Friday, March 03, 2006

மும்பை சேரிகள்

மும்பை சேரிகள்
___________________

உருப்படாதது நாராயணன் மும்பை சேரிகள் குறித்து எழுதியிருந்தார்.மணியனின் பதிவு சிறப்பாக அமைந்திருந்தது. சேரியில் வாழ்ந்திராவிட்டாலும், எனது மும்பை வாழ்வின் ஆரம்பக்காலங்களில் சேரிகளின் மிக மிக அருகில் வாழ்ந்ததாலும், அங்கு வாழும் மக்களின் சிலரின் நட்பு கிடைத்ததாலும் இச்சேரி வாழ்வு குறித்து ஓரளவு எனக்குத் தெரியும். சில இடங்கள் தவிர்த்து பெரும்பாலும் பொதுவாகச் சேரிகள் எனவே இக்கட்டுரையில் அழைத்திருக்கிறேன். முகமூடியின் பதிவுகளில் அவர் சுட்டியிருக்கும் பாதுகாப்பு நோக்கம்தான் இதற்கும்!
சேரிவாழ்வு குறித்து எழுதுமுன் சில விளக்கங்கள் அவசியம். மும்பை slum என்பதை சேரியென நான் இங்கு விளித்திருக்கிறேன். மும்பையில் சேரி என்பது குடில்/குடிசை என்றல்ல. வறுமை என்பதற்கும் எளிமைக்கும் உள்ள வித்தியாசம். சேரியின் வீடுகள் தகரடப்பாக்கள், திருடிக்கொண்டுவந்த செங்கல்கள், பிளாஸ்டிக் ஷீட்டுகள் கொண்டு கன்னாபின்னாவென ஏதோ அமைக்கப்பட்ட ஒரு குடியமைப்பு. இவை ஒரு சீராகவும் அமைந்திருக்காது. ஏதோ ஒரிடத்தில் இருக்கவேண்டுமென்பதால் அமைக்கப்பட்டவை. ஒரு வீட்டின் கழிவுநீர் மற்றவீட்டினுள்வழி புகுந்து செல்வது சாதாரணம். "எப்பவேணுமானாலும் கலைக்கச் சொல்லலாம்" என்ற பயத்தின் அடிப்படையில் அமைந்தவை. பெரும்பாலான சேரிகள் சட்டத்திற்கு புறம்பாக, அனுமதிக்கப்படாத இடங்களில் அமைக்கப்பட்டவை. இக்குடியிருப்புகள் ஒரு மதம் /மொழி/இனம் சார்ந்தவர்கள் கூட்டாக அமைத்தவை. இவற்றிற்கும் கிராமங்களில் இருக்கும் குடிசைகளுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை.
எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால் சேரிகள் என்றால் வறுமையில் வாடுபவர்கள், அன்றாடங்காய்ச்சிகள், ஒடுக்கப்பட்டவர்கள் மட்டும் வாழும் இடமல்ல. இவற்றின் தோற்றமும், வளர்ச்சியும், இருப்பும் அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களின் அடியூடு. தாராவி போன்ற இடங்களில் பெரும்பணம் புரளும் மனிதர்கள் சேரிகளில் வாழ்ந்து ஆதிக்கம் செய்து வருகின்றனர். பெரும்பாலான சேரிக்குடியிருப்புகள் அங்கு வாழ்பவர்களுக்குச் சொந்தமில்லை. அரசியல் செல்வாக்கு மிகுந்த லோக்கல் தாதாக்களின் கையில் இவை இருக்கின்றன. பலரும் அங்கு வாடகை கொடுத்து விலங்குகளுக்கும் கீழான நிலையில் கொத்தடிமைகள் போல வாழ்வதைக் கண்கூடாகக் காணலாம். இக்குடியிருப்புகளில் வாடகை முன்னமே தரவேண்டும் ( ஒரு வருடத்திற்கு இவ்வளவு என விவரம் இருக்கின்றது). சில இடங்களில் மாத வாடகை. தராவிட்டால் தாதாக்களின் தொல்லை.
பெரும்பாலான சேரிவாசிகள் புலம் பெயர்ந்தவர்கள். உ.பி, பீஹார், பங்களாதேஷ், தமிழ்நாடு இவைதான் சேரிகளின் அடையாளங்கள். இன அடிப்படையில் சில இடங்களில் சேரிகள் வளர்ந்தன. 1993 கலவரங்களுக்குப் பின் இவை கொஞ்சம் நீர்த்துப்போனாலும், மும்ரா, கோரேகாவ் , கோவண்டி போன்ற இடங்கள் இன்னும் இன/மத அடிப்படையிலேயே பலம் பெற்றிருக்கின்றன.
இங்கு காலம்காலமாக வாழும் மக்கள் சேரிகளிலிருந்து வளர்ச்சி பெறமுடியாது. மிக மிகக் கடினம். சேரிகளுக்குச் சொந்தக்காரர்களான அரசியல்வாதிகள் அவர்களை வளர விடமாட்டார்கள். அரசியல் பொருளாதார ஆதாயம். இவ்வளவு மலிவு விலையில் வோட்டுகளும், வேலையாட்களும் எப்படிக் கிடைப்பார்கள்? இந்த விகாரமான தன்னோக்கு அரசியல் மட்டுமே மும்பையின் அவல நிலைக்கும், இச்சேரிகளின் வளர்ச்சிக்கும் காரணம். இன்னும் சொல்லப்போனால் சில கட்சிகள் தங்கள் கூட்டணியரசு பலம்பெற்றிருக்கையில், மும்பையின் புறநகர்ப்பகுதிகளில் முன்பு வாழ்ந்திருந்தவர்களை விரட்டிவிட்டு, சேரிகளை அவர்கள் அடியாட்கள் அமைக்க உதவினர். குடிநீர், மின்சார இணைப்புகள் அக்குடியிருப்ப்புகளுக்கு விதிமுறைகளை மீறி வழங்கப்பட்டன. பின்னர் ஓவ்வொரு கட்சியின் ஆட்சிக்காலத்திலும், " இந்தக் குறிப்பிட்ட வருடத்திற்கு முன் வந்தவர்கள் சேரிகளில் இருக்க அனுமதிக்கப்படுவர்" என cut off வருடங்கள் வரையறுக்கப்பட்டன. 1970- 1990,95,2000 என வருடங்களின் வரையறுப்பு எல்லைகள் நீண்டுகொண்டே போயின. அனைத்தும் வோட்டுகளுக்காகவும், அடிமட்ட விலையில் அக்கட்சிகளுக்கு இம்மக்கள் வேலை செய்வதற்காகவும் மட்டும். இக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் தொழிற்பேட்டைகளும், அவர்களுக்குச் சொந்தமான ஆட்டோ ரிக்ஷாக்களுமே இம்மக்களுக்கு வேலைக்கான வழி. மீறமுடியாது... வேலைக்கான போட்டியும் அப்படி.

பொருளாதாரத்தில் இச்சேரிகள் கட்சிகளுக்கும் வணிகர்களுக்கும் எப்படி உதவுகின்றன எனப்பார்ப்போம்.

2 comments:

  1. எனது மும்பை (நவி மும்பை) வாழ்வு கடந்த மூன்று வருடங்களுக்குள்ளானது.
    முறையான மும்பைவாசியான உங்கள் பதிவு மும்பை சேரிகளின் பல பரிமாணங்களை தொடுகிறது; தொடரும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  2. நன்றி மணியன்,
    எனக்கு 15 வருடங்கள் அனுபவம். அவ்வளவுதான். அதிலும் 4 வருடம் அகமதாபாத் வாசம் என்றாலும், மும்பையுடன் தொடர்பு எப்போதும் இருந்திருந்தது. சில வற்றை எழுதாமல் விடுவது நல்லது என விட்டிருக்கிறேன். கோழைத்தனம் என்றும் பாதுகாப்புணர்வு என்றும் எடுத்துக்கொள்ளலாம்!
    சில இடங்கள் politico -religiously மிகமிக sensitive ஆனவை. உங்களுக்கு அருகிலிருக்கும் கோவண்டி மற்றும் தாணே அருகே மும்ப்ரா, பாந்த்ரா (கிழக்கு), குர்லா போன்றவற்றில் நடப்பது கண்கூடாகத் தெரிந்திருந்தும் சொல்லாமல் இருப்பது நல்லது. சும்மா இருந்த குழவிக்கூட்டை குத்திப்பார்ப்பானேன்?
    அன்புடன்
    க.சுதாகர்

    ReplyDelete