில் எனக்கு ஒரு குறையுமில்லை. ’டயாப்பரை எங்க வைச்சீங்க?’ என்ற கேள்விக்கு, தந்தையாகப்பட்டவன் எழுந்து நின்று, ஜீன்ஸை சரிசெய்து, எக்ஸ்க்க்யூஸ் மீ சொல்லி, தாவி நம் தொடைகளை மிதித்து, வெளியேறி, அனைத்து பைகளையும் இடம் கலைத்து, மரம் வெட்டுபவனும், தேவதையும் கதையில் ஒவ்வொரு கோடாலியாக எடுத்துக் கேட்கும் தேவதை போலே, இதுவா இதுவா எனக் கேட்டு ஒருவழியாக ஒரு பையை எடுத்து , அதிலிருந்த டயாப்பரென்ற சாதனத்தை எடுத்து வருவதற்குள்,...

அன்னையாகப்பட்டவள், குழந்தையின் பிருஷ்டம் இயற்கையாகவே இப்படித்தான் இருக்கும் என்று அனைவருக்கும் காட்டியபடியே சீட்டுகளிலிருந்து வெளிவருவாள். இவை எப்பவும், நான் லஞ்ச்சோ, ப்ரேக்பாஸ்ட்டோ ஒரு வாய் போடும்போதுதான் நடக்கும்.

கடவுள் இருக்கிறார். இந்தமுறை ஹாங்காங் வரை ஒரு தொந்தரவுமில்லை. மெல்ல எட்டிப்பார்த்தேன். முன்னே ரேஷன் மண்ணெண்ணெய் க்யூ போல ஒன்று.. ஸ்வெட்டர் போட்டு ஆர்த்த்ரிடீஸ் கால்களுடன் நம்ம ஊர் மாமிகள் , பேரன்பேத்திகளுடன் நின்றிருக்க, க்யூ வளைந்து வளைந்து 4ம் எண் போர்டிங் கேட் அருகே பாம்பாய் நீண்டிருந்தது. சில வயோதிக இந்தியர்கள் மட்டும், 1st class, business class பயணிகள் ஏறும் வரிசையில் நின்று, தாங்களும் அதிலேதான் போகவேண்டுமென அடம் பிடித்துக்கொண்டிருந்தனர். மருந்துக்குக் கூட ஒரு அலறும் அசுரன் ஒன்றும் தென்படவில்லை. அப்பாடி.

எனக்கு முன்னே இரு லத்தீனோ ஆண்கள் , ப்ளேனை படம்பிடிப்பதில் மும்முரமாக இருந்தனர். பின்னே ஒல்லியாக ஒரு அமெரிக்கப் பெண், கணவனோடு. அவன் அடிக்கடி அவளது பொன்னிற முடிக்கற்றைகளை விலக்கி விலக்கி ‘ஹனி” என்று எதயோ உளறியபடி அவள் நெற்றியில் முத்தமிட்டுக்கொண்டிருந்தான். சவத்தெளவு , இதத்தான் ப்ளேன்லயும் படமாக் காட்டறானே? 3D ல வேணும்னு கேட்டேனா? என நான் நினைத்துக்கொண்டிருக்கும்போதே அவள் ’ஞ’ என்ற மூக்கால் பேசும் அமெரிக்கன் ஆக்ஸெண்ட்டில் சொன்னாள்.
”Honey, I wanna pee" “ அன்பே, எனக்கு மூத்திரம் போகவேண்டும் (இந்த மொழிபெயர்ப்பு அவசியம்தானா எனச் சுளிப்பவர்கள் மேலே படிக்கவும்).

“ஹோல்ட் ஆன் பேபி. இந்த செக்யூரிடி பரிசோதனை ரெண்டே நிமிடம்தான். நமது பைகளைப் பார்த்ததும் உள்ளே போயிருவோம். என்னோட பைக்குள்ள தான் வைச்சிருக்கேன். “மீண்டும் முத்தமிட வந்தவனைத் தடுத்தாள்.
“No , I wanna go NOW." அவள் குரல் சற்றே உயர்ந்தது. என்னடா இது, இவளை பேபி என்கிறான்..இவளுக்கும் டயாப்பர் மாட்டிவிடுவானோ? என பீதியில் நான் உறைந்த பொழுது, அவள் க்யூவிலிருந்து விலக அவன் தோள் பையைத் திறந்ந்து, அவளது ஒப்பனைப் பையை எடுத்துக் கொடுத்தான்.

க்யூ நகர்ந்து நகர்ந்து முன்னேற, பாஸ்போர்ட் சமாச்சாரங்களை நூற்றி ஓராவது தடவை அமெரிக்க முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் பரிசோதித்து அனுப்பும்போது, முன்னே இருந்த லத்தீனோ ஆள் திரும்பி பெரிதாகப் புன்னகைத்தான். க்யூவை விட்டு விலகி டாய்லெட் எங்கே எனக் கேட்டு, பாதுகாப்புப் பரிசோதனை முடிந்துவிட்டால் மூத்திரம் போகக்கூடாது என்ற அமெரிக்க ஆணையை மதிக்காமல் , தடுப்புப் பட்டையை விலக்கி வெளியேறினான். அவன் பின்னே இரு காவலர்கள் ஓடினார்கள். க்யூ நகர்வது இரு நிமிடங்களுக்கு நின்று போனது.

நமக்கும் இந்த டாய்லெட் சமாச்சாரங்களுக்கும் என்ன கொடுப்பினையோ? 

Saturday, January 11, 2014

ராதா அக்காவின் நீலப்புடவையும், பள்ளிக்கூடமும்.


 மும்பை 13 டிகிரி ஸி-யில் குளிர்ந்திருந்த மாலையை சுகித்திருந்த போது, நண்பரின் போன் வந்தது. “ அர்ரே, பெரிய ப்ராப்ளம்” என்று பீடிகையோடு தொடங்கினார். வியந்தேன் , இப்படியெல்லாம் பேசுகிற ஆளில்லை அவர். கடமையே கண்ணானவர் - சிறந்த விற்பனையாளர் என்ற பட்டத்தை அவர் பணிசெய்யும் கம்பெனியில் நாலு வருடங்களாகத் தட்டிச்சென்றவர். 

“இந்த வருஷம் பின் தங்கிவிடுவேன் போலிருக்கிறது. மார்க்கெட் தேக்கநிலை இல்லை. இந்த xxx வந்து சேர்ந்திருக்கிறான்”

திரு.xxx நண்பரின் இதற்கு முந்திய கம்பெனியில் அவருக்கு பாஸ் ஆக இருந்தவர். இருவருக்கும் கருத்து வேற்றுமையில், இவர் வேலையை விட்டு, இப்போது இருக்கும் கம்பெனியில் சேர்ந்தார். இந்த வார்த்தை எப்பொழுதும் சத்தியம். You join a company and leave a manager"

’இப்ப என் கம்பெனியில சேர்ந்திருக்கிறான். நேரடி பாஸ் இல்லை. ஆனா நச் நச என தொல்லைகள் தொடங்கும் பாரு. இவன் அந்த கம்பெனியில இருந்தவரைக்கும் என்னால அங்க ஒழுங்கா செயல்பட முடியலை. இப்ப இங்கயும்...இந்த வருஷம் இலககை எட்ட முடியாது”

ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டே அவர் சொல்வ்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு பெண்மணி , நீல நிறச் சேலையில் தெரு முனையில் திரும்பிக் கொண்டிருந்தாள், அடம்பிடித்துக் கொண்டிருந்த  ஒரு குழந்தையை ஒரு கையில் பற்றி தரதரவென இழுத்தபடி. நீலப்புடவை...

இன்றும் நினைவிருக்கிறது,வொளரவ நரகத்தைவிடக் கொடிய ஒரு இடம். பள்ளிக்கூடம் . ஒன்னாம் கிளாஸொ, நர்சரியா தெரியவில்லை. அக்காதான் கொண்டுபோய் ஸ்கூலில் விட்டு வருவாள். கதவிடுக்கில் , துணிஸ்டாண்டின் பின், பீரோவின் பின் .. எங்கு ஒளிந்து நின்றாலும் கண்டுபிடித்துவிடுவாள். எத்தனை அழுதாலும், தரதரவென இழுத்டுக்கொண்டு போய் , அந்த முண்டக்கண்ணி டீச்சரின் வகுப்பில் உட்கார வைத்து விடுவாள். ஒண்ணாம் வாய்ப்பாடு சொல்லணும். பட்டுப்பூச்சி எல்லாம் பள்ளிக்கூடத்துக்கு தீப்பெட்டியில் கொண்டு போகக்கூடாது. என்ன உலகம் இது?

 ராதா அக்காவிடம் அப்போது ஒரேயொரு நல்ல சேலைதான் உண்டு. நீல நிறச் சேலை. அதைக் கட்டிக்கொள்கிறாள் என்றால் எனக்கு உதறல் தொடங்கும்.அதுவரை எனது அச்சங்கள் தொடங்காது.சுத்தமாக பள்ளிக்கூடத்தை மற்ந்திருப்பேன். நீலச்சேலை + ராதா அக்கா = நான் ஸ்கூல். அவள் அந்த்ப் புடவை கட்டினால்தான் எனக்கு ஸ்கூல் அந்த இடத்தில்  முளைக்கிறது என்றும் டீச்சர்கள் தோன்றுகிறார்கள் என்றும் நம்பினேன். அக்காவின் பெண் கல்யாணத்தில் அவள் நீலச்சேலை கட்டியபோதும் “ஆ,ப்ளூ  புடவையா? ஸ்கூல் வேண்டாம்” என்றேன். அடிக்க வந்தாள்.

அக்கா நீலச்சேலை கட்டுவதற்கும் எனது கஷ்டகாலங்கள் தொடங்குவதற்கும் என்ன தொடர்பு உண்டோ அதுதான் வாழ்வில் சில நிகழ்வுகளுக்கு நாம் பல நிகழ்வுகளுடன் தொடர்பு ஏற்படுத்துவது. அக்கா திருமணமாகிப் போனபின்பு, பள்ளியிலிருந்து கல்லூரிக்கு நான் போனபிறகு வெகு காலம் கழித்தே இந்த ஞானோதயம் வந்தது. 

“நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். ஹலோ?” என்றார் நண்பர். நனவுலகிற்கு மீண்டேன்.
“உங் கம்பெனியில வேலை இருக்கா? பயோ டேட்டா அனுப்பறேன். இமெயில் ஐ.டி சொல்லு” 

“ஒரு நீலப்புடவைக்காக  ஸ்கூலுக்குப் பயப்படாதே”

“வாட்? கம் அகெய்ன்?”

“ஒன்றுமில்லை” 

Tuesday, October 01, 2013

தி லஞ்ச் பாக்ஸ்- திரைப்பட விமர்சனம்

நேற்று காலை “தி லஞ்ச் பாக்ஸ்” சினிமா. காட்பரிஸ் சில்க் சாக்லேட் விளம்பரத்தில் வரும், லேசான மாறுகண் உள்ள நம்ரத் கவுர் இப்படத்தின் ஹீரோயின். இர்ஃபான் கான் முக்கிய கதாபாத்திரம். இவர்களோடு உலகப்பிரசித்தி பெற்ற , உணவுக் கேரியர்களைக் கொண்டுசெல்லும் மும்பை டப்பாவாலா-க்கள் அங்கங்கே. இப்படியொரு காஸ்டிங் வைத்துக்கொண்டு முழு நீளப் படத்தை எடுப்பதற்கு அசாத்தியத் துணிச்சல் வேணும்.

பெண்களின் மன அழுத்தம், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகளின் சிதைவுகள் என இஸம் பேசி ஜல்லியடிப்பவர்களுக்கு இந்த்ப்படம் ஒரு ரெபெரென்ஸாக அமையலாம். அதையெல்லாம் தாண்டி, பிதுங்கும் நெரிசலில், தடங் தடங் என ஓடும் ரயில் வண்டியின் குலுக்கல்களுக்கிடையே சில மனித மனங்களைச் சந்தித்துவிடும் ஆச்சரியங்கள் மும்பை லோக்கல் ரயில்களில் நடந்துவிடுவது போலவே, இந்தப்படமும் வியப்பில் ஆழ்த்துகிறது. இர்ஃபானின் நடிப்பு என்பதைப் பற்றி மட்டுமே இரண்டு பக்கம் எழுதலாம். எல்லாரும் எழுதுவதால் அது க்ளிஷே என முத்திரை குத்தப்படும் அபாயம் இருப்பதாலும், நம்ரதாவுக்கு நடிக்கவேண்டிய கட்டாயமே கொடுக்காததால் அது குறித்து ஒன்றும் எழுத வேண்டாததாலும், நடிப்பு என்பதிலிருந்து சற்றே நகர்கிறேன்.

வேலைப்பளுவில் உழன்று , மனைவியின் சுக துக்கங்களில் பங்கு பெறாத ஒரு கணவன், சிறு பெண்குழந்தை, மேல் அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் அசரீரியான தேஷ்பாண்டே ஆண்ட்டீ என சிறு 1BHK குடும்பத்தலைவியாக “ஈலா” என்ற பெண், தன் கணவனுக்காக ஸ்பெஷலாக சமைத்துக் கொடுத்துவிட்ட லஞ்ச்பாக்ஸ் இடம் மாறி , ரிடையர் ஆகப்போகும் சாஜன் பெர்னாண்டஸிடம் வருவதில் தொடங்குகிறது கதை. அந்த லஞ்ச்சில் இருந்து அவர்களது கடிதப் பரிமாற்றம் தொடங்குகிறது. தொடர்ந்து கணவன் தனது சிறு சிறு மாற்றங்களையும், வியர்வை பொங்க சிறப்பாகச் செய்து தந்த உணவைப் பாராட்டாமலேயே இருப்பதாலும், அவள் , தான் சந்தித்து அறியாத மூன்றாம் மனிதனிடம் தனது மன அழுத்தத்தை வெளிக்காட்டுகிறாள். அதற்கு , காலியாய்ப் போன டீக் குவளையில் மிச்சமிருக்கும் இளஞ்சூட்டில் , வீங்கிய கால்களுக்கு ஒத்தடம் கொடுப்பது போல , இதமான அறிவுறைகளை பெர்னாண்டஸ் வழங்குவது வரை கதை படு டீசண்ட்டாகப் போகிறது. அட, ஆஸ்கார் போயிருக்க வேண்டிய ஒன்றாச்சே இது, என்று புலம்ப வைத்துவிடுகிறது. இதற்குப் பிறகு டைரக்டருக்கு சனி பிடித்துவிட்டது போலும். அந்த இதமான புரிதல் சற்றே கோடு கடந்து, உன்னோடு நானும் பூட்டானுக்கு வரட்டா? என்று முதிய , முதிர்ந்த மனிதர் எழுதுவதும், அதற்கு அந்தப் பெண் சட்டெனக் காதல் வயப்பட்டு விடுவதும் ...ம்ம்ம்ம் “ பாப்கார்ன் வாங்கிட்டு வரட்டுமா?” என்று சால்ஜாப்போடு வெளியே வர மனசு எத்தனிக்கிறது.
இந்த இடத்தில் திரும்பவும் உட்கார வைத்துவிடுகிறார்கள். சட்டென ஒரு புரிதல் வர, இர்ஃபான் தன் உந்துதலைத் தடுக்கிறார். அவரைப் பார்க்க நினைத்த வேகத்தில் ,மகளுடன் ஆபீஸுக்கே அப்பெண் வந்துவிடுகிறாள், பின் பூட்டான் செல்ல எத்தனிக்கிறாள். ஒரு எதிர்பார்ப்போடு படம் முடிகிறது.

வேலை அழுத்தத்தில் மனைவி கொடுத்தனுப்பும் கத்திரிக்காய் கறிமது நன்றாக இருக்கிறது என்று சொல்லாவிட்டால் , மனைவி மாற்றானோடு, பூட்டானுக்கு ஓடிப் போய்விடுவாள் என்ற பயம் இனிமேலாவது கணவன்களுக்கு இருக்கட்டும் என்ற Moral of the story கணவன்மாருக்கு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறதோ?. வேலை அழுத்தத்துடன் வீட்டைக் கவனிக்காத ஆண்கள் கள்ளத் தொடர்பு வைத்திருப்பார்கள் என்ற புளித்துப் போன லாஜிக்கை இன்னும் எத்தனை கதைகளில் (பால குமாரனின் ”அடுக்கு மல்லி” யும் இதில் அடக்கம்), படங்களில் பார்க்கப்போகிறோம்? எனக்கு வேலை ஜாஸ்தி என்று சொல்லவே இப்போது தயக்கமாக இருக்கிறது. இந்தமு மிகைப்படுத்துதலும், வேண்டாத ஈர்ப்புக் கண்ணோட்டமும் இல்லாமல் ஒரு நட்பாகவே ஆரோக்கியமாகக் காட்டியிருந்தால் , ஆஸ்கர் கிடைக்காவிட்டாலும், நமது முழுக் கைதட்டல்களையும் லஞ்ச் பாக்ஸ் பெற்றிருக்கும்.

பாலிவுட், கோலிவுட் படங்களுக்கு இடையில் இப்படி ஒரு வித்தியாசமான சிந்தனை, இயக்கம்... பாராட்டவேண்டும். கொஞ்சம் உப்பு தூக்கல் என்பதை விட்டுவிட்டால், முழுதும் வளைச்சு அடிக்க வேண்டிய லஞ்ச்தான்.

கைசிக நாடகம் - பெண்கள் பங்களிப்பு

கைசிக நாடகம் குறித்து மிக வித்தியாசமான அணுகுமுறையுடன் திரு. வெளி ரங்கராஜன் Veli Rangarajan அவர்கள் ‘தீராநதி’ இதழில் எழுதிய கட்டுரையை இத்துடன் தரவேற்றியிருக்கிறேன்.

கைசிகி நாடகம் பத்து வருடங்களுக்கு மேலாக திருக்குறுங்குடியில் செம்மப்படுத்தப்பட்ட வடிவில் நடந்து வருகிறது. பேராசிரியர் செ. இராமானுஜர் அவர்கள் கடந்த பதினைந்து வருடங்களாக இதில் தீவிரமாக உழைத்து வருகிறார். டி.வி.எஸ் நிறுவனத்தின் டாக்டர். அனிதா ரத்தினம் அவர்களின் உறுதியான ஆதரவும், அக்கறையும் இல்லாவிட்டால் இது துர்லபம்.  மிகவும் சிதைந்திருந்த ஒரு வடிவை மீட்டெடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.

முதலில் கைசிகி நாடகம் என்றால் என்ன? தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்த ஒருவனால் , உயர்த்தப்பட்ட குடியில் இருப்பவர்களும், பிரம்ம ராட்சசனும் மோட்சமடையும் ஒரு வினோதமான கதை. பகவானுக்கு பாகவதன் மிக முக்கியம் என்பதும் அதில் ஜாதி ஒரு தடையேயில்லை என்பதையும் வலியுறுத்திய புரட்சிகரமான புராணம். இதை கைசிகி புராணம் என்று அழைப்பார்கள். இதன் சிறப்பை விளக்கி கைசிகி மஹாத்மியம் என்ற வடமொழி நூல் உள்ளது. இதனை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் “ஆச்சார்ய ஹ்ருதயம்” என்ற அற்புத நூலின் ஒன்றாம் ப்ரகரணத்தில் ஒரு சூத்திரத்தில் ”நிலையார் பாடலாலே, ப்ராமணன் வேள்விக் குறை முடித்தான்” என்று  கொண்டாடியிருக்கிறார்.

கைசிகி புராணம் வருடம் ஒருமுறை கைசிக ஏகாதசி அன்று  திருவரங்கத்தில் அரையர் சேவையாகவும், திருக்குறுங்குடியில் நாடக நிகழ்வாகவும்  பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வந்திருந்தது. கைசிக புராணத்தின் நிகழ்வாக்கத்தை, விரதமிருந்து, இரவெல்லாம் விழித்திருந்து அனுபவித்தால் முக்தி கிட்டுமென்பது இந்துக்களின் நம்பிக்கை.

இதில் திருக்குறுங்குடி நாடக நிகழ்வாக்கம் 1900களின் முற்பகுதியில் ( ‘30களில் தொடக்கமாக என என் ஊகம்) நலிவடையத் தொடங்கி, ‘80களில் முற்றும் மறைந்து போன நிலையில் , வெறும் சாஸ்திரம் காரணமாக தவறுதல்களோடு, ஒரு முனைவின்றி, திருக்குறுங்குடிக் கோயில் வளாகத்தில் மிகக் குறைவான பக்தர்களின் எண்ணிக்கையில் நடைபெற்று வந்தது. அதனை மீட்டெடுக்க பேராசிரியர் இராமானுஜம் அவர்கள் ஈடுபட்டார். அது அத்தனை எளிதாக இருக்கவில்லை. இது பற்றி பிறகு விவரமாக எழுதுகிறேன்.

அப்படி என்ன இந்நாடகத்தில் சிறப்பு?
கைசிக நாடகத்தில் அன்றைய வழக்கத்திற்கு எதிரான ஒரு பெரும் புரட்சி இருந்தது. நடிப்பவர்கள் அனைவரும் பெண்கள். அப்போதெல்லாம் பெண் கதாபாத்திரத்தைக் கூட ஆண்கள் பெண்வேடமிட்டு நடித்த காலம். அதுவும், அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தவர்கள் அன்றைய சமூகக் கொடூரத்தால் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட தேவதாசிகள் சமூகத்தினர். பகவானான நம்பிக்கிழவரிலிருந்து, நம்பாடுவான் (ப்ரம்ம ராட்சசன் தவிர) வரை அத்தனைப் பாத்திரங்களும் தேவதாசிப் பெண்கள் ஏற்று மண்டபத்தின் மேலேறி  நடத்த, உயர் சாதியினர்கள்  கீழே தரையில் , பயபக்தியுடன் அமர்ந்து பார்த்த ஒரு சாதித் தளங்கள் திருப்பப்பட்ட நிலை உருவாயிருந்தது!

அது மட்டுமல்ல, பக்தி என்பது ஜாதியைத் தாண்டியது என்பது , நாங்குநேரியில் ஒரு மூதாட்டியிடம் பேராசிரியர் இராமானுஜம் எடுத்த பேட்டியின் குறிப்பிலிருந்து விளங்கும் “ தேவதாசிகளெல்லாம் மேடையில வேஷம் கட்டி ஏர்றப்போ, கூட்டத்துக்குள்ளே இருந்துதான் மேடைக்குப் போவா. உக்கார்ந்து இருக்கறவா,அவாளை அப்படியே கால்ல விழுந்து சேவிப்பா. நம்பி, நம்பாடுவானா வேஷம் கட்டியிருக்கிறவாளை, நாடகம் முடிஞ்சதும், வயசான ப்ராமணர் முதக்கொண்டு, எல்லாரும் சேவிப்பா. பாத்திருக்கேன். வயசோ, ஜாதியோ பாக்கப்படாது. அப்போ அவ வெறும்  மனுஷியில்லை. சாக்‌ஷாத் நம்பாடுவான், நம்பி-ன்னா?”

ஜாதிகள் அற்ற , பெண் அடிமைத் தளை அற்ற, சமூக சமன்பாடுகளை தலைகீழாக மாற்றும் கைசிக நாடகத்தை நீங்களும் திருக்குறுங்குடி சென்று அனுபவியுங்கள்.

"எங்ஙனேயோ அன்னைமீர்காள்
      என்னை முனிவது நீர்?
நங்கள் கோலத் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும்
      தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும்
      செல்கின்றது என் நெஞ்சமே" நம்மாழ்வார். திருவாய்மொழி.




காந்தள் விரலும் கண்டுகொள்ளாத பெண்ணும்

ஆறு மணிக்குள்ளே ஆபீஸ் விட்டுக் கிளம்பியிருக்கணும். கொஞ்சம் கதைபேசி நின்றதில் போக்குவரத்து நெரிசலில் மாட்டியாகிவிட்டது. காரின் இரு புறமும் ஈக்களாய்ப் பறந்துபோகும் மோட்டார்சைக்கிள்கள். சர்ரக் என உரசிவிட்டு, லேசாகத் திரும்பி, ஹெல்மெட்டின் ப்ளாஸ்டிக் முகத் திரையை உயர்த்தி விட்டு யாருக்கும் கேட்காத குரலில் ‘சாரி’ என்றுவிட்டு சென்றுவிடுவார்கள். டெண்ட் எடுக்கவும், டச் அப் செய்யவும், பாஷா பாய் வீட்டையே எழுதிவைக்கச் சொல்லுவான்.

கொஞ்சம் எச்சரிக்க்கையோடுதான் முன்னேறினேன்.
இரு மோட்டார்சைக்கிள்கள். ஒன்று என் வலதுபுறம், மற்றது இடதுபுறம்- நேராக என் ஜன்னல்கள் அருகே. சிக்னல் போஸ்ட்டில் பச்சை எல் இடி தப்புத் தப்பாக நொடிகளைக்காட்டியது. இதுவும் நெரிசலுக்குக் காரணம் போலும்.

கண்ணாடியை இறக்கிவிட்டபோதுதான் கவனித்தேன். வலப்புறம் இருந்த மோட்டார்சைக்கிளின் பில்லியனில் ஒரு பெண், மடியில் ஒரு குழந்தையை வைத்திருந்தாள். அதன் கன்னத்தை விடப் பெரிசாக கருப்புப் பொட்டு கன்னத்தில் ஈஷியிருக்க, நெற்றியில் பவுடர் திட்டுத் திட்டாக அப்பியிருந்தது. சிறு உருளைகளாகக் கைகள், அதன் விரல் முட்டிகளில் சிறு பள்ளங்கள், மெத்து மெத்தென உப்பிய புறங்கைகள். லேசாகக் கிள்ளவேண்டும் போல இருந்தது.

திடீரென அது என்னைப் பார்த்து “அய்ங்” என்று பொக்கைவாய் காட்டிச் சிரித்தது. ஹலோ என்றேன். அது சற்றும் மிரளாமல், மீண்டும் ஒரு சிரிப்பு. கையை சம்பந்தமில்லாமல் மேலும் கீழும் ஆட்டி, ஒரு நொடியில் என்னை விட்டுவிட்டு சாலையில் இருந்த கல்லைப் பார்க்க ஆரம்பித்தது. பத்து செகண்ட்களில் மீண்டும் என்னைப் பார்த்தது. அதே சிரிப்பு., அதோடு ’நங்கா மிங்கா’ என ஒரு குழறல். “சே கழுதை. என்ன சிரிப்பு?” என்றேன். இப்படிக் கூர்ந்து பார்க்கிற அளவுக்கு நம்ம மூஞ்சி அவ்வளவு பிரகாசமாக இருக்காதே என்ற சந்தேகத்தோடு, குழந்தை பார்த்த திசையில் திரும்பிப் பார்த்தேன். நினைத்தது சரிதான். என்னைத் தாண்டி, இடப்புறம் இருந்த மோட்டார்சைக்கிளில் பில்லியனில் இருந்த பொண்ணைப் பார்த்து ஜொள்ளு விட்டுக்கொண்டிருக்கிறது.

வண்டிகள் மெல்ல நகரத் தொடங்கியிருந்தன. இரு மோட்டார்சைக்கிள்களும் நகர்ந்து முன்னே என் வண்டியின் முன்னே பைலட் போலச் சென்றிருந்தன. இரு வண்டிகளும் மிக அருகில். நானும் காரை மெல்ல நகர்த்தினேன்.அந்தப் பெண் பக்கவாட்டில் திரும்பி குழந்தை தன்னைப் பார்ப்பதையும், குழறுவதையும் கவனித்துவிட்டாள். குழந்தை அவளை நோக்கிக் கையை நீட்டி, இரு விரல்கள் வானை நோக்க, இரு விரல்கள் அவளை நோக்க, கட்டைவிரல் எங்கேயோ நோக்க, அகல விரித்து , அம்மாவின் மடியில் துள்ளியது. அவள் தன்னிச்சையாக அதனை இறுகப் பிடிப்பது தெரிந்தது. இந்தப் பெண் என்ன செய்யப் போகிறாள்? என்று என்னுள் சிறு குறுகுறுப்பு. கையை நீட்டி அதன் கன்னத்தைக் கிள்ளுவாளோ? கொஞ்சமாய்த்தான் அகலம். சற்றே பக்கவாட்டில் குனிந்து அதன் குஞ்சுக்கைகளை முத்தமிடலாம்.

அவள் வெடுக்கெனத் தலையை மறுபுறம் திருப்பினாள். பார்க்க விரும்பாதவளைப் போலே. ட்ராஃபிக் போலீஸ் ஒருவர் வியர்க்க வியர்க்க, வேகமாக கையை அசைத்து அனைவரையும் முன்னே போகச் சொல்லிக்கொண்டிருந்தார். இரு மோட்டார் சைக்கிள்களும் பாதையில் விரிந்து விரைந்தன.

ஒரு கோபம் என்னுள் விரிந்துகொண்டிருந்தது. சட்டென இறங்கி, அந்தப் பெண்ணைப் பிடித்து “ஏவுட்டி, ஒரு குழந்தை உன்னைப் பார்த்துச் சிரிக்கிறது. அதை அலட்சியம் செயயுமளவுக்கு, அப்படியென்ன திமிரு?” என்று ஒரு வார்த்தை வாங்கலாம் என்று தோன்றியது.

இயலாமையில் கியரும் , கிளட்ச்சும் ஒரு சேராமல் வண்டி “வய்ய்ங்க்” எனத் திமிறி , சில நொடிகளின் பின் சீரானது. குழந்தைகளை அனைவருக்கும் பிடிக்கும் ( என்னைத் தவிர. அவை அழுதால் டென்ஷனாகிவிடுவேன்.) அதுவும் பெண்கள் குழந்தைகளை வெறுக்க சான்ஸே இல்லை. முன்னே போனது ஒரு பெண்ணில்லை. அன்பென்னும் சுவை அறியாத மிருகம்..
மெல்லக் குறள் ஒன்று மனதுள் எழுந்தது.

காந்தள் விரல்நீட் டுமின்பறியா ளொத்தாளே
தீந்தேன் அறியாக் கவி

கவி - குரங்கு காந்தள் - விரல் போலிருக்கும் மலர்

ஸ்ரீவரமங்கை ,”அந்தப் பெண்ணுக்கு என்ன ப்ரச்சனைன்னு நமக்குத் தெரியுமா?. அதை ஏன் போய்த் திட்டணும்? இதான், மெல்லிய உணர்வுகளைக்கூட உங்களுக்கெல்லாம் வல்லியதாகத்தான் சொல்லத் தெரிகிறது” என்றாள். இது என் பழைய blunderகளை வெளிக்கொணரும் அபாயமிருப்பதால், அத்தோடு நிறுத்திக்கொண்டேன்.

Saturday, September 14, 2013

பல் பிடுங்கும் படலம்



“இதப் புடுங்கியே ஆகணும்” என்றார் டாக்டர் ஷோபா ஹெக்டே, ஆ வெனப் பிளந்திருந்த என் வாயில் கோணலாக வளர்ந்திருந்த கடைவாய்ப்பல்லை, நுனியில் கொக்கி போல வளைஞ்சிருந்த ஒரு கருவியால் தட்டி நோண்டி, தீர்மானமாக. ”அதெல்லாம் வேணாம்” என்று சிரித்து மழுப்பமுயன்றேன். “ அனாவசியமாப் பல்லைப் பிடுங்கறீங்களே? பல்லிடுக்குலே ஒரு சிறு தாணா மாட்டிக்கொண்டால் அதை எடுக்கறதுல என்ன சுகம் தெரியுமா? ஒண்ணுமே கிடைக்கலேன்னாக்கூட, ஒரு குச்சியை உடைச்சு, உரிச்சு, நோண்டற சுகம் இருக்கே?”  ஷோபா, என்னை கடுப்போடு பார்த்தார். “பக்கத்துல இருக்கற பல்லும் கெட்டுப் போகுது. அப்புறம் குத்தறதுக்குப் பல்லே இருக்காது. இதுவும் ஜோக்கா உங்களுக்கு?” எக்ஸ்ரேயில், படுத்தபடி இருந்த கடைவாய்ப்பல்லைக் காட்டினார். ”எப்பவோ பிடுங்கியிருக்கணும். மூணு வாரம் கழிச்சு வாங்க. வெளிநாட்டு டூர் போறேன். வந்ததும் கூப்பிடறேன்” . அவர் எழுதிக்கொடுத்த புதிதாக ஒரு மவுத் ரின்ஸ்ஸும் ( மண்ணு மாதிரி டேஸ்ட். மார்க்கெட்டுக்கு அனுப்பறதுக்கு முன்னாடி டேஸ்ட் கூடப் பண்ணிப் பாக்க மாட்டீங்களாடா?) ,அஸித்ரோஸின் மாத்திரைகளுமாக, என் பல்புடுங்கும் படலத்தின் முதல் அடி எழுதப்பட்டது.
கிட்டத்தட்ட இதனை மறந்தே போயிருந்தேன். திடீரென அவரிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று முந்தாநாள் வந்தது. ”நாளை மாலை 730க்கு வரவும்”  அதோடு ஓரு போன் வேறு “ சாப்பிட்டுட்டு வந்துருங்க. சுகர் எல்லாம் நார்மல்தானே?” இல்லையென்றால் விடப்போகிறார்களா? விதியே எனப் போனேன்.
“டூர் எங்க போயிருந்தீங்க?”டென்ஷனைக் குறைக்கத்தான் கேட்டேன்.          “ ஆஸ்ட்ரியா, செக் ரிப்பப்ளிக்.” என்றார். மரண வலி மேடையை அவரது அசிஸ்டெண்ட் சுத்தம் செய்துகொண்டிருக்க, பீதியை மறைத்தபடி “ ஆஸ்ட்ரியால எங்க?” என்றேன். “சால்ஸ்பெர்க். சரி , சேர்ல உக்காருங்க. மவுத்வாஷ் இருக்கு, யூஸ் பண்ணிக்குங்க”
சற்றே வியந்தேன். “ Sound of Music ஷூட் பண்ணின இடமெல்லாம் பாத்தீங்களா?” என்ன கேள்வி இது என்பதுபோலப் பார்த்தார். திருப்பதி போறவங்களை எங்க கோயிலுக்கா? என்றா கேட்பீர்கள்? “மொசார்ட் காம்போசிஷன்ஸ் எனக்கு ரொம்ப்ப் பிடிக்கும். அதான் குறிப்பா சால்ஸ்பெர்க். பத்து நாள்.” என்றார். எனக்கு அதுவரை அவர் மேற்கத்திய சாஸ்த்ரிய சங்கீதத்தில் ரசனை உள்ளவர் என்பது தெரியாது. அவரது கொடூரக் கருவிகள் தயாரகும் வரை, மொசார்ட்டின் இளமைக்கால வரலாறு குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். ராணி தெரெசாவின் மடியில் அமர்ந்த சிறுவன், பெரும் புகழ் பெற்ற இசைக்கலைஞன் இறுதியில் ஒரு அனாதையாக மரித்த வரலாறு. ’நல்லடக்கம் கூடக் கிடைக்காமல், ஒரு வண்டியில் கொண்டுபோய் வீசப்பட்டது அவன் உடல்’ என்று உணர்ச்சிப் பிழம்பாகப் பலதும் சொல்லியபடியே  மின்விளக்கை என் வாய் நோக்கிச் சரித்தார். “கொஞ்சம் முதல்ல வலிக்கும். ஒரு பக்கமா வீங்கறமாதிரி, நாக்கு தடிக்கிறமாதிரித் தோணும்போது சொல்லுங்க. என்ன? ஆங். மொசார்ட் கடைசிகாலத்துல, குளிருக்கு கையுறை கூட இல்லாம, கால்ல கிடந்த சாக்ஸை கையில் போட்டுகிட்டு, அப்புறம், அதைக் கழட்டி கால்ல மாட்டிக்கிட்டு.. ரொம்ப்ப் பரிதாபம். அப்படியும் அவன் எழுதறத விடலை பாருங்க... அதான் டெடிக்கேஷன். வீங்குதா?”
“ஆஆங்” குழறினேன். இன்னும் இரு ஊசிகள் ஈறுகளில். ஜிவுஜிவு என ஒருபக்கம் வீங்கிவர, அவர் எலக்ட்ரிக் சுழல் ரம்பம் ஒன்றை எடுத்தார். இரும்புக் குழாய்களை அறுக்கும்போது, பால் மாதிரி ஒன்றை அறுக்குமிட்த்தில் ஊற்றிக்கொண்டேயிருக்க, ரம்பம் அறுத்துச் செல்லும். அதேபோல, கறுஞ்சிவப்பாய் ஒன்றை வாயில் ( ஆ. பால் ஊத்தறாங்களா?) அவரது அசிஸ்டெண்ட் ஊற்றி வர, ’சொய்ங்க்’ என்ற ஒலியுடன் வாயுள் ரம்பம் நுழைந்தது. சில நிமிட வலியின் பின் “ 10 பவுண்ட் அழுத்தம் கொடுத்துத்தான் பல்லை நெம்பி எடுக்கறேன். கொஞ்சம் தாடையை அகலமா வைச்சுக்குக்ங்க. மீனாக்‌ஷி, அந்த சி.டியைப் போடுங்க. “
இசை மெலிதாக இழைந்து வர, திடீரெனெ வயலின்கள் உச்சஸ்தாயியில் எகிற, அனைத்து இசைக்கருவிகளும் பித்துப் பிடித்தாற்போல் அலறத் தொடங்க... அட இதென்ன  அவர் கையில்?.. பெரிய குறடு.

“மிஸ்டர் சுதாகர். இப்படி காலையெல்லாம் உதைக்கக்கூடாது. கையைக் கட்டுங்க. உங்க பையன் கூட ஒழுங்காக் காமிச்சான். மீனாக்‌ஷி, அடுத்த ட்ராக் போடுங்க.”
மெதுவாக அது எப்போதோ தொடங்கியிருக்க வேண்டும். சவத்தெளவு மேற்கத்திய இசையில் எப்ப தொடங்குகிறது , மேலே போகிறது என்று சொல்லவே முடியாது.  இசை திடீரென உச்சஸ்தாயியை எட்டியது. அசிஸ்டெண்ட் ரப்பர் உறையிட்ட கைகளால், என் இரு கன்னங்களையும் தட்டிக்கொண்டிருக்க, “ முடிஞ்சிடுத்து. இப்ப உங்க பல்லு என் கையில. ஒரே நிமிஷம். இன்னும் கொஞ்சம் ஆ -ன்னு “ 
ஆ வென அலறினேன். எதோ என்னிலிருந்து பெயர்த்தெடுத்த உணர்ச்சியில். “ Good. keep that jaw opened".. இசை ஒரு முகட்டில் கீச்சிடும்போது, பாஸ் கருவிகள் அதிர, ,குறடு வெளியே வந்தது
”பல்லைப் பாக்கணுமா? ” ஏதோ பிரசவ வார்டில், குழந்தையைக் காட்டறா மாதிரியில்ல கேக்கறாங்க.? ரத்தம் தோய்ந்த அந்த வெள்ளை வஸ்துவை நான் பார்க்க விரும்பவில்லை. “ நீங்க கொண்டுபோறீங்களா? “
“ எனக்கு பல் தேவதைகளிடம் நம்பிக்கை இல்லை” என்றேன் தீனமாக. அப்படிச் சொல்லியதாக நினைத்துக்கொண்டு குழறினேன்.
அவர் சிரித்தார். ”டெண்ட்டல் மாணவி ஒருத்தி வந்து இதனை சேகரித்துச் செல்வாள். இந்த புடுங்கிய பற்களில் முதலில் படிப்பார்கள். நான் படிக்கும்போது ஒவ்வொரு பல் ஆஸ்பத்திரியாக நடந்திருக்கிறேன். “
அவர் முன் நாற்காலியில், ஒரு ஐஸ் பேக்கை கன்னத்தில் வைத்தபடி அமர்ந்திருந்த போது, கேட்டார் “ மொசார்ட் சிம்பனி 40 எப்படி இருந்தது?”
முன்பிருந்த தாளில் எழுதிக்காட்டினேன். “முதலில் போட்ட ட்ராக், மொசார்ட் இல்லை. அது வில்லியம் டெல் ஓவர்ச்சர்.” ” “Good observation" என்றார். ” பல்லைப் புடுங்கும்போது  மொசார்ட்தான் ஓடிக்கொண்டிருந்தது. சரியாக ஒரு கோடா - குறடு புடுங்கியது கரெக்ட் டைமிங்” என்று எழுதினேன். அவர் புன்னகைத்தார்.
வீட்டுக்கு வந்தபின் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் “சைக்கோவ்ஸ்கி கேட்டுக்கொண்டிருக்கிறேன்.  அவனுக்கு நிச்சயம் பல் பிடுங்கப் பட்டிருக்கவேண்டும். இல்லையென்றால் அவனால் இவ்வளவு ஆழமான வலியுடன் Symphony Pathetique இயற்றியிருக்க முடியாது. மொசார்ட் வாழ்வில் அனுபவித்த துயரங்களோடே பல்லும் பிடுங்கியிருந்தால் அவன் முடிக்காது விட்டிருந்த சிம்பனியை ஒரு pathetique ஆக முடித்திருப்பான்”

அவரிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை. 

Friday, September 06, 2013

டீ எப்ப வரும்?

டீ எப்ப வரும்?
_________

மூன்று மாதங்கள் முன்பு , நான் முன்பு வேலை பார்த்த கம்பெனியில் சர்வீஸ் எஞ்சினீயராகப் பணிபுரிந்த நண்பரை ஒரு கஸ்டமர் அலுவலகத்தில் சந்திக்க நேர்ந்தது. நண்பரின் வீடு அருகிலேயே இருக்கிறதென்பதால், “ வாங்க ஒரு டீ சாப்பிட்டுட்டுப் போலாம்” என்றார். நல்ல மனிதர், தானுண்டு தன் வேலையுண்டு என்று , ஒரு அரசியலிலும் இறங்காத அப்பழுக்கற்ற அவரது வேண்டுகோளை மறுக்கமுடியாமல் , அவருடன் சென்றேன். மும்பையின் வழக்கமான சிறிய வீடு. படு புத்திசாலித்தனமாக சிறிய அறைகளிலும் அனைத்தையும் கச்சிதமாக வைத்திருந்தார்கள்.  அவன் மனைவியையும் , மாமியாரையும் அறிமுகப்படுத்தினான். மாமனார், பேரனுடன் வெளியே போயிருக்கிறார் என்று அறிந்தேன்.

டீ க்கு சர்க்கரை வேணுமா? “ என்ற கேள்வியின் பின் அவர்கள் இருவரும்  சென்று விட , ஒரு கிழவர் உள்ளே நுழைந்தார். கூடவே ஒரு சிறுவனும்.

“என் மாமனார்” . கைகூப்பி வணக்கம் தெரிவித்தவருக்கு சுமார் எழுவது வயதிருக்கும். கணீரென்ற குரல். இஸ்திரி போட்ட வெள்ளைவெளேரென்ற சட்டை, பைஜாமா. “இந்தூரில்தான் வேலை பார்க்கத் தொடங்கினேன். பத்து இடமாற்றங்கள். அப்புறம் இந்தூர்லயே ரிடையராகிட்டேன். இவ ரெண்டாவது பெண். மூத்தவ ராய்ப்பூர்ல இருக்கா.” அதென்னவோ, ரிடையர் ஆகிவிட்டால், பயோடேட்டா, கேக்காமலேயே தந்துவிடுகிறார்கள்.

‘தாத்தா” என ஓடிவந்த பையன் என்னைக்கண்டதும், சற்றே வெட்கி, வளைந்து அவரது கால் முட்டைப் பிடித்துக்கொண்டு, ஓரக்கண்ணால் என்னைப்பார்த்தபடியே, அவரது பைஜாமாவைக் கடித்து நின்றான். “ முதல்ல கொஞ்சம் வெட்கப்படுவான். அப்புறம் கலகலன்னு... நாலு வயசுதான் ஆகிறது. ஆனாப் பாருங்க, அசாத்திய மூளை.டேய் சொல்லுறா...” நான் உஷாரானேன். விருந்தினர் எதிரே தங்கள் பிள்ளை,பேத்திகளின் மூளைத்திறனை எக்ஸிபிஷன் போட்டுக் காட்டும் காலமெல்லாம் எப்பவோ போயாச்சே? எனக்கு இந்த சூழ்நிலைகளில் எப்படி ரியாக்ட் செய்யவேண்டுமெனத் தெரிவதில்லை. அசடு வழிந்துகொண்டு, ஒரு செயற்கைச்சிரிப்போடு “வெரிகுட்” என்பதோடு என் பதில்கள் நிற்கும். எப்படா இங்கிருந்து கிளம்புவோம் என்ற துடிப்பின் விளிம்பில் நிற்பேன். அத்தகைய சந்தர்ப்பமொன்று இது...

“ சூரஜ் பேட்டா, 459 ஸ்கொயர்  என்ன?” . என்ன இது மலேசிய அபாக்கஸ் கிளாஸுக்கு ஆள் சேக்கறாங்களா? ’விடுங்க , குழந்தையைப் போட்டு..” என்றேன்.

என் நண்பர் வாயெல்லாம் பல்லாக “ இவருக்கு இதெல்லாம் பிடிக்கும் மாமா. 6174 -ன்னு தமிழ்ல - தமிழ்லதானே? ஒரு கணக்கு புக் எழுதியிருக்காரு” . அடப்பாவிகளா, கணக்கு புக்கா? ஏண்டா எழுதினோம்னு நினைத்த பல தருணங்களில் ஒன்று கூடியது.  இவனிடம் இப்படிச் சொன்னவனை துருப்பிடித்த பழைய ப்ரின்ஸ் பிளேடால் கன்னத்தில் கிழிக்கவேண்டும்.

பையன் எதோ முணுமுணுத்தான். முகத்தை தாத்தாவின் மடியில் புதைத்துக்கொண்டான். அவர் மீண்டும் மீண்டும் நச்சரித்து, குனிந்து கேட்டு ஒரு எண்ணைச் சொன்னார். பெருமிதமாக ”கரெக்ட்” என்றார். ” இந்தூர் ரயில்வேஸ் குவாட்டர்ஸ்ல இருந்தப்போ எங்க சீஃப் அக்கவுண்டண்ட்  மதன்மோகன் மிஸ்ரான்னு ஒருத்தர். அவருக்கு கால்குலேட்டரே வேண்டாம். எல்லாம் மனக்கணக்குத்தான். ஒரு வருஷம் அவரை நச்சரிச்ச அப்புறம் ரகசியமா கணக்குல இருக்கிற குறுக்கு வழிகள்- ன்னு சில ட்ரிக்குகளைச் சொல்லிக்கொடுத்தார். காலங்காலமா அவர்கள் குடும்பத்துல பழகி வர்ற ஒரு வித்தை. வேதகாலத்துலேர்ந்து இருக்கிற வித்தை. அவர் குடும்பத்துக்கு அப்புறம் நாந்தான் வெளியாள் அதைக் கத்துகிட்டது. அடுத்த மாசம் பாருங்க, சூரஜ், ஸ்கொயர் ரூட் கத்துகிட்டிருவான் அதுவும் அஞ்சு டிஜிட் எண்களுக்கு. ”
ஒரு பிளாஸ்டிக் புன்னகையை முகத்தில் அப்பியபடி, தலையை ஆட்டி ‘க்ரேட்” என்றேன்.

 டீ எப்ப வரும்?

”இதெல்லாம் டை கட்டி, கோட் போட்டு இன்னும் வெளிநாட்டுக்காரங்களுக்கு வால் பிடிக்கிற உங்களுக்கெல்லாம் பிடிக்காது. தெரியும். மைக்ரோசாஃப்ட் எக்ஸெல்-ல போடவேண்டியதையெல்லாம் எதுக்கு மூளைல போடணும்? -னுவீங்க. நம்ம நாட்டு வித்தை.. அதெல்லாம் உங்களுக்கு மதிக்கத் தெரியாது. வெளிநாட்டுக்காரன் எது செய்தாலும் சரி. உங்களைச் சொல்லிக் குத்தமில்லை. வளர்ப்புதான்.  டேய். நீ எப்படி ஆன்ஸர் கண்டுபிடிச்சேன்னு மாமாக்கு சொல்லு”

நம்ம ஊர்களில் சிறுமிகளை “ இந்த மாமிக்கு, அலைபாயுதே பாட்டு தெரியாதாம். ஒருதடவை நீ பாடிக்காட்டுடி செல்லம்மா” என்று நாங்கள் ஊருக்குப் போகும்போதெல்லாம்  என் மனைவியை முட்டாளாக்கி, தன் பெண்களை பிசிறும் குரலில் அலைபாயுதே பாடவைத்துப் பரவசப்பட்ட பெண்மணிகள் எனக்கு நினைவுக்கு வந்தனர். இப்போது நான். அவள் வெகு இயல்பாக நடந்து கொண்டு  விடுகிறாள். எனக்கு அதெல்லாம் வருவதில்லை. மூஞ்சியே காட்டிக்கொடுத்து விடுகிறது.

 டீ எப்ப வரும்?

ஆ. வந்து விட்டது. பத்து நிமிடம்  அந்த முதியவர், அமைதியாக டீ குடிக்கவிடாமல்,  வெளிநாட்டவரிடம் கைகட்டி வேலைசெய்யும் எனது வேலையெல்லாம் இழி தொழில் என்ற புதிய உண்மையை உணர்த்திவிட்டு, இந்தியாவின் பழம்பெரும் கல்விச் செல்வங்களை அறியாது வீணடிக்கும் அறிவிலிகள் நாட்டுப் பற்றும் , கலாச்சார உணர்வும் இல்லாத மடையர்கள் எனவும் அறிவுறுத்திவிட்டு, அவர் எழுந்து சென்றார்.

காரில் என்னை பஸ் நிறுத்தம் வரை கொண்டு விட வந்த நண்பர் தர்ம சங்கடமாகச் சிரித்தார். “ அவர் சொல்வதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாதீர்கள். என்னையும்தான் திட்டுவார் - அமெரிக்க கம்பெனியின் அடிமை என்று. ஆனால் , அந்த கணித சூத்திரங்கள்... அமேசிங் இல்லையா? உங்களுக்கு அடுத்த புத்தகத்துக்கு உதவும்”  நான் என்ன தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்திற்குப்  பத்தாம் கிளாஸ் கணக்குப் புத்தகமா எழுதுகிறேன்? என்று வாய் வரை வந்தது. ஒரேயொரு வார்த்தை மட்டும் சொல்லிவிட்டு, வந்த பேருந்தில் ஏறினேன்.

“அவர் சொன்னது ட்ராக்டென்பர்க் சிஸ்டம் ஆஃப் ஸ்பீட் மாத்தமேட்டிக்ஸ். சூரிச்-சில் விளைந்தது - இந்தூரில் இல்லை”